ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல்

 


ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவு தயாரித்தல் 

கலாநிதி. எப்.எம். நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்                                                                      


1.0 அறிமுகம்

இக்கட்டுரையானது, ஆய்வு பிரேரணை பற்றி விளக்கும் நோக்கில் எழுதப்படுகிறது.இன்று, பெரும்பாலான உயர் கற்கைகள் ஆய்வு தொடர்பான தேர்ச்சிகளை மாணவர்களிடத்தில் விருத்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இதன் காரணமாக, ஆய்வு தொடர்பாக உயர் கல்வியை தொடரும் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். உயர்கல்வியை குறிப்பாக, முதுமாணி, தத்துவமாணி போன்ற  பட்ட மேற் படிப்புகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது, தாம் மேற்கொள்ளப்ப் போகும் ஆய்வு தொடர்பாக பிரேரணையினை சமர்ப்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதன் போது அவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வு முன்மொழிவுகளே, அவர்களது உயர்கல்விக்கான வாய்ப்புக்களைத் தீர்மானிகின்றன என்றால் அது மிகையில்லை. மட்டுமன்றி, பல்வேறு உண்ணாட்டு, சர்வேதச ஆய்வு நிறுவனங்களும் கால முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகளை/ கருப்பொருட்களை மையமாக கொண்டு ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு ஆய்வாளர்களிடம் இருந்து ஆய்வுப் பிரேரணைகளை கோருவதும், அதனடிப்படையில், சிறந்த ஆய்வுப் பிரேரணைகளை தெரிவு செய்து அவற்றுக்கு நிதி உதவிகளையும் செய்து வருகின்றன. இதன்போதும், ஆய்வுப் பிரேரணைகளின் தரம், இத்தகைய நிதிகளை பெறுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே, சிறந்த ஆய்வுப் பிரேரணையினை எழுதுவது எப்படி என்பது பற்றி ஆய்வு மாணவர்கள் அல்லது ஆய்வில் ஈடுபடுவோர் அறிந்திருப்பது மிக முக்கியமாகும்.

2.0 ஆய்வுப் பிரேரணை  என்றால் என்ன?

Research Proposal என்பதை ஆய்வுப் பிரேரணை அல்லது ஆய்வு முன்மொழிவு என்றுகூறலாம். சிலர் Recommendation (பரிந்துரை) என்பதற்கு  முன்மொழிவு எனும் பதத்தை பயன்படுத்துகின்றனர். இது பிழையானதாகும். 

ஆய்வுப் பிரேரணை  அல்லது ஆய்வு முன்மொழிவு எனின், நாம் மேற்கொள்ள உள்ள ஆய்வு தொடர்பாக தெளிவான விபரங்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்படும் ஓர் ஆவணம் ஆகும். 

இதன்மூலம், ஒருவர் மேற்கொள்ளவுள்ள (உத்தேச) ஆய்வு தொடர்பான முழுமையான ஆய்வுச் செயன்முறைகள் பற்றிய தெளிவான விபரங்களை வழங்குதல் வேண்டும். இதன் மூலம், ஆய்வுப் பிரேரணை  அல்லது ஆய்வு முன்மொழிவினை வாசிக்கும் ஒருவர் (பரீட்சகர் அல்லது வாசகர்) குறித்த ஆய்வு தொடர்பாக நீங்கள் அவற்றை மேற்கொள்ள போகிறீர்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.  அதாவது உத்தேச ஆய்வு தொடர்பாக, ஒருவர் தனது திட்டத்தினை இதன் மூலம் முன் வைக்க முடியும்.  ஆய்வு முன்மொழிவின் தரத்தினை அடிப்படையாகக் கொண்டே உங்கள் உயர் கல்விக்கான வாய்ப்பு தீர்மானிக்கப்படும் என்பதை மறத்தல் ஆகாது. பொதுவாக சிறந்த ஆய்வு முன்மொழிவு பின்வரும் குறிக்கோள்களைக் கொண்டதாக தயாரிக்கப்படல் வேண்டும்:

  • உத்தேச ஆய்வு தொடர்பாக, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய விவரணம் (What you will do?/ What you intend to study): இதில் உங்கள் ஆய்வு தொடர்பான ஆய்வுப் பிரச்சினை, நோக்கம் குறிக்கோள்கள், ஆய்வு வினாக்கள் பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்.
  • உத்தேச ஆய்வினை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விளக்கம் (Why it should be done?): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்.
  • குறித்த உத்தேச ஆய்வினை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள்? (How you will do it): இதில் குறித்த ஆய்வினை மேற்கொள்ள எத்தகைய ஆய்வு முறையியலினை பயன்படுத்த போகிறீர் என்ற விளக்கம் தரப்படல் வேண்டும்.
  •  குறித்த உத்தேச ஆய்வினை மேற்கொள்வதால் நீங்கள் அடைய எதிர்பார்க்கும்  பேறுகள்/விளைவுகள்  யாவை? (What you expect will results). குறித்த ஆய்வினை மேற்கொள்ளவதன் மூலம் ஆய்வாளர் அடைந்து கொள்ள எத்ரிபார்க்கும் ஆய்வு தொடர்பான உத்தேச முடிவுகள்/பேறுகளை பற்றிய விளக்கம் தரப்படல்  வேண்டும்..
  •  குறித்த உத்தேச ஆய்வுக்கான கால அளவு (When you will complete the study). இதில் குறித்த உத்தேச ஆய்வினை மேற்கோள்ள உங்களுக்கு தேவையான கால அளவு காட்டப்படல் வேண்டும். 

ஆய்வு முன்மொழிவினை பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தயாரிக்க வேண்டி இருக்கும்: 

  • முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளுக்கு அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது (தற்காலிக  ஆய்வு முன்மொழிவு ).
  • முதுதத்துவமானி, முது விஞ்ஞானமானி, கலாநிதி போன்ற பட்ட பின் பயில்நெறிகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆய்வாளர் தனது ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்காக குறித்த நிறுவன/பல்கலைக்கழக ஒழுக்கநெறி சபைகளில் அனுமதி கோரும் போது (விரிவான ஆய்வு முன்மொழிவு) 
  • கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய விஞ்ஞான மன்றம் போன்ற நிறுவனங்கள், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வு முன்மொழிவுகளை காலத்துக்கு காலம் வேண்டி விளம்பரம் செய்வர். இத்தகைய நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி ஆய்வு முன்மொழிவுகளை தனியாகவோ, குழுவாகவோ  தயாரிக்க முடியும்.
  • ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நிதி உதவிகளை பெரும் நோக்கில்  நிதி உதவி செய்யும் நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது ஆய்வு முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டி இருக்கும். 


3.0 ஆய்வுப் பிரேரணை / ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய அடிப்படைக் கூறுகள்

ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் உள்ளன. அவை வருமாறு:

  •          ஆய்வுத் தலைப்பு
  •       ஆய்வுச் சுருக்கம்
  •       அறிமுகம்
  •      ஆய்வுப் பிரச்சினை கூற்று அல்லது ஆய்வு பிரச்சினை
  •      ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி
  •   ஆய்வின் பிரதான நோக்கம், ஆய்வுக் குறிக்கோள்கள்,ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள்
  •        ஆய்வு முக்கியத்துவம் 
  •       இலக்கிய மீளாய்வு
  •      ஆய்வு முறையியல்
  •       வரையறைகளும் எல்லைப்டுத்தலும் 
  •      காலச் சட்டகம்
  •       பாதிடு
  •       நூற்விபரப் பட்டியல் 
  •      பின்னிணைப்புக்கள்

ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகளாக மேற்கூறப்பட்டவை காணப்பட்டாலும், இவை சிலவேளைகளில் உயர்கல்வி நிறுவனத்துக்கு (பல்கலைக்கழகம்) நிறுவனம் வேறுபட்டு அமையும் என்பதை கவனத்திற் கொள்க. 

ஆய்வு முன்மொழிவினை தயாரிக்க முன்னர், ஆய்வு முன்மொழிவினை அனுப்பவுள்ள உயர் கல்வி நிறுவனம் ஆய்வு முன்மொழிவில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய கூறுகள் பற்றிய வழிகாட்டல்கள் எதையாவது தந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். 

அத்தகைய வழிகாட்டல்கள் தரப்பட்டு இருக்குமாயின், குறித்த வழிகாட்டலுக்கு அமைய ஆய்வு முன்மொழிவினை எழுதுதல் வேண்டும். குறித்த வழிகாட்டலுக்கு மாற்றமாக அனுப்படும் ஆய்வு முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உதாரணம்: ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள் உரு 1 காட்டப்பட்டுள்ளது.

 உரு 1 : ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள்

மூலம்: Faculty of Graduate Studies (2017 P21)

 

உதாரணம் 2: கொழும்பு பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் நிறுவனத்தின் ஆய்வு

முன்மொழிவுக்கான வழிகாட்டல் உரு 2 காட்டப்படுள்ளது.

உரு 2 : ஆய்வு முன்மொழிவில் உள்ளடங்க வேண்டிய கூறுகள்
 Source: https://fgs.cmb.ac.lk/application-guidelines/

மேலே காட்டபப்பட்ட உதாரணங்கள் மூலம் ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டல்கள், ஆய்வு முன்மொழிவுக்கான வடிவமைப்புகள் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும் என்பதை தெளிவாக எடுத்து காட்டுகின்றன. மேலும் இத்தகைய வழிகாட்டல்கள், வடிவமைப்புகள் காலத்துக்கு காலம் மாற்றி அமைக்கப்படும் என்பதையும்  இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இனி, ஆய்வு முன்மொழிவின் முக்கிய கூறுகளை விரிவாக எடுத்து நோக்குவோம் 

3.1 ஆய்வுத் தலைப்பு - Title

ஆய்வு முன்மொழிவில் உத்தேச ஆய்வுக்கான தலைப்பு தெளிவாக தரப்படல் வேண்டும். தமிழில் உங்கள் ஆய்வினை மேற்கொள்வதாக இருப்பின் ஆய்வுத் தலைப்பினை ஆங்கிலத்திலும் தருவது சிறந்தது. ஆய்வு தலைப்பு பின்வரும் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் (Sreeraj. 2015):

  • சுருக்கமான ஆனால் தெளிவான விபரத்தை அளிப்பதாக அமைதல் வேண்டும்.
  • உத்தேச ஆய்வினை பிரதிபலித்தல் வேண்டும்.
  •  கவரக்கூடியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பு சுயாதீன மற்றும் சார்ந்த மாறிகளை உள்ள்டக்கியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பில் இருந்து ஆய்வுக்குரிய கருச் சொற்களை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • தலைப்பில் ஆய்வுக் குடி/ பிரதேசம் உள்ளடக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.  

3.2 ஆய்வுச் சுருக்கம் – Abstract

ஆய்வு சுருக்கப் பகுதியில், குறித்த ஆய்வு முன்மொழிவின் முக்கிய விடயங்களை மட்டும் சுருக்கமாக எடுத்துரைக்க வேண்டி வரலாம். இதன் போது குறித்த ஆய்வின் ஆய்வு பிரச்சினை, ஆய்வின் பிரதான நோக்கம், ஆய்வுக் குறிக்கோள்கள்,ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள், ஆய்வு முறையியல், ஆய்வின் மூலம் எதிர்பார்க்கப்படும் பேறுகள் போன்றவற்றை 300 சொற்களுக்குள் (இந்த சொற்களுக்கான வரையறை வேறுபடக்கூடியது) எழுதிக் காட்டல் வேண்டும். எனினும், சகல ஆய்வு முன்மொழிவுகளிலும் ஆய்வுச் சுருக்கம் கோரப்படுவதில்லை என்பதையும் இங்கு கவனத்திற் கொள்க.

3.3 ஆய்வு முன்மொழிவுக்கான அறிமுகம்

ஆய்வு முன்மொழிவின் ஆரம்பத்தில், உத்தேச ஆய்வு தொடர்பான பின்னணி விபரங்களை அளித்தல் வேண்டும். ஆய்வு முன்மொழிவின் அல்லது ஆய்வின் ஒரு தொடக்க புள்ளியாக இந்த அறிமுகம் அமையும் எனலாம். "அறிமுகம் என்பது ஆய்வு அறிக்கையின் (ஆய்வு முன்மொழிவின்) ஒரு பகுதியாகும்,  

இது ஆய்வறிக்கையில் (ஆய்வுமுன்மொழிவில்) முன்மொழியப்பட்ட அல்லது  அறிக்கையிடப்பட்ட ஆய்வுக்கான  பின்னணி தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறது. அதன் நோக்கம் ஆய்வுக்கான  ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும், இதனால் அது மற்ற ஆய்வுகளுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்” ( Wilkinson, 1991). 

