கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்
பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்
கல்விப் பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
ஆய்வுச் செயன்முறையில் தரவு சேகரிப்பு என்பது மிகப் பிரதானமான விடயம் என்பது நாம் அறிந்ததே. தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு முடிவுகள் பெறப்படுவதால் ஆய்வாளர்களை தரவு, தரவின் வகைகள் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருத்தல் வேண்டும். இதனை கரித்தோர் கொண்டு இக்கட்டுரையில் தரவு, தரவு வகைகள் , தரவு வகைகளின் முக்கியத்துவம் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது.
தரவு
யாதாயினுமொரு ஆய்வு பிரச்சினை /விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்காக திரட்டப்படும் சகல விதமான தகவல்களும் “தரவு” எனப்படும். தரவுகளை அதன் அளவை நிலை அடிப்படையில் இரண்டு வகைகளாக நோக்கப்படும்.
• தொகைசார் தரவுகள்
• பண்பறி தரவுகள் எனப்படும்.
தொகைசார் தரவுகள்
• ஒரு விடயத்தின் பெறுமானங்களை அல்லது எண்ணிக்கைககளை எண்களாக வெளிப்படுத்தும் தரவுகள்
• அளவு பெறுமானம் கொடுக்க முடியுமான தரவுகள்
• எண்சார் மாறிகள் குறித்த (எத்தனை, எவ்வளவு அல்லது எவ்வளவு முறை போன்ற) தகவல்களை அளிக்கும் தரவுகள். தொகைசார் சார் தரவுகள் எனப்படும்.
உ+ம்: மாணவர் வயது, உயரம், பரீட்சை புள்ளிகள்,மாணவர் வரவு, ஆசிரியர் சுகயீன நாட்கள்
பண்பறி தரவுகள்
ஒரு விடயத்தின் பகுப்புகள் (Category) குறித்த தகவல்கள் அல்லது ஒன்றின் பெயர், சின்னம் அல்லது எண் குறியீடாகத் வெளிப்படுத்தப்படும் தரவுகள் பண்பறி தரவுகள் ஆகும். இது ஒரு விடயத்தின் பண்புநிலைகளை மட்டும் வெளிப்படுத்தும். அளவு பெறுமானம் கொடுக்க முடியாத தரவுகள் . கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபடுவோர், தாம் திரட்டும் தரவுகள் எண்ணிக்கை சார்ந்த தொகைசார் தரவுகளாவா அல்லது ஒன்றின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பண்புசார் தரவுகளாவா சேகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும், இதற்கேற்ப அதரவு சேகரிப்பு கருவிகள் வேறுபடும் என்பதை மனதிற் கொள்ளல் அவசியமாகும்.
உ+ம்: மாணவர் பெயர், மாணவர்களின் இனம், மொழி, பால்நிலை, பெற்றோரின் தொழில், பெற்றோரின் கல்வி தகைமை, ஆசிரியர் உடல் நலம் …
தொகை சார் மற்றும் பண்பறி தரவுகளின் முக்கியத்துவம்
கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் சேகரிக்கப்படும் போது தொகை சார் மற்றும் பண்பறி தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இத்தரவுகள் ஆய்வு முடிவுகளில் வெவ்வேறு பெறுபேறுகளை வழங்குகின்றன. ஒருவர் பயன்படுத்தும் ஆய்வு வடிமைப்புகளை பொறுத்து சில ஆய்வுகளில் தனியே தொகைசார் தரவுகள் மட்டும் கவனத்தில் கொள்ளப்படும். தொகைசார் தரவுகள் பின்வரும் விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன:
புறநிலை மற்றும் துல்லியம்: தொகைசார் தரவு மிகவும் புறநிலையானது, தனியாள் சார்புகளின் செல்வாக்கைக் குறைக்கிறது. இது ஆய்வாளர்களை துல்லியமாக மாறிகளை அளவிடவும் மற்றும் எண் அடிப்படையில் இடைத்தொடர்புகளை அல்லது வேறுபாடுகளை வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது.
புள்ளியியல் பகுப்பாய்வுக்கு இலகுவானது: தொகைசார் தரவுகளை கொண்டு எளிய மற்றும் சிக்கலான பகுப்பாய்வுகளை மேற்கொள்ள முடியும். இதன்காரணமாக, ஆய்வுக் கருதுகோள்களைச் சோதிக்கவும், தரவுகளில் உள்ள கோலங்களைக் ஆய்வுக்கு கண்டறியவும் மற்றும் மாறிகளுக்கு இடையிலான இடைத்தொடர்பு அல்லது வேறுபாடுகளை தீர்மானிக்கவும் புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. தரவுளின் போக்குகளை அடையாளம் காணவும், கணிப்புகளை உருவாக்கவும், பெரிய ஆய்வுகுடிகளை கொண்டு கண்டுபிடிப்புகளை பொதுமைப்படுத்தவும் இது உதவுகின்றது.
மீள் உருவாக்கம் (replicability): தொகைசார் தரவுகளின் எண்ணியல் தன்மை ஆய்வுகளை மீள் உருவாக்குவதை மேலும் எளிதாக்குகிறது, ஏனெனில் ஆய்வாளர்கள் தரவு சேகரிப்பு கருவிகளின் தகுதியுடைமை மற்றும் நம்பகத்தன்மை சோதிக்க அதே நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
பெரிய மாதிரி அளவுகள்: தொகைசார் தரவுகள் பெரும்பாலும் பெரிய மாதிரி அளவுகளை உள்ளடக்கியது, இது ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் தகுதியுடமையை அதிகரிக்கிறது மற்றும் பெரிய ஆய்வுக்குடிக்கு ஆய்வு முடிவுகளை பொதுமைப்படுத்தலையும் மேற்கொள்ள உதவுகிறது. .
