கல்வியியலாய்வுகளில் இலக்கிய மீளாய்வு
1.0 அறிமுகம்
2.0 இலக்கிய மீளாய்வு - வரைவிலக்கணப்படுத்தல்
ஓர் ஆய்வாளர், ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாக மறுபரிசீலனை செய்வதையே இலக்கிய மீளாய்வு எனச் சுருக்கமாக கூறலாம்.
ஆய்வுக்காக தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல உள்நாட்டு மற்றும் சர்வேதச ஆய்வாளர்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பர். இவை சக மதிப்பாய்வு ஆய்வுச் சஞ்சிகைகள் (Peer-reviewed journals), கல்விசார் ஆய்வுச் சஞ்சிகைகள் (Academic Journals), ஆய்வு மாநாட்டு வெளியீடுகள் (Conference Proceedings), அறிக்கைகள் (Reports), நூல்கள், கலைக்களஞ்சியம், முதுமாணி மற்றும் கலாநிதி பட்ட ஆய்வறிக்கைகள் எனப் பலவகைகளில் காணப்படும். இவற்றில் இருந்து தனது ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபடும் வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை விமர்சனரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும் ஆராய்ந்து எழுதப்படும் பகுதியையே இலக்கிய மீளாய்வு என்கிறோம்.
இலக்கிய மீளாய்வு என்பது உங்கள் ஆய்வுத் தலைப்பில் கடந்த கால மற்றும் தற்போதைய தகவல்களை விவரிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் மற்றும் பிற ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட விடயங்களைக் கொண்டு சுருக்கமாக எழுதப்பட்ட பகுதியாகும் என Creswell (2012) கூறுகிறார்.
3.0 இலக்கிய மீளாய்வின் நோக்கங்கள்
ஆய்வொன்றின் இலக்கிய மீளாய்வின் நோக்கங்கள் தெளிவானவை. ஆய்வொன்றில் இலக்கிய மீளாய்வு ஏன் இடம்பெறல் வேண்டும் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன. அவற்றை பின்வருமாறு நோக்கலாம்:
- ஆய்வுத் தலைப்பினை, ஆய்வுப் பிரச்சினையை நன்கு விளங்கிக்கொள்ள: ஆய்வாளர் தான்
தெரிவு செய்துள்ள ஆய்வு தலைப்பு மற்றும் ஆய்வுப் பிரச்சினையை விரிவாகவும் ஆழமாகவும்
விளங்கிக்கொள்ள இலக்கிய மீளாய்வு உதவும். ஆய்வுக்காக தெரிவு செய்துள்ள தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை ஆய்வு செய்வதற்கு
பொருத்தமானதா? இல்லையா? என்பதை விளங்கிக்கொள்ள இது உதவும். ஆய்வுத் தலைப்பில் அல்லது ஆய்வுப் பிரச்சினையில் உள்ள பிரதான எண்ணக்கருக்கள்
பற்றிய தெளிவான விளங்கங்களை பெற்றுக் கொள்ளவும் இலக்கிய மீளாய்வு உதவுகின்றது.
- ஆய்வுத் தலைப்பினை மற்றும் ஆய்வுப் பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல் மற்றும் எல்லைப்படுத்த: ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வு தலைப்பு மற்றும் ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தலைப்பு மற்றும் பிரச்சினைகளில் உள்ள முக்கிய எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்வது மட்டுமன்றி அவற்றை தெளிவாக வரைவிலக்கணம் செய்துகாட்டக் கூடிய திறன்களை, இலக்கிய மீளாய்வு ஆய்வாளருக்கு வழங்குகிறது. மேலும், ஆயுவுத் தலைப்பின், ஆய்வு பிரச்சினையின் பரப்பெல்லைகளை பொருத்தமான முறையில் வரையறை அல்லது எல்லைப்படுத்திக் (Limit) கொள்ளவும் ஆய்வாளருக்கு இலக்கிய மீளாய்வு உதவும் எனலாம்.
- ஆய்வு தலைப்பு அல்லது பிரச்சினையுடன் தொடர்புபட்ட முக்கியமான ஆய்வுகளை இனங்கண்டு விமர்சன ரீதியாக திறனாய்வு செய்ய: ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வுத் தலைப்பு மற்றும் ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட வகையில் ஏற்கனவே உண்ணாட்டிலும், வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை இனம் கண்டுகொள்ள இலக்கிய மீளாய்வு அவசியமாகின்றது. மேலும் இனங் கண்டுகொண்ட ஆய்வுகளை வாசித்து அவற்றை விமர்சனரீதியாக திறனாய்வு செய்து கொள்ளவும் இலக்கிய மீளாய்வு வழிவகுக்கின்றது.
- ஆய்வுத் தலைப்பு அல்லது பிரச்சினை தொடர்பாக தற்போதைய அறிவுகளை கண்டறிய: ஆய்வாளர் தான் தெரிவு செய்துள்ள ஆய்வுத் தலைப்பு மற்றும் ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தற்காலத்தில் காணப்படும் அறிவினை கண்டறிய இலக்கிய மீளாய்வு உதவும். ஆய்வுத் தலைப்புடன் நெருங்கிய வகையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இனங்கண்டு விமர்சனத்துக்கு உட்படுத்தும் போது , நாம் தெரிவுசெய்துள்ள ஆய்வுத் தலைப்பு தொடர்பாக தற்போது எவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?, அவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன? எவ்வாறன கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன? இனிமேல் எதிர்காலத்தில் எத்தகைய ஆய்வுகளை குறித்த தலைப்பு அல்லது ஆய்வுப் பிரச்சினை வேண்டி நிற்கிறது? என்பவற்றை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
- ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக தற்போதைய அறிவுகளில் உள்ள இடைவெளியைக் கண்டறிய : முன்னைய பந்தியில் கூறியது போல, குறிப்பிட்ட ஆய்வுத் தலைப்பின் கீழ் காணப்படும் தற்போதைய அறிவுகளை கண்டறியும் போது, குறித்த தலைப்பின் கீழ் எத்தகைய அம்சங்கள் இதுவரை ஆய்வுக்காக கவனத்தில்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடியுமாக இருக்கும். இது தற்போதைய அறிவில் இருக்கும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டும் எனலாம். இதுவே ஆய்வு இடைவெளி எனப்படும். ஆய்வு இடைவெளி தற்போதைய அறிவுக்கும் எதிர்பார்ர்க்கப்படும் அறிவுக்கும் இடையிலுள்ள இடைவெளியை குறித்து நிற்கிறது. இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆய்வு எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், ஆய்வு முறையியல்கள் ஆகியவற்றில் ஒன்றில் அல்லது பலவற்றிலோ காணப்படலாம். இவை பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன:
- 1377
|
- ஆய்வுப் பிரச்சினை தொடர்பான, உடன்பாடான பகுதிகளையும், விவாதத்துக்குரிய பகுதிகளையும் கண்டறிய: ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்கு உட்படுத்தும் போது, குறித்த ஆய்வுகளின் எழுத்தாளர்கள் பொதுவாக உடன்படும் விடயங்களையும், வேறுபடும் நிலைகளையும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
- ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறைகள், ஆய்வு முறைமைகளைக் கண்டறிய: ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்குட்படுத்தும் போது, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறை, தரவு சேகரிப்பு முறைகள், பகுப்பாய்வு முறைகள் எனபனவற்றை இனங்கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும். இதானால் ஆய்வாளர் தனது ஆய்வுக்குப் பொருத்தமான ஆய்வு முறையியல்களை தீர்மானித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
- பொருத்தமான கோட்பாடுகள், மாதிரியுருக்கள் என்பவற்றை இனங்காண: ஆய்வாளர் தான் மேற்கொள்ளவுள்ள ஆய்வுடன் தொடர்பான அனுபவவாத ஆய்வுகளை திறனாய்வுக்கு உட்படுத்தும் போது, அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகள், மாதிரியுருக்களை அறிந்து கொள்வார். இதனால், தனது ஆய்வுக்கு பொருத்தமான கோட்பாடு அல்லது மாதிரியுருக்களை குறித்து இலகுவாகத் தீர்மானம் மேற்கொள்ள முடியும்.
- ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை தற்போதைய அறிவுடன் தொடர்புபடுத்த: இலக்கிய மீளாய்வின் மிக முக்கியமான நோக்கம் இதுவாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வின் பயனாக கண்டுகொண்ட கண்டுபிடிப்புக்களை தற்போதைய அறிவுடன் (ஏற்கனவே வேறு ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்) தொடர்புபடுத்தி ஒப்புநோக்கக் கூடியதாக இருக்கும்.
4.0 இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் பெற்று கொள்ளப்படும் அறிவுகள்
இலக்கிய மீளாய்வில் ஈடுபடும் ஆய்வாளர் தான் தெரிவு
செய்த ஆய்வுத் தலைப்பு,ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட வகையில் பின்வரும்
அறிவுகளை பெற்றுக் கொள்கிறார்:
வரலாற்று அறிவு- Historical Knowledge: ஒரு குறிப்பிட்ட
தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது, அத்தலைப்பின்
பிரதான எண்ணக்கருக்களின் கால ரீதியான வளர்ச்சிப் போக்குகளை அறிந்து கொள்ளக் கூடியதாக
இருக்கும்.
கோட்பாட்டு மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பான அறிவு
- Theoretical
& Concepts related knowledge : ஒரு
குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது அதனுடன் தொடர்புபட்ட
கோட்பாடுகளை அறிந்து கொள்ள முடியுமாக இருக்கும். மேலும் குறித்த ஆய்வுத் தலைப்பில்
கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய பிரதான எண்ணக்கருக்களையும் இனங்கண்டு கொள்ளக் கூடிதாக
இருக்கும்.
அனுபவவாத அறிவு- Empirical Knowledge : ஒரு குறிப்பிட்ட
தலைப்பு தொடர்பாக இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் போது, தனது ஆய்வுத் தலைப்பு
அல்லது ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட வகையில் ஏற்கனவே உளன்ட்டிலும், வெளிநாடுகளிலும் பிற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை வாசிக்க
வேண்டி இருக்கும். இதன் போது ஆய்வாளர் அனுபவவாத அறிவினை பெற்றுக் கொள்கிறார்.
5.0 இலக்கிய மீளாய்வு மூலங்கள்
இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர் தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள பல்வேறு மூலங்களைப் பயனபடுத்த வேண்டி இருக்கும். அவையாவன:
- பிரசுரிக்கப்பட்ட ஆய்வு சஞ்சிகைக் கட்டுரைகள் (peer reviewed journal articles)
- பிரசுரிக்கப்படாத/பிரசுரிக்கபட்ட முதுமாணி, கலாநிதி ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகள் (Thesis, Dissertation, Reports)
- நூல்கள்
- ஆய்வு மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் (Conference research papers)
- அறிக்கைகள்
- சஞ்சிகைகள் (அகவிழி, ஆசிரியம், பார்வை, கடல்),
- பருவகால இதழ்கள்
- கலைக்களஞ்சியம்
- செய்திப்பத்திரிகைகள், வானொலி, தொலைகாட்சி
- YouTube, Twitter போன்ற நவீன சமூக ஊடகங்கள்
மேற்கண்ட
மூலங்களில் பெறப்படும் தகவல்கள் பெறப்படும் தன்மையினை அடிப்படையாக கொண்டு இவற்றை
முதனிலை மூலத்தகவல்கள் (Primary Sources), இரண்டாம் நிலை மூலத்தகவல்கள் (Secondary Sources) என வகுத்து நோக்கலாம்.
ஆய்வுடன் தொடர்பான விடயங்களை எழுதிய
ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து நேரடியாக பெறப்படும் தகலவல்கள் முதனிலை மூலக தகவல் எனப்படும். சில பொழுதுகளில்
குறிப்பிட்ட ஆய்வாளர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள்/பிரசுரங்களை பெற்றுக் கொள்ள
முடியாமல் போகலாம். இதன் போது அக்குறிப்பிட்ட ஆய்வாளர் தெரிவித்த கருத்துக்களை
வேறு ஒரு நபர் எழுதிய கட்டுரையில் இருந்து
பெற்றுக் கொள்ளும் போது, அவை இரண்டாம் நிலை மூலத் தகவல்களாகக் கருதப்படும். எனினும், முதனிலை
மூலங்களில் இருந்து தகவல்களை பெற்றுக் கொள்வதே எப்போதும் சிறந்தது.