ஆய்வு முன்மொழிவுக்கான  அறிமுகத்தினை எழுதும் போது , ஆய்வாளர் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்  (Creswell, 1994):

  • ஆய்வு தலைப்பு தொடர்பாக  வாசகர் ஆர்வத்தை உருவாக்குதல்,
  • ஆய்வுக்கு வழிவகுக்கும் ஆய்வுப் பிரச்சனைக்கு பரந்த அடித்தளத்தை அமைத்தல்.
  • அறிவார்ந்த இலக்கியத்தின் அடிப்படையில்  குறித்த ஆய்வை முன்வைத்தல் , மற்றும்
  • ஆய்வு முன்மொழிவு அல்லது ஆய்வு அறிக்கை எத்தகைய பார்வையாளர்களை கருத்தில் கொண்டு எழுதப்ப்டுகின்றதோ, அத்தகைய ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை அணுகும் வகையில் ஆய்வு அறிமுகம் எழுதப்படல் வேண்டும். 

எனவே, ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு, ஆய்வு பிரச்சினைக்கானபின்னணித் தகவல்கள், குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை உரிய உரை மேற்கோள்காட்டல்களுடன் எடுத்துரைக்க வேண்டும். இதனை வாசிக்கும் ஒருவர், நீங்கள் மேற்கொள்ளப் போகும் ஆய்வு தொடர்பான ஓர் தெளிவான  விளக்கத்தினை பெறக் கூடியதாக இது அமையும் எனலாம்.

3.4 ஆய்வு பிரச்சினை அல்லது   ஆய்வுப் பிரச்சினை கூற்று மற்றும் ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி

ஆய்வு முன்மொழிவின்  அடிநாதம் குறித்த ஆய்வுக்கான ஆய்வுப் பிரச்சினையே  ஆகும். ஆய்வு முன்மொழிவில், ஆய்வு பிரச்சினையை, தெளிவாக எடுத்துரைக்க வேண்டி இருக்கும். 

இது ஒரு சவாலான ஒரு விடயமே. ஆய்வு முன்மொழிவில், வாசகர் எளிதாக இனம் கண்டு கொள்ளும் வகையில் ஆய்வுப் பிரச்சினை தனித்து காட்டப்படல்வேண்டும்.  

ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டலில் சில வேளைகளில் ஆய்வுப் பிரச்சினை பற்றி மட்டும் கேட்கப்படுவதுண்டு. இதன்போது, கருத்தில் கொள்ளப்படும் ஆய்வு பிரச்சினை, தற்போதைய அறிவில் ஆய்வு பிரச்சினை தொடர்பாக உள்ள இடைவெளிகள், குறித்த விடயம் ஏன் மேலும் ஆராயப்படல் வேண்டும் என்ற விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகின்றது. 

இதன்போது, குறித்த ஆய்வு பிரச்சினை நீர் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட சூழமைவில் காணப்படுவதற்கான சான்றுகளையும் முன்வைக்க வேண்டி இருக்கும்.

சில ஆய்வு முன்மொழிவுக்கான வழிகாட்டலில் ஆய்வு பிரச்சினைக் கூற்றினை  தருமாறு கோரியிருப்பர். இதன் போது,  நீர் ஆய்வுக்காக தெரிவு செய்ய ஆய்வுப் பிரச்சினையினை, முதலில் ஒரு சில வரிகளில் சுருக்கமாகவும், தெளிவாகவும் வரையறுத்து எடுத்துரைத்தல் வேண்டும். பின்னர், குறித்த ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தறபோதைய அறிவில் (இலக்கியத்தில்)  உள்ள இடைவெளிகள், குறித்த விடயம் ஏன் மேலும் ஆராயப்படல் வேண்டும், ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட சூழமைவில் காணப்படுவதற்கான சான்றுகள் போன்ற விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகின்றது.

சில நேரங்களில், தெளிவற்ற மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு  பிரச்சினையினை, ஆய்வு முன்மொழிவில்   நீண்ட விபரணங்களினை எழுதுவதன் மூலம் ஆய்வாளர் மறைத்து விடுவதுண்டு.  

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆய்வு முன்மொழிவை பரீட்சிக்கும் பரீட்சகர்கள் அல்லது ஆய்வு முன்மொழிவு அங்கீகார குழு உறுப்பினர்கள் ஆய்வு முன்மொழிவின் ஆய்வு பிரச்சினையை விளங்கிக் கொள்ள முடியாமல் போகும். இதன் போது குறித்த ஆய்வு முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும்.

3.5 ஆய்வின் பிரதான நோக்கம்

உத்தேச ஆய்வுக்கான குறிப்பான, துல்லியமான நோக்கத்தினை குறிப்பிட்டுக் காட்டுவது முக்கியமாகின்றது. ஆய்வாளர், தனது உத்தேச ஆய்வில் ஒட்டு மொத்தமாக எதனை செய்ய விரும்புகிறாரோ அதுவே ஆய்வின் பிரதான நோக்கமாக அமையும். இது ஆய்வுக்கான தலைப்புடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். ஆய்வாளர் தான்ன மேற்கொள்ளப் போகும் ஆய்வின் பிரதான நோக்கத்தினை எடுத்துக் காட்ட முடியாவிட்டால்குறித்த ஆய்வு முன்மொழிவை வாசிக்கும் பரீட்சகர்கள் உங்கள் ஆய்வு பற்றிய தெளிவினை பெற மாட்டார்கள். எனவே ஆய்வு முன்மொழிவில் உங்கள் உத்தேச ஆய்வின் பிரதான நோக்கத்தினை தெளிவாக எழுதிக் காட்டுதல் வேண்டும்.

