கலைத்திட்டம்: ஓர் அறிமுகம்



கலைத்திட்டம்: ஓர் அறிமுகம்

An Introduction to Curriculum

கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
சிரேஸ்ட விரிவுரையாளர்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம்

கல்விப் புலத்தில் கலைத்திட்டம் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை எனப்படுகின்றது. கற்றலுக்கு உரித்தானவற்றுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டம் எனலாம்.  முறைசார்ந்த அல்லது முறைசாரா வகையில் கல்வியை வழங்குகின்ற சகல தாபனங்களும்  (பாலர் பாடசாலையாகட்டும் அல்லது பல்கலைக்கழகமாகட்டும்) தாம் வழங்குகின்ற கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பாக முறையான திட்டமொன்றைக் கொண்டிருக்க வேண்டியாதாகவுள்ளது. இத்தாபனங்களில் சேவையாற்றும் நபர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் இத்திட்டம் தொடர்பான போதுமான அறிவு, திறன்களைக் கொண்டிருக்க வேண்டியதும் மிக  இன்றியமையாதாகும். அதாவது, கல்விப்புலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுகின்ற நபர்கள் கலைத்திட்டம் பற்றிய பரந்த விளக்கமொன்றை கொண்டிருப்பது அவசியமாகின்றது.
இந்த வகையில் இலங்கைப் பாடசாலைகளில் பல்வேறு பாடங்களை கற்பிக்கும் பணியில் உள்ள ஆசிரியர்களாகிய நாம், பாடசாலைகளில் அமுலாக்கப்படும் கலைத்திட்டம் தொடர்பான போதிய விளக்கங்களை கொண்டிருத்தலுடன் மாத்திரமன்றி  கலைத்திட்டம் என்ற துறை தொடர்பான   விளக்கங்களையும்  பெற்றிருத்தல் அவசியமாகிறது. ஏனெனில் ஆசிரியர்களே, கலைத்திட்டத்தை செயற்படுத்தும் முகவர்களாக விளங்குகின்றனர். இலங்கையினைப் பொறுத்தவரையில், தேசிய ரீதியில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைகுழு போன்றவற்றின் ஒத்துழைப்புடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் திட்டமிடப்படுகின்ற கலைத்திட்டத்தை பாடசாலைகளில் செயலுருப்பெறக்  காரணமாகின்றவர்கள் ஆசிரியர்களே!   எனவே, இலங்கையில் நடைமுறைபடுத்தப்படும் ஆசிரிய வாண்மைபயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் கலைத்திட்டம் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்கள் வழங்கப்பட வேண்டும் என அண்மைகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு இக்கட்டுரையில், கலைத்திட்டம் தொடர்பான சில அடிப்படை எண்ணக்கருக்கள் பற்றி எடுத்து நோக்கப்படுகின்றது.

கலைத்திட்டம்- வரைவிலக்கணப்படுத்தல்


Curriculum என்ற ஆங்கிலப் பதத்துக்கு ஈடாக பல தமிழ் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  உதாரணமாக, கல்வித் திட்டம், கல்வி ஏற்பாடு, பாட ஏற்பாடு, பாடவிதானம், கலைத்திட்டம் என்பன அவற்றுள் சிலவாகும்.  எமது நாட்டில் கலைத்திட்டம், பாடவிதானம் எனும் சொற்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.  Curriculum எனும் ஆங்கிலப்பதம் currere எனும் லத்தீன் சொல்லில் இருந்து மருவியது. இலத்தின் மொழியில் currere  என்பது ஓடுதல் அல்லது ஓடிக்கொண்டு இருக்கும் நடவடிக்கை (action of running), நடவடிக்கை (course of action) ஓட்டப்பந்தயம் (race/ racecourse), தேர் (chariot) எனப் பலவாறாக அர்த்தப்படுகிறது.  இதனால்தான் என்னவோ, இன்றுள்ள பல கலைத்திட்டங்கள் மாணவர்கள்  பல தொடரான தடைகளை (பாடங்களை) தாண்ட (சித்தி) அடையவேண்டியதாக உள்ளது (Indeed, for many students, the school curriculum is a race to be run, a series of obstacles or hurdles (subjects) to be passed) என Marsh, C. J (2009) Key Concepts for Understanding Curriculum என்ற தனது நூலில் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.  

பொதுவாக, கலைத்திட்டம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள்  அறிஞர்களினால் முன்வைக்கப்படுள்ளன. இதனால் கலைத்திட்டம் என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியாதுள்ளது.  குறிப்பிட்ட காலம் மற்றும் அக்காலத்தில் நிலவிய தத்துவ, உளவியல்  பின்னணிகள்  இவ்வாறு  பல வரைவிலக்கணங்கள் உருவாகக்  காரணமாகியுள்ளது எனக் கூறலாம்.

கலைத்திட்டத்தினை, குறிப்பிட்ட உள்ளடக்க பட்டியல் அல்லது, பாடமொன்றின் உள்ளடக்கம் அல்லது ஒரு கற்கை நெறியின் வழிகாட்டியாகக் கொள்ளப்படுகின்ற பாடத்திட்டத்திற்கு (Syllabus) சமமான நிலையில் பலர் நோக்குகின்றனர். இதனை விடவும், பரந்துபட்ட அடிப்படையில், கல்வி பற்றிய எடுகோள்கள், தத்துவங்கள், கோட்பாடுகள், மற்றும் நம்பிக்கைகள், போன்ற இன்னோரன்னவற்றை உள்ளடக்கிய வகையில், கலைத்திட்டத்தை நோக்குவது அவசியமாகும்.

டையிலர் (Tyler 1949) கலைத்திட்டத்தை கல்வியின் ஒரு தொழிற்படு சாதனமாக நோக்குகின்றார். கலைத்திட்டத்தை வடிவமைக்கும்  போது நான்கு பிரதான கூறுகள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என இவர் வலியுறுத்துகின்றார். அடைய வேண்டிய கல்வி நோக்கங்கள், வழங்க வேண்டிய கல்வி அனுபவங்கள், அக்கல்வி அனுபவங்களை வினைத்திறனான முறையில் ஒழுங்கமைத்தல், நோக்கங்கள் அடையப் பெற்றனவா எனக் காண மதிப்பீடு என்பனவே அன் நான்கும் ஆகும்.

