கல்வியும் அரசியலும்

 

கல்வியும் அரசியலும்



எப்.எம்.நவாஸ்தீன்,
 பேராசிரியர்,
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

1.0 அறிமுகம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளில் அந்நாட்டின் கல்வி முறைமைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஒரு நாட்டின் கல்வி அல்லது கல்வி முறைமை என்பது வெறுமனே பாடசாலைக் கல்வியினை மட்டும் குறிப்பதாக அமையாது. மாறாக கல்வியின் ஒட்டுமொத்த செயன்முறைகளையும் உள்ளடக்குவதாக அமையும். ஒரு நாட்டின் கல்வி முறைமையினை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக அந்நாட்டின்  அரசியல் விளங்குகிறது. கல்வியும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தது. மேலும், ஒரு நாட்டின் கல்வி, மற்றும் அரசியல் ஆகியன ஒவ்வொன்றும் மற்றயதின் விதியினை தீர்மானிக்கும் வகையில் செல்வாக்கு செலுத்துகின்றவகையில் நெருங்கிய இடைத் தொடர்பை கொண்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது (Politics and Education live in a symbiotic relationship with each influencing the fate of the other).  இதனை விளங்கிக்கொள்ளும் வகையில், இக்கட்டுரையில் கல்விக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு எடுத்து நோக்கப்படுகிறது.  

2.0 கல்வி

கல்வி என்பது கற்றலை எளிதாக்கும் ஒரு செயன்முறை ஆகும். கல்விச் செயன்முறையானது மக்களிடையே  அறிவு, திறன்கள், விழுமியங்கள், அறநெறிகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனியாள் விருத்திகளை பெற உதவக் கூடியதாக இருக்கும். கல்வி நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் இது ஒரு நாட்டின்  பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தின் அளவீட்டில் பயன்படுத்தப்படுகிறது,  ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து அவரும்,  அல்லது அபிவிருத்தியடையாத நாடு என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கல்வி விளங்குகிறது. ஒரு நாட்டின் கல்வி என்பது முறைசார், முறைசாரா மற்றும் முறையில் கல்வி முறைமைகளையும், அந்நாட்டின் கல்வித் தத்துவங்கள், கல்வி இலக்குகள், பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கலைத்திட்டம், கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சாதனங்கள், கல்விசார், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் போன்ற சகல அம்சங்களையும் உள்ளடக்கிக் காணப்படும்.

3.0 அரசியல்

அரசியல் எனும் பதம் , இலத்தீன் மொழியில் Politicus, கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற பதங்களில் இருந்து  உருவானது. அரசியல் என்பது மனித வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு விடயமாக  விளங்குகிறது. மனித வரலாற்றில் சமூதாயங்கள் ஒன்றாக கூடி வாழவும், தமது பொருளாதார ஒழுங்குமுறைகளை தீர்மானிப்பதற்காகவும் தோன்றிய தத்துவமே அரசியல் என்று கூற முடியும். இன்ரூ அரசியல் என்பது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான செயன்முறையாக நோக்கப்படுகிறது (the process of exercising power). அரசியல் என்பது குழுக்களில் முடிவுகளை எடுப்பதோடு தொடர்புடைய செயல்பாடுகளின் தொகுப்பாகும், அல்லது வளங்கள் அல்லது அந்தஸ்து போன்ற தனிநபர்களுக்கு இடையிலான அதிகார உறவுகளின் பிற வடிவங்களைக் குறிப்பதாகவும் அமைகிறது. ஒரு நாட்டின் அரசியல் என்று கூறும் போது, நாட்டின் ஆட்சிமுறைமை, ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களின் தீர்மானம் எடுக்கும் முறைகள்,சட்ட அமைப்பு, நீதித்துறை, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள்  போன்றவற்றின்  ஒட்டுமொத்த செயன்முறைகளையும் உள்ளடக்கிய வகையில் அரசியலை அரசியல் முறைமையாக இங்கு எடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் அரசியல் முறைமை அந்நாட்டின் ஆட்சி முறைகளை தீர்மானிக்கின்றது. இதற்கேற்பவே அந்நாட்டின் கல்விமுறைமைகளும் தீர்மானிக்கப்படுகிறது. அரசியல் கல்வி முறைமையில் செல்வாக்கு செலுத்துகிறது. அதேபோல் கல்வி நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் ஒரு நாட்டின் கல்வி தத்துவம், கல்வி இலக்குகள், கல்வி வழங்கப்படும் விதம், கற்பித்தல் முறைகள், ஆளணியினர், வசதிகள், கற்பித்தல் சாதனங்கள், மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றை தீர்மானிக்கின்றது

4.0 ஆட்சி முறைகளும் கல்வியும்

உலக நாடுகளில் காணப்படும் ஆட்சி முறைகளை சற்று உற்று நோக்குவீர்களாயின், உலகின் எங்கிலும் ஒரே மாதிரியான ஆட்சி முறைகளை கொண்டதாக இல்லை என்று இலகுவாக உங்களால் எளிதில் கூறிவிடுவீர்கள்!. நாடுகளில், ஜனநாயகம் (Democracy), கம்யூனிசம் (Communism), சோசலிசம் (Socialism), தன்னலக்குழு (Oligarchy), பிரபுத்துவம் (Aristocracy), முடியாட்சி (Monarchy), இறையாட்சி (Theocracy), காலனித்துவம் (Colonialism), சர்வாதிகாரம் (Totalitarianism), மற்றும் இராணுவ சர்வாதிகாரம் (Military Dictatorship) என ஆட்சிகள் வேறுபட்டு அமைவதை காணலாம். இத்தகைய நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சித்தாந்தங்கள், ஆட்சியாளர்களின் விருப்புகளுக்கு ஏற்பவே அந்நாட்டின் கல்விமுறைமை தீர்மானிக்கப்படும். மேலும், இத்தகைய கல்வி முறைமையினால் மாணவர்களும் குறிப்பட்ட அரசியல் சித்தாந்தங்கள் அல்லது ஆட்சியாளர்களின் விருப்புகளை நிறைவேற்றக் கூடியவர்களாவே பெரும்பாலும் உருவாக்கப்படுவர்.

உதாரணமாக ஒரு கம்யூனிசஅல்லது சோஷலிச அமைப்பில், கல்வி என்பது பெரும்பாலும் சோசலிச விழுமியங்கள்  மற்றும் இலட்சியங்களை மேம்படுத்துவதற்கும் புகுத்துவதற்கும் ஒரு வழிமுறையாகவே கருத்தில் கொள்ளப்படும்.. அரசாங்கம், மத்திய அதிகாரம் என்ற முறையில், கம்யூனிசத்தின் கொள்கைகளுடன் இணைந்த கல்வி முறையை கட்டுப்படுத்துகிறது மற்றும் வடிவமைக்கிறது. பொதுவாக கூட்டுறவு இலக்குகள், சமூக சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள்  கல்வியில் மேலோங்கி காணப்படும்.  கலைத்திட்டம் மற்றும் கல்வி சாதனங்கள்  பெரும்பாலும் கம்யூனிச சித்தாந்தத்தை வலுப்படுத்தவும் ஆளும் கட்சிக்கு விசுவாசத்தை மேம்படுத்தக் கூடிய வகையில்  வடிவமைக்கப்படும்.  மேலும், கம்யுனிச,  சோசலிச அரசின் பொருளாதார நோக்கங்களை முன்னேற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்கான ஒரு கருவியாகக் கல்வியைக் காணலாம்.