3.6 ஆய்வுக் குறிக்கோள்கள்

ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடைந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்படும் பிரதான படிகள் ஆய்வுக் குறிக்கோள்கள் எனப்படும். ஆய்வுக் குறிக்கோள்கள் பின்வரும் பண்புகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும்:

  • தர்க்கரீதியான மற்றும் ஒத்திசைவானவானதாக எழுதப்படல் வேண்டும். (Logical and coherent).
  • சாத்தியமான குறிகோள்களாக இருத்தல் வேண்டும் (feasible)
  • யதார்த்தமான குறிகோள்களாக அமைதல்வேண்டும்., (realistic)
  • அளவிடப்படக் கூடியதாக குறிக்கோள்கள் காணப்படல் வேண்டும்  (measurable).
  • ஆய்வின் பிரதான நோக்கத்தினை அடையும் வகையில் (தொடர்புபட்டதாக) குறிக்கோள்கள் தெளிவாக எழுதப்பட்டு  இருத்தல் வேண்டும். (phrased to clearly meet the purpose of the study).
  • ஆய்வுக் குறிக்கோள்கள் எழுதும் போது ஆய்வுக்கான சார்ந்த, சாரா மாறிகளை தொடர்புபடுத்தி (தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) எழுதுதல் வேண்டும்.

ஆய்வுக் குறிக்கோள்களை எழுதும் போது அவை (செயல்) வினைச் சொற்களைக் கொண்டதாக எழுத வேண்டும்.

  • கண்டுபிடிக்க (to find out)
  • இனங்காண (to Identify)
  • தீர்மானிக்க (to determine)
  • ஒப்பிட (to compare)
  • கணிப்பிட (to calculate)
  • சரிபார்க்க (to verify)
  • பரிசீலிக்க (to examine)

தெளிவற்ற (செயல்) வினைசொற்கள் அல்லாத பதங்களை கொண்டு குறிக்கோள்களை எழுத வேண்டாம் (உதாரணம்: பாராட்ட - to appreciate, புரிந்து கொள்ள - to understand, நம்ப - to believe).

3.7 ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள்

ஆய்வுக் குறிக்கோள்களை அடையும் வகையில், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் வினாக்கள், ஆய்வு வினாக்கள் எனப்படும். இவை ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்கள் அடையும் வகையில் பிரதான வினாக்களாகவோ, சிறு சிறு  வினாக்களாகவோ எழுதப்படும். ஆய்வு வினாக்களிலும், ஆய்வுக்கான மாறிகளை ((தனித்த மாறி, இருமாறிகள், பலமாறிகள் கொண்டதாக) பொருத்தமான முறையில் தொடர்புபடுத்தி வினாக்களை உருவாக்குதல் வேண்டும்.  

கோட்பாட்டு ரீதியான ஆய்வுகளை முன்னெடுக்கும் போது ஆய்வுக் கருதுகோள்களை அமைத்துக் கொள்ள முடியும். தொகைசார்ந்த ஆய்வுகளிலேயே கருதுகோள்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படும். மாறிகளுக்கு இடையில் எத்தகைய தொடர்புகள்/வேறுபாடுகள் உள்ளன எனபது தொடர்பாக ஆய்வாளரது தற்காலிக எதிர்பார்ப்பு அல்லது தற்காலிக விளக்கமே ஆய்வுக் கருதுகோள் எனப்படும். 

3.8 ஆய்வின் முக்கியத்துவம்

குறித்த ஆய்வினை ஏன் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆய்வினை மேற்கொள்வதன்  மூலம் அடையப் பெரும் விளைவுகள்/ தாக்கங்களை (implications) குறிப்பிடுவதன் ஊடாக ஆய்வின் முக்கியத்துவத்தை அறிக்கைப்படுத்த வேண்டும். 

எவ்வாறு உங்கள் உத்தேச ஆய்வின் முடிவுகள் 

  • தற்போதைய அறிவில், 
  • கோட்பாடுகளில், 
  • கல்விக் கொள்கைகளில், 
  • கல்வி நடைமுறைகளில், 
  • கலைத்திட்டதில்,
தாக்கம் செலுத்தும் என்பதை குறித்துரைத்தல் வேண்டும். 

ஆய்வின் முக்கியத்துவத்தை எழுதும் போது பின்வரும் வினாக்களை மனதிற் கொள்க:
  • ஆய்வுக்காகப் பயன்படுத்தப்படும் கோட்பாட்டு சட்டகத்தில் ஆய்வு முடிவுகள் எத்தகைய தாக்கங்களை செலுத்தும்? (What will results mean to the theoretical framework that framed the study?)
  • ஆய்வின் முடிவுகளில் இருந்து அடுத்த ஆய்வுகளுக்கு எவ்வாறான பரிந்துரைகள் எழக் கூடும்? (What suggestions for subsequent research arise from the findings?)
  • ஆய்வு முடிவுகள் தற்போதைய நிகழ்ச்சித் திட்டங்களில், முறைகளில், எத்தகைய தாக்கங்களை கொண்டிருக்கும்?   (Will results influence programs, methods, and/or interventions?)
  • ஆய்வு முடிவுகள் கல்வி சார் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளுக்கு  பங்களிப்பு செய்யுமா?  (Will results contribute to the solution of educational problems?)
  • ஆய்வு முடிவுகள் கல்வி சார் கொள்கை தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துமா? (Will results influence educational policy decisions?)
  • உத்தேச ஆய்வின் முடிவுகளினால் எத்தகைய மாற்றங்கள் நிகழலாம்  அல்லது எத்தகைய மேம்பாடுகள் அடையப்பெறும்?  (What will be improved or changed as a result of the proposed research?)
  • ஆய்வு முடிவுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் அதானால் எத்தகைய புத்தாக்கங்கள் உருவாகும்? (How will results of the study be implemented, and what innovations will come about?).


3.9 இலக்கிய மீளாய்வு

ஆய்வு முன்மொழிவில், தெரிவு செய்த ஆய்வுத் தலைப்பு/ ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக, ஆய்வாளர் தான் அறிந்துள்ளவற்றை வெளிகாட்டும் பகுதி இலக்கிய மீளாய்வு ஆகும். இலக்கிய மீளாய்வானது ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி மற்றும் சூழமைவு விபரங்களை தருவதாக அமைகின்றது. இது ஆய்வுக்கான தேவையையும், ஆய்வு பரப்பு தொடர்பாக ஆய்வாளரின் அறிவினையும் குறித்துரைப்பதாக இது எழுதப்படல் வேண்டும். “The review of the literature provides the background and context for the research problem. It should establish the need for the research and indicate that the writer is knowledgeable about the area” (Wiersma, 1995). ஆய்வு முன்மொழிவுக்கான இலக்கிய மீளாய்வில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்ப்ட்டு இருத்தல் வேண்டும்.

