கல்விசார் ஆய்வுகளும் மாதிரியெடுப்பு முறைகளும்

கல்விசார் ஆய்வுகளும் மாதிரியெடுப்பு முறைகளும்
                                          Educational Researches and Sampling Methods

                                               கலாநிதி ப.மு. நவாஸ்தீன்
                                               இடைநிலை,மூன்றாம் நிலைக் கல்வித் துறை,
                                               கல்விப்பீடம் 
                                               இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 

குறிப்பு: இக்கட்டுரை இலங்கை திறந்த பல்கலைகழக, கல்விப் பீடத்தினால் வெளியிடப்படும் பார்வை சஞ்சிகை 5 (2015) இல் வெளிவந்த கட்டுரை 


அறிமுகம்

இன்று அனைத்துத் துறைகளிலும் ஆய்வு என்பது முக்கியம் பெற்றும் பிரபல்யமடைந்தும் வருகிறது. 'ஆய்' எனும் வினைச்சொல்லில் இருந்து ஆய்வு எனும் பதம் மருவியது. ஒன்றை மீண்டும் மீண்டும் தேடுவதையே நாம் ஆராய்ச்சி என்கிறோம் (சித்திரபுத்திரன் மற்றும் சண்முகம் 2005). ஆராய்ச்சியானது, பல துல்லியமான விஞ்ஞானத் திறன்களை உள்ளடக்கியதொரு புலமைசார்ந்த விசாரணை என தங்கசாமி (2012) ஆய்வுக்கு விளக்கம் தருகிறார். இதேபோன்று Cresswell (2011) சிறிய தர்க்கரீதியான (காரணகாரிய) படிமுறைகளைக் கொண்ட ஒரு செயன்முறையினை ஆய்வு என்கிறார். இவர்கள் கூறுவது போன்று, ஓர் ஆய்வானது, அது சிறியதாகவோ பெரியதாக இருப்பினும் பல்வேறு ஒழுங்கு முறையான கட்டங்களையும் படிநிலைகளையும் கொண்டதாக விளங்குகிறது. ஆய்வுகளில் ஈடுபடும் நபர்கள், இந்தப் பல்வேறான கட்டங்களையும் படிநிலைகளையும் சரிவரப் புரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். இந்தவகையில், கல்விப்புலத்தில் உள்ளவர்களினைக் கருத்தில் கொண்டு ஆய்வு தொடர்பாக இரு வௌ;வேறான பகுதிகள் இக்கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது. முதலில், கல்விசார் ஆய்வு பற்றிய அறிமுகத்தையும் அதனைத் தொடர்ந்து ஆய்வுகளில் மாதிரியெடுப்பு முறைகள் மற்றும் நுட்பங்கள் பற்றியும் இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது.

கல்விசார் ஆய்வுகள் (Educational Researches)

ஒரு தலைப்பு அல்லது எழுவினா தொடர்பாக எமது விளக்கங்களை அதிகரித்துக் கொள்வதற்காக தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் ஒரு செயன்முறையை ஆய்வு என Cresswell (2011) பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறார். அந்தவகையில், கல்விப்புலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் (Problems)> எழுவினக்கள் (Issues) தொடர்பாக கவனம் செலுத்தி அவை தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெரும் பொருட்டு மேற்கொள்ளப்படும் சகலவிதமான ஆய்வுகளும் கல்விசார் ஆய்வுகள் எனப்படும். மாணவர் கற்றல், நடத்தை, வகுப்பறை இயக்கச் செயற்பாடுகள், ஆசிரியர் கற்பித்தல், ஆசிரியர் பயிற்சி, கலைத்திட்டத் திட்டமிடல், கலைத்திட்ட விருத்தி, அமுலாக்கம், பாடசாலை அதிபர் தலைமைத்துவம், அதிபர் வகிபங்கு என கல்வியுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய இன்னோரன்ன கல்வியுடன் சார்ந்ததாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் கல்விசார் ஆய்வுகளில் அடங்குகின்றன. கல்விசார் அறிவு மற்றும் கற்றல் செயன்முறைகளின் முன்னேற்றம், அதற்குத் தேவையான கருவிகள், முறைகளைத் விருத்தி செய்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு மேற்;கொள்ளப்படும் விசாரணைத் துறையே கல்விசார் ஆய்வு எனவும்  விளக்கமளிக்கப்படுகிறது. கல்வி ஆய்வாளர்கள், வாழ்க்கை வட்டம் முழுவதிலும் எவ்வாறு கற்றல் இடம்பெறுகிறது, கல்வியின் முறையான, முறைசாரா  செயன்முறைகள் எங்கனம் கற்றல் அடைவுகளையும் தரமான வாழ்வினையும் பாதிக்கிறது என விபரித்து விளக்கமளிப்பதனை நோக்கக் கொள்வதாகவும் கூறப்படுகிறது (பார்க்க: American Educational Research Association). கல்விசார் ஆய்வுகள் பல்வேறு நோக்கங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக கல்விப்புலத்தில் காணப்படுகிற நடைமுறைகளை மேம்படுத்தல், அறிவில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புதல், அறிவினை விரிவாக்குதல், அறிவினை மீண்டும் பரிசோதித்துப் பார்த்தல், அறிவுக்கு தனிநபர்களின் பங்களிப்புக்களைச் சேர்த்தல், கொள்கை வகுப்பாளர்களுக்கு கண்டுபிடிப்புக்களை அறிவித்தல் போன்றன இதன் சில நோக்கங்களாகும்.

     கல்விசார் ஆய்வுக்கு Cresswell (2002) பின்வருமாறு விளக்கம் தருகிறார். 'ஓர் ஆய்வுப் பிரச்சினையை அல்லது எழுவினாவை இனங்காண்பதில் இருந்து தொடங்கும் ஒரு சுழற்சி (வட்ட) படிநிலைகளைக் கொண்ட செயன்முறையே கல்விசார் ஆய்வாகும். இது பின்னர், இலக்கிய மீளாய்வு, ஆய்வு நோக்கங்களை குறித்துரைத்தல், தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், தரவு விளக்கமளித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு பின்னர், தரவுப் பெறுபேறுகளை கல்விச் சமூகம் பயன்படுத்தவும் மதிப்பிடவும் வேண்டி அவற்றை ஓர் அறிக்கை வாயிலாக பரவலாக்கும் செயன்முறைகளை இது கொண்டிருக்கும்.' இந்த விளக்கத்தில் Cresswell (2002) ஆறு வகையான ஆய்வுப் படிமுறைகளை சுட்டிக் காட்டுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவையாவன:


  1. ஆய்வுப் பிரச்சினையை இனங்காணுதல் (Identifying a research problem)
  2. இலக்கிய மீளாய்வு செய்தல் (Reviewing the literature)
  3. ஆய்வு நோக்கங்களை குறிப்பிடுதல் (Specifying a purpose for research)
  4. தரவுகளை சேகரித்தல் (Collecting data)
  5. தரவுகள் பகுப்பாய்வு செய்து அவற்றுக்கு விளக்கமளித்தல் (Data analysing and interpreting)
  6. ஆய்வினை அறிக்கைப்படுத்தலும் மதிப்பீடு செய்தலும் (Reporting and evaluating research)
இங்கு குறிப்பட்ட ஆறு படிநிலைகளின் வட்டச் செயன்முறையை உரு 1 இல் காணலாம்.
உரு 1: ஆய்வுப் படிமுறை வட்டம்
மூலம்: Cresswell (2011) இன் உருவினைத் தழுவியது

உரு 1 இல்  காட்டப்பட்ட ஆறு படிகளும், ஓர் ஆய்வினை ஒழுங்குமுறையில் நகர்த்திச் செல்வதற்கான தெளிவான விளக்கமொன்றைத் தருகிறது. பொதுவாக ஆய்வொன்றில் காணப்படும் முக்கிய மூன்று கட்டங்களான: ஒரு வினாவினைத் தொடுத்தல், அவ்வினாவிற்கு விடை தேட தகவல்களைத் திரட்டல், சேகரித்த தரவுகளின்படி விடையினை முன்வைத்தல் என்பனவற்றின் படிநிலைகளாக மேற்கண்ட ஆறும் காணப்படுகின்றன. 

ஆய்வு வகைகள் (Research Types)

பொதுவாக ஆய்வுகள் தொகைசார் (அளவைசார்); ஆய்வுகள் (Quantitative Researches), பண்புசார் ஆய்வுகள் (Qualitative Researches) கலப்பு முறை ஆய்வுகள் (Combined Researches) என மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கப்படுகிறது. கல்விசார் ஆய்வுகளில் ஆய்வாளரின் நோக்கம், ஆய்வின் தன்மை, சூழமைவுக் காரணிகள் ஆகியவற்றின் பொருட்டு ஆய்வின் வகை தீர்மானிக்கப்படுகிறது.

     காணக்கூடிய நிகழ்வுகளினை புள்ளியல் ரீதியாகவோ கணிதம் அல்லது எண் சார்ந்ததாகவோ கணக்கிடக்கூடிய நுட்பமாகவோ மேற்கொள்ளப்படும் முறைசார்ந்த அனுபவவாத விசாரணைகள் தொகைசார் (அளவைசார); ஆய்வுகள் எனப்படுகின்றன. இத்தகைய ஆய்வுகளில் “What?”  எனும் வினாக்களே காணப்படும்.  இந்த அளவைசார் ஆய்வுகளில் பின்வரும் முக்கிய படிகள் காணப்படுவதாக Lodico et al. (2010) குறிப்பிடுகின்றனர்:

  1. இலக்கிய மீளாய்வு மற்றும் கோட்பாடுகள் ஆய்வு வினாவிற்கு இட்டுச் செல்லும்
  2. ஆய்வுக் கருதுகோள் அல்லது வினாவிற்கு விதிதரு காரணப்படுத்தல் இட்டுச் செல்லும்.
  3. எண் சார்ந்த தரவுகள் சேகரிக்கப்படும்.
  4. புள்ளியியல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்
  5. புள்ளியியல் பகுப்பாய்வின்படி கருதுகோள் நிராகரிக்கப்படவோ ஏற்கப்படவோ கூடும் (அல்லது ஆய்வு வினாக்களுக்கு விடைகள் தர்க்க முறையில் முன்வைக்கப்படும்).

மனித நடத்தைகள், அவற்றுக்கான காரணங்களை ஆழமாக விளங்கிக் கொள்ள பண்புசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகளில் why? how? போன்ற ஆய்வு வினாக்களுக்கே விடை தேடப்படும். மாறாக அளவை சார் மற்றும் பண்புசார் ஆய்வுகள் இரண்டினையும் இணைத்த வகையிலும் ஆய்வுகள் செய்யப்படுவதுண்டு. இது இணைந்த (combined) அல்லது கலப்பு முறை ஆய்வுகள் எனப்படும். கல்விசார் ஆய்வுகளில் இத்தகைய ஆய்வுகள் அண்மைக்காலமாக பிரபல்யம் பெற்று வருகிறது. Cresswell (2011) இன் விளக்கத்திற்கேற்ப அளவைசார், பண்புசார் ஆய்வுகளின் பிரதான பண்புகள் அட்டவணை 1 இல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தொடரும்....

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்


க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்து  என்ன செய்யலாம் ...

                                                                              கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
                                                      கல்விப்பீடம்
                                                                                       இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


31.03.2015 அன்று சோனகர் வலைத்தளத்திலும் (http://www.sonakar.com/?p=49539), 04.04.2015 செரண்டிப் பத்திரிகையிலும் வெளிவந்த எனது கட்டுரையின் முழு வடிவம்...