6.0 இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ளும் படிநிலைகள்
ஆய்வுக்காக வேண்டி, இலக்கிய மீளாய்வில் ஈடுபடும்
ஒருவர், இலக்கிய மீளாய்வினை எங்கே? எப்படி? ஆரம்பிப்பது என்ற சங்கட நிலைமைக்கு ஆளாகக் கூடும். எனவே, இலக்கிய மீளாய்வினை பின்வரும் படிநிலைகளினூடாக மேற்கொள்ளும் போது, இலகுவாக இலக்கிய மீளாய்வினை எழுதக் கூடியதாக இருக்கும்:
- ஆய்வுப் பிரச்சினை அல்லது ஆய்வுத் தலைப்புடன் தொடர்பான பிரதான திறவுச் சொற்களை/பதங்களை இனங்காணல் (Identify key terms or key words)
- இலக்கிய மீளாய்வுக்கான தகவல்கள் கிடைக்கும் மூலங்களின் அமைவிடங்களை கண்டு கொள்ளல் (Locate literature)
- இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியங்களை தெரிவு செய்து அவற்றை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தல் (Critically evaluate and select the literature)
- இலக்கியங்களை ஒழுங்கமைத்தல் (Organize the literature)
- இலக்கிய மீளாய்வினை எழுதுதல் (Write a literature review)
6.1 பிரதான திறவுச் சொற்களை /பதங்களை இனங்காணல் (Identify key terms)
ஒன்று அல்லது இரண்டு சொற்கள் அல்லது குறுகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி உங்கள் தலைப்பை அல்லது ஆய்வுப் பிரச்சினையை ஒரு சில முக்கிய சொற்களுக்கு சுருக்கி உங்கள் இலக்கியத் தேடலைத் ஆரம்பியுங்கள். முதலில் நூலகத்தில் அல்லது இணையத் தேடலின் மூலம் இலக்கியங்களைக் கண்டறிவதற்கு இவை முக்கியமானவை என்பதால் இவற்றை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக நீங்கள் பின்வரும் உத்திகளைக் கையாளலாம்:
- உங்களது ஆய்வுப் பிரச்சினையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தற்காலிகமான தொழிற்படு தலைப்பினை (working title) ஒன்றை உருவாக்கி கொள்க. உங்கள் ஆய்வு தமிழில் அமையுமாக இருந்தால் தமிழ் தலைப்பினை ஆங்கிலத்திலும் எழுதி அதில் இருந்து திறவுச் சொற்களை தெரிவு செய்துகொள்க. உயர் கற்கைகளில் அநேக ஆய்வுகள் ஆங்கிலத்திலேயே காணப்படுவதால் ஆங்கில மொழியிலான திறவுச் சொற்கள் உங்கள் இலக்கிய தேடலை இலகுபடுத்தும்.
- நீங்கள் தெரிவு செய்த திறவுச்சொற்களுக்கு நிகராக பயன்படுத்தும் ஒத்த கருத்துப் பதங்கள் காணப்படின் அவற்றையும் குறித்துக் கொள்க.
- அல்லது, உங்கள் ஆய்வில் நீங்கள் விடைகாண விரும்பும் ஆய்வுப் பிரச்சினையில் இருந்து திறவுச்சொற்களை /குறுகிய பதங்களை அடையாளப்படுத்துக.
- குறித்த திறவுச்சொற்களைக் கொண்டு எந்த மொழியில் (ஆங்கிலம்/தமிழ்), எந்தக் கால இடைவெளிக்குள் (உ+ம்: கடந்த ஐந்து வருடங்கள்), இலக்கியத் தேடலை மேற்கொள்ள விரும்புகிறீர் என்பதைத் தீர்மானித்துக் கொள்க.
- நீங்கள் தெரிவு செய்த திறவுச்சொற்களை பயன்படுத்தி நூலகத்தில், இணையத்தில், அல்லது இலத்திரனியல் தரவுத் தளங்களில் உங்கள் இலக்கிய தேடலை ஆரம்பிக்கலாம்.
- பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள உதாரணத்தின் மூலம் இதனை மேலும் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்:
6.2 இலக்கியங்களின்
அமைவிடத்தை கண்டறிதல் (Locate Literature)
ஆய்வுக்குரிய முக்கிய திறவுச்சொற்களைக் கண்டறிந்த பின்னர், இலக்கிய தேடலை நீங்கள் ஆரம்பிக்கத் தொடங்கலாம். இதற்காக கல்விசார் இணையத்தளங்கள், நூலகங்கள் என்பவற்றை நீங்கள் பயன்படுத்த முடியும். அநேகமானவர்கள். சாதாரண இணையத்தில் இலக்கியத் தேடலை ஆரம்பிக்கின்றனர். சாதாரண இணையத்தில் வரும் தகவல்கள் சகலதும் சரியானவை என்று உறுதியாகக் கூற முடியாது. எனவே, இலக்கிய தேடலுக்குப் பொருத்தமான வழிகளில் நீங்கள் இலக்கிய தேடலை மேற்கொள்வது முக்கியமாகும். முதலில் உங்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள நூலகங்களில் இலக்கியத் தேடலை ஆரம்பிக்கலாம். நீங்கள் இனங்கண்ட திறவுச் சொற்கள், குறுகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தி உங்களுக்கு தேவையான இலக்கியங்களை தேடிக் கொள்ள முடியும்.
மின்னணு தரவுத்தளங்கள் (Electronic Databases)
நூலகங்களுக்கு நிகராக ஆய்வுக் கட்டுரைகளை களஞ்சியப்படுத்தி அவற்றை உங்களுக்கு வழங்கும் பல நூற்றுக்கணக்கான கல்விசார் மின்னணு தரவுத்தளங்கள் (Electronic Databases) இன்று விரைவிக் காணப்படுகின்றன. இவை பலவற்றின் சேவைகள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதில்லை. உங்கள் பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனம் இவ்வாறான கல்வி மின்னணு தரவுத்தளங்களில் பலவற்றுக்கு சந்தா கட்டி தங்கள் நூலகத்தின் இணையத் தளங்களில் உங்கள் இலக்கிய தேடலுக்காக வைத்திருப்பார்கள். இவற்றில் உதவியுடன் உங்கள் இலக்கியத் தேடலை நீங்கள் மேற்கொள்ளலாம். இவை நிகழ்நிலை மின்னணு தரவுத்தளங்களாகவும் விளங்குகின்றன. Scopus, Web of Science, PubMed, ERIC, IEEE Xplore, ScienceDirect, Directory of Open Access Journals (DOAJ), SAGE, JSTOR, Willey Online Library, ResearchGate போன்றன இதற்கு சில உதாரணங்கள் ஆகும். கல்விசார் ஆய்வுகளுக்கு பிரசித்தமான சர்வதேச மின்னணு தரவுத் தளங்களுக்கு ERIC (Education Resources Information Center), Education Research Complete, ProQuest Education Journals, Academic Search Premier, A+ Education போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம்.
தேடல் பொறிகள் (Search Engines)
இன்று தகவல் தொழினுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தினால் கல்விசார் ஆய்வுகளை இலகுவாக தேடிகொள்ளும்வகையில் இணையத்தில் பிரத்தியேகமான தேடல் பொறிகள் செயற்படுகின்றன. இவற்றின் உதவி கொண்டும் உங்களது இலக்கிய தேடலை சுலபமாக மேற்கொள்ள முடியும். Google Scholar, Google Books, Microsoft Academic, WorldWideScience, Science.gov, Wolfram Alpha, Refseek, Educational Resources Information Center (ERIC), Virtual Learning Resources Center, iSeek, ResearchGate, Bielefeld Academic Search Engine-BASE, Infotopia, PubMed Central, Lexis Web,என்பன இத்தகைய தேடல் பொறிகளுள் மிகப் பிரபல்யமானவையாகும்.
கீழே தரப்பட்டுள்ள காணொளியில் ஆய்வுகளுக்காக Google Scholar தேடல் பொறியினை சிறந்தமுறையில் பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் தரப்படுகின்றது.
6.3 இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியங்களை தெரிவு செய்து அவற்றை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தல் (Critically evaluate and select the literature)
உங்கள் ஆய்வுக்கான இலக்கியத் தேடலை
மேற்கொள்ளும் போது, பல நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை நீங்கள் கண்டறியக் கூடும் எனினும்
இவற்றைப் பயன்படுத்த முன்னர், இவை எனது ஆய்வுக்கு சிறந்த
மூலமாக உள்ளதா? மிகப் பொருத்தமானதா?
எனும் வினாக்களை கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பல கட்டுரைகள்
உங்கள் ஆய்வின் இலக்கிய மீளாய்வு பகுதியில் சேர்த்துக் கொள்ளத் தகுதியற்றவையாக
இருக்கக் கூடும். இதன் காரணமாக, இலக்கிய தேடலை மேற்கொள்ளும் போது, முதலில் refereed journalகளில் வெளிவந்த
கட்டுரைகளில் தொடங்கி பின்னர், nonrefereed journal கட்டுரைகள்;
நூல்கள், மாநாட்டு கட்டுரைகள், முதுமாணி, கலாநிதி ஆய்வுக் கட்டுரைகள், கடைசியாக non-reviewed
கட்டுரைகள் என உங்கள் தேடலை அமைத்துக் கொள்ளுமாறு Creswell (2012) வலியுறுத்துகிறார். மேலும், இலக்கிய தேடலில் பெற்றுக் கொண்ட விடயங்கள், உங்கள் ஆய்வுடன் மிகப்
பொருத்தமானதா? என்பதையும் மிகக் கவனமாக தீர்மானிக்க வேண்டும். இந்த பொருத்தப்பாடு
பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளதாக Creswell (2012) குறிப்பிடுகிறார்:
- தலைப்புரீதியான பொருத்தப்பாடு: இலக்கியத் தேடலில் நீங்கள் பெற்றுக் கொண்டவை , உங்களால் முன்மொழியப்பட்ட ஆய்வின் அதே தலைப்புடன் பொருந்தி செல்கிறதா?
- தனியாள் மற்றும் தளம் சார்ந்த பொருத்தப்பாடு : நீங்கள் ஆய்வு செய்ய விரும்பும் அதே தனிநபர்கள் அல்லது தளங்களை நீங்கள் தேடிப்பெற்றுக் கொண்ட இலக்கியம் ஆய்வு செய்கிறதா?
- ஆய்வுப் பிரச்சினை மற்றும் ஆய்வு வினாவுடனான பொருத்தப்பாடு: நீங்கள் ஆய்வு செய்யும் அதே ஆய்வுப் பிரச்சினையினை நீங்கள் தேடிப்பெற்ற இலக்கியம் ஆராயுமா? அல்லது உங்கள் ஆய்வில் நீங்கள் விடைகாண திட்டமிட்டுள்ள அதே ஆய்வு வினாவினை குறிப்பிட்ட இலக்கியம் தீர்க்குமா?
- அணுகல்தன்மை தொடர்பான பொருத்தப்பாடு: உங்கள் நூலகத்தில் குறித்த ஆய்விலக்கியங்களைப் பெற்றுகொள்ளக் கூடியதாக உள்ளதா? அல்லது இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியுமா? நூலகம் அல்லது இணையதளத்தில் இருந்து எளிதாகப் பெற முடியுமா?
மேற்கண்ட வினாக்களுக்கு ஆம் என விடைகள் வருமாயின் அத்தகைய இலக்கியங்களை உங்கள் ஆய்வின் இலக்கிய மீளாய்வுக்கு உங்களால் பயன்படுத்த முடியும். இலக்கிய தேடலின் மூலம் பெற்றுக் கொண்ட பல்வேறு மூலங்களின் தரத்தினை இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.
6.4 இலக்கியத்தை ஒழுங்கமைத்தல்
உங்கள் ஆய்வுக்குப் பொருத்தமான சார்பிலக்கியங்க்களை
தேடிப் பெற்று, அவற்றின் தரத்தையும் அவற்றின் பொருத்தப்பாடுகளையும் உறுதி
செய்த பின்னர். இலக்கிய மீளாய்வுக்காக அவற்றை ஒழுங்கமைப்புக்கு உட்படுத்த வேண்டும்.
இதற்காக பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்:
- அடையாளம் கண்ட இலக்கியங்களை உங்கள் வாசிப்புக்காக தரவிறக்கம் செய்து கொள்ளல், பிரதிகள் எடுத்து கொள்ளல் அல்லது கணனியில் சேமித்துக் கொள்ளல். (Downloading, Printing or Saving in computer).
- வாசிப்புக்காக தெரிவு செய்தவற்றை வாசித்து அவற்றில் இருந்து குறிப்புக்கள் எடுத்தலும், அவற்றை சுருக்கி எழுதிக் கொள்தலும் (Taking Notes and Abstracting Studies). இதற்காக இலக்கிய மீளாய்வுக்கான தாயமொன்றை தயாரித்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். இலக்கிய மீளாய்வு பகுதியில் ஒருவர் மேற்கொள்ளும் ஆய்வுப் பிரச்சினையுடன் தொடர்புடைய பிற ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்து அவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தல் வேண்டும். இதனை இலக்கிய மீளாய்வு தாயம் இலகுபடுத்தும்.
- இலக்கிய மீளாய்வுக்கான தாயம் ஆய்வுகளில் காணப்படும் முக்கிய விடயங்களை இலகுவாக அடையாளப்படுத்தி காட்டும். மேலும் ஓர் ஆய்வுடன் தொடர்புபட்ட ஏனைய ஆய்வாளர்களின் கருத்துக்களில் உள்ள உடன்பாடுகள், வேறுபாடுகளை இலகுவில் ஒப்பிடக் கூடியதாக இருக்கும். ஆய்வில் உள்ள இடைவெளியை காண்பதற்கும் இந்த தாயம் மிக உதவியாக இருக்கும். இலக்கிய மீளாய்வு தாயத்தினை உருவாக்கும் ஆய்வு மாணவர்கள், இலக்கிய மீளாய்வு பகுதியை சிறப்பாக எழுதுவர். பின்வரும் அட்டவணையில் இலக்கிய மீளாய்வுக்கான தாயமொன்று காட்டப்பட்டுள்ளது.
6.5. இலக்கிய மீளாய்வு எண்ணக்கருப்படமொன்றை உருவாக்குதல்
இலக்கிய மீளாய்வுக்காக ஆய்வுக் கட்டுரைகளை ஒழுங்கமைத்து, குறிப்புகள் எடுக்கும்போது, உங்கள்
இலக்கிய மீளாய்வு எவ்வாறு அமையப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ளத்
தொடங்குவீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு எண்ணக்கரு
படம் உங்கள் மனதில் உருவாகும். இந்த
எண்ணக்கரு படத்தை ஒரு தாளில் விவரித்து வைத்துக் கொள்ளல்வேண்டும். இதன்போது, இலக்கிய மீளாய்வுக்காக இலக்கியத்தை இலகுவில் ஒழுங்கமைக்கவும், நேர்த்தியான முறையில் உங்கள் இலக்கிய மீளாய்வினை எழுதவும் உதவுவதாக இந்த எண்ணக்கரு படம் அமையும்.
Source: OER Wikimedia
6.6 இலக்கிய மீளாய்வுக்கான வாசிப்பு
இலக்கிய மீளாய்வினை மேற்கொள்ள நாம் சேகரித்துக் கொள்ளும் அனைத்து கட்டுரைகளினதும் சகல பக்கங்களையும் வாசிக்க வேண்டுமா? என்ற வினா உங்கள் மனதில் எழக்கூடும். அவ்வாறு வாசிக்க வேண்டிய தேவையில்லை என்றே கூற முடியும். இதற்காக பேராசிரியர் இராஜசேகர் கூறும் நுட்பங்களை பயன்படுத்த முடியுமாக இருக்கும்.
- முதலில், எமது ஆய்வுடன் தொடர்பான மிகத் தரமான ஆய்வுக் கட்டுரைகளை தேடிப் பெற்று ஒழுங்கமைத்துக் கொள்ளல்.
- கட்டுரைகளை வாசிக்க ACMA (Abstract---Conclusion---Methodology---Analysis) என்ற ஒழுங்குமுறையினை பயன்படுத்தல்.
- அடுத்து, அவற்றின் ஆய்வுச் சுருக்கங்களை(Abstract) மாத்திரம் வாசித்தல்.
- ஆய்வுச் சுருக்கங்களை வாசித்த பின்னர், ஓவ்வொரு கட்டுரையினதும் முக்கிய பகுதிகளை மட்டும் வாசித்தல். இதற்காக, குறித் ஆய்வுக் கட்டுரையின் முடிவுரை (Conclusion), ஆய்வு முறையியல் (Methodology), தரவுப் பகுப்பாய்வு (Analysis) என்ற ஒழுங்கில் வாசிக்க முடியும்.
6.7 இலக்கிய மீளாய்வினை எழுதுதல் (Writing Literature Review)
இலக்கிய தேடலின் போது பெற்றுக் கொண்ட பல்வேறு
மூலங்களை ஒழுங்குபடுத்தியதன் பின்னர், உங்களது இலக்கிய மீளாய்வினை எழுத ஆரம்பிக்கலாம். இலக்கிய மீளாய்வினை
எழுதும் போது அனுபவாத ஆய்வுகளின் சுருக்கங்களை அதற்குரிய உசாத்துணை குறிப்புகளை
உரிய முறையில் வழங்கி எழுதுதல் வேண்டும். மேலும், இலக்கிய
மீளாய்வினை எழுதும்போது பல்வேறு வகைகளைப் பயன்படுத்துவர். இவற்றுள் கருப்பொருள்
அடிப்படையில் (thematic review of the literature ) அல்லது ஒவ்வொரு ஆய்வுகளின் அடிப்படையில்
(study-by-study review of the literature) எழுதுவது
பிரபல்யமாக உள்ளன.
இலக்கிய மீளாய்வினை எழுதும் போது பின்வரும் விடயங்களை பின்பற்றல் வேண்டும்.
- ஆய்வுப் பிரச்சினை தொடர்பாக எழுத்தாளர்களிடம் காணப்படும் வெவ்வேறுபட்ட நோக்குககளை ஒப்பீட்டு வேறுபடுத்திக் காட்டுதல்
- ஒரே மாதிரியான முடிவுகளை குறிப்பிடும் எழுத்தாளர்களை குழுவாக்குதல்.
- ஆய்விலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட முறையியல் அம்சங்களை விமர்சனத்துக்கு உட்படுத்துதல்.
- எழுத்தாளர்களிடம் காணப்படும் உடன்படாத விடயங்களை குறிப்பிட்டுக் காட்டுதல்.
- முனைப்பான ஆய்வுகளை முக்கியப்படுத்தி கட்டுதல்
- உங்கள் ஆய்வு முன்னைய ஆய்வுகளுடன் உள்ள தொடர்பினை எடுத்துக் கட்டல்.
- ஆய்வு இலக்கியங்களில் கூறப்பட்டவற்றை சுருக்கமாக முடிவுரையில் கூறுதல்.
6.8 முடிவுரை
இலக்கிய மீளாய்வு ஆய்வொன்றின் மிக முக்கிய பகுதியாக அமைகின்றது. இதனை சரியான முறையில், ஆய்வாளர் மேற்கொண்டு விட்டால், அவரது எனைய ஆய்வுப் பணிகளை மிக எளிதில் மேற்கொண்டு விடலாம். இதன் காரணமாக, ஆய்வாளர்கள், இலக்கிய மீளாய்வினை சிறந்த முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதனை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். இந்தவகையில், ஆய்வாளரொருவர் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் இக்கட்டுரையில் நோக்கப்பட்டன. இக்கட்டுரை தொடர்பாக உங்கள் கருத்துக்கள் ஏதுவுமிருப்பின் அவற்றை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் இடுக.
நன்றி!
அருமையான பதிவு சார்.. இது போன்ற பதிவுகள் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு கல்விசார்பரப்பில் பாரிய நன்மைகள் ஏற்படுத்தும்
பதிலளிநீக்கு