ஸ்டேன்ஹவுஸ் (Stenhouse 1975) என்பவர், கலைத்திட்டம் பற்றி பின்வருமாறு கருத்துக் கொண்டுள்ளார்: “கலைத்திட்டம் – கற்பித்தல் நடைமுறை பற்றிய திட்ட விபரம் (விபரக்குறிப்பு) ஆகும். மாறாக பூர்த்திசெய்யப்பட வேண்டிய பாடத்திட்டமோ சாதனப் பொதியோ அல்ல. (A particular form of specifications about the practice of teaching and not as a package of materials or a syllabus of ground to be covered). எந்தவொரு கல்வி சார் அபிப் பிரயங்களையும் பரிசோதனை செய்துபார்க்கக் கூடிய கருதுகோளாக மாற்று வதாற்கான வழியொன்றாகவும் மற்றும் வெறுமனே ஏற்றுக் கொள்ளப்படுவதனை விடவும், தீர்க்கமாக (Critical) சோதிக்க அழைக்கக் கூடியதொரு வழியாகவும் இது கருதப்படுகிறது (Stenhouse). ஸ்டேன்ஹவுஸ், கலைத்திட்டத்தை செயன்முறையாக (process) நோக்குகிறார். இத்தகைய செயன்முறையில், ஆசிரியர்கள் கல்விசார் எண்ணங்களை கடத்துபவர்களாகவும், அவை பற்றிய தீர்ப்புக்களை வழங்குபவர்களாகவும் வகிபங்கேற்க வேண்டியுள்ளது.

      மற்றுமொரு பொதுவான நோக்கின்படி, கலைத்திட்டமானது பாடசாலைச் சூழமைவொன்றில் உள்ள மாணவர்களுக்கான திட்டமிட்ட கற்றல் அனுபவங்களாக கருதப்படுகிறது. இத்தகைய கருத்தினையே  Taba (1962) Tanner and Tanner (1975) Eraut (1975) போன்றோர் கொண்டிருந்தனர். கற்றலுக்கான ஒரு திட்டமே கலைத்திட்டமாகும் (“ a curriculum is a plan for learning) என டாபா(Taba 1962) கூறுகின்றார். அதேபோன்று, தன்னர் மற்றும் தன்னர் (Tanner and Tanner 1975) என்போர் “ பாடசாலையொன்றின் வழிகாட்டலின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு மற்றும் அனுபவங்களாக வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட மற்றும் வழிகாட்டப்பட்ட கற்றல் அனுபவங்களும் அடைய எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுமே கலைத்திட்டம்  எனப்படுகிறது (the planned and guided learning experiences and indented learning outcomes formulated as the systematic reconstruction of knowledge and experiences under the auspices of the school). ஈரவ்ட் போன்றோர் (Eraut et al. 1975) கலைத்திட்டத்தை இவ்வாறு நோக்குகின்றனர்: பாட அலகுகள் திட்டமிடப்படுகையில், கற்றல் இடம்பெறுகையில் உள்ள பொதுவான மாதிரிசட்டகமொன்றை தீர்மானிக்கின்ற, எவை கற்பிக்கப்படல் வேண்டும், எவ்வாறு அவை கற்பிக்கப்படல் வேண்டும் என்பது பற்றிய பரந்துபட்ட தீர்மானங்களே கலைத்திட்டமாகும் “the set of broad decisions about what to be taught and how it is to be taught, that determine the general framework within which lessons are planned and learning takes place (Eraut et al 1975). இவை கலைத்திட்டம்  பற்றி அறிஞர்கள் ஒருமித்த கருத்துக்களை கொண்டிருக்க வில்லை என்பதை காட்டுகின்றது. பின்வரும் அட்டவணையில், கலைத்திட்டம் பற்றிய பல வரைவிலக்கணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கலைத்திட்டம் தொடர்பான சில தெரிவு செய்யப்பட்ட வரைவிலக்கணங்கள்
  1. கல்விக் குறிகோள்களை  அடைவற்காக பாடசாலை மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அனுபவத் தொகுதியின் கூட்டுச் சேர்க்கை கலைத்திட்டம் ஆகும்.
  2. ஒரு நாட்டின் தேசிய இலக்குகளை அடைந்து கொள்ளவும் அங்குள்ள சமூகத்தில் வாழும் நபரொருவர் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் சவால்களை சமாளிக்கவும்அறிவு,திறன், மனப்பாங்கு சிறந்த ஆளுமையுடைய சிறந்த பிரஜையாக உருவாக்கவும் வேண்டியும்  திட்டமிடப்படுகின்ற கல்வி அனுபவங்களின் சேர்வை கலைத்திட்டம் ஆகும்.
  3. கலைத்திட்டம் எனின் மாணவர்களுக்கான அறிவை பெற்றுகொள்வதற்காக சமூகத்தின் ஒரு சிலரால் தொகுத்தளிக்கப்பட்ட கல்வியனுபவங்காளாகும் (போசவ் 1961)  
  4. தனது ஆற்றல்களை உச்சளவில் வெளிப்படுத்தி திட்டவட்டமான கல்வித் தேர்ச்சிகளை அடைவதற்காக மாணவர்களுக்கு வழி காட்டுகின்ற பாடசாலையால் திட்டமிட்ட கற்றல் அனுபவங்கள் ஆகும். (நிஸ்வி எவன்ஸ் 1967)
  5. முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கற்றல் பேறுகளை அடைவற்கு மாணவர்களை நடாத்தி செல்ல எந்தவொரு பாடசாலையும் முன்கூட்டியே தயாரித்துக் கொள்ளும் அனைத்து செயற்பாடுகளும் கலைத்திட்டம் ஆகும். (இன்லோ 1967)
  6. வினைத்திறனான வகையில் செயற்படுத்தக் கூடிய கல்வித் திட்டங்களின் பண்புகளை கொண்ட கல்வி கோட்பாடுகளை தொகுக்கும் முயற்சியாகும் (லோரன்ஸ் ஸ்ரேன்ஹவுஸ் 1975)
  7. பாடசாலையின் உள்ளே அல்லது வெளியே குழுவாகவோ தனித்தனியாகவோ ஆசிரியருடன் அல்லது ஆசிரியர் இன்றி பெற்றுக்கொள்ளக் கூடியவாறு பாடசாலையினால் திட்டமிட்டு வழிநடத்தப்படும் சகல விதமான அனுபவங்களும் கலைத்திட்டம் ஆகும்.  (ஜே.என்.கேர் 1988)
  8. ஆரம்பமும் இறுதியும் கொண்ட கிரமமாக ஒருங்கிணைக்கபட்ட அனுபவங்களின் கூட்டாகும் (கொன்ராட்  1978)
  9. மாணவர்களுக்கு கல்விக் குறிகோள்களை அடைய/பெறுபேறுகளை அடைய திட்டமிட்ட பிரயோகரீதி யிலான வேலைத்திட்டமொன்றாகும் (ஹர்ஸ்ட்)
  10. பாடசாலை வழிகாட்டலின் கீழ் நிறைவு பெரும் சகல கற்றல் செயற்பாடுகளும் அனுபவங்களும் கலைத்திட்டம் ஆகும்.  (ரில்வீனும் சூலரும்)