விடிந்தும் விடியாததுமாக  அததெரண வின் குறுஞ்செய்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியதை விசிலடித்துச் விட்டுச் சென்றது.  எனது உறவுகளில் யார் யார் இந்தப் பரிட்சைக்கு தோற்றினர் என பட்டியல் போட்டு, அவர்களுக்கு சொல்லுவோம் என போனை அலற விட்ட போது, மறுபக்கத்தில், ஏற்கனவே இணையம், தொலைபேசி என்பனவற்றின் வழியாக பரீட்சைப் பெறுபேறுகளை அவர்கள் பெற்றுவிட்டது தெரிந்தது.  என்ன ஆச்சரியம்...! இதுவே எங்கள் காலத்தில் பரீட்சை முடிவுகள் தபாலில் பாடசாலையை வந்தடைய  மூன்று நான்கு நாட்கள் ஆகும். பாடசாலையின் அதிபர் ஆர்வமிகுதியால்  பரீட்சை அலுவலகம் சென்று பரீட்சை முடிவுகளை கையில் பெற்று அறிவிக்கும் வரை தவித்த நிலையில்  இருந்திருக்கிறோம்.  ஆனால் இன்றோ இந்நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வளர்ச்சியடைந்து விட்ட  தொழில்நுட்பம் காரணமாக  பரீட்சை முடிவுகள் வெளியாகி மறுகணம்,  தேசிய, மாகாண, மாவட்ட, கல்வி வலய, பாடசாலை மட்டங்களில்  யார் யார் எந்த எந்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதை முகப்புத்தகங்கள் தொடங்கி வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகங்கள் வரை பட்டியல் இட்டு விடுகின்றன.  இந்தவகையில், முடிவுகள் வெளி வந்து ஒருசில மணி நேரத்துக்குள், நாடளாவிய ரீதியில், முதல் பத்து இடங்களை பிடித்தவர்களின்  பெயர்களை ஊடகங்கள்  பட்டியலிட்டு விட்டனர்:
1.    தறிந்து நிர்மால்- நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாமிடம்)
2.    சான்தினி நவன்ஜான – கம்பஹா  (இரண்டாமிடம்)
3.    அமாஷி நிவர்தன – விசாகா வித்தியாலயம், கொழும்பு (மூன்றாமிடம்)
4.    ஹன்சபாணி அபேசிங்கே –மகாநாம கல்லூரி, கண்டி (மூன்றாமிடம்)
5.    நுவாணி நெத்சாரணி –ரத்னாவெலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா  (மூன்றாமிடம்)
6.    தேவ்னி ரூவாங்க ஹெமசிங்க –விசாகா வித்தியாலயம், கொழும்பு  (நான்காமிடம்)
7.    டி.உத்தார ராஜபக்ச – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு (ஐந்தாமிடம்)
8.    ஆர். லாசத் குணசேகர,  தேர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு,  (ஆறாமிடம்)
9.    டி.சந்துநிக்க பளிகக்கார – சுஜாதா வித்தியாலயம், மாத்தறை
10. எ.ஆர். அபயடீப மாதரசிங்க – கீர்த்தி அபேயவிக்கிரம  மத்திய கல்லூரி, மொரவக்க.


வாழ்த்துக்கள்
சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தம்பி தங்கைகளே! எல்லாப் புகழும் இறைவனுக்கே! உங்களது இந்த வெற்றிக்கு, உங்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் உரித்தாகட்டும்.. இதுவரையும் நீங்கள், மேற்கொண்ட முயற்சிக்கு நீங்கள் சிறந்த அடைவினைப் பெற்றுள்ளீர்கள். உங்களால், உங்கள் பாடசாலையும், குடும்பமும், சமூகமும் பெருமையும், மகிழ்வும் கொண்டுள்ளனர்.  இனிமேல்தான் நீங்கள் சற்று கவனாமாக இருக்கவும் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அடைந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கல்விப் பயணத்தில்  இது ஒரு மைற் கல்லே தவிர, இதுவே முடிவல்ல.  இன்னமும் நீங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது.  உயர்தரத்தில், பல்வேறு துறைகளும், தெரிவுப் பாடங்களும் காணப்படுகின்றன. விஞ்ஞானம், கணிதம், தொழினுட்பம், வர்த்தகம்,கலை என பல துறைகள் உங்களது தெரிவுக்காக காத்துள்ளன.  உங்களுக்கு எதில் ஆர்வம், ஆற்றல் உள்ளது எனத் துல்லியமாக கணிப்பிட்டும், உங்களது விருப்பினையும், கருத்திற் கொண்டு தீர்மானம் எடுப்பீர்கள் என நம்புகிறேன். மேலும், அடுத்த நகர்வுக்கு தயாராகவும். உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன, என்ன துறையில், நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக வரையறை செய்து கொள்ளுங்கள். உங்கள் இலட்சியங்களை உயர்வானதாகவே அமைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றும் தப்பில்லை. உங்கள் எதிர்கால இலட்சியங்கள் உங்களுக்கு நன்மைப் பயப்பதாக இருந்தால் இறைவன் அதை  உங்களுக்கு அளித்தே  தீருவான். க.பொ.த உயர்தரத்தில் எந்தத் துறையில்,  எந்தப் தெரிவுப் பாடங்களை எடுக்க வேண்டும் என்பதை சற்று நிதானமாக சிந்தித்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.  இதற்காக உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், சகோதரர்கள்,  ஆகியோரின் உதவியினையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.  எது வித முன் திட்டமுமின்றி உங்கள் நண்பன் நண்பி எடுக்கிறார்கள், நானும் அதையே எடுக்கிறேன்  என்ற வகையில்  தப்பாக முடிவெடுத்து விடாதீர்கள்.  சென்ற வாரம், எனது பல்கலைக்கழகத்தில் எனக்கு அறிமுகமாகிய எம்.பீ.பி.எஸ். வைத்தியர் ஒருவரை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. என்ன டாக்டர் இந்தப் பக்கம் எனக் கேட்ட போது, தான் இப்போது, பௌதிகவியலில் இளமாணிப் கற்கையை (திறந்த மற்றும் தொலைக்கற்கை முறையில்) மேற்கொள்ளுவதாகவும், டாக்டர் தொழிலை  விட்டு விட்டு தயார் நிறுவன மொன்றில், தொழில் பார்ப்பதாகவும் கூறினார்.  க.பொ.த. உயர்தரத்தில் தனக்கு கணிதத் துறையிலேயே ஆர்வம் இருந்த போதும், வீட்டில் உயிர் விஞ்ஞானம் எடுக்கக் கூறியதால் அவர்களுக்காக அதைப் படித்ததாகவும் கூறனார். அவர் தந்த பதில் சற்று அதிர்ச்சியாக  இருந்த போதிலும், அதை நான் வெளிகாட்டிக் கொள்ள வில்லை.  இச் சம்பவத்தை சற்று உற்று நோக்குபவர்களுக்கு  நிறைய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
பெறுபேறுகள் எதிர்பார்த்த வகையில்  அமையவில்லையா? கவலை வேண்டாம்...
பரீட்சைபேறுகள் வந்தும், பலர் முகங்களில் சந்தோசம் பொங்க, வேறு பலர் கவலை தோய்ந்த முகங்களுடன்  காணப்படுவதை காணலாம். இது இயல்பானதுதான். போட்டியென்று வரும் போது சிலர் ஜெயிப்பதும், சிலர் பின்தங்குவதும் இயல்புதான். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப பயன்களைப் பெற்று விடுகின்றனர். ஓட்டப்பந்தயத்தில் எல்லோருமே முதலிடத்தில் வந்து விடுவதில்லை. இதில் முக்கியம் என்னவெனில், ஓட்டப்பந்தயத்தில் முழுவதுமாக ஓடி முடிப்பதுதான். நீங்களும் அவ்வாறுதான். பரீட்சை எழுதாமல் இருக்கும் பலபேர் வெளியே இருக்க நீங்கள், பரீட்சையினை எழுதி முடித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் எதிர்பார்த்த சிறந்த பெறுபேறுகள் வரவில்லையா! கவலையை விட்டு விடுங்கள்.
நீங்கள் நன்றாக எழுதி உரிய பேறுகள் வரவில்லை என்பது உறுதியாக உங்களுக்கு தெரியுமாக இருந்தால்,  கவலை வேண்டாம். இருக்கவே இருக்கிறது... மீள்திருத்த விண்ணப்பம்.  உங்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி,  இதற்காக உங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். கடந்த வருடங்களில்,  மீள்திருத்தத்தின் பின்னர் சிறந்த பெறுபேறுகளை நிறையப் பேர் அடைந்துள்ளனர்.
போதிய சித்திகளைப் பெறவில்லை என்ற கவலையில் சிலர் இருக்கக்கூடும். முதலாவதாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை எம்மிடம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவன் நல்லதொன்றை எமக்கு நாடி இருப்பான். அது பற்றி எமக்கு இப்போது தெரிய வாய்ப்பில்லை. காலவோட்டத்தில், அது எமக்கு புரிந்துகொள்ளக் கூடியதாயிருக்கும். பரீட்சையானது ஒருவரின் திறனை மதிப்பிடும் சிறந்த சாதனமன்று. இரண்டு அல்லது மூன்று  மணித்தியாலங்களுக்குள் பல மாதங்களாக கற்ற விடயங்களை கணிப்பிடுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. உண்மையில், இத்தைகைய பரீட்சைகள் மாணவர்களின் குறித்த  வயது மட்டங்களுடன்  காணப்படுகின்ற அறிவு, திறன்களை மதிப்பிடுவதாக இருக்க வேண்டும்.   எனினும், அறிவினை மட்டும் கணிப்பிடும் விடயமாகவும், உயர்தர கற்கைப் பிரிவுகளுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் சாதனமாகவே இன்றைய பரீட்சை முறைகள் காணப்படுகின்றன.     
அவை ஒருபுறமிருக்க, உங்களுக்கு உயர்தரம் படிப்பதற்கு போதிய சித்திகளை கொண்டிருந்தால், பொருத்தமான துறையினை தெரிவு செய்து நீங்கள் விட்ட தவறுகளை சரியாகப் புரிந்து அவற்றை மீண்டும் விடாமல், மேற்கொண்டு கல்வியை தொடருங்கள். இறைவன் உங்களுக்கு சிறந்த அடைவுகளை உயர்தரத்தில் தருவான். மனம் தளர்ந்து விடாதீர்கள்.  உங்களை நிரூபிப்பதற்கு இன்னமும் கால அவகாசம் உங்களுக்கு உள்ளது. மீண்டும் உங்கள்ளல் ஜெயித்துக் காட்ட முடியும்.  பரீட்சை முடிவுகளின் படி க.பொ,த. உயர்தரத்தில் எந்த துறையில், செல்ல வேண்டும் என உங்கள் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும், பல அபிப்பிராயங்களை தருவர். இதில், உங்களுக்கு எந்தத் துறை விருப்பமாகவும், இயலுமானதாகவும்  இருக்கிறது என்பதை கண்டறிந்து துறைகளை தெரிவு செய்து அதன் வழியே செல்லுவதே சிறந்தாகும்.
இல்லை..உரிய சித்திகளை பெறத் தவறி விட்டோம்.  அவ்வாறாயின், பரீட்சைத் திணைக்களம்  ஒன்றுக்கு மேற்பட்ட  சந்தர்ப்பங்களை தருகின்றது. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். போதிய வாசிப்புத்திறன் அற்ற நிலை, வாசித்தவற்றை ஒழுங்காக கிரகித்துக் கொள்ள முடியாத தன்மை, தெரிந்தவற்றை வார்த்தைகளில் எழுத முடியாத தன்மை, வீண் விளையாட்டுக்களில் ஈடுபட்டமை, தவறான நட்புக்கள், உங்கள் பொறுப்புக்களை நீங்கள் சரி வர உணராமை, அலட்சியப் போக்கு போன்ற இன்னோரன்ன காரணங்களினால் இந்த முறை வாய்ப்புக்களை கோட்டை விட்டிருக்கலாம். நீங்கள் விட்ட தவறுகளை சரியாகப் புரிந்துகொண்டு,  அவற்றை மீண்டும் விடாமல், முயற்சி செய்யுங்கள் , இன்ஷா அல்லாஹ் வெற்றி உங்களுக்கு நிச்சயம்.
இல்லை.. மேற்கொண்டு செல்ல எண்ணமில்லையா..இலங்கையில், தாராளமாக தொழில்சார் நிறுவனங்கள் பயிற்சிகளை வழங்குகின்றன. உங்களுக்கு பிடித்த துறையொன்றை இனங்க கண்டு  அதில் செல்லுங்கள். இறைவன் இன்னுமொரு துறையில் உங்களை மிளிர வைப்பான். நாம் அனைவரும் எமக்கே உரிய திறன்கள் பலவற்றைக் கொண்டுள்ளோம். நாம்தான் அவற்றை சரிவரப் புரிந்து கொள்வதில்லை. எம்மிடம் உள்ள திறன்களை சரிவர இனங்கண்டு அவற்றை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் எம்மை நாம் ஈடுபடுத்திக் கொண்டால்  எமது எதிர்காலம் சிறப்புற அமையும். எங்களைச் சுற்றியுள்ள சமூகத்தை பாருங்கள்! நான் இங்கு கூறியவற்றுக்கு பற்பல உதாரணங்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள். 
பெற்றோர்களே! சகோதர்களே!
தயவு செய்து உங்கள் பிள்ளைகளின், உங்கள் தம்பி, தங்கைகளின், பரீட்சைபேறுகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களை, எரிச்சல் ஊட்டாதீர்கள். உங்கள் பிள்ளை ஒரு பீயும், நான்கு எஸ் களும் எடுத்து விட்டார். பக்கத்து வீட்டில் எட்டு ஏ எடுத்து இருக்கலாம். அதற்காக அவனோடு அல்லது அவளோடு உங்கள் பிள்ளைகளை தம்பி தங்கைகளை ஒப்பிட்டு அவர்களுடன் சீறிப் பாயாதீர்கள்.  அவர்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம்  உங்கள் அரவணைப்பும், தெளிவான வழிகாட்டலும் தான்.  இத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை.  முதலிடம் பிடித்தவர்கள் எல்லோரும், வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவதில்லை, இதில் பின்தங்கியவர்கள்  வாழ்க்கையில் தோற்றுவிடுவதுமில்லை. வாஸ்தவம்தான்...உங்கள் பிள்ளைகள் பற்றி நிறைய கனவுகள் சுமந்து அவர்களுக்காக நீங்கள் பல திட்டங்களையும் செலவுகளையும் செய்து இருப்பீர்கள். உங்கள் நிலையில் உங்களுக்கு கவலை ஏற்படுவது, ஏமாற்றம் ஏற்படுவது இயல்புதான். ஆயினும்,  சகலுதும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது என உறுதியாக நம்புபவர்கள் நாம். இறைவன் வேறு சிறந்த ஒன்றை எமது பிள்ளைகளுக்கு நாடி இருக்கலாம். உங்களது ஏச்சும், ஒப்பீட்டு பேசுவதும், அவர்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும். உங்களது அரவணைப்புக்களும், ஆறுதல் வார்த்தைகளும், தைரியமூட்டல்களும், அவர்களை சரியான வழியில் கொண்டு செல்லும்.   இலங்கையில், பல்வேறு வாய்ப்புக்கள், துறைகள் காணப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளின் திறமைகளை சரியாக கணித்து வழிகாட்டுவீர்களாக இருந்தால், நல்லதொரு எதிர்காலம் உங்கள் பிள்ளைகளுக்கு அமையும்.



கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...