  • கோட்பாட்டு மீளாய்வு – ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புடைய கோட்பாடு இனங் காணப்பட்டு, விவரிக்கப்படல் வேண்டும். குறித்த கோட்பாடு  உத்தேச ஆய்வில், எவ்வாறு பயன்படுத்தப் போகிறது எனபது பற்றிய விளக்கம் அளிக்கப்படல் வேண்டும். 
  • சார்பிலக்கிய மீளாய்வு – ஆய்வுடன் தொடர்புபட்ட பிற முக்கியமான ஆய்வுகள் பற்றிய விமர்சன் ரீதியான பகுப்பாய்வு.
  • ஆய்வு இடைவெளி: சார்பிலக்கிய மீலியாவினை மேற்கொள்ளுமபோது தற்போதைய அறிவில் குறித்த ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபட்ட வகையில் காணப்படும் இடைவெளிகளை துல்லியமாக இனங் கண்டு அவை பற்றி விளக்கப்படல் வேண்டும். ஆய்வு இடைவெளியானது தற்போதைய அறிவில் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாட்டு பிரயோகம், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முறையியல் போன்றவற்றில் எதாவது ஒன்றில் அல்லது பலவற்றில் உள்ள இடைவெளிகளாக இனங் காணப்படலாம்.
  • ஆய்வு தொடர்பான பிற முக்கியமான எண்ணக்கருக்கள். 

 



3.10 ஆய்வு முறையியல்

ஆய்வு முன்மொழிவின் இதயமே ஆய்வு முறையியல் ஆகும். உத்தேச ஆய்வினை நீங்கள் எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள் எனபது பற்றிய திட்டத்தினை ஆய்வு முறையியலில் எடுத்துக் காட்டப்படுகிறது. 

குறித்த ஆய்வின் ஒவ்வொரு ஆய்வுக் குறிக்கோள்களையும் அல்லது ஆய்வு வினாக்களையும் அடைந்து கொள்ள பயன்படுத்தப்படும்   படிமுறைகளை,  ஆய்வு முறையியல் விளக்கி நிற்கிறது. இதில் பின்வரும் விடயங்களை தெளிவாக விளக்கிக் கூறல் வேண்டுமாகிறது:

  • ஆய்வு அணுகுமுறையும் ஆய்வு வடிவமும் அதற்கான நியாயிப்பும்: உங்கள் உத்தேச ஆய்வினை எத்தகைய அணுகுமுறையில் (தொகை சார் அணுகுமுறை, பண்புசார் அணுகுமுறை, கலப்பு அணுகுமுறை) மேற்கொள்ளப் போகிறீர் என்பதை தெளிவாகக் கூறல் வேண்டும். மேலும்,குறித்த ஆய்வினை மேற்கொள்ள எத்தகைய ஆய்வு வடிவத்தை நீர் தெரிவு செய்துள்ளீர் என்பதையும் அதற்க்கான நியாயிப்பினையும் சுருக்கமாக எடுத்துரைத்தல் வேண்டும், இதன் போது ஆய்வு அணுகுமுறை, ஆய்வு வடிவம் என்றால் என்ன என்பதற்கான தேவையற்ற விளக்கங்களை தவிர்த்தல் வேண்டும்.

  • ஆய்வுக் குடி: உத்தேச ஆய்வினை மேற்கோள்ள நீர் கருத்தில் கொள்ளும் ஆய்வுக் குடி பற்றிய விளக்கம் தரப்படல் வேண்டும்.  
  • ஆய்வு மாதிரியும் , மாதிரியெடுப்பு முறையும் அதற்கான நியாயிப்பும்: ஆய்வுக் குடியில் இருந்து தெரிவு செய்யப்படப் போகும் ஆய்வுக்கான மாதிரி பற்ற்யும், குறித்த ஆய்வு மாதிரிகள், எத்தகைய மாதிரியெடுப்பு முறையினை நீர் தெரிவு செய்துள்ளீர் என்பதையும் விளக்குதல் வேண்டும்.மேலும் நீர் குறித்த  மாதிரியெடுப்பு முறையினை ஏன்  தெரிவு செய்தீர் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிடல் வேண்டும்.
  •  தரவு சேகரிப்பு கருவிகள்: ஆய்வுக் குறிக்கோள்களுக்கு /ஆய்வு வினாக்களுக்கு விடை தேடுவதற்காக நீங்கள் பயன்படுத்தவுள்ள பொருத்தமான தரவு சேகரிப்பு கருவிகளை தெளிவாக குறிப்பிடல் வேண்டும். இதன்போது, பின்வரும் அட்டவணையை பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்.

ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா

மாதிரி

தரவு சேகரிப்பு கருவி

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 1

n = 100 ஆசிரியர்கள்

வினாக்கொத்து

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 2

n = ?

?

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 3

n = ?

?

  • தரவு சேகரிப்பு கருவிகளின் விருத்தி படிநிலைகள்  : நீர், தரவு சேகரிப்புக்காக அடையாளம் கண்ட தரவு சேகரிப்பு கருவிகளை எவ்வாறு விருத்தி செய்யப் போகிறீர்கள் என்பது பற்றிய தெளிவான விளக்கம் தரப்படல் வேண்டும்.
  • தரவு சேகரிப்பு கருவிகளுக்கான தகுதியுடமை (Validity), நம்பத்தன்மையை (Reliability)  உறுதிப்படுத்துவதற்கான திட்டம்: தரவு சேகரிப்புக்காக விருத்தி செய்யப்பட்ட கருவிகளின் தகுதியுடமை, நம்பத்தன்மையை உறுதிப்படுத்திக் காட்டுவது ஆய்வுச் செயன்முறையில் மிக முக்கியமான படிநிலையாகும்.  தரவு சேகரிப்பு கருவிகளின் தகுதியுடமை, நம்பத்தன்மையை உறுதிப்படுத்திக்காட்டுவதற்கு நீர் பின்பற்றவுள்ள படிநிலைகளை ஆய்வு முன்மொழிவில் எடுத்துக் காட்டல் வேண்டும்.
  • தரவு பகுப்பாய்வு தொடர்பான திட்டம்: ஆய்வு முன்மொழிவில் உள்ள ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தேடுவதற்காக பயன்படுத்திய ஆய்வு கருவிகளின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்யப் போகிறீர்கள் என்பதை தெளிவாக குறித்துரைத்தல் வேண்டும். சிலர் தரவு பகுப்பாய்வு பகுதியில் தெளிவற்ற வாசகங்களை எழுதுகின்றனர். (உதாரணம்: தரவுப் பகுப்பாய்வுக்காக விவரண புள்ளியியல் முறை பயனபடுத்த படும்.பொருத்தமான நுட்பங்களை கொண்டு பகுப்பாய்வு செய்யப்படும் போன்ற). இது பிழையானதாகும்.  ஆய்வுக் குறிக்கோள்கள் அல்லது ஆய்வு வினாக்கள் ஒவ்வொன்றிலுமுள்ள மாறிகளை (தனித்த மாறி, இரு மாறிகள், பல் மாறிகள் ) அடையாளம் கண்டு அவற்றின் போக்குகளை,  அவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகள், இணைபுகள் , வேறுபாடுகள் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் துல்லியமான பகுப்பாய்வு நுட்பங்களை குறிப்பிடல் வேண்டும். இதன் போது தரவுப் பகுப்பாய்வு தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள  தெளிவினை வெளிக்காட்ட முடியும். இதன்போதும், பின்வரும் அட்டவணையை நீங்கள் பயன்படுத்த முடியும்.

ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா

மாதிரி

தரவு சேகரிப்பு கருவி

தரவுப் பகுப்பாய்வு

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 1

n = 100 ஆசிரியர்கள்

வினாக்கொத்து

இடை, நியம விலகல், பார் வரைபு

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 2

n = ?

?

 

ஆய்வு ஆய்வுக் குறிக்கோள் /ஆய்வு வினா 3

n = ?

?

 

 

·         3.11 ஆய்வின் வரையறைகளும் எல்லைப்படுத்தலும்

உத்தேச ஆய்வில் காணப்படும் வரையறைகள் (Limitations) மற்றும் எல்லைப்படுத்தல் (delimitation) பற்றி ஆய்வாளர் தெளிவாக எடுத்துக் கூறல் வேண்டும். உங்கள் ஆய்வில் உள்ள சாத்தியமான பலவீனங்களை அடையாளம் கண்டு அவை பற்றி குறித்துரைப்பது வரையறைகள் (Limitations) எனப்படும். 

இந்த பலவீனங்கள், உங்கள் ஆய்வின் மாதிரி, தரவு சேகரிப்பு கருவிகள், தகுதியுடைமை  நம்பகத்தன்மை, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் உங்களால் தவிர்க்க முடியாத விடயங்கள்,  காணப்படலாம். இவற்றை இனம் கண்டு அவற்றை விபரித்தல் வேண்டும் (limitation identifies potential weaknesses of the study. Think about your analysis, the nature of self-report, your instruments, the sample. Think about threats to internal validity that may have been impossible to avoid or minimize).

மேலும், உங்கள் ஆய்வின் நோக்கப் பரப்பு எவ்வாறு சுருக்கப்பட்டுள்ளது,  எவ்வாறு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது எனபதை எடுத்துரைப்பது ஆய்வின் எல்லைப்படுத்தல்  (delimitation)  எனப்படும். 

உங்கள் உத்தேச ஆய்வில் நீங்கள் செய்யாத விடயங்களை விளக்குவதற்கான பகுதியே இதுவாகும். இலக்கிய மீளாய்வில், கோட்பாட்டு தெரிவில், ஆய்வு குடி, மாதிரி, தரவு சேகரிப்பு கருவிகளில், பகுப்பாய்வில் நீங்கள் தெரிவு செய்த விடயங்களையும், தவிர்த்த  விடயங்களையும் இதில் உரிய காரணங்களுடன்  குறிப்பிட்டு காட்டல் வேண்டுமாகிறது.  (A delimitation addresses how a study will be narrowed in scope, that is, how it is bounded. This is the place to explain the things that you are not doing and why you have chosen not to do them—the literature you will not review (and why not), the population you are not studying (and why not), the methodological procedures you will not use (and why you will not use them). Limit your delimitations to the things that a reader might reasonably expect you to do but that you, for clearly explained reasons, have decided not to do.)

·         3.12 கால சட்டகம்

       உத்தேச ஆய்வில் உள்ள ஒவ்வொரு செயற்பாடுகளையும்செய்து முடிப்பதற்கான கால   அளவு தொடர்பான ஒரு திட்டமிடலை கால சட்டகத்தில், ஆய்வாளர் எடுத்துக் காட்ட வேண்டும்.  இதற்காக  கான்ட் வரைபு (Gantt Chart) பரவலாக பயன்படுத்தபடுகிறது. உங்களது உத்தேச ஆய்வின் ஒவ்வொரு செயற்பாடுகளை (ஆய்வுச் செயன்முறைபல்வேறு படிநிலைகளில் உள்ள செயற்பாடுகள்)  ஓர் அட்டவணையில் நிரல்களில் இட்டு அவற்றை செய்து முடிப்பதற்கான கால அளவை நாட்களில்/வாரங்களில்/மாதங்களில் அட்டவணையின் வரிசைகளில் குறிப்பிட்டுக் காட்டுவதே கால சட்டக வரைபு ஆகும். ஆய்வினை உரிய காலத்துக்குள் செய்து முடிக்க இந்த கால சட்டகம் உங்களுக்கு உதவுவதாக இருக்கும்.  (கான்ட் வரைபு - Gantt Chart கான உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது)

 


3.13 பாதிடு

உத்தேச ஆய்வில் உள்ள ஒவ்வொரு செயற்பாடுகளையும்  செய்து முடிப்பதற்காக ஆய்வாளருக்கு ஏற்படும் செலவீனங்களை குறிப்பிட்டுக் காட்டுவது ஆய்வு முன்மொழிவின் இன்னொரு முக்கிய கூறாக உள்ளது. ஆய்வின் ஒவ்வொரு செயற்பாடுகளை  அட்டவணை நிரலில் இட்டு அவற்றுக்கு ஏற்படும் செலவுகளை குறிப்பிட்டு கட்டுதல் வேண்டும். மேலும் குறிப்பிட்ட செலவீனங்களை ஆய்வாளர் எவ்வாறு சமாளிக்கப்  போகிறார்,  என்பதையும் குறிப்பிட்டு கூறுதல் வேண்டும்.

 

 3.14 நூல்­வி­ப­ரப்­ பட்­டியல் 

ஆய்வு முன்மொழிவுகளை  தயா­ரிக்கும் போது. சம்­பந்­தப்­பட்ட நிறு­வனம், பல்­க­லைக்­க­ழகம் எந்த உசாத்­து­ணை­யிடல் முறை­யினை பின்­பற்ற வேண்டும் என்ற வழி­காட்டல் குறிப்­புக்­களை நிச்­சயம் வழங்கி இருப்­பார்கள். அதனை பின்­பற்றி உங்கள் ஆய்வு முன்மொழிவின் உசாத்­து­ணை­யிடல் அல்லது நூற்பட்டியலை தயாரித்துக் கொள்ளல்வேண்டும்.  

