கற்றல்-கற்பித்தல் மாதிரியுருக்கள்

  •  

கற்றல்-கற்பித்தல் மாதிரியுருக்கள்

 

ப.மு. நவாஸ்தீன்

ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலமும் இடனும் வாலிதின் நோக்கிச்
சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம்கொளக்
கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப"   

                                                                                                    நன்னூல்

 

1.0 அறிமுகம்

இன்றைய நவீன காலத்தில் மாற்றம் என்ற ஒன்றைத்தவிர ஏனைய சகலதும் துரிதமாக மாற்றமடைந்து வருகின்றன.இத்தகைய தொரு காலகட்டத்தில் ஆசிரியர்களின் பணிகள் சிக்கல் நிறைந்ததாகவும் அதிக  பொறுப்பு வாய்ந்ததாகவும் மாறி வருவதுடன் ஆசிரியர்கள் மீதான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தும் வருகின்றன. மாற்றங்களை வகுப்பறை மட்டத்துக்கு  கொண்டு  செல்லும்  முகவராகவும் ஆசிரியர்கள் இன்று நோக்கப்படுகின்றனர். வகுப்பறை அல்லது பாடசாலைகளுக்கு முற்றிலும் புறம்பான சூழல்களிலிருந்து  திட்டமிடப்படும் கலைத்திட்டங்கள் , பாடத்திட்டங்களினை  வகுப்பறைகளுக்கு   ஆசிரியர் கொண்டு செல்லும் போது பல்வேறு  சவால்களை எதிர்நோக்குகின்றனர்.  பாடசாலைக்கு வெளியே ,உயர்மட்டத்தில் திட்டமிடப்பட்டு  வடிவமைக்கப்படுகின்ற கலைத்திட்டங்கள்  பாடநூல்கள், ஆசிரியர் வழிகாட்டிகள், கற்றல் சாதனங்கள், கற்றல் சந்தர்ப்பங்கள் என்பன ஒவ்வொரு மாணவனையும் கருத்திற் கொண்டல்லாது பொதுமைப்படுத்தப்பட்ட நிலையில் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை அடிப்படையாகக்கொண்டு  ஆசிரியர் தமது மாணவர்களுக்கு  பொருந்தக்கூடிய வகையில் தனித்தனி மாணவர்களுக்காக சிறந்த கற்றல் சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர்.இதனாலேயே பொதுக்கொள்கையின் அடிப்படையில் கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட போதிலும்  அவை வகுப்பறை மட்டத்தில் விருத்தி செய்யக்கூடிய வகையில் நெகிழ்ச்சிதன்மைகளை கொண்டிருக்கின்றன.இத்தகைய சவால்களை வெற்றி கொள்வதற்காக ஆசிரியர் தம் வாண்மையில் விருத்தியை ஏற்படுத்த வேண்டியவர்களாகின்றனர். வாண்மை விருத்தியினூடாகவே ஆசிரியர்கள் பல்வேறு கற்றல் சூழல்களையும் கற்றல் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தும் திறன்களைப் பெறுகின்றனர். இந்தவகையில் பல்வேறு கற்றல் சந்தர்ப்பங்களை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மாதிரியுருக்கள் உதவுகின்றன. கற்பித்தல் மாதிரியுருக்களின் பயன்பாடு ஆசிரியர்களுக்கு தமது கற்றல் கற்பித்தல் செயன்முறையினை அதிக பயனுறுதி வாய்ந்ததாக அமைத்துக் கொள்ள உதவுகின்றன.  கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளின் பல்வேறு கற்பித்தல் மாதிரிகளது பயன்பாடு காணப்பட்ட போதிலும் அண்மைக்காலங்களில் கற்பித்தல் மாதிரிகள் தொடர்பாக பிரபல்யம் பெற்றுள்ள புரூஸ் ஜோயிஸ் (Bruce Joyce) என்பவரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ள மாதிரியுருக்கள் மட்டும் இக்கட்டுரையில் கவனத்திற் கொள்ளப்படுகிறது.   

2.0 கற்பித்தல் பணி

உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறுவிதமான கல்விச்செயன்முறைகளின் மிக அடிப்படையான விடயமாக கற்றல்,கற்பித்தல்  செயன்முறை விளங்குகின்றது. முறைமையான  பாடசாலை கற்றல்கற்பித்தலில் ஆசிரியர்களும் மாணவர்களுமே நேரடியாக தொடர்புறுகின்றனர். கற்றல்கற்பித்தல்  செயன்முறையினூடாக மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியையும் சமூகமயமாக்கலையும் ஏற்படுத்தி நாட்டிற்கும் சமூகத்திற்கும் உரிய தேர்ச்சி மிகு நற்பிரஜைகளை உருவாக்குவதே அதன் இறுதி இலக்காகக் காணப்படுகிறது. இத்தகைய உயரிய பணியை வெற்றிகரமாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக மகத்தானது.

மாணவர்களினது செயலாற்றுகையின் விருத்தி செய்து சகல மாணவர்களினதும்  கல்விசார் அடைவுமானத்தை உயர்ந்த தரத்திற்கு கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் வேண்டப்படுகின்றனர்.இதனை ஆசிரியர்கள் தமது கற்பித்தல் செயற்றிறன்களை விருத்தி செய்யாமல் நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.

2.1 கற்பித்தல் ஒரு கலை

கற்பித்தலானது  அறிவியலாகவும் அதே நேரம் ஒரு கலையாகவும் எடுத்து நோக்கப்படுகிறது. கற்பித்தல் தொடர்பான கோட்பாடுகள், எண்ணக்கருக்கள், மாதிரியுருகள்கற்றல் கற்பித்தல் முறைகள், முறைமைகள், நுட்பங்கள்துணைச் சாதனங்கள் என்பவற்றின் உருவாக்கம்  அவற்றின் வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாக வைத்து நோக்கும்போது கற்பித்தலானது ஓர் அறிவியலாக கருதப்பட முடிகிறது.

இத்தகைய கோட்பாடுகள்எண்ணக்கருக்கள், மாதிரியுருகள், கற்றல் கற்பித்தல் முறைகள், முறைமைகள், நுட்பங்கள், துணைச் சாதனங்கள் போன்றவற்றை பயன்படுத்தல் , பிரயோகித்தல் தொடர்பாக ஆசிரியர்களின் தனித்துவம்  அல்லது தனியாள் திறன்களின் அடிப்படையில் கற்பித்தல் ஒரு கலையாக் நோக்கப்படுகிறது. “எச்செயலில் செயலைச் செய்பவரின் தனித்தன்மை கலக்கிறதோ அச்செயல் கலையாகிறது” (கணபதி). இதனடிப்படையில் கற்பித்தலும்  இசை, ஓவியம், நடனம், போன்று ஒரு கலையாகிறது.  

ஒருவர் ஒரு பாடலை இசைக்கும் போது அதனை இரசிக்க தோன்றுகிறது. அதே பாடலை வேறொருவர் இசைக்கும் போது அவ்வாறான உணர்வு ஏற்படுவதில்லை. சிலநேரம் அதனை வெறுக்கவும் செய்கின்றோம். அதேபோன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தலிலும்  ஒருவரது கற்பித்தலை மாணவர்கள் அதிகம் விரும்பும் அதேவேளை  வேறொருவரில்  ஆர்வம் காட்டாத சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆசிரியர், தன்னில் வளர்த்துக்கொண்டுள்ள  தனித்திறன்களைக் கொண்டு கற்பித்தலில் ஈடுபடும் போது  அது சுவையாகின்றது.  அதுவே கலையாகவும் ஆகின்றது. எனவே மாணவர்கள்  விரும்பும் வகையில் கற்பித்தலை மேற்கொள்ள ஆசிரியர் பல திறன்களை தன்னில் வளர்த்துக்கொள்ள வேண்டியவராகின்றார். இதற்கு கற்பித்தல் மாதிரியுருக்கள்கள் நல்லதொரு வழிகாட்டலை வழங்குகிறது.

2.2 கற்றல்-கற்பித்தல் மாதிரியுருகளின் முக்கியத்துவம்.

ஆசிரியர்கள்கலைத்திட்ட விடயங்களை  செயற்படுத்தும் போதும் , கற்பித்தலில்  ஈடுபடும் போதும் கணிப்பீடு மதிப்பீடுகளை மேற்கொள்ளும் போதும்  பல்வேறு விதமான உத்திகளை கையாள வேண்டியவராகின்றார். ஆசிரியர்களின் ஒரே விதமான உத்திகள்   சகல மாணவர்களிற்கும் சகல வேலைகளுக்கும் சிறந்த பேறுகளை  தருவதாக அமைந்து விடுவதில்லை.  இதனால் வகுப்பறைக்குத்தேவையான  வகையில் கற்றல் கற்பித்தல்  முறைகளை  பல்வேறு வழிகளில்  மாற்றியமைக்க வேண்டியவர்களாகின்றனர். மேலதிக பாடக்குறிப்புக்களை தயாரித்தல், கற்றல் செயற்பாடுகளைத்தயாரித்தல்துறை வல்லுனர்களை வகுப்பறைக்கு  வரச்செய்து கற்பித்தல்விளையாட்டுக்களை உருவாக்குதல் கற்றல் பொதிகளை வடிவமைத்தல்பாடத்துடன் தொடர்புடைய வகையில்  கள வேலைகளையும் சுற்றுலாக்களையும்  திட்டமிடுதல்முடியுமாகும் போது  உண்மையான காட்சிகளையும்  பொருட்களையும்  மாணவர்கள்  காண்பதற்கு  உதவுதல், தனியாள்குழுக்கற்றல்களை  மேற்கொள்வதற்கு  திட்டமிடுதல் சிந்தனைகளைக் கிளறக்கூடிய   வகையில் வினாக்களை  உருவாக்குதல் என கற்றல் கற்பித்தலுக்காக  ஆசிரியர்கள்  முன்னாயத்தம் செய்ய வேண்டியுள்ளனர்.  வகுப்பில் கற்கும் மாணவர்கள்  அனைவரும்  ஒத்த தன்மையுடையவர்காக   தனியாள் வேரறுபாடுகளின்றி  காணப்படும் போது இத்தகைய பிரயத்தனங்கள் தேவையற்றதாகும்.  ஆனால் வகுப்பிலுள்ள மாணவர்கள்  பல்வேறு  அனுபவப் பின்னணிகள் , அடைவு மட்டங்கள்  கொண்டு பலதரப்பட்டவர்களாக காணப்படுவர். அதாவது, வகுப்பறை மாணவர்கள்  பல்வேறுபட்ட கற்றல் தேவைகள் (Diverse Learning Needs) கொண்டவர்களாக காணப்படுவர். எனவேமாணவர்களிடம் சிறந்த அடைவு  மட்டத்தை  ஏற்படுத்துவதற்கும், மாணவர் கற்றலை மேம்படுத்துவதற்கும்   பல்வேறுவிதமான கற்றல்-கற்பித்தல் உத்திகளை பிரயோகிக்க வேண்டியுள்ளது.  ஆசிரியர்களுக்கு இவை சவால் மிகுந்ததாக உள்ளது.

கற்றல் கற்பித்தலில் இத்தகைய சவால்களை வெற்றி கொள்வதற்கான கற்பித்தல் மாதிரியுருகளின் பிரயோகம்  ஆசிரியர்களுக்கு உதவுகின்றன என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.  மாணவர்களிடம் சிறந்த அடைவு மட்டத்தை  ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பிரயோகங்களையும் (Applications) சிறந்த வேலைத்திட்டங்களையும்  (Programme)  ஆராய்ந்த பல கல்விசார் வல்லுனர்கள்  கற்பித்தல் மாதிரிகள்  இவற்றை சிறப்பாக அடையக்கூடிய விடயத்தில் சிறந்த பெறுபேறுகளை கொண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.எனவே இத்தகைய கற்பித்தல் மாதிரியுருக்களின்பால்  ஆசிரியர்கள்  கல்வியியலாளர்கள் கவனம் இன்று வெகுவாக ஈர்க்கப்படுகின்றது.

3.0 கற்பித்தல்  மாதிரி 

ஒரு குறிப்பிட்ட தயாரிப்பின் வகை   அல்லது வடிவமே மாதிரியுரு எனப்படுகிறது. அல்லது ஒரு முறைமையொன்றின்  எளிமையான விவரணம்  அல்லது ஒரு செயற்பாடு பற்றிய பிரதியே மாதிரி எனப்படுகிறது. கட்டுமானம் ஒன்றை அமைக்கும் போது  நாம் அதிகம் மாதிரியுருக்களை அமைத்து  அவற்றின் பல்வேறு பொருத்தப்பாடுகளை பரிசீலிக்கின்றோம். “நாம் காணாத ஒன்றை அல்லது நேரடியாக அனுபவிக்காத யாதாயினுமொன்றை  விளங்கிக்கொள்வதற்கு  உதவுகின்ற மனப்படமே மாதிரியுரு எனப்படுகின்றது” (Dorin, Dmmin & Gabel 1990 ). இந்த வகையில்  பூரணமான மனிதனை  உருவாக்குவதில்   ஈடுபடுகின்ற  ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலை   மேற்கொள்ள முன்  மாணவர்களின் அடைவு மட்டங்கள் , அனுபவப் பின்னணிகள், வகுப்பறைச்சூழல்கள் போன்ற பலவற்றை கருத்தில் கொண்டு  சிறந்த  கற்றலை முன்னெடுத்து செல்வதற்காக கல்விக் கோட்பாடுகள், சிந்தநனைகளின் அடிப்படையில்  உருவாக்குகின்ற  முன்திட்டமிடல்களே  கற்பித்தல்  மாதிரிகளாகின்றன. இந்த வகையில்  கற்பித்தல் மாதிரிகளினை கற்றல் சூழலின் விவரணமாகவும் கருத்தில் கொள்ளலாம்.

