வெங்காயவுரு ஆய்வு மாதிரியுரு

 

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுரு

(Research Onion Model)

கலாநிதி.எப்.எம்.நவாஸ்தீன் 
பேராசிரியர்
கல்விப்பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

ஆய்வுச் செயன்முறையிலுள்ள பல்வேறு படிநிலைகளை விபரிக்கும் ஒரு மாதிரியுருவே வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுரு ஆகும்.  சமூக விஞ்ஞான ஆய்வுகளில், ஆய்வு முறையியலை விருத்திசெய்வதற்கான பணிச்சட்டகத்தை இது விளக்கி காட்டுகிறது. Saunders, Lewis, மற்றும் Thornhill ஆகிய ஆய்வாளர்கள் 2007 ஆண்டில் வெளியிட்ட  தமது  Research Methods for Business Students எனும் நூலில் இவ் வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுருவினை அறிமுகம் செய்தார்கள். இம்மாதிரியுரு சமூகவிஞ்ஞான ஆய்வுகளில்  பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உள்ளது. மேலும்,  ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு  வடிவமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்திக்கவும், அவற்றின் வடிவமைப்பு தாம் மேற்கொள்ளும் ஆய்வுடன் ஒத்திசைவானதாக இருப்பதை உறுதிசெய்ய இது ஒரு பயனுள்ள கருவியாக விளங்குகிறது.

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுருவின் அடுக்குகள்

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுரு ஆறு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஆய்வு வடிவமைப்பின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு அடுக்குகளும் இது ஒரு விரிவான ஆய்வை உருவாக்க வழிகாட்டுகின்றன. அடுக்குகள் பின்வருமாறு:

  1. ஆய்வுத் தத்துவம் (Research philosophy)
  2. ஆய்வு அணுகுமுறை (Research approach)
  3. ஆய்வு உத்தி (Research strategy)
  4. ஆய்வுத் தெரிவுகள் (Research choices)
  5. கால எல்லை (Time horizon)
  6. ஆய்வு நுட்பங்களும், செயலொழுங்குகளும் (Techniques and procedures)



உரு 1. Saunders இன் வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுரு
மூலம்: Saunders et al. (2019)

1.      ஆய்வுத் தத்துவம் (Research philosophy)

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுருவின் முதல் அடுக்கு ஆய்வுத் தத்துவம் ஆகும். ஆய்வுத் தத்துவம் எனின், அறிவின் விருத்தி பற்றிய நம்பிக்கைகள் மற்றும் அனுமானங்களை (எடுகோள்களை) கொண்ட முறைமையினை குறித்து நிற்கிறது. ஒருவர் ஆய்வொன்றில் ஈடுபடும் போது, குறித்த ஆய்வுக்குரிய பொருத்தமான தத்துவ எண்ணக்கருக்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.

ஆய்வாளர் பின்பற்றும் தத்துவ சிந்தனைகள், ஆய்வின் அனுகுமுறைகள், வடிவமைப்புகளில் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும். தெரிவு செய்யப்படும் தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில் ஆய்வொன்றை மேற்கொள்ளும் போது, குறித்த சிந்தனை தொடர்பான புதிய அறிவுக்கு ஆய்வாளரால் பங்களிக்க முடியுமாகின்றது. நேர்மறை வாதம்/ நேர்வு வாதம் (Positivism) விமர்சன யதார்த்தவாதம் (Critical Realism) நடைமுறைவாதம் (Pragmatism) தத்துவங்கள் இம்மாதிரியுருவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை அடியொட்டி முன்வைக்கப்படுகின்ற கோட்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வாளர் தெளிவான விளக்கங்களை கொண்டிருப்பது முக்கியமாகிறது.

ஆய்வு அணுகுமுறை (Research approach)

ஆய்வு அணுகுமுறை இந்த மாதிரியுருவின் இரண்டாவது அடுக்கில் உள்ளது. பண்பறி அணுகுமுறை, தொகைசார் அணுகுமுறை, கலப்பு அணுகுமுறை ஆகியவற்றில் எந்த அணுகுமுறையினை ஆய்வுப் பிரச்சினையினை தீர்ப்பதற்காக பயன்படுத்தலாம் என்பதை குறித்து காட்டுகின்றது.  

ஆய்வு உத்தி (Research strategy)

இந்த மாதிரியுருவின் மூன்றாவது  அடுக்கில் ஆய்வு உத்தி என்பது காணப்படுகின்றது. இது ஆய்வுப் பிரச்சினையை ஆய்வு செய்யப் பொருத்தமான ஆய்வு வடிவமைப்புக்களை தெரிவு செய்வதைக் குறித்து நிற்கிறது. ஆய்வு வடிவமைப்புகள் பாலா உள்ளன. பரிசோதனை ஆய்வு வடிவமைப்பு, அளவைநிலை ஆய்வு வடிவமைப்பு, இணைபு ஆய்வு வடிவமைப்பு. தனியாள் ஆய்வு வடிவமைப்பு, இனவரைவரைவியல் ஆய்வு வடிவமைப்பு என்பன அவற்றுள் சிலவாகும்.

ஆய்வுத் தெரிவுகள் (Research choices)

இம்மாதிரியுருவின் நான்காவது  அடுக்கில் ஆய்வுத் தெரிவுகள் உள்ளன. ஆய்வாளர் தெரிவு செய்து கொண்ட ஆய்வு வடிவமைப்புக்குப் பொருத்தமான வகையில் இந்த அடுக்கு, மாதிரியெடுப்பு முறை, தரவு சேகரிப்பு கருவிகள் மற்றும் தரவு பகுப்பாய்வு நடைமுறைகள் ஆகியன பற்றிய தீர்மானம் மேற்கொள்வதை இது எடுத்துக் காட்டுகின்றது.  

கால எல்லை (Time horizon)

இம்மாதிரியுருவின் ஐந்தாவது  அடுக்கில் ஆய்வுக்கான கால எல்லை உள்ளது. இது ஆய்வாளர் தரவுகளை சேகரிக்க பயன்படுத்தும் காலஅளவை குறித்து நிற்கிறது. குறித்த ஆய்வானது குறுக்குவெட்டு ஆய்வு (cross-sectional - ஒரு விடயம் தொடர்பாக ஒரு தடவை மட்டும் தரவு சேகரிப்பு மேற்கொள்ளல்) , நெடுங்கோட்டு (longitudinal - ஒரு விடயம் தொடர்பாக கால இடைவெளிகளில் பல தடவைகள் தரவு சேகரிப்பு மேற்கொள்ளல், அல்லது காலத்தால் பிந்திய விடயம் தொடர்பாக பின்நோக்கிய (retrospective) வாகையில் தரவுகளை சேகரிப்பதை இது குறித்து நிற்கிறது.

ஆய்வு நுட்பங்களும், செயலொழுங்குகளும் (Techniques and procedures)

இம்மாதிரியுருவின் கடைசி அடுக்கானது, ஆய்வு நுட்பங்களும், செயலொழுங்குகள் தொடர்பாக விளக்குகின்றது. ஆய்வுக்கான பங்கேற்பாளர்களை குறித்தும், எவ்வாறு தரவு சேகரிப்பு மற்றும் தரவை பகுப்பாய்வு செய்வது பற்றி குறிப்பிட்டுக் காட்டுகின்றது.

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுரு ஆய்வாளர்களுக்கு ஏன் முக்கியமாகின்றது

வெங்காயவுரு ஆய்வு  மாதிரியுருவானது ஆய்வு முறையியல் குறித்து ஆய்வாளர்களுக்கு முறையான மற்றும் விரிவான அணுகுமுறையை வழங்குகிறது. ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுத் தத்துவம், அணுகுமுறை, உத்தி, தேர்வுகள், கால அளவு மற்றும் நுட்பங்கள் மற்றும் செயலொழுங்குகள்  உட்பட, அவர்களின் ஆய்வு  வடிவமைப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி கவனமாக சிந்திக்க உதவுகிறது. இதனால் ஆய்வாளர்கள் இந்த  வெங்காயவுரு ஆய்வு மாதிரியுரு தொடர்பான விளக்கங்களை கொண்டிருப்பது முக்கியமாகும். 

Reference

Saunders, M.N.K., Lewis, P. and Thornhill, A. (2019) Research Methods for Business Students. 8th Edition, Pearson, New York.

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...