இலங்கையின்
முன்பிள்ளைப் பருவக் கல்வியின் வளர்ச்சிப் போக்குகளும் சவால்களும்
-------------------------------------------------
கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
-----------------------------------------------------------------------------
அறிவில்
இடப்படும் முதலீடு சிறந்த ஆதாயங்களை தருகின்றது
என்ற பென்ஜமின் பிராங்க்ளின் இன் கூற்றுக்கு ஏற்ப இன்றைய நவீன கால பெற்றோர்கள்
தமது பிள்ளைகளுக்கு அறிவினைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக முனைப்புடன் செயற்பட்டு
வருவதைக் காணமுடிகின்றது. அத்துடன், பிள்ளைகளின் முதல் ஐந்து வருடப் பருவமானது
அவர்களின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் மிக முக்கியமானதாகவும் உள்ளது.
இதன்காரணமாக, முறைமையான பாடசாலைக் கல்வியை வழங்க முன்னரே பல்வேறு கற்றல்
நடவடிக்கைகளில் தம் பிள்ளைகளை பெற்றோர்கள்
ஈடுபடுத்துகின்றனர். கைத்தொழில்மயமாக்கல், விரைவான நகரமயமாக்கம், அறிவியல்
தொழிநுட்ப வளர்ச்சிகளும் இவற்றின் பேறாக மனித குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வரும்
மாற்றங்களும் பிள்ளைளை மிகக் குறைந்த வயதிலேயே கல்வி நடவடிக்கைகளுக்குள் ஈடுபடுத்த
விரைவுபடுத்துகின்றன. முறையான பாடசாலைக் கல்விக்கு முன்னரான கல்வியூட்டல் மற்றும்
பராமரிப்பு நடவடிக்கைகளை முன்பிள்ளை பராமரிப்பு மற்றும் முன் பிள்ளைப் பருவக்
கல்வி என நாம் அழைக்கிறோம். இலங்கையில் இந்த முன்பிள்ளைப் பருவக் கல்வியின் வளர்ச்சிப்போக்குகள்
அவை தொடர்பான சவால்கள் தொடர்பாக இந்தக் கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது.
இலங்கைக்
கல்வி முறைமை
இலங்கை,
கல்வி தொடர்பான குறிகாட்டிகளில் தெற்காசிய நாடுகளில் முதன்மை பெறும் நாடாக
விளங்குகின்றது. பண்டைக்காலத்தில் இருந்தே இலங்கைச் சமூகங்களில் கல்விக்குக்
கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம், சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த
அரசுகள் கல்வி தொடர்பாக நடைமுறைபடுத்திய கல்விக்கொள்கைகள், நாட்டு மக்களின்
தன்னார்வம் போன்றன கல்வி தொடர்பாக உலகில் ஒரு கெளரவமான நிலையில் நாடு
வகிக்கின்றது. இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் யாப்பின் 27 ஆவது
உறுப்புரையின்படி, “நாட்டில் எழுத்தறிவின்மையை இல்லாதாக்குதல், முழுமையான,சமமான
கல்வியை சகலரும் பெறுவதை உறுதிப்படுத்தல்” என்பதே நாட்டின் கல்வியின் இலட்சியமாக உள்ளது.
இலங்கையின் கல்வி முறைமை மிகப்பழமையான சட்டமொன்றினால் நிருவகிக்கப்படுகின்றது. அதாவது, 1939
ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க சட்டமே இதுவரை
அமுலில் உள்ளது. 2010 இன் பின்னர் புதிய கல்விச் சட்டம்
பற்றி பலரால் அதிகம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும், அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட போதும், புதிய கல்விச் சட்டம் இன்னும் கைக்கூடவில்லை எனலாம்.
மேலும்,
1997 இன் 1 வது இலக்க ஒழுங்கின்படி 15-14
வயதுப்பிள்ளைகளது கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த
வயது 16 வயது வரை அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையின்
கல்வி முறைமையில், கல்வி மொழிமூலம் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாக உள்ளது.
இலங்கையில் உள்ள சகல இனக்குழுமங்களும் கல்வியைப் பெறும் வகையில், இலங்கையின் இரு
பிரதான மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் கல்வியை தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது. இலங்கையில்
சிங்களவர், தமிழர், சோனகர், பறங்கியர், மலாயர் எனப் பல்வேறு
இனங்கள் இருந்த போதிலும் இவர்களின் அதிகமானோர் சிங்களம் அல்லது தமிழை தம்தை
மொழியாகக் கொண்டவ்ர்கள். இவற்றுக்கு மேலதிகமாக ஆங்கில மொழி மூலமும் கல்வியைப் பெறும்
வாய்ப்புக்களும் இல்லாமலில்லை. நாட்டின் பொதுவான கல்விக் கட்டமைப்பு உரு: 1இல்
காட்டப்படுள்ளது.