கலைத்திட்ட  வரைவிலக்கணங்களில் உள்ள எழுவினாக்கள்

மேலே  எடுத்துக்காட்டப்பட்ட  பல வரைவிலக்கணங்களைக் கண்டு சில வேளைகளில் நீங்கள் குழப்பம் அடையக்கூடும். எனினும், இவ்வாறு பல வரைவிலக்கணங்கள் கலைத்திட்டதுக்கு இருப்பதில் தவறில்லை. கலைத்திட்டம் என்பதற்கு காணப்படும் பல வரைவிலக்கணங்கள் , இத்துறையின் சிறந்த இயங்குநிலையினை  (dynamism of the field) எடுத்துக் காட்டுகிறது.  ஏனெனில், இது கலைத்திட்டம் திட்டமிடப்படுகின்ற  சமூகத்தின்    தத்துவரீதியான நம்பிக்கைகளையும், மனிதனின் கற்றல், கற்பித்தல் உத்திகள், அரசியல் அனுபவங்கள் மற்றும் கலாச்சார பின்னணி கருத்துருக்களை பிரதிபலிக்கிறது என Ornstein and Hunkins, (1998) கூறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  பல வரைவிலக்கணங்கள் காணப்பட்ட போதிலும் அவை:

  • மாணவர்கள் எதனை அறிந்து இருக்க வேண்டும் (அறிவு/உள்ளடக்கம்),
  • எவற்றை செய்ய இயலுமானவர்களாக இருத்தல் வேண்டும் (திறன்கள்/தேர்ச்சிகள்),
  • எவ்வாறு கற்பிக்கப்படல் வேண்டும் (கற்றல் கற்பித்தல் முறை),
  • எவ்வாறு அவை அளவிடப்படல் வேண்டும் (கணிப்பிடும் மதிப்பிடும்)
  • மற்றும் எவ்வாறு கல்வி முறைமை ஒழுங்கமைக்கப்படல் வேண்டும் (சூழமைவு)

என்பன போன்ற பொதுவான விடயங்களை உணர்த்தி நிற்கின்றன என்பதை நாம் இலகுவில் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.  எனினும், கலைத்திட்ட வரைவிலக்கணங்களை ஒவ்வொன்றாக எடுத்து தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது அவற்றில் சில பிரச்சினைகள் இருப்பதை காண முடியும். உதாரணத்துக்கு இங்கே ஒரு சில வரைவிலக்கணங்களை எடுத்து நோக்குவோம்:
வரைவிலக்கணம் 1: கலைத்திட்டம் என்பது   இலக்கணம் தர்க்கம், சொல்லாட்சி, கணிதம், மற்றும், சிறந்த அத்தியாவசிய அறிவைக் கொண்டுள்ள  மேற்கத்திய உலகின் மிக பெரிய புத்தகங்கள் போன்ற'நிரந்தர' பாடங்களைக் கொண்டதாகும் (Curriculum is such ‘permanent’ subjects as grammar, reading, logic, rhetoric, mathematics, and the greatest books of the Western world that best embody essential knowledge) . இந்த வரைவிலக்கணத்திற் குறிப்பிட்டது போன்று நிரந்தர பாடங்களைக் கொண்ட கலைத்திட்டங்களை அன்மைக்காலத்திலும்  காண முடிந்தது (உ+ம்: 1988  இன் ஐக்கிய இராச்சியத்தின் கலைத்திட்டம்)
இந்த வரைவிலக்கணத்தின் படி கலைத்திட்டம் ஒரு சில பாடங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றது. இங்கு எது கற்பிக்கபடுகிறதோ அதுவே கற்கப்படுகிறது எனும் எடுகோள் எடுக்கப்படுகிறது (what is studied is what is learned). மேலும், அறிவில் ஏற்படும் மாற்றம், அதனால் கலைத்திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை.
வரைவிலக்கணம் 2: சமகால சமூகத்தில் வாழ்வதற்காக மிகப் பயனுள்ள பாடங்களே கலைத்திட்டம் ஆகும் (Curriculum is those subjects that are most useful for living in contemporary society). இந்த வரைவிலக்கணத்தின்படி, சமூகத்தினுள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தற்கால பிரச்சினைகளின் அடிப்படையில் கலைத்திட்டம் தெரிவு செய்யப்படுகிறது. எனினும், பாடத் தெரிவில் மாணவர்கள் தமக்கு முக்கியம் எனக் கருதும் பாடங்களை தெரிவுசெய்வது பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. அத்துடன் சமகாலம் கருத்திற் கொள்ளப்படுகிறதே தவிர நீண்டகால தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், பாடசாலைகளும் மாணவர்களும் நிலவும் சமூகத்திற்கு இசைவாக்கம் கொள்ள எதிர்பார்ர்கப்படுகின்றதே அன்றி சமூகத்தினை மேம்படுத்த இங்கு கவனம் செலுத்தப்படவில்லை.
 வரைவிலக்கணம் 3: பாடசாலை பொறுப்பான, திட்டமிடப்பட்ட அனைத்து கற்றல்களும் கலைத்திட்டமாகும் (curriculum is all planned learnings for which the schools is responsible). இந்த வரைவிலக்கணம் திட்டமிடப்பட்ட கற்றலுக்குள்  மட்டுப்படுத்தப்படுகிறது. இத்திட்டமிடப்பட்ட கற்றல் ஒருவேளை விருப்புக்குரிய கற்றல் அல்லாமல் இலகுவாக அடையப்படக்கூடியதாக இருக்கலாம். மேலும் எந்த அடிப்படையில் பாடசாலைகள் குறிப்பிட்ட சில கற்றல்களை தெரிவு செய்து ஏனையவற்றை புறக்கணித்துவிட்டு எங்கனம் பொறுப்பாக இருக்க முடியும்? திட்டமிடப்படாத கற்றல்கள் இங்கு உண்மையில் தவிர்க்கப்படுகின்றதா? என்பன போன்ற   என்ற வினாக்கள்  எழுகின்றன.
வரைவிலக்கணம் 4: பாடசாலைகளின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்கள் அனைத்து அனுபவங்களை கற்பதே கலைத்திட்டமாகும் (Curriculum is all the experiences learners have under the guidance of school). இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம், அனுபவங்கள் அனைத்தும் கலைத்திட்டம் என்பதாகின்றது. இதில் எவை விருப்புக்கு உரியவை எவை தேவையற்றவை எனத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது பாடசாலைகளின் பணிகளை விரிவாக்குவதுடன் சத்தியமற்றதாக்குகின்றது. இங்கு சகல அனுபவங்களும் (திட்டமிடப்பட்ட மற்றும் திட்டமிடப்படாத அனுபவங்கள் அனைத்தும்) கலைத்திட்டமா? எனும் வினா எழுகின்றது.
வரைவிலக்கணம் 5: முழுமையான கற்றல் அனுபவங்களை கலைத்திட்டம் குறிகின்றது. இதன் மூலம் பல்வேறு கற்றல் தளங்களில் பொதுத்  திறன்கள் மற்றும் அறிவுகளை  மாணவர்கள்  அடைந்து கொள்வர் (Curriculum is the totality of learning experiences provided to students so that they can attain general skills and knowledge at a variety learning sites). இவ்வரைவிலக்கணத்தில் கற்பித்தலை விட கற்றலுக்கு முக்கியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக பாடசாலைகளில் மட்டுமன்றி அதற்கு வெளியே உள்ள தளங்களில் இருந்தும் அறிவு, திறன்களை கற்பதை இது உணத்துகிறது. எனினும், இவ்வரைவிலக்கணம் குறுகிய தொழிநுட்ப-செயற்பாட்டு (கடமைவாதி/செயற்பாட்டுவாதி) அணுகுமுறைக்கு (technical-functionalist approach) கலைத்திட்டத்தை எடுத்துச் செல்கிறது. இதனால், அனாவசியமான அதிகளவிலான பேறுகளையும், உயரளவிலான திட்டவட்ட முடிவுகளையும் இனங்காண வேண்டியிருக்கும்.

வரைவிலக்கணம் 6: மாணவர்கள் கணனிகள் மற்றும் அதன் பல்வேறு வலையமைப்புக்களில் இருந்து கட்டியெழுபுகின்ற விடயங்கள் கலைத்திட்டமாகும். (Curriculum is what the student constructs from working with the computers and its various networks, such as Internet). நிச்சயமாக, இது ஒரு நவீன கால வரைவிலக்கணமாகும். ஒவ்வொருவரின் வீட்டிலும், பாடசாலையிலும், காரியாலயங்களிலும், கணனிகள் காணப்படுவதுடன் மாணவர்களும் கணனிகள் தமது சூழலில் உள்ள ஓர் இன்றியமையாப் பொருள் என புலக்காட்சியைக் கொண்டுள்ளனர்   என்ற எடுகோளினை இது கொள்கிறது. மிக கிட்டிய எதிர்காலத்தில், இலத்திரனியல் சாதனங்கள்/வளங்களினை மாணவர்கள் இலகுவாகப் பெறக்கூடியதாக இருந்தாலும், இவற்றை சகல மாணவர்களும் சம அளவில் கொண்டிருப்பார்கள் என்று கூற முடியாது.

வரைவிலக்கணம் 7: அதிகாரத்தை கேள்வி கேட்பதும் மானிடத்தின் நிலைமைகளுக்கு சிக்கலான பார்வைகளை தேடுவதுமே கலைத்திட்டமாகும் (Curriculum is the questioning of authority and the searching for complex views of human situations)இது சோக்கிரட்சின் கோட்பாட்டை நினைவுறுத்துகிறது. எனினும் பின்நவீனத்துவ சிந்தனைகளுடன் இந்த வரைவிலக்கணம் முரண்படுகின்றது.
வரைவிலக்கணம் 8:வாழ்க்கையில் மாணவர்கள் கொண்டுள்ள சகல அனுபவங்களும் கலைத்திட்டம் ஆகும் (Curriculum is all the experiences  that learners have in the course of living).  இந்த வரைவிலக்கணம், கலைத்திட்டத்தில்  தனியாள் சமூகத் தன்மையில் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இது, பாடசாலையில் என்ன நடபெறுகின்றது, வாழ்க்கையில் பொதுவாக என்ன நடைபெற வேண்டும் என்பனவற்றுக்கு இடையில் எந்தவொரு  வேறுபாட்டையும் சுட்டிக் காட்டவில்லை. இவ்வரைவிலக்கணத்தின்படி, கலைத்திட்டத்தில் பாடசாலைகளுக்கு எந்தவொரு சிறப்பான பொறுப்புக்களும் இல்லை. இதனால், கல்விசார் அனுபவங்களுக்கும் வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடையில், என்ன தொடர்புள்ளது என்ற வினாவினை எழுப்புகிறது.