சம்பவக் கற்கை போன்ற பண்புசார் ஆய்வு வடிவங்களில் தனியே பண்பறி தரவுகள் மாத்திரம் கவனத்திற் கொள்ளப்படும்.
பண்புசார் தரவுகள் பின்வரும் வகையில் முக்கியம் பெறுகின்றன:
சூழமைவினை புரிந்து கொள்ளல் Contextual Understanding: பண்புசார் தரவுகள் ஆய்வாளர்க்ளுக்கு பங்கேற்பாளர்களின் சூழல், உந்துதல், மற்றும் அனுபவங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இது நிகழ்வுகளின் "ஏன்" மற்றும் "எப்படி" என்பவற்றைப் புலனாய்வு செய்து, ஆய்வுக்கு ஆழத்தைச் அறிந்து கொள்ள உதவுகின்றது. .
நெகிழ்வுத்தன்மை Flexibility: நேர்காணல், குழுக் கலந்துரையாடல் போன்ற தரவின் பண்புசார் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தரவுச் சேகரிப்பு முறைகள், ஆய்வாளர்க்ளுக்கு சிக்கலான நடத்தை மற்றும் கருத்துக்களை மிகவும் திறந்த மற்றும் நெகிழ்வான முறையில் ஆராய அனுமதிக்கின்றன.
ஆழமான தகவல்கள்: தொகைசார் தரவுகளுக்குப் பதிலாக,பண்புசார் தரவுகளின் செயன் முறைகள், அனுபவங்கள், மற்றும் பார்வைகளைப் பரந்த அளவில் விவரிக்க முடியும். இது ஆய்வுப் பொருளின் முழுமையான பார்வையை வழங்குகிறது.
புதிய கோட்பாடுகள் மற்றும் உள்ளார்ந்த உண்மைகள் : பண்புசார் தரவுகள் , ஆய்வாளர்கள் எதிர்பார்க்காத புதிய கோட்பாடுகள் அல்லது உள்ளார்ந்த உண்மைகளை வெளிக்கொணரக்கூடியது. இதனால் புதிய ஆராய்ச்சிக்குத் தகுந்ததாகவும், எளிதில் அளக்க முடியாத நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதில் இவை மதிப்புமிக்கதாகவும் காணப்படுகின்றன.
எனினும் அண்மைக்காலங்களில் மேற்கண்ட இருவகை தரவுகளை ஆய்வுகளில் இணைத்து கலப்பு முறையிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை சேகரித்து ஆய்வு முடிவுகளை பெற முயற்சிக்கும் போது அவை ஆய்வாளர்களுக்கு கீழ்கண்ட நன்மைகளை வழங்குகிறது: தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை சேகரித்து ஆய்வு முடிவுகளை பெற முயற்சிக்கும் போது அவை ஆய்வாளர்களுக்கு கீழ்கண்ட நன்மைகளை வழங்குகிறது:
ஆய்வு முடிவுகளை முக்கோணப்படுத்தல் Triangulate Findings: பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி கிடைக்கும் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், ஆராய்ச்சியின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இது உதவுகிறது.
முழுமையான பகுப்பாய்வு: தொகைசார் தரவுகள் வடிவமைப்புகள் அல்லது போக்குகளைத் தெளிவாகக் காட்ட முடியும், அதே சமயம் பண்புசார் தரவுகள் அந்த வடிவமைப்புகளுக்குப் பின்னுள்ள காரணங்களை விளக்கி, முழுமையான பார்வையினை எமக்கு அளிக்கிறது.
ஆழமும் பரவலும்: கலப்பு முறை தரவுகள் , ரவின் தரத்தின் உள்ளடக்க ஆழத்தையும், அளவீட்டு முடிவுகளின் பொதுமைப்படுத்தல் திறமையையும் வழங்குகிறது, இதன் மூலம் ஆராய்ச்சி முடிவுகள் மேலும் வலுவாகும்.
ஒரே தரவு அலகில் இருந்து எப்படி தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை சேகரிக்க முடியும் என்பதற்கான உதாரணம்
Source: Australian Bureau of Statistics, Quantitative and
qualitative data
தரவுகளில் காணப்பட வேண்டிய இயல்புகள்
• நம்பகத்தன்மை – (Reliabilty) சேகரிக்கப்படும் தரவுகள் உண்மையானவையகவும் ஏற்கக்கூடியதாகவும் காணப்படல் வேண்டும்)
• நிறைவுடமை – (Adequacy)- ஆய்வினை பூர்த்திசெய்ய போதுமானவையாக இருத்தல் வேண்டும்
• பொருத்தப்பாடு – (Suitability) – ஆய்வின் நோக்கங்களுக்கு பொருத்தமானவையாக இருத்தல் வேண்டும்
• செம்மை- (Accuracy) – சேகரிக்கப்பட்ட தரவுகள் வழுக்கள், தவறுகள் குறைந்து காணப்படல் வேண்டும்
• ஏகவினைத்தன்மை – (Homogeneity)தரவுகளில் ஓரினவியல்பு இருத்தல் வேண்டும் .
தொடரும் ...