கல்வியியல் ஆய்வுச் செயன்முறை


கல்வியியல் ஆய்வுச் செயன்முறை

(Educational Research Process)   

கலாநிதி ப.மு. நவாஸ்தீன் 
பேராசிரியர் 
கல்விப்பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


அறிமுகம்

இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. 'ஆய்' எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு புலமைசார்ந்த விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். 

இதேபோன்று Cresswel (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். இவர்கள் கூறுவது போன்று, ஓர் ஆய்வானது, அது சிறியதாகவோ பெரியதாகவோ இருப்பினும் பல்வேறு ஒழுங்கு முறையான கட்டங்களையும் படிநிலைகளையும் கொண்டதாக விளங்குகிறது. 

ஆய்வுகளில் ஈடுபடும் நபர்கள், இந்தப் பல்வேறான கட்டங்களையும் படிநிலைகளையும் சரிவரப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இந்தவகையில், கல்விப்புலத்தில் உள்ளவர்களினைக் கருத்தில் கொண்டு, கல்வியியலில் ஆய்வுச் செயன்முயன்முறை  இக்கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது. முதலில், கல்விசார் ஆய்வு பற்றிய அறிமுகத்தையும் அதனைத் தொடர்ந்து ஆய்வுச் செயன்முறைகளின் பல்வேறு படிநிலைகளையும் நோக்குவோம். 

கல்விசார் ஆய்வுகள் (Educational Researches)

ஒரு தலைப்பு அல்லது எழுவினா தொடர்பாக எமது விளக்கங்களை அதிகரித்துக் கொள்வதற்காக தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் ஒரு செயன்முறையாக  ஆய்வினை என Cresswel (2011) வரைவிலக்கணம் செய்கிறார் இந்தவகையில், கல்விப்புலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் (Problems),  எழுவினக்கள் (Issues) தொடர்பாக கவனம் செலுத்தி அவை தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெரும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சகலவிதமான ஆய்வுகளும் கல்விசார் ஆய்வுகள் எனப்படும். 

கல்வியியலில் பல்வேறு கிளைத்துறைகள் காணப்படுகின்றன. இவற்றுள், கல்வி உளவியல்,  கல்வி சமூகவியல், கல்வி முகாமைத்துவம், ஆசிரியர்கல்வி, கல்விசார்  வழிகாட்டலும் ஆலோசனை கூறலும், தொலைக்கல்வி கல்வியின் அடிப்படைகள் , முன் பிள்ளைப் பருவக் கல்வி, ஆரம்பக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, கல்விசார் கணிப்பெட்டும் மதிப்பீடும், கலைத்திட்டமும் போதனையும், ஒப்பீட்டுக் கல்வி, கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்,  கல்வித் தொழினுட்பம், கல்வியில் பால்நிலை , கல்வி சார் நிருவாகம், விசேட தேவைகள் கல்வி, தொழில்சார் கல்வி என்பன அவற்றுள் சிலவாகும்.  

இங்கு குறிப்பிட்ட கல்வியியல் கிளைத்துறையில் இருந்து காலத்தால் முனைப்பு பெறும் பிரச்சினைகள், எழுவினாக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்ப்படும் ஆய்வுகளை கல்வியியல் ஆய்வுகள் எனலாம். இவ்வாய்வுகள், மாணவர் கற்றல், மாணவர் நடத்தைகள், வகுப்பறை இயக்கச் செயற்பாடுகள், ஆசிரியர் கற்பித்தல் செயற்பாடுகள், ஆசிரியர் திறன்கள் மற்றும் தேர்ச்சிகள், ஆசிரியர் பயிற்சி, கலைத்திட்டத் திட்டமிடல், கலைத்திட்ட விருத்தி, கலைத்திட்ட அமுலாக்கம், பாடசாலை முகாமைத்துவம்,  அதிபர் தலைமைத்துவம்,  என கல்வியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய இன்னோரன்ன கல்வியுடன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படுவனவாக காணப்படலாம். மேலும், கல்விசார் அறிவு, கற்றல்-கற்பித்தல் செயன்முறைகளின் முன்னேற்றம், அதற்குத் தேவையான கருவிகள், கற்றல்-கற்பித்தல் முறைகளைத் விருத்தி செய்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் விசாரணைத் துறையே கல்விசார் ஆய்வு எனவும்  கல்வியியல் ஆய்வுகளுக்கு விளக்கம் தரப்படுகின்றது. 

