சமூகமயமாக்கல்

 


சமூகமயமாக்கல் 

Socialization
கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 


அறிமுகம் 

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கே உரித்தான தனித்துவ பண்புகளுடன் வாழும் சிறிய அல்லது பெரிய மக்கள் குழுவை சமூகம் எனலாம். குறிக்கும். சமூகம் என்பது ஒரு சிக்கலான அமைப்பாகும். சமூகமானது மக்கள் குழு, அவர்க்ளின் நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், மொழி, பழக்க வழங்கங்கள் மற்றும் பண்பாடுகள் போன்ற பல்வேறு கூறுகளால் ஆனதாகக்  காணப்படும். சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நியமங்கள்விழுமியங்கள்நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை கற்றுக்கொள்வதற்கான செயன்முறையாகும். இது ஒரு நபரை ஒரு சமூகத்தின் உறுப்பினராக மாற்றுகின்றது.  சமூகமயமாக்கல் என்பது ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு செயன்முறையாகும். இது ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து தொடங்கி, பெரியவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் வரை தொடர்வதாக உள்ளது.

சமூகமயமாக்கல் என்பது சமூக செயன்முறையாகும், இதன் மூலம் நாம் நமது ஆளுமைகளையும் மனித ஆற்றலையும் விருத்தி செய்து  கொண்டு நமது சமூகம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

சமூகமயமாக்கல் மூலம், சமூகத்தில் வாழும் தனிநபர்கள் சமூகத்தின், மொழி, நியமங்கள் (விதிமுறைகள்), விழுமியங்கள், நம்பிக்கைகள்,சமபிரதாயங்கள், சமூகத்திறன்கள் போன்றவற்றை கற்றுக் கொடுக்கின்றது. இதன் மூலம், குறித்த தனிநபர், சம்மோத்தில் இணைந்து வாழும் திறன்களை அடைந்து கொள்கிறார். 

சமூகமயமாக்கல் வகைகள்

சமூகமயமாக்கல், பிரதானமாக முதனிலை சமூகமயமாக்கல், இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் என இரு வகைகளாக நோக்கப்படுகிறது.

முதனிலை சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது ஆரம்ப காலங்களில் பெற்றுக்கொள்ளும் சமூகமயமாக்கல் ஆகும். இது பொதுவாக குடும்பம், சகபாடிகள் அயலவர்கள், சமூக நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறது. இதில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வகிபங்கும்,  குடும்பத்தினரின் பங்களிப்பும் அளப்பரியது. ஒருவர் எப்படி  பல் துலக்குவதில் இருந்து சமூகத்தில் எவ்வாறு ஒழுகி நடக்க வேண்டும் போன்ற சகலவிதமான விடயங்களையும்  இங்கிருந்தே கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர்.

சமூகமயமாக்கல் செயன்முறையில், குடும்பத்தினை விட்டும் வெளியே உள்ள நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறும் சமூகமயமாக்கல் அனுபவம், இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் எனப்படும். இதில் பாடசாலைகள், சகபாடிகள், வேலைத்தளங்கள், ஊடகங்கள், சமூக-சமய நிறுவனங்கள்  போன்றன உள்ளடங்குகின்றன. இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் மூலம், நாளாந்தம் நபர் ஒருவர் புதிய பல அறிவு, அனுபங்கள், திறன்கள் போன்றவற்றைப்  பெறுபவராக இருப்பார்.

சமூகமயமாக்கலின் வேறு வகைகள்

இப்பிரதான வகைகளுக்கு மேலதிகமாக சமூகமயமாக்களில்

  • எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் Anticipatory Socialization,
  • பால்நிலை சமூகமயமாக்கல் Gender,
  • இனத்துவ சமூகமயமாக்கல் Race,
  • வகுப்பு சமூகமயமாக்கல் Class Socialization
  • மீள் சமூகமயமாக்கல் Resocialization என்ற நுண்-வகைகளும் முக்கியம் பெறுகின்றன.
எதிர்பார்க்கை சமூகமயமாக்கல்

எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் சேருவதற்காக முன்கூட்டியே தயாராகும் செயன்முறையாகும். இது பொதுவாக ஒரு நபர் அந்த சமூகக்குழுவின் நியமங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை கற்றுக்கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.உதாரணமாக, நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவிற்கு இடம்பெயர்வதற்கு ஆயத்தமாகிறீர்கள் எனக் எண்ணிக் கொள்க. இதன்போது, கனடா நாட்டின் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப உங்களை இப்போதில் இருந்து தயார்படுத்த தொடக்கி இருப்பீர்கள். இத்தகைய முன் கூட்டியே  தயாராகும் செயன்முறை எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் எனப்படும். இந்த எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நபருக்கு புதிய சமூகக் குழுவில் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்ய உதவுகிறது.

பால்நிலை  சமூகமயமாக்கல்

பால்நிலை  சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தங்கள் பால் நிலையைப்  பற்றிய சமூக (நியமங்கள்) விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கற்றுக்கொள்ளும் செயன்முறையாகும். இது ஒரு நபர் அவர்களின் பாலின அடையாளம், பாலின பாத்திரங்கள் மற்றும் பாலின உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் புரிதலை விருத்தி செய்ய உதவுகிறது. இச்செயன்முறை  குழந்தை பிறந்ததில்  இருந்து ஆ ரம்பித்து விடுவதை காணலாம். புதிதாக பிறந்த ஆண்  குழந்தைக்கு நீல நிற ஆடைகளையும் பெண் பிள்ளைகளுக்கு இளஞ்சிவப்பு ஆடைகளை அணிவிப்பது, பெயர்களில் பால் வேறுபாடு காட்டுவது எனபதில் இருந்து இப் பால்நிலை சமூகமயமாக்கல் செயன்முறை ஆரம்பித்து விடுகிறது. இது ஒரு வகையில் எதிர்பார்க்கை சமூகமயமாக்கலாகக் கருதலாம்.

இனத்துவ சமுகமயமாக்கல்

இனத்துவ சமுகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது  இனத்தைப் பற்றிய சமூக நியமங்கள் (விதிமுறைகள்) மற்றும் எதிர்பார்ப்புகளைக் கற்றுக்கொள்ளும் செயன் முறையாகும். இது ஒரு நபர் அவர்களின் இன அடையாளம், இன பாத்திரங்கள் மற்றும் இன உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் புரிதலை உருவாக்குகிறது. இனத்துவ சமூகமயமாக்கல் ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு செயன்முறையாகும். 

 மீள்-சமூகமயமாக்கல்

சமூகவியலில், மீள்-சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தங்கள் சமூக நியமங்கள் (விதிமுறைகள்), நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை முழுமையாக அல்லது பெருமளவில் மாற்றி அமைத்துக் கொள்ளும்  செயன்முறையாகும். மீள் -சமூகமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான மற்றும் சவாலான செயன் முறையாகும். இது ஒருவர் விரும்பியும் அல்லது விரும்பாமலும் நிகழலாம். இது ஒரு நபர் ஏற்கனவே கொண்டுள்ள சமூகமயமாக்கல் அனுபங்களை மாற்றி அமைக்கின்றன.இதுவும்,  ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழக்கூடிய ஒரு செயன்முறையாகும், ஆனால் இது பொதுவாக வாழக்கையில் ஏற்படும் முக்கியமான   மாற்றங்களின்  விளைவாக ஏற்படுவதாக இருக்கும். இதற்கான  உதாரணங்கள் வருமாறு:

  • பிள்ளை பாடசாலை செல்ல ஆரம்பித்தல் - இதன்போது வீட்டில், குடும்பத்தின் இதுவரை கற்றுக்கொண்ட சமூகமயமாக்கல் அனுபவங்களை விடவும் புதிய சமூகமயமாக்கல் அனுபவங்களை பெறாத தொடங்குதல்
  • ஒருவர் புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்கும்போது, அவர்கள் அந்த தொழிலின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்கள் நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும்.
  • திருமணம் செய்தல், குழந்தைக்கு தாயாகுதல்
  • புதிய நாடு ஒன்றுக்கு வாழப் புலம் பெயர்தல்
  • நன்னடத்தை பள்ளியில் சேர்க்கப்படல்
  • ஒரு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் சிறைச்சாலையின் விதிமுறைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு தங்கள் நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும்.


மொத்த நிறுவனங்களின் (Total Institutions) சமூகமயமாக்கல்

கடினமான மீள்சமூகமயமாக்கல் செயன்முறையில் ஈடுபடும் நிறுவனங்களை  மொத்த நிறுவனங்கள்  என்பர். வெளியுலகில் இருந்து முழுமையாக துண்டித்த வகையில் நபர்களை கட்டுப்படான சூழமைவுகளில் வைத்து புதிய சமூகமயமாக்கல் செயன்முறைக்குள் உட்படுத்தும் நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். மொத்த நிருவனங்கள்   பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டவை, அதாவது குற்றவாளிகளை மறுவாழ்வு செய்தல், நோயாளிகளை சிகிச்சை செய்தல் அல்லது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல், இராணுவ  வீரர்களை உருவாக்குதல், மத குருமார்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் இதில் அடங்கும். சிறைச்சாலைகள், மனநல மருத்துவமனைகள், ஆசிரமங்கள், இராணுவப் பாடசாலைகள் மொத்த நிறுவனங்களுக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

இந்த இணைப்பினை  சொடுக்குக: உளவியல் கோட்பாடுகளின் பார்வையில் சமூகமயமாக்கல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...