ஜோன் மேக்நீல் என்பவர்  “ கற்பித்தல்  மாதிரிகள்  கற்பித்தல் உத்திகளுடன் , கலைத்திட்ட அமைப்புகளுடன், கல்வி இலக்குகளுடன்   ஆசிரியர்களைத் தொடர்புபட வைக்க உதவுகின்றன” எனக்கூறுவது  இங்கு குறிப்பிடத்தக்கதாகும். புரூஸ் ஜோய்ஸின் கருத்துப்படி  கற்பித்தல் மாதிரிகள்  

  1. தகவல் ஒழுங்குபடுத்துகை மாதிரியுருத் தொகுதி (The Information-Processing Models)
  2. சமூக மாதிரித்தொகுதி (The Social Family Models)
  3. தனியாள் மாதிரித்தொகுதி (The Personal Family Models)
  4. நடத்தை  முறைமைகள்   மாதிரித் தொகுதி (The Behavioural system Family Models)என நான்கு பிரதான  வகைகளாக நோக்கப்படுகின்றன.

3.1 கற்பித்தல் மாதிரிகள் எவ்வாறு உருவாகின்றன?

ஒரு சிறந்த  ஆசிரியர்  குழந்தை இயல்பினை நன்குணர்தல் இன்றியமையாதது”  (பிளேட்டோ)  “ பிள்ளை  ஒரு புத்தகம்; அதன் ஒவ்வொரு  பக்கத்தையும்  ஆசிரியர்  கற்க வேண்டு”  (ரூசோ).  சிறந்த  கல்வியை பெறும் நோக்கில்  பாடசாலைக்கு  வரும்  மாணவர்கள்  தமது நினைவுகளில் பல்வேறு விதமான அனுபவங்களையும் அவர்களின் வயதுக்கேற்ற  நடத்தைக் கோலங்களையும்  கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனால்   ஆசிரியர்கள் மாணவர்களிடம்  எத்தகைய  கற்றல் மேற்கொள்ளப்பட வேண்டும்?   புதிய கற்றலிற்கு மாணவர்கள் தமக்குள்ள  எத்தகைய தயார் நிலையைக்கொண்டுள்ளார்கள்என இனங்காண்பது இன்றியமையாததாகின்றது. ஆயினும்  மாணவர்களின்  உள்மனதில் இறங்கி  அவற்றைக்கண்டறிவதென்பது இயலாத விடயமாகின்றது.  மாணவர்கள்  வெளிப்படுத்தும்  நடத்தைகளை அவதானித்தும், அவர்களிடமிருந்து வெளிப்படும்  மனவெழுச்சிளைக் கண்டு  பெற்றுக்கொள்ளும்  தகவல்களின் மூலம் இவற்றை அனுமானிக்க  வேண்டியவர்களாக ஆசிரியர்கள்  காணப்படுகின்றனர்.  இப்பணியானது,  கற்றல் கற்பித்தல்  செயன்முறையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இதன் மூலம் மாணவர்கள்  பற்றிய மனப்படங்களை  (mind mapping) ஆசிரியர்கள் தம்முள் உருவாக்கிக் கொள்கின்றனர்.

சிறந்த கற்பித்தலில் ஈடுபடுவதென்பது ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் மாணவர்களின் மனங்கள் (minds) குறிப்பாக எவ்வாறு கருத்துக்களும் மனவெழுச்சிகளும் சூழலுடன் தொடர்புறுகின்றன? பரிமாற்றப்படுகின்றன? என்பன பற்றி தொடர்ச்சியாக ஆராயத் துணிதலையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இவை  கற்றல்  மாதிரியுருக்களை பயன்படுத்துவதற்கான தேவைகளை  ஆசிரியர்களிடம் ஏற்படுத்துகின்றது எனலாம்.

கற்றல்  கற்பித்தல்   செயன்முறைகளில் ஆசிரியர்கள் தமது  மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புறுவதனாலும்  மாணவர்கள்  சிறந்த கற்றலினைப் பெற்றுக்கொள்ளவதற்காக வேண்டி கற்றல்  சூழலை (Learning Environmentஉருவாக்க வேண்டியிருப்பதால், சகல ஆசிரியர்களும் தமது கற்பித்தல்  நடவடிக்கைகளின் திறன்களை மென்மேலும் விருத்தி செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறு  விருத்தி செய்வதற்காக ஆசிரியர்கள் கற்பித்தல் செயன்முறைகளில் குறிப்பிட்ட சில பயிற்சிகளை (Practices)  உருவாக்குகின்றனர். இப்பயிற்சிகள்  முறையான கற்கைகளின் நோக்கத்தை  தோற்றுவிக்கின்றன. இவை மேலும் ஆராயப்பட்டு மெருகூட்டப்படும்போது அவை கற்பித்தல்  மாதிரியுருகளாகின்றன. கற்பித்தல்  மாதிரியுருக்கள் ஆசிரியர்களின் வாண்மைத்திறன்களையும் மேலும் விருத்தி செய்து விடுகின்றன.

3.2   கற்பித்தல்  மாதிரியுருக்களை   கற்றல்  மாதிரியுருக்கள்   எனக்கூற முடியுமா              

கற்பித்தல் மாதிரிகள் , அடிப்படையில் கற்றல் சூழலை மேம்படுத்துவதையே  இலக்காக கொண்டிருப்பதால்  உண்மையில் கற்பித்தல் மாதிரிகளை கற்றல் மாதிரியுருக்கள் எனவும் கருத்தில் கொள்ளலாம். கற்பித்தல் மாதிரியுருக்கள், மாணவர்களை தகவல்கள், கருத்துக்கள், பெறுமானங்கள் மற்றும் தாமாக கருத்து வெளியிடும் திறன்கள், சிந்திக்கும் வழிகளை அடைந்து கொள்வதற்கு உதவுகின்றன. மாணவர்களுக்கு எவ்வாறு கற்பது? ( How to Learn) என்பதை கற்பிப்பதற்கு வழியமைக்கிறது. உண்மையில் எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக இலகுவாகவும்  பயனுறுதியுடையதாகவும் கற்பதற்கும் கற்றல் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்குமான  முயற்சிகளே கற்பித்தலின் நீண்டகாலப் பெறுபேறுகளாக விளங்குகின்றன. இத்தகைய பெறுபேறுகளைக் படிப்படியாக அடைந்து கொள்வதில் கற்பித்தல் மாதிரியுருக்கள் சிறப்பான பயன்களைக் கொண்டுள்ளன. மேலும் எவ்வாறு கற்பித்தலை மேற்கொள்வது என ஆசிரியர்கள் அறிந்து கொள்ள விளைவதானது பெருமளவு மாணவர்களின் கற்றல் திறமைகளை வளர்த்தெடுப்பதில்  குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டிருக்கும். வெற்றிகரமான கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள்  தம்மை  ஒருபோதும் கற்பித்தலை வழங்கும் போது தம்மை வெறுமனே  கவர்ச்சிமிக்கவர்களாகவோ , செல்வாக்குடையவர்களாகவோ மட்டும் கருதிக் கொள்வவதில்லை. மேலும் கற்பித்தலின் மூலம் சிறந்த கற்போர்களை உருவாக்குவதிலேயே  அவர்களின் கவனம் அதிகம்  காணப்படும். கற்பித்தல்  மாதிரியுருக்களின் பிரயோகத்தின்  போது மாணவர்கள் தமது  கற்றல்  உத்திகளின் தன்மைகளையும் அதிகமதிகம் மாற்றுவர். அத்துடன் அதிக வினைத்திறன்களுடன் அதிக கற்றல் வகைகளை பெறுபவர்களாகவும் மாணவர்கள்  மாறிடுவார். எனவேஎவ்வாறு மாணவர்கள்  அதிக பயனுறுதியுடன்  கற்பதற்கு   கற்பிப்பதை இதன் மூலம் அதிகரிக்கலாம். அதிக சக்திமிக்க வகையில் கற்பிப்பதற்கு எவ்வாறு சகல மாணவர்களையும் கற்பிக்கலாம் என்பதற்கு கற்பித்தல் மாதிரியுருக்கள் சிறந்த வழிவகைகளைக் கொண்டுள்ளன.

எவ்வாறு கற்பது என்பது அறியக்கூடியதும் மாணவர்கள் தமக்கிடையில்  தொடர்பு படக்கூடியதுமான பொருத்தமான சூழல்களை  ஏற்படுத்துவதே கற்பித்தல் செயன்முறையின் மையமாக உள்ளது என ஜோன் டூயி  கூறுகிறார். இந்த வகையில்  கற்பித்தல்  மாதிரிகள் கற்றல்  சூழலின் விவரணமாகவே நோக்கப்படுகின்றது. பாட அலகுகளினை திட்டமிடுவதில் இருந்து கற்பித்தலில் பயன்படுத்தப்படும் பல்வேறு சாதனங்களை வடிவமைப்பது வரையிலான பல உபயோகங்களை இந்த கற்றல் விவரணம் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. எனவே கற்பித்தல் மாதிரியுருக்கள் கற்றல் மாதிரியுருக்களாகவும் நோக்கப்பட முடியுமாகின்றது.

3.3கற்பித்தல்   மாதிரியுருக்களின் அனுகூலங்கள் 

கற்றல் கற்பித்தல்   செயன்முறையில்   கற்பித்தல் மாதிரியுருக்களைப் பயன்படுத்துவதன் காரணமாக   ஆசிரியர்கள்  பல்வேறுவிதமான   அனுகூலங்களை  பெறுகின்றனர்.

  • கற்பித்தல்  மாதிரியுருக்கள்  யாவும்  கல்வியுலகின் தகுதி வாய்ந்த கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டுள்ளன.
  • கற்பித்தல் மாதிரியுருக்கள் தொடர்ச்சியான அனுபவங்களூடாக  புதுப்பிக்கப்படுகின்றன.
  • வகுப்பறைகளில்  இவற்றைப் பயன்படுத்துவது பொருத்தமுடையது. இசைவானது.
  • கற்பித்தல் மாதிரியுருக்கள்  வகுப்பறைகளில் வினைத்திறன் மிகுந்ததாக காணப்படுகின்றன.
  • இவை எக்காலதிற்கும், எப்பாடத்திற்கும் பொருத்தமுடையதாகவும்  நெகிழ்ச்சியுடையதாகவும் உள்ளன.
4.0  கற்பித்தல்  மாதிரியுருக்களின் வகைகள்.

கற்பித்தல் மாதிரியுருக்கள் பற்றிய நீண்டகாலம்  ஆராய்ந்தவர்களுள் புரூஸ் ஜோய்ஸ்  மற்றும் மர்ஷா வீல்  என்போர்  முக்கியம் பெறுகின்றனர். இவர்கள் கற்பித்தல் மாதிரியுருக்கள்  தொடர்பாக எழுதியுள்ள Models of Teaching  என்ற நூல் கல்வியியலாளர்கள் ,ஆசிரியர்கள் மத்தியில் பெரு வரவேற்பைப்பெற்றுள்ளது.  புரூஸ் ஜோய்ஸ் மர்ஷா வீல்  என்போர்  கற்பித்தல் மாதிரிகளை பிரதான நான்கு வகைகளுக்குள் உள்ளடக்குகின்றனர்.    அவையாவன,

  1. சமூக மாதிரித்தொகுதி (The Social Family Models)
  2. தகவல் ஒழுங்குபடுத்துகை மாதிரியுருத் தொகுதி (The Information-Processing Models)
  3. தனியாள் மாதிரித்தொகுதி (The Personal Family Models)
  4. நடத்தை  முறைமைகள்   மாதிரித் தொகுதி (The Behavioural system Family Models)
இவ் ஒவ்வொரு பிரதான வகை மாதிரியுருக்கள் குறிப்பிட்ட சில உப மாதிரியுருக்களை உள்ளடக்கியதாக உள்ளன. கற்றல் கற்பித்தலில் பிரயோகிக்கப்படும் கற்றல் மாதிரியுருக்கள் கொண்டுள்ள பொதுவான சில பண்புகளை அடிப்படையிலேயே கற்றல் மாதிரியுருக்கள் யாவும் 4 பிரதான வகைகளுக்குள் உள்ளடக்கப்படுகின்றன, 

சமூக மாதிரித் தொகுதிகள் 

சமூக வகை மாதிரியுருக்கள் பொதுவாக கற்றல் சமூகங்களை கட்டியெழுப்புவதில்   தனித்தன்மை வாய்ந்ததாக இனங்காணப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வகையில் உள்ளடங்கும் மாதிரியுருக்கள் ஒத்துழைத்துக் கற்றல், கூடிக்கற்றல், குழுக்கற்றல், சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கற்றல் கற்பித்தலில் கற்றல் சமூகமொன்றை  மாணவர் மத்தியில் கட்டியெழுப்புவதென்பது  சற்று கடினமான காரியமாகவே உள்ளது. இதன் போது ஆசிரியர்கள்  சமூக வகை தொகுதி  மாதிரியுருக்களை பயன்படுத்துவதனால்  இது இலகுவாகின்றது. இம்மாதிரியுருக்கள்  கற்றல் குறிக்கோள்களை  சமூக விழுமியங்கள், பொதுக்கொள்கை, முரண்பாடு தீர்வு,  என்பவற்றை  அடைவதில்  மிகுந்த செல்வாக்குடையதாக உள்ளன. பின்வருவன சமூகத் தொகுதி  மாதிரியுருக்கள்  ஆகும்

1. கற்றலில் பங்குதாரர் மாதிரி  (Partners  in learning): இதில் பின்வரும் இரு உப மாதிரியுருக்கள் உள்ளன:

(அ)  உடன்பாடான பரஸ்பர  சார்புள்ள மாதிரி (Positive  interdependence model)

(ஆ) கட்டமைப்பு விசாரணை  (Structural  investigation)

 2.  குழுப்பரிசோதனை

3.    3. வகிபாகமேற்றல் (Role playing)

4.     4.   சட்டரீதியான  விசாரணை (Jurisprudential inquiry)

 

கற்றலில் பங்குதாரர் (ஒத்துழைப்புக்கற்றல்)

அண்மைக்காலங்களில் மாணவர்கள்  ஒன்றிணைந்து கருமமாற்றுவதற்காக பல்வேறு   உத்திகளை  விருத்தி செய்யவும் ஒத்துழைத்துக் கற்றல் தொடர்பாகவும் அதிக  அக்கறை செலுத்தப்படுகிறது.  ஒத்துழைத்துக் கற்றல்   சார்ந்த  மாதிரியுரு,  தகவல்கள்,  நுட்பங்கள்,  நுட்பங்களை பரிமாறுவதற்கும் , ஆய்வுகளை  மேற்கொள்ளல், ஆய்வுப்பகுப்பாய்வு  செய்தல்  ஆகியவற்றுக்கு  உதவியாக அமைகின்றன. மாணவர்கள்  ஒன்றாக  பணியாற்றுவதற்குரிய   ஒழுங்கமைப்புகளை  இவை  தருகின்றன. மாணவர்கள் சோடிகளாக இணைந்து இலகுவான கற்றல் விடயங்களை  மேற்கொள்வதில் இருந்து சிக்கலான விடயங்களை பகுப்பாய்வு செய்வது வரை இம்மாதிரிகள் பயன்பாடு உடையதாக உள்ளன. இதனால் பாடசாலையில் சுயமாக கற்கும் சமுதாயங்கள் உருவாகின்றன. 

ஒத்துழைத்துக்கற்றல் மாதிரியுருவின்   செயலொழுங்குகள் சகல கலைத்திட்ட விடயங்களுக்கும்  சகல வயது மட்டத்தினருக்கும் பொருந்துவதுடன் மாணவர்களின் சுயமதிப்பு, சமூகத்திறன், ஒருமைப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்கின்றது. மேலும் இதனை ஏனைய மாதிரியுருக்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியுமாகின்றது. கற்பித்தலில் பயன்படுத்தப்படும் ஒத்துழைத்துக்கற்றலின் ஒரு படியான கற்றலில் பங்குதாரர்  - (சோடி)களை  உருவாக்கி பல்வேறு கற்றல் – கற்பித்தல்  நடவடிக்கைகள்  இலகுவாக, சுவாரசியமாக, மாணவரின் அதிக பங்குபற்றுதலுடன் கற்றல்- கற்பித்தல்  நடவடிக்கைகளை மேற்கொள்ள  ஆசிரியருக்கு முடியுமாகின்றது. இதில் உடன்பாடான பரஸ்பர சார்புள்ள மாதிரி , கட்டமைப்பு விசாரணை  என மேலும் இரு உப மாதிரிகள்  காணப்படுகின்றன. 

 குழுப்பரிசோதனை

இதனை விருத்தி செய்தவராக  ஜோன் டூயி விளங்குகிறார். இதனை ஹேபட் தேலன் என்பவர் மேலும் விருத்தி செய்தார். இம்முறையானது கற்றல்  சமூகத்தின் விருத்திக்கான நேரடி வழியாக கருதப்படுகிறது. குறிப்பாக பொருத்தமான கற்றல் சூழ்நிலையில் ஏனைய மாதிரியுருக்களுடன் இணைத்து இதனை பயன்படுத்த முடியுமாகின்றது. இது சகல  பாடங்களுக்கும் எல்லா வயது மட்ட பிள்ளைகளுக்கும் பிரயோகிக்க கூடியதாகும். மாணவர்கள், பிரச்சினைகளை  சரிவரச் செய்வதற்கும் பிரச்சினைகளின்  பல்வேறுபட்ட நோக்குகளை கண்டறிவதற்கும் பிரதான தகவல்களை, கருத்துக்களை,  திறன்களை மாணவர்கள்  ஒன்றாக கற்பதற்கு இட்டுசெல்லக்கூடிய மாதிரியுருவாக இது  விளங்குகிறது.

வகிபாகமேற்றல்

மாணவர்கள்  சமூக நடத்தைகள், தமது சமூக  இடைவினையின் போதான வகிபங்குகள்,  பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றினை  விளங்கிக்கொள்வதற்கு உதவும் கற்பித்தல் உத்தியாக இது கொள்ளப்படுகிறது. இம்மாதிரியுருவின் மூலம்  மாணவர்கள் தமது  சமூக  விழுமியங்களை இலகுவாக விளங்கிக்கொள்ள  வழியேற்படுகிறது. சமூகப் பிரச்சினைகள்  தொடர்பாக  தகவல்களை  சேகரித்து  ஒழுங்குபடுத்தவும்,  மற்றவர்கள் பற்றிய பரிவுணர்வினை தமக்குள்ள  விருத்தி செய்ய உதவுவதாகவும் தமது சமூகத் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் இது மாணவர்களுக்கு மிகப் பயன்வாய்ந்ததாக காணப்படுகிறது.  இதனைக் கற்றல்- கற்பித்தல்  நடவடிக்கைகளில்  பயன்படுத்துகையில்   மாணவர்கள்  பல்வேறு முரண்பாடு  தொடர்பான விடயங்களை  நடித்துக்காட்டல், அவற்றின் மூலம்   சமூகத்தில் உள்ளவர்களின்  வகிபங்குகளை விளங்கிக்கொள்ளல், சமூக  நடத்தைகளை அவதானித்தல், என்பவற்றில்  தமது  திறன்களை விருத்தி  செய்ய இது வழி கோலுகிறது. பொருத்தமான்  பாட அலகுகளை கற்பிக்கவும்  சகல  மட்டத்தினருக்கும் பிரயோகிக்கக்கூடியதாகவும் இது  காணப்படுவது  இதன்  மற்றொரு  சிறப்பம்சமாகும்.

 சட்டரீதியான  விசாரணை

இடை நிலைக்கல்வி, உயர்கல்வியில் கற்பிக்கப்படும் புவியியல்,  குடியியல் , அரசியல் போன்ற பாடங்களை  கற்பிப்பதற்கு  இம்மாதிரி சிறந்த பயனுடையதாக காணப்படுகிறது.  சமூக,  தேசிய,  சர்வேதச மட்டங்களில்  உள்ள  பல்வேறு  பிரச்சினைகளை  ஆராய்ந்து  கற்பதற்கு  இதனை  பயன்படுத்தலாம். அதிகமாக  தனியாள்  கற்கை ( Case Studies) முறையாக அரசியல், குடியியல்,  பாடங்களை  கற்பிப்பதற்கு  இது அதிக  பயனுடையதாகும்.

தகவல்- ஒழுங்குபடுத்துகை  மாதிரியுருக்கள்.

தரவுகளை  பெறல்,  அவற்றை  ஒழுங்கமைத்தல்,  வினாக்களை  உருவாக்கி  அவற்றுக்கு  விடைகளை உருவாக்குதல்,  எண்ணக்கருக்களை உருவாக்கி  அவற்றை  கடத்துவதற்கான ஊடகங்களை ஏற்படுத்தும் வகையில் கற்றல்-  கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு தகவல்  ஒழுங்கு படுத்துகி  மாதிரியுருத்தொகுதி  ஆசிரியர்களுக்கு  வழிகாட்டுகின்றன. இத்தொகுதிகளுக்குள்  உள்ளடங்கும்  வெவ்வேறு  மாதிரியுருக்கள்  பின்வரும்  அனுகூலங்களை கொண்டுள்ளன.

  • தகவல்கள், எண்ணக்கருக்கள்  கற்போரை இலகுவாக சென்றடைய  உதவுகின்றன.
  • கருதுகோள்  பரிசோதனைக்கும்   எண்ணக்கரு  உருவாக்கத்தை மேற்கொள்ளவும் உதவுகின்றன.
  • மாணவர்களை ஆக்கபூர்வமான சிந்தனைக்கு இட்டுச்செல்கின்றன.
  • மாணவர்களை  தனியாகவும் குழுக்களாகவும் கற்பதற்கு உதவுகின்றன.
  • கல்வியின் தனிப்பட்ட  , சமூக  இலக்குகளை  இலகுவாக  எய்திடச்செய்கின்றன.

இவ்வகை மாதிரித் தொகுதிகளுக்குள்  ஏழு கற்பித்தல் மாதிரிகள்  உள்ளடங்குகின்றன. அவையாவன:

1.       1உய்த்தறி சிந்தனை மாதிரி (Inductive   Thinking) (வாக்கியப்படுத்தல் சார்பானது)

2.     எண்ணக்கரு அடைதல்  மாதிரி (Concept attainment)

3.       நினைவுக்குறிப்பு மாதிரி  (ஞாபக உதவி) (mnemonic)

4.       முன்னேற்றகரமான  ஒழுங்குபடுத்துதல் மாதிரி (Advance organizers)

5.       விஞ்ஞான  ரீதியான விசாரணை (Scientific Inquiry)

6.       விசாரணை  பயிற்சி  மாதிரி (Inquiry training)

7.       கூட்டு பிரச்சினை தீர்த்தல் முறை   (Synectic)

 

உய்த்தறி  சிந்தனை  மாதிரி

பல்வேறு  தரவுகளை   சேகரித்தல்,  ஒழுங்குபடுத்தல்,  தரவுச்சுருக்கம்  செய்தல்,  தரவுகளை பயன்படுத்தல், ஆகியவற்றில்  மாணவர்களை  ஈடுபடுத்தும்  கற்பித்தல்  உத்தியாக இது  காணப்படுகிறது. ஒருவரின்  அடிப்படைத் திறன்களிலேயே  எண்ணக்கருக்களை  உருவாக்கும்  திறன் தங்கியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட   இக்கற்றல்  உத்தி மாணவர்கள்  தகவல்களைக் கண்டு கொள்வதற்கும்   ஒழுங்குபடுத்துவதற்கும்  தமது விசாரணைகளின் ஊடாக கருதுகோள்களை பரிசோதிப்பதற்கும்  மாணவர்களைத் தூண்டும் வகையில்   இது  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது  ஹில்டா தாபா வினது ஆய்வுகளின்  அடிப்படையில்  அமைக்கப்பட்டதாகும். இது  பல்வேறு  பாடங்களை  கற்பிப்பதற்கும் சகல வயது மட்டங்களுக்கும் பிரயோகிக்கக் கூடியதாக  இருப்பதும்  இதன் சிறப்பம்சமாகும். 

எண்ணக்கரு  அடைதல் மாதிரி

புறூனர் மேற்கொண்ட   சிந்தித்தல் தொடர்பான   ஆய்வுகளை  அடிப்படையாகக்கொண்டு   உருவாக்கப்பட்ட  மாதிரியுரு  இதுவாகும். மாணவர்கள் தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கும்  எண்ணக்கருக்களினை கற்றலின் போது மிக வினைத்திறனுடன் விளங்கிக்கொள்வதற்கும்  மாணவர்களுக்கு  உதவும்  வகையில்  இது  வடிவமைக்கப்பட்டுள்ளது.அடிப்படை  சிந்தனைத் திறன்களை கூர்மையாக்குவதில்  இது பெரும் பயனுடையது. வகுப்பறைச் செயற்பாடுகளில்  எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்வதற்கும் உருவாக்கிக் கொள்வதற்கும் மாணவர்களைத் தகுதி உடையவர்களாக ஆக்குவதில்  இது அதிக பயனுடையதாகும்.

 விசாரணைப் பயிற்சி மாதிரி.

தற்செயலான காரணப்படுத்தலுடன் தொடர்புருவதற்கு மாணவர்களை வழிப்படுத்துவதற்கும் சரியாகவும் திறமையாகவும்  வினாக்களை தொடுப்பவர்களாக  மாணவர்களை  உருவாக்குவதற்கும்  எண்ணக்கருக்களையும்  கருதுகோள்களையும்  கட்டியெழுப்புவதற்கும்  அவற்றை  பரிசோதிப்பதற்கும்   மாணவர்களை வழிப்படுத்தக்கூடிய  வகயில்  இது  வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை விஞ்ஞான  பாடங்களில் இது  அதிக  தொடர்புடையதாயினும்  சமூக   விஞ்ஞான  பாடங்களிலும்  இதனை  பயன்படுத்தக்கூடியதாக  உள்ளது.

முன்னேற்றகரமான  ஒழுங்குபடுத்தல்.

இதனை  டேவிட் ஒஸ்பெல்  விருத்தி  செய்தார். விரிவுரைகள்,  வாசிப்புகள்,  வேறுபல  ஊடகங்களின்  மூலமாக முன்வைக்கப்படுகின்ற  பாட விடயங்களை இலகுவாக கிரகித்துக் கொள்வதற்கான அறிக்கை சார்  கட்டமைப்பினை  இது  மாணவர்களுக்கு  வழங்குகிறது.  இதனை ஏனைய  சில  மாதிரிகளுடன்  இணைத்தும்  கர்பிக்கக்கூடியதாக உள்ளது.

நினைவுக்குறிப்பு  மாதிரியுரு

நினைவுக்குறிப்புக்கள்,  தகவல்களை தனமயமாக்குதல்,  நினைவில் கொள்ளுதல்  உத்திகளை இது  உள்ளடக்கியுள்ளது. ஆசிரியர்கள்  தமது  பாட  விடயங்களை  சிறந்த  முறையில்  முன்வைப்பதற்கு  வழிகாட்டும்  சிறந்த மாதிரியுருவாகவும்  இது  விளங்குகிறது. மாணவர்கள்  சிக்கலானதும்  இலகுவானதுமான  கற்கை விடயங்களை கற்பதற்கான் இயலளவினை  தத்ரூபமாக விருத்தி செய்ய  இது  பயனுடையதாகும்.

 விஞ்ஞான  ரீதியான விசாரணை   மாதிரியுரு

மாணவர்களில்  அனுமான  ஆற்றலினை விருத்தி  செய்யும்  வகையில் இது அமைந்து காணப்படுகிறது.  கற்றல் – கற்பித்தல்  நடவடிக்கைகளின்   தொடக்கத்திலிருந்தே மாணவர்களை விஞ்ஞான  ரீதியான  செயன்முறைகளுக்குள்  கொண்டு வந்து  கோட்பாடுகளையும்  கருதுகோள்களையும்  இலகுவாக  ஆராய்வதற்கு  இது  உதவுகின்றது. இளம்  சிறார்களுக்கு விஞ்ஞானப்  பாடத்தை அறிமுகப்படுத்தவும் கற்றலில்  ஏற்படும் சமத்துவமின்மை   சமூக  பொருளாதார   வேறுபாடுகளை  குறைப்பதற்கும்  இது  உதவுகிறது.

கூட்டு பிரச்சினை தீர்த்தல் முறை   ( Synectic)

இதுவொரு  கற்பித்தல்  உத்தி ஆகும். இது பல்வேறு எண்ணக்கருக்களின் புரிதலை ஆழப்படுத்த மாறுபட்ட மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையைத் தூண்டுவதற்கு உருவகம் மற்றும் ஒப்புமைகளைப் பயன்படுத்துகிறது. இதுவொரு ஒரு பிரச்சினை தீர்க்கும் முறையாகும், இது பல்வேறுபட்ட அனுபவம் மற்றும் அறிவு பரப்புகளை கொண்ட மாணவர் குழுக்களின்  ஆக்கபூர்வமான சிந்தனையை விருத்தி செய்கின்றது.

 தனியாள் மாதிரித்தொகுதி

இம்மாதிரியுருத் தொகுதிக்குள்   உள்ளடக்கப்படும்  மாதிரியுருக்கள்  தனியாள்  புலக்காட்சிகளில் இருந்து கற்பித்தல்  நடவடிக்கைகளை  ஆரம்பிப்பதற்கு  உதவுகின்றன.  தனியாள்  அனுபவங்களில்  இருந்தும் சுயநிலைப்பாடுகளில்  இருந்தும் பெற்றுக்கொள்ளப்படும் புலக்காட்சிகளே ஒருவரது  ஆளுமையையும் உலகினைக் காணும் தன்மையினையும் தீர்மானிக்கிறது. இதனைக் கருத்திற் கொண்ட வகையில்   தனிப்பட்ட  மாதிரிகள்  மாணவர்களிடையே   கற்றலை  ஏற்படுத்துவதற்கு   வழிகோலுகின்றது. இதில் பின்வரும் மாதிரிகள்  உள்ளடங்குகின்றன.

1.       உய்த்தறி  சிந்தனை  மாதிரி

2.     நேரிடையில் கற்பித்தல் மாதிரி

3.       சுயமரியாதையை மேம்படுத்தும்  மாதிரி  

 நேரிடையில்  கற்பித்தல்  மாதிரி  (Non-Directive Teaching)

வழிகாட்டல் கோட்பாடுகளில்  இருந்து இது விருத்தி செய்யப்பட்டுள்ளது. கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளில் இதனைப் பயன்படுத்தும் போது ஆசிரியர்  மாணவர்களுக்கிடையில் ஒத்துழைப்பு பண்பு விருத்தி செய்யப்படுகிறது. இதனால்  மாணவர்கள் அதிக  பயன்மிகு  கற்றலில் கற்றலில்  ஈடுபடுகின்றனர். இத்தகைய  கற்றலின் போது ஆசிரியர்கள்  ஒரு வழிகாட்டியாக ,  சாத்தியப்படுத்துனராக நெறிப்படுத்துபவராக விளங்குவதற்கு வழியேற்படுகிறது. இது  மாணவர்கள்  சுயாதீனமாக அல்லது ஒத்துழைத்துக் கற்றலில்  ஈடுபடுவதற்கும்  மேலும்  தூண்டுதலாக  அமைகிறது.  மாணவர்கள்  தம்முணர்வுகளையும்   சிந்தனைகளையும்  விளங்கிக் கொள்வதற்குரிய   நிகழ்ச்சித்திட்டங்களில்  இக்கற்பித்தல்  மாதிரியுரு  அதிக  பயனுடையதாகும்.

சுயமரியாதையை  மேம்படுத்தும் மாதிரியுரு (Enhancing Self Esteem) .

சுய மதிப்பு,  சுய  யதார்த்த  தன்மைகளை  கட்டியெழுப்புவதற்கான  நிகழ்ச்சிகளுக்கு  இந்த மாதிரியினை  பிரயோகிக்கலாம்.மாணவர்களின்  தனியாள்  பிரதிமை  தொழிற்பாடுகளை விருத்தி  செய்வதற்கு  இக்கற்பித்தல்  உத்தி  மிகப்பயனுடையதாகின்றது. ஆசிரியர்கள்  தமது  கற்பித்தல்  பாங்குகளையும்  செயன்முறைகளையும்  ஆராய்வதற்கு  இது  வழி கோலுகின்றது.

நடத்தை சார்  மாதிரியுருத் தொகுதி.

இவ்வகைக்குள்  அடங்கும்  மாதிரியுருத் தொகுதிகள்  சமூகக் கற்றல்  கோட்பாட்டு நடத்தை சீர்ப்படுத்தல், போன்ற கோட்பாடுகளை  அடிப்படையாகக் கொண்டவையாகும். மனிதர்கள்  தமது  நடவடிக்கையின் ஊடாக தமக்குள்ள  சுய திருத்தங்களை  மேற்கொள்ளும்   ஆற்றல் உடையவர்கள் பணி ஒன்றினை  மேற்கொள்ளும் போது  ஏற்படும்  அனுபவங்கள்  தொடர்பாடல்கள் ஊடாக  தமது  நடத்தைகளை   சரி செய்யக்கூடிய நிலையிலேயே மனிதர்கள்  காணப்படுகின்றனர்.  அறிவு  ரீதியாக எவ்வாறு மக்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கும்  பின்னூட்டல்களுக்கும் துலங்குகின்றனர் என்பதை  அடிப்படையாகக் கொண்டு உளவியலாளர்கள் மனிதனின்  சுய திருத்த  தொழிற்பாட்டினை  இலகுவாக்குவதற்காக  எவ்வாறு  நடவடிக்கைகளையும்  பின்னூட்டல்களையும் ஒழுங்குபடுத்துவது  என்பது  தொடர்பாக  ஆழமாக ஆராய்ந்துள்ளனர். 

இதன் பயனாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை  அடிப்படையாகக்கொண்டு  கற்றல்  கற்பித்தல்  நடவடிக்கைகளில்

·         பீதிகளைக் குறைத்தல்.

·         வாசிக்கவும்   கணக்கிடவும் கற்கசெய்தல்.

·         சமூக மெய்வல்லுனர்  திறன்களை   விருத்தி  செய்தல்.

·         பதகளிப்பினை குறைத்து   நிதானத்தன்மையினை  மேம்படுத்துதல்.

·  சிக்கல்  வாய்ந்த  அறிவு சார்ந்த  விடயங்களைக் கற்றல் போன்றவற்றுக்கான நிகழ்ச்சித்திட்டங்களை  உருவாக்க உதவுகின்றன.

இம்மாதிரியுருக்கள்   அவதானிக்கக்கூடிய நடத்தைகளில்  அதிக அக்கறை கொள்வதுடன் மாணவர்களிடம் தொடர்பாடல்   செயன்முறைக்கான  பணிகளையும் முறைகளையும் தெளிவாக  வரையறை செய்கின்றன.  இத்தொகுதிக் கற்றல்  மாதிரியுருக்கள்  உறுதியான    ஆய்வின்  அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதனால்  சகல  வயது மட்டத்திலுமுள்ள மாணவர்களில்  பிரயோகிக்கக் கூடியதாக உள்ளன. இம்மாதிரித் தொகுதி  பின்வரும்   பல மாதிரிகளை  உள்ளடக்கியுள்ளது:

பாண்டித்திய  கற்றல்  மாதிரி  Mastery  learning

நேரிடையான போதனை  மாதிரி Direct instruction

போலச்செய்தல்  மாதிரி Simulation

சமூகக்கற்றல்  மாதிரி Social  learning

நிகழ்ச்சி திட்டமிடல் மாதிரி Programmed scheduled

பாண்டித்திய  கற்றல் மாதிரியுரு

கற்றல்-  கற்பித்தல்   நடவடிக்கைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும்  மாதிரியுருக்களுள்  இதுவும்  ஒன்றாகும். கற்பதற்கான்  பாட விடயம்  பல உப அலகுகளாக பிரிக்கப்பட்டு  அப்பாட  அலகுகளில்  மாணவர்கள்  படிப்படியாக  பாண்டித்தியம்  அடைவதை  இது  கருத்தில் கொள்கிறது. ஒவ்வொரு பாட  அலகின்  கற்றலின் பிறகு,  தாம் எவற்றைக் கற்றுள்ளோம் என்பதை  பரிசோதித்து  அறிய  வேண்டியிருக்கும்.  கற்றலில்  பாண்டித்தியம் அடைந்திருந்ததாக  மதிப்பீட்டு  முடிவுகள்  தருமாயின்  அடுத்த  பாட அலகுகளுக்குள்  மாணவர்களை  இட்டுச்செல்லலாம்.  மாறாக  குறித்த  அலகில்  பாண்டித்தியம்  அடையாத  மாணவர்கள்  மீண்டும் அதே பாட  அலகில் பாண்டித்தியம்  அடையும்வரை கற்றலில்  ஈடுபடுத்த வேண்டியிருக்கும். 

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில்  இதனைப் பிரயோகிக்கும் போது, ஆசிரியர்கள்  பல்வேறு  விடயங்களை  கவனத்தில் கொள்ளல் வேண்டும். பாட விடயங்கள்  இலகுவானவற்றில்  இருந்து  சிக்கலானவற்றுக்கு செல்லும் வகையிலும்   அடிப்படைத் திறன்களில் இருந்து உயர் மட்ட தேர்ச்சிகளை  நோக்கியதாகவும் பாடங்கள்  திட்டமிடப்பட வேண்டும்.  மீத்திறன்  மிகு மாணவர்கள் மனவெழுச்சி பிரச்சினைகள் கொண்ட  மாணவர்கள் என மாணவர்களது பல்வேறு மட்டங்களையும் கவனத்தில் கொள்ளல் இங்கு வேண்டுமாகின்றது.

நேரிடையான போதனை  மாதிரியுரு

அதிக  வினைத்திறன்  மிகு  ஆசிரியர்கள்  குறைந்த வினைத்திறன் கொண்ட  ஆசிரியர்களுக்கிடையிலான வேறுபாடுகள்  , சமூக கற்றல் கோட்பாடுகள்  பற்றிய  ஆய்வுகளில் இருந்து இக்கற்பித்தல்  மாதிரி  வடிவமைக்கப்படுகிறது. கற்றலைச் சாத்தியப்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டல் குறிப்புகளுடன் வெளிப்படையான குறிக்கோள் கூற்றுக்களை உள்ளடக்கிய வகையில்   கற்பித்தல் நடவடிக்கைகள்  இதில்  மேற்கொள்ளப்படும். மேலும் பல்வேறு செயற்பாடுகள்  கவனமான கண்காணிப்புச் செயன்முறை  சிறந்த பின்னூட்டல்  ஆகியவற்றினையும்  இது உள்ளடக்கியுள்ளது.

மேலும் இத்தொகுதி  கற்பித்தல்  மாதிரியுருக்களில்  போலச்செய்தல்  மாதிரி,  சமூகக் கற்றல் மாதிரி,  திட்டமிட்ட நிகழ்ச்சி  மாதிரி  போன்ற  வேறு  கற்பித்தல்  மாதிரியுருக்களும்  உள்ளடங்குகின்றன. 

எனவே  கற்றல்  கற்பித்தல்  செயன்முறையினை  வெற்றிகரமாகவும்  வினைத்திறன்  மிகுந்ததாகவும்  முன்னெடுத்துச் செல்வதற்கு கற்றல்-  கற்பித்தல்  மாதிரிகள்  பலவகைகளில்  ஆசிரியர்களுக்கும்  கலைத்திட்ட  வடிவமைப்பாளர்களுக்கும்   உதவுகின்றன.  ஆசிரியர்கள்  தமது வாண்மை விருத்தியினை  மேலும்  உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இவற்றை  அறிந்து  பிரயோகிக்க முற்படுவது  இன்றியமையாததாகும்.

 உசாத்துணைகள்

1.  Bruce Joyce and Marsha Weil , (2000)  ,  Models of Teaching , Sixth edition,  Allyn  and  Bacon,  Boston

2.  Dewey. J (1916) Democracy  and Education,  New York : Macmillan

3.  McNeil D.J. (1996). Curriculum – A Comprehensive introduction, Haper collings


குறிப்பு:  இலங்கை மனித வள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவினால் வெளிடப்பட்ட கூர்மதி (2006-2008) வெளிவந்த கட்டுரையின்  மீள் பதிப்பாகும்  (திருத்தியமைக்கப்பட்டது).

கணணி  தட்டச்சு உதவி: அஹமட் பிஸ்தாமி 


விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...