மனதில் நிழலாடும் நினைவுகள்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே சிலர் வருவார் போவார் பூமியிலே. வானத்து நிலவாய் சிலர் இருப்பார் எனும் பாடல் வரிகளில் வருவது போல் எம் பாடசாலை நாட்களில் பல ஆசிரியர்களை நாம் சந்தித்ததுண்டு. அவர்களுள் மிகச் சிலரே வானத்து நிலவு போல் எம் மனதில் நிலைத்திருப்பர். அவ்வாறான எனது ஆசான்கள் சிலரை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவு கூறுவது தகும் என எண்ணுகிறேன்.
|
யாழ்-ஒஸ்மானியா கல்லூரி |
1983 ஜனவரி யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 6 ம் வகுப்பிற்காக அனுமதிக்கப்பட்ட நாள். 1987 இல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரமும் 1990 இல் கல்விப் பொதுத் தராதரஉயர்தர மாணவனாகவும் இங்கு கல்வி கற்ற நாட்களில் மனதில் என்றும் நிழலாடும் ஆசான்கள் சிலரை இங்கு பதிவிடுகிறேன்:
மர்ஹூம் ஜனாப் ஏ. எச். ஹாமீம் (அதிபர்)
|
மர்ஹூம் ஜனாப் ஏ. எச். ஹாமீம் (அதிபர்) |
ஒஸ்மானியா என்றதும் எனக்கு மட்டுமல்ல யாழ் வாழ் மக்கள் அனைவருக்கும் நினைவில் வருவது ஹாமீம் சேர் அவர்களைத்தான். அவரைப் பொறுத்தவரை பாடசாலை தான் அவரது முதல் குடும்பம். பாடசாலையின் கல்வி மற்றும் ஏனைய துறைகளினை வளர்த்தெடுப்பதில் அவரது அர்ப்பணிப்புக்கள் இன்றும் எம்மக்களினால் சிலாகித்து கூறப்படுவதே அவரின் பெருமைக்கு சான்றாகும். பாடசாலையின் மகுட வாசகமான "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்பதை வெறும் வாசகமாக அன்றி ஒவ்வொரு மாணவர்களிலும் கொண்டுவர அவரது அயராத உழைப்பு மெச்சத்தக்கது.
மர்ஹூம் ஆலிம்ஷா
அவரை அப்படித்தான் நாம் அழைப்போம். அவர் உண்மைப் பெயர் எமக்கு நினைவில் இல்லை. இஸ்லாம் பாடம், இஸ்லாமிய நாகரிகம் என்பவற்றுக்கு ஆசிரியராக இருந்தவர். மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களின் வளர்ச்சியில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்.
AL செய்யும் போது இரவு நேரங்களில் கூட பெற்றோல் மேக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் எமக்கு பாடம் சொல்லித்தந்தவர்.
நான் 7ம் வகுப்பில் இருந்த போது ஒஸ்மானியாவில் மௌனகுரு சேர் நமக்கு தமிழ் பாடம் சொல்லித் தந்தவர். தமிழ் பாடத்தில் ஓரளவாவது ஈர்ப்பு வர காரணமானவரும் இவரே.
6ம் வகுப்பில் இருந்தே சமூகக்கல்வியை எமக்கு கற்றுத் தந்தவர். இவர் கற்பித்து முடியும் போது கற்று தந்த விடயங்கள் அனைத்தும் அழகான எழுத்திலும் வரிப்படங்களாகவும் கரும்பலகையில் காட்சி தரும். பின்னாட்களில் புவியியலில் நான் ஆர்வம் செலுத்தியமைக்கு தாக்கம் செலுத்திய ஆசிரியர்களில் இவரும் ஒருவராகும்.
மர்ஹூம் மன்சூர் ஆசிரியர்
தமிழ்ப் பாடத்தினை மிக இரசனையுடன் எமக்கு கற்றுத்தந்தவர். வகுப்பு மாணவர்களை சோர்வடையச் செய்யாமல் நகைச்சுவை உணர்வுடன் ஆனால் கண்ணடிப்புடன் கற்றுத்தந்தவர்.
அல்ஹாஜ். எ.சி. நஜிமுதீன் ஆசிரியர்
|
அல்ஹாஜ். எ.சி. நஜிமுதீன் ஆசிரியர் |
1980 களின் பிற் பகுதியில் எமக்கு கிடைத்த முத்துக்களில் ஒன்று. தமிழை இவர் உச்சசரிக்கும் பாங்கு மிக அலாதியானது. இவர் பேசும் போது கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றிருக்கும். எந்தப் பாடமாயினும் அதனை அனைவரும் எளிதில் விளங்கும் வகையில் விளக்குவதில் இவருக்கு நிகர் இவர்தான். மன்னார் அரச அதிபராக இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்பூல் அவர்களுக்கான மாணவர் சார்பாக இரங்கல் உரையினை
நிகழ்த்த என்னை வழிப்படுத்தியவர். எனது முதலாது கட்டுரையினை எழுத்துவற்கு வழிப்படுத்தி அதனைஅல் ஹிக்மா எனும் வெள்ளி விழா மலரில் இடம் பெறச் செய்தவர்.
மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்
|
மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்
|
பாடசாலை நாட்களில் தரம் 10 வரை கணிதப் பாடம் என் போன்ற பல மாணவர்களுக்கு கசந்தே இருந்தது. கணிதம் எமக்கு விளங்கவில்லை என்பதை விட எமக்கு விளங்கும் வகையில் யாரும் கற்பிக்க வரவில்லை என்பதை இவர் வந்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. கணித எண்ணக்கருக்களை எமக்கு புரியும் வகையில் சொல்லிதந்து OL யில் வெற்றி பெற உதவிய ஆசான்.
ஸியாரத் ஆசிரியர்
உடற்கல்வி மற்றும் சுகாதாரம் பாடங்களை 80களின் பிற்பகுதியில்
எமக்கு கற்று தந்தவர். யாழ் நூலகத்தில் கற்கண்டு இதழில் நான் வாசித்த புவி வெப்பமடைதல் பற்றிய ஒரு விடயத்தை தவணைப் பரிட்சையில் நான் மேற்கோள் காட்டி எழுதியதை வகுப்பில் சிலாகித்து கூறி உற்சாகம் அளித்தவர் (நீ எம். ஜீ.ஆர் டா என பாராட்டியது காரணமாக என்னை சக மாணவர்கள் சில காலம் எம்.ஜீ.ஆர் என பட்டப்பெயர் சூட்டியது வேறு கதை). உடற்பயிற்சி தொடர்பான ஒரு விளையாட்டுப் போட்டியில் எம்மை வழி நடத்தி யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இட பரிசை பெற்றுக்கொள்ள வைத்தவர்
திரு_தங்கரசா ஆசிரியர்
உயர் தரத்தில் புவியியல் பாட ஆசிரியராக விளங்கியவர். வகுப்பில் வேறு பாடங்கள் நடக்காதபோதும் விடுமுறை நாட்களிலும் எம்மை துரத்தி துரத்தி புவியியல் பாடம் சொல்லித் தந்தவர். எங்கு போனாலும் புவியியல் நோட்ஸ் கொப்பிகளை கொண்டு செல்ல எப்போதும் வற்புறுத்துவார். அதனால் தான் என்னவோ 1990 இல் வடக்கில் இருந்து வெளியேற்றப்படட போது என்னிடம் இருந்த ஒரே ஒரு நோட்ஸ் கொப்பி அவரது பெளதீகப் புவியியல் நோட்ஸ் ஆக இருந்தது. பேராதனை பல்கலைக்கழக காலத்தில் புவியியல் பாடத்தில் சிறப்பு பட்டம் பெற என்னை இட்டுச் சென்ற காரணிகளுல் இவரிடம் கற்றமையும் ஒன்று எனலாம்.
|
யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் 1988-90 களில் கடமையாற்றிய ஆசிரியர் குழாம் |
பல வருடங்கள் ஆகி விட்டன. மாணவனாக இருந்தபோது நீங்கள் எனக்கு கற்றுத் தந்தவைகள், பயிற்சிகள், உங்கள் ஆளுமைகள் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க உதவியுள்ளன. இன்னும் உங்கள் மாணவன் எனக் கூறுவதில் பெருமை கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஈருலகிலும் அருள் புரிய என்றென்றும் பிரார்த்தனை செய்கிறேன்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
|
பாடசாலை மாணவர் தலைவர்கள் 1989/90 |
ஆக்கம்: கலாநிதி; எப்,எம்.நவாஸ்தீன்