மாறாக,  ஒரு ஜனநாயக அமைப்பில், கல்வி பொதுவாக ஒரு சுதந்திரமான மற்றும் தகவலறிந்த சமூகத்தின் தூணாகவே கருத்தில் கொள்ளப்படும். ஜனநாயக அரசாங்கங்கள் தனது குடிமக்களிடம் விமர்சன சிந்தனையை வளர்ப்பதிலும், சுறுசுறுப்பான குடியுரிமை மற்றும் ஈடுபாடுள்ள வாக்காளர்களின் வளர்ச்சியில் பந்க்ளைக்கும் வகையில்   கல்வியினை வழங்க முற்படும்.  ஜனநாயக சமூகங்களில், கல்விக் கொள்கைகள் தனிப்பட்ட உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை மதிக்கும் அதே வேளையில், கல்விக்கான உலகளாவிய அணுகலையும் உறுதி செய்வதாகக் காணப்படும். இத்தகைய நாடுகளின் பாடசாலை கலைத்த்திட்டம் பெரும்பாலும் குடியுரிமைக் கல்வி, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கி காணப்படும். மேலும், ஜனநாயக அரசாங்கங்கள் பாடசாலைக் கல்வி தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கும் போது,  துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், கல்விசார் பங்குதாரர்கள், பல்வேறு சமூக, இனக்  குழுக்கள் ஆகியவற்றின்  பங்களிப்பினையும் பெற்றுக் கொள்ள முற்படும். 

5.0 அரசியல் -கல்வி தொடர்பை விளக்கும் சில உதாரணங்கள்

கல்வி மற்றும்  அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான இடைத்தொடர்பை சில உதாரணங்களில் இருந்து விளங்கிக் கொள்ள முடியும்.

உதாரணம் I: தேசியப் பற்று /நாட்டு பற்று கல்வி மூலம் வழங்கப்படும் சமூகம், எந்தவொரு நிலையிலும் குறித்த நாட்டின் அரசியல் முறைமையினை பாதுகாக்க இராணுவத்தில் இணைய முன்வருதல். வேறு சில சந்தர்ப்பங்களில் அரசை பாதுகாப்பதை தவிர்ப்பதுடன் தேவை ஏற்படும் போது அரசை அல்லது அரசியல் முறைமையினை தூக்கி எறியவும் முற்படல்.

உதாரணம்II: அரசியலில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களின் (சனாதிபதி,பிரதமர், அமைச்சர்...) பிரதேசங்கள் மற்றைய பகுதிகளை விட அதிக, சிறந்த பாடசாலை வளங்கள், வசதிகள், ஆசிரிய நியமனத்தில் மேலோங்கி காணப்படல். பக்கச் சார்பான அபிவிருத்தி காணப்படல் .

உதாரணம் III: பல்சமய நாடொன்றில் – பெரும்பான்மை மத அல்லது ஆட்சி அதிகார பலமுள்ள மதம் –தனது மத சார் நம்பிக்கைகளை கல்விக்குள் கொண்டு வரல்

உதாரணம் IV:  நாட்டின் ஆளும் தரப்பு சார்ந்துள்ள அரசியல் சித்தாந்தம் கல்வியில் பிரதிபலித்தல்

6.0 கல்வியில் அரசியல் செல்வாக்கு (Political Influence on Education)

கல்வி முறைமையில்  அரசியல் பின்வரும் மூன்று வழிகளில் செல்வாக்கு செலுத்துகின்றது:

(A) கல்வியினைப் பெறுதல், கல்விக்கான ஒத்துழைப்பு என்பதிலான செல்வாக்கு. அதாவது யார் கல்வியை பெற முடியும், எந்த வகையான கல்வியைப் பெற முடியும், எவ்வளவு கால அளவு கல்வியைப் பெற முடியும், எத்தகைய தரத்தில் (Quality) கல்வியை வழங்குவது, கல்விக்கான வசதிகளை எவ்வாறு வழங்குவது போன்ற விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

(B) கல்வியின் உள்ளடக்கம் மற்றும் செயன்முறைகளின் மீதான செல்வாக்கு. இதில் "கல்வியின் மூலம் என்ன கற்பிக்கப்படல் வேண்டும் எவ்வாறு கற்பிக்கப்படல் வேண்டும் அவற்றை எவ்வாறு கணிப்பீடு மதிப்பீடுகளுக்கு உற்படுத்தபடல் வேண்டும் என்பது போன்ற விடயங்கள் உள்ளடங்கும்.  

(C) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதில் உள்ள செல்வாக்கு.  இதில், கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக மற்றும் அரசியல் விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, அவை சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட எந்தளவு சுதந்திரம் உடையவர்களாக உள்ளனர் என்பதனை குறிக்கும் எனலாம்.

7.0 அரசியலில் கல்வியின் செல்வாக்கு

மேலே குறிப்பிட்டது போல அரசியல் கல்வியில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது. அதேபோல் ஒரு நாட்டின் கல்வியானது நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியலை வழிப்படுத்துகிறது என்று கூறலாம். பின்வரும் வழிகளில் கல்வி அரசியலை பாதிக்கின்றது:

  1. அரசியல் சமூகமயமாக்கல் அல்லது குடியுரிமை பயிற்சி [Political socialization or citizenship training] 
  2. அரசியல் சட்டம் [Political legitimation} 
  3. மனிதவள உற்பத்தி (Manpower production]
  4. அதிகார வரிசைக்கு பணியாளர்களை வரிசைப்படுத்துதல் [Sorting of personnel for the power hierarchy]
  5. சமூக மதிப்பீடு மற்றும் வியாக்கியானம் செய்தல் [Social assessment and interpretation]
  6. சமூக கட்டுப்பாடு [Social control]
  7. சமூக மாற்றத்தின் தூண்டுதல் Stimulation of social change]
அரசியல் சமூகமயமாக்கல்

அரசியல் சமூகமயமாக்கல் என்பது தனிநபர்கள் அரசியல் அணுகுமுறைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாணவர்கள்  கற்றுக் கொள்ளும்  செயன்முறையைக் குறிக்கிறது. இது அரசியல் அறிவு மற்றும் அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் பற்றிய புரிதலின் பரிமாற்றத்தை உள்ளடக்கியுள்ளது. 

குடியுரிமை பயிற்சி என்பது அரசியல் சமூகமயமாக்கலின் ஒரு பகுதியாகும், இது தனிநபர்களுக்கு அவர்களின் கடமைகள் , உரிமைகள், பொறுப்புகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டில் பங்கேற்பது குறித்த அம்சங்களில்  கல்வி கற்பதில் கவனம் செலுத்துகிறது.

கல்வியின் ஊடாக மாணவர்கள் அரசியல் சமூகமயமாக்கலுக்கும் (Political Socialization), குடியுரிமை பயிற்சிக்கும் (Citizenship training) உட்படுத்தப்படுகின்றனர். கல்வி முறைமையின் ஊடாக வழங்கப்படும் அரசியல் அறிவு, திறன்கள், மாணவர்களின் எதிர்கால அரசியல் பங்குபற்றலை (தனது சுய கருத்துக்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் அரசியல் செயன்முறையில் பங்குபற்றுவது)  வழிப்படுத்துகிறது. அரசியல் சமூகமயமாக்கல் என்பது மக்கள் தங்கள் அரசியல் அணுகுமுறைகள், நம்பிக்கைகள், கருத்துகள் மற்றும் நடத்தைகளைப் பெறுவதற்கான செயல்முறையாகும். அரசியல் சமூகமயமாக்கல் என்பது "அரசியல் நோக்கில்  தம்மை சுற்றியுள்ள உலகில் அதிகாரம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது (மற்றும் இருக்க வேண்டும்) என்பது பற்றி தனிநபர்களின்  கருத்துக்களை வடிவமைக்கும் ஒரு செயன்முறையாகும். அரசியல் சமூகமயமாக்கலை மாணவர்கள் பெரும் வகையில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரையிலான கல்வி முறைமையில் நேரடியான, மறைமுக செயற்பாடுகளை கல்வி முறைமை கொண்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள்  நீண்ட காலமாக அரசியல் சமூகமயமாக்கலின் முகவர்களாகக் கருதப்படுகின்றன, இது நடைமுறையில் உள்ள சமூக நியமங்களுக்கான  ஆதரவைக் கட்டமைக்க உதவுகிறது. குடும்பம், நண்பர்கள், சுற்றியுள்ள சூழல் மற்றும் வெகுஜன ஊடகங்களுடன், அரசியல் விழிப்புணர்வை வளர்ப்பதால், இளைஞர்கள் மீது பாடசாலைகள்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாடசாலை கல்வி மூலம் மாணவர்கள் பின்வரும் உரிமைகள் தொடர்பாக அறிந்து கொள்கின்றனர்:

  • இயற்கை உரிமைகள் (அன்புக்கான உரிமைகள், வாழ்வதற்கான உரிமைகள்)  Natural Rights (Rights to love, Rights to Life)
  • அரசியலமைப்பு உரிமைகள் (வாக்களிக்கும் உரிமைகள், சுதந்திரத்திற்கான உரிமைகள்) Constitutional Rights (Rights to suffrage, Rights to freedom).
  • சட்டபூர்வ உரிமைகள் (சொத்துக்கான உரிமைகள்) Statuary Rights  (Rights to inherit property)

மாணவர்கள் அரசியல் சமூகமயமாக்கல் தொடர்பாக அறிவு, திறன்கள், நம்பிக்கைகளை பெற்று கொள்வதற்கு வழிமுறையாக குடியியல் பாட எண்ணக்கருக்கள் தனிப்பாடமாகவும், வேறு பாடங்களுடன் இணைந்த வகையிலும் கற்பிக்கப்படுகின்றன. அதேபோன்று கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்டும் இணைப்பாட விதான செயற்ப்பாடுகள் ஊடாகவும் மாணவர்கள் குடியியல் பயிற்சிகளை பெற்று கொள்கின்றனர். இத்தகைய அரசியல் சமூகமயமாக்கல் மற்றும் குடியியல் பயிற்சிகள் மாணவர்களை எதிர்காலத்தில் அரசியல் பங்குபற்றலில் செல்வாக்கு செலுத்துகிறது. இது தவிர, கல்வியானது, அரசியல் சட்டங்கள் (political legitimation) தொடர்பாக மாணவர்களை பயிற்றுவிப்பது, மாணவர்களை எதிர்கால ஊழியப்படைக்கு பயிற்றுவித்தல், தனிநபர்களை அதிகார ஒழுங்கமைப்புக்காக தெரிவு செய்தல், சமூக மாற்றத்துக்கான தூண்டலை வழங்கல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாகவும் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது.

அரசியல் சட்டம் [Political legitimation]

அரசியல் அமைப்புகள் மற்றும் செயன்முறைகள் உட்பட, தனிநபர்களின் முன்னோக்குகள், விழுமியங்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய புரிதலை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் சட்டத்தின் மீதான கல்வியின் செல்வாக்கு, அரசியல் நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களின் உணரப்பட்ட சட்டபூர்வமான தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளலை கல்வி எவ்வாறு பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இதனை பாடசாலை கல்வி பின்வரும் வழிகளில் மேற்கொள்ளும்:

(அ). அறிவு மற்றும் விழிப்புணர்வு: அரசியல் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் பற்றிய அறிவை மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. ஜனநாயகம், ஆட்சிமுறை, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற கருத்துகளைப் புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. இந்த அறிவு தனிநபர்கள் அரசியல் அமைப்புகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யவும், அவர்களின் சட்டபூர்வமான தன்மையைப் பற்றிய தகவலறிந்த தீர்ப்புகளை வழங்கவும் உதவுகிறது.

(ஆ). விமர்சன சிந்தனை மற்றும் பகுப்பாய்வு: கல்வி மாணவர்களிடையே விமர்சன சிந்தனைத் திறன்களை வளர்க்கிறது, அரசியல் தகவல் மற்றும் வாதங்களை விமர்சனரீதியாக பகுப்பாய்வு செய்ய மாணவர்களுக்கு  உதவுகிறது. இதன் மூலம், அரசியல் உரிமைகோரல்கள், கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை  கேள்வி கேட்கவும் மதிப்பீடு செய்யவும் கல்வி தனிநபர்களை ஊக்குவிக்கிறது. இந்த விமர்சன சிந்தனை திறன் தனிநபர்கள் அரசியல் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை மதிப்பிட அனுமதிக்கிறது.

(இ) குடிசார் பங்குபற்றல் மற்றும் ஈடுபாடு: கல்வியானது குடிசார்  ஈடுபாடு மற்றும் அரசியல் செயன்முறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும். மாணவர்களுக்கு அவர்களின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் அரசியல் பங்கேற்பின் வழிமுறைகள் பற்றிய அறிவை வழங்குவதன் மூலம், அரசியல் விவாதங்கள், வாக்களிப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட கல்வி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. 

(ஈ) விழுமியங்கள் மற்றும் மனப்பாங்குகள்: கல்வியானது தனிநபர்களின் அரசியல் தொடர்பான விழுமியங்கள், மனப்பாங்குகள் மற்றும் நம்பிக்கைகளை வடிவமைக்க முடியும், இதில் அரசியல் நியாயத்தன்மை பற்றிய அவர்களின் கருத்தும் அடங்கும். உதாரணமாக, ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகளுக்கான மரியாதை மற்றும் சமூக நீதி ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு கல்வி முறை, இந்த விழுமியங்களை நிலைநிறுத்தும் அரசியல் அமைப்புகள் சட்டபூர்வமானவை என்ற கருத்தை மான்வர்களிடையியே விருத்தி செய்யும். மாறாக, எதேச்சதிகாரத்தை வலியுறுத்தும் அல்லது பக்கச்சார்பான கருத்துக்களை ஊக்குவிக்கும் ஒரு கல்விமுறை அரசியல் நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.

(உ). சமூக ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை: அரசியல் அமைப்பு மற்றும் அதன் சட்டபூர்வமான தன்மை பற்றிய பகிரப்பட்ட புரிதலை வளர்ப்பதன் மூலம் சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு கல்வி பங்களிக்க முடியும். தனிநபர்களுக்கு பொதுவான அறிவுத் தளம் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய புரிதல் இருந்தால், அது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, அரசியல் துருவமுனைப்பு மற்றும் சட்டப்பூர்வமான தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மோதல்களுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும்.

எனவே, அரசியல் சட்டத்தின் மீது கல்வியின் செல்வாக்கு சிக்கலானதும் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதுமாகும்.  இது கல்வியின் தரம், கலைத்திட்ட உள்ளடக்கம், கற்பித்தல் முறைகள், கல்விக்கான அணுகலில் உள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அரசியல் சூழல் போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 

மனிதவள உற்பத்தி

மனிதவள உற்பத்தி என்பது ஒரு சமூகத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமையான மற்றும் தகுதியான பணியாளர்களை உருவாக்குவதில் கல்வி முறைகளின் பங்கைக் குறிக்கிறது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனுக்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றை தனிநபர்களுக்கு வழங்குவதை இது வலியுறுத்துகிறது. ஒரு நாட்டின் கல்வி முறைமையே அந்நாட்டின் மனித வளத்தின் தரத்தினை தீமநிகின்றது. கல்விமுறைமை மூலம் பயிற்றுவிக்கப்படும் நபர்களே நாளைய தலைவர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக உருவாகுவர்.

அதிகார வரிசைக்கு பணியாளர்களை வரிசைப்படுத்துதல் 

அரசியல் மற்றும் நிர்வாகப் படிநிலைகளுக்குள் அதிகாரம் மற்றும் தலைமைப் பதவிகளுக்கு தனிநபர்களைத் தேர்ந்தெடுத்து தயார்படுத்தும் செயன்முறையுடன் இது தொடர்புடையது.  கல்வி முறைமைகள் பெரும்பாலும் திறமையான நபர்களை அடையாளம் கண்டு வளர்ப்பதில் பங்கு வகிக்கின்றன. பின்னர் அவர்கள் அரசு, பொது நிர்வாகம் மற்றும் பிற செல்வாக்குமிக்க பாத்திரங்களில் உயர்மட்ட பதவிகளுக்கு தயாராக உள்ளனர்.

சமூக மதிப்பீடு மற்றும் வியாக்கியானம் செய்தல்

அரசியல் நிகழ்வுகள், கொள்கைகள் மற்றும் சமூக மாற்றங்கள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகளின் மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வைக் இது குறிக்கிறது. சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை மதிப்பிடவும், விளக்கவும், தகவலறிந்த விவாதங்களில் ஈடுபடவும், பல்வேறு முன்னோக்குகளை பகுப்பாய்வு செய்யவும் கல்வியானது தனிநபர்களை விமர்சன சிந்தனைத் திறன்களுடன் சித்தப்படுத்துகிறது.

சமூகக் கட்டுப்பாடு

சமூகக் கட்டுப்பாடு என்பது சமூக விதிமுறைகள் மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றை  கடைப்பிடிக்கும் வழிமுறைகள் மற்றும் செயன்முறைகளைக் குறிக்கிறது.  சமூக நெறிமுறைகளை ஊக்குவித்தல், அறநெறிமுறை நடத்தையை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புள்ள குடியுரிமையை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கல்வி முறைமைகள் செல்வாக்கு செலுத்துகின்றன. சமூகத்தை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவையும் அவர்கள் வழங்க முடியும் மற்றும் மாறுபட்ட நடத்தைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும். இதன் மூலம் கல்வி அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறது. 

சமூக மாற்றம்

கல்வி அறிவு, விமர்சன சிந்தனை திறன் மற்றும் தற்போதுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளுக்கு சவால் விடும் திறன் ஆகியவற்றுடன் தனிநபர்களை மேம்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்திற்கான ஊக்கியாக கல்வி செயல்பட முடியும். கல்வியின் மூலம், தனிநபர்கள் விழிப்புணர்வை வளர்க்கலாம், சமூக நீதிக்காக வாதிடலாம் மற்றும் சமூகத்திற்குள் மாற்றும் செயன்முறைகளுக்கு பங்களிக்க முடியும். எனவே சமூக மற்றம் நாட்டின் அரசியலை நேரடியாக பாதிக்கும். 

முடிவுரை

எந்தவொரு நாட்டினதும் கல்வியும் அரசியலும் பிரிக்க முடியாதவை.  கல்வி, அரசியல் ஆகியன ஒவ்வொன்றும் மற்றயதின் விதியினை தீர்மானிக்கும் வகையில் செல்வாக்கு செலுத்துகின்றவகையில் நெருங்கிய இடைத் தொடர்பை கொண்டுள்ளன  இந்நெருங்கிய தொடர்பு நாட்டினதும், சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன. கல்விக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு சிக்கலானதும் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதும் ஆகும்.  ஒருபுறம்,  அரசியல் கல்வியில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றது.  எதைக் கற்பிக்க வேண்டும்,  எப்படிக் கற்பிக்க வேண்டும், யாருக்குக் கற்பிக்க வேண்டும்  என்ற முடிவுகள் அனைத்தும் ஒரு நாட்டின் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளினால் எடுக்கப்படுகின்றன.  இந்த முடிவுகள் தனிநபர்களின் வாழ்க்கையையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் எதிர்காலத்தையும் ஆழமாக பாதிக்கலாம்.
மறுபுறம், கல்வி என்பது ஒரு நாட்டின் அரசியல் நிலைமையில் செல்வாக்கு செலுத்துகிறது. கல்வி மூலம் மாணவர்கள் அரசியல் எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்கின்றனர். கல்வி அரசியல் சமூகமயமாக்கலின் ஒரு கருவியாகும். இதனால் அரசியல் விழிப்புணர்வு கொண்டா மக்கள் கல்வி மூலம் உருவாகலாம்.  இது அந்நாட்டின் அரசுகளின் தரத்தினை வெகுவாக தீர்மானிக்கும்.
பேராசிரியர் கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்,
கல்விப்பீடம்  
 இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

--------------


,

 


விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...