கலைத்திட்ட  வளர்ச்சி நிலைகள்
கலைத்திட்ட வரைவிலக்கணங்களை நன்கு ஆராயும் ஒருவர், காலரீதியாக வெவேறு வளர்ச்சிப்படிகளை கலைத்திட்டத்தில் இனங்கண்டு கொள்ளுவார். இதன் படி கலைத்திட்டமானது பின்வரும் நான்கு வளர்ச்சிகளைக் கொண்டுள்ளது:
  • ஒரு பாட விடயமாக கலைத்திட்டம் (Curriculum as a subject matter)
  • ஒரு திட்டமாக கலைத்திட்டம் (Curriculum as a Plan)
  • ஓர் அனுபவமாக கலைத்திட்டம் (Curriculum as an Experience)
  • ஒரு பேறாக கலைத்திட்டம் (Curriculum as an Outcome)

ஒரு பாட விடயமாக கலைத்திட்டம் (Curriculum as a subject matter)
புராதன காலங்களில் கலைத்திட்டம் பாடவிடயமாகவே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலங்களிலும் இதனை சில சமூகக் கட்டமைப்புக்களில் காணலாம்.  தகவலானது, ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு என்ற வகையில்  ஒரு பரம்பரையில் இருந்து மற்றொரு பரம்பரைக்கு கடத்தபடுவதே இங்கு கருத்திற் கொள்ளப்படுகிறது.  இத்தகைய கலைத்திட்டத்தில், அத்தியவசியமான பாடங்கள் அல்லது நூல்களின் திரட்டுக்கள் காணப்படும். அத்தியவசியமான பாடங்களாக இலக்கணம், வாசிப்பு, சொல்லாட்சி மற்றும் தர்க்கம், கணிதம் மற்றும் இரண்டாம்நிலைக்கல்விற்கான மேற்கத்திய உலகில் உள்ள மிக பெரிய புத்தகங்கள் என்பன கலைத்திட்டத்தில்  உள்ளடக்கப்ப்படும். வேறொரு அறிஞரின் கருத்தின்படி தாய்மொழி, இலக்கணம், இலக்கியம், எழுத்து; கணிதம் அறிவியல், வரலாறு; மற்றும் வெளிநாட்டு மொழி போன்ற ஐந்து  அத்தியவசியமான பாடங்கள்  இதில் உள்ளடக்கப்படும். ஆரம்ப காலங்களில் வந்த கலைத்திட்டம் தொடர்பான வரைவிலக்கணங்களில் பாடவிடயம் என்ற தொனி காணப்படுவதை அவதானிக்கலாம். உ+ம்: கலைத்திட்டம் என்பது, பல்வேறு துறைகளில் இருந்து வரும் அறிவினை உள்ளடக்குவதாக இருத்தல் வேண்டும்
(Curriculum should consists entirely of knowledge that comes from the disciplines - Philip Phenix).
ஒரு திட்டமாக கலைத்திட்டம் (Curriculum as a Plan)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் கலைத்திட்டம் ஓர் திட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட பாரிய சமூக மாற்றங்களின் காரணமாக, கலைத்திட்டமானது பாடங்களாக அல்லாமல் நோக்கம் அல்லது இலட்சியம் உடையதாக (intention rather than subject) அமைக்க வேண்டும் என்ற சிந்தனை காணப்பட்டது .  வில்லியம் அலெக்சாண்டர் (William Alexander ) டைய்லர் (R.Tylor) டேனியல் மற்றும் தன்னர்  (Danial & Laura Tanner) ஹில்டா டாபா (Hilda Taba) மேக்நீள் (John McNeil) போன்றோரின் வரைவிலக்கணங்களில் இது செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம். உ+ம்: தமது கல்விசார் இலக்குகளை அடைந்து கொள்வற்காக பாடசாலைகளினால் திட்டமிட்டு வழிப்படுத்தப்படும் மாணவர்களின் கற்றல் அனைத்தும் கலைதிட்டமாகும் (The curriculum is all of the learning of students that is planned by and directed by the school to attain its educational goals - Ralph Tylor 1902-1994)
ஓர் அனுபவமாக கலைத்திட்டம் (Curriculum as an Experience)
இந்த சிந்தனையினை இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து காண முடிகின்றது. இச்சிந்தனை முகாமில்  உள்ளோர் மாணவர்களின் அனுபவங்களை முக்கியத்துவப்படுத்துகின்றனர். உ+ம்: பாடசாலையின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் பெறும் சகல அனுபவங்களும் பொதுவாக கலைத்திட்டமாகக் கருதப்படும் (the curriculum is generally considered to be all of the experiences that learners have under auspices of the school - Ronald Doll).

ஒரு பேறாக (தயாரிப்பாக) கலைத்திட்டம் (Curriculum as an Outcome)
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளில் இருந்து இச் சிந்தனை கலைத்திட்டத்தில் தோற்றம் பெற்றது.  உலகளாவிய ரீதியில் நிதி தொடர்பான அக்கறைகள் நிலவியதால், கலைத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் ஒரு தயாரிப்புப் பொருளாக கருதப்படுகின்றனர். இதன்படி, முற்கூட்டியே பேறுகள் இனங்காணப்பட்டு அதன்படி கலைத்திட்டம் ஒழுங்கமைக்கப்படுகிறது. உ+ம்: பாடசாலை பொறுப்பாக உள்ள திட்டமிட்ட கற்றல் பேறுகள் கலைத்திட்டமாகும். (The curriculum is a planned learning outcome for which the school is responsible - James Popham and Hendry Baker)

சிறந்த கலைத்திட்டமொன்றின் பண்புகள்  

மேலே எடுத்துக்காட்டப்பட பல்வேறு விளக்கங்களினூடாக, கலைத்திட்டமொன்றின் பண்புகளை ஒருவர் ஊகிக்க  முடியுமாக இருக்கும். எனினும் சிறந்த ஒரு கலைத்திட்டம் பின்வரும் பண்புகளைக் கொண்டு காணப்படும்:
கலைத்திட்டமானது தொடர்ச்சியாக மாற்றமடைவதாக இருக்கும். (The Curriculum is continuously evolving)..
கலைத்திட்டமானது மக்களின் தேவைகளின் அடிப்படையில் காணப்படும் (The Curriculum is based on the needs of the people)
கலைத்திட்டமானது சனநாயகமானதாக உணரப்படும் (The Curriculum is democratically conceived)
கலைத்திட்டமானது நீண்டகால முயற்சியின் விளைவாகக் காணப்படும் (The Curriculum is the result of a long-term effort)
சிக்கலான தகவல்களினைக் கொண்டதாக கலைத்திட்டம் காணப்படும் (The Curriculum is a complex of details).
பாடங்களை தர்க்கரீதியான வரிசையில் தருவதாக கலைத்திட்டம் காணப்படும்  (The Curriculum provides for the logical sequence of subject matter)
சமூகத்தின் ஏனைய நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்த வகையிலும், ஒத்துழைத்தும் கலைத்திட்டம் காணப்படும் (The Curriculum complements and cooperates with other programs of the community).  
கலைத்திட்டம், கல்விசார் தரத்தினைக் கொண்டிருக்கும் (The Curriculum has educational quality)  
கலைத்திட்டம் நிருவாக ரீதியான நெகிழ்வினைக் கொண்டிருக்கும் (The Curriculum has administrative flexibility).


இக்கட்டுரை அகவிழி (யூலை 2015) இல் பிரசுரமாகியது  

கலைத்திட்ட அணுகுமுறைகள்

கலைத்திட்ட அணுகுமுறைகள்


Curriculum Approaches

கலாநிதி ப.மு. நவாஸ்தீன்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்

எவையேனும் ஒன்றைக் கையாளும் விதம், ஏதேனுமொன்றைப் பற்றி சிந்திக்கும் தன்மை, அல்லது ஒன்றைச் செய்துமுடிக்கப் பயன்படுத்தும் முறையினை “அணுகுமுறை” எனக் கூறலாம். ஏதாவது ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் ஒரு விடயத்தைப் பற்றிய முழு விளக்கத்தைப் பெற்றுகொள்ள, அல்லது அது பற்றிய அனுபவத்தைப் பெற அல்லது ஒன்றை செய்துமுடிக்க எடுக்கும் பூர்வாங்க நடவடிக்கையையும் “அணுகுமுறை” எனலாம். ஒன்றைப்பற்றிய ஒருவரின் அணுகுமுறையில், அவர் கொண்டுள்ள அறிவு, திறன், மனப்பாங்குகள், அவரது புலக்காட்சிகள், விழுமியங்கள், மற்றும் உண்மை உலகினை அவர் நோக்கும் விதம் போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்தி அவரது அணுகுமுறையில் அவை பிரதிபலிக்கின்றன. இவை ஆளுக்கு ஆள் வேறுபடும். இந்தவகையில், ஓர் துறைசார்ந்த அணுகுமுறையினை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு துறைசார்ந்த வகையில், அதில் காணப்படும் எண்ணக்கருக்களை  அறிஞர்கள், துறைசார் வல்லுனர்கள் கையாளும் விதம், நோக்கும் விதம், சித்திக்கும் விதம் போன்றன அத்துறை சார்ந்த அணுகுமுறை எனப்படுகிறது.

கலைத்திட்ட அணுகுமுறை என்றால் என்ன?

மேலே கூறப்பட்ட அணுகுமுறைக்கான விளக்கங்களின் அடிப்படையில் கலைத்திட்ட அணுகுமுறை என்பதை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம்:
கலைத்திட்டமொன்றைக் கையாளும் விதம், அல்லது கலைத்திட்டமொன்றை திட்டமிடும்/உருவாக்கும்/வடிவமைக்கும்/அமுலாக்கும் முறைகள் அல்லது அது பற்றிச் சிந்திக்கும் முறையினை கலைத்திட்ட அணுகுமுறை எனலாம். கலைத்திட்ட அணுகுமுறை என்பதற்கு Ornstein மற்றும் Hunkins பின்வருமாறு விளக்கத்தைத் தருகின்றனர்.

கலைத்திட்ட அடிப்படைகள் (தத்துவங்கள், வரலாறு பற்றிய நோக்கு, உளவியல் மற்றும் கற்றல் கோட்பாடுகள் பற்றிய நோக்கு, சமூக எழுவினாக்கள் பற்றிய நோக்கு) கலைத்திட்ட ஆட்சிப் பரப்புக்கள் (துறையொன்றின் பொதுவான , முக்கியமான அறிவு) மற்றும் கலைத்திட்டம் தொடர்பான கோட்பாடு மற்றும் நடைமுறை தத்துவங்கள் ஆகியவற்றை ஒருவர்  முழுமையாக  (Holistic) நோக்கும் நிலையினை அல்லது ஒருவரின் பேர்நோக்குநிலையினை  (Meta Orientation)  பிரதிபலிப்பதே கலைத்திட்ட அணுகுமுறை ஆகும். கலைத்திட்ட அணுகுமுறையொன்றானது, கலைத்திட்ட விருத்தி, மற்றும் வடிவமைப்புப் பற்றிய ஒருவரின் நோக்குகளை வெளிப்படுத்துகின்றது. இந்த அணுகுமுறையில், கலைத்திட்ட திட்டமிடலில் மாணவர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர்களின் வகிபங்கு, கலைத்திட்ட நிபுணர்களின் வகிபங்கு, கலைத்திட்டத்தின் இலக்குகள், குறிக்கோள்கள், கவனத்திற் கொள்ளப்படவேண்டிய பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இத்தகைய அணுகுமுறைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகள் பல்வேறு அணுகுமுறைகளை தோற்றுவித்துள்ளது எனலாம்.

கலைத்திட்டத்துடன் தொடர்புபடும் நபர்கள், கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி,அமுலாக்கம், மதிப்பிடல் போன்றவற்றில் ஒன்று அல்லது பல அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதுண்டு. 

 கலைத்திட்ட அணுகுமுறைகளின் வகைகள்

கலைத்திட்ட வரலாற்றில் உருவாகிய அணுகுமுறைகளை இரு  பெரும் வகுதிக்குள் உள்ளடக்கப்படுகிறது.
  • விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான அணுகுமுறைகள். (Scientific/Technical approaches)
  • விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறைகள் (Non-Sceintifc/Non-Technical Approaches)

கலைத்திட்டத்தில் உள்ள பல்வேறு அணுகுமுறைகளையும் வேறுபடுத்தி நோக்கும் வகையிலேயே மேற்கண்டவாறான பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.
மரபு ரீதியான கல்விக் கோட்பாடுகளுடன் தொடர்புபட்ட வகையிலும், முறையான பாடசாலைகளைப் பிரதிபலிக்கும் வகையில், விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான கலைத்திட்ட அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இந்த அணுகுமுறைகள், positivist எனும் நேர்மறைவாதிகளினால் வரவேற்கப்படுகின்றன. மேலும் விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறைகள் கல்வியின் பரிசோதனைசார் தத்துவங்கள், கல்வி அரசியல் காரணங்களினால் உருவாகியதாக உள்ளன.
கலைத்திட்ட அணுகுமுறைளில் பின்வரும் ஐந்து வகைகள்  காணப்படுகின்றன.
  • நடத்தை சார் அணுகுமுறை (Behavioural Approach)
  •  முகாமைத்துவ அணுகுமுறை (Managerial Approach)
  • முறைமை/தொகுதி அணுகுமுறை (System Approach)
  • கல்விசார் அணுகுமுறை (Academic Approach)
  • மனிதத்துவ அணுகுமுறை (Humanistic Approach)

மேற்கண்ட அணுகுமுறைகளில் முதல் மூன்றும் (நடத்தை சார் அணுகுமுறை ,முகாமைத்துவ அணுகுமுறை, முறைமை/தொகுதி அணுகுமுறை) விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான கலைத்திட்ட அணுகுமுறைக்குள் நோக்கப்படுகின்றன. ஏனைய இரண்டும் (கல்விசார் அணுகுமுறை, மனிதத்துவ அணுகுமுறை) விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறையில் உள்ளடங்குகின்றன.

நடத்தை சார் அணுகுமுறை (Behavioural Approach)

கலைத்திட்டத்தில், மிகப் பழமையானதும், இன்னமும் செல்வாக்குடைய அணுகுமுறையாக இந்த நடத்தைசார் அணுகுமுறை காணப்படுகிறது. இந்த அணுகுமுறை சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் இருந்து தோற்றம் பெற்றதாக உள்ளது. ( Bobbitt இலிருந்து Charlors, Tylor மற்றும் Taba வரை). இந்த அணுகுமுறை ஒரு செயலும்-முடிவும் (Means-Ends Approach) கொண்ட அணுகுமுறை போன்ற வடிவம் பெறுகிறது. இந்த முறையினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் கலைத்திட்டங்கள் பின்வரும் பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளன.
  • கலைத்திட்ட விருத்திக்கு படிமங்கள் (Paradigms) மாதிரியுருக்கள் என படிமுறைகள் கொண்ட பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படும்.
  •  கட்டமைக்கப்பட்ட ஓர் திட்டமிடலுக்கு (Blueprint) ஏற்ப கலைத்திட்ட இலக்குகள், குறிக்கோள்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
  • இனங்காணப்பட்ட இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஏற்ப கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், செயற்பாடுகள் என்பன வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.
  • இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஏற்ப கற்றல்பேறுகள் தரப்பட்டு அவை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக, ஏறத்தாழ சகல நாட்டுக் கலைத்திட்டங்களிலும் இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகின்றது.

நடத்தை சார் அணுகுமுறை 

Frederick Taylor  என்பவரின் கருத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும்.   Efficiency எனும் வினைத்திறனை அடைந்துகொள்ளும் நோக்கிலான வணிக மற்றும் கைத்தொழில்துறை சார் சிந்தனைகளின் செல்வாக்கினாலும்,  Frederick Taylor  இன் விஞ்ஞான முகாமைத்துவ கோட்பாடுகளின் செல்வாக்கினாலும் நடத்தை சார் அணுகுமுறை தோன்றியது. Frederick Taylor, நேரம் (Time), இயக்கம் (Motion) ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சாலையொன்றின் விளைதிறனை பகுப்பாய்வு செய்தார். இதன்விளைவாக, தொழிற்சாலையில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும், அவரவரது தனிப்பட்ட வெளியீட்டுக்கு  (output) ஏற்ப ஊதியமளிக்கப்படல் வேண்டும் எனப்பட்டது. இது குறிப்பிட்ட நேரத்தினுள் ஒருவர் உற்பத்தி செய்த அலகுகளின் அடிப்படையில் கணிக்கப்படுவதாக இருந்தது. இத்தகைய அணுகுமுறை பாடசாலைகளிலும் efficient operation என 1920 களில் பாடசாலைகளில் அறிமுகமாகியது. இந்த அணுகுமுறையின் செல்வாக்குக்கு உட்பட்ட வகையில் முதலில் Bobbitt உம் பின்னர் Ralph Tyler இன் பங்களிப்புடன் நடத்தைசார் அணுகுமுறை கலைத்திட்டத்தில் அறிமுகமாயிற்று எனலாம்.  இந்த அணுகுமுறையானது கல்வியில், இலக்குகள்,குறிகோள்களுடன் தொடங்கும் கல்விசார் திட்டங்களுடன் தொடங்குவதாக இருக்கும். இவை கலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன் இவற்றுக்கு ஏற்ப குறித்துக் காடபடும் கற்றல் பேற்றின் அடிப்படையில் மாணவனது நடத்தை மாற்றம் இறுதியில் மதிப்பிடப்படுவதாக இருக்கும். மாணவனின் நடத்தையில் ஏற்படும் மாற்றமே கலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்டும் அடைவுமட்டமாக கருதப்படும்.

முகாமைத்துவ அணுகுமுறை     (Managerial Approach)

அமைப்புசார்ந்த கோட்பாட்டில் (Organizational theory) சுட்டிக் காட்டப்படுவது போல், பாடசாலையை ஓர் சமூகத்தொகுதியாக இந்த அணுகுமுறை கருதுகிறது. இந்த சமூகத்தொகுதியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலைத்திட்ட வல்லுனர்கள், நிருவாகிகள் குறிப்பிட்ட நியமங்கள், நடத்தைகள் ஆகியவற்றுக்கேற்ப இடைவினையாற்றுபவர்களாக இருப்பர். இந்த அணுகுமுறையின் கீழ் கலைத்திட்டங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள், கால அட்டவணைகள், இடம், வளங்கள், உபகரணங்கள், மற்றும் நபர்களுக்கு ஏற்ப திட்டமிடப்பதுவதாக இருக்கும். நடத்தைசார் அணுகுமுறை போன்றே இதுவும் திட்டம், நியாயிப்பு அடிப்படைகள், தர்க்கரீதியான படிமுறைகள் என்பனவற்றைக் கொண்டிருக்கும்.  இந்த அணுகுமுறையில் அதிகமாக கலைத்திட்டத்தின் மேற்பார்வை மற்றும்  நிருவாக விடயங்களே கருத்திற் கொள்ளப்படும். இந்த அணுகுமுறை 1950 – 1960 ஆகிய காலப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது.  இந்த அணுகுமுறையில் பாடசாலை அதிபர் கலைத்திட்டத் தலைவராகவும் போதனாத்  தலைவராகவும் காணப்படுவார். இவரே கொள்கைகளையும் முன்னுரிமை விடயங்களையும் உருவாக்கி மாற்றம் மற்றும் புத்தாக்கம் என்பன செல்ல வேண்டிய பாதையினை உருவாக்கி கலைத்திட்டம் மற்றும் கற்பித்தலை திட்டமிட்டு, ஒழுங்குபடுத்துபவராகக் காணப்படுவார். பாடசாலை நிருவாகிகள் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தை விட அதன் ஒழுங்கமைப்பு, அமுலாக்கம் என்பவற்றில் தான் அதிகம் அக்கறை கொண்டு இருப்பர். இவர்கள் பாட விடயம், கற்பித்தல் முறைமைகள் அவற்றுக்கான சாதனங்கள் என்பனவற்றை விட கலைத்திட்டதை மேலும் மேம்படுத்துவதிலேயே அதிகம் அக்கறை கொண்டிருப்பர். கலைத்திட்ட மேற்பார்வையாளர்கள் பின்வரும் வகிபங்குகளை கொண்டிருப்பர்:
1.     கல்வி இலக்குகளை உருவாக்க உதவுவர்
2.  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலைத்திட்டத்தை திட்டமிடுவர்
3.      தரங்களுக்கு ஏற்ப  நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைப்பர்
4.     வகுப்புகளுக்கான கால அட்டவணைகளை  அல்லது பாடசாலையின்  கலண்டரை திட்டமிடுவர்.
5.     தரங்களுக்கு அல்லது பாடப்பரப்புகளுக்கு ஏற்ப கலைத்திட்ட வழிகாட்டிகளை அல்லது ஆசிரியர் வழிகாட்டிகளை தயாரிப்பர்
6.     பாடநூல்களின் தெரிவுக்கும் மதிப்பீட்டுக்கும் உதவுவர்.
7.     ஆசிரியர்களை அவதானிப்பர்
8.     கலைத்திட்ட அமுலாக்கலில் ஆசிரியர்களுக்கு உதவுவர்
9.     கலைத்திட்ட மாற்றத்தையும் புத்தாக்கத்தையும் ஊக்கபடுத்துவர்.
10.   கலைத்திட்டம், கற்பித்தல் மதிப்பீடுக்கு நியமங்களை விருத்தி செய்வர்.

தொகுதி அணுகுமுறை:

 பொறிமுறையொன்றின் பாகங்களாக அல்லது ஒரு வலைப்பின்னலினை ஒன்றோடொன்று இணைக்கும் கூறுகளாக இணைந்து செயலாற்றும்  விடயங்களின் தொகுப்பினை தொகுதி எனலாம். அதேபோன்று முழுப் பாடசாலையின் மாவட்டமத்தின் அல்லது பாடசாலையின் பகுதிகள் ஒன்றோடொன்று எங்கனம் இணைந்து செயலாற்றுகின்றன  என்ற அடிப்படையில் இந்த அணுகுமுறை காணப்படுகின்றது. பாடசாலையொன்றில் உள்ள  அமைப்பு விளக்கப் படம்  (organizational chart) தொகுதி அணுகுமுறையிலே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கப்படம் பாடசாலை பணியாளர்களின் வரிசையினையும் அவர்களுக்குள் இடையிலான தொடர்பினையும் பாடசாலையொன்றில் தீர்மானங்கள் எங்கனம் மேற்கொள்ளபப்டுகிறது என்பதையும் எடுத்துக் காட்டும்.    பாடசாளியோன்றின் கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி, அமுலாக்கம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் இந்த அமைப்பு வரைபடத்தில் உள்ளவாறு தீர்மானங்கள் எடுக்கப்ப்டுமாயின் அதனை தொகுதி அணுகுமுறையிலான கலைத்திட்டம் எனலாம்.

மனிதத்துவ அணுகுமுறை (Humanistic Approach).

 1900 களில் காணப்பட்ட முற்போக்கான கல்வித் தத்துவம் மற்றும்  பிள்ளை நேய சிந்தனைகளின்  அடிப்படையில் இந்த அணுகுமுறை தோன்றியது எனலாம். இந்த அணுகுமுறையில் முறைமையான கலைத்திட்டத்துடன்  (அல்லது திட்டமிடப்பட்ட  கலைத்திட்டம்) முறைசாரா (மறைக்) கலைத்திட்டத்தினையும் இணைத்து நோக்குகின்றது.  இந்த அணுகுமுறையில் பிள்ளையின் முழு விருத்தி முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது. கலைத்திட்டமானது மாணவர்களை கருத்திற் கொண்டவாறே இந்த அணுகுமுறையில் திட்டமிடல் , அமுலாக்கம் செய்யப்படுகிறது.


கல்விசார் அணுகுமுறை (Academic Approach): 

சிலபோது இது மரபுரீதியான அல்லது அறிவு மைய அணுகுமுறை எனவும் இது அழைக்கப்படும். கலைத்திட்ட எண்ணக்கருக்களை , அதன் போக்குகளை  ஆராயவும் தொகுக்கவும் இந்த அணுகுமுறை முற்படுகிறது. கலைத்திட்ட திட்டமிடலில் கோட்பாடுகளையும் தத்துவ அடிப்படைகளையும் இது முக்கியப்படுத்துகிறது. Dewey (1916), Morrison (1926) மற்றும்  Bode (1927)  ஆகியோர்களின்  தத்துவ மற்றும் அறிவுசார்ந்த  பங்களிப்புகளின் செல்வாக்கினை இந்த அணுகுமுறை கொண்டுள்ளது. கலைத்த்திட்டத்தின் வரலாற்று விருத்தி, கலாசார கேள்விகள், தத்துவக் கருத்துக்கள், ஆகியவற்றையும் கலைத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளையும் போக்குகளையும் இந்த அணுகுமுறை பகுப்பாய்வு செய்து தொகுக்க முற்படுகிறது.  

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...