க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் …அடுத்து என்ன செய்யலாம் ...
கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
31.03.2015 அன்று சோனகர் வலைத்தளத்திலும் (http://www.sonakar.com/?p=49539), 04.04.2015 செரண்டிப் பத்திரிகையிலும் வெளிவந்த எனது கட்டுரையின் முழு வடிவம்...
விடிந்தும்
விடியாததுமாக அததெரண வின்
குறுஞ்செய்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியதை விசிலடித்துச்
விட்டுச் சென்றது. எனது உறவுகளில் யார்
யார் இந்தப் பரிட்சைக்கு தோற்றினர் என பட்டியல் போட்டு, அவர்களுக்கு சொல்லுவோம் என
போனை அலற விட்ட போது, மறுபக்கத்தில், ஏற்கனவே இணையம், தொலைபேசி என்பனவற்றின் வழியாக
பரீட்சைப் பெறுபேறுகளை அவர்கள் பெற்றுவிட்டது தெரிந்தது. என்ன ஆச்சரியம்...! இதுவே எங்கள் காலத்தில் பரீட்சை
முடிவுகள் தபாலில் பாடசாலையை வந்தடைய மூன்று
நான்கு நாட்கள் ஆகும். பாடசாலையின் அதிபர் ஆர்வமிகுதியால் பரீட்சை அலுவலகம் சென்று பரீட்சை முடிவுகளை
கையில் பெற்று அறிவிக்கும் வரை தவித்த நிலையில்
இருந்திருக்கிறோம். ஆனால் இன்றோ
இந்நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வளர்ச்சியடைந்து விட்ட தொழில்நுட்பம் காரணமாக பரீட்சை முடிவுகள் வெளியாகி மறுகணம், தேசிய, மாகாண, மாவட்ட, கல்வி வலய, பாடசாலை
மட்டங்களில் யார் யார் எந்த எந்த
இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதை முகப்புத்தகங்கள் தொடங்கி வானொலி, தொலைக்காட்சி,
இணைய ஊடகங்கள் வரை பட்டியல் இட்டு விடுகின்றன. இந்தவகையில், முடிவுகள் வெளி வந்து ஒருசில மணி
நேரத்துக்குள், நாடளாவிய ரீதியில், முதல் பத்து இடங்களை பிடித்தவர்களின் பெயர்களை ஊடகங்கள் பட்டியலிட்டு விட்டனர்:
1.
தறிந்து நிர்மால்-
நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாமிடம்)
2.
சான்தினி நவன்ஜான –
கம்பஹா (இரண்டாமிடம்)
3.
அமாஷி நிவர்தன –
விசாகா வித்தியாலயம், கொழும்பு (மூன்றாமிடம்)
4.
ஹன்சபாணி அபேசிங்கே
–மகாநாம கல்லூரி, கண்டி (மூன்றாமிடம்)
5.
நுவாணி நெத்சாரணி –ரத்னாவெலி
பாலிகா வித்தியாலயம், கம்பஹா (மூன்றாமிடம்)
6.
தேவ்னி ரூவாங்க
ஹெமசிங்க –விசாகா வித்தியாலயம், கொழும்பு (நான்காமிடம்)
7.
டி.உத்தார ராஜபக்ச
– தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு (ஐந்தாமிடம்)
8.
ஆர். லாசத்
குணசேகர, தேர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு, (ஆறாமிடம்)
9.
டி.சந்துநிக்க
பளிகக்கார – சுஜாதா வித்தியாலயம், மாத்தறை
10. எ.ஆர்.
அபயடீப மாதரசிங்க – கீர்த்தி அபேயவிக்கிரம
மத்திய கல்லூரி, மொரவக்க.
வாழ்த்துக்கள்
சிறந்த
பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தம்பி தங்கைகளே! எல்லாப் புகழும் இறைவனுக்கே! உங்களது
இந்த வெற்றிக்கு, உங்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் உரித்தாகட்டும்..
இதுவரையும் நீங்கள், மேற்கொண்ட முயற்சிக்கு நீங்கள் சிறந்த அடைவினைப் பெற்றுள்ளீர்கள்.
உங்களால், உங்கள் பாடசாலையும், குடும்பமும், சமூகமும் பெருமையும், மகிழ்வும்
கொண்டுள்ளனர். இனிமேல்தான் நீங்கள் சற்று
கவனாமாக இருக்கவும் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அடைந்த வெற்றியை தக்க வைத்துக்
கொள்ள வேண்டும். கல்விப் பயணத்தில் இது
ஒரு மைற் கல்லே தவிர, இதுவே முடிவல்ல.
இன்னமும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. உயர்தரத்தில், பல்வேறு துறைகளும், தெரிவுப்
பாடங்களும் காணப்படுகின்றன. விஞ்ஞானம், கணிதம், தொழினுட்பம், வர்த்தகம்,கலை என பல
துறைகள் உங்களது தெரிவுக்காக காத்துள்ளன. உங்களுக்கு
எதில் ஆர்வம், ஆற்றல் உள்ளது எனத் துல்லியமாக கணிப்பிட்டும், உங்களது
விருப்பினையும், கருத்திற் கொண்டு தீர்மானம் எடுப்பீர்கள் என நம்புகிறேன். மேலும்,
அடுத்த நகர்வுக்கு தயாராகவும். உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன, என்ன துறையில்,
நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக வரையறை செய்து கொள்ளுங்கள். உங்கள்
இலட்சியங்களை உயர்வானதாகவே அமைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றும் தப்பில்லை.
உங்கள் எதிர்கால இலட்சியங்கள் உங்களுக்கு நன்மைப் பயப்பதாக இருந்தால் இறைவன்
அதை உங்களுக்கு அளித்தே தீருவான். க.பொ.த உயர்தரத்தில் எந்தத்
துறையில், எந்தப் தெரிவுப் பாடங்களை
எடுக்க வேண்டும் என்பதை சற்று நிதானமாக சிந்தித்து திட்டமிட்டுக்
கொள்ளுங்கள். இதற்காக உங்கள் பெற்றோர்,
ஆசிரியர்கள், சகோதரர்கள், ஆகியோரின்
உதவியினையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள். எது வித முன் திட்டமுமின்றி உங்கள் நண்பன்
நண்பி எடுக்கிறார்கள், நானும் அதையே எடுக்கிறேன் என்ற வகையில் தப்பாக முடிவெடுத்து விடாதீர்கள். சென்ற வாரம், எனது பல்கலைக்கழகத்தில் எனக்கு
அறிமுகமாகிய எம்.பீ.பி.எஸ். வைத்தியர் ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. என்ன
டாக்டர் இந்தப் பக்கம் எனக் கேட்ட போது, தான் இப்போது, பௌதிகவியலில் இளமாணிப்
கற்கையை (திறந்த மற்றும் தொலைக்கற்கை முறையில்) மேற்கொள்ளுவதாகவும், டாக்டர்
தொழிலை விட்டு விட்டு தயார் நிறுவன
மொன்றில், தொழில் பார்ப்பதாகவும் கூறினார்.
க.பொ.த. உயர்தரத்தில் தனக்கு கணிதத் துறையிலேயே ஆர்வம் இருந்த போதும்,
வீட்டில் உயிர் விஞ்ஞானம் எடுக்கக் கூறியதால் அவர்களுக்காக அதைப் படித்ததாகவும்
கூறனார். அவர் தந்த பதில் சற்று அதிர்ச்சியாக
இருந்த போதிலும், அதை நான் வெளிகாட்டிக் கொள்ள வில்லை. இச் சம்பவத்தை சற்று உற்று
நோக்குபவர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்
கொள்ளலாம்.
பெறுபேறுகள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லையா? கவலை வேண்டாம்...
பரீட்சைபேறுகள்
வந்தும், பலர் முகங்களில் சந்தோசம் பொங்க, வேறு பலர் கவலை தோய்ந்த முகங்களுடன் காணப்படுவதை காணலாம். இது இயல்பானதுதான். போட்டியென்று
வரும் போது சிலர் ஜெயிப்பதும், சிலர் பின்தங்குவதும் இயல்புதான். அவரவர்
முயற்சிகளுக்கு ஏற்ப பயன்களைப் பெற்று விடுகின்றனர். ஓட்டப்பந்தயத்தில் எல்லோருமே
முதலிடத்தில் வந்து விடுவதில்லை. இதில் முக்கியம் என்னவெனில், ஓட்டப்பந்தயத்தில்
முழுவதுமாக ஓடி முடிப்பதுதான். நீங்களும் அவ்வாறுதான். பரீட்சை எழுதாமல் இருக்கும்
பலபேர் வெளியே இருக்க நீங்கள், பரீட்சையினை எழுதி முடித்து உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள். நீங்கள் எதிர்பார்த்த சிறந்த பெறுபேறுகள் வரவில்லையா! கவலையை
விட்டு விடுங்கள்.
நீங்கள்
நன்றாக எழுதி உரிய பேறுகள் வரவில்லை என்பது உறுதியாக உங்களுக்கு தெரியுமாக
இருந்தால், கவலை வேண்டாம். இருக்கவே
இருக்கிறது... மீள்திருத்த விண்ணப்பம்.
உங்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, இதற்காக உங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த
வருடங்களில், மீள்திருத்தத்தின் பின்னர்
சிறந்த பெறுபேறுகளை நிறையப் பேர் அடைந்துள்ளனர்.
போதிய
சித்திகளைப் பெறவில்லை என்ற கவலையில் சிலர் இருக்கக்கூடும். முதலாவதாக
ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை எம்மிடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன்
நல்லதொன்றை எமக்கு நாடி இருப்பான். அது பற்றி எமக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை.
காலவோட்டத்தில், அது எமக்கு புரிந்துகொள்ளக் கூடியதாயிருக்கும். பரீட்சையானது
ஒருவரின் திறனை மதிப்பிடும் சிறந்த சாதனமன்று. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் பல மாதங்களாக கற்ற
விடயங்களை கணிப்பிடுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. உண்மையில், இத்தைகைய
பரீட்சைகள் மாணவர்களின் குறித்த வயது
மட்டங்களுடன் காணப்படுகின்ற அறிவு,
திறன்களை மதிப்பிடுவதாக இருக்க வேண்டும். எனினும், அறிவினை மட்டும் கணிப்பிடும்
விடயமாகவும், உயர்தர கற்கைப் பிரிவுகளுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் சாதனமாகவே
இன்றைய பரீட்சை முறைகள் காணப்படுகின்றன.
அவை
ஒருபுறமிருக்க, உங்களுக்கு உயர்தரம் படிப்பதற்கு போதிய சித்திகளை கொண்டிருந்தால்,
பொருத்தமான துறையினை தெரிவு செய்து நீங்கள் விட்ட தவறுகளை சரியாகப் புரிந்து
அவற்றை மீண்டும் விடாமல், மேற்கொண்டு கல்வியை தொடருங்கள். இறைவன் உங்களுக்கு
சிறந்த அடைவுகளை உயர்தரத்தில் தருவான். மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்களை நிரூபிப்பதற்கு இன்னமும் கால அவகாசம்
உங்களுக்கு உள்ளது. மீண்டும் உங்கள்ளல் ஜெயித்துக் காட்ட முடியும். பரீட்சை முடிவுகளின் படி க.பொ,த. உயர்தரத்தில்
எந்த துறையில், செல்ல வேண்டும் என உங்கள் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என
பலரும், பல அபிப்பிராயங்களை தருவர். இதில், உங்களுக்கு எந்தத் துறை
விருப்பமாகவும், இயலுமானதாகவும் இருக்கிறது
என்பதை கண்டறிந்து துறைகளை தெரிவு செய்து அதன் வழியே செல்லுவதே சிறந்தாகும்.
இல்லை..உரிய
சித்திகளை பெறத் தவறி விட்டோம்.
அவ்வாறாயின், பரீட்சைத் திணைக்களம்
ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களை
தருகின்றது. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். போதிய வாசிப்புத்திறன்
அற்ற நிலை, வாசித்தவற்றை ஒழுங்காக கிரகித்துக் கொள்ள முடியாத தன்மை, தெரிந்தவற்றை
வார்த்தைகளில் எழுத முடியாத தன்மை, வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டமை, தவறான
நட்புக்கள், உங்கள் பொறுப்புக்களை நீங்கள் சரி வர உணராமை, அலட்சியப் போக்கு போன்ற
இன்னோரன்ன காரணங்களினால் இந்த முறை வாய்ப்புக்களை கோட்டை விட்டிருக்கலாம். நீங்கள்
விட்ட தவறுகளை சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றை மீண்டும் விடாமல், முயற்சி செய்யுங்கள் ,
இன்ஷா அல்லாஹ் வெற்றி உங்களுக்கு நிச்சயம்.
இல்லை..
மேற்கொண்டு செல்ல எண்ணமில்லையா..இலங்கையில், தாராளமாக தொழில்சார் நிறுவனங்கள்
பயிற்சிகளை வழங்குகின்றன. உங்களுக்கு பிடித்த துறையொன்றை இனங்க கண்டு அதில் செல்லுங்கள். இறைவன் இன்னுமொரு துறையில்
உங்களை மிளிர வைப்பான். நாம் அனைவரும் எமக்கே உரிய திறன்கள் பலவற்றைக்
கொண்டுள்ளோம். நாம்தான் அவற்றை சரிவரப் புரிந்து கொள்வதில்லை. எம்மிடம் உள்ள
திறன்களை சரிவர இனங்கண்டு அவற்றை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் எம்மை நாம்
ஈடுபடுத்திக் கொண்டால் எமது எதிர்காலம்
சிறப்புற அமையும். எங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை பாருங்கள்! நான் இங்கு
கூறியவற்றுக்கு பற்பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
பெற்றோர்களே!
சகோதர்களே!
தயவு
செய்து உங்கள் பிள்ளைகளின், உங்கள் தம்பி, தங்கைகளின், பரீட்சைபேறுகளை மற்ற
பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களை, எரிச்சல் ஊட்டாதீர்கள். உங்கள் பிள்ளை ஒரு
பீயும், நான்கு எஸ் களும் எடுத்து விட்டார். பக்கத்து வீட்டில் எட்டு ஏ எடுத்து
இருக்கலாம். அதற்காக அவனோடு அல்லது அவளோடு உங்கள் பிள்ளைகளை தம்பி தங்கைகளை
ஒப்பிட்டு அவர்களுடன் சீறிப் பாயாதீர்கள். அவர்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம் உங்கள் அரவணைப்பும், தெளிவான வழிகாட்டலும்
தான். இத்துடன் வாழ்க்கை முடிந்து
விடுவதில்லை. முதலிடம் பிடித்தவர்கள்
எல்லோரும், வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவதில்லை, இதில் பின்தங்கியவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிடுவதுமில்லை. வாஸ்தவம்தான்...உங்கள்
பிள்ளைகள் பற்றி நிறைய கனவுகள் சுமந்து அவர்களுக்காக நீங்கள் பல திட்டங்களையும்
செலவுகளையும் செய்து இருப்பீர்கள். உங்கள் நிலையில் உங்களுக்கு கவலை ஏற்படுவது,
ஏமாற்றம் ஏற்படுவது இயல்புதான். ஆயினும்,
சகலுதும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது என உறுதியாக நம்புபவர்கள் நாம்.
இறைவன் வேறு சிறந்த ஒன்றை எமது பிள்ளைகளுக்கு நாடி இருக்கலாம். உங்களது ஏச்சும்,
ஒப்பீட்டு பேசுவதும், அவர்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். உங்களது அரவணைப்புக்களும்,
ஆறுதல் வார்த்தைகளும், தைரியமூட்டல்களும், அவர்களை சரியான வழியில் கொண்டு
செல்லும். இலங்கையில், பல்வேறு வாய்ப்புக்கள், துறைகள்
காணப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளின் திறமைகளை சரியாக கணித்து வழிகாட்டுவீர்களாக
இருந்தால், நல்லதொரு எதிர்காலம் உங்கள் பிள்ளைகளுக்கு அமையும்.
காலத்திற்கு தேவையான ஒரு எழுத்தாக்கம் சேர் பயனுள்ள ஒன்று நன்றி சேர்
பதிலளிநீக்கு