ஆய்வு ஒழுக்கங்கள் (Research Ethics)
கலாநிதி.எப்.எம்.நவாஸ்தீன்,
கல்விப் பீடம்,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
இன்றைய காலகட்டத்தில் ஆய்வில் ஈடுபாடு காட்டும்
நபர்கள் அதிகரித்து வருகின்றனர். கால முக்கியத்துவம் பெறும் பிரச்சினை யொன்றுக்கு
பொருத்தமான தீர்வுகளை கண்டறியும் பொருட்டு பொருத்தமான,
ஏற்றுகொள்ளப்பட்ட முறைகளில் தரவுகள், தகவல்களை திரட்டி, பகுப்பாய்வுக்குட்படுத்துவதன்
ஊடாக பிரச்சினைக்கான தீர்வுகள், அதற்க்கான வழிமுறைகளை கண்டறியும் ஒரு செயலொழுங்கினை
ஆய்வு அல்லது ஆய்வு செயன்முறை என்று கூறுகிறோம். இவ்வாய்வு செயன்முறையின் போது
ஆய்வாளர் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் அநேகமுள்ளன. அவற்றில் ஒன்றே Research Ethics எனும் ஆய்வு ஒழுக்கங்கள் ஆகும். ஆய்வுகளில்
ஈடுபாடு காட்டி வரும் இளம் ஆய்வாளர்களை கருத்திற்கொண்டு இக்கட்டுரையில் ஆய்வு
ஒழுக்கம் பற்றிய அடிப்படை விடயங்கள் எடுத்து நோக்கப்படுகின்றன.
ஆய்வு ஒழுக்கம் என்றால் என்ன?
Ethics எனும் ஆங்கிலப் பதமானது, நன்னெறி, நெறிமுறை, ஒழுக்கவியல் எனும் பதங்கள் கொண்டு பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு காரியத்தை
மேற்கொள்ளும்போது பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களை இது குறித்து
நிற்கிறது. இந்த பின்னணியில் Research Ethics எனும் ஆய்வு நெறிமுறை அல்லது ஒழுக்கம் பற்றி விளங்கிக் கொள்ளலாம். ஆய்வினை மேற்கொள்ளும் போது, அதன் ஒவ்வொரு
படிநிலைகளிலும் பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களே ஆய்வு ஒழுக்கம் என
இலகுவாக வரைவிலக்கணம் செய்து கொள்ளமுடிகிறது. ஆய்வின் ஒவ்வொரு நிலைகளிலும் எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக் கூடாது என்பதை விளங்கி அதன்படி நடப்பதே
ஆய்வு ஒழுக்கம் எனலாம். எனவே ஆய்வினை பொறுப்பான
முறையில் மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை இந்த ஆய்வு ஒழுக்கவியல் வழங்குகிறது என்று கூட கூற முடியும் . இதன்
மூலம் ஆய்வினில் ஓர் உயர் ஒழுக்க(நன்னெறி) நியமம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது.
ஆய்வு ஒன்றினை நேர்மையாக மேற்கொள்வதற்க்கான வழிகாட்டுதல்களையும் இவ்வாய்வு
ஒழுக்கம் வழங்குகிறது என்றால் அது மிகை இல்லை.
ஆய்வு ஒழுக்கமென்பதை மேலும்
விரிவாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு பின்வரும் சம்பவங்களை சற்று கவனியுங்கள்:
உங்கள்
சிந்தனைக்கு...
சம்பவம்-1
- கல்வி முதுமாணி கற்கும் மாணவர் தனது ஆய்வு அறிக்கைக்கான தரவு பகுப்பாய்வினை அறிக்கையிடும் போது தனது ஆய்வுக் குறிக்கோள்களுக்கு /கருதுகோள்களுக்கு பாதகமான பகுப்பாய்வு முடிவுகளின் சில பகுதிகளை நீக்கி விடுகிறார்.
சம்பவம்-2
- கல்வி முதுமாணி கற்கும் மாணவர் குழு ஒன்று, கல்வி உளவியல் பாடத்திற்கு தாம் குழுவாக மேற்கொண்ட சிறு அளவிலான ஆய்வு சிறந்த பெறுபேறுகளை பெற்று தந்தமையினால் தன்னார்வமுற்று அதனை ஆய்வு சஞ்சிகையில் பிரசுரிக்க முடிவு செய்தனர். எனவே ஒரே கட்டுரையினை ஒரே தடவையில் இரு ஆய்வு சஞ்சிகைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம்-3
- கல்வி முதுமாணி கற்கும் மாணவர், கல்வி ஆய்வு முறைகள் எனும் பாடத்தில் மூன்றாவது ஒப்படையாக ஆய்வு முன்மொழிவுகளை தயாரித்து முன்வைத்திருந்தனர். இதே முன்மொழிவுகளை தமது இரண்டாம் வருட அல்லது முதுதத்துவமாணிக்கான ஆய்வு செய்வதற்காக சமர்ப்பிக்க முடியும். ஆய்வு முன்மொழிவு செய்தபோது சபீர் எனும் மாணவனின் ஆய்வு முன்மொழிவு அதிக பாராட்டுதல்களையும் சிறந்த பெறுபேறினையும் பெற்றிருந்தது. சபீர் தனது முதுதத்துவமாணிக்கான விண்ணப்பம் செய்த போது தனது சக வகுப்பு நண்பன் கபீர் ஏற்கனவே சபீரின் ஆய்வு முன்மொழிவை தன்னுடையதாக சமர்ப்பித்து அனுமதி பெற்று இருப்பது தெரிய வந்தது
சம்பவம்-4
- தென்னாட்டு பாடசாலை அதிபர் ஒருவர் கல்வி முதுதத்துவமாணி கற்க விருப்பம் கொண்டு விண்ணப்பிக்க தயாரானார். அதற்காக, ஆய்வு முன்மொழிவினை எழுதுவது அவருக்கு சிரமமாக இருந்தது. இதன்போது தனது பாடசாலை ஆசிரியர் ஒருவர் வேறு ஒரு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பு படிப்பது நினைவுக்கு வந்தது. அவ்வாசிரியரை அழைத்த அதிபர், ஆசிரியரின் ஆய்வுக் கட்டுரைகளின் அத்தியாயங்களை சற்று பார்த்து தருவதாக வாங்கி கொண்டார். ஆசிரியரின் ஆய்வு கட்டுரையில் உள்ள விடயங்களை நகலாக்கம் செய்து தனது முதுத்துவமாணி ஆய்வு முன்மொழிவினை தயாரித்துக் கொண்டார்.
சம்பவம்-5
- தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவகம் ஆய்வு மானியம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை கோரியிருந்தது. இதற்கான ஆய்வு முன் மொழிவு தயாரிக்கும் போது ராணி தனது தோழி வாணியினையும் துணைக்கு அழைத்து அவரது சிறந்த கருத்துக்கள், வழிகாட்டல்களை பெற்று ஆய்வு முன்மொழிவினை தயாரித்து இருந்தாள். எனினும் ஆய்வு மானியத்துக்கான விண்ணப்பத்துடன் அனுப்பப்பட்ட ஆய்வு முன்மொழிவில் ராணியின் பெயர் உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை.
சம்பவம்-6
- கல்வி அமைச்சுக்க்காக ஆய்வு ஒன்றை செய்வதில், குமார், கிசோர்,சுதன், மதன் ஆகிய நான்கு நண்பர்கள் ஈடுபட முன்வந்தனர். எனினும் மதன் விடுமுறையில் நீண்ட காலம் வெளியூர் சென்றிருந்த காரணத்தினால் அவரால் ஆய்வுக்காக எந்த பங்களிப்புகளையும் செய்ய முடியவில்லை. எனினும், இறுதி ஆய்வு அறிக்கையில் மதனின் பெயர் இடம்பெற்று இருந்தது.
சம்பவம்-7
- கல்வி ஆய்வொன்றில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள் குழு, வகுப்பறை ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பாக தரவுகளை திரட்ட கருதியது. பாடசாலைகளுக்கு சென்ற அம்மாணவர் குழு, ஆசிரியர்களுக்கு அறிவிக்காமலே தரவுகளை திரட்டி இருந்தது.
சம்பவம்-8
- வகுப்பறையில் ஆசிரியர்களின் மனவெழுச்சி கோலங்கள் தொடர்பாக ஆசிரியர்களின் அனுமதியுடன், தரவுகளை திரட்டி இருந்த ஆய்வு மாணவர் குழு, அத்தரவுகளை வேறு ஒரு குழுவின் ஆய்வுக்காகவும் வழங்கி இருந்தனர்.
சம்பவம்
9
- ஆய்வறிக்கை ஒன்றை எழுதிக் கொண்டிருந்த ஆய்வாளர், ஆய்வின் பல பகுதிகளில் பிறர எழுதிய கட்டுரைகளில் இருந்து பெற்ற விடயங்களை தனது சொந்த கருத்துக்கள் போல எழுதி இருந்தார்.
மேற்கண்ட
சம்பவங்களை நோக்கும் உங்களுக்கு இச் சம்பவங்களில் வரும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள
முடியாதிருக்கும். இப்படி செய்திருக்க கூடாது என உங்கள் மனதில் எண்ணுவதை புரிந்து
கொள்ள முடிகிறது. மேற்கண்ட சம்பவங்கள் ஒழுக்க நெறிமுறைகளுக்கு அப்பால்பட்டது என
நீங்கள் இப்போது விளங்கி கொண்டிருப்பீர்கள். இச் சம்பங்களின் அடிப்படையில் ஆய்வு
ஒழுக்கம் என்பதை நாம் பின்வருமாறு வரையறுத்துக் கொள்ள முடியும்:
ஆய்வினைத் திட்டமிடுதல், மேற்கொள்ளல் மற்றும் பிரசுரித்தல் ஆகியவற்றுக்கு அடிப்படை ஒழுக்க நெறிமுறைகளைப் பிரயோகிக்கும்
செயன்முறை ஆய்வு ஒழுக்கம் எனப்படுகிறது. (Research ethic involves the
application of fundamental ethical principles to planning, conducting & publishing
of a research)
ஆய்வு
ஒழுக்கம் ஏன் அவசியமாகின்றது?
ஆய்வில்
ஈடுபடும் எமக்கு இக்கேள்வி அடிக்கடி எழக்கூடும். ஆய்வில் பல்வறு நபர்கள்
பங்குகொள்வார்கள். அது தனிநபர்களாக இருக்கலாம் அல்லது சமூகங்களாக இருக்கலாம்.
இவர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள், தகவல்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு உண்டு. இவற்றை,
பாதுகாப்பதன் ஊடாக ஆய்வாளரும் தன்னையும் தனது ஆய்வினையும் பாதுகாத்து கொள்ள
கூடியதாகவும் இருக்கும். அதேபோன்று, ஆய்வின் மூலம் பெறப்படும் அறிவின் துல்லியத்
தன்மையினை உறுதி செய்து கொள்ளவும் ஆய்வு ஒழுக்கம் எமக்கு உதவுகின்றது. மேலும்.
ஆய்வுச் செயன்முறையில் பல்வேறு புலமைசார் சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டிய
சந்தர்பங்கள் அதிகம் ஆகும். அத்தகைய சூழமைவில், புலமைசார் சொத்துக்களை
பாதுகாப்பதற்க்கான வழிமுறைகளையும் இவ்வாய்வு ஒழுக்கம் எமக்கு கருத்து தருகிறது.
ஆய்வு
ஒழுக்கத்தின் பிரதான அடிப்படைகள்
ஆய்வு
ஒழுக்கத்தில் ஆய்வாளர் பின்வரும் அடிப்படை அம்சங்களை கடைபிடிப்பவராக இருக்க
வேண்டும்:
1. Honesty- நேர்மை
2. Objectivity- புறவயத்தன்மை
3. Integrity: நாணயம்
4. Carefulness- கவனம் / அக்கறையுடன் செயல்படல்
5. Openness- திறந்ததன்மை
6. Respect for Intellectual
Property புலமைசார்சொத்துக்கான
மரியாதை
7. Confidentiality- இரகசியத்தன்மை
8. Responsible Publication- பொறுப்பான முறையில் பிரசுரித்தல்
9. Responsible Mentoring- பொறுப்பான வழிநடத்தல்
10. Respect for Colleagues- சக பணியாளரை மதித்தல்
11. Social Responsibility- சமூக பொறுப்புணர்வு
12. Non-Discrimination-
பாகுபாடு காட்டாதிருத்தல்
13. Competence-
தேர்ச்சி
14. Legality-
சட்டபூர்வத்தன்மை
15. Animal Care-
விலங்கு பராமரிப்பு
16. Human Subjects Protection- மனித விடய பாதுகாப்பு
- நேர்மை (Honest): தரவு, பெறுபேறுகள், ஆய்வு முறைகள் மற்றும் ஆய்வு செயன்முறைகள் மற்றும் பிரசுர நிலைமையினை பற்றி நேர்மையாக அறிக்கையிடுதல் வேண்டும். தரவுகளை இட்டுக்கட்டுதல், பொய்யுரைத்தல் அல்லது தவறாக சித்தரித்தல் என்பன அறவே கூடாது
- புறவயத்தன்மை (Objectivity): பரிசோதனை வடிவம், தரவு பகுப்பாய்வு, தரவு வியாக்கியானம், சக மதிப்பாய்வு, தனிப்பட்ட முடிவுகள், மானியதுக்காக எழுதுதல், நிபுணர் சாட்சியம் மற்றும் ஆராய்ச்சியின் பிற அம்சங்களில் பக்கச்சார்புகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
- நாணயம் (Integrity): ஆய்வு செயன்முறைகளில் நீங்கள் மேற்கொள்ளும் உங்கள் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்களை பேணுங்கள்; நேர்மையுடன் செயல்படுங்கள்; ஆய்வு தொடர்பான உங்கள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளில் நிலைத்தன்மையினை பேணுங்கள் .
- அக்கறையுடன் செயற்படல் (Carefulness): ஆய்வுகளை மேற்கொள்கையில் கவனக்குறைவான பிழைகள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்; உங்கள் சொந்த வேலையையும் உங்கள் சகாக்களின் பணியையும் கவனமாகவும் விமர்சன ரீதியாகவும் ஆராயுங்கள். ஆராய்ச்சி நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பதிந்து வைத்து கொள்ளுங்கள் சிறந்த பதிவுகளை வைத்திருங்கள்.
- திறந்ததன்மை (Openness) : ஆய்வுடன் தொடர்பான தரவு, தரவு பகுப்பாய்வு முடிவுகள், யோசனைகள், ஆய்வு கருவிகள், ஆய்வு வளங்களை பற்றி பிறருடன் கலந்துரையாடுங்கள். அதன்போது கிடைக்கும் விமர்சனங்களையும் புதிய யோசனைகளையும் எப்போதும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- புலமைசார் சொத்துக்களை மதித்தல் (Respect for Intellectual Property): காப்புரிமை (patents), பதிப்புரிமை (copyrights) மற்றும் பிற புலமைசார் சொத்துக்களை மதிக்ககற்றுக் கொள்ளுங்கள் . வெளியிடப்படாத தரவு,ஆய்வு முறைகள் அல்லது ஆய்வு முடிவுகளை அவற்றை மேற்கொண்ட நபர்/நபர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம். உரிய முறையில் உரியவர்களை மேற்கோள் காட்ட வேண்டிய இடத்தில் மேற்கோள் காட்டவும். ஒருபோதும் இலக்கிய திருட்டில் ஈடுபட வேண்டாம்.
- நம்பகத்தன்மை/இரகசியம்பேணல் (Confidentiality): ஆய்வில் ஈடுபடும் போது தரவுகளை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்களை அல்லது பதிவுகளை இரகசியமாக பாதுகாக்கவும்
- பொறுப்பான வெளியீடு (Responsible Publication): ஆய்வின் இறுதி நோக்கம் அவற்றை பிரசுரிப்பதே ஆகும். இதன்போது, உங்கள் சொந்த வாண்மை வாழ்க்கையை மட்டும் முன்னேற்றுவதை கருத்தில் கொள்ளாமல் , ஆராய்ச்சி மற்றும் அறிவினை முன்னேற்றுவதற்காகவும் ஆய்வுகளை பிரசுரிக்குக. தேவையற்ற மற்றும் நகல் வெளியீட்டைத் தவிர்க்கவும்.
- பொறுப்பான வழிகாட்டல்கலை செய்தல் (Responsible Mentoring): ஆய்வி ஈடுபாடு காடும் உங்களிடம் ஆய்வு முறைகளை பயிலுவதற்காக பலர் முன்வரலாம். இதன்போது, உங்களிடம் பயிலுவோருக்கு ஆய்வு தொடர்பாகதேவையான அறிவூட்டல்கள் , வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க உதவுங்கள். அதன் போது அவர்களின் நலனை ஊக்குவிக்கவும், அவர்கள் தாமாகவே தீர்மானம் மேற்கொள்வதை அனுமதிக்கவும்.
- சக பணியாளரை மதித்தல் (Respect for Colleagues): ஆய்வுச் செயன்முறையில் சில நேரங்களில், எம்முடன் இணைந்து பலர் செயலாற்ற முன்வந்திருப்பர். அவர்களை நீதமான முறையில் மதிக்கவும், கருத்து வேறுபாடுகளை மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்
- சமூக பொறுப்புணர்வு (Social Responsibility): ஆராய்ச்சி, பொதுக் கல்வி மற்றும் ஆலோசனை வழங்கல் ஆகியவற்றின் மூலம் சமூக நன்மைகளை ஊக்குவிக்கவும் சமூக தீங்குகளைத் தடுக்கவும் குறைக்கவும் பாடுபடுங்கள்.
- பாகுபாடு கட்டாதிருத்தல் Non-Discrimination: ஆய்வு செயன்முறையின் போது , ஆய்வாளர்கள் தமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, நடுநிலையில் நடந்து கொள்ளல் வேண்டும். ஆய்வின் போது, ஆய்வு செயன்முறைகளில் ஈடுபடும் பல்வேறு நபர்களை பாகுபாடு காட்டாது நடுநிலைமையில் நடந்து கொள்ளல் வேண்டும்.
- திறன்/ தேர்ச்சி (Competence): ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாக உங்கள் வாண்மைத் தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்வதுடன் வாழ்நாள் முழுவதும் கல்வி மற்றும் கற்றல் மூலம் உங்களை விருத்தி செய்து கொள்ளவும்
- சட்டபூர்வத்தன்மை (Legality).ஆய்வினை மேற்கொள்கையில், அது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் நிறுவன மற்றும் அரசாங்க கொள்கைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
- விலங்கு பராமரிப்பு (Animal Care): ஆய்வுகளில் விலங்குகளை பயன்படுத்தும்போது அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் அவற்றை சரியாக பராமரித்தல் வேண்டும். தேவையற்ற அல்லது மோசமாக வடிவமைக்கப்பட்ட விலங்கு பரிசோதனைகளை நடத்துதல் அறவே கூடாது.
- மனித விடய பாதுகாப்பு (Human Subjects Protection): மனிதர்களை உட்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது,அவர்களது தீங்குகளையும் அபாயங்களையும் குறைத்து நன்மைகளை அதிகரிக்கவும், அவர்களது கெளரவம், தனியுரிமை மற்றும் சுயாட்சியை மதிக்க கூடிய வகையில் ஆய்வு செயலொழுங்குகள் அமைதல் வேண்டும்.
பொதுவாக
ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் போது மேற்கண்ட ஆய்வு ஒழுக்க விடயங்களை ஆய்வாளர் மேற்கொள்வதை
உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு நிறுவனங்களில், பல்கலைக்கழகங்களில் ஆய்வு ஒழுக்க
சபைகள் நிறுவப்பட்டு இருக்கும். ஆய்வினை மேற்கொள்ள முன்னர், இவ்வாய்வு ஒழுக்க
சபைகளில் அனுமதி பெறுவது முக்கியமாக உள்ளது.
ஆய்வு
தவறான நடத்தைகள்/முறைகேடுகள்
ஆய்வுகளை
மேற்கொள்ளும் போது பின்வரும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன:
•
புனைதல்
(Fabrication) : ஆய்வு செயன்முறையில் ஆய்வு குறிக்கோள்களை அடையும் பொருட்டு அதற்கேற்ற தரவு அல்லது ஆய்வு முடிவுகளை உருவாக்குதல்
மற்றும் அவற்றைப் பதிவுசெய்தல் அல்லது அறிக்கையிடல் புனைதல் எனப்படும். இவை
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
•
பொய்மைப்படுத்தல்
(Falsification) ஆய்வினை மேற்கொள்ளும் தருவாயில் ஆய்வு கருவிகளை தவறான முறையில் பயன்படுத்துவது, அல்லது தரவு
அல்லது முடிவுகளை மாற்றி அமைப்பது அல்லது
தவிர்ப்பது போன்றன பொய்மைப்படுத்தல் எனப்படும் இதுவும், கண்டிப்பாக தவிர்க்கப்படல்
வேண்டும்.
•
நகலாக்கம்/கருத்து
திருட்டு (Plagiarism) - மற்றொரு புலமையாளரின் யோசனைகள்,
ஆய்வு செயல்முறைகள், ஆய்வு முடிவுகள் அல்லது கட்டுரை
வாசகங்கள் பொருத்தமான முறையில் மேற்கோள்
காட்டாமல் தனது சொந்த ஆய்வு விடயம் போல் கையகப்படுத்துதல். இதுவும் ஆய்வுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
முடிவுரை
ஆய்வுகளில்
ஈடுபடும் நாம், ஆய்வுகளினை நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான
வழிகாட்டுதல்களை ஆய்வு ஒழுக்கம் எமக்கு கற்று தருகிறது. எனவே, ஆய்வு செயன்முறையில் உள்ள திட்டமிடல், தரவுகளை
சேகரித்தல், பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் செய்தல், அவற்றி அறிக்கையிடல் ஆகிய பல்வேறு கட்டங்களில் பின்பற்றவேண்டிய
நடைமுறைகளை சரிவர ஒழுகி ஆய்வினை மேற்கொள்ளுதல் முக்கியமாகும்.
உசாத்துணை
இக்கட்டுரையில்
உள்ள அநேக விடயங்கள் பின்வரும் இணையதள கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்டதாகும்
Research
methods: https://libguides.library.cityu.edu.hk/researchmethods