உரு
:1 இலங்கையின் கல்விக் கட்டமைப்பு
மூலம்:
கல்வி அமைச்சு (2009)
உரு
1 இன் படி, இலங்கையின் கல்வி முறைமை பின்வருமாறு அமைந்துள்ளது:
1.
முன் பள்ளிக் கல்வி
: இரண்டரை அல்லது மூன்று வயதில் இருந்து ஐந்து வயதுப் பிள்ளைகளுக்கான கல்வி. இது
கட்டாயக் கல்விக்குள்ளடங்காது என்பதை மனதிற் கொள்க.
2.
பொதுக்கல்வி
– இது ஐந்து வயதில் இருந்து பதினெட்டு வயது வரையிலான பாடசாலைக் கல்வியைக் குறிக்கின்றது.
இதில் தற்போதைய நிலவரங்களின்படி, ஐந்து தொடக்கம் பதினாறு வயது வரையிலான கல்வி
கட்டாயமானது. இப்பொதுக் கல்வியில் மூன்று வகுதிகள் காணப்படுகின்றன. வயது ஐந்தில்
இருந்து ஒன்பது வயது வரையிலான ஆரம்பக் கல்வி, பத்து வயது தொட்டு பதின்மூன்று வயது
வரையிலான கனிஸ்ட இடைநிலைக் கல்வி, இதன்பின்னரான இருவருடக் கல்வி மேல் இடைநிலைக்
கல்வி என வகுத்து நோக்கப்படுகிறது.
3.
மூன்றாம் நிலைக்
கல்வி மற்றும் தொழிற்கல்வி : கல்வியின் நகர்வினை உறுதி செய்யும் வகையில், உயர்தரக்
கல்விக்குப் பின்னர் பலகலைகழக கல்வியும் அதற்கு நிகரான வாண்மைக் கல்லூரிகளும்,பாடசாலைக்
கல்வியில் இருந்து இடை விலகுவோரை கருத்திற்கொண்டு தொழில்சார் கல்வி
வாய்ப்புக்களும் இலங்கை கல்வி முறைமையில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கல்வி
முறைமையினை சர்வதேச தரங்களுக்கு ஒப்பான வகையில் பேணவும், மாணவர்கள் கல்வி எனும்
ஏணியில் பெயர்சசி அடைந்து செல்லக் கூடிய வகையில் இலங்கை தர மாதிரி சட்டகம் (SLQF)
ஒன்று அறிமுகம் செய்யப்படுள்ளது. இதில் SLQL எனும் இலங்கை தர மட்டம் 1 இல் இருந்து
12 வரையிலான மட்டங்கள் அறிமுகம் செய்யப்படுள்ளது.
இலங்கையில் முன்-பிள்ளைப்
பருவக் கல்வி.
இலங்கையில்
முன்-பிள்ளைப் பருவமானது பிள்ளையின் முதல் ஐந்து வயது வரையயுள்ள காலப்பகுதியை குறிப்பதாக வரைவிலக்கணம்
செய்யப்படுகின்றது. இப்பருவ வயதுப் பிரிவினரை இலக்காகக் கொண்டு பல்வேறு பெயர்களில்
முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் விருத்தியும் தொடர்பான பல்வேறு நிலையங்கள்
செயற்பட்டு வருகின்றன. முன்-பிள்ளைப் பருவ விருத்தி நிலையங்கள், முன்-பிள்ளைப்
பாடசாலைகள், மொண்டிசூரிகள், தினசரிக் காப்பு நிலையங்கள், கிரேச்சார்ஸ் எனப்படும் பிள்ளைப்
பராமரிப்பு நிலையங்கள் என்பன அவற்றுள்
சிலவாகும். அரசாங்கத்தின் நேரடி முகவர்களான உள்ளுராட்சி சபைகள், தனியார் தொண்டு
நிறுவனங்கள், சமயத் தாபனங்கள் மட்டுமன்றி, இலாபத்தை நோக்காகக் கொண்ட தனியார்
குழுக்களும் இக்கல்வி மற்றும் பராமரிப்பில் கரிசனைக் காட்டி வருகின்றனர். இலங்கையில்
1990
களுக்கு முன் இத்தகைய முன்பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்கள் பரவலாகக்
காணப்பட்ட போதிலும், 1997 யில் அறிமுகம் செய்யப்பட்ட கல்விச்
சீர்திருத்தங்களின் பின்னர் இதில் ஒரு துரித விருத்தி ஏற்பட்டதைக் காணலாம். 1997 ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்களின் பின்னர், அரசாங்கம் முன்பிள்ளைப்பருவ
நிகழ்ச்சிகள் தொடர்பாக பின்வரும் முக்கிய செயற்பணிகளை முன்னெடுத்தது:
1.
சிறுவர்
செயலகத்தையும், கல்வி அமைச்சின் முறைசார் கல்விப் பிரிவினையும், முன் பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்களை முறையாக
திட்டமிட்டு அமுலாக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தல்.
2.
தாய்மார்களுக்கான
விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்தல். இதன் மூலம் பிள்ளைகள் தொடர்பாக
களத்தில் பணியாற்றும் பல்வேறு நபர்கள் மற்றும் பொது மக்களிடம் பிள்ளைகளின் முன்
பிள்ளைப் பருவம் தொடர்பான பரந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
3.
பிள்ளை பராமரிப்பை
வழங்குனர்கள் மற்றும் தாய்மார்களுக்கு முன் பிள்ளைப் பருவம் தொடர்பான பயிற்சிகளை
வழங்குதல்.
4.
பிள்ளைகள் கல்வியில்
அதிகம் பங்குபற்றுவதை இலக்காகக் கொண்டு அதிகமான முன் பாடசாலைகளை அமைத்தல்.
5.
முன் பள்ளிகளுக்கான
பொதுவான சட்ட ஏற்பாடுகளை ஒழுங்கமைத்தல்.
6.
முன் பள்ளிகளுக்கான
பொதுவான கலைத்திட்ட வழிகாட்டல்களை தயாரித்தல்
7.
இலங்கை திறந்த
பல்கலைக்கழகத்தில் முன் பிள்ளைப் பருவ துறையொன்றை உருவாக்குதல். அத்துடன் சிறுவர்
ஆய்வு நிலையத்தையும் நிறுவுதல். இதன்பயனாக இலங்கை திறந்த பல்கலைக்கழக
கல்விப்பீடத்தில் முன் பிள்ளைப் பருவம் மற்றும் ஆரம்பக் கல்வித் துறையும் பிள்ளை
ஆய்வு மையமும் நிறுவப்பட்டுள்ளன.
அண்மையில் தேசிய கல்வி நிருவகத்திலும் முன் பிள்ளைப் பருவம் மற்றும் ஆரம்பக்
கல்வித் துறை ஆரம்பிக்கப்படுள்ளது.
மேற்கண்ட
செயற்பணிகளின் மூலம், ஐந்து வயதுகுட்பட்ட பிள்ளைகளின் போசணை மட்டம், அவர்களின்
முன் பள்ளிகளுக்கான பங்குபற்றல் என்பவற்றை அதிகரித்தல், முன் பிள்ளைப்பருவ
பராமரிப்பும் விருத்தியும் தொடர்பான வேலைத்திட்டங்களின் தரத்தை மேம்பதுத்துவதன் ஊடாக
முறைசார் கல்வியின் தரத்தைப் பேண வழிசெய்தல் போன்ற குறிகோள்களை அடைய
எதிர்பார்க்கப்ட்டது. இவற்றுக்குப் புறம்பாக, விசேட தேவை உடைய பிள்ளைகளின் தேவைகளைக்
கருத்திற்கொண்டு விசெடதேவைக் கல்விக்கான
துறையொன்று 2005 இலிருந்து இலங்கைத் திறந்த
பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன்,
விசேட தேவைப் பிள்ளைகளுக்கான கற்றல் நிலையமொன்றை நிறுவவும் ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன. மேலும், இளஞ் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபையும் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன.
முன்
பிள்ளைப்பருவ பராமரிப்பும் கல்வியும் தொடர்பான தேசியக் கொள்கை
முன்பிருந்த
பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பல் அமைச்சு 2004 இல் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பும் கல்வியும் தொடர்பான தேசியக் கொள்கையினை
உருவாக்கியிருந்தது. இதனை தற்போதுள்ள சிறுவர் விருத்தி மற்றும் மகளிர் வலுப்படுத்தல்
அமைச்சு சிறுவர் செயலகத்தின் ஊடாக செயற்படுத்திவருகின்றது.
தேசிய
கொள்கையின் நோக்கங்கள் வருமாறு:
·
போதுமான சுகாதாரம்
மற்றும் போசாக்கு சேவைகளை பெறுவதனை உறுதிப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பிள்ளையினதும்
வாழ்வினை சிறப்பாக ஆரம்பிப்பதற்கு உறுதியளித்தல்.
