பூகோளம் வெப்பமாதல்
பச்சை வீட்டு விளைவினால் ஏற்பட்டுள்ள நேரடித் தாக்கமாக புவி வெப்படைதல் காணப்படுகிறது. கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளினால் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தே வந்துள்ளன. அதிகரித்த பச்சை வீட்டு விளைவின் காரணமாக புவியின் முழு வெப்பமும் அதிகரிக்கின்றது. இச்செயற்பாடு புவி வெப்பமடைதல் அல்லது பூகோளம் வெப்பமாதல் எனப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறிப்பதன்று. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பல பாதிப்புகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும்.
ஏற்கனவே கூறப்பட்டது போன்று புவி வெப்பமடைதலுக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணமாகின்றன. இப்பச்சை வீட்டு வாயுக்கள் இயற்கைச் செயற்பாடுகளின் மூலமாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.
காபனீரொட்சைட்டு, மீதேன், அலோ காபன்கள், கந்தகவீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு, நைதரசவீரொட்சைட்டு, தாழ்வளி ஓசோன் ஆகியன புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்ற மூலகங்களாக விளங்குகின்றன.
- புவியின் சராசரி வருடாந்த வெப்பநிலை 3 பாகை பரனைட்டில் இலிருந்து 8 பாகை பரனைட் வரை உயர்ந்து வருகின்றது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உருகுகின்ற பனிக்கட்டிகள் அபாயகரமான தாக்கத்தை விவசாயத்திலும் இறுதியாக கடல் மட்டத்திலும் உருவாக்க முடியும். வெப்பநிலையின் உயர்ச்சி துருவப் பனிக்கட்டிகளை உருகச் செய்வதனால் அதிகளவு நீரை வெளியேற்றி சமுத்திர மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். அண்மையில் கங்கை நதியின் ஆரம்ப இடமான பனிமலைப்பகுதியில் பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவைபோன்ற பாதிப்புக்கள் பூகோள வெப்பமடைவதால் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.
இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பான பேரழிவுகள் தற்பொழுது உலகில் அரங்கேறி வருகின்றன. இனியும் தாமதிக்காது இதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் நாமும் அரசாங்கமும் ஈடுபட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்காக தனிமனிதன் என்ற வகையிலும் நாம் இப்புவியில் வாழுகின்ற பிரஜை என்ற வகையிலும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளோம். முடியுமான அளவு தாவரங்களை அழிக்காதிருத்தல், மரம் நடுகையில் ஈடுபடுதல், பச்சை வீட்டு வாயுக்களை வெளியிடும் பொருட்களை உபயோகிக்காது இருத்தல் சிறிய சிறிய தேவைகளுக்கு மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல், துவிச்சக்கரவண்டியின் பாவனைகளை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்துவது புண்பட்டுப் போயிருக்கும். எம் பூமித்தாய்க்கு நாம் மேற்கொள்கின்ற ஆறுதலான விடயங்கள் எனலாம்.
அரசாங்கம் என்ற வகையில் பச்சை வீட்டு விளைவுகளை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடும் பொருட்கள் தொழில் நடவடிக்கைகளை தடுத்தல், காடழிப்பினைத் தடுத்தல், மீள்காடாக்கம் செய்தல், மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குதல், சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக