சமூகமயமாக்கல்

 


சமூகமயமாக்கல் 

Socialization
கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 


அறிமுகம் 

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தமக்கே உரித்தான தனித்துவ பண்புகளுடன் வாழும் சிறிய அல்லது பெரிய மக்கள் குழுவை சமூகம் எனலாம். குறிக்கும். சமூகம் என்பது ஒரு சிக்கலான அமைப்பாகும். சமூகமானது மக்கள் குழு, அவர்க்ளின் நியமங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், மொழி, பழக்க வழங்கங்கள் மற்றும் பண்பாடுகள் போன்ற பல்வேறு கூறுகளால் ஆனதாகக்  காணப்படும். சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நியமங்கள்விழுமியங்கள்நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை கற்றுக்கொள்வதற்கான செயன்முறையாகும். இது ஒரு நபரை ஒரு சமூகத்தின் உறுப்பினராக மாற்றுகின்றது.  சமூகமயமாக்கல் என்பது ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு செயன்முறையாகும். இது ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து தொடங்கி, பெரியவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் வரை தொடர்வதாக உள்ளது.

சமூகமயமாக்கல் என்பது சமூக செயன்முறையாகும், இதன் மூலம் நாம் நமது ஆளுமைகளையும் மனித ஆற்றலையும் விருத்தி செய்து  கொண்டு நமது சமூகம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

சமூகமயமாக்கல் மூலம், சமூகத்தில் வாழும் தனிநபர்கள் சமூகத்தின், மொழி, நியமங்கள் (விதிமுறைகள்), விழுமியங்கள், நம்பிக்கைகள்,சமபிரதாயங்கள், சமூகத்திறன்கள் போன்றவற்றை கற்றுக் கொடுக்கின்றது. இதன் மூலம், குறித்த தனிநபர், சம்மோத்தில் இணைந்து வாழும் திறன்களை அடைந்து கொள்கிறார். 

சமூகமயமாக்கல் வகைகள்

சமூகமயமாக்கல், பிரதானமாக முதனிலை சமூகமயமாக்கல், இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் என இரு வகைகளாக நோக்கப்படுகிறது.

முதனிலை சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது ஆரம்ப காலங்களில் பெற்றுக்கொள்ளும் சமூகமயமாக்கல் ஆகும். இது பொதுவாக குடும்பம், சகபாடிகள் அயலவர்கள், சமூக நிறுவனங்கள் மூலம் கிடைக்கப்பெறுகிறது. இதில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வகிபங்கும்,  குடும்பத்தினரின் பங்களிப்பும் அளப்பரியது. ஒருவர் எப்படி  பல் துலக்குவதில் இருந்து சமூகத்தில் எவ்வாறு ஒழுகி நடக்க வேண்டும் போன்ற சகலவிதமான விடயங்களையும்  இங்கிருந்தே கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றனர்.

சமூகமயமாக்கல் செயன்முறையில், குடும்பத்தினை விட்டும் வெளியே உள்ள நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறும் சமூகமயமாக்கல் அனுபவம், இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் எனப்படும். இதில் பாடசாலைகள், சகபாடிகள், வேலைத்தளங்கள், ஊடகங்கள், சமூக-சமய நிறுவனங்கள்  போன்றன உள்ளடங்குகின்றன. இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் மூலம், நாளாந்தம் நபர் ஒருவர் புதிய பல அறிவு, அனுபங்கள், திறன்கள் போன்றவற்றைப்  பெறுபவராக இருப்பார்.

சமூகமயமாக்கலின் வேறு வகைகள்

இப்பிரதான வகைகளுக்கு மேலதிகமாக சமூகமயமாக்களில்

  • எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் Anticipatory Socialization,
  • பால்நிலை சமூகமயமாக்கல் Gender,
  • இனத்துவ சமூகமயமாக்கல் Race,
  • வகுப்பு சமூகமயமாக்கல் Class Socialization
  • மீள் சமூகமயமாக்கல் Resocialization என்ற நுண்-வகைகளும் முக்கியம் பெறுகின்றன.
எதிர்பார்க்கை சமூகமயமாக்கல்

எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவில் சேருவதற்காக முன்கூட்டியே தயாராகும் செயன்முறையாகும். இது பொதுவாக ஒரு நபர் அந்த சமூகக்குழுவின் நியமங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை கற்றுக்கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.உதாரணமாக, நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவிற்கு இடம்பெயர்வதற்கு ஆயத்தமாகிறீர்கள் எனக் எண்ணிக் கொள்க. இதன்போது, கனடா நாட்டின் சமூக நிலைமைகளுக்கு ஏற்ப உங்களை இப்போதில் இருந்து தயார்படுத்த தொடக்கி இருப்பீர்கள். இத்தகைய முன் கூட்டியே  தயாராகும் செயன்முறை எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் எனப்படும். இந்த எதிர்பார்க்கை சமூகமயமாக்கல் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நபருக்கு புதிய சமூகக் குழுவில் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்ய உதவுகிறது.

பால்நிலை  சமூகமயமாக்கல்

பால்நிலை  சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தங்கள் பால் நிலையைப்  பற்றிய சமூக (நியமங்கள்) விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கற்றுக்கொள்ளும் செயன்முறையாகும். இது ஒரு நபர் அவர்களின் பாலின அடையாளம், பாலின பாத்திரங்கள் மற்றும் பாலின உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் புரிதலை விருத்தி செய்ய உதவுகிறது. இச்செயன்முறை  குழந்தை பிறந்ததில்  இருந்து ஆ ரம்பித்து விடுவதை காணலாம். புதிதாக பிறந்த ஆண்  குழந்தைக்கு நீல நிற ஆடைகளையும் பெண் பிள்ளைகளுக்கு இளஞ்சிவப்பு ஆடைகளை அணிவிப்பது, பெயர்களில் பால் வேறுபாடு காட்டுவது எனபதில் இருந்து இப் பால்நிலை சமூகமயமாக்கல் செயன்முறை ஆரம்பித்து விடுகிறது. இது ஒரு வகையில் எதிர்பார்க்கை சமூகமயமாக்கலாகக் கருதலாம்.

இனத்துவ சமுகமயமாக்கல்

இனத்துவ சமுகமயமாக்கல் என்பது ஒரு நபர் தனது  இனத்தைப் பற்றிய சமூக நியமங்கள் (விதிமுறைகள்) மற்றும் எதிர்பார்ப்புகளைக் கற்றுக்கொள்ளும் செயன் முறையாகும். இது ஒரு நபர் அவர்களின் இன அடையாளம், இன பாத்திரங்கள் மற்றும் இன உறவுகள் ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் புரிதலை உருவாக்குகிறது. இனத்துவ சமூகமயமாக்கல் ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழும் ஒரு செயன்முறையாகும். 

 மீள்-சமூகமயமாக்கல்

சமூகவியலில், மீள்-சமூகமயமாக்கல் என்பது ஒரு நபர் தங்கள் சமூக நியமங்கள் (விதிமுறைகள்), நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை முழுமையாக அல்லது பெருமளவில் மாற்றி அமைத்துக் கொள்ளும்  செயன்முறையாகும். மீள் -சமூகமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான மற்றும் சவாலான செயன் முறையாகும். இது ஒருவர் விரும்பியும் அல்லது விரும்பாமலும் நிகழலாம். இது ஒரு நபர் ஏற்கனவே கொண்டுள்ள சமூகமயமாக்கல் அனுபங்களை மாற்றி அமைக்கின்றன.இதுவும்,  ஒரு வாழ்நாள் முழுவதும் நிகழக்கூடிய ஒரு செயன்முறையாகும், ஆனால் இது பொதுவாக வாழக்கையில் ஏற்படும் முக்கியமான   மாற்றங்களின்  விளைவாக ஏற்படுவதாக இருக்கும். இதற்கான  உதாரணங்கள் வருமாறு:

  • பிள்ளை பாடசாலை செல்ல ஆரம்பித்தல் - இதன்போது வீட்டில், குடும்பத்தின் இதுவரை கற்றுக்கொண்ட சமூகமயமாக்கல் அனுபவங்களை விடவும் புதிய சமூகமயமாக்கல் அனுபவங்களை பெறாத தொடங்குதல்
  • ஒருவர் புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்கும்போது, அவர்கள் அந்த தொழிலின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தங்கள் நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும்.
  • திருமணம் செய்தல், குழந்தைக்கு தாயாகுதல்
  • புதிய நாடு ஒன்றுக்கு வாழப் புலம் பெயர்தல்
  • நன்னடத்தை பள்ளியில் சேர்க்கப்படல்
  • ஒரு குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டால், அவர்கள் சிறைச்சாலையின் விதிமுறைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு தங்கள் நடத்தைகளை மாற்றியமைக்க வேண்டும்.


மொத்த நிறுவனங்களின் (Total Institutions) சமூகமயமாக்கல்

கடினமான மீள்சமூகமயமாக்கல் செயன்முறையில் ஈடுபடும் நிறுவனங்களை  மொத்த நிறுவனங்கள்  என்பர். வெளியுலகில் இருந்து முழுமையாக துண்டித்த வகையில் நபர்களை கட்டுப்படான சூழமைவுகளில் வைத்து புதிய சமூகமயமாக்கல் செயன்முறைக்குள் உட்படுத்தும் நிறுவனங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். மொத்த நிருவனங்கள்   பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டவை, அதாவது குற்றவாளிகளை மறுவாழ்வு செய்தல், நோயாளிகளை சிகிச்சை செய்தல் அல்லது பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல், இராணுவ  வீரர்களை உருவாக்குதல், மத குருமார்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் இதில் அடங்கும். சிறைச்சாலைகள், மனநல மருத்துவமனைகள், ஆசிரமங்கள், இராணுவப் பாடசாலைகள் மொத்த நிறுவனங்களுக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

இந்த இணைப்பினை  சொடுக்குக: உளவியல் கோட்பாடுகளின் பார்வையில் சமூகமயமாக்கல் 

சமூக அடுக்கமைவு , சமூக வகுப்பு மற்றும் சமூக அசைவு


 


சமூக அடுக்கமைவு, சமூக வகுப்பு மற்றும் சமூக அசைவு

கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 

அறிமுகம் 

ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் தனித்துவமான பண்புகளைக் கொண்டு கூட்டாக வாழும்போது சமூகம் உருவாகுகின்றன. சமூகம், அளவில் சிறிதாகவோ பெரிதாகவோ காணப்பாடலாம். சமூகங்கள் ஒரே மாதிரியானவை அல்ல. அது வேறுபாடுகள்/வித்தியாசங்களை கொண்டது. பன்முகத்தன்மை கொண்டது. மனிதனின் உயிரியல், சூழல் காரணிகள், மற்றும் சமூகக் காரணிகளின் அடிப்படையில் இந்த வேறுபாடுகள் உருவாகுகின்றன. இனம், சமயம், வயது, பால்நிலை, தனிப்பட்ட குணங்கள், தொழில்கள் , அதிகாரம், அந்தஸ்து, செல்வம், கல்விநிலை, வருமானம், அனுபவம்போன்ற காரணிகள் சமூகத்தில் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கின்றன.   இவை  சமூகத்தில் சமத்துவமற்ற நிலையினைத் தோற்றுவிக்கின்றன. இச்சமத்துவமற்ற நிலைமைகள் சமூக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகின்றன. இதன் மூலம், ஒரு சிலர் உயர்ந்தவர்களாகவும்,  இன்னும் சிலர்  தாழ்நிலையிலும் வைத்து நோக்கப்படுகின்றனர். இது சமூகத்தில் பல்வேறு படித்தரங்களை உருவாக்கி விடுகின்றன.  இதுவே சமூக சமூக அடுக்கமைவு எனப்படும்.

சமூக அடுக்கமைவு

சமூக அடுக்கமைவு என்பதை ஆங்கிலத்தில் Social Stratification என்பர். அனைத்து சமூகங்களும் தங்கள் உறுப்பினர்களை உயர்வு  (superiority), தாழ்வு (inferiority) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்கமைக்கின்றன. மக்கள் தமக்கிடையில் தொடர்புறுதல் அல்லது வேறுபடுத்திக் கொள்வதன் காரணமாக உருவாகும் ஒரு செயன்முறையாக சமூக அடுக்கமைவு உள்ளது. இதன்மூலம் சிலர் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்படுவார்கள். தனிநபர்களையும், சமூகக்  குழுக்களையும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில்  அடுக்கு வரிசைக்கு ஏற்ப அல்லது  சமூக நிலைகளின் சமத்துவமின்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும்போது, சமூக அடுக்கமைவு தோற்றம் பெறுகிறது. 

சமூகத்தை இனம்சமயம்வயதுபால்நிலைதனிப்பட்ட குணங்கள்தொழில்கள் அதிகாரம்அந்தஸ்துசெல்வம்கல்விநிலைவருமானம்அனுபவம்,  போன்ற  காரணிகளின் அடிப்படையில் வெவ்வேறு அடுக்குகளாக பிரித்து நோக்க முடியும்.  இது   சமூக அடுக்கமைவினை  மேலிருந்து கீழான  வரிசைமுறையில் எடுத்துக்காட்டும்.  இதன்போது, ஒரு குறிப்பிட்ட அடுக்கின் உறுப்பினர்கள் பொதுவான அடையாளங்களைக்  கொண்டிருப்பர். இதனை குறித்த அடுக்கமைவின் சமூக வகுப்பு எனலாம். 

சமூக அடுக்கமைவு வரலாறு - சுருக்கம்

சமூக அடுக்கமைவு எவ்வாறு தோற்றம் பெற்று இருக்கலாம் என்பதை விளங்க மனித வரலாறு நெடுகிலும் நாம் ஆராய்ந்து நோக்க வேண்டியுள்ளது. இங்கு அதனை சுருக்கமாக முன்வைக்கிறேன்:

ஆரம்பகால சமூகங்கள்ஆரம்பகால சமூகங்களை நோக்கும் போது, மனிதன் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கவில்லை. உணவுவினை சேகரிப்பனவாகவும்,  வேட்டையாடுபவனாவும் காணப்பட்டான். வேட்டையாடுதல் மற்றும் உணவினை  சேகரிக்கும்  காலத்தில், சமூகங்களிடையே அதிகளவு வேறுபாடுகள் இருந்திருக்காது என்றே கருத முடிகிறது. மனிதர்களிடேயே, வேறுபாடுகளை விடவும் சமமான சமூக நிலைமைகளே  இருந்திருக்கும்.  இத்தகைய சமூகத்தில், பலசாலி, வேட்டையாடும் திறமை அல்லது வயது அடிப்படையில் சமூக அடுக்கமைவு தோன்றிருக்கக்கூடும்.

ஆரம்பகால வேளாண்மைச்  சமூகங்கள் மனிதன் விவசாய முறையினை தெரிந்து  கொண்டதன் பின்னர், ஆற்றோர சமவெளிகளில் நிலையான குடியிருப்புக்களை உருவாக்கி, குடும்பங்களாக வாழத் தலைப்பட்டான். இதன்போது , குடும்ப வாழ்க்கை முறை, உணவு உற்பத்தி அதிகரிப்பு என்பன முன்னரை விட சிக்கலான சமூகப் படித்தரங்களை உருவாக்கி இருக்கக்கூடும். பல்வேறு உணவுகளை பயிரிடும் விவசாயிகள், கைவினைஞர்கள், பூசாரிகள் போன்ற சமூகவகுப்புகள் இக்காலகட்டத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஆரம்பகால வேளாண்மைச்  சமூகங்களில், சமூக அடுக்கமைவு, நிலவுடமை, தொழில்கள், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றி இருக்கலாம் எனக் கருதமுடிகிறது.

பண்டைய நாகரிகங்கள்: பண்டைய நாகரிகங்கள் முன்னர் காணப்பட்டதை  விடவும் மேலும் சிக்கலான சமூக அடுக்கமைவுகள்   உருவாக்குவதற்கு காரணமாயின. இக்காலப்பகுதியில் சமூகங்களில் காணப்பட்ட வளங்கள், அதிகாரம், கலாசாரங்கள், பிறப்பு அடிப்படையிலான செல்வாக்குகள், பல்வேறுபட்ட தொழில்கள் போன்ற பல்வேறு காரணிகள் சமூக அடுக்கமைவினைத்   தீர்மானித்தன. பண்டைய நாகரிகங்கள் பெரும்பாலும் செல்வம் மற்றும் அதிகாரத்தில் அதிக சமத்துவமற்றவையாக இருந்தன. இது  சமூக அடுக்கமைவுகளை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

  • அதிகாரம்: பண்டைய நாகரிகங்களில், சில குழுக்கள் அல்லது நபர்கள் மற்றவர்களை விட அதிக அதிகாரத்தை  கொண்டிருந்தனர். இந்த அதிகாரம் சமூக அடுக்கமைவினை  உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதிக அதிகாரம் கொண்டவர்கள் உயர்நிலையில் வைத்துப் போற்றப்பட்டனர்.
  • கலாச்சாரம்: பண்டைய நாகரிகங்களில், கலாசாரப்பண்புகளின் அடிப்படையில்  சில குழுக்கள் அல்லது நபர்கள், மற்றவர்களை விடவும்  உயர்ந்தவர்களாகக்  கருதப்பட்டனர். இக்கலாச்சார நம்பிக்கைகள், சமூக அடுக்கமைவினை  உருவாக்குவதற்கு வழிகோலியது.
  • பிறப்பு அடிப்படையிலான செல்வாக்குகள்: பண்டைய நாகரிகங்களில், பிறப்பு பெரும்பாலும் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருந்தது. உயர் சமூக அடுக்கமைவு குடும்பமொன்றில்  பிறக்கும் பிள்ளைகள் தொடர்ந்தும் அதே சமூக அந்தஸ்துக்களை  பெறக்கூடியவர்களாகக்  காணப்பட்டனர். 
  • நில உடைமை: நில உரிமையாளர்கள் பெரும்பாலும் அதிக செல்வம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர்.இதனால் இவர்கள் ஏனையோரை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர். 
  • தொழில்: சில தொழில்கள், குறிப்பாக மதகுருத்துவம் மற்றும் அரச தொழில்களில் ஈடுபடுவோர், ஏனையவர்களை விடவும் அதிக அந்தஸ்து,மற்றும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர் .

பண்டைய நாகரிகங்களில் காணப்பட்ட சமூகஅடுக்கமைவிற்கான    சில உதாரணங்கள் பின்வருமாறு:

  • பண்டைய எகிப்தில், பாரோக்கள், பிரபுக்கள், குடிமக்கள் மற்றும் அடிமைகள் என்ற நான்கு சமூக வகுப்புகள் காணப்பட்டனர். 
  • பண்டைய சீனாவில், அரசாங்க அதிகாரிகள், பூசாரிகள், விவசாயிகள் மற்றும் கலைஞர்கள் என்ற நான்கு மூக வகுப்புகள் காணப்பட்டனர்.
  • பண்டைய கிரேக்கத்தில், குடிமக்கள், அடிமைகள் மற்றும் பிற சமூக குழுக்கள் ஆகியோர் இருந்தனர்.
  • பண்டைய உரோமில், செனட்டர்கள், பிரபுக்கள், குடிமக்கள் மற்றும் அடிமைகள் ஆகியோர் இருந்தனர்.

பண்டைய நாகரிகங்களில் சமூக அடுக்கமைவு  பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியது. மக்களிடையே செல்வம் மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் சமமின்மையை மேலும் அதிகரிக்கச் செய்தது. இது சமூகப்பதற்றத்திற்கு வழிவகுத்தது. மேலும், இது சமூக அசைவுகளை (பெயர்ச்சிகளை) மற்றும் சமூக மாற்றத்தை  கடினமாக்கியது. எனினும், பண்டைய   நாகரிகங்களில்  காணப்பட்ட சமூக அடுக்கமைவின் வளர்ச்சி, நவீன சமூக அடுக்கமைவுகளுக்கான  அடித்தளங்களை அமைத்தது எனலாம்.  

மத்தியகால ஐரோப்பா: மத்தியகால ஐரோப்பாவில் எவ்வாறு  சமூக அடுக்கமைவு நிலவியது என நோக்குவது முக்கியமாகும். மத்தியகால ஐரோப்பாவில் சமூக அடுக்கமைவினை ஏற்படுத்திய முக்கிய காரணிகள் நிலப்பிரபுத்துவ அமைப்பு, மதகுருத்துவம், பிறப்பு அடிப்படையினாலான சலுகைகள் , மற்றும் பல்வேறுபட்ட கைத்தொழில்கள், சனத்தொகை பெருக்கம், நகரமயமாக்கம் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற இன்னோரன்ன காரணிகள்   சமூக அடுக்கமைவினை  ஏற்படுத்தின. 

  • நிலப்பிரபுத்துவ அமைப்பு: மத்தியகால ஐரோப்பாவில் காணப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பு சமூக அடுக்கமைவின்  அடிப்படையாக இருந்தது. இக்காலப்பகுதியில் நிலப்பிரபுக்கள் (Nobility/Landlords), மதகுருமார்கள் (Clergy), விவசாயிகள் (Peasantry/Serfs) ஆகிய  சமூக வகுப்புகள் சமுகத்தில் காணப்பட்டனர். நிலப்பிரபுத்துவ வகுப்பானது பெரிய தோட்டங்களை வைத்திருந்த மற்றும் அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த  பிரபுக்களைக் கொண்டிருந்தது. விசுவாசம் மற்றும் இராணுவ சேவைக்கு ஈடாக மன்னரால் அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது.
  • மதம்: மத்தியகால ஐரோப்பாவில், மதம் சமூக அடுக்கமைவினை  வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. மதகுருக்கள் உயர்ந்த சமூக அந்தஸ்தைக் கொண்டிருந்தனர், மேலும் அவர்கள் சமூக ஒழுங்கை பராமரிக்க உதவியதாகக் கருதப்பட்டனர்.
  • பிறப்பு சாந்த சலுகைகள்: மத்தியகால ஐரோப்பாவில், பிறப்பு பெரும்பாலும் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. நிலப்பிரபுக்களின் குடும்பங்களில் பிறந்தவர்கள் உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றனர்.

நவீன காலம்நவீன காலம், சமூக அடுக்கமைவினை மேலும் சிக்கலாக்கியது. இதற்கு காரணம், இக்காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார, அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் ஆகும். நவீன காலத்தில் சமூக அடுக்கமைவினை  ஏற்படுத்திய முக்கிய காரணிகள் பின்வருமாறு:

  • கைத்தொழில் புரட்சி: கைத்தொழில் புரட்சி, பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. புதிய பல தொழில்கள் உருவாகின, மேலும் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது. இதன் விளைவாக, சமூகத்தில் புதிய சமூக வகுப்புகள் உருவாயின.
  • வேகமான சனத்தொகை வளர்ச்சி: சனத்தொகை வளர்ச்சி, சமூக அடுக்கமைவினை  மேலும் சிக்கலாக்கியது. அதிக மக்கள் தொகை, வளங்களுக்கான அதிக போட்டியை ஏற்படுத்தியது, இது சமூகத்தில் அதிக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது..
  • கல்வியின் முக்கியத்துவம் அதிகரிப்பு: கல்வி, சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கான முக்கிய காரணியாக மாறியது. அதிக கல்வி பெற்றவர்கள், அதிக வாய்ப்புகள் மற்றும் அதிக வருமானத்தைப் பெற்றனர்.
  • பெண்களின் உரிமைகள் மேம்பாடு: பெண் உரிமைகள்  தொடர்பாக சமூகங்களில் நிகழ்ந்த நேர்மறையான மாற்றங்கள்  சமூக அடுக்கமைவில் செல்வாக்கு செலுத்தின. இதனால், கல்வி, வேலை மற்றும் அரசியலில் அதிகமாக பெண்கள் பங்கேற்பதற்கு .வாய்ப்புகள் உருவாகின.

நவீன காலத்தில் சமூக அடுக்கமைவு  பொதுவாக பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:

  • வருமானம்: வருமானம், சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக மாறியது. அதிக வருமானம் உள்ளவர்கள், உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெறுகின்றனர்.
  • கல்வி: கல்வி, சமூக அந்தஸ்தைப் பெறுவதற்கான முக்கிய காரணியாக மாறியது. அதிக கல்வி பெற்றவர்கள், அதிக வாய்ப்புகள் மற்றும் அதிக வருமானத்தைப் பெற்றனர்.
  • தொழில்: தொழில், சமூக அந்தஸ்தைப் பெறுவதில் ஒரு முக்கிய காரணியாக மாறியது. உயர்ந்த அந்தஸ்துடைய தொழில்களில் பணிபுரியும் நபர்கள், உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெறுகின்றனர்.

சமூக அடுக்கமைவு – பண்புகள்

சமூக அடுக்கமைவு என்பது ஒரு சமூகத்தில் உள்ள மக்களை, செல்வம், அதிகாரம், கல்வி, தொழில், இனம், பாலினம் போன்ற காரணிகளின் அடிப்படையில் உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளாகப் பிரிப்பது ஆகும். சமூக அடுக்கமைவின் சில முக்கிய பண்புகள் பின்வருமாறு:

  • சமூக அடுக்கமைவு உலகளாவியது (Social Stratification is universal)
  • அடுக்கமைவு சமூகமானது  (Stratification is social)
  • அது பழமையானது  (It is ancient)
  • இது பல்வேறு வடிவங்களில் உள்ளது  (It is in diverse forms)
  • சமூக அடுக்கமைவு பின்விளைவாக உள்ளது (Social stratification is consequential)

உலகளாவிய தன்மை: சமூக அடுக்கமைவு எல்லாச்  சமூகங்களிலும் காணப்படுகிறது. உலகின் எந்தமூலைமுடுக்கிலும், எந்தக்  காலத்திலும், சமூக அடுக்கமைவு எதோ ஒரு வடிவத்தில் காணப்படுகின்றது. 

சமூக தன்மை: சமூக அடுக்கமைவு  என்பது ஒரு சமூகத்தில் தனிநபர்கள் அல்லது குழுக்களை தரவரிசைப்படுத்தும் போது ஏற்படும்  ஒரு சமூக நிகழ்வு ஆகும். தனிப்பட்ட சாதனைகள் அல்லது முயற்சிகள் போலல்லாமல், இது தனிப்பட்ட திறன்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, சமூக அடுக்கமைவானது பொருளாதார நிலைமைகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாடுகள் போன்ற ஒரு சமூகத்தின் கட்டமைப்பில் பொதிந்துள்ள நிலையான மற்றும் முறையான காரணிகளால் இவை தீர்மானிக்கப்படுகின்றன. சமூக ஏற்றத்தாழ்வுகளினால் உருவாகும்  படிநிலையானது, தனித்துவமான சமூகவகுப்புகள் அல்லது அடுக்குகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு அடுக்கமைவுகளும்  அதன் சொந்த சலுகைகள், வளங்களுக்கான அணுகல் மற்றும் சமூகநிலைப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பழமையான தன்மை: சமூக அடுக்கமைவு என்பது ஒரு பழமையான நிகழ்வு ஆகும். இது மனித சமூகத்தின் தொடக்ககாலத்திலிருந்தே  இருந்து வருகிறது.

பன்முகத்தன்மை: சமூக அடுக்கமைவு பல்வேறு வடிவங்களில் காணப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் அதன் சொந்த தனித்துவமான சமூக அடுக்கமைவு வகைகளைக்  கொண்டுள்ளது.

பின்விளைவுகள்: தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீது குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால், சமூகஅடுக்கமைவானது  பின்விளைவாகக் கருதப்படுகிறது. சமூக அடுக்கமைப்பின் விளைவுகள் மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கின்றன.  வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகல்,  கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சுகாதார வேறுபாடுகள், சமூக அசைவு/பெயர்ச்சி, அரசியல் அதிகாரம், மக்களை பற்றிய புலக்கட்சிகள் போன்ற பின்விளைவுகளை சமூக அடுக்கமைவானது கொண்டுள்ளது.

சமூக அடுக்கமைவின் வகைகள்

சமூக அடுக்கமைவினை   வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பல அளவுகோல்கள் உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:

அடிப்படையான சமூக அடுக்கமைவு

  • பிறப்பு: பிறப்பின் அடிப்படையில் சமூக அடுக்கமைவினை வகைப்படுத்தும்போது, ஒருவரின் பிறப்பு நிலையே அவரது சமூக அந்தஸ்தை தீர்மானிக்கிறது. இந்த வகை சமூக அடுக்கு மரபுவழி சமூக அடுக்கமைவு  என்று அழைக்கப்படுகிறது.
  • சாதனை: சாதனை அடிப்படையில் சமூக அடுக்கமைவினை  வகைப்படுத்தும்போது, ஒருவரின் திறன்கள், தகுதிகள் மற்றும் முயற்சிகள் ஆகியவை அவரது சமூக அந்தஸ்தை தீர்மானிக்கின்றன. இந்த வகை, சாதனை சமூக அடுக்கமைவு  என்று அழைக்கப்படுகிறது.
அந்தஸ்துகளின் எண்ணிக்கையில் சமுக அடுக்கமைவு: சமூக அடுக்கமைவை அதன் அந்தஸ்துக்களின்  எண்ணிக்கையைப் பயன்படுத்தி வகைப்படுத்தலாம். இந்த அடிப்படையில், சமூக அடுக்கமைவை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:
  • இருஅந்தஸ்து  சமூக அடுக்கமைவு : இருஅந்தஸ்து  சமூக அடுக்கமைவில், சமூகம் இரண்டு நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு நிலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, மற்றொரு நிலை தாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, பண்டைய எகிப்தில், பாரோக்கள் மற்றும் அடிமைகள் ஆகியோர் இரண்டு அந்தஸ்து சமூக அடுக்கமைவில் அடங்குவர்.
  • பல அந்தஸ்து சமூக அடுக்கமைவு: பன்நிலை சமூக அடுக்கமைவில், சமூகம் பல அந்தஸ்துக்களாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அந்தஸ்தும்/நிலையும் ஒரு குறிப்பிட்ட அளவிலான செல்வம், அதிகாரம் மற்றும் கெளரவத்தைக்  கொண்டுள்ளது. உதாரணமாக, நவீன அமெரிக்காவில், உயர் வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், மற்றும் தாழ்வகுப்பினர், ஆகியோர் பல அந்தஸ்து சமூக அடுக்கமைவில் உள்டங்குவர்.

அசைவுத்தன்மையின்  அடிப்படையில் சமுக அடுக்கமைவு: சமூக அடுக்கமைவை  அதன் அசைவுத்தன்மையைப் பயன்படுத்தி வகைப்படுத்தலாம். இந்த அடிப்படையில், சமூக அடுக்கமைவை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:

  • மூடிய சமூக அடுக்கமைவு: மூடிய சமூக அடுக்கமைவில், சமூக அந்தஸ்து நிலையானது. ஒருவரின் பிறப்பு  அவரது சமூக அந்தஸ்தை தீர்மானிக்கிறது, மேலும் ஒருவர் தனது சமூக அந்தஸ்தை மாற்ற முடியாது. உதாரணமாக சாதியடிப்படையிலான சமூக அடுக்கமைவு. 
  • திறந்த சமூக அடுக்கமைவு: திறந்த சமூக அடுக்கமைவில், சமூக அந்தஸ்து நிலையற்றது. ஒருவர் தனது அறிவு, திறன்கள், தகுதிகள் மற்றும் முயற்சிகள் மூலம் தனது சமூக அந்தஸ்தை மேலும் மேம்படுத்தலாம். உதாரணமாக, ஒரு அலுவலக உதவியாளர், திறந்த கல்வி மூலம் பட்டம் பெற்று ஆசிரியராகுதல். 

மேற்கண்ட அளவுகோல்களைப் (அடிப்படையானதன்மை  (basis), அந்தஸ்து , அசைவின் அடிப்படையில்) பயன்படுத்தி, சமூக அடுக்கமைவினை  மேலும் பலவகைகளாகப் பிரிக்கலாம். இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் சமூக அடுக்கமைவினை  வகைப்படுத்துவதற்கு மிகவும் பொதுவானவை. இந்த வகைப்பாடுகள் சமூக அடுக்கமைவை விளங்கிக் கொள்ள  உதவுகின்றன. இவை சமூக அடுக்கமைவின் தோற்றம், அதன் செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை விளக்குகின்றன.



சமூக அடுக்கமைவின் வேறு பிரதான வகைகள் 

சமூக அடுக்கமைவினை பின்வரும் வகைகளாகவும்  பிரித்து நோக்க முடியும்: 

  • சாதி
  • சமூக வகுப்பு
  • பண்ணைமுறை
  • அடிமைமுறை 

சாதி (Caste): சாதி (Caste): சாதி என்பது ஒரு சமூக அடுக்கமைவவாகும்.  இது பிறப்பு அல்லது சமயத்தின் அடிப்படையிலானது. சாதி அமைப்புகளில், ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட சமூக அந்தஸ்தைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு குறித்த சாதியைச் சேர்ந்தவர்கள் பொதுவாக அந்தந்த சாதியால் தீர்மானிக்கப்பட்ட தொழில்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் நடத்தைகளைக்  கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளனர். சாதி அமைப்புகள் பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளன, மேலும், அவை உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சாதி அமைப்பு மிகவும் பிரபலமானது. இலங்கையில்  சாதியமைப்பு முறை சிங்களவர்களிடமும்,  தமிழர்களிடமும் பரவலாக காணப்படுகிறது.  இவற்றின் செல்வாக்கு ஏனைய இலங்கை வாழ் சமய மக்களிடமும் காணப்படுகிறது. (இலங்கை சாதியமைப்பு முறை , யாழ்ப்பாண சமூகசாதியமைப்பு முறை).



வகுப்பு (Class)வகுப்பு என்பது ஒரு சமூக அடுக்கமைவின்  இன்னொரு வகையாகும்.  இது பொருளாதார நிலை அடிப்படையிலானது. ஒரே வகையான சமூகப்  பொருளாதார தன்மைகளை அனுபவிக்கும் மக்கள் குழு ஒரு வகுப்பாக கருதப்படும். ஒவ்வொரு வகுப்பும் ஒரு குறிப்பிட்ட அளவிலான செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தைக் கொண்டிருக்கும். வகுப்பு அமைப்புகள் உலகின் சகல  பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேலும் அவை சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றன. அமெரிக்காவில் உள்ள வகுப்பு அமைப்பு மிகவும் பிரபலமானது. மேலும் இது சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக வகுப்பின் பண்புகள்:

  • அந்தஸ்து ரீதியான வரிசைநிலை முறைமை காணப்ப்டும். 
  • சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்  தரவரிசை முறைமை காணப்படும் 
  • செல்வம் மற்றும் அதிகாரம் என்பனவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை  கொண்டுள்ள முறைமையாகவும் காணப்படும்..
  • ஒருவரின் சொந்த முயற்சியால் சமூக வகுப்புக்களின் அந்தஸ்துக்களை மாற்றி அமைக்கலாம்.
  • வகுப்பு  கட்டமைப்பில்  ஓரளவு நிரந்தரத்தைக் கொண்டிருக்கும்.
  • அடுக்கமைவு (வகுப்பு) உணர்வு மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையாக இது விளங்கும் .
  • ஒவ்வொரு வகுப்புக்களும்  தனித்துவமான வாழ்க்கை முறை  மற்றும் கலாச்சார வெளிப்பாடுகள்  கொண்டு காணப்படும்.
  • சமூக வரிசைமுறையில் அல்லது உயர்ந்து அல்லது அதற்குக் கீழே இருப்பவர்கள் தொடர்பாக உயர்வு  மற்றும் தாழ்வு மனப்பான்மை காணப்படும்.
  • வகுப்புகளுக்கு இடையேயான எல்லைகள் திரவமாக இருக்கும். அதாவது இவை வேறு காரணிகளின் செல்வாக்கினால் மாற்றம் பெறுவதாக இருக்கும்.

பண்ணைமுறை (Estate): பண்ணைமுறை என்பது ஒரு சமூக அடுக்கமைவின் இன்னொமொரு வகையாகும். இது அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. பண்ணைமுறை அமைப்புகளில், சமூகம் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • உயர் பண்ணையாளர்: உயர் பண்ணையாளர்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகின்றனர் மற்றும் பெரும்பாலான செல்வம் மற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர்.
  • இடைநிலை பண்ணையாளர்: இடைநிலை பண்ணையாளர்கள் அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்டளவு பங்குவகிக்கின்றனர், ஆனால் அவர்கள் உயர் பண்ணையாளர்களைப் போல செல்வமற்றவர்கள் அல்லது அதிகாரம் கொண்டவர்கள் அல்ல.
  • தாழ்ந்த பண்ணையாளர்: தாழ்ந்த பண்ணையாளர்கள் அரசாங்கத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை, மேலும் அவர்கள் பெரும்பாலும் ஏழ்மையானவர்கள் மற்றும் அதிகாரமற்றவர்கள்.

பண்ணைமுறை அமைப்புகள் ஐரோப்பாவில் நவீன காலத்திற்கு முன்னர் பொதுவானவையாக இருந்தன. இருப்பினும், அவை இன்னும் சில நாடுகளில் உள்ளன. குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ளன.

அடிமைத்தனம் (Slavery): சமூக அடுக்கமைவில்  அடிமைமுறையானது தனிநபர்களின் சொத்துரிமையால் வகைப்படுத்தப்படுகிறது, அடிமைகள் சமூகப்படிநிலையில் மிகக் குறைந்த அடுக்குகளாகக் கருதப்படுகிறார்கள். இந்தஅமைப்பில், தனிநபர்கள் தங்கள் உரிமையாளர்களின் நலனுக்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அடிமைமுறையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • சட்டப்பூர்வ உரிமை: அடிமைகளை  சட்டப்பூர்வமாக  வாங்க, விற்க அல்லது வர்த்தகம் செய்ய உரிமையுடைய உரிமையாளர்களின் சொத்தாகக் கருதப்படுகிறார்கள். சட்டக் கட்டமைப்பு பெரும்பாலும் அடிமைகளை அடிபணியச் செய்வதை ஆதரிக்கிறது.
  • கட்டாய உழைப்பு: அடிமைகள் தனிப்பட்ட சுயாட்சி இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் கடுமையான சூழ்நிலைகளில். அவர்களின் உழைப்பு அவர்களின் உரிமையாளர்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்வுக்கு நேரடியாக பங்களிக்கிறது.
  • உரிமைகள் இல்லாமை: அடிமைகளுக்கு அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன. 
  • பரம்பரை நிலை: அடிமைத்தனம் என்பது பெரும்பாலும் பரம்பரை நிலையாக உள்ளது. 
  • மனிதாபிமானமற்ற தன்மை: அடிமைத்தனம் என்பது தனிமனிதர்களை மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதைக் குறிக்கின்றது. அவர்களை உள்ளார்ந்த கண்ணியம் மற்றும் உரிமைகள் கொண்ட மனிதர்களாக கருதாமல் ஒரு சடப் பொருளாக அல்லது சொத்தாக கருதுகிறது.

இந்த நான்கு வகையான சமூக அடுக்கமைவுகளும் சமூகத்தின் கட்டமைப்பை பாதிக்கின்றன. அவை சமூக அந்தஸ்து, வாய்ப்புகள் மற்றும் சமூகநடத்தை ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கங்களை  ஏற்படுத்தலாம்.

சமூக அடுக்கமைவினை  விளக்கும் கோட்பாடுகள்

சமூக அடுக்கமைவினை விளக்கும்  பல சமூகவியல் கோட்பாடுகள் உள்ளன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவை ஆகும் :

  • செயற்பாட்டு கோட்பாடு/தொழிற்பாட்டு கோட்பாடு (Functionalist Theory)
  • கார்ல் மார்க்சின் சமூக வகுப்புக் கோட்பாடு/ கார்ல் மார்க்ஸ் இன் மோதல் கோட்பாடு 
  • மெக்ஸ் வெபரின் கோட்பாடு 
  • குறியீட்டு இடைவினைக் கோட்பாடு  

செயற்பாட்டு கோட்பாடு/தொழிற்பாட்டு கோட்பாடு (Functionalist Theory)

செயற்பாட்டு கோட்பாடு/தொழிற்பாட்டு கோட்பாடு (Functionalist Theory)  சமூகத்தை ஒரு சிக்கலான அமைப்பாகப் பார்க்கிறது. இயங்குகின்ற ஒரு கடிகாரம் எவ்வாறு பல்வேறு கூறுகளினால் ஆன ஒரு முழுமையான தொகுதியாக  காணப்படுகிறதோ அதே போன்று, சமூகமும் பல்வேறு பகுதிகளினால் ஆனது என்பதே இக்கோட்பாட்டின் அடிநாதமாகும். அதாவது சமூகமானது,  ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேறு பகுதிகளைக் கொண்ட ஒரு சிக்கலான தொகுதியாக காணப்படுகிறது. சமூகத்தின் ஒவ்வொறு  பகுதிகளும்  ஒட்டுமொத்த சமூகத்தின் இயங்குநிலையின்  ஸ்திரத்தன்மையில் பங்குவகிக்கிறது என்ற கருத்தை இந்த கோட்பாடு வலியுறுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட தொழற்பாடுகளை ஆற்ற வேண்டியவர்களாக உள்ளனர். இதன்போது சமூகம் இயங்கு நிலையில் காணப்படும்.  இயங்கும் கடிகாரம் ஒன்றின் ஒரு கூறு பழுதடைந்தால், கடிகாரம் இயங்காது. அதுபோன்றுதான் சமூகமும் , குறிப்பிட்ட நபர்கள் தமது வகிபங்குகளை, கடமைகளையும் பொறுப்புக்களையும் செய்யாமல் விடுகின்ற போது சமூகம் செயலிழக்கும் என இக்கோட்பாடு கருதுகிறது. இக்கோட்பாட்டு, சமூகஅடுக்கமைவு பின்வரும்   முக்கியமான செயற்பாடுகளை நிறைவேற்றுவதாக கூறுகிறது. 

  • சமூக ஒழுங்கை பராமரித்தல்: சமூக அடுக்கமைவு  சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே அதிகாரம் மற்றும் பொறுப்புகளை விநியோகிப்பதன் மூலம் சமூக ஒழுங்கை பராமரிக்கிறது.
  • சமூக நோக்கங்களை அடைய உதவுதல்: சமூக சமூக அடுக்கமைவு சமூகத்தின் முக்கிய நோக்கங்களை அடைய திறமையானவர்களைக் கொண்டிருக்க உதவுகிறது. உதாரணமாக, மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழில்களில் உள்ளவர்கள் சமூகத்தின் முக்கிய நோக்கங்களை அடைய உதவுகிறார்கள்.
  • சமூக உறுப்பினர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவித்தல்: சமூக அடுக்கமைவு  சமூக உறுப்பினர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உதாரணமாக, உயர்பதவிகளை அடைய திறமையானவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • சிலர் மற்றவர்களை விட அதிகமாக உழைப்பதன் காரணமாக அதிக செல்வங்களை பெறுகின்றனர். 
எனினும்  சமூகத்தின் பல்வேறு பகுதிகளின் தொழிற்பாடுகள் மட்டுமே சமூக அடுக்கமைவினை தோற்றுவிக்கும் காரணியாக கருத முடியாது. சமூக அடுக்கமைவினை பிறப்பு, கல்வி, திறமைகள்  வாய்ப்புகள், செல்வம் போன்ற காரணிகளும் காரணமாகின்றன.

செயற்பாட்டு கோட்பாட்டின்படி, சமூக அடுக்கமைவினை பின்வரும் ஐந்து காரணிகளில் அடிப்படையில் விளக்கலாம்:

  • வேறுபாடு: சமூக அடுக்கமைவு  சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே வேறுபாடுகளை உருவாக்குகிறது. இந்த வேறுபாடுகள் சமூகத்தின் செயற்பாடுகளுக்கு அவசியம். உதாரணமாக, மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழில்களில் உள்ளவர்கள் சமூகத்தின் முக்கிய நோக்கங்களை அடைய உதவுகின்றனர். அவர்களின் திறமைகள் மற்றும் தகுதிகள் காரணமாக, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.
  • நிறைவு: சமூக அடுக்கமைவு  சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே பணிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூகத்தின் செயற்பாடுகளை நிறைவு செய்கிறது. உதாரணமாக, தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றவர்கள் சமூகத்தின் வெவ்வேறு பணிகளைச் செய்கிறார்கள். அவர்களின் வேலைகள் சமூகத்தின் இயங்குநிலைக்கு   மிக அவசியம்.
  • சமநிலை: சமூக அடுக்கமைவு  சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்கிறது. உதாரணமாக, உயர் வர்க்கத்தினர் குறைந்த வர்க்கத்தினருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள். இதன் மூலம், சமூகத்தில் பொருளாதார மற்றும் சமூக சமநிலை ஏற்படுகிறது.
  • ஒற்றுமை: சமூக அடுக்கமைவு  சமூகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டாக, உயர் வர்க்கத்தினர் குறைந்த வர்க்கத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்குகிறார்கள். இதன் மூலம், சமூகத்தில் ஒற்றுமை ஏற்படுகிறது.
  • பகிரப்பட்ட மதிப்புகள்: சமூக அடுக்குமுறை சமூகத்தில் பகிரப்பட்ட மதிப்புகளை ஊக்குவிக்கிறது. உதாரணமாக,  உழைப்பு, திறமை மற்றும் வெற்றி ஆகியவை சமூகத்தில் உயர்வாகக் கருதப்படும்  விடயங்கள் ஆகும். சமூக அடுக்கமைவு,  இவற்றை ஊக்குவிப்பதன் மூலம், சமூக ஒற்றுமை மற்றும் சமநிலை ஆகியவற்றிற்கு பங்களிக்குகிறது.

இந்த ஐந்துகாரணிகளும் சமூக அடுக்கமைவின்  செயற்பாட்டை விளக்குகின்றன. சமூக அடுக்கமைவு சமூகத்தின் இயங்குநிலைக்கு மிக  அவசியமானது என்று செயற்பாட்டு கோட்பாடு வாதிடுகிறது.

மோதல் கோட்பாடு

சமூக அடுக்கமைவினை  விளக்கும் கோட்பாடுகளில் கார்ல் மார்க்ஸ் இன்  மோதல் கோட்பாடு முக்கியம் பெறுகிறது. கார்ல் மார்க்ஸ் சமூக அடுக்கமைவினை மோதல் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்குகிறார். இக்கோட்பாட்டின்படி, சமூகஅடுக்கமைவு  பொருளாதார சமத்துவமின்மையின் விளைவால்  உருவாகுவதாக விளக்குகிறார். சமூகம் இரண்டு முக்கிய வகுப்புகளாக  பிரிக்கப்பட்டுள்ளது: அவை, முதலாளித்துவ வர்க்கமும் தொழிலாள வர்க்கமும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்தினர் உற்பத்திச் சாதனங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் தொழிலாளர்  வர்க்கத்தினரை தங்கள் ஊழியர்களாகக் கொண்டுள்ளனர். தொழிலாளர்  வர்க்கத்தினர் தங்கள் உழைப்பின் மூலம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிக இலாபத்தை உழைத்துக் கொடுக்கின்றனர். 

கார்ல் மார்க்ஸின்  கருத்துப்படி, முதலாளித்துவ வர்க்கத்தினர் தொழிலாளர்  வர்க்கத்தினரின் உழைப்பை சுரண்டுகின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தினர் தங்கள் தொழிலாளர்களுக்கு  குறைந்த ஊதியத்தையே கொடுக்கிறார்கள், மேலும் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு பெருமானத்தையும் பெறுவதில்லை. இச்சுரண்டல் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏழ்மையில் வாடுவதற்கும் , ஒடுக்குமுறை உட்படவும்  மற்றும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது.

கார்ல் மார்க்ஸ் கருத்துப்படி, 

  • சமூக அடுக்கமைவு  ஒரு நிலையான முறைமையன்று. 
  • சமூகத்தில் முதலாளி-தொழிலாளிகளுக்கிடையில்  முரண்பாடுகள் அதிகரிக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தினர் புரட்சி மூலம் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிவார்கள். 
  • இப்புரட்சி சமூக சமத்துவத்தை நிறுவும்.  ஒரு புதிய சமூக அமைப்பிற்கு வழிவகுக்கும். 
  • இந்நிகழ்வு ஒரு சுழற்சி வடிவில் நிகழுவதாக இருக்கும் என்கிறார்.

மார்க்சின் மோதல் கோட்பாடு சமூக அடுக்கமைவினை  விளங்கிக் கொள்ள  உதவுகின்றது. 

 


மெக்ஸ் வெபரின் (Max Weber) கோட்பாடு 

ஒரு முக்கிய சமூகவியலாளரான மெக்ஸ் வெபர், கார்ல் மார்க்சின் கருத்துகளினை  மேலும்  விரிவுபடுத்தி சமூக அடுக்கமைவினை விளக்க முற்பட்டார் எனலாம்.  சமூகப்படிநிலைகளை வடிவமைப்பதில் பொருளாதாரக் காரணிகளின் முக்கியத்துவத்தை வெபர் ஒப்புக்கொண்டாலும், சமூக அடுக்கமைவினை மேலும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் இன்னும் சில மேலதிக காரணிகளை  அல்லது  பரிமாணங்களை அறிமுகப்படுத்தினார். சமூக அடுக்கமைவில்  மெக்ஸ் வெபரின் கருத்துகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • பல பரிமாண அணுகுமுறை: சமூக அடுக்கமைவில்  பல பரிமாண அணுகுமுறையை வெபர் முன்மொழிந்தார்.  சமூக அடுக்கமைவை உருவாக்குவதில்   பொருளாதாரரீதியான சமூக வகுப்பிற்கு மேலதிகமாக , அவர் அந்தஸ்து (status- கௌரவம் அல்லது சமூக மரியாதை) மற்றும் அதிகாரம் (Power ) போன்ற பிற குறிப்பிடத்தக்க காரணிகளை சமூக படிநிலையின் முக்கிய கூறுகளாக அடையாளம் கண்டார்.
  • வகுப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம்: வெபரின் கூற்றுப்படி, மார்க்ஸ் கூறியது போல் சமூக அடுக்கமைவு  என்பது பொருளாதார வகுப்பினால்  மட்டும் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, இது மூன்று வேறுபட்ட ஆனால் தொடர்புடைய பரிமாணங்களின் (வகுப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரம்) இடைவினைகளினால் உருவாகிறது என்கிறார்.

  • சந்தை நிலையாக வகுப்புவெபரின் சமூக வகுப்பு தொடர்பான கருத்து  கார்ல்  மார்க்சின் கருத்தை விட விரிவானதாகும்.  இவரின்படி, சமூக வகுப்பு வெறுமனே,  உற்பத்திச் சாதனங்களின் உரிமையை மட்டுமல்ல, தனிநபரின் சந்தை நிலையையும் உள்ளடக்கியது. ஒருவரிடம் காணப்படும் அறிவு, திறன்கள், கல்வி என்பன அவரது சமூக வகுப்பின் நிலைக்கு பங்களிப்பு செய்கின்றன.  
  • அந்தஸ்துக்  குழுக்கள் (Status Groups):அந்தஸ்துக் குழுக்கள் பகிரப்பட்ட சமூக மரியாதை அல்லது கௌரவத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஒரே அந்தஸ்துக் குழுவைச் சேர்ந்தவர்கள் பொதுவான வாழ்க்கை முறை, கலாச்சார நடைமுறைகள் அல்லது சமூக அங்கீகாரங்களைக் கொண்டிருப்பர். இந்த அந்தஸ்து நிலை வேறுபாடுகள் பொருளாதார காரணிகளால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.
  • அதிகாரம்சமூக அடுக்கமைவில்  அதிகாரம்  முக்கிய பாங்கு வகிப்பதாக  வெபர் கருதுகிறார். அதிகாரம் என்பது பொருளாதார வளங்கள் இல்லாவிட்டாலும், மற்றவர்களை வெகுவாகப் பாதிக்கும் காரணியாகும். வெபரின் பகுப்பாய்வில் அரசியல், சமூக மற்றும் அதிகாரத்துவ அதிகாரங்கள் (Political, social, and bureaucratic authority) அதிகாரத்தின் முக்கிய வடிவங்களாக கருதப்பட்டன.
  • வாழ்க்கை வாய்ப்புகள்: வெபர் வாழ்க்கை வாய்ப்புகள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார், இது தனிநபர்களின் சமூக வகுப்பு, அந்தஸ்து மற்றும் அதிகாரத்தின் அடிப்படையில் கிடைக்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. 
  • சமூக மூடல் (Social Closure): சமூக மூடல் பற்றிய கருத்தையு ம்  வெபர் கூறினார்.  இ ங்கு சில சமூகக் குழுக்கள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த முற்படலாம். இது சமூக அடிக்கமைவை நிலைநிறுத்துவதற்கு பங்களிக்கிறது எனக் கருதுகிறார். 
  • கலாசார காரணிகள்: சமூக அடுக்கமைவினை தோற்றுவிப்பதில் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், விழுமியங்கள், பிற பண்பாட்டு வேறுபாடுகள் சமூக படிநிலைகளின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்வதாக வெபர் கருதுகிறார். 

குறியீட்டு இடைவினைக் கோட்பாடு

குறியீட்டு இடைவினைக் கோட்பாடு சமூகவியலில் சமூகமயமாக்கம், சமூக வகுப்புக்களை விளக்கும் பிரபல்ய கோட்பாடாகும்.  இது தனிநபர்கள் சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் இணைக்கும் நுண்ணிய இடைவினைகள் மற்றும் குறியீட்டு அர்த்தங்களில் கவனம் செலுத்துகிறது. இது மனித இடைவினைகள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட  குறியீடுகள், சைகைகள், மொழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்வதாகக்  கருதுகிறது. சமூகக்தில் வாழும்  மக்கள் தமக்குள் பகிரப்பட்ட குறியீடுகள், சைகைகள் மற்றும் மொழிக்கு அர்த்தத்தை வழங்குகிறார்கள். பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் புரிதலின் சூழலில் அவற்றைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கிறார்கள். எனினும் இந்த குறியீடுகள், சைகைகள் மற்றும் மொழி என்பவற்றுக்கான எமது அர்த்தப்படுத்தல்கள் நிலையானவை அல்ல. காலத்துக்கு காலம், சமூகத்திற்கு சமூகம் மாற்றத்துக்கு உரியனவாகும். 

குறியீட்டு இடைவினைக் கோட்பாடு மூலம் சமூக அடுக்கமைவுகளை  ஆராயும்போது, மக்கள் தங்கள் அன்றாட தொடர்புகளில் சமூக படிநிலைகளை எவ்வாறு உருவாக்குகிறார்கள் மற்றும் விளக்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. குறியீட்டு இடைவினைக் கோட்பாடு, சமூக அடுக்கமைவை  எவ்வாறு நோக்குகிறது என்பது பற்றிய சில முக்கிய விடயங்கள் வருமாறு:

  • குறியீட்டு அர்த்தங்கள்: குறியீட்டு இடைவினைக் கோட்பாடு மனித தொடர்புகளில் குறியீடுகள் மற்றும் அர்த்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.  சமூகங்கள் தமக்குள் பகிரப்பட்ட சின்னங்கள் மற்றும் கலாச்சார புரிதல்களின் அடிப்படையில் ஒருவரின்  சமூக அந்தஸ்து , வகிபாகம்,  மற்றும் பதவிகளை தீர்மானிப்பதாக கருதுகிறது. 
  • பட்டப்பெயர் சூட்டுதல் மற்றும் பிழையான புரிதல்கள் (Labeling and Stereotyping): சமூக அடுக்கமைவில் பட்டப்பெயர் சூட்டுதல் மற்றும் பிழையான புரிதல்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இக்கோட்பாடு கருதுகிறது.  தனிநபர்களுக்கு அவர்கள்  சமூகத்தினால்  உணரப்பட்ட சமூக நிலையின் அடிப்படையில் சில பட்டப்பெயர்கள் ஒதுக்கப்படலாம், மேலும் இந்த அடையாளங்கள்  மற்றவர்கள் அவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பாதிக்கலாம். 
  • சுயநிறைவு தீர்க்கதரிசனங்கள்: சமூக எதிர்பார்ப்புகளுக்கு தனிநபர்கள் எவ்வாறு உள்வாங்குகிறார்கள் மற்றும் பதிலளிக்கிறார்கள் என்பதில் குறியீட்டு இடைவினைக் கோட்பாடு ஆர்வமாக உள்ளது. சமூகத்தில்  யாராவது தொடர்ந்து "உயர்ந்த அந்தஸ்து " அல்லது "தாழ்ந்த அந்தஸ்து நிலை" என்று முத்திரை இடப்படும் போது , அத்தகைய அடையாளம் அவர்களின் சுய-உணர்வு மற்றும் நடத்தைகளை வெகுவாக பாதிக்கும் என இக்கோட்பாடு கூறுகிறது. 
  • அன்றாட வாழ்வில் தொடர்பு: சமூக அடுக்கமைவு  என்பது ஒரு பெரு  நிகழ்வு மட்டுமல்ல அது நுண்பாக நிலையிலும் நோக்க முடியும் என்பதே இக்கோட்பாட்டின் நிலையாகும்.  மக்கள் தமக்குள் ஏற்படுத்தும் அன்றாட தொடர்பாடல்கள் அவர்களது சமூக படிநிலைகளை தீர்மானிக்க உதவுகிறது என இது கருதுகிறது. 

இதே போன்று, மக்கள் மற்றவர்கள் மத்தயில் தம்மை இவாறு வெளிப்படுத்த விரும்புகிறார்கள், சமூக நிகழ்வுகளால் இத்தைகைய வகிபங்குகளை ஆற்றுகிறார்கள் என்பதைப் பொருத்தும் ஒருவரது சமூக அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது. 

எனவே, ஏனைய சமூகவியல் கோட்பாடுகள்  பெரும்பாலும் சமூகக் கட்டமைப்பில்  உள்ள ஏற்றத்தாழ்வுகள் மீது கவனம் செலுத்தும் போது, குறியீட்டு இடைவினைவாதம்,  அன்றாட சமூக தொடர்புகளில் ஏற்படும் நுண்-மட்டநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கு கவனத்தை செலுத்துகிறது.  சுருக்கமாக கூறின் , குறியீட்டு இடைவினைவாதம்,  என்பது தனிநபர்களின் அன்றாட வாழ்வில் சமூக அந்தஸ்து அனுபவங்களை வடிவமைக்கும் குறியீட்டு அர்த்தங்கள், அடையாளங்கள் மற்றும் தொடர்புகளை ஆராய்வதன் மூலம் சமூக அடுக்கமைவு  எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்பதை குறித்துக் காட்டுகின்றது.

சமூக அசைவு/ சமூகப் பெயர்ச்சி  (social Mobility)

சமூக அசைவு/சமூகப் பெயர்ச்சி   என்பது ஒருவரின் சமூக அந்தஸ்தை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றும் செயன்முறையாகும். சமூக அந்தஸ்து என்பது ஒருவரின் வருமானம், சொத்து, கல்வி, தொழில், மற்றும் சமூக தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது. சமூக அசைவு  பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

  • கிடையான அசைவு  (Horizontal mobility): ஒருவரின் சமூக அந்தஸ்தின் அளவு மாறாமல், அதன் வகை மாறுவதே கிடையான இயக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு தொழிலாளர் ஒரு அரசாங்க ஊழியராக மாறுவது கிடையான இயக்கமாகும்.
  • செங்குத்தான அசைவு  (Vertical mobility): ஒருவரின் சமூக அந்தஸ்தின் அளவு மாறுவது செங்குத்தான இயக்கமாகும். செங்குத்தான இயக்கம் மேலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:
    • உயர்வான அசைவு-கீழில் இருந்து மேல் நோக்கிய அசைவு (Upward mobility): ஒருவரின் சமூக அந்தஸ்து மேம்படுவது உயர்வாகும். எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயி ஒரு தொழிலதிபராக மாறுவது உயர்வாகும்.
    • தாழ்வான அசைவு -உயர் நிலையில் இருந்து கீழ் நோக்கிய அசைவு   (Downward mobility): ஒருவரின் சமூக அந்தஸ்து குறைவதே தாழ்வாகும். எடுத்துக்காட்டாக, ஒரு தொழிலதிபர் ஒரு விவசாயியாக மாறுவது தாழ்வாகும்.
  • தலைமுறைகளுக்கு இடையிலான அசைவு  (Inter-generational mobility): ஒருவரின் பெற்றோரின் சமூக அந்தஸ்திலிருந்து ஒருவரின் சமூக அந்தஸ்து மாறுவது தலைமுறைகளுக்கு இடையிலான இயக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயியின் மகன் ஒரு தொழிலதிபராக மாறுவது தலைமுறைகளுக்கு இடையிலான இயக்கமாகும்.
  • தலைமுறைக்குள் நிகழும் அசைவு  (Intra-generational mobility): ஒருவரின் வாழ்நாளில் ஒருவரின் சமூக அந்தஸ்து மாறுவது தலைமுறைக்குள் நிகழும் இயக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு தொழிலாளி ஒரு அரசாங்க ஊழியராக மாறுவது தலைமுறைக்குள் நிகழும் இயக்கமாகும்.

சமூக அசைவு  என்பது ஒரு சமூகத்தின் முக்கிய அம்சமாகும். சமூக அசைவு/நகர்வு என்பதுசமூகத்தின் சமத்துவம், சமூக மாற்றம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது.

மேற்கண்ட கட்டுரையை வாசித்த பின்னர் பின்வரும் வினாக்களுக்கு விடை அளியுங்கள் 

https://forms.gle/m5KJTvH3ojR8e53g6


இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்கள்  வரவேற்கப்படுகின்றன


கலாநிதி. எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...