·
சுகாதாரம்,
போசாக்கு, உள சமூகஊக்கம், பாதுகாப்பான குடிநீர், சுத்தம், கழிவகற்றல்
சேவைகளை ஒருங்கே கொண்டு வரும் ஒன்றிணைந்த அணுகுமுறையினை மேம்படுத்தல்.
·
வீட்டை
அடிப்படையாகக் கொண்ட நிகழச்சித்திட்டங்கள், பிள்ளை விருத்தி நிலையங்கள்,
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி வேலைத்திட்டங்களின் விருத்தி மற்றும் அமுலாக்கம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான
வழிகாட்டல்களையும் நியமங்களையும் உருவாக்குதல்.
·
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு
மற்றும் விருத்தி தொடர்பாக ஈடுபடும் அனைத்து தரப்பினரதும் பொறுப்புக்கள், வகிபங்குகளை
தெளிவுபடுத்தல்
·
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு
மற்றும் விருத்தி தொடர்பாக ஈடுபடும் அரச,அரச சார்பற்ற ,தனியார் என அனைத்துதரப்பினர்களுக்கு
இடையில் பரஸ்பர தொடர்புகளை ஏற்படுத்தல்.
·
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு
மற்றும் விருத்தியினை வழங்கும் தரப்பினர்களினால் வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்தி
ஒருங்கிணைத்தல். இதன்மூலம் சகலரும் பயனடையக்கூடிய வகையில் முன்-பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் விருத்தி சேவையினை
ஆக்குதல்.
·
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு
மற்றும் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிற்காக அதிக நிதிவளங்களை ஒதுக்குதல்.
·
முன் பிள்ளைப் பருவ விருத்தியில்
பெற்றோர், பாதுகாவலர்கள், சமூக அங்கத்தவர்களின் வகிபங்குகளை மேம்படுத்தல்.
·
தமது பிள்ளைகளின் விருத்திக்கு உரிய வகையில் உதவக்கூடிய வகையில் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் சமுதாயத்தவர்களது
இயலளவை அதிகரித்தல்.
இத்
தேசிய கொள்கையினை தேசிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதனை உறுதிசெய்யும் வகையில், அரச அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், துறைசார் நிபுணர்கள்,
மாகாண இணைப்பாக்க சபைகள், மாவட்ட இணைப்பாக்க சபைகள், பிரதேசிய இணைப்பாக்கம் மற்றும் கிராமிய சபைகள் போன்றவற்றை உள்ளடக்கிய
தேசிய இணைப்பாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்
முன்பாடசாலைகளின் முகாமைத்துவத்தை மேற்பார்வை செய்யும் வகையில் மாகாண
சபைகளுக்கு தேவையான அதிகாரத்தை அரசியல்
யாப்பின்13 வது இணைப்பின் 154 G (1) உறுப்புரை வழங்குகின்றது. இதன்பேறாக, முன்பாடசாலைகளில் தரமான சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் முன்-பள்ளிக்
கல்வி தொடர்பாக வட மத்திய, மேல், வட மேல் மாகாணங்கள் தமது சொந்த நிலைப்பாடுகளை வெளியிட்டு
நடைமுறைப்படுத்துகின்றன. முன்-பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கான
ஆகக் குறைந்த நியமங்கள் , அவற்றை அளிக்கும் வழங்குனர்களது ஆகக்குறைந்த தகைமைகள்
(முன்பாடசாலை ஆசிரியர்கள்), சேவை நிலையங்களை பதிவு செய்தல், என்பனவற்றில் மாகாண மட்டத்தில் ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
எனினும் மத்திய அரசின் கொள்கைகளின் அனேக விடயங்களிற்கும் மாகாண மட்ட
கொள்கைகளுக்குமிடையில் அதிக வேறுபாடுகள் இல்லை எனலாம்.
முன்
பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பான பயிற்சிகளும் வாய்ப்புக்களும்
தரமான முறைசார் கல்வியை
கட்டியெழுப்ப வேண்டுமாயின் தரமான முன் பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வியுடன் தொடர்பானவர்களுக்கு அளிக்கப்படல் வேண்டுமாகின்றது. இலங்கையில் முன்-பள்ளி
ஆசிரியர்கள், பிள்ளை விருத்தி உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள், கிரேச்நிலைய ஊழியர்கள்
என பல்தரப்பட்ட ஆளணியினர் இத்துறையுடன் தொடர்புறுகின்றனர். இவர்களுக்கான பயிற்சி,
உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் தரமான முன்
பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வியை உருவாக்க முடியும். அத்துடன், இச் சேவையில் ஈடுபடுவோர்
கண்ணியமான ஊதியத்தைப் பெறவும் முடியுமகின்றது. இந்நோக்கில், இலங்கை திறந்த
பல்கலைகழகத்தில் 1980 களில் இருந்துமுன்-பள்ளிக்
கல்வியில் பட்டப்பின் சான்றிதழ் இனையும், வழங்கி வந்ததுடன் 2006 இலிருந்து ஆரம்பக் கல்வி டிப்ளோமா கற்கை (நாட்டின் 15 பிராந்திய மற்றும்
கற்கைநிலையங்கள் ஊடாக), ஆரம்பக் கல்வி தொடர்பான உயர் சான்றிதழ் கற்கை (நாட்டின் நான்கு
நிலையங்களில்), முன்-பிள்ளைப்பருவ மற்றும் ஆரம்பக் கல்வி தொடர்பான டிப்ளோமா சான்றிதழ் கற்கை (நாட்டின் நான்கு
பிராந்திய நிலையங்களில்) ஆகியவற்றை வழங்கி வருகின்றது. தேசிய கல்வி நிறுவகமும் 2007/2008 களில் இருந்து முன்-பள்ளி கல்வி தொடர்பான சான்றிதழ் கற்கையினை வழங்கி
வருகின்றது. அண்மைக் காலங்களில் ஏனைய சில
பல்கலைக்கழகங்களிலும் இது தொடர்பான கற்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை
தவிர, தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும்,
வேறு பல தனியார் கல்வி நிலையங்களும் இது தொடர்பான குறுங்கால கற்கைகளை வழங்கி
வருவதைக் காணலாம்.
முன்
பிள்ளைப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பாக எதிர் நோக்கும் சவால்கள்.
பிள்ளைகளின்
முதல் ஐந்து வயதுப் பருவம் முக்கியமானது என்ற வகையில், அரசு பல்வேறு நலப்பணிகளை
திட்டமிட்டு நடைமுறைபடுத்தி வருகின்ற போதிலும் இன்னமும் முன் பிள்ளைப் பராமரிப்பு
மற்றும் கல்வி தொடர்பாக பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. முன் பிள்ளைப்
பருவ பராமரிப்பும கல்வி தொடர்பான ஈடுபடும் நிறுவனங்கள், முன் பள்ளிகள்,
ஆசிரியர்கள் தொடர்பான் முழுமையான,
துல்லியமான புள்ளிவிபரம் இன்மை,
போதுமான (குறைந்து ஒரு வருட பயிற்சிநெறிகளை) பயிற்சிகளை பெறாத ஆசிரியர்கள்
தொடர்ந்தும் சேவையாற்றி வருதல், முன்பள்ளிக் கல்வி தொடர்பான பயிற்சிகள் இலாப
நோக்கில் தரத்தினை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்படல், முன்பள்ளிக் கல்வியில் இன்னமும்
மலையக தோட்ட மக்களின் பிள்ளைகள் குறைவாகப் பங்குபற்றல், பொதுவான கலைத்திட்டமின்மை என்று சவால்களை
பட்டியலிட்டுக் கூறலாம்.
முடிவுரை
பிள்ளைகளின்
முதல் ஐந்து வருட பருவமானது அவர்களினதும்,
நாட்டினதும் சுபிட்சமான எதிர்காலத்துக்கு முக்கியமானதொன்றாக உள்ளது. இப்பிள்ளகளின்
பராமரிப்பு மற்றும் முன் பள்ளிக் கல்வி தொடர்பாக மத்திய மற்றும் மாகாண அரசுகள்
பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இவற்றுள் முன் பள்ளிக் கல்வி
தொடர்பாக ஈடுபடும் ஆளணியினர் போதுமான தரமான பயிற்சிகளைப பெற்று தேவையான தகமைகளைக்
கொண்டிருத்தல் அவசியமாகின்றது. இதுதொடர்பான பயிற்சிகளை பெரும் போது அவற்றின் தரம்
அறிந்து அவற்றைப் பெறுவது முக்கியமாக
உள்ளது. தரமான பயிற்சி, துறை சார் நிபுணத்துவத்தையும் அனுபத்தையும் தருவதுடன் அதன்
மூலம் பயன் பெரும் இளம் பிள்ளைகளும் தரமான முறை சார் கல்வி ஒன்றுக்குள் செல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக