இலங்கையில் ஆசிரியர் கல்வி கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு

 


இலங்கையில் ஆசிரியர் கல்வி கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு  


பேராசிரியர் (கலாநிதி) எப்.எம்.நவாஸ்தீன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 

அறிமுகம் 

ஆசிரியர் கல்வி என்பது கற்பித்தலுக்காக தம்மை ஈடுபடுத்திகொள்ள விரும்புபவர்களுக்காக வழங்கப்படும்  கற்பித்தலுடன் தொடர்புடைய "கல்வி" மற்றும் "பயிற்சி" எனலாம். மேலும் ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்கள் தமது தொழில்சார் வாண்மை விருத்திகளை தொடர்ச்சியாக பெறுவதை உறுதி செய்யும் பாடநெறிகள், பயிற்சிகள் என்பனவும் ஆசிரியர் கல்வியில் உள்ளடங்கும். ஒரு நாட்டில் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன (designed) எவ்வாறு போதிக்கப்படுகின்றன  (delivered) எவ்வாறு அவை மதிப்பீடு செய்யப்படுகின்றன (evaluated) என நோக்குவதே ஆசிரியர் கல்வி முறையின் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு எனப்படுகிறது.  

ஆசிரியர் கல்வி - வகைகள் 

பொதுவாக ஆசிரியர் கல்வியினை பின்வரும் வகைகளாக நோக்கப்படுகிறது:

  • முன்-சேவை முன் ஆசிரியர் கல்வி 
  • சேவைக்கால/ பணியிடை ஆசிரியர் கல்வி
  • பாடசாலை மட்ட ஆசிரியர் கல்வி (School-based teacher education)
  • உள்ளடக்கம் சார்ந்த ஆசிரியர் கல்வி
  • சிறப்பு ஆசிரியர் கல்வி (Specialized teacher education)
மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகும் முன்-சேவை ஆசிரியர் கல்வி எனலாம். ஆசிரியர்கள் கற்பிக்கத் தொடங்கும் முன் பெறும் ஆரம்பப் பயிற்சிகள், பாடநெறிகளை சேவை முன் ஆசிரியர் கல்வி எனவும்  வரையறுக்கலாம். ஆசிரியராக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு தேவையான சான்றிதழ், டிப்ளோமா, மற்றும் இளமாணி பட்டப் படிப்புக்களை இது உள்ளடக்குகின்றது. இவற்றை தேசிய கல்வியியல் கல்லூரிகள், அரச பல்கலைக்கழகங்கள், அனுமதி பெற்ற சில கல்விசார் நிறுவனங்கள் வழங்குகின்றன. 

ஆசிரியராக கடமையாற்றும் நபர்களுக்கு தேவையான வாண்மைத்துவ அறிவு, திறன்கள், தேர்ச்சிகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள், பட்ட படிப்புக்கள், செயலமர்வுகள் போன்றன சேவைக்கால ஆசிரியர் கல்வி எனப்படும். இதனை பெறுவதற்கு ஒருவர் ஆசிரியராக கடமைபுரிதல் அவசியமாகும்.  

பாடசாலை மட்ட ஆசிரியர் கல்வி (School-based teacher education): இது ஒரு சேவைக்கால ஆசிரிய கல்வி வகை ஆகும். ஆசிரியர்களுக்கு தேவையான சில குறிப்பட்ட திறன்களை விருத்தி செய்வதற்காக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் இதில் அடங்கும். 

உள்ளடக்கம் சார்ந்த ஆசிரியர் கல்வி: ஒரு குறிப்பட்ட பாடத்தில் ஆசிரியர்களை கற்பிக்க பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதனுள்ளடங்கும். முன்-சேவை  ஆசிரியர் கல்வியாகவோ சேவைக்கால ஆசிரியர் கல்வியாகவோ இது காணப்படலாம்.  உதாரணம்: கணிதம் கற்பித்தலில் உயர் சான்றிதழ்,  விஞ்ஞான பாடத்தில் கல்வி பின் டிப்ளோமா பாடநெறி 

சிறப்பு ஆசிரியர் கல்வி (Specialized teacher education): மாணவர்களின் பல்வேறுபட்ட கற்றல் திறன்களை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதன் கீழ் வரும். உதாரணமாக விசேட தேவைகள் கல்வி தொடர்பான பாடநெறிகள்,

ஆசிரியர் கல்வி கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு - சிங்கப்பூர் 

அனேகமான விருத்தி அடைந்த நாடுகளில் ஆசிரியர் சேவையில் தம்மை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவோர் கல்வியில் இளமாணி பட்டத்தினை பெற்று இருப்பதுடன் கற்பித்தலில் குறிப்பிட்ட கால அளவு பயிற்சியை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக சிங்கப்பூரில் ஆசிரியர் நியமனம் பெற, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் கல்வி தொடர்பான இளமாணி பட்டத்தினையும் கற்பித்தலில் அனுபவத்தையும் கொண்டிருக்க வேண்டும். சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர் கல்வி முறையானது கல்வி அமைச்சகத்தால் (MOE) மையப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. தேசிய கல்வி நிறுவகம் (NIE), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான நிறுவகம் ஆகும். இந்த நிறுவகம், சிங்கப்பூரில் அனைத்து நிலை கல்விக்கும் ஆசிரியர்களை தயார்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஆகும். அதாவது சேவை முன் கல்வியில் இருந்து ஆசிரியர் வாண்மை விருத்தி தொடர்பான பல கற்கைகளை இது வழங்குகின்றது.  சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர் கல்வி முறையானது, நாட்டின் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உயர்தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு கடுமையானதும் தேர்ந்தெடுக்கப்பட்டதுமாகும், மேலும் சிறந்த மற்றும் பிரகாசமான ஆசிரிய மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்விக்காக NIE இல் அனுமதிக்கப்படுவார்கள். 

சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை ஆசிரியர்களும் NIE இல் பயிற்சி பெற்றவர்கள் ஆகும் . இளங்கலை ஆசிரியர்-கல்வி நிகழ்ச்சித் திட்டம் என்பது பாடசாலைகளில் 22 வார கற்பித்தல்  அனுபவத்தை உள்ளடக்கிய நான்கு ஆண்டு நிகழ்ச்சித் திட்டமாகும். பட்டமேற் கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டம் என்பது 10 வார கற்பித்தல்  அனுபவத்தை உள்ளடக்கிய 16 மாத நிகழ்ச்சித்திட்டமாகும். இரண்டு திட்டங்களும் 21 ஆம் நூற்றாண்டிற்கான ஆசிரியர் கல்வி மாதிரியுருவினால்  வழிநடத்தப்படுகின்றன. சிறந்த ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டிய அறிவு,  திறன்கள்  விழுமியங்கள் , திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு புகட்டுகின்றன. 

இலங்கையில் ஆசிரியர் கல்வியின் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு 

இலங்கையில் ஆசீரிய கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்ற போதும், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறிப்பாக அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் ஆசிரியர் கல்வி முறைமை பின்தங்கி உள்ளது. இலங்கையில் முன்-சேவை ஆசிரியர் கல்வி  அபிவிருத்தி அடைந்த  நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது. 

அபிவிருத்தி அடைந்த  நாடுகளில் கல்வியில் இளமாணி படிப்பினையும் கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளையும் பெற்ற பின்னரே  ஒருவர் ஆசிரியராக தன்னை கல்விமுறைமைக்குள்இணைந்துக் கொள்ள முடியும். இலங்கையில், ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு நிபுணத்துவ தகைமை என்பது கட்டாயத் தேவையில்லை. இலங்கையில் கல்வியியல் அல்லாத பிற துறைகளில் இளமாணி கற்கையை முடித்த பட்டதாரிகள் அதிகளவில் ஆசிரிய சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அதன்பின்னரே ஆசிரியர் வாண்மைக்கு தேவையான கற்பித்தல் தொடர்பாக பயிற்று விக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டின் கல்விசார் புள்ளி விபரங்களின் படி இலங்கையில் 46,627 அளவிலான பட்டதாரி ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். அதவேளை 90,371 அளவிலான ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இலங்கையில் முன்-சேவை ஆசிரியர் கல்வி கல்வியை வழங்குவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின்  வருடாந்த வெளியீடு என்பன  தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.  மாறிவரும் கல்விச் சூழலில் இருந்து எழும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நல்ல தரமான நிகழ்ச்சித் திட்டங்களை வழங்குவதற்கு ஆசிரியர் கல்விக்கான பெளதீக மற்றும் மனித வளங்கள் போதுமானதாக இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்க்கது.

முன்-சேவை ஆசிரியர் கல்வியை குறிப்பாக கல்வில் இளமாணி பட்டப் படிப்பினை  இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக  மானிய ஆணைகுழு அனுமதி பெற்ற தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. 

மேலும் இலங்கையில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா வினை வழங்குகிறது. தேசிய கல்வியியல் கல்லூரிகள் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை பெற்ற ஆசிரிய-மாணவர்கள் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் என்ற வகையில் சேவைக்குள் உள்ளீர்க்கப்படுகின்றனர். கல்விப் பொதுத் தராதர பரீட்சையை அடிப்படையாக கொண்டே பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் என்பனவற்றில் கல்வி இளமாணி பட்ட படிப்புக்கும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை கற்கவும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இலங்கையில் உள்ள பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம், கிழக்கு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில்  கல்வி இளமாணி பட்ட படிப்புகள் உள்ளன. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில்ஆரம்பக் கல்வி, விசேட தேவைகள்சார் கல்வி, இயற்கை விஞ்ஞானங்கள், அரங்கியலும் நாடகமும் போன்ற துறைகளில் கல்வி இளமாணி கற்கைகள் நடைபெறுகின்றன. இக்கற்கைகளின் பாடவிடயங்களின்  ஒழுங்கமமைப்பு , திறமை மட்டங்கள், கற்பித்தல் முறைமை,கணிப்பீடு, மதிப்பீடு, ஆய்வுக் கட்டுரை, கற்பித்தல் பயிற்சி கால அளவு போன்றவற்றில் சிறிய அளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனால் நாட்டில் உள்ள அனைத்து கல்வி இளமாணி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பொதுவான அளவுகோல் (benchmark) உருவாக்குவதற்க்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஆசிரியர் சேவைக்கால ஆசிரியர் கல்வியும், நாட்டில் உள்ள ஆசிரிய பயிற்சி மைய நிலையங்கள், திறந்த பல்கலைக்கழகம் உட்பட அரச பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றிலும், கல்வி அமைச்சு, மாகாண கல்வி அலுவலகம் மற்றும்  வலயக் கல்வி அலுவலகங்களிலும் சேவைக்கால ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிகள் என்பன வழங்கப்படுகின்றன. திறந்த பல்கலைக்கழகம் உட்பட அரச பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் ஆகியனவற்றால் பட்ட மேற் கல்வி டிப்ளோமா, கல்விசார் முதுமாணி நிகழ்ச்சி திட்டங்கள் நீண்டகால சேவைக்கால ஆசிரியர் கல்வியாக உள்ளன. அரச அங்கீகாரம் பெற்ற இலங்கையில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களும், வேறு கல்வி சார் அரச நிறுவனங்களும் இந்த நீண்ட கால ஆசிரியர் கல்வியில் தம்மை இணைத்து கொண்டுள்ளன. (உதாரணம்: Horizon university, SLIIT). இந்த நீண்ட கால சேவைக்கால ஆசிரியர் கல்விகளில் நிறுவனத்துக்கு நிறுவனம் அவை வழங்கப்படும், கால அளவு, பாடங்களின் எண்ணிக்கை, திறமை மட்டங்கள், கற்பித்தல் முறைமை,கணிப்பீடு, மதிப்பீடு, ஆய்வுக் கட்டுரை எனபனவற்றின் அடிப்படையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

பேராசிரியர் (கலாநிதி) எப்.எம்.நவாஸ்தீன்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
10.09.2023 மாலை 6.30


1 கருத்து:

  1. மிக சரியான விடயம் sir. நான் எழுத வேண்டும் இதை கல்வி சமூகத்துக்கு எடுத்து சொல்ல வேண்டும் என பல நாள் யோசித்த விடயம் தான் sir. உண்மையில் ஆசிரியர்கள் கல்வி துறைக்கு உள்வாங்கப் படும் போது அவர்கள் தேர்வுக்குரிய தேர்ச்சி பெற்றிருப்பது கல்வித்துறையின் வெற்றியை தீர்மானிக்கின்றது.. சேவைக்கு உள்வாங்கப்பட்டு உறுதி செய்தபின் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்கள் தகமைகளை வளர்த்துக்கொள்வது என்பது கேவிக்குறியே.. இலங்கையின் கல்வி துறையின் இன்னொரன்ன மாற்றங்கள் அவசியம் என்பதை உங்கள் கட்டுரை உணர்த்தி நிற்கிறது... தொடந்தும் எழுதுங்கள் எங்கள் கல்வி சமூகத்தின் காலையெடுப்புக்காக.. நன்றி

    பதிலளிநீக்கு

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...