ஆசிரியர்களுக்கான தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு (TPCK)
கலாநிதி
எப்.எம்.நவாஸ்தீன்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த
பல்கலைக்கழகம்
அறிமுகம்
“கற்பித்தல்
என்பது உயர்வானதொரு வாண்மைத் தொழிலாகும். அது ஒரு தனி நபரின் குணவியல்புகள்,
திறமைகள் மற்றும் எதிர்காலத்தினை வடிவமைகின்றது. என்னை ஒரு சிறந்த ஆசிரியனாக
மக்கள் நினைவில்வைத்துக் கொள்வாரெனில் அதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய
கௌரவமாகும் - ஏ. பி. ஜே. அப்துல் கலாம்”
கற்பித்தலே ஆசிரியரின்
மிகப் பிரதான பணியாகும். ஆசிரியரின் கற்பித்தல் வகிபங்கு பல்வேறு காலகட்டங்களினூடக
நிலைமாற்றம் பெற்று வந்துள்ளது. பாடங்களை நெட்டுரு செய்து பாடவிடயங்களை ஒப்புவிப்பது இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
தற்காலத்தில் மாணவர்களை கற்றலுக்கு தயார்படுத்தும் வகையில் தமது கற்றல் கற்பித்தல்
பணிகளை மேற்கொள்ளவே ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்கள்
தம்மை பலவழிகளில் தயார் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது. மாணவர்கள் மத்தியில்
சிறந்த ஆசிரியராக தம்மை நிலைநிறுத்தி கொள்ளவதற்கு, கால மாற்றத்திற்கு ஏற்ப
ஆசிரியர் பணியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வது மிக
முக்கியமாக உள்ளது. இந்தவகையில் கற்றலை எளிதாக்குதலே இன்று ஆசிரியர்களிடம்
எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான பணியாக உள்ளது. இதற்காக கற்றல் கற்பித்தல்
செயன்முறையில் பல்வேறு அறிவு, திறன்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை உடையவர்களாக
உள்ளனர். அவற்றில் கல்வித் தொழினுட்பமும் ஒன்றாகும்.
ஆசிரியர்கள்
தமது கற்றல் கற்பித்தல் செயன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் அறிந்திருக்க வேண்டிய பல விடயங்கள்
காணப்படுகின்றன. தொழினுட்பத்தினை ஒன்றிணைக்கும் போது அவர்கள் கொண்டிருக்க வேண்டிய
முக்கியமானதோர் அறிவாகக் கருதப்படும் TPCK
என ஆங்கிலத்தில் சுருக்கமாக அறியப்படும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு
தொடர்பாக இக்கட்டுரை விளக்குகின்றது.
ஆசிரியர்கள்
தமது கற்பித்தல் தொடர்பாக சிக்கலானதும், பன்முகத்தன்மை
கொண்டதும், வரையறுக்கப்பட்ட அறிவினை கொண்டுள்ளனர். இதில்
பின்வரும் அறிவுகள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் கொண்டிருக்க தேவையுடையவர்களாக
உள்ளனர்:
·
உள்ளடக்க அறிவு – Content Knowledge (CK)
·
போதனா அறிவு – Pedagogical Knowledge (PK)
·
தொழினுட்ப அறிவு – Technological Knowledge (TK)
மேற்கூறப்பட்ட
மூன்று வகையான அறிவுகளையும் இணைத்த வகையில் கொண்டிருக்க வேண்டிய அறிவே TPCK எனப்படும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு ஆகும். இவ்வறிவுகள்
தனித்தும், ஒன்றோடு ஒன்று இணைந்தும் தொழிற்படுவதாக
காணப்படும். உள்ளடக்க அறிவு (CK), போதனா அறிவு (PK), தொழினுட்ப அறிவு (TK) என்பன ஒன்றோடு ஒன்று
இடைவினைப்படும் போது பின்வரும் புதிய அறிவுகள் தோற்றம் பெறுகின்றன:
·
போதனா உள்ளடக்க
அறிவு (PCK)
·
தொழினுட்ப உள்ளடக்க
அறிவு
(TPK)
·
தொழினுட்ப போதனா
அறிவு (TCK)
·
தொழினுட்ப போதனா
உள்ளடக்க அறிவு (TPCK)
இந்த
அறிவுகளின் இடையே ஏற்படும் இடைத் தொடர்புகளும் அவற்றினால் உருவாக்கம் பெறும்
அறிவுகளையும் உரு1
விளக்கிக் காட்டுகிறது
உரு 1. தொழினுட்ப போதனா உள்ளடக்க
அறிவு
1.
தொழினுட்ப அறிவு: ஆசிரியர்கள் தமது
கற்பித்தல் செயன்முறையினை வினைத்திறனை அதிகரிக்கவும், தாம்
எடுத்து கூற விரும்பும் செய்திகளை இலகுவாக மாணவர்களிடம் கொண்டு செல்ல பல்வேறு
கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்த
வேண்டி உள்ளனர். இதனை கற்பித்தல் அல்லது கல்வி தொழினுட்பம் என்கிறோம். ஆசிரியர்கள்
வகுப்பறையில் காணப்படும் கரும்பலகை, வெண்கட்டி, பாடநூல்
போன்ற ஆகத்குறைந்த மட்டத்திலான கற்பித்தல்
தொழினுட்பங்கள் தொட்டு, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயன்பாட்டில் உள்ள இணையம், டிஜிட்டல் காணொளிகள், ஊடாடும் வெள்ளைப் பலகைகள், பல்வேறு மென்
பொருட்கள், திறன் செல்லிடத் தொலைபேசியில் பயன்படுத்தக் கூடிய
பல்வேறு Apps எனப்படும் செயலிகள் வரையிலான நவீன
தொழினுட்பங்கள் பற்றிய அறிவினையே தொழினுட்ப அறிவு என இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் , தமது கற்றல் கற்பித்தலில் சிறந்து விளங்க இந்த தொழினுட்ப அறிவினைப்
பெற்றவர்களாவும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவற்றைப் பிரயோகிக்கும் ஆற்றல்களை
பெற்றிருப்பதும் முக்கியமாகின்றது. ஆனால் விரைந்து மாறி வரும் உலகில் வகுப்பறையில்
பயன்படுத்தக் கூடிய இக்கற்பித்தல் தொழினுட்பங்களும் விரைந்து மாற்றம் கண்டு
வருகின்றது. இன்று அதிகமாக திறன் வகுப்பறைகள்
நாட்டின் நாலா புறங்களிலும் அமைக்கப்பட்டு வருவதும், ஆசிரியர்கள் தமது
கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான நவீன தொழினுட்பங்கள் பற்றிய அறிவும், அவற்றை கையாளும் திறன்களையும் பெற்றிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
2.
உள்ளடக்க அறிவு: ஆசிரியர்கள் தாம்
கற்பிக்கும் பாடத்தில் அல்லது பாடங்களில் போதிய அறிவினைப் பெற்று இருப்பது
உள்ளடக்க அறிவு என கூறப்படுகிறது. ஆசிரியர் தாம் கற்பிக்கப் போகும் பாட அலகில் உள்ள
மையக் கருத்துக்கள், பல்வேறு எண்ணக்கருக்கள், கோட்பாடுகள்,
குறித்த பாட அலகுடன் தொடர்பான பல்வேறு செயன்முறைகள் பற்றி போதிய அறிவினை கொண்டிராமல் சிறந்த முறையில்
கற்பித்தலை மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாவே, ஆசிரியர் தொடர்பான முன் சேவை பயிற்சிகளில்
உள்ளடக்க அறிவுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. போதிய உள்ளடக்க அறிவு
இல்லாத ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடங்களினை தவறான எண்ணக்கரு விளக்கம்
ஏற்படும் வகையில் கற்பித்து விடும் அபாயம் உள்ளது.
3.
போதனா அறிவு (PK): ஆசிரியர்கள்
தமது வாண்மையில் சிறந்து விளங்க போதிய போதனா அறிவினையும் பெற்றவர்களாவும் இருத்தல்
வேண்டுமாகிறது. பல்வேறு கற்றல் கற்பித்தல் முறைகள், வகுப்பறை
முகாமைத்துவம், கணிப்பீடும் மதிப்பீடும், பாடவேளை திட்டமிடல், மாணவர் எவ்வாறு கற்கின்றனர் என்பது போன்ற இன்னோரன்ன
விடயங்களில் அறிவு கொண்டிருப்பது போதனா அறிவு எனப்படுகிறது.
4.
போதனா உள்ளடக்க அறிவு: (PCK):
போதனா அறிவும், உள்ளடக்க அறிவும்
ஒருங்கிணையும் போது உருவாக்கம் பெறுகின்ற அறிவே போதனா உள்ளடக்க அறிவாகும்.
ஆசிரியர் தான் கற்பிக்க போகும் பாட விடயத்தை கற்பித்தல் செயலொழுங்குடன் இணைக்க போதனா உள்ளடக்க அறிவு
அவசியமாகின்றது. ஒருவர் கற்பிக்கப் போகும் பாடஉள்ளடக்கங்களில் மாத்திரம் போதிய
அறிவை பெற்றிருப்பது போதாது. அவற்றை, எங்கே, எப்போது, எப்படி, எந்தளவு,
யாருக்கு கற்பிக்க வேண்டும் என்ற அறிவும் இருத்தல் அவசியமாகின்றது. இந்த PCK எனப்படும் எண்ணக்கருவை சுல்மன் (Shulman, 1986)
என்பவரே அறிமுகப்படுத்தினார். சிறந்த போதனா அறிவையும் உள்ளடக்க அறிவினையும்
கொண்டுள்ள ஆசிரியர்கள் தமது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சிறந்து
விளங்குகின்றனர்.
5.
தொழினுட்ப உள்ளடக்க அறிவு: (TCK):
பாட விடயத்தில் போதிய விளக்கங்களை கொண்டுள்ள ஒருவர், அதனை கற்பிப்பதற்கு தொழினுட்பத்தை நாட வேண்டியுள்ளது. ஏனெனனில்,
கற்பித்தல் எனபது ஒரு வகையில் ஒரு தொடர்பாடல் செயன்முயாகும். தொடர்பாடல்
செயன்முறையில் செய்தி அனுப்புவர் மற்றும் செய்தியை பெறுபவர் என இரு தரப்பினர்
காணப்படுவர். இங்கு செய்தியை வினைத்திறன் மிக்க வகையில் அனுப்புவதற்கு பொருத்தமான
தொடர்பாடல் ஊடகம் தேவையாகின்றது. தொடர்பாடலினை ஒந்த செயன்முறையாக கற்றல்
கற்பித்தல் செயன்முறையும் காணப்படுகின்றது. வகுப்பறையில் ஆசிரியர் தகவல்
அனுப்புவராக காணப்பட மாணவர்கள் தகவல்களை பெறுபவர்களாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் தனது பாட விடயம் என்னும் தகவலை சிறந்த முறையில் மாணவர்களிடம்
வழங்க பல்வேறு தொழினுட்ப சாதனங்களை கற்பித்தல் ஊடகங்களாக பயன்படுத்த வேண்டி இருக்கும்.
எனே, பாட விடயம், கற்கும் மாணவர்களின் பண்புகள், வகுப்பறை சூழமைவுகள் எனப் பலவற்றை கவனத்தில் கொண்டு தொழினுட்ப தெரிவுகளை
மேற்கொள்ள வேண்டும். தனது பாடஅலகினை பொருத்தமான தொழினுட்பத்துடன் இணைக்கும் அறிவு
தொழினுட்ப உள்ளடக்க அறிவு எனப்படுகின்றது.
6.
தொழினுட்ப போதனாசார் அறிவு (TPK):
தொழினுட்ப உள்ளடக்க அறிவினை ஆசிரியர்கள் கொண்டிருப்பது மட்டுமன்றி தொழினுட்ப போதனா
சார் அறிவினையும் கொண்டிருப்பது அவசியமாகும். பல்வேறு தொழினுட்பங்களை எவ்வாறு
கற்பித்தலில் பயன்படுத்த முடியும் என்ற அறிவே இதுவாகும். வெறுமனே கற்பித்தலில்
பயன்படுத்தப்படும் பல்வேறு தொழினுட்பங்கள் பற்றிய அறிவினை மாத்திரம் கொண்டிராமல்
அவற்றை சிறந்த முறையில் கையாளும் திறங்களையும் இணைத்தே இந்த அறிவு நோக்கப்படுகிறது.
7.தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு (TPCK):
மேலே எடுத்துக்கூறப்பட்ட உள்ளடக்க அறிவு,
போதனா அறிவு, தொழினுட்ப அறிவு, போதனா
உள்ளடக்க அறிவு, தொழினுட்ப உள்ளடக்க அறிவு, தொழினுட்ப போதனா
அறிவு ஆகிய ஆறு வகையான அறிவுகளையும் ஒன்றிணைத்த வகையில்,
ஆசிரியர்கள் தற்காலத்தில் அவசியம் கொண்டிருக்கவேண்டிய அறிவாக தொழினுட்ப போதனாசார்
உள்ளடக்க அறிவு கருத்தில் கொள்ளப்படுகிறது. தற்காலத்தில் ஆசிரியர்களின் வகிபங்கு
முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு தேவையான
சமூக மனவெழுச்சி திறன்களை மாணவர்களிடம் விருத்தி செய்ய வேண்டிய நிலையில்
ஆசிரியர்கள் உள்ளனர். அதேவளை, இன்றைய மாணவர்களின் கற்றல்
தேவைகளும், கற்றல் மீதான விருப்புக்களிலும் பெரிய மாற்றங்கள்
நிறைந்து காணப்படுகின்றன. இத்தைய பின்னணியில்
கற்றல் கற்பித்தல் என்பதுமுன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சவால்மிக்க
விடயமாகவே உள்ளது. ஆசிரியர்கள் கற்றல்
கற்பித்தலில் இன்னமும் மரபு ரீதியான வழிவகைகளை பின்பற்றாது,மாறி வரும் தேவைகளை
விளங்கிக்கொண்டவர்களாக புதிய கற்பித்தல் பணிகளில் விரைவாக வளர்ந்துவரும்
தொழினுட்பங்களையும் ஒருங்கிணைத்து கற்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறு நவீன
தொழினுட்பங்களை கற்றல் கற்பித்தலில் ஒன்றிணைக்கும் வகையில் வலியுறுத்தப்படும் ஒரு
விடயமே இந்த TPCK அல்லது TPACK எனும்
தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவாகும். ஏற்கனவே கூறியது போல் சுல்மன் என்பவரது போதனா
சார் உள்ளடக்க அறிவு எனும் கோட்பாட்டு எண்ணக்கருவில் இருந்து இந்த தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க
அறிவு உருவாக்கம் பெற்றுள்ளது. கல்வியியல் ஆய்வுகளில் இவற்றை மாதிரி சட்டகங்களாகக் அல்லது
மாதிரியுருக்களாக கொண்டு பல ஆய்வுகளும் வெளிவந்தமுள்ளன.
முடிவுரை
தற்காலத்தில், எமது பாடசாலை வகுப்பறைகள் படிப்படியாக திறன் வகுப்பறைகளாக மாறி
வருகின்றன. எமது நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வளர்ச்சிபெற்ற நாடுகளில் வாழும்
மக்கள், தாம் கல்வி பயின்ற பாடசாலைகளின் வளர்ச்சியில் அதிக
அக்கறை கொள்கின்றனர். இதன் காரணமாக, பல பாடசாலைகளின்
வகுப்பறைகள் நவீன பல தொழினுட்ப
சாதனங்களினை கொண்டதாக மாறியுள்ளன. அதேபோன்று அரசும். படிப்படியாக திறன்பாடசாலைகளை
நோக்கி நகர்கின்றது. அதேவளை மாணவர்களின் கற்றல் பாணிகளிலும் மாற்றங்கள் பல
நிகழ்ந்தேறுகின்றன. முன்னர் புத்தக வாசிப்பில் ஆர்வம் காட்டிய மாணவர்கள் நவீன
தொழினுட்ப சாதனங்களின் பால் வெகுவாக ஈர்க்கப்பட்டு உள்ளனர். இச்சூழமைவில்
ஆசிரியர்கள் தம் கற்றல் கற்பித்தல் செயன்முறையில் நவீன தொழினுட்ப சாதனங்களை
ஒன்றிணைக்க வேண்டிய தேவையில் உள்ளனர். எனவே மேற்கூறிய ஆறு வகையான அறிவுகளையும் ஒன்றிணைத்த
வகையில் TPCK எனும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவினை
தம்மிடம் கொண்டிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.
உசாத்துணை
Kleickmann, Thilo & Richter, Dirk
& Kunter, Mareike & Elsner, Juergen &
Besser, Michael &
Krauss, Stefan & Baumert, Jürgen. (2012). Teachers'
Content Knowledge and
Pedagogical Content Knowledge: The Role of
Structural Differences in
Teacher Education. Journal of Teacher Education.
64. 90-106.
10.1177/0022487112460398.
Halim, L., & Meraah, S. M. (2002).
Science trainee teachers’ pedagogical content knowledge and
its influence on physics teaching.
Research in Science & Technological Education, 20,
215-225.
doi:10.1080/0263514022000030462
Santrock (2018) Educational Psychology:
Theory and Application to Fitness and
Performance, Sixth
Edition, McGraw-Hill Education
Shulman, L. S. (1986). Those who
understand: Knowledge growth in teaching. Educational
Researcher, 15(2), 4-14.
doi:10.3102/0013189X015002004
Shulman, L. S. (1987). Knowledge and
teaching: Foundations of the new reform. Harvard
Educational Review,
57(1), 1-22.
குறிப்பு: வீரகேசரி குழும நாளிதழான விடிவெள்ளி யில் 19.04,2019 ஆம் திகதி பக்கம் 11 இல் வெளிவந்த எனது கட்டுரையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக