கல்வியலில் தத்துவ சிந்தனைகள்
அறிமுகம்
இன்றைய பல்வேறு அறிவியல்களின் தோற்றுவாயாக தத்துவம் விளங்குகின்றது. விஞ்ஞானத்திற்கும், வேதங்களுக்கும் இடைப்பட்டதாக தத்துவம் விளங்குவதாக சிலர் குறிப்பிடுகின்றனர். உலகினை பற்றிய புரிதலைப் பெற்றுக் கொள்ள தத்துவம் எமக்கு உதவுகின்றது. தத்துவத்தில் பல்வேறு கிளைப்பிரிவுகள் உள்ளன. அவற்றுள் கல்வித் தத்துவமும் ஒன்றாகும். கல்வியியலில் உயர் கற்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி தத்துவ சிந்தனைகள் பற்றிய புரிதலை கொண்டிருப்பது அவசியமாகின்றது மாற்றமடையும் உலகின் தேவைகளுக்கேற்ப கல்விச் செயற்பாடுகளை மாற்றி அமைக்கும் போது நாம் கொண்டுள்ள தத்துவ ரீதியான புரிதல் எமக்கு உதவுவதாக இருக்கும். இந்த வகையில் இக்கட்டுரையில், தத்துவம் கல்வித் தத்துவம் பற்றிய விடயங்கள் எடுத்து நோக்கப்படுகின்றன.
தத்துவம் என்றால் என்ன?
சகல
விஞ்ஞானங்களுக்கும் தோற்றுவாய் தத்துவம்
எனப்படுகின்றது. மனிதன், தான் வாழும் உலகு (வெளி உலகு) தொடர்பாகவும், தனிநபர்கள்
தொடர்பாகவும் ஏற்பட்ட ஐயங்களுக்கு விடை தேட முற்படுகையில் தத்துவ சிந்தனைகள் தோன்றலாயின. தத்துவம் அல்லது மெய்யியல் என்பதை ஆங்கிலத்தில் Philosophy
என்பர். Philosophy எனும் ஆங்கிலப் பதம் “Philosophia”
எனும் கிரேக்க சொல்லின் மருவலாகும். Phileo
(Love-அன்பு/நேசித்தல்) மற்றும் Sopia (Wisdom ஞானம்/அறிவு) ஆகிய கிரேக்க
பதங்களில் இருந்து மருவியதாகும். அறிவை
நேசிப்பது (ஞானத்திலான விருப்பு) என்பதே இதன் நேரடிப் பொருளாகும்.
தத்துவவியலாளர்கள் அறிவைத் தேடுபவர்களாகவும், இயற்கைப் பொருட்களை விளங்கிக் கொள்ளும் வகையில் உலகைப் பற்றிய ஆர்வமிக்கவர்களாகவும் காணப்படுகின்றனர். தத்துவம் என்பது வாழ்க்கை பற்றிய ஒருவரது புலக்காட்சியாக அல்லது ஒன்றை அடைந்து கொள்வதற்கான முறையினைக் குறிப்பதாகவும் அமைகின்றது. தன்னைப் பற்றியும், தான் வாழும் உலகைப் பற்றியும், தனக்கும் உலகுக்கும் உள்ள இடைத் தொடர்புகள் குறித்தும். தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இடைத்தொடர்புகள் பற்றியும் அடிப்படை உண்மைகளை ஆராய்வதே தத்துவத்தின் அடிப்படையாக உள்ளது.
பன்னூற்றாண்டு காலமாக தத்துவவியலாளர்கள் , அறநெறி,
நன்மை, அறிவு, உண்மை, அழகு, மனித இருப்பு போன்ற எண்ணக்கருக்களில் ஆர்வம் கொண்டவர்களாக
இருந்தனர். பொதுவாக தத்துவஞானிகள் கீழ்வருவன போன்ற வினாக்களில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக இருப்பர்:
- உண்மை என்றால் என்ன? ஒரு கூற்றை சரியாகவோ பிழையாகவோ நாம் ஏன் கூறுகிறோம்?
- நாம் எதனை அறிந்துள்ளோம் என்பதி நாம் எப்படி அறிவோம்?
- யதார்த்தம் என்றால் என்ன? உண்மை என விபரிக்கக் கூடிய பொருட்கள் யாவை?
- சிந்தனையின் அல்லது நினைத்துப் பார்த்தலின் தன்மை யாது?
- மனிதனாக இருப்பதன் சிறப்பம்சம் என்ன?
- ஓர் உயிரியாக இருப்பது பற்றி யாதேனும் சிறப்பு உள்ளதா?
- ஒழுக்கம் என்றால் என்ன?
- சரி அல்லது தவறு , நல்லது அல்லது கெட்டது ஆக ஒன்று அமைவதென்பதால் கருதப்படுவது என்ன?
- அழகு என்றால் என்ன?
- அழகான பொருட்கள் மற்றையவற்றில் இருந்து எவ்வாறு வேறுபட்டு அமைகின்றன?
இவ்வாறு,
தத்துவவியலாளர்கள் ஒரு விடயத்தை விளங்கி கொள்ள வினாக்கள் கொண்ட விசாரணை
முறையொன்றைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களுக்கு விருப்பமுள்ள அல்லது தடுமாற்றத்தை தரும் ஒரு விடயம் அல்லது பொருளைக் கண்ணுறும் போது அதனை ஆழமாக விளங்கிக் கொள்ளும் பொருட்டு இந்த விசாரணை முறையினை பயன்படுத்துகின்றனர். அதாவது தாம் எடுத்துக்கொண்ட விடயத்தை மேலும் விளங்கிக் கொள்ள, அதனை பிரச்சினையாக
அல்லது புதிராக ஆக்கி அதற்கு விடை காண பல வினாக்களை தாமாக அமைத்துக் கொள்வர். இதன் மூலம் தாம்
கண்டறியும் உண்மைகள் தத்துவங்களாக மிளிர்கின்றன.
Aggarval (2011) தத்துவம் பின்வரும் இரு பிரகாண எண்ணக்கருக்களைக் கொண்டது என விளக்குகிறார்:
- தத்துவம் என்பது ஒரு வகையான அறிவியல் ஆகும்.ஆனால் இது இடஞ்சார்ந்த அறிவியலில் இருந்து வேறுபட்டது ஆகும். தத்துவம் மிகவும் பொதுவான பிரச்சினைகளை மிக விமர்சன ரீதியாக ஆராய்கிறது.
- தத்துவம் என்பது யதார்த்தத்தின் உள்ளுணர்வு அனுபவம் மட்டுமல்ல, அது பிரபஞ்சத்தை விளக்குவதற்கும் புரிந்துகொள்வதற்குமான ஓர் அறிவார்ந்த முயற்சியாகும்.
தத்துவத்தின் பண்புகள் பண்புகள்
தத்துவம் என்பதற்கு வழக்கப்பட்டுள்ள பல்வேறு விளக்கங்கங்க்ளின் அடிப்படையில் தத்துவத்தின் பண்புகளை பின்வருமாறு குறிப்பிடலாம்: தத்துவமானது
- உண்மை மற்றும் உண்மைக்கான தேடல்.
- விசாரணையின் அடிப்படையிலானது.
- இயங்குநிலையிலான மற்றும் வாழும் ஒரு சக்தி.
- ஒரு கலை மற்றும் அறிவியல்.
- கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையது.
- இயற்கையை புரிந்து கொள்ளவதற்கான ஓர் அறிவார்ந்த முயற்சி.
- அறிவிற்கான விருப்பு .
- ஞானத்திற்கான விருப்பு.
- வாழ்க்கை முறைக்கு ஓர் வழிகாட்டி. (மூலம்: Aggarval 2011)
தத்துவத்தின் பிரதான பரப்புகள்
தத்துவத்தின்
நோக்குகள் பின்வரும் பிரச்சினைகளை பற்றி வெகுவாக பேசுகின்றன:
- உண்மை தொடர்பான பிரச்சினைகள்- இதனை தத்துவத்தின் அதீத பெளதீகவியல் எனும் பிரிவு ஆராய்கின்றது
- அறிவு தொடர்பான பிரச்சினைகள் – அறிவாராய்ச்சியியல் எனும் தத்துவத்தின் பிரிவு இது பற்றி கவனம் செலுத்துகின்றது.
- விழுமியங்கள் தொடர்பான பிரச்சினைகள் -இவை பற்றி Axiology எனும் ஒழுக்கவியல் கவனம் செலுத்துகிறது.
அதீத பௌதிகவியல்
தத்துவவியலில் அதீத பௌதிகவியலுக்கு, அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. (வெளி)
உலகுக்கு அப்பால் உள்ள விடயங்களின் மீது இது கவனம் செலுத்துகின்றது. விஞ்ஞான உலகம் கவனம் செலுத்தாத விடயங்களில் அதீத
பௌதிகவியல் அதிக கவனம் செலுத்துகின்றது
- இறைவன் மற்றும் அவரது நிலவுகை
- மனிதன், ஆத்மா, மனித வாழ்க்கை, இறப்பின் பின்னர் என்ன நடக்கும் போன்ற இன்னோரன்ன விடயங்களில் அதீத பௌதிகவியல் கவனம் செலுத்துகின்றது
இதில் கல்விதத்துவவியலார்கள்
- மனித மனம் எத்தகையது?
- பிறக்கும் போது மனித மனம் சூனியமாக இருக்கின்றதா அல்லது ஏதேனும் சக்தியுடன் காணப்படுகிறதா?
- ஆசிரியர்களுக்கு புதிதாக கற்பிக்க முடியுமா?
- மாணவர்களில் பொதிந்துள்ள உள்ளார்ந்த சக்திகளை வெளிக்கொணர முடியுமா?
- மனதை உறுதி செய்யும் போது முன்-வாழ்க்கை அனுபவங்கள் அல்லது அனுபவங்கள் துணை புரியுமா?
- கற்றல் என்றால் என்ன? கற்றலின் கற்றலின் வரையறை என்ன? என்பது தொடர்பாக கவனம் செலுத்துகின்றனர்
அறிவாராய்ச்சியியல்
அறிவாராய்ச்சியியல்
அறிவு தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துகின்றது அறிவின் தன்மை, நம்பிக்கைகள்,
கருத்துக்கள் பற்றி கவனம் செலுத்துகிறது.
அறிவை பெறுகின்ற பல்வேறு மூலங்கள், வழிவகைகளைப் பற்றி அதிக கவனம் செலுத்துகின்றது.
மனிதனது தொழிற்பாடுகள் அவன் பெறும் அறிவின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே
- அறிவைப் பெற்றுக்கொள்ளல் என்றால் என்ன?
- நம்பிக்கைகள், கருத்துக்கள், அறிதல் என்றால் என்ன?
- அறிவு, ஞானம், புத்தி என்பன ஒரே பொருளைக் சுட்டிக்காட்டுகின்றனவா
- அல்லது வெவ்வேறானவையா? என்பன போன்ற விடயங்கள் இதில் ஆராயப்படுகின்றன.
கல்வியுடன்
தொடர்புபடுத்தி நோக்கும் போது பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளலாம்:
- ஏதாவது ஒன்றினை பற்றிய நம்பிக்கையினையும் அறிவையும் நாம் எவ்வாறு பெறுகிறோம்
- அதற்காக பயன்படும் உத்திகள் யாவை?
- ஓய்வாக தனிமையில் சிந்திப்பதன் மூலம் அல்லது தியானம் செய்வதன் மூலம் மட்டும் தீர்வுகளை பெற்றுவிட முடியுமா?
- உலகினையும் அது தொடர்பான பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அறிந்துகொள்ள மனதை வருத்துவது உதவியாக அமையுமா?
- அல்லது கற்பிக்கும் பாடங்கள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியுமா? என்பது போன்ற விடயங்கள் இதில் ஆராயப்படுகின்றன.
ஒழுக்கவியல்
விழுமியங்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றி தத்துவவியலின் பிரிவான ஒழுக்கவியல் கவனம் செலுத்துகிறது.
- வாழ்க்கையின் அடிப்படைகள் யாவை?
- அவை எவ்வாறு உண்மை பற்றிய நோக்குகிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன?
- இவை மனித நடத்தை தொடர்பான நியமங்கள், தர நிலைகளை ஆராய்வதாக உள்ளன.
கல்வித் தத்துவம்
தத்துவத்தின் ஒரு கிளையாக கல்வித் தத்துவம் விளங்குகிறது.
- “கல்வி என்றால் என்ன?
- கல்வியின் நோக்கம் என்ன?
- ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வது என்றால் என்ன?
- கல்விக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு யாது ?”
ஒரு சமூகத்தின் அபிவிருத்தியானது இளைஞர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளதாக கல்வித் தத்துவம் கருதுகிறது. இத்தகைய இளைஞர்கள், ஒழுக்க அடிப்படையில், விழுமியங்களுடன் அரசியல் கோட்பாடு, அழகியல், பொருளாதாரம், போன்றவற்றில் ஆழமான விளக்கங்களை கொண்டிருப்பதுடன் பொறுப்பான, சிந்தனைமிகுந்த, முயற்சியாண்மையுள்ள பிரசைகளாகவும் இருப்பர்.
இன்று நாம் கல்வித் தத்துவவியலாளர்களாக கொண்டாடும் அநேக அறிஞர்கள் கல்வித் தத்துவத்துக்கு மட்டும் உரியவர்கள் அன்று. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் காணப்பட்ட அநேக முன்னையத் தத்துவவியலாளர்கள் தெரிவித்து சென்ற தத்துவக் கருத்துக்களில் கல்வி பற்றி அவர்களது சிந்தனைகளைப் பிரித்தெடுத்து அவற்றையே கல்வித் தத்துவம் என நாம் அடையாளப்படுத்துகிறோம்.
பிளேட்டோ, அரிஸ்டோட்டில், ரூசோ, ஜோன் டூயி, அட்லர், கொன்பியுசியஸ், அல்-பராபி, ரவீந்திரநாத் தாகூர், காந்தி, கார்ல் மார்க்ஸ் எனப் பலரை கல்வி பற்றிக் கருத்துரைத்த தத்துவவியலாளர்களாக இனங்காட்டலாம். இத்தகையவர்கள் கூறிய கருத்துக்களில் இருந்து கல்வி என்றால் என்ன? கல்வி எப்படி அமைய வேண்டும்? எனப் பலவற்றுக்கு அடிப்படை விளக்கங்களை நாம் பெறத்தக்கதாக உள்ளது.
கல்வியியலில் முக்கியம் பெறும் தத்துவ சிந்தனைகள்
கல்வியியலில் பல்வேறு தத்துவ சிந்தனைகள் முக்கிய இடம்பெறுகின்றன. இவற்றுள் பின்வருவனவற்றுள் முதல் நான்கும் தத்துவ சிந்தனைகளாகவும், இத்தத்துவ சிந்தனைகளில் இருந்து பிறந்த கல்வித் தத்துவ சிந்தனைகளாக ஏனையனவும் விளங்குகின்றன:
- இலட்சியவாதம்/ கருத்தியல்வாதம் (Idealism)
- யதார்த்தவாதம்/ மெய்ம்மைவாதம் (Realism)
- பயனளவைக் கொள்கை/ நடைமுறைவாதம் (Pragmatism)
- இருத்தலியல்வாதம் (Existentialism)
- நிலைத்திருத்தல் வாதம் - Perennialism
- இன்றியமையாவாதம் – Essentialism
- முற்போக்குவாதம் – Progressivism
- மீள்கட்டுமானவாதம் / சீரமைப்புக் கொள்கை (Re-constructivism)
இலட்சியவாதம்/ கருத்தியல்வாதம் (Idealism)
பழமையானதொரு தத்துவக் கோட்பாடு இதுவாகும். இதனை ஆன்மீகக் கொள்கை (Spiritualism) என்றும் அழைப்பர். இலட்சியவாதம் அல்லது கருத்தியல் வாதத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதம் Ideology ஆகும். இது Idea (கருத்து) Ideal (குறிகோள், இலட்சியம்) ஆகிய பதங்களில் இருந்து மருவியதாகும். உள்ளம் / ஆன்மா எனப்படும் அருவப்பொருள் உண்மை நிலை உடையதாகும்.
இந்த உள்ளம் / மனத்தினை சார்ந்ததாக அனுபவங்கள், சிந்தனைகள், குறிகோள்கள், விழுமியங்கள் என்பன காணப்படுகின்றன. சடப்பொருள்கள் உண்மைப் பொருட்கள் அல்ல என்பது இந்த கொள்கையின் அடிப்படையாகும். சடப்பொருளால் ஆன பரந்த இயற்கை உலகத்தை ஆராய்ந்து உணரும் தன்மையை உண்மைப் பொருளான மனதுக்கு உண்டு என்பதும் இதன் கருத்தாக உள்ளது.
இலட்சியவாதத்தில், அது முன்னிலைப்படுத்தும் விடயத்தை
அடிப்படையாகக் கொண்டு பல வகைகள் உள்ளன.
அகவயக் கருத்துவாதம் (subjective idealism),
புறவயக்கருத்து வாதம் (Objective idealism) , ஆழ்நிலை கருத்து வாதம் (Transcendental
idealism)
முழுமையான கருத்துவாதம் (absolute idealism) என்பனவே அவைகளாகும். இவ்வாறு பல காணப்படினும்
அவை யாவற்றிலும் பின்வரும் பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன:
- உண்மைப் பொருள் சடத்தன்மை உடையதன்று. அது
ஆன்மீகத் தன்மை கொண்டதாகும்.
- மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றவன்
(கூர்ப்படைந்தவன்). இது உள்ளத்தின் வளர்ச்சியிலும் காணப்படுகிறது.
- மனிதன் ஏனைய உயிரினங்களிலும் பார்க்க
சிறப்புப் பெற்றவன்.
- சகல அறிவுகளும் புலன்களினால் மட்டும்
வரும் என்றில்லை. உயர் அறிவு
உள்ளுணர்வினால் (Intuition) பெறப்படுவதாகும். இதன் மூலம், வாழ்க்கைப் பெறுமானங்களையும் இறைவனையும்
அடைந்து கொள்ள முடியும்.
- மனிதனின் உள்ளம்/ ஆன்மா மனித நடத்தையைக்
கட்டுப்படுத்தி திசைமுகப்படுத்துகின்றது.
- மனித வாழ்வின் நோக்கம் தனது ஆன்மிகப்
பண்புகளும் மன ஆற்றல்களும் முழுமை பெறலாகும். அதற்காக கல்வி உதவக் கூடிய வகையில்
இருத்தல் வேண்டும்.
- மனித உள்ளம்/ஆன்மா சுதந்திரமாக இயங்கக்
கூடியது. (சந்தானம் பக்கம் 272-273)
இலட்சியவாதமும் கல்வியும்
இலட்சியவாதம்
மனிதனது ஆன்மீகச் சூழலை வலியுறுத்துவதாகவும் சிறந்த விழுமியங்களின் அடிப்படையில்
மாணவர்கள் வழிப்படுத்தபடல் வேண்டும்
எனவும் கூறுகிறது,
இதனால் புத்தக அறிவுக்கு இங்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மனிதவியற் பாடங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன. அத்துடன் வாழ்க்கையில்
உயரிய இலட்சியங்கள்/ மதிப்புக்கள் அடையக்கூடிய வகையில் பாடங்கள் இங்கு முக்கியம் பெறும்.
மேலும், விஞ்ஞானம், சமயம், கலைகள் என்பவும் முக்கியம் பெறும். இந்த
வகைக் கலைத்திட்டத்தில், ஆசிரியரே முதன்மை பெறுவார்.
இவரே மாணவர்கள் இலட்சியங்களை அடைய வழிகாட்டுபவராகத் திகழ்வார். இக்கொள்கையின்படி திட்டமிடப்படும் கலைத்திட்ட
விருத்தியின் போது பின்வரும் வினாக்கள்
தொடுக்கப்படும்:
- உள விருத்திக்காக பகுத்தறிவு ரீதியாகவும் ஆக்கபூர்வமாகவும் மாணவர்கள் சிந்திக்க்கும் உள விருத்திக்கு எத்தகைய அறிவு விடயங்கள் உதவுவதாக இருக்கும்? (What knowledge aspect may assist pupils to think critically and creatively for mental development ?)
- இயல்பாகவே நிலையாக அறிவை பிரதிபலிக்கக் கூடிய முக்கிய பாடங்கள் எவை? (Which may reflect vital subject matter that has endured in nature ?)
- உள்ளார்ந்த ஆற்றல்களின் விருத்திக்கான
கற்றலை எது வலியுறுத்தக்கூடும்? (Which may emphasize learning
acquired for development of inner potentiality ?)
- ஒருவரை ஒருவர் நோக்கிய மனித
விருத்தியுடன் தொடர்புபட்ட வகையில், பிரதிபலிக்கக்கூடிய
பரந்தளவான பாட உள்ளடக்கம் எதுவாக
இருக்கும்? (Which may reflect universal content in relating one human
being to another involving human development?)
- எந்த உள்ளடக்கம், தனிப்பட்ட மாணவனை விழுமியங்களை விருத்தி செய்வதன் ஊடாக மட்டுப்படுத்தப்பட நிலையில் இருந்து படிப்படியாக வரையறை இல்லாத மனிதனாக்குகிறது? Which content is emphasize individual pupils moving away from being finite to increasingly becoming infinite human beings through development of values?
பயனளவைக் கொள்கை
இருபதாம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து தோன்றிய தத்துவச் சிந்தனை இதுவாகும். PRAGMA எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து Pragmatism எனும் பதம் மருவியது. Pragma எனின் செயல் அல்லது நடைமுறைப்பயிற்சி ஆகும் (Utilitarianism என்றும் இது அழைக்கப்படுவதுண்டு).
மனித சிந்தனைக்கும் செயலுக்கும் இடையிலான தொடர்பினை இக்கொள்கை வலியுறுத்துகிறது. இதன்படி, கருத்து அல்லது சிந்தனை திருப்திகரமாகச் செயற்பட்டால் உண்மை என்பதோடு பிரயோக / நடைமுறைக்கு ஒத்து வராத கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என இக்கொள்கை கூறுகிறது.
அதாவது, எது நடைமுறையில் பயனளிப்பதாக உள்ளதோ அதுவே உண்மையாகும். கருத்துக்களை விட செயல்கள் முக்கியமானவை. குறிப்பாக மாற்றமடையும் உலகுக்கு ஏற்ப குறிக்கோள்களும் மாற்றம் பெற வேண்டும் எனச் இச்சிந்தனை வலியுறுதுகிறது.
இச்சிந்தனை சட்டம், கல்வி, அரசியல், சமூகவியல் உளவியல், போன்ற பல துறைகளில் செல்வாக்குச் செலுத்துகிறது. வில்லியம் ஜேம்ஸ் (William James 1842-1910), ஸி.எஸ்.பியர்ஸ் (C.S.Peirce 1839-1914), ஜோன் டூயி (John Dewey 1859-1952), கியூன் (Quine 1908-2000) போன்றோரினால் இக் கருத்து கட்டியெழுப்பப்பட்டது.
இவர்களின்படி, யாதேனும் ஒரு செயல் அல்லது கருமத்தினால் பயன்பாடு கிடைக்கப் பெறும்போது அது பயனுடையதாகவும் நல்லதாகவும் அமைக்கின்றது. பயன்பாடு கிடைக்காவிடின் அது தீயதாக கருதப்பட்டது. இவர்களின்படி, உயிர்ப்பான செயற்பாடுடைய அறிவே மேன்மையானதாகும்.
பயனளவைக் கொள்கையும் கல்வியும்
கற்றல் கற்பித்தலில் செயற்பாடுகளுக்கு பயனளவைக் கொள்கை முக்கியம் வழங்குகிறது. வாழ்க்கையின் நிலைமைகளே கல்வியின் அடிப்படையாக இங்கு கருதப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்கும் வகையிலான பாடங்களும் அதற்கேற்ற கற்றல் கற்பித்தலும் காணப்படல் வேண்டும்.
அத்துடன் கல்வி நோக்கங்களில் சமூகம் முன்னிலைப்படுத்தப்படும். சமூக மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி நோக்கங்கள் மாற்றமடைவதுடன், வாழ்நாள் முழுதும் கல்வி தொடர்ந்து அமைய இதில் வலியுறுத்தப்படுகிறது.
இங்கு மாணவன் முதன்மை பெறுவதுடன் ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக இருப்பார். அனுபவங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் மாணவர்களுக்கு பிரச்சினைகளை வழங்கி அவற்றை தீர்த்துக்கொள்ள அவர்களை வழிப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் சுய கற்றல், புதிய அறிவுகளை கண்டறியவும் வழியேற்படுகிறது.
எனவே, மாணவர்களை உயிர்ப்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தும் வகையிலும், சுய கற்றலின்பால் மாணவர்கள் ஈர்க்கப்படும் வகையில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாகிறது. இதற்கேற்ற வகையில் கலைத்திட்டமும் தயாரிக்கப்படுவது முக்கியமாகின்றது.
புற
உண்மைக் கொள்கை/ யதார்த்தவாதம் (Realism)
மனிதனது புலன்களினால் உணரப்படும் புற உலகப் பொருட்களுக்கு தனிப்பட்ட உண்மை நிலை உள்ளது. அதாவது புற உலகு மெய்யானது. மனிதன் புலன்களினால் உணரும் பொருட்கள் உண்மையில் இருக்கின்றன என இந்தக் கொள்கை கூறுகிறது. இந்த புற உலகினை மனிதன் அவதானிக்க முடியும்.
இந்தக் கொள்கையில் உள்ள அரிஸ்டோட்டில், உலகின் தனிப்பட்ட பல்வேறு நிகழச்சிகளை அவதானிப்பதன் மூலம் அறிவைப் பெற முடியும் என்கிறார். பேகன், கொமினியஸ், லாக் ஹீர்பார்ட், ரஸ்ஸல், வைட்ஹெட், போன்றோர் இக்கொள்கையினைச் சார்ந்தோர்களாவர்.
புற உண்மைக் கொள்கை/ யதார்த்தவாதமும் கல்வியும்
இந்த கொள்கையில் புலன்களினால் பெறப்படும் அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் பொதுக்கல்வியும் தொழிற்கல்வியும் இணைத்த வகையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும் எனப்படுகிறது. இத்தகைய கல்வி முறையில், மாணவர்கள் தரமான விஞ்ஞான மற்றும் கணிதக் கலைத் திட்டமொன்றை பயில வேண்டும். அத்துடன் ஏனைய பாடங்களும் போதுமான அளவில் வழங்கப்படல் வேண்டும்.
இயற்கையான அல்லது சமூக சூழலில் உரிய அறிவு உள்ளடக்கத்தை பெறும் வகையில் மாணவர் வழிப்படுத்தப்படல் வேண்டும். மாணவர்கள், இயற்கைச் சூழலில் உள்ள நிலையான அம்சங்களில் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்திருக்கும் வகையில் பாடங்கள் காணப்படும் வகையில் கலைத்திட்டம் வடிவமைக்கப்படல் வேண்டும்.