கல்வியியல் ஆய்வு நோக்கங்கள் 

கல்விசார் ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக கல்விப்புலத்தில் காணப்படுகிற நடைமுறைகளை மேம்படுத்தல், தற்போதைய அறிவில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புதல், தற்போதைய அறிவினை விரிவாக்குதல், கல்விசார் விடயங்களில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவினை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தல்,  ஏற்கனவே பிறரால் விருத்தி செய்யப்பட்ட அறிவுக்கு மேலும் தனிநபர்களின் பங்களிப்புக்களைச் சேர்த்தல், கொள்கை வகுப்பாளர்களுக்கு கல்விசார் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இனங்கண்டு புதியகண்டுபிடிப்புக்களை அறிவித்தல் போன்றன இதன் சில நோக்கங்களாகும்.

கல்விசார் ஆய்வுச் செயன்முறை 

கல்விசார் ஆய்வுச் செயன்முறைக்கு  Cresswel (2002) பின்வருமாறு விளக்கம் தருகிறார். 'ஓர் ஆய்வுப் பிரச்சினையை அல்லது எழுவினாவை இனங்காண்பதில் இருந்து தொடங்கும் ஒரு சுழற்சி (வட்ட) படிநிலைகளைக் கொண்ட செயன்முறையே கல்விசார் ஆய்வுச் செயன்முறை ஆகும். இச்செயன்முறையில் பின்வரும் ஆறு படிநிலைகளை Cresswel (2011) ஆறு வகையான ஆய்வுப் படிமுறைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றார். அவையாவன:

  1. ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a research problem)
  2. சார்பிலக்கிய மீளாய்வு செய்தல் (Reviewing the literature)
  3. ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research)
  4. தரவுகளை சேகரித்தல் (Collecting data)
  5. தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Data analyzing and interpreting)
  6. ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)

இங்கு குறிப்பட்ட ஆறு படிநிலைகளின் வட்டச் செயன்முறையை உரு 1 இல் காணலாம்.

உரு 1: ஆய்வுச் செயன்முறை 

மூலம்: Cresswel (2011) இன் உருவினைத் தழுவியது


உரு 1 இல்  காட்டப்பட்ட ஆறு படிகளும்,  ஆய்வினை ஓர் ஒழுங்குமுறையில் நகர்த்திச் செல்வதற்கான தெளிவான விளக்கமொன்றைத் தருகிறது. 

ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் 

கல்வியில் ஓர் ஆய்வுப் பிரச்சினையை  கண்டறிவது ஆய்வுச் செயன்முறையில்  மிக முக்கியமான படியாகும். நன்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுப் பிரச்சினை உங்கள் ஆய்வுக்கான திசையை தீர்மானிக்கிறது. மேலும்,  உங்கள் ஆய்வு முயற்சிகளை ஆர்வமுள்ள ஒரு பகுதியில் கவனம் செலுத்த உதவுகிறது. கல்வியில் ஒரு ஆய்வுப் பிரச்சினையை கண்டறிய உதவும் படிகள் வருமாறு:

  • நீங்கள் ஆய்வினை மேற்கொள்ள விரும்பும் கல்வியியலின் கிளைத்துறை தொடர்பாக போதுமான விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். மேலே பல்வேறு கல்வியியல் துறைகள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. இவற்றுள், உங்கள் அனுபவம், விருப்புகள், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பரிச்சியமான கல்வித்துறைபற்றி மேலும் விளக்கங்களை பெற்றுக் கொள்ளுங்கள். குறித்த துறையில் தற்போதைய காலகட்டத்தில் முனைப்பு பெறும் அம்சங்கள், எழுவினாக்கள் போன்றன தொடர்பாக தேடித் பாருங்கள். இதற்காக குறித்த துறையில் வெளிவந்துள்ள அண்மைக்கால ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றை வாசிக்க வேண்டி ஏற்படும். 
  • தற்போதுள்ள இலக்கியத்தை மீளாய்வு செய்தல்: நீங்கள் ஆய்வுக்காக தெரிவு செய்த கல்வித்துறையில் தற்போது எவ்வாறான ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஆய்வு செய்யப்படாமல் விடுபட்ட விடயங்கள் காணப்படுகின்றனவா?  (தற்போதைய ஆய்வு  இடைவெளி) அல்லது, தற்போதைய ஆய்வுகளில் வரையறுக்கப்பட்ட அல்லது முரண்பட்ட தகவல் உள்ளனவா, பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்கள் காணப்படுகின்றதா?  அல்லது மேலும் ஆய்வுக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகள் காணப்படுகின்றதா? என்பதை கண்டறியும் நோக்கில்  சார்பிலக்கிய மீளாய்வை மேற்கோள்ளல் வேண்டும். 
  • நிபுணர்களுடன் கலந்தாலோசித்தல்: நீங்கள் கற்கும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் உள்ள ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அல்லது கல்வித்துறை நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெறவும். இது சாத்தியமான ஆய்வு பிரச்சனைகளை  கண்டறிய உதவும். 
  • கல்விச் சூழமைவினை  பரிசீலித்து பார்த்தல் : நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் கல்விச் சூழமைவு, ஆய்வுக்காக தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையை மேற்கொள்வதற்குப் பொருத்தமானதா என உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • சமூக எழுவினாக்கள் அல்லது காலத்தால் முக்கியம் பெறும் எழுவினாக்களை இனங்கண்டு அவற்றை முன்னிலப்படுத்தல் : கல்வி பெரும்பாலும் பரந்த சமூக மற்றும் சமூக பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ள தற்போதைய சமூக அக்கறைகள், கொள்கை மாற்றங்கள், நடைமுறைகள், அல்லது கல்வி சார்ந்த சவால்களை கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்ய முயற்சி செய்தல். உதாரணமாக, தற்காலத்தில்  தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அல்லது புதிய கற்பித்தல் முறைகள், எண்ணிம (டிஜிட்டல்) திறன்கள், STEM கல்வி முறை, செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் personalized learning, Augmented learning, flipped classroom, blended learning போன்றன முக்கியம் பெறும் விடயங்கள் எனலாம். 
  • சாத்தியப்பாட்டினை உறுதி செய்து கொள்ளல்: ஆய்வுக்காக தெரிவு செய்துள்ள பிரச்சினையை ஆய்வு செய்வதற்க்கான  சாத்தியப்பாட்டினை உறுதி செய்து  கொள்ளுங்கள். ஆய்வுப் பிரச்சினையை தீர்க்க தேவையான சான்றுகளை, சார்பிலக்கியங்களை பெற்றுக் கொள்ள முடியுமா,  தரவுகளை திரட்ட முடியுமா,  மற்றும் பங்கேற்பாளர்களை அணுக முடியுமா,  உங்களுக்கு கிடைக்கக்கூடிய கால் அளவு ஆய்வினை மேற்கொள்ள போதுமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஆய்வின் முக்கியத்துவத்தைக் கவனியுங்கள்: நீங்கள் மேற்கொள்ளவுள்ள  ஆய்வுப் பிரச்சினையின்  முக்கியத்துவத்தை மதிப்பிடுங்கள். உங்கள் ஆய்வு  ஏற்கனவே இருக்கும் அறிவுக்கு பங்களிக்குமா? கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது நடைமுறை தாக்கங்களை ஏற்படுத்துமா? போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆய்வின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து கொள்க. 
  • ஓர் ஆய்வுப் பிரச்சனை கூற்றினை  எழுதுக: மேற்கூறிய வழிகாட்டல்களின் அடிப்படையில் ஆய்வுப் பிரச்சினையொன்றை  நீங்கள் கண்டறிந்ததும், நீங்கள் ஆராய விரும்பும் பிரச்சினையொன்றை, அதன் தொடர்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை தெளிவாக வரையறுக்கும் வகையில் அதனை ஆய்வுப் பிரச்சினைக் கூற்றாக எழுதிக் கொள்ளக. 
  • முழு அளவிலான ஆய்வில் ஈடுபடுவதற்கு முன், உங்கள் ஆய்வுப் பிரச்சனை மற்றும் ஆய்வு முறையியல்களை களை சோதிக்க ஒரு சிறிய முன்னோடி  ஆய்வினை மேற்கொண்டு  குறித்த பிரச்சினை உண்மையில் காணப்படுகின்றதா, குறித்த ஆய்வினை மேற்கொள்ள மூடியுமா என பரீட்சித்து பார்க்கலாம். 

சார்பிலக்கிய மீளாய்வு செய்தல் (Reviewing the literature)

ஆய்வுச் செயன்முறையின் இரண்டாவது படிநிலை சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடுவதாகும். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே சார்பிலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம். ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உண்ணாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு  ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். 

இவை  சகமதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Peer-reviewed journals), கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் (Academic Journals), ஆய்வு மாநாட்டு வெளியீடுகள் (Conference Proceedings), அறிக்கைகள் (Reports), நூல்கள், கலைக்களஞ்சியம், முதுமாணி மற்றும் கலாநிதி பட்ட ஆய்வறிக்கைகள் எனப் பலவகைகளில் காணப்படும். இவற்றில் இருந்து தனது ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபடும் வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும் ஆராய்ந்து எழுதப்படும் பகுதியையே சார்பிலக்கிய மீளாய்வு என்கிறோம்.

சார்பிலக்கிய மீளாய்வு  என்பது உங்கள் ஆய்வுத்  தலைப்பில் கடந்த கால மற்றும் தற்போதைய தகவல்களை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு  சுருக்கமாக  எழுதப்பட்ட பகுதியாகும் என Creswel (2011) கூறுகிறார்.

ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research)

ஆய்வுச் செயன்முறையின் மூன்றாவது படிநிலையாக ஆய்வுக்கான நோக்கம், குறிக்கோள்களை குறிப்பிடுதல் உள்ளது. இதில் ஆய்வின் பிரதான நோக்கம் முக்கியமானது.  உத்தேச ஆய்வுக்கான குறிப்பான, துல்லியமான பிரதான நோக்கத்தினை குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியமாகின்றது. ஆய்வாளர், தனது உத்தேச ஆய்வில் ஒட்டு மொத்தமாக எதனை செய்ய விரும்புகிறாரோ அதுவே ஆய்வின் பிரதான நோக்கமாக அமையும். இது ஆய்வுக்கான தலைப்புடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். ஆய்வாளர் தான் மேற்கொள்ளப் போகும் ஆய்வின் பிரதான நோக்கத்தினை எடுத்துக் காட்ட முடியாவிட்டால், குறித்த ஆய்வை வாசிப்பவர்கள்  உங்கள் ஆய்வு பற்றிய தெளிவினை பெற மாட்டார்கள். 

ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடைந்து கொள்ளும் பொருட்டு ஆய்வுக் குறிக்கோள்களையும் எழுதிக் காட்டுதல் வேண்டும்.  ஆய்வுக் குறிக்கோள்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்:

  • தர்க்கரீதியான மற்றும் ஒத்திசைவானவானதாக எழுதப்படல் வேண்டும். (Logical and coherent).
  • சாத்தியமான குறிகோள்களாக இருத்தல் வேண்டும் (feasible)
  • யதார்த்தமான குறிகோள்களாக அமைதல்வேண்டும்., (realistic)
  • அளவிடப்படக் கூடியதாக குறிக்கோள்கள் காணப்படல் வேண்டும்  (measurable).
  • ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடையும் வகையில் (தொடர்புபட்டதாக) குறிக்கோள்கள் தெளிவாக எழுதப்பட்டு  இருத்தல் வேண்டும். (phrased to clearly meet the purpose of the study).
  • ஆய்வுக் குறிக்கோள்கள் எழுதும் போது ஆய்வுக்கான சார்ந்த, சாரா மாறிகளை தொடர்புபடுத்தி (தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) எழுதுதல் வேண்டும். ஆய்வுக் குறிக்கோள்களை எழுதும் போது அவை (செயல்) வினைச் சொற்களைக் கொண்டதாக எழுத வேண்டும்.
    • கண்டுபிடிக்க (to find out)
    • இனங்காண (to Identify)
    • தீர்மானிக்க (to determine)
    • ஒப்பிட (to compare)
    • கணிப்பிட (to calculate)
    • சரிபார்க்க (to verify)
    • பரிசீலிக்க (to examine)
  • தெளிவற்ற (செயல்) வினைசொற்கள் அல்லாத பதங்களை கொண்டு குறிக்கோள்களை எழுத வேண்டாம் (உதாரணம்: பாராட்ட - to appreciate, புரிந்து கொள்ள - to understand, நம்ப - to believe).

சிலர் ஆய்வுக் குறிக்கோள்களை மேலும் சிறிய ஆய்வு வினாக்களாக அல்லது / ஆய்வுக் கருதுகோள்களாக எழுதிக் காட்டுவர். ஆய்வுக் குறிக்கோள்களை அடையும் வகையில், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் வினாக்கள், ஆய்வு வினாக்கள் எனப்படும். இவை ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்கள் அடையும் வகையில் பிரதான வினாக்களாகவோ, சிறு சிறு  வினாக்களாகவோ எழுதப்படும். ஆய்வு வினாக்களிலும், ஆய்வுக்கான மாறிகளை ((தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) பொருத்தமான முறையில் தொடர்புபடுத்தி வினாக்களை உருவாக்குதல் வேண்டும்.  அதேபோன்று, சிலர்  ஆய்வுகளை முன்னெடுக்கும்போது ஆய்வுக் கருதுகோள்களை அமைத்துக்காட்டுவார். தொகைசார்ந்த ஆய்வுகளிலேயே கருதுகோள்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும். மாறிகளுக்கு இடையில் எத்தகைய தொடர்புகள்/வேறுபாடுகள் உள்ளன எனபது தொடர்பாக ஆய்வாளரது தற்காலிக எதிர்பார்ப்பு அல்லது தற்காலிக விளக்கமே ஆய்வுக் கருதுகோள் எனப்படும். எனவே இவற்றை தெளிவாக உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். 

தரவுகளை சேகரித்தல் (Collecting data)

ஆய்வுச் செயன்முறையில் தரவு சேகரித்தல் முக்கிய இடம்பெறுகிறது. ஆய்வு குறிக்கோள்களை அல்லது ஆய்வு வினாக்களை அடைந்து கொள்ளும் பொருட்டு, உரிய பங்கேற்பாளர்களிடமிருந்து பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகள் கொண்டு தரவுகளைத் திரட்ட வேண்டும். ஆய்வாளர் பயன்படுத்தும் ஆய்வு அணுகுமுறை, ஆய்வு வடிவமைப்பு ஆகியவற்றை பொருத்து  தரவு சேகரிப்பு கருவிகள் வேறுபடலாம். ஆய்வுக் குறிக்கோள்களுக்கு /ஆய்வு வினாக்களுக்கு விடை தேடுவதற்காக நீங்கள் பயன்படுத்தவுள்ள பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகளை தெளிவாக இனங்கண்டு அவற்றை விருத்தி செய்வது ஆய்வாளரது கடமையாகும். 

தரவுகளை பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Data analyzing and interpreting)

ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்காக பயன்படுத்திய, தரவு சேகரிப்புக்  கருவிகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப் போகிறீர்கள் என்பது தொடர்பாக தெளிவான விளக்கம் ஆய்வாளர் கொண்டிருத்தல் வேண்டும். சிலர் தரவு பகுப்பாய்வு பகுதியில் தெளிவற்ற வாசகங்களை எழுதுகின்றனர். (உதாரணம்: தரவுப் பகுப்பாய்வுக்காக விவரண புள்ளியியல் முறை பயனபடுத்த படும்.பொருத்தமான நுட்பங்களை கொண்டு பகுப்பாய்வு செய்யப்படும் போன்ற). இது பிழையானதாகும்.  ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள மாறிகளை (தனித்த மாறி, இரு மாறிகள், பல் மாறிகள் ) அடையாளம் கண்டு அவற்றின் போக்குகளை,  அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகள், இணைபுகள் , வேறுபாடுகள் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் துல்லியமான பகுப்பாய்வு நுட்பங்களை குறிப்பிடல் வேண்டும். இதன் போது தரவுப் பகுப்பாய்வு தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள  தெளிவினை வெளிக்காட்ட முடியும். அதேபோன்று, பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பின்னர் பெற்றுக் கொள்ளப்படும் கண்டுபிடிப்புக்களை பொருத்தமான அட்டவணைகள், வரைபுகளில் இட்டு அவற்றை வாசகர்கள் தெளிவாக விளங்கும் வகையில் வியாக்கியானம் செய்தல் வேண்டும். 

ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)

ஆய்வுச் செயன்முறையின் இறுதிப்படிநிலை ஆய்வறிக்கை எழுதுவதாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றிய விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும்  எடுத்துகூறத் தயாரிக்கும் ஆவணமே ஆய்வறிக்கை எனப்படும். ஆய்வறிக்கையை எழுதியபின்னர் மேற்கொண்ட ஆய்வினை  மதிப்பிடுவதுச செய்தல் முக்கியமாகும்.  ஆய்வின் தரம்,  ஆய்வின் தகுதியுடைமை (செல்லுபடியாகும் தன்மை) மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை மதிப்பிடல் அவசியமாகின்றது. நீங்கள் ஒரு கற்கைக்காக ஆய்வறிக்கையை எழுதும் போது. அதன் தரம், தகுதியுடமை, முக்கியத்துவம் என்பன பரீட்சகர்களினால் மதிப்பீடு செய்து முடிவுகள் வழங்கப்படும்.  

 ஆய்வு அறிக்கை பின்வரும்  நோக்கங்களுக்காக எழுதப்படும்: 

  • பட்ட நிகழ்ச்சித்திட்டம் அல்லது பட்டமேற்  கற்கையினை நிறைவுசெய்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன்  இறுதியில் ஆய்வினை அறிக்கையாக சமர்ப்பித்தல்.  இது ஆங்கிலத்தில்  Dissertation, Thesis எனப் பலவாறாக பெயரிடப்படும்.  அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றின் பெயர் Dissertation ஆகவோ Thesis ஆகவோ அமையப்பெறும். 
  • மேற்கொண்ட ஆய்வினை,  ஓர் ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்காக அல்லது  ஆய்வுச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிடுவதற்காக ஆய்வறிக்கையை தயார் செய்தல் 
  • சிலபோது, ஆய்வாளர், தனது ஆய்வினை மேற்கொள்வதற்கு,  நிறுவனம்/நபர்களிடம் நிதி உதவி பெற்றிருக்கக்கூடும். எனவே, ஆய்வின் முடிவில் நிதி உதவி செய்தவர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக வேண்டி  ஆய்வறிக்கையை எழுதுதல் வேண்டும். 
  • ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு  மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாட்டின்  கொள்கை வகுப்பாளர்களுக்கு அல்லது  பொறுப்புவாய்ந்த  நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஆய்வறிக்கையை எழுதுதல். 

ஆய்வறிக்கையில் பின்வரும் வகைகள் உள்ளன. 

  • Technical Report - தொழினுட்ப அறிக்கை 
  • Popular Report - பிரபலமான அறிக்கை
  • Oral Report – வாய்மூல அறிக்கை 

ஒரு தொழில்நுட்ப அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது அறிவியல் தலைப்பில் விரிவான தகவல் மற்றும் பகுப்பாய்வு வழங்கும் ஒரு விரிவான ஆவணமாகும். இது பொதுவாக பொறியாளர்கள், விஞ்ஞானிகள் கல்வியியாளர்கள், அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் வல்லுநர்கள் போன்ற சிறப்பு பார்வையாளர்களுக்காக எழுதப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் ஆய்வு கற்கையின் பின்னர் சமர்பிக்கும் ஆய்வறிக்கைகள் தொழினுட்ப அறிக்கைகள் ஆகும். 

ஒரு பிரபலமான அறிக்கை, ஒரு சாதாரண மனிதனின் அறிக்கை அல்லது பொது பார்வையாளர் அறிக்கை என்றும் அறியப்படுகிறது, இது தொழில்நுட்பம் அல்லாத அல்லது பொது பார்வையாளர்களுக்காக எழுதப்படும். சிக்கலான தகவல்களை தெளிவான வகையில், இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாய்வழி அறிக்கை, பெரும்பாலும் வாய்வழி முன்வைப்பு அல்லது வாய்மொழி அறிக்கை என்று அழைக்கப்படுகிறது, பேச்சுத் தொடர்பு மூலம் தகவல் அல்லது கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகிறது. கூட்டங்கள், மாநாடுகள், வகுப்பறைகள் மற்றும் பொதுப் பேச்சு நிகழ்வுகள் உட்பட பல்வேறு இடங்களில் இது நடைபெறலாம்.

முடிவுரை 

மேற்கூறப்பட்ட ஆய்வு  செயன்முறையின் ஆறு படிநிலைகளைப் விளங்கிக்கொள்வது, ஆய்வினை மேற்கொள்ள உள்ள  எவருக்கும் அவசியமான ஒன்றாகும். குறித்த படிநிலைகளை தெளிவாக விளங்கிக் கொண்ட நபர்களே ஆய்வினை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கின்றனர்.   

உசாத்துணைகள் 

American Education Research Association, What is education Research? https://www.aera.net/Education-Research/WhatisEducationResearch%20/tabi%20d/13453/Default

Cresswell J. (2011) Educational Research: Planning, conducting and evaluating quantitative and qualitative research, (4th ed), New York, Pearson.

Cresswell J. (2002) Educational Research: Planning, conducting and evaluating quantitative and qualitative research, New York, Pearson

சித்திரபுத்திரன் எச். மற்றும் சண்முகம் ஆ. (2005), ஆராய்ச்சி முறைமைகள், தஞ்சாவூர், அன்னம்


கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...