ஆசிரியர் கல்வி
அறிமுகம்
கல்வி என்பது எந்த ஒரு நாட்டின் அபிவிருத்தின் அளவுகோலாகும். கல்வியின் வெற்றி ஆசிரியர்களின் கைகளில் தங்கியுள்ளது. ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினரை கல்வியின் மூலம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமுதாயம் சீராக இயங்க சிறந்த ஆசிரியர்கள் அவசியம். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல், தொழினுட்ப மற்றும் தொழில்வாண்மை மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தொடர்ந்து மாற்றிக் கொள்பவர்களே சிறந்த ஆசிரியர்கள். எனவே, ஆசிரியர்கள் தொடர்ச்சியான தொழில்வாண்மை விருத்தினை பெறுவதை உறுதிசெய்வது கட்டாயமாகும். இதனை நாடுகளில் உள்ள ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் வழங்கவேண்டும் என எதிர்பார்க்கப்டுகிறது.
ஆசிரியர் கல்வியின் பொருள்
மாணவர்களின் சிறந்த அடைவுகள் ஆசிரியர்களிடமுள்ள தேர்ச்சி, திறன், ஊக்கல் போன்றவற்றிலும் தங்கியுள்ளன. சிறந்த ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய அறிவு, திறன், தேர்ச்சிகள், மனப்பாங்குகள், ஆளுமைகளை விருத்தி செய்வதே ஆசிரியர் கல்வியாகும். எனவே ஆசிரியராக வர விரும்பும் ஒருவருக்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களே ஆசிரியர் கல்வி என பொருள் கூறலாம். ஆசிரியராக வர விரும்பும் ஒருவர் கற்பிக்கப் போகும் பாடத்துடன் தொடர்பான கல்வி அறிவினையும் (உள்ளடக்க அறிவு), குறித்த பாடத்தை பொருத்தமான முறையில் கற்பிக்கத் தேவையான நுட்பங்கள், முறைமைகள் போன்றவற்றில் பயிற்சியையும் வழங்குவதே ஆசிரியர் கல்வி எனலாம். ஆசிரியர் கல்வி என்பதற்கு பலவேறு விளக்கங்கள் பலராலும் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:
- "ஆசிரியர் கல்வி என்பது தனிநபர்களை ஆசிரியர்களாக ஆக்குவதற்குத் தயார்படுத்துவதாகும். (Teacher education is the preparation of individuals to become teachers." - National Council for the Accreditation of Teacher Education, 2020)
- "ஆசிரியர் கல்வி என்பது திறம்பட கற்பிப்பதற்கு தேவையான அறிவு, திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை விருத்தி செய்வதற்க்கான செயன்முறையாகும். (Teacher education is the process of developing the knowledge, skills, and dispositions necessary to teach effectively- Darling-Hammond, 2010)
- ஆசிரியர் கல்வி என்பது கற்பித்தல் பொறுப்புகளை ஏற்க தனிநபர்களை தயார்படுத்துவதாகும். (யுனெஸ்கோ, 2015) (Teacher education is the preparation of individuals to assume the responsibilities of teaching. - UNESCO, 2015)
- ஒர் ஆசிரியர் தனது பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றத் தேவையான மனப்பான்மை, பண்பு நலன்கள், அறிவு, தேர்ச்சிகள், திறன்கள் ஆகியவற்றை பெற வழிவகுப்பதே ஆசிரியர் கல்வி ஆகும்.
- ஆசிரியர் கல்வி என்பது, முன் பாடசாலைக் கல்வி, ஆரம்பக் கல்வி , இடைநிலை பாடசாலை கல்வி, உயர் கல்வி ஆகியவற்றில் கற்பிப்பதற்குத் தேவையான திறன்களைப் பெற்றவர்களாக மனிதர்களை உருவாக்கும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் , ஆய்வுகள் அல்லது பயிற்சிகள் ஆகியற்றை குறிக்கின்றது.
- மேலும், ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியர்கள் தொழில்சார் வாண்மைத்துவ திறன்களைப் பெறுவதற்கான வழிமுறையாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இங்கு ஆசிரியர் வாண்மை என்பது ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டிய தேர்ச்சி, செயலாற்றுகை,மற்றும் (நன்)நடத்தை. [Competence, Performance and Conduct] ஆகியவவற்றின் கூட்டாக கருத்தில் கொள்ளப்படுகிறது.
ஆசிரியர் கல்விக்கான தேவை
ஒரு நாட்டின் ஆசிரியர்களை விருத்தி செய்யும் வகையிலான ஆசிரியர் கல்வி என் அவசியம் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கலாம்:
- வெற்றிகரமாக கற்பிக்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களைத் தயார்படுத்துதல். இதில் பாடம் பற்றிய அறிவு, கற்பித்தல் அறிவு மற்றும் வகுப்பறையை முகாமைத்துவ திறன் ஆகியவை அடங்கும்.
- திறமையான கற்பித்தலுக்கு அவசியமான பொறுமை, இரக்கம் மற்றும் கற்றலில் ஆர்வம் போன்ற உட்ன்பான மனப்பாங்குகளை பண்புகளை ஆசிரியர்களுக்கு உருவாக்க உதவுதல்.
- அனைத்து ஆசிரியர்களும் தரத்தில் உயர்தரத்தில் இருப்பதை உறுதி செய்யவதற்கு. வகுப்பறையில் ஆசிரியர்கள் தங்கள் திறன்களைப் பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளையும் அவை வழங்குகின்றன.
- ஆசிரியர்கள் சமீபத்திய கல்வி ஆய்வு மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து அறிந்து கொண்டு அவற்றுக்கேற்ப தம்மை இற்றைப்படுத்திய நிலையில் இருக்க உதவுதல்.
- ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் வெற்றிபெறத் தேவையான ஆதரவை வழங்குதல்.
ஆசிரியர் கல்வி மாதிரியுருக்கள் /அணுகுமுறைகள்
ஆசிரியர் கல்வியினை வழங்குவதில் பல்வேறு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன . அவற்றுள் பின்வருவன சிலவாகும்:
- தொடர்ச்சியான மாதிரியுரு (Consecutive Model ) : தொடர்ச்சியான மாதிரியுருவானது ஆசிரியர் கல்விக்கான பாரம்பரிய அணுகுமுறையாகும். இதில், ஆசிரியர்கள் தங்கள் இளமாணி பட்டப்படிப்பை ஒரு குறித்ததொரு பாடப்பகுதியில் முடித்த பின்னர் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை கற்பதைக் குறிக்கும். இது அமெரிக்காவில் ஆசிரியர் கல்வியின் காணப்படும் பொதுவான மாதிரியாகும். உதாரணமாக , பாடசாலை கணித ஆசிரியராக இருக்க விரும்பும் ஒருவர், முதலில் கணிதப்பாடத்தில் இளமாணி பட்டத்தை முடித்த பின்னர், கணிதம் கற்பித்தல் தொடர்பான ஆசிரியர் கல்வியில் தம்மை இணைத்து கொள்தல்.
- ஒரே நேர மாதிரியுரு (Concurrent Model) : ஆசிரியர் கல்விக்கான மிக சமீபத்திய அணுகுமுறை இதுவாகும். தான் கற்பிக்க விரும்பும் பாடத்தின் உள்ளடக்க அறிவினையும் மற்றும் அதற்க்கான போதனாசார் உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் பாடநெறிகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து இளமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்வதை இது குறிக்கிறது. உள்ளடக்கியது. அதாவது, ஆசிரியர்கள் தங்கள் இளமாணி பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வித் திட்டத்தை ஒரே நேரத்தில் முடிக்கிறார்கள். இந்த மாதிரியானது மாணவர்கள் தங்கள் இளமாணி பட்டப்படிப்பை முடிக்கும்போதே கற்பித்தல் தொடர்பான சான்றிதழைப் பெற அனுமதிக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் சான்றிதழ்களை விரைவாகப் பெற அனுமதிக்கிறது. உதாரணமாக, பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக இருக்க விரும்பும் ஒருவர் ஆங்கிலத்தில் உள்ளடக்க அறிவினையும், அதனை கற்பிப்பதற்கு தேவையான போதனா சார் அறிவினையும் ஒரே நேரத்தில் கற்ற அனுமதிக்கும் பாடநெறிகள் இதனுள் அடங்கும். இன்றைய அநேகமான கல்வியில் இளமாணி பட்டபடிப்புகள் இந்த அணுகுமுறையினை பின்பற்றுகின்றன. உதாரணம்: ஆரம்பக் கல்வியில் இளங் கல்விமாணி
- பயிலுனர் மாதிரியுரு (Apprenticeship Model)- இந்த மாதிரியுருவில் கற்பித்தல் தொடர்பான பாடநெறிகளை கற்றுக் கொண்டே கற்பித்தல் தொடர்பான உடனடி பயிற்சிகளிலும் தம்மை ஈடுபடுத்தி கொள்வதைக் குறிக்கும். இதில் ஆசிரியப் பயிலுனர்கள் தகுதி வாய்ந்த அனுபவமுள்ளவர்களின் கீழ் ஆசிரியராகப் பயிற்சியினைப் பெற்றுக் கொள்வர்.
- கல்வியியல் கல்லூரிகள் மாதிரியுரு (Colleges of Education): கல்வியியல்க் கல்லூரிகள் என்பது ஆசிரியர் கல்வி நிகழச்சித்திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் ஆகும். இவற்றினூடாக நாட்டுக்கு தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதை இது குறித்து நிற்கிறது. இந்த நிகழ்ச்ச்த்திட்டங்கள் பொதுவாக பாட உள்ளடக்க அறிவு, போதனாசார் அறிவு, மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் பாடநெறிகளை உள்ளடக்கியது.
ஆசிரியர் கல்வி வகைகள்
ஆசிரியர் கல்வியினை பின்வரும் இரு பிரதான வகைகளாக நோக்கலாம்:
- சேவை முன் ஆசிரிய கல்வி
- சேவைக்கால/ பணியிடை ஆசிரியர் கல்வி
மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை உருவாக்கும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகும் சேவை முன் ஆசிரியர் கல்வி எனல்லம். ஆசிரியர்கள் கற்பிக்கத் தொடங்கும் முன் பெறும் ஆரம்பப் பயிற்சிகள், பாடநெறிகளை சேவை முன் ஆசிரிய கல்வி எனவும் வரையறுக்கலாம். ஆசிரியராக தம்மை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு தேவையான சான்றிதழ், டிப்ளோமா, மற்றும் இளமாணி பட்டப் படிப்புக்களை இது உள்ளடக்குகின்றது. இவற்றை கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அனுமதி பெற்ற கல்விசார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
ஆசிரியராக கடமையாற்றும் நபர்களுக்கு தேவையான வாண்மைத்துவ அறிவு, திறன்கள், தேர்ச்சிகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள், பட்ட படிப்புக்கள், செயலமர்வுகள் போன்றன சேவைக்கால ஆசிரியர் கல்வி எனாப்பும். இதனை பெறுவதற்கு ஒருவர் ஆசிரியாராக கடமைபுரிதல் அவசியம் ஆகும்.
மேற்கண்ட வகைகள் தவிர வேறு சில ஆசிரியர் கல்விகளும் காணப்படுகின்றன. அவையாவன:
- பாடசாலை மட்ட ஆசிரியர் கல்வி (School-based teacher education): இது ஒரு சேவைக்கால ஆசிரிய கல்வி வகை ஆகும். ஆசிரியர்களுக்கு தேவையான சில குறிப்பட்ட திறன்களை விருத்தி செய்வதற்காக பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் இதில் அடங்கும்.
- உள்ளடக்கம் சார்ந்த ஆசிரியர் கல்வி: ஒரு குறிப்பட்ட பாடத்தில் ஆசிரியர்களை கற்பிக்க பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதனுள்ளடங்கும். இது சேவை முன் கல்வியாகவோ சேவைக்கால ஆசிரியர் கல்வியாகவோ காணப்படலாம். உதாரணம்: கணிதம் கற்பித்தலில் உயர் சான்றிதழ், விஞ்ஞான பாடத்தில் கல்வி பின் டிப்ளோமா பாடநெறி
- சிறப்பு ஆசிரியர் கல்வி (Specialized teacher education): மாணவர்களின் பல்வேறுபட்ட கற்றல் திறன்களை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் இதன் கீழ் வரும். உதாரணமாக விசேட தேவைகள் கல்வி தொடர்பான பாடநெறிகள்
ஆசிரியர் கொண்டிக்க வேண்டிய அறிவுகள்
ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பாக சிக்கலானதும், பன்முகத்தன்மை கொண்டதும், வரையறுக்கப்பட்ட அறிவினை கொண்டுள்ளனர். இதில் பின்வரும் அறிவுகள் மிக முக்கியமாக ஆசிரியர்கள் கொண்டிருக்க தேவையுடையவர்களாக உள்ளனர்:
- உள்ளடக்க அறிவு – Content Knowledge (CK)
- போதனா அறிவு – Pedagogical Knowledge (PK)
- தொழினுட்ப அறிவு – Technological Knowledge (TK)
மேற்கூறப்பட்ட மூன்று வகையான அறிவுகளையும் இணைத்த வகையில் கொண்டிருக்க வேண்டிய அறிவே TPCK எனப்படும் தொழினுட்ப போதனாசார் உள்ளடக்க அறிவு ஆகும். இவ்வறிவுகள் தனித்தும், ஒன்றோடு ஒன்று இணைந்தும் தொழிற்படுவதாக காணப்படும். உள்ளடக்க அறிவு (CK), போதனா அறிவு (PK), தொழினுட்ப அறிவு (TK) என்பன ஒன்றோடு ஒன்று இடைவினைப்படும் போது பின்வரும் புதிய அறிவுகள் தோற்றம் பெறுகின்றன:
- போதனா உள்ளடக்க அறிவு (PCK)
- தொழினுட்ப உள்ளடக்க அறிவு (TPK)
- தொழினுட்ப போதனா அறிவு (TCK)
- தொழினுட்ப போதனா உள்ளடக்க அறிவு (TPCK)
மேற்கண்ட அறிவுகளை வகன்கும் வகையில் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் விளங்குதல் வேண்டும். இந்த அறிவுகள் தொடபாக மேலும் வாசிக்க https://nawasdeen.blogspot.com/search?q=TPACK எனும் இணைப்பை சொடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக