விசேட கல்வி-வரலாற்றுநோக்கு



விசேட கல்வி-வரலாற்றுநோக்கு

கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
சிரேஸ்ட விரிவுரையாளர்
கல்விப் பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


அறிமுகம்
சாதாரண பிள்ளைகளில் இருந்து பல்வேறு காரணிகளால் வேறுபட்டுக் காணப்படும்  பிள்ளைகளுக்காக வழங்கப்படும் கல்வியினையே விசேட கல்வி என்கிறோம். இது விசேட தேவைகள் கல்வி. உதவிக் கல்வி (Aided Education) விதிவிலக்கான கல்வி (Exceptional Education) எனும் வேறு பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகிறது. இத்தகைய கல்வி பற்றி இன்று அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. அரசுகள், சமூக நிறுவனங்கள் விசேடகல்வித் தேவை கொண்ட பிள்ளைகள் தொடர்பாக அவர்களுக்கான கல்வி மாற்றும் பயிற்சிகளில் பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. முன்னொரு காலத்தில் இருந்ததைப் போல் அல்லாமல், பெற்றோர்களும், ஆசிரியர்களும்,  பொதுக் கல்வியில் பயிலும் மாணவர்களும்கூட விசேட கல்வி அல்லது விசேட தேவைகள் கல்வி தொடர்பாக அதிகம் அறிந்து வைத்துள்ளனர். இக்கட்டுரை, விசேட கல்வி என்றால, என்ன? இது யாருக்கு வழங்கப்படுகிறது, விசேட கல்வியின் வரலாற்றுப் பின்னணி தொடர்பாக ஆராய்கிறது.
விசேட கல்வி என்றால் என்ன?
மாணவர்களின் தனிப்பட்ட வேறுபாடுகள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு கல்வியை வழங்கும் முறைமையினைக் குறிக்கிறது. அதாவது, சமூக, மனரீதியாக அல்லது உடல் ரீதியாக சராசரியிலிருந்து வேறுபடும் குழந்தைகளின் கல்வி, வழக்கமான பாடசாலைகளின்  நடைமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படும் அளவிற்கு வேறுபடும் குழந்தைளுக்கு வழங்கப்படும் கல்வியை குறிக்கிறது. விசேட கல்வி, மனவெழுச்சிசார் , நடத்தை சார்  அல்லது அறிகைத்திறன் குறைபாடுகள் அல்லது நுண்மதி, கேட்டல், பார்வை, பேச்சு அல்லது கற்றல் குறைபாடுகள் அல்லது மீத்திறன்களைக் கொண்ட திறமையான குழந்தைகள்; மற்றும் எலும்பியல் அல்லது நரம்பியல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு வழங்கப்படுகிறது(Encyclopedia Britannica, 2014). இக்கல்விமுறைமையில் கற்பித்தல் நடைமுறைகள், கற்றல் கற்பித்தல் சாதனங்கள்  கல்வி பெறக் கூடிய வழிவகைகள் போன்றவற்றினை மாணவர் ஒவ்வொருவருவரின் தேவைகளைக் கருத்தில்கொண்டு  தனித்தனியாக திட்டமிடப்பட்ட மற்றும் முறையாக கண்காணிக்கப்படும் ஏற்பாட்டை உள்ளடக்கியதாக விசேட கல்வி காணப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில், விசேட  தேவைகளைக் கொண்ட தனிநபர்கள் சமூகத்திலும் பாடசாலைகளிலும் காணப்படும் போது  அவர்களின் தன்னிறைவு, அவர்களை வெற்றி அடையச் செய்யும் வகையில் இத்தகைய விசேட ஏற்பாடுகள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
விசேட கல்வி தேவைப்படுவோர்
வாசிப்பு, எழுதுதல், மாறும் கணிதம் போன்றவற்றில் உள்ள கற்றல் குறைபாடுகள், தொடர்பாடல் குறைபாடுகள், அவதானகுறைபாடுடைய மீச்செயற் பிறழ்வு  போன்ற மனவெழுச்சி மற்றும் நடத்தைசார் குறைபாடுகள், என்பு உடைவு நோய், உடலியல் குறைபாடுகள், பெருமூளை வாதம், தசைநலிவு.          முண்ணாண் தொடர்பான பிரச்சினைகள்,மூளைக் குறைபாடுகள்  போன்ற உடல்ரீதியான இயலாமைகள், மூளை விருத்தி குறைபாடு,      தன்னாழ்வு நோய் போன்ற விருத்திசார்ந்த இயலாமைகள் போன்றவற்றி கொண்ட பிள்ளைகள் பிற பிள்ளைகளில் இருந்தும் வேறுபட்டு அமைவதால் இவர்களுக்கென பிரத்தியேகமான கல்வி ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமாகின்றது. இதன் காரணமாக இத்தகையோர்களுக்கென வழங்கப்படும் கல்வியை விசேட கல்வி அல்லது விசேட தேவைகள் கல்வி என்று அழைக்கிறோம்.  
விசேட கல்வி வழங்கப்படும் முறைகள்
பாடசாலை மாறும் சமூகங்களில், விசேட கல்வித் தேவைகள் உடைய பிள்ளைகளுக்கு கல்வி மாறும் பயிற்சிகள் பல்வேறு வழிகளில்  வழங்கப்படுகின்றன. இதில் பின்வரும் வகைகள் பிரதானமானவை ஆகும்.
உள்ளடங்கல் கல்வி (Inclusion) : விசேட கல்வித்  தேவைகளைக் கொண்ட பிள்ளைகளை அதிக நேரம் சாதாரண கல்வியை பெரும் மாணவர்களுடன் உள்ளடக்கி கல்வி போதிக்கும் முறைமை இதுவாகும்.
பிரதானநீரோட்டப்படுத்தல் (Mainstreaming) அல்லது ஒன்றிணைத்தல் (Integration)- விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளை அவர்களிடம் காணப்படும் திறன்களின் அடிப்படையில் அவ்வப்போது பொதுக் கல்வி வகுப்பறையில் பிற பிள்ளைகளுடன் இணைத்து கல்வி போதிக்கும் முறை இதுவாகும்.
தனிப்படுத்துகை (Segregation) ; விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளை பொதுக்கல்வி பெறும் மாணவர்களின் வகுப்புகளில் ஒன்றிணைக்காமல் பிரத்தியேகமாக வழங்கப்படும்  விசேட கல்வி முறை இதுவாகும்.  ஒரே பாடசாலையில் பொதுக்கல்வி பெறும் மாணவர்களும் விசேட கல்வித் தேவைகள் கொண்ட மாணவர்களும் காணப்பட்ட போதிலும் உள்ளடங்கள் முறை இங்கு நிகழாது பிரத்தியேகமான அலகுகளில் விசேட கல்வித் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும்
தவிர்த்தல் முறை (Exclusion): விசேட கல்வித் தேவைகள் கொண்ட பிள்ளைகள்  மேற்கண்ட எந்த ஒரு முறைகளிலும் கல்வியை பெறாத நிலையில் விலக்கப்பட்டு இருப்பதை இது குறிக்கிறது. அரசுகள், சமூக சேவை நிறுவனங்கள் விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்காக கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கிய போதிலும், இன்னும் பல பெற்றோர் தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.  

விசேட கல்வி- வராலாற்றுப் பின்னணி
சமூகங்களில் உள்ள விசேட கல்வித் தேவைகள் கொண்ட பிள்ளைகள் பற்றி முன்னரை விடவும் இன்று அதிகம் சிந்திக்கிறோம், அவர்களையும் வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள், நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், விசேட கல்விக்கு அல்லது விசேட கல்வி தேவை உடையவர்கள் தொடர்பாக இன்று நாம் கொண்டுள்ள வளர்ச்சியானது, கடந்த பல்வேறு காலகட்டங்களில் ஊடக வளர்ச்சி பெற்று வந்துள்ளது. அவை பற்றிசற்று நோக்குவோம்.
புராதன காலம்: புயல்கள் அல்லது பருவங்களின் மாற்றம் போன்ற இயற்கை நிகழ்வுகள் கடவுள்களின் தண்டைனயாகவும்  அல்லது உயர்ந்த மனிதர்களின் ஒருவித தலையீடு காரணமாக ஏற்படுவதாக நம்பியதொரு காலமே இதுவாகும். விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகள் தெய்வத்தின் தண்டனையாக அல்லது தெய்வக் குற்றத்தின் காரணமாக அவ்வாறு பிறந்துள்ளார்கள் என இக்காலத்தில்  கருதியத்தில் வியப்பேதுமில்லை. விசேட கல்வித் தேவை உடையவர்கள் தொடர்பாக இருவிதமான நம்பிக்கைகள் இக்காலத்தில் நிலவி இருந்தன. ஒன்று, இத்தகையோர், தீய சக்திகள் என்று கருதப்பட்டது. எனவே இவர்களை கொள்ள வேண்டும் என்பதே சரியென நம்பினார். மற்றது, இத்தகையோர் கடவுளினால் ஆசிர்வசிக்கப்பட்டவர்கள் எனவும் நம்பப்பட்டது. இத்தகைய நம்பிக்கயளர்கள் விசேட தேவை உடையவர்கள் மீது பயபக்தியுடன் காணப்பட்டனர். எனினும், விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகளுக்காக அவர்களை விசேடமாக பராமரிக்க எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கபப்ட்டு இருக்கவில்லை. மிகவும் குறைபாடு உடையவர்கள் கொல்லப்பட்டனர்.
கிரேக்க மற்றும் ரோமன் காலம்: இக்காலப்பகுதியில் கிரேக்க மற்றும் உரோமன் காலப் பகுதியில் வாழ்ந்த மக்கள், கலை, தத்துவம், இலக்கியம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு  அவர்கள் செய்த பங்களிப்புகளின் காரணமாக, அவர்கள் தங்களை மற்ற எல்லா இனங்களையும் விட உயர்ந்தவர்களாகவே கருதினர். உடல் குறைபாடு, வேறுபட்ட தன்மைகள், அல்லது இயலாமை வடிவங்களை, தாழ்வு மனப்பான்மையின் அடையாளமாகக் கருதினர். கி.மு 1552 ஆண்டளவில் மனநல குறைபாடு குறித்த முதல் பதிவு செய்யப்பட்ட குறிப்பைக் குறிக்கிறது, இது தெபஸின் (Thebes) தெரபியூடிக் பாப்பிரஸ் (Therapeutic Papyrus) எனப்படும் தெளிவற்ற ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. எனினும், அறிகை அல்லது நுண்மதி  குறைபாடுள்ளவர்களை கிரேக்கர்கள் முட்டாள்கள் என்றே குறிப்பிட்டிருந்தனர். கி.மு. நான்காம் நூற்றாண்டில்  புதிய, பகுத்தறிவு விளக்கங்கள் இயற்பியல் உலகிற்கு வழங்கப்பட்டன. இதன்காரணமாக, போன்றவைகள் கடவுளின் புனிதமானவர்கள்  என்பதால்  வலிப்பு போன்றன என்பன ஏற்படுகின்றது என்ற கருத்தை  "மருத்துவத்தின் தந்தை" ஹிப்போகிரேட்ஸ் (460-357 பி. சி.) இந்த கருத்தை சவால் செய்தார், வலிப்புத்தாக்கங்கள் தெய்வீக தலையீட்டால் அல்ல, உடல் காரணங்களால் அல்லது நோயினால்  விளைகின்றன என்று கூறியிருந்தார். அரிஸ்டாட்டில் (கி.மு.384-322 )குழந்தைகளின் தசைகளின் சிதைவு மற்றும் மனிதர்களில் குறைபாடுள்ள வளர்ச்சியை பற்றியும் பகுப்பாய்வு செய்திருந்தார். ஆயினும் பண்டைய கிரேக்கத்தில் மற்றவர்களைப் போலவே அரிஸ்டாட்டிலும் நம்பினார் அதாவது  "சிதைந்த குழந்தைகளை வளர்ப்பதைத் தடுக்க" ஒரு சட்டம் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அரிஸ்டாட்டில் தனது அரசியலில், "குழந்தைகளின் வெளிப்பாடு மற்றும் வளர்ப்பைப் பொறுத்தவரை, எந்தவொரு குறைபாடுஉடைய குழந்தையும் வாழக்கூடாது என்று ஒரு சட்டம் இருக்கட்டும்" என்று எழுதினார். உரோமில், குறைபாடுகள் உள்ள குழந்தைகள் கேவலமான பொருட்களாக கருதப்பட்டனர். பார்வையற்றோர், காது கேளாதோர் அல்லது மனநலம் குன்றிய குழந்தைகள் பகிரங்கமாக துன்புறுத்தப்பட்டனர் மற்றும் பெற்றோர்களால் டைபர் ஆற்றில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறைபாடுகளுடன் பிறந்த சில குழந்தைகள் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கு மேலும் சிதைக்கப்பட்டனர். குறைபாடுகள் உள்ள பிற குழந்தைகள் இறப்பதற்காக காடுகளில் விடப்பட்டனர், இராணுவ நகரமான ஸ்பார்டாவில், "குறைபாடுடன் கூடிய  மற்றும் நோய்வாய்ப்பட்ட" குழந்தைகளை கைவிடுவது சட்டப்பூர்வ தேவையாகக் கருதப்பட்டு இருந்தது. மேலும் இத்தகைய பிள்ளைகள் கேலிப் பொருட்களாக கருதப்பட்டு வந்தனர். இதன் காரணமாக புராதன, கிரேக்க மற்றும் உரோம காலப்பகுதிகள்,  விசேட தேவைகள் கொண்டவர்களை பொறுத்தவரை அழிப்பு சகாப்தம் (Era of Extermination) என்று அழைக்கப்படுகிறது.
மத்திய காலம்:  விசேட தேவைகள் கொண்டவர்களை பொறுத்தவரை, இக்காலப்பகுதி Era of Ridicule அதாவது நகைப்புக்குரிய காலமாக கருதப்படுறது. இக்காலப்பகுதிகளிலும், மாற்று திறனாளிகள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்கள்  ஊழியர்கள் அல்லது முட்டாள்களாகக் கருதப்பட்டனர். சில சமயங்களில் கொல்லப்பட்டனர், மேலும் குறைபாடுகள் மற்றும் நடத்தைகளுக்காக கேலி செய்யப்பட்டனர். விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகள் idiot cage எனும் முட்டாள் கூடுகளில் அடைக்கப்பட்டு கேலி செய்யப்பட்டனர். அதேபோன்று இத்தகைய பிள்ளைகள் மற்றும் நபர்களை கப்பலில் ஏற்றி யாருமில்லாத தீவுகளில் கொண்டு விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது முட்டாள்களின் கப்பல் (ship of fools) என்று அழைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி காலம்: விசேட தேவைகள் கொண்டவர்களை பொறுத்தவரை இக்காலப்பகுதி தஞ்சத்தின் சகாப்தம் (Era of Asylum) எனக் கருதப்படுகிறது.  இந்த சகாப்தத்தில், விசேட தேவைகளை உடைய பிள்ளைகள்  தனிமைப்படுத்தப்பட்டனர், மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். எனினும் கத்தோலிக்க திருச்சபை குறைபாடுகள் உள்ளவர்களை நலன்புரி நிலையங்களில் (wards of state) பாரமரிக்க இக்காலப்பகுதியில் ஏற்றுக்கொள்கிறது குறிப்பிடத்தக்கது. நலன்புரி நிலையங்களில் விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகள் தனிமையில்மனிதாபிமான சிகிச்சை எனும் நோக்கில்  கவனிக்கப்படுகிறது. எனினும் இயலாமை உடைய பிள்ளைகள் என்றும் இயலாதவர்களே (Once disabled, always disabled) என்ற நம்பிக்கை தொடர்ந்தும் இக்ககாலப் பகுதில் நிலவியதும் குறிப்பிடத்தக்கது.
