மர்ஹூம் ஜமீல் ஆசிரியர்

 மர்ஹூம் ஜமீல் ஆசிரியர் 



1983-87 ஆகிய காலப்பகுதியில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் எனது இடைநிலைக் கல்வியை தொடர்ந்திருந்தேன். ஏழ்மை, போர்காலச் சூழல் போன்றவற்றால், என்னைப் போன்ற பலரின் கல்வி பாடசாலையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்து. டியூஷன் வகுப்புகளைக் கனவிலும் நினைத்தும் பார்த்ததில்லை. அதற்கு எங்களிடம் வசதியும் இல்லை. நாங்கள் கல்வி கற்றிருந்த காலத்தில் ஒஸ்மானியாவில் பல சிறந்த ஆசிரியர்கள் எமக்கு கற்று தந்துள்ளனர். எனினும், பத்தாம் வகுப்பு வரை #கணிதம் எனக்கு கசப்பாகவே இருந்தது. அதற்கு காரணம், அதுவரை அதனை எங்களுக்கு கற்பித்த ஆசிரியர் என்றும் கூறலாம். வருவார், டியுசனுக்கு போய் வரும் சில முன்வரிசை கெட்டிக்கார மாணவர்களுடன் குசுகுசுத்து விட்டு சென்று விடுவார். இதனால், கணிதத்தில் ஆர்வம் இல்லாமலே பத்தாம் வகுப்பு வரை வந்து விட்டோம். க.பொ.த சாதாரண தரத்திற்கு இன்னும், ஒரு வருடமே எஞ்சி இருந்தது. கணிதம் சித்தி பெறா விட்டால் உயர்தரம் கற்க முடியாமல் போய் விடும். இனி யாழ் தையல் கடைகளில் ஒரு தையல்காரனாக சேர்ந்து விட வேண்டியதுதான் என்று கவலை கொண்டிருத்த வேளைதான், பலாலி ஆசிரியக் கலாசாலையில் இருந்து இளம் ஆசிரியர் குழாம், அவர்களின் கற்பித்தல் பயிற்சியின் பொருட்டு வந்து எங்களுக்கு கற்பிக்கத் தொடங்கி இருந்தனர். நாடியில் குழி விழுந்த, இன் முகத்துடன் கூடிய ஓர் இளம் ஆசிரியர் எங்களுக்கு கணிதம் கற்பிக்க வந்திருந்தார். அவரது புதுமையான அணுகுமுறைகள், கணித கற்றலில் ஆர்வமற்று இருந்த என்னைப் போன்ற மாணவர்களை கணித எண்ணக்கருக்களின்பால் எங்கள் ஆர்வத்தை துண்டியது. கற்பித்தல் பயிற்சி காலம் முடிந்து, எங்கள் பாடசாலைக்கே வந்து தொடர்ந்தும் கணிதம் கற்று தந்தார். அவரது இன்முகம், கணித எண்ணக் கருக்களை எங்களுக்கு கற்பித்த விதம் காரணமாக, குறுகிய காலத்தில் கணிதத்தில் சித்தி பெற முடியும் என்ற நம்பிக்கையை எங்களில் ஏற்படுத்தினார். இதற்கிடையில் இந்திய அமைதிப்படைக்கும், போராளிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 1987 இல் நாங்கள் இடம்பெயர வேண்டி இருந்தது. பரீட்சையும் இடம்பெறவில்லை. மீண்டும் 1988 இல் விசேடமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற க. பொ.த சாதாரண தர பரீட்சையை எழுதி கணிதத்தில் சித்தியைப் பெற முடிந்தது. பின்னர் உயர்கல்வியும் சாத்தியமானது. குறுகிய காலத்தில் என்னைப் போன்ற மாணவர்களைச் சித்தி பெற வைத்த, #ஜெமீல்_மாஸ்டர் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் #ஜமீல் ஆசிரியர் Jameel Musthafa இன்று (10/09/2021) வபாத்தான செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ்விடம் இருந்தே வந்தோம். அவனிடமே மீள செல்ல வேண்டி உள்ளது.
யாருக்கும் நிச்சயமான மரணத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
கருணை மிக்க அல்லாஹ் உங்கள் நற்காரியங்களை பொருந்திக் கொண்டு, நல்லடியார்களில் ஒருவராக உங்களை ஏற்று கொள்வானாக. உங்களது மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் உங்கள் மாணவர்களில் ஒருவனான நானும் பிரார்த்திக்கிறேன்.

You were not a teacher, but one of awakeners.



#கலாநிதி_எப்_எம்_நவாஸ்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...