குறிப்­பிட்ட வழி­காட்­டல்­களை கவ­னத்தில் கொள்­ளாமல் அனுப்­பப்­படும் ஆய்வு முன்மொழிவுகள்  அதி­க­மான வேளை­களில் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­துண்டு . ஆய்வு முன்மொழிவின் உட்பகுதிகளில் பிற ஆக்கங்களில் இருந்து பெற்ற கருத்துக்களை உரிய முறையில் உரை மேற்கோள் காட்டுதல் வேண்டுமாகின்றது. ஆய்வு முன்மொழிவுகளில்  உசாத்துணைகளுக்கு பதிலாக நூற்பட்டியலை அதிகமான சந்தர்ப்பங்களில் ஆய்வாளர் இணைத்திருப்பர். இதன்போது ஆய்வாளர்  உரை  மேற்கோள் காட்டல், உசாத்துணை, நூல்விபர பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். 

  • மேற்கோள் காட்டல், என்­ப­தனை ஆங்­கி­லத்தில் Citation என்­ற­ழைப்பர். Reference எனும் போது அது உசாத்­துணை எனவும் Bibliography என்­பது நூல்­வி­ப­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை என்றும் அழைக்­கப்­ப­டு­கின்­றன. 
  • கல்வி சார்ந்த ஆக்­கங்­களை குறிப்­பாக, கட்­டு­ரைகள், ஒப்­ப­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­ற­வற்றை எழுதும் போது, அவற்றில் நாம் எழுதும் அநேக கருத்­துக்கள், எமது வாசிப்பின் ஊட­கவோ, கேட்­பொலி, காணொளி­கள்­ ஆ­கி­ய­வற்றின் ஊடாகவோ பெற்­றுக்­கொண்ட அறிவு, தக­வல்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கிக் காணப்­படும். மட்­டு­மன்றி, எமது கருத்­துக்­க­ளுக்கு வலு சேர்க்கும் வகையில், எமது வாசிப்­பி­னூ­டான பல்­வேறு சான்­று­களை முன்வைக்க வேண்­டிய தேவை­களும் ஏற்­படும். எமது வாசிப்­பி­னூ­டாக பெற்­றுக்­கொண்ட பிற­ரது சிந்­த­னைகள், கருத்­துக்கள், தர­வுகள் ஆகி­ய­வற்றை எமது கட்­டு­ரை­களில் எழுதும் போது, அவற்றை எங்­கி­ருந்து வாசித்து, கேட்டு, பார்த்து அறிந்து கொண்­டோமோ அவற்றின் மூலங்­களை குறிப்­பிட்டுக் காட்­டு­வது முக்­கி­ய­மாகும். இன்றேல், பிறர் கருத்­து­களை நாம் நக­லாக்கம் செய்த குற்­றத்­துக்கு ஆளாகி விடுவோம். கல்வி சார்ந்த பல்­வேறு ஆக்­கங்­களில் இத்­த­கைய நக­லாக்க குற்­றத்தை தவிர்க்கும் பொருட்டு குறித்த கருத்­துக்­களை எழுதும் போது அதன் மூலத்­தினை (source) அதா­வது அக்­க­ருத்­துக்கு உரிய உண்­மை­யான ஆசி­ரியர் பெய­ரினை குறிப்­பிட்டுக் காட்­டு­வது மேற்கோள் காட்டல் எனப்­ப­டு­கின்­றது. இதனை ஆங்­கி­லத்தில் In-text citation என்று கூறுவர்.
  • கல்வி சார்ந்த ஆக்­கங்­­ளான கட்­டு­ரைகள், ஒப்­­டைகள், ஆய்வு முன்­மொ­ழி­வுகள், ஆய்வுக் கட்­டு­ரைகள், நூல்கள் போன்­­வற்றின் உட்­பந்­தி­களில் (In-text) மேற்கோள் காட்­டிய அனைத்­தி­னதும் முழு­மை­யான விவ­ரங்­களை அதா­வது, நூலா­சி­ரியர் பெயர், வரு­டத்­துடன், குறித்த ஆக்­கத்தின் பிர­சுர விட­யங்­களை முழு­மை­யாக, எமது கல்­விசார் ஆக்­கங்­களின் இறுதி பக்கத்தில் பட்டி­­லிட்டு காட்­டு­­தையே, உசாத்­துணை (Reference) எனப்படு­கி­றது. எனவே, உசாத்­துணை என்ற தலைப்பில் பட்­டியல் இடும் நூல்கள், கட்­டு­ரைகள் என்­­­வற்றின் உட்­­கு­தி­களில், மேற்கோள் இடப்­பட்­­தா­கவோ, எடுத்­துக்­காட்­டப்­பட்­­தா­கவோ இருத்தல் வேண்டும். 
  • மாறாக, எமது கல்­விசார் கட்­டு­ரை­களின் உட் பந்­தி­களில் மேற்கோள் காட்­டி­­வற்­றுடன், மேற்கோள் காட்­டாத நூல் விவ­ரங்­­ளையும் இணைத்து வரும் பட்­டியல், நூல்­வி­­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொகை (Bibliography) என்­­ழைக்­கப்­படும். 
  • அதி­­மான ஆய்வு மாண­வர்கள், இவ்­வே­று­பாட்­டினை புரிந்து கொள்­ளாமல் உசாத்­துணை பட்­டியல் கோரப்­படும் ஆய்வுக் கட்­டு­ரை­களில் நூல்­வி­­ரப்­பட்­டியல் அல்­லது நூற்­றொ­கை­யினை எழுதி விடு­கின்­றனர். ஆய்­வு­களில் ஈடு­­டுவோர், பல்­வேறு கட்­டு­ரை­களை எழு­துவோர், உசாத்­துணை மற்றும் நூல்­வி­­ரப்­பட்­டியல் ஆகி­­வற்­றி­லுள்ள இந்த வேறு­பாட்டை அறிந்து செயற்­­டு­வது முக்­கி­­மாகும்.

3.15 பின்னிணைப்புகள்

ஆய்வு முன்மொழிவின் இறுதியில் ஆய்வு முன்மொழிவுக்கான பின்னிணைப்புகளை இணைத்தல் வேண்டும். பொதுவாக பின்வரும் அம்சங்கள் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ளப்படும்.

  • ஆய்வுக் கருவிகள்
  • தரவு சேகரிப்புக்கான அனுமதி கோரல் கடிதம்
  • தரவு சேகரிப்பவர்களிடம் அவர்களது விருப்பத்தை பெறுவதற்க்கான கடிதம்
  •  ஏனையன

      4.0 முடிவுரை 

    மேலே கூறப்பட்ட ஆய்வு முன்மொழிவின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய வகையில் ஆய்வு முன்மொழிவினை சீராக கணணி தட்டச்சு செய்து , பிழைகள் இல்லாத வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும். ஆய்வு முன்மொழிவுக்கு குறித்த நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தந்துள்ள வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு முன்மொழிவுகள் தயாரிக்கபடல் வேண்டும். இதன் போது மேலே கூறப்பட்ட சகல கூறுகளும் அவற்றின் வரிசை ஒழுங்கு முறையும் மாறி இருக்கும் என்பதை மனதில் கொள்க.  


        உசாத்துணைகள்  

American Psychological Association (APA). (2001). Publication manual of the American Psychological Association (Fourth edition). Washington, DC: Author.

Armstrong, R. L. (1974). Hypotheses: Why? When? How? Phi Delta Kappan, 54, 213-214.

Creswell, J. W. (1994). Research design: Qualitative & quantitative approaches. Thousand Oaks, CA: Sage.

Guba, E. G. (1961, April). Elements of a proposal. Paper presented at the UCEA meeting, Chapel Hill, NC.

Faculty of graduate studies (2021) http://graduate.sjp.ac.lk/wp-content/uploads/2016/02/FGS-Guidelines-2017-2021.pdf

Faculty of graduate studies (2021) Detailed Research Proposal for Ethics Review, University of Colombo https://fgs.cmb.ac.lk/application-guidelines/

Fraenkel, J. R. & Wallen, N. E. (1990). How to design and evaluate research in education. New York: McGraw-Hill.

Kerlinger, F. N. (1979). Behavioral research: A conceptual approach. New York: Holt, Rinehart, & Winston.

Krathwohl, D. R. (1988). How to prepare a research proposal: Guidelines for funding and dissertations in the social and behavioral sciences. Syracuse, NY: Syracuse University Press.

Locke, L. F., Spirduso, W. W., & Silverman, S. J. (1987). Proposals that work: A guide for planning dissertations and grant proposals (2nd ed.). Newbury Park, CA: Sage.

Marshall, C., & Rossman, G. B. (1989). Designing qualitative research: Newbury Park, CA: Sage.


Shavelson, R. J. (1988). Statistical reasoning for the behavioral sciences (second edition). Boston: Allyn and Bacon.

Sreeraj S R  (2015). Writing a research proposal https://www.slideshare.net/sreerajsr/writing-a-research-proposal-56071106

Wiersma, W. (1995). Research methods in education: An introduction (Sixth edition). Boston: Allyn and Bacon.

Wilkinson, A. M. (1991). The scientist’s handbook for writing papers and dissertations. Englewood Cliffs, NJ: Prentice Hall.

 



16 கருத்துகள்:

  1. கல்வி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரையாகும். இவ்வாறான ஆக்கங்கள் தமிழில் வெளிவருவது மிவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். ..V.Nanthakumar

    பதிலளிநீக்கு
  2. கல்வித்துறையில் உயர்கல்வியைத் தொடரும் எம்மைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பிரயோசமான கட்டுரை.
    இவ்வாறாக தாங்கள் இதற்கு முன் எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கியதாக ”கல்வியியல் ஆய்வு எனும்” நூல் ஒன்றை வெளியிட்டால் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு கல்வியியல் ஆய்வு பற்றிய தெளிவான அறிவனைப் பெற்றுக் கொள்ளக் கூடிதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஆய்வாளர்களுக்கு, ஆய்வுகள் தொடர்பாக மிகவும் பயனுள்ள பல தகவல்களை இக்கட்டுரையில் பெற்றுக்கொள்ள முடிகின்றது. இவ்வாறான கட்டுரைகளை தொடர்ந்தும் தாங்கள் எழுதுவதற்கு இறைவன் அருள் புரிவாராக..

    பதிலளிநீக்கு
  4. முற்பகல் 9:38

    கல்வி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரையாகும்.

    பதிலளிநீக்கு
  5. கல்விசார் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவை தொடர்பான விரிவான விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இவ்வாறான பயனுள்ள கட்டுரைகளை மேலும் எழுதுவதற்கு இறைவன் ஆரோக்கியத்தை வழங்க வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. காலத்தின் தேவை சேர் இவ்வாறான அறிக்கைகள் தமிழில் கிடைப்பது குறைவு உங்களின் இவ்வாறான எழுத்தாக்கத்தை வரவேற்கின்றோம் மேலும் உங்கள் எழுத்தாக்க சேவைக்கு இறைவன் அருள் புரிவார்

    பதிலளிநீக்கு
  7. கல்விசார் ஆய்வுகளை மேற்கொள்வோருக்கும், கல்விசார் ஆய்வு முறைகள் தாெடர்பாக கற்கின்ற மாணவர்களுக்கும் மிகவும் பயனுடைய கட்டுரையாக அமைந்திருக்கின்றது சேர்.

    பதிலளிநீக்கு
  8. கல்வி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரையாகும்

    பதிலளிநீக்கு
  9. சிறந்த கட்டுரையாக்கம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  10. கல்வியியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளது. பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  11. ஆய்வு முன்மொழிவு தொடர்பான அறிவு திருப்திகரமாக கிடைக்கப்பெற்றது எனது கல்வி முகாமைத்துவ முதுமாணிக் கற்கை நெறிக்கு உதவுகிறது.
    நன்றி .

    பதிலளிநீக்கு
  12. மிகவும் பயனுள்ள கட்டுரை...கல்வி ஆய்வில் ஈடுபடும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய மிகச்சிறப்பான கட்டுரை...

    பதிலளிநீக்கு
  13. கல்வித்துறையில் உயர்கல்வியைத் தொடரும் எம்மைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பிரயோசமான கட்டுரை.Thank you so much sir

    பதிலளிநீக்கு

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...