கைத்தொழில் புரட்சிக் காலமும் அதன் பின்னரான கால்ப்பகுதிகளும் :  உலக வரலாற்றில் கி.பி.1760 – 1840 காலப்பகுதி கைத்தொழில் புரட்சி காலமாக கருதபடுகிறது. இதனை அறிவு சகாப்தம் (Era of Education) என்றும் அடையாளம் செய்வதுண்டு. இக்காலத்தில் பெருமளவு கல்வி, கல்வியறிவுள்ள சமூகம், நல்ல தொழிலாளர்கள் தேவை உள்ள காலமாக காணப்பட்டது  தொழில்கள் மிகவும் முக்கியம் பெற்ற காலம். இக்காலப்பகுதியில் விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகள் தொடர்பாக நல்ல பல மாற்றங்கள் ஆரம்பமாகின எனலாம். உதாரணமாக, இந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  பல்கலைக்கழக ஆய்வுகள் குறிப்பாக  போர்துகல்லில்  உள்ள ஜேக்கப் ரோட்ரிக்ஸ் பெரேரின் (1715-1780), "செவிப்புலனற்ற பேச முடியாதவர்களுக்கு" தசைகள் மூலம் தொடுதல் மற்றும் அதிர்வு மூலம் கேட்கவும் பேசவும் கற்றுக் கொடுக்கலாம் என சுட்டிக் காட்டியது. கி.பி. 1780 களில், வாலண்டைன் ஹாய் (Valentin Hauy) புடைப்பு அச்சு ஒன்றை உருவாக்கி, பார்வையற்றவர்களுக்கு படிக்க கற்றுக்கொடுக்க முடியும் என்று கூறினார். பார்வையற்ற மற்றும் காது கேளாதவர்களுக்கு கல்வி கற்பதற்கான இந்த வெற்றிகரமான முயற்சிகள் பிற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஊக்குவித்தன. இந்தவகையில்  ஜீன் மார்க் காஸ்பார்ட் இட்டார்ட் (Jean-Marc Itard 1774 -1838) மற்றும் அவரது மாணவரான எடுவர்ட் செகுயின் (Eduard Seguin 1812-1880) ஆகியோரின் பணிகளும் சிறப்பாக நோக்கத்தக்கது. ஜீன் மார்க் இட்டார்ட், ஒரு பிரெஞ்சு மருத்துவர் ஆவார், இட்டார்ட் காது கேளாதவர்களுடன் பணிபுரிந்ததற்காக புகழ்பெற்றவர், மேலும் மனநலம் குன்றிய குழந்தைகளின் கல்வியை முறையான முறையில் முயற்சித்த முதல் நபர்களில் ஒருவர். விக்டர், "அவேரோனின் காட்டுப் பையன்" (The wild boy of aveyron) என்ற ஒரு கொடூரமான குழந்தையுடன் அவர் பணியாற்றியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.  இட்டார்ட், இக்காட்டு சிறுவனுக்காக  ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கினார், இது விசேட கல்வியின் முதல் முயற்சியாக கருதபடுகிறது. அவேரோனுக்கு  மொழியையும் பச்சாதாபத்தையும் கற்பிக்க முயன்றார், அவரது பணி முற்றிலும் வெற்றிகரமாக இல்லை என்றாலும், பேசும் மொழியியல் திறன்களின் வளர்ச்சியில் மொழியின் ஆரம்ப வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிய நமது அறிவை ஒரு வகையான தகவல்தொடர்பு வடிவத்தில் மேம்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருந்தது.  இதன் பின்னர், எடுவர்ட் செகுயின் (Eduard Seguin) எனும் இட்டார்ட் கீழ் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படித்த வைத்திய மாணவரின் பங்களிப்பும் மெச்சத்தக்கது. இவரது பங்களிப்புக்களின் காரணமாக குறைபாடுகள் துறையில் முதல் சிறந்த ஆசிரியராக Seguin கருதப்படுகிறார். இவர் இட்டார்டின் புலனுணர்வு (Sensory) பயிற்சி முறையை மேம்படுத்தினார். எடுவர்ட் செகுயின் (Eduard Seguin) Salpetriere asylum எனும்  புகலிடத்தில் “Idiots" க்காக பாடசாலையில்  இயக்குநராகப் பணியாற்றியபோது, மனநல குறைபாட்டிற்கு சிகிச்சையளிப்பதில் உடலியல் முறையின் (physiological method) சாத்தியமான நன்மைகளை செகுயின் கண்டறிந்தார் இதன்படி, நரம்பு மண்டலத்தின் பலவீனம் காரணமாக உளக் குறைபாடு ஏற்படுகிறது என்றும், தசை நார்  மற்றும் புலனுணர்வு  பயிற்சியின் மூலம் குணப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பினார். மரியா மொண்டோசூரியும் செகுயின் இன்  பங்களிப்பினால் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் ஆகும். 
மீள் மறுமலர்ச்சி காலம் (The Reawakening 1950 -1980). விசேட கல்வி தேவைகள் கொண்டவர்கள் தொடர்பாக  பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும், மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக சேவைகளின் பற்றாக்குறை குறித்து விரக்தியும் கோபமும் கொண்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக விசேட  சேவைகளை ஒழுங்கமைக்கக்கோரி போராட தொடங்கினர். "The Retarded Can Be Helped.“"பின்னடைவுக்கு  உதவ முடியும்.“ பொருத்தது போதும் (enough is enough) என்ற கோசங்கள் எழும்பலாயின. பெற்றோர்களின் போராட்டங்கள் உள்நாட்டில் முதலில் தொடக்கி அது சர்வேதேச ரீதியாக வியாபிக்கவும் செய்தன. 1960 ஆம் ஆண்டில், மனநல ஊனமுற்றோருக்கான ஐரோப்பிய சங்கங்களின் சங்கம் European League of Societies for the Mentally Handicapped உருவாக்கப்பட்டது மற்றும் 1961 ஆம் ஆண்டில் Inter-national League of Societies for the Mentally Handicapped (lLSMP) உருவாக்கப்பட்டது.  அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் பெற்றோர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் விசேட தேவைகள் கொண்ட பிள்ளைகள், நபர்கள் தொடர்பாக விசேட திட்டங்கள், சிறப்பு பாடசாலைகள் அமைக்க உதவின எனலாம். மேலும், இயலாமை உடையவர்களின் (ஊனமுற்றோரின்) உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் 3447 (XXX) டிசம்பர் 9, 1975 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கம்: “அனைவருக்கும் கல்வி  பெறுவதற்கான உரிமை உண்டு. கல்வி ஆரம்ப மற்றும் இடைநிலை  கட்டங்களில் இலவசமாக வழங்கப்படல்  வேண்டும். ஆரம்பக்  கல்வியானது  கட்டாயமாக்கப்படல் வேண்டும் “ என்ற சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் (1948) படி அனைவருக்கும் கல்வி பெறும் வாய்புகள் பற்றி பரவலாக நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அனைவருக்கும் கல்வி குறித்த உலக மாநாடு, தாய்லாந்தில் ஜொம்தியன் எனும் நகரில் 1990 மார்ச் 5 முதல் 9 வரை கூடியது.இதன்பயனாக 2000 ஆண்டளவில் சகருக்கும் கல்வி: அடிப்படை கற்றல் தேவைகளை அடைதல்  எனும் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் 1994 இல் 92 அரசாங்கங்கள் மற்றும் 25 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஸ்பெயினின் சலமன்காவில் நடைபெற்ற விசேட தேவைகள் கல்வி குறித்த உலக மாநாட்டை நடத்தியிருந்தனர் . இது பொதுக்கல்வி முறைமையில் உள்ளடங்கல் கல்வி போதனையை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சித்தது. இதன்படி, சாதாரண பாடசாலைகளிலும் அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் உடல், அறிவுசார், சமூக, மனவெழுச்சி, மொழியியல் அல்லது பிற நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் கல்விக்காக இடமளிக்க வேண்டும் என்பதே இம்மகாநாட்டின் தீர்மானம் ஆகும். இத்தீர்மானம், உறுப்பு நாடுகளில் விசேட கல்வி தொடர்பாக பல புதிய நடைமுறைகளை கொண்டுவர உதவியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, செனகல் நாட்டில்  டாக்கர் எனும் நகரில் இடம்பெற்ற  உலக கல்வி மன்ற மாநாடு  இந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், 2015 ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி (EFA) இலக்குகளை ஏற்றுக்கொண்டது. இதில், அனைத்து சிறுவர் சிறுமிகளும் 2015 க்குள் ஆரம்ப பாடசாலைக் கல்வியை பெறுவதை உறுதிப்படுத்துதல், ஆரம்பக் கல்வியில் பாலின ஏற்றத்தாழ்வுகளை 2005 க்குள் முடிவுக்கு கொண்டுவரல்  மற்றும் அனைத்து மட்டங்களிலும் 2015 க்குள் பாலின ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதை உறுதி செய்தல் என்ற தீர்மானங்கள் முக்கியமனவை ஆகும். இந்த டாக்கர் மாநாட்டின் முடிவுகளை செயற்படுத்துவதற்காக டாக்கர் நடவடிக்கைளுக்கான மாதிரி சட்டகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வறிக்கையிலும், உள்ளடங்கல் கல்வி, விசேட கல்வி பற்றி விசேட கவனம் செல்லுததப்பட்டு இருந்தது. உலக கல்வி மன்ற மாநாடு  மீண்டும் 2015இல்  தென் கொரியாவின் இன்சியோன் நகரில் கூடி மீண்டும் அனைவருக்கும் கல்வி தொடர்பான முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப் பட்டு இருந்தது. நிலையான அபிவிருத்தி இலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கை தொடர்பான  இன்சியோன் பிரகடனம் எனவும் இது இனங்காணப்படுகிறது. இதன் இலக்காக, 2030 ஆம் ஆண்டுக்குள் உள்ளடங்கலான, சமத்துவமான தரமான கல்வியை சகலருக்கும் உறுதி செய்வதும் வாழ்நாள் நீடித்த கற்றலை மேம்படுத்துவதும் ஆகும்.  (Ensure inclusive and equitable quality education and promote lifelong learning). இம்மாநாட்டின் பல தீர்மானங்களில் “கல்வியில் உள்ளடக்கல்  மற்றும் ஒப்புரவு  என்பது ஒரு நிலைமாறும்  கல்வி நிகழ்ச்சி நிரலின் மூலக்கல்லாகும், எனவே கல்வியை பெறுவதில் உள்ள அனைத்து வகையான விலக்குகள் மற்றும் ஓரங்கட்டப்படுதல், கல்வியை பெறுதல், கல்வியில் பங்கேற்பு மற்றும் கற்றல் பேறுகளில் காணப்படும்  சமத்துவமின்மைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.  அனைவராலும் அடையும் வரை  எந்தவொரு கல்வி இலக்கையும் பூர்த்தி செய்யக்கூடாது. , மிகவும் பின்தங்கியவர்கள், குறிப்பாக இயலாமை உள்ளவர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் வகையில் கல்விக் கொள்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்ற உறுப்புரை விசேட கல்வி தொடர்பாக இன்றைய அரசுகளினதும், சமூகங்களினதும் கடமைப்பாட்டை சுட்டிக் காட்டுகின்றது.
முடிவுரை
விசேட கல்வி தொடர்பாக, இன்று நாம் அடைந்துள்ள சாதனைகள், வளர்ச்சி மற்றும் நடைமுறைகள் என்பன பல வரலாற்று காலகட்டங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது மேலே சுருக்கமாக எடுத்துக்காட்டி  உள்ள  விளக்கங்களில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இன்று, விசேட கல்வி விரைவாக வளர்ந்து வரும் தொடர்பாக நவீன தொழினுட்பங்களின் பயன்பாட்டை நாம் ஒன்றிணைத்து வருவதானது, விசேட கல்வித் தேவைகள் மற்றும் இயலாமை உடைய பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கை கொள்ள வைக்கிறது எனலாம்.   
இக்கட்டுரை கடல்: கல்வியியல்-உளவியல்-சமூகவியல் ஏடு இதழ் 24 (2020) இல் வெளிவந்த கட்டுரையாகும் 

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...