கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை


 கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல்

எப்.எம்.நவாஸ்தீன்

கல்விப் பீடம், 

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம் 

தமது ஆய்வுக்கான ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக இனங்கண்டு, அதனை பொருத்தமான முறையில் முன்வைப்பதே இன்று ஆய்வுகளில் ஈடுபட முன்வரும் புதிய ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆய்வறிக்கையில் ஆய்வுப் பிரச்சினையை தெளிவாகவும் சான்றுகளுடனும் எடுத்துரைப்பது அவசியம். கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபட உள்ள புதிய ஆய்வாளர்கள், ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன.

1. உங்கள் ஆர்வத்துக்குரிய சிறப்புத் துறை எது என்பதைத் தீர்மானித்தல்

துறைசார்ந்த வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், முதலில் தமது பாடத்துறையில் எந்த கிளைத்துறையின் கீழ் ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை தெளிவாக இனங்கண்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, கல்வியியலில் மேற்படிப்பு கற்கும் மாணவர்கள், கல்வியியலில் உள்ள பல்வேறு கிளைத்துறைகளில் எதாவது ஒன்றில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தமது சிறப்புத் துறையாக ஒரு கிளைத்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் போன்ற காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கல்வியியலில் கல்வி உளவியல், கல்வி சமூகவியல், கல்வி முகாமைத்துவம், கல்வி நிர்வாகம், கல்வி தலைமைத்துவம், கலைத்திட்டம், கலைத்திட்டமும் போதனையும், கல்வித் தொழில்நுட்பம், நிகழ்நிலை கல்வி, தொலைக்கல்வி, கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும், ஆரம்பக் கல்வி, ஆசிரியர் கல்வி போன்ற ஏராளமான கிளைத்துறைகள் உள்ளன. இத்தகைய துறைகளில் ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது சிறப்புத் துறையைத் தெரிவு செய்தல் மிக முக்கியமானது.

2. ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் படிநிலைகள்

1. சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடல்

ஒருவர் தனது சிறப்புத்துறையைத் தேர்ந்தெடுத்த பின், அதனுடன் தொடர்புடைய வாசிப்பினை விரிவுபடுத்துவது முக்கியம். இதனை ஆய்வியியலில் சார்பிலக்கிய மீளாய்வு (Review of Related Literature) என குறிப்பிடுகின்றனர். இன்றைய பல புதிய ஆய்வாளர்கள் வாசிப்பில் குறைபாடுகள் உள்ளதால், ஆய்வுச் செயன்முறையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சிறப்புத்துறையைத் தெரிவுசெய்த பின், அதனுடன் தொடர்புடைய சமகால சவால்கள், எழுப்பப்பட்ட ஆய்வு வினாக்கள், மற்றும் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பெரிதும் உதவுகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புத்துறையுடன் தொடர்புடைய சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகள், கலாநிதி ஆய்வுகள் (theses), புத்தகங்கள், மற்றும் மாநாட்டு ஆக்கங்களை வாசிப்பதை ஆரம்பிக்க வேண்டும்.

அந்தத் துறையில் ஏற்கனவே எதை ஆராய்ந்துள்ளனர், என்ன கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் உள்ள வரம்புகள் அல்லது குறைபாடுகள் என்ன என்பதனை அடையாளம் கண்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு வாசிப்பில் ஈடுபடும் போது, குறித்த துறையில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆய்வு வினாக்கள் அல்லது புதிதாக உருவாகும் போக்குகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பாக விரிவான விளக்கங்களுக்கு எனது சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பான கட்டுரையினை வாசிக்க: https://nawasdeen.blogspot.com/search?q=literature+

2. ஆய்வு இடைவெளியை அடையாளம் காணல்

சார்பிலக்கிய மீளாய்வின் மூலம், ஏற்கனவே ஆராயப்பட்ட விடயங்களில் போதுமான அளவு கவனம் பெறாத பகுதிகளை அல்லது இதுவரை பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்களை/ பிரச்சினைகளை தெளிவாகக் கண்டறிய வேண்டும். இவைதான் “ஆய்வு இடைவெளி” (Research Gap) எனப்படும்.

மேலும், குறித்த துறையில் உள்ள ஆய்வுகள், நடைமுறைச் செயற்பாடுகள், மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் அனுபவங்களில் காணப்படும் சவால்களை ஆராய்வது முக்கியம். ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை பெரும்பாலும் கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியிலிருந்து உருவாகிறது.

எனவே, முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வரம்புகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், அல்லது புதிய தேவைகள் ஆகியவற்றை அடையாளம் காண்பது ஆய்வுப் பிரச்சினை தெரிவில்  முக்கியமான படியாகும்.

3. ஆய்வுக்கான பரப்பை / கவனத்தைச் சுருக்கல்

ஆய்வுப் பிரச்சினைத் தெரிவில், ஒரு பொதுவான பரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆய்வுப் பிரச்சினையை உருவாக்குவதற்கு, உங்கள் ஆய்வுக் கவனத்தையும் பரப்பையும் படிப்படியாகச் சுருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்கள் சிறப்புத் துறை ஆசிரியர் கல்வி எனக் கொள்க. “ஆசிரியர் கல்வி” என்பது மிக விரிவான பாடப் பரப்பு ஆகும். இதில் உங்கள் வாசிப்பின் அடிப்படையிலும் இலக்கிய விமர்சனத்தின் வெளிப்பாடுகளையும் பொருத்தமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட, தெளிவான தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணம்: முன் சேவை ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதில் பிரதிபலிப்பு குறிப்பேடுகளின் பயன்பாடு.

மிக விரிவான அல்லது தெளிவற்ற தலைப்புகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றை ஒரே ஆய்வில் கையாளுவது கடினமாக இருக்கும். சிறப்புத் துறையின் உள்ளடக்கத்தை நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் தமக்குப் பெரும் ஆர்வமுள்ள மற்றும் நடைமுறையில் சாத்தியமான ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இச்செயன்முறை ஆய்வின் பரப்பளவைத் துல்லியமாக வரையறுத்து, ஆய்வின் வடிவத்தையும் நோக்கத்தையும் தெளிவாக அமைக்க உதவுகிறது.

4. ஆய்வுப் பிரச்சினையைத் தெளிவாக வரையறுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை உருவாக்கிய பின், அதனை தெளிவாகவும், ஆராயக்கூடிய வகையிலும் வரையறுப்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல ஆய்வுப் பிரச்சினை யார் (Who), என்ன (What), எப்போது (When), எங்கே (Where) போன்ற அடிப்படை அம்சங்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.

ஆய்வுப் பிரச்சினை வினா வடிவில் (question form) எழுதப்படுவது சிறந்தது, ஏனெனில் அது ஆய்வின் திசையையும் வரம்பையும் தெளிவாகக் காட்டுகிறது.

உதாரணமாக:

“பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் ஆசிரிய மாணவர் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கும் ஆசிரிய -மாணவர்களின் சுயநெறிப்படுத்தப்பட்ட  கற்றலுக்கு பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் எவ்வாறு தாக்கம் செய்கின்றன?

ஆய்வுப் பிரச்சினையை வரையறுக்கும் போது பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • பிரச்சினை தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்க வேண்டும்.
  • அளவிடக்கூடிய அல்லது விளக்கக்கூடிய மாறிகள் அடங்கியிருக்க வேண்டும்.
  • நடைமுறையில் சாத்தியமான மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுந்த பரிமாணம் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த முறையில் பிரச்சினையை வரையறுப்பது, அடுத்த ஆய்வுக் கட்டமான ஆய்வு வினாக்கள் , குறிக்கோள்கள், மற்றும் கருதுகோள்கள் (hypotheses) உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது.

5. தெரிவு  செய்யப்பட்ட ஆய்வுப் பிரச்சினையின் நடைமுறை சாத்தியத்தன்மையை மதிப்பாய்வு செய்தல்

ஒரு ஆய்வுப் பிரச்சினை சாத்தியமுள்ளதா என்பதை ஆராய்வது, ஆய்வின் வெற்றிக்கு மிக முக்கியமான படி ஆகும். இதற்காக பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • தரவு மற்றும் பங்கேற்பாளர்கள்: தேவையான தரவைப் பெறுவதற்கும், ஆய்வில் பங்கேற்கத் தயாரான நபர்களை அணுகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • வளங்கள் மற்றும் வசதிகள்: ஆய்வை முடிக்க தேவையான பொருட்கள், உபகரணங்கள், நிதி, மற்றும் ஆதரவு வளங்கள் கிடைக்கிறதா என பரிசீலிக்க வேண்டும்.
  • நேர வரையறை: ஆய்வை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • நெறிமுறைப் பிரச்சினைகள் (Ethical considerations): ஆய்வில் பங்கேற்பாளர்களின் தனியுரிமை மற்றும் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஆய்வாளர் திறன் மற்றும் அனுபவம்: துறை சார்ந்த அறிவு, ஆராய்ச்சி அனுபவம், மற்றும் திறன் ஆகியவை ஆய்வை நடைமுறையில் சிறப்பாகச் செய்ய உதவுமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு சாத்தியமுள்ள ஆய்வுப் பிரச்சினை என்பது யதார்த்தமானதும், வழங்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கக்கூடியதும், மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுதியானதாக இருக்க வேண்டும்.

6. தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை தெரிவு செய்தபின், அதன் முக்கியத்துவத்தை தெளிவாகக் கூறுதல் அவசியம். இது ஆய்வின் பயனையும், கல்வியியல் துறைக்கு எவ்வாறு பங்களிக்கிறது  என்றும் வெளிப்படுத்துகிறது.

இதற்கா பின்வரும் அம்சங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

  • அறிவியல் பங்களிப்பு: இந்த ஆய்வு தற்போதைய அறிவுத் தரவுகளுக்கு, கோட்பாடுகளுக்கு, மற்றும் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை இடையேயான இடைவெளியை நிரப்புவதில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
  • நடைமுறை பயன்பாடு: ஆய்வின் முடிவுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • சமூகப் பயன்: ஆய்வின் முடிவுகள் சமூக தேவைகள் மற்றும் கல்வி சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை, கண்டுபிடிப்புகளுக்கான புதிய வாயில்களை திறக்கக் கூடியதாகவும், தற்போதைய அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

கல்வி ஆய்வுப் பிரச்சினைகளின் முக்கிய வகைப்பாடுகள் (A Comprehensive Classification of Educational Research Problems)

ஆய்வுப் பிரச்சினைகளை பின்வரும் வகைகளில் வகைப்படுத்தலாம். இந்த வகைகள், ஆய்வின் நோக்கம் மற்றும் ஆய்வின் வடிவம், திசையை தெளிவுபடுத்துவதிலும், ஆய்வுப் பிரச்சினையை சரியாக உருவாக்கவும்  உதவும்.

1. நெறிமுறைசார் ஆய்வுப் பிரச்சினை (Normative Research Problem)

நோக்கம்: ஒரு குறிப்பிட்ட சூழலில் எது சரியானது, நெறிமுறைக்கு உகந்தது அல்லது செய்ய வேண்டியது என்பதை, ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள், கோட்பாடுகள் அல்லது ஒழுக்கத் தத்துவங்கள் அடிப்படையாக ஆராயும் ஆய்வுப் பிரச்சினைகள் இதுவாகும்.

உதாரணங்கள்:

  • வகுப்பறையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது, அவர்களின் ஒழுக்க விருத்தியில்  பெரும் தாக்கம் செலுத்துமா?

  • வகுப்பறைத் தொழிநுட்பப் பயன்பாடுகளில், மாணவர்களின் தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும்?

2. விவரண ஆய்வுப் பிரச்சினை (Descriptive Research Problem)

விவரண ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் (ஆசிரியர்/அதிபர்/மாணவர்), சூழ்நிலை அல்லது நிகழ்வின் பண்புகளை விவரிக்கும் ஒரு வினாவாகும், இது "யார்," "என்ன," "எங்கே," "எப்போது," அல்லது "எப்படி" என்ற வினாக்களுக்கு  பதிலளிக்கிறது. காரண ஆராய்ச்சியைப் போலன்றி, இது காரண-விளைவு உறவுகளைத் தீர்மானிக்க முயலுவதில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் விரிவான படத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, பெரும்பாலும் அளவை நிலை ஆய்வுகளின் மூலம் மேற்கொள்ளப்படும். .

உதாரணம்:

  • தற்போதைய பாடசாலை காலை உணவு திட்டங்கள் மாணவர் வரவு  மற்றும் நலனோம்பலை  எந்த அளவிற்கு பாதிக்கின்றன?
  • ஹட்டன் கல்வி வலயத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் வாண்மை  விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின்  ஆசிரியர்களின் பங்களிப்பு நிலை எவ்வாறு உள்ளது?
  • பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள் கொண்டுள்ள திறன்கள் யாவை?
  • STEM பாடங்களில் சிறப்பான மாணவர்கள் எத்தகைய சுய ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் உத்திகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?
  • நேர்மறையான வகுப்பறை சூழலை பேணுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்


3. வேறுபாடு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Difference-Seeking Research Problem)

ஒரு குறிப்பிட்ட நிகழ்வில்,  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள், முறைகள், அல்லது நிலைகளுக்கு இடையே கணிசமான வேறுபாடு உள்ளதா என ஆராய முற்படும் ஆய்வு பிரச்சினைகள்

உதாரணம்.

  • விஞ்ஞான பாடக் கற்பித்தலில்  போது கண்டறி கற்பித்தல் முறை மற்றும் கூட்டுறவு கற்பித்தல் முறை ஆகியவற்றின்  செயற்திறன் எவ்வாறு வேறுபடுகிறது?

4. தொடர்பு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Relational/Correlational Research Problem)

 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையே உள்ள தொடர்பு இருப்பதை ஆராய முப்பதும் ஆய்வுப் பிரச்சினைகள்.

உதாரணம்

  •   மாணவர்களின் தூக்க நேர அளவிற்கும், கல்வி சாதனைக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?
  •  பெற்றோர்களின் ஈடுபாட்டிற்கும் குழந்தைகளின் கல்வி வெற்றிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?

5. காரண காரிய  ஆய்வுப் பிரச்சினை (Causal Research Problem)

ஒரு காரண காரிய  ஆய்வு பிரச்சினை  என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவைத் தீர்மானிக்க முயலும் ஆய்வுப் பிரச்சினைகள் ஆகும். , இது ஒரு விடயம்  ஏன் நடக்கிறது என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உதாரணம்:

  • மாணவர் ஈடுபாடு மற்றும் நீண்டகால அறிவைத் தக்கவைத்துக்கொள்வதில் பாரம்பரிய கற்பித்தல் முறைகளுக்கு பதிலாக   செயற்திட்ட அடிப்படையிலான கற்றலின் தாக்கம் எவ்வாறுள்ளது
  • வகுப்பறையில் கல்வி செயலிகளைப் பயன்படுத்துவது மாணவர்களின் வாசிப்புப்  திறனில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
  •    ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை, நான்காம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறதா?

6. விளக்க ஆய்வுப் பிரச்சினை (Explanatory  Research Problem)

ஒரு விளக்க ஆய்வுபிரச்சினை , மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவுகளை அடையாளம் காண்பதன் மூலம் ஒரு விஷயம் ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது எளிய விளக்கத்திற்கு அப்பால் சென்று கருதுகோள்களைச் சோதித்து, ஒரு மாறி மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிறுவுகிறது, பெரும்பாலும் தலைப்பில் வரையறுக்கப்பட்ட முன் தகவல்கள் இருக்கும்போது இத்தகைய ஆய்வு வினாக்கள் உருவாக்கம் செய்யலாம். .

படிக்கும் போது இசையைக் கேட்பது பரீட்சை அடைவுகளை மேம்படுத்துகிறதா அல்லது பெற்றோரின் ஈடுபாடு ஒரு மாணவரின் கல்வி வெற்றியை எவ்வாறு பாதிக்கிறது என ஆராய்வது இதில் உள்ளடங்கும். இத்தகைய விளக்க ஆய்வு பிரச்சினைகள் காரண காரிய ஆய்வு பிரச்சினைகளை ஒத்திருந்தாலும், இவை பரந்து பட்ட ஆய்வு பிரச்சினைகளாக அமைக்கப்படும்.

7. தலையீட்டை வேண்டி நிற்கும்  சார்ந்த ஆய்வுப் பிரச்சினை (Intervention / Solution-Oriented Research Problem)

கல்விப்புலத்தில் காணப்படும்  ஒரு பிரச்சினையை  தீர்க்க உத்தி அல்லது தலையீட்டை வடிவமைத்து, அதன் செயற்திறன் மற்றும் சாத்தியத்தை மதிப்பீடு செய்யும் வகையினாலான ஆய்வு பிரச்சினைகள் இவையாக்கியம். குறிப்பாக செயல் நிலை ஆய்வு பிரச்சினைகள் இதனுள் அடங்கும். .

  • கணிதக் கவனச்சிதறலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய கற்றல் உத்தி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
  •  think-pair-share எனும் உத்தி எங்ஙனம் மாணவர் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகின்றது

மேற்கண்ட வகைகள்  போன்று கோட்பாட்டு சார் ஆய்வு பிரச்சினைகள், மதிப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Evaluation Research Problem),கண்டறியும் ஆய்வுப் பிரச்சினை (Exploratory Research Problem), ஒப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Comparative Research Problem) எனப் பல வகைகள் உள்ளன.

ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

 ஆய்வுப் பிரச்சினை ஒரு நடுநிலையான, ஆராயக்கூடிய பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது, அதில் முன்கூட்டியே காரணம், விளைவு, அல்லது தீர்வை குறிப்பிடக்கூடாது. ஏனெனில்:

  •  முன்கூட்டியே காரணம் அல்லது முடிவை சேர்த்தால், ஆய்வில் பக்கச்சார்பு (Bias) உருவாகும்.
  •  இது ஆய்வின் நோக்கத்தை, உண்மையான அறிவை கண்டறிவதில், தடையாக அமைக்கும்.

தவறான ஆய்வுப் பிரச்சினைகளுக்கான உதாரணங்கள்:

 

காரணத்தை முன்கூட்டியே கூறுதல்: இரு மொழி கல்வியில் இருந்து ஆங்கில அறிவு குறைவின் காரணமாக மாணவர்கள் இடைவிலகுகின்றனர்."

காரண-விளைவை முன்கூட்டியே தீர்மானித்தல்: அதிகரித்த சமூக ஊடகப் பயன்பாடு மாணவர் வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது.

 தீர்வை பிரச்சினையில் சேர்த்தல்: பாடசாலையில் பொருத்தமற்ற கவின்நிலை  மாணவர் கற்றலை பாதிக்கிறது."

மேற்கண்டவாறு பிழையாக ஆய்வு பிரச்சினைகளை எழுதாமல், சரியாக , நடுநிலையாக ஆய்வு  பிரச்சினை எழுதுவது முக்கியமாகும். ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு தெளிவான, ஆராயக்கூடிய பிரச்சினை ஆகும். இது ஆய்வின் அடித்தளமாக அமைந்து, முழு ஆய்வுத் திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும். பிரச்சினை காரணம் அல்லது தீர்வை முன்கூட்டியே கூறாது, ஆய்வின் முடிவில் தான், ஆய்வு பிரச்சினைக்கான காரணம், தீர்வுகள் வெளிப்படும் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை

 கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல் எப்.எம்.நவாஸ்தீன் கல்விப் பீடம்,  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிமுகம்  தமது ஆய்...