விழுமியக் கல்வி


விழுமியக் கல்வி 
Value Education 

எப்.எம்.நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

1. அறிமுகம்.

உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அதிகளவில் பேசப்படுகின்றது. இது பல காரணங்களினால் தோன்றியுள்ளது. உலகில் அதிகரித்து வரும் சமூக மற்றும் ஒழுக்க நெறிகள் தொடர்பான நெருக்கடிகள். உலகமயமாக்கல் அதன் காரணமாக சமூகங்கள், கலாசாரங்களில் சிக்கலான இணைப்புக்களும், அவற்றின்  பன்முகத்தன்மையினை விரிவுபடுத்தி இருப்பதும்,  தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் எழுச்சி,  தனிநபர் நல்வாழ்வு, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பன தொடர்பான அதீத அக்கறைகள் போன்றன விழுமியக்கல்வியின் அவசியத்தை குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் உணர்த்தி வருகின்றன.

2. கல்வி

உலகத்தை மாற்றக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.என நெல்சன் மண்டேலாவின் கூற்று ஒன்று காணப்படுகின்றது.  இந்த மேற்கோளில், மண்டேலா இரண்டு வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கல்வி வடிவங்களைக் குறிப்பிடுகிறார்:

  • புலமைசார் கல்வி: இது தனிநபர்களை அறிவு, திறன்கள் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களுடன் தயார்செய்கிறது.
  • விழுமியங்களை விருத்தி செய்யும்  கல்வி:  கல்விசார் பாடங்களுக்கு  அப்பால் ஒழுக்கங்களை அல்லது விழுமியங்கள் , குணநலன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புக்களை மாணவர்களில் விருத்தி செய்தல் என்பன ஆகும்.

ஒழுக்கரீதியான  சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், விழுமியங்களை மேம்படுத்தும்  கல்வியின் அவசியம் ஆழமாகத் தெரிகிறது. விவேகமான மாணவர்களை விருத்தி செய்வதும், வாழ்க்கையின் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில்  அவர்களை தயார்படுத்துவதும் கல்வியின் முக்கிய இலக்காக உள்ளது. இதை அடைய, கல்வி பின்வரும் நோக்கங்களுக்காகப்  பாடுபட வேண்டும்:

  • மாணவர்களிடம் ஒருமைப்பாடு, பச்சாதாபம் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதை போன்ற முக்கிய விழுமியங்களை விதைத்தல்.
  • மாணவர்கள் தங்கள் நாடு மற்றும் உலகளாவிய சமூகத்தின் முன்னேற்றம், சமூகநலனில் பொறுப்புள்ள மற்றும் ஈடுபாடுள்ள குடிமக்களாக தீவிரமாக பங்கேற்க அவர்களுக்கு அதிகாரம் அளித்தல். 
  • கல்வி தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் சிறந்த உலகத்தை உணருவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டி உள்ளது.

3. விழுமியம்

விழுமியம்  எனும் எண்ணக்கரு யாதாயினும் கருத்து அல்லது ஒரு நடவடிக்கை சரியானதா அல்லது பிழையானதா என்பதைக் குறித்து நிற்கின்றது. எத்தகைய கருத்துக்கள், நடவடிக்கைகள், நடத்தைகள் சமூகத்தில் பெறுமதிமிக்கதாகக் கருதப்படுகின்றன. எவை இழிவாக கருதப்படுகின்றன என்பதைப் பொறுத்து விழுமியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

  • விழுமியம்  என்பது சமூகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வைத்திருக்கும் கருத்துக்கள், நம்பிக்கைகள் அல்லது விதிமுறைகள். ஆகியவற்றை குறிக்கும். (Kane 1962).
  • விழுமியம்  என்பது ஒரு நேரத்தில் எவராலும் உண்மையில் விரும்பப்படும், மதிப்புமிக்க, அங்கீகரிக்கப்பட்ட அல்லது ரசிக்கப்படும் விடயங்கள் ஆகும்.  (E.S. Brightman 1978)
  • சரியான நடத்தை, நல்ல அறிவார்ந்த மற்றும் தார்மீக பழக்கவழக்கங்களின் நியமங்களை  விழுமியம்  எனலாம் (N.Torralba 1995).

இவ்வரைவிலக்கணங்களின் படி, எமது வாழ்வின்  இலட்சியங்களை விழுமியங்கள் குறித்து நிற்கின்றன. விழுமியங்கள்  ஒரு தேசத்தின் தத்துவத்தினதும்,  தேசத்தின்  கல்விமுறையினதும்  ஒரு பகுதியாகும். இவை மனிதனின் பூரண விருத்திக்கு வழிகாட்டும்  அடிப்படைத் தத்துவங்கள் எனலாம்.

4. விழுமியக்  கல்வியின் பொருள்

விழுமியக் கல்வி என்பது ஒரு சமூகம் முக்கியமானதாகக் கருதும் விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் செய்யும் நடவடிக்கையைக் குறிக்கின்றது. இது பல வடிவங்களில் நடைபெறலாம் என்றாலும், அடிப்படை நோக்கம் மாணவர்கள் விழுமியங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் மனப்பான்மை, நடத்தை மற்றும் நல்ல குடியுரிமை மற்றும் வாழ்க்கை ஒழுக்கநெறிமுறைகளில் அவை பிரதிபலிக்கவும் வேண்டும் என்பதாகும்.  

விழுமியக்கல்வி என்பது பாடசாலைகளில் மட்டும்தான் நிகழும் என்பதல்ல. மாறாக இது வீடு, பல்கலைக்கழகங்கள், தன்னார்வ இளைஞர் அமைப்புகள், சமய நடவடிக்கைகள்  போன்றவற்றிலும் விழுமியக் கல்வி இடம்பெறலாம். விழுமியக் கல்வி, மாணவரின் ஒட்டுமொத்த நற்பண்புகளை  மேம்படுத்தும் ஒரு செயன்முறையாகும், இது நற்பண்பு விருத்தி (character development) ஆளுமை விருத்தி (personality development) மற்றும் ஆன்மீக விருத்தி(spiritual development) ஆகியவற்றை உள்ளடக்கியது.



5. விழுமியக் கல்வியின்  நோக்கங்கள்

  • மனிதனின் ஒருங்கிணைந்த விருத்தியை மேம்படுத்துதல்: தனிநபர்களின் ஒட்டுமொத்த விருத்தியை மேம்படுத்துதல் இதன் பிரதான நோக்கமாகும். மாணவர்களின் அறிவுசார் திறன்களில் மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்க மற்றும் மனவெழுச்சிகளிலும் விருத்தியை ஏற்படுத்தல். 
  • நிலையான வாழ்க்கை முறையை நோக்கிய மனப்பாங்குகள் மற்றும் முன்னேற்றத்தை உருவாக்குதல்.
  • நமது தேசிய வரலாறு, நமது கலாச்சார பாரம்பரியம், அரசியலமைப்பு உரிமைகள், தேசிய ஒருங்கிணைப்பு, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், விழுமியங்கள்  மற்றும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் வகிபங்கு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • பல்வேறு உயிரினங்கள் (விலங்கு, தாவரம், நுண்ணங்கிகள்) மற்றும் உயிரற்ற கூறுகள் (சூரிய ஒளி, காற்று, ..) மற்றும் சுற்றுச்சூழலுடன் அவற்றின் தொடர்பு பற்றி அறிந்து கொள்ளச்  செய்தல்.
  • மாணவர்கள், வெளி உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய வகையில்  மாணவர்களிடம்  நேரான  மனப்பாங்குகளையும் நியமங்களையும் விருத்தி செய்தல்.

6. விழுமியங்களின் பண்புகள்

  • விழுமியங்கள் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கான தரநிலைகள் அல்லது வழிகாட்டுதல்கள்.
  • விழுமியங்கள் ஒரு தனிநபரின் அனுபவங்கள், ஆசைகள் மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன..
  • விழுமியங்கள் ஒரு நாட்டிற்கான தரநிலைகள் அல்லது வழிகாட்டுதல்கள் மற்றும் அவை அதன் கொள்கைகளுக்கு வழிகாட்டுகின்றன.
  • விழுமியங்கள் நமது வாழ்க்கைப் பயணத்தை வழிநடத்துகின்றன
  • விழுமியங்கள் நிலையானவை அல்ல.
  • விழுமியங்கள் நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் முறைகள் ஆகும்.
  • விழுமியங்கள் பல வழிகளில் ஆழ்மனத்தில் இருந்து  பெறப்படுகின்றன.
  • விழுமியங்கள் அறிகை மற்றும் மனவெழுச்சி ஆட்சிகளை  கொண்டுள்ளன
  • பிரதிபலிப்பு சிந்தனை செயன்முறை மூலம் விழுமியங்கள் கட்டமைக்கப்படலாம் மற்றும் மறுகட்டமைக்கப்படலாம்.
  • விழுமியங்கள் ஒரு மனிதனை இயக்குவிக்கின்றன..
  • விழுமியங்கள் மனிதர்களை செயற்பட உற்சாகம் அளிக்கின்றன.
  • ஒருவர் தனது வாழ்க்கையில் வைத்திருக்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கும் எதுவும் விழுமியம் ஆகும்.  
  • மனித் வாழ்வுக்குப் பயன் உள்ள எதுவும் விழுமியம் ஆகும்.
  •  விழுமியங்கள்  உயிர்வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
  • சமுதாயத்தை ஒழுங்கமைப்பதில் உதவியாக இருக்கும் அனைத்தும் விழுமியம்  எனப்படும்.
  • விழுமியம் மனவெழுச்சிகளினால் பாதிக்கப்படுகின்றன.
  • விழுமியம் பல மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.


7. விழுமியக் கல்வியின் முக்கியத்துவம்.

விழுமியக் கல்வி பின்வரும் காரணங்களினால் முக்கியம் பெறுகின்றன:

  • மாணவர்களின் நன்னடத்தைகளை விருத்தி செய்ய உதவுகின்றது.
  • மாணவர்களின் எதிர்காலத்திற்கான முற்போக்கான வழியை வழங்குகிறது
  • மாணவர்களின் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிய உதவுகிறது.
  • தனிநபர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் உதவியாக இருக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியை இது அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது.
  • வாழ்க்கையைப் பற்றிய புலக்காட்சியை  சிறப்பாக அடையாளம் காணவும், பொறுப்பான பிரசைகளாக  நேர்மறையான வாழ்க்கையை வாழவும்  அவர்களுக்கு உதவுகிறது.
  • இது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான உறவை வளர்க்கவும் உதவுகிறது.
  • இது மாணவர்களின் ஆளுமை மற்றும் நற்பண்புகளை விருத்தி செய்கிறது.
  • மாணவர்களின் மனதில் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கருத்தை ஏற்படுத்துகிறது.
  • கடினமான சூழ்நிலைகளில் சரியான தெளிவான தீர்மானங்களை எடுக்க பயிற்சியினை வழங்குகிறது.

8. விழுமியக் கல்வியின்  அணுகுமுறைகள்

பின்வரும் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன:

  • வெளிப்படையான விழுமியக் கல்வி (Explicit Values Education): வெளிப்படையான விழுமியக் கல்வி என்பது முறைசார் கல்விமூலம், திட்டமிட்ட நிகழ்ச்சித்திட்டங்களின்  ஊடாக கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலமாக வெளிப்படையாக விருத்தி செய்யப்படும் விழுமியங்களைக் குறிக்கின்றன.
  • மறைமுகமான விழுமியக் கல்வி (Implicit Values Education): மறைமுகமான விழுமியக் கல்வியானது பாடசாலை கலாசாரம், மறைக்கலைத்திட்டம், முன்மாதிரிகள், விமர்சன சிந்தனை விருத்தி ஆகியவற்றின்  விளைவுககளாக அமைகின்றன.

9. விழுமியங்களின் வகைகள்

  • அழகியல் விழுமியங்கள்
  • குடியுரிமை விழுமியங்கள்
  • மனவெழுச்சி விழுமியங்கள்
  • மனிதநேய விழுமியங்கள்
  • ஒழுக்க விழுமியங்கள்
  • பெளதீக விழுமியங்கள்
  • அறிவியல் விழுமியங்கள்
  • ஆன்மீக விழுமியங்கள்
  • நேர் விழுமியங்கள்
  • எதிர் விழுமியங்கள்
  • பண்பாட்டு விழுமியங்கள்
  • சடத்துவ விழுமியங்கள்
  • புலமைசார் விழுமியங்கள்
  • தேசிய விழுமியங்கள்
  • சமய விழுமியங்கள்
  • சமூக விழுமியங்கள்
  • உலகாளவிய விழுமியங்கள்

10. Gokak’s என்பவரின்  விழுமியங்கள் மற்றும் துணை விழுமியங்கள் வகைப்பாடு.

மதுவிலக்கு, தீண்டாமைஎதிர்ப்பு, பரிவுணர்வு , ஒருங்கிணைப்பு, இரக்கம், பொது நன்மை, மரியாதை, ஜனநாயக முடிவெடுத்தல்., தனிமனிதனின் கண்ணியம், கடமை, சகிப்புத்தன்மை, நட்பு, சக உணர்வு , முன்னோக்கு, சிறந்த மனிதன், நேர்மை, மனிதநேயம், முன்முயற்சி, நீதி , விலங்குகளிடம் கருணை, தலைமைத்துவம், தேசிய ஒருமைப்பாடு, அகிம்சை, தேசபக்தி , நேரத்தை சரியாகப் பயன்படுத்துதல், தூய்மை, ஒழுங்குமுறை, மற்றவர்களுக்கு மரியாதை, மதச்சார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் மரியாதை , சுய கட்டுப்பாடு, சுய கடமை , தன்னம்பிக்கை, நல்லது கெட்டது என்ற பாகுபாடு உணர்வு, சமூகப் பொறுப்புணர்வு, நேர்மை, சமூக நீதி , மனித குல ஒற்றுமை, அனுதாபம், சகிப்புத்தன்மை, உலகளாவிய அன்பு, தேசிய மற்றும் குடிமைக்கான விழுமியம், மற்றவர்களின் கலாச்சார விழுமியங்களை  மதித்தல் , குடியுரிமை, பிறர் மீது அக்கறை, தூய்மை , பொதுவான காரணம், தைரியம், ஆர்வம், பக்தி, தொழில் மேல்  கண்ணியம் , ஒழுக்கம், சமத்துவம், விசுவாசம் , சுதந்திரம், நன்னடத்தை, நன்றியுணர்வு,  உதவிசெய்தல், சுகாதாரமான வாழ்க்கை, ஒருமைப்பாடு, கருணை, விசுவாசம், தேசிய உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, கீழ்ப்படிதல், அமைதி,  நேரம் தவறாமை, அறிவைத் தேடுதல், சமயோசிதம், முதுமைக்கான முன்னாயத்தம்,  தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், சுய உதவி, சுய மரியாதை , சுய ஆதரவு, எளிமையான வாழ்க்கை, சோசலிசம், சமூக சேவை, விசாரணை உணர்வு, குழுவாக  வேலைசெய்தல் , நம்பகத்தன்மை

11. விழுமியக் கல்வி எமக்கு புதிய விடயமா?

மேற்கத்தைய கல்வி உலகில் விழுமியக் கல்வி தொடர்பாக பரவலாக தொடர்பான எண்ணக்கரு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், கீழைத்தேய நாடுகளில் அவை ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. குறிப்பாக  தமிழ் கல்வி உலகில் இது ஒன்றும் புதியதன்று. பாலர் வகுப்புக்களில் இருந்து நன்நெறிகளை புகட்டும் போதனைகள் கல்விமுறையில் இருந்தே வந்துள்ளன. பாலர் வகுப்புக்களில் இருந்து ஆத்தி சூடி, உலகநீதி பாடல்கள் மூலம், மனித வாழ்வுக்கு தேவையான ஒழுக்க நெறிகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்ட்டு வந்துள்ளன. எனினும் அண்மைக்காலங்களில் பரீட்சை மைய போட்டிமுறை கல்வியினால், வன்முறை சினிமாக்கள், தொலைக்காட்சி  பெருந்தொடர் நாடகங்கள், சமூக வலைத்தள பாவனை ஆகியவற்றால்  இவற்றின் முக்கியத்துவம் மருகி வருகின்றன.

12. பாடசாலைகளில் விழுமியங்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகள்

பாடசாலைகளில் விழுமியங்களை விருத்தி செய்ய பின்வரும் நான்கு வழிமுறைகளை  அகர்வால் தனது நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.

A). செயற்திட்டம் மற்றும் செயற்பாடுகள்:

தேசிய பண்டிகைகள் கொண்டாட்டம், சமூக சேவை நிகழ்ச்சிகள், அனைத்து மதங்களின் ஒற்றுமை, சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலியுறுத்துதல் பாடசாலையில்  சமூக பிரார்த்தனை, சுகாதாரம் மற்றும் தூய்மை திட்டங்கள், சமூக பலனளிக்கும் திட்டங்கள், குடியுரிமை பயிற்சி திட்டங்கள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,  பாடசாலையில் மாணவர் சுய-அரசு, சர்வதேச புரிதல், பொருத்தமான கற்பித்தல் கற்றல் சூழ்நிலைகள்

B).  உரையாடல்கள்: அனைத்து பிராந்தியங்களின் ஒற்றுமை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையின் உணர்வுகளைப் பாராட்டுதல் மற்றும் சமூகங்கள், மொழியியல் குழுக்களிடையே நல்லிணக்கம் மற்றும் மன வெழுச்சி  மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உரையாடல்கள் நடத்தப்படல் வேண்டும்.

C). பாடப்புத்தகங்களில் இருந்து பாரபட்சமான உள்ளடக்கங்களை நீக்குதல் .

D). விழுமிய விருத்தியில்  வளர்ச்சியில் பாடசாலை ஊழியர்களின், குறிப்பாக ஆசிரியர்களின் வகி பங்கை வலியுறுத்துதல்

 


13. பாடசாலையில்  மாணவர்கள் விழுமியங்களை  மீறுகிறார்கள் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள்:

  • அவமரியாதையான நடத்தைகளை வெளிப்படுத்தல். : ஆசிரியர்கள், சகாக்கள் அல்லது பாடசாலை ஊழியர்களிடம் தொடர்ந்து அவமரியாதை, இழிவான மொழி, சைகைகள் அல்லது தொனியைப் பயன்படுத்துதல்
  • உடல் உ ரீதியான துன்புறுத்தல்களை  மேற்கொள்ளல்
  • ஏமாற்றுதல் அல்லது கல்வி நேர்மையின்மை
  • பாடசாலை விதிகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்: பாடசாலை விதிகள், கொள்கைகள் அல்லது நடத்தை விதிகளை புறக்கணித்தல், இடையூறுகள், அதிகாரத்தை மீறுதல் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு இணங்காமல் நடத்தல்
  • பச்சாதாபம் இல்லாமை
  • காழ்ப்புணர்ச்சி அல்லது சொத்து அழித்தல்களில் ஈடுபடல் 
  • மது அருந்துதல், புகைபிடித்தல் அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,
  • பொறுப்புக்கூறல் இல்லாமை
  •    சகாக்களின்  எதிர்மறையான தாக்கங்களுக்கு அடிபணிதல்,·        
  • சகிப்புத்தன்மையற்று காணப்படல்  அல்லது பாகுபாடு காட்டுதல்
  •  கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்பு அல்லது ஈடுபாடு இல்லாமை

14. பாடசாலைகளில் ஊக்குவிக்கப்பட வேண்டிய பல்வேறு விழுமியங்கள்

  • மரியாதை செலுத்துதல்: மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்துதல், அவர்களின் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை மதித்தல் .
  • பொறுப்பு: ஒருவரின் செயல்களுக்கு பொறுப்புக்கூறல், கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் பணிகள் மற்றும் கடமைகளை உரிமையாக்குதல்.
  • நேர்மை: எல்லா தொடர்புகளிலும் சூழ்நிலைகளிலும் உண்மையாகவும், நேர்மையாகவும், நம்பகமானவராகவும் இருத்தல்.
  • ஒருமைப்பாடு: ஒருவரின் விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு இடையே நிலைத்தன்மையை வெளிப்படுத்துதல் மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை கடைபிடித்தல்.
  • பரிவுணர்வு: மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றிய புரிதலையும் இரக்கத்தையும் காட்டுதல்.
  • சகிப்புத்தன்மை: பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது மற்றும் மதித்தல், வெவ்வேறு கண்ணோட்டங்கள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைத் தழுவுதல்.
  • ஒத்துழைப்பு: மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல், குழுப்பணி மற்றும் கூட்டு முயற்சியை மதிப்பிடுதல்.
  • கருணை: மற்றவர்களிடம் கருணை, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை காட்டுதல், நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை வளர்ப்பது.
  • நன்றியுணர்வு: மற்றவர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் பங்களிப்புகளுக்கு பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துதல்.
  • நேர்மை: நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்படுதல், மற்றவர்களை சமமாக நடத்துதல் மற்றும் பாரபட்சமின்றி நடத்துதல்.
  • சுய ஒழுக்கம்: தன்னடக்கத்தை கடைப்பிடித்தல், நேரமின்மை, விடாமுயற்சி மற்றும் சுய கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல்.
  • சுற்றுச்சூழல் உணர்வு: சுற்றுச்சூழலை மதிப்பிடுதல் மற்றும் பராமரித்தல், நிலைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்பான வள முகாமைத்துவம்.
  • தைரியம்: சவால்களை எதிர்கொள்வதில் துணிச்சலை வெளிப்படுத்துதல், எது சரியானது என்பதை நிலைநிறுத்துதல் மற்றும் தேவைப்படும்போது துணிகரமாக செயற்படல்.
  • பொறுமை: கடினமான அல்லது சவாலான சூழ்நிலைகளில் சகிப்புத்தன்மை மற்றும் புரிதலைக் காட்டுதல், சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல்.
  • நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை: திறந்த மனதுடன், மாற்றியமைக்கக்கூடிய மற்றும் மாற்றத்தைத் தழுவத் தயாராக இருத்தல்.
  • நல்ல விளையாட்டுத்திறன்: போட்டி நடவடிக்கைகளில் மரியாதை, நேர்மை மற்றும் கருணை காட்டுதல்.
  • குடியுரிமை: சமூகத்தில் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்பான உறுப்பினராக இருப்பது, சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குதல்.
  • சுய பிரதிபலிப்பு: சுயபரிசோதனை மற்றும் சுய விழிப்புணர்வில் ஈடுபடுதல், தனிப்பட்ட பலம் மற்றும் வளர்ச்சிக்கான பகுதிகளை அங்கீகரித்தல்.
  • விடாமுயற்சி: தடைகள் அல்லது பின்னடைவுகளை எதிர்கொள்வதில் உறுதியையும் உறுதியையும் வெளிப்படுத்துதல்.
  • அன்பும் இரக்கமும்: தனக்கும் மற்றவர்களுக்கும் அன்பு, அக்கறை மற்றும் பச்சாதாபம் போன்ற உணர்வுகளை வளர்ப்பது.

15. விழுமியங்களை விருத்தி செய்வதில் ஆசிரியர் வகிபங்கு.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் விழுமியங்களை விருத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 
  • முன்மாதிரியாக திகழ்தல் : ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களால் அவதானிக்கப்படுகிறார்கள். அவர்களின் நடத்தை, அணுகுமுறை மற்றும் மற்றவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் மாணவர்களை நடத்தும் விதம் ஆகியவை மாணவர்களை  வெகுவாகப் பாதிக்கின்றன.   ஆசிரியர்கள்  கற்பிக்க விரும்பும் விழுமியங்களை  தாம் முதலில் எடுத்து நடப்பாதான் மூலம் மாணவர்களை வழிப்படுத்தலாம். 
  • எடுத்துரைத்தல்: மாணவர்களிடம் விழுமியங்கள் என்றால் எவை, அவற்றின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததல். 
  • வகுப்பறை கலாச்சாரம்: விழுமியங்களை வகுப்பறையில் இருந்தே பழக்கப்படுத்தும் வகையில் வகுப்பறை கலாசாரத்தினை உருவாக்குதல். 
  • திறந்த உரையாடல்: விழுமியப் பண்புகளை விருத்தி செய்யும் நொங்கில் மானவர்க்ளுடன் திறைந்த உரையாடல்களை மேற்கொள்ளல். 
  • வகுப்பறை செயற்பாடுகள்: மாணவர்கள் தாமாக செயல்படுவதை ஊடாக கற்றல் அனுபவங்களை பெற்றுக்கொடுப்பது   சக்தி வாய்ந்தது. குழுவேலைகள், பிரச்சினைத்  தீர்த்தல் மற்றும் பிறருக்கு உதவுவதை ஊக்குவிக்கும்செயபற்பாடுகளின் ஊடாக  விழுமியங்களை மாணவர்களில் விருத்தி செய்ய முடியும். 
  • வெகுமதி அல்லது பாராட்டுதல்: விழுமிய பண்புகளை வெளிக்காட்டும் மாணவர்களை பாராட்டி அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் விழுமியங்களை மாணவர்களில் விருத்தி செய்ய முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...