இருத்தலியல்வாதம்
தத்துவக்
கொள்கைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய
கொள்கை இதுவாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
இருந்து இக்கொள்கை வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை புறமெய்மை மறுப்புக்
கோட்பாடு எனவும் அழைப்பர். இது மனித சமூகத்தை புதிய கோணத்தில் நோக்குவதுடன் மரபு
வழி தத்துவக் கோட்பாடுகளை நிராகரிக்கவும் செய்கின்றது. தனிமனித இன்ப துன்ப
உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிகின்ற தனிமனித இருத்தல் அனுபவத்தை
மையப்படுத்திய ஒரு வாதம் இது ஆகும். பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை,
சுதந்திரம், ஊல்வினை பிறப்பும் இறப்பும்,
இறைவன் பற்றிய கருத்து எனப்பலவற்றுக்கு புதிய விடைகளை இந்த சிந்தனை
முன்வைத்தது எனலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இருப்பே முதன்மையானது, அடிப்படையானது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றை யெல்லாம்
மதிப்பீடு செய்கின்றான். தனக்குள்ள பிரச்சனைகளை தானே தீர்த்துக் கொள்ளவேண்டும்;
மனிதன் தனக்கான வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்
என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பாஸ்கல்,
டாஸ்டவஸ்கி, சோரன்சியர் ஹெக்கார்ட், பிரெட்ரிக் நீட்சே , மார்ட்டின் ஹீ டெக்கர், சார்டிரே, கார்ல் ஜாஸ்பர்ஸ், ஆல்பர்ட்கேமஸ்,
மார்ட்டின் பூபர், ஜோஸ் ஆர்டிகா காசட்
போன்றோர் இக் கோட்பாட்டில் உள்ளோர் ஆவர்.
இந்தக் கோட்பாடு மனிதனின் உயிரியல் சார்ந்த இருப்பையும் அவனது பிரச்சினைகளையும்
முதன்மைப்படுதுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது இருப்பே முக்கியமாகும். தன்
இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் ஏனையவற்றை
மதிப்பீடு செய்கிறான். மனிதன் தனது
பிரச்சினைகளைத் தானே தீர்த்துக் கொள்ள
வேண்டும் . மனிதன் தனக்கான வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பன போன்றனவே
இக் கொள்கையின் அடிப்படைகள் ஆகும். இக்கொள்கையில்
மத சிந்தனைசார் இருத்தலியல்வாதிகள்
மானுட நேயமிக்க இருத்தலியல்வாதிகள் என இரு பிரிவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் யார்? எப்படி இந்த உலகத்துக்கு வந்தேன், என்னை ஏன் யாரும் கேட்கவில்லை? என்ற ஹெக்கார்ட் இன் கேள்வியும், கடவுள் இறந்து விட்டார் நானும் நீயும், நாம் எல்லோரும் கடவுளைக் கொன்று விட்டோம். இனி நாம் நம்மையே நம்பி வாழ வேண்டும் என்ற நீட்சே யின் கூற்றுக்களும் இந்தக் கொள்கையில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவை ஆகும்.
இருத்தலியல்வாதமும்
கல்வியும்
- மனிதன் தன்னைத்தானே உணரும் வகையில் கல்வின் நோக்கம் அமைதல் வேண்டும். மனிதன் இந்த உலகில் வாழத் தேவையான திறன்களைக் கல்வி அளிப்பதாக அமைய வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உதவுபவர்களாகக் காணப்படல் வேண்டும்.
- தனியாள் வேறுபாடுகள் கருதிற்கொள்ளப்பட்டு கல்வி வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.
- மாணவன் ஒன்றும் இல்லா நிலையில் இருந்து செயற்படு நிலைமைக்கு மாற கல்வி உதவ வேண்டும். இதற்காக மனிதனை மையமாக் கொண்ட கல்வி அவசியமாகும்.
இதற்காக கலைத்திட்டத்தை விருத்தி செய்யும் போது,
- அது மாணவன் சார்பாகவும்,
- மாணவர்கள் கற்கும் பாடங்களை தெரிவு செய்யும் சுதந்திரம் உறுதி செய்யப்பட்ட நிலையிலும் அமைதல் வேண்டும்.
- மனிதர்கள் வரலாற்றில் எதிர் கொண்ட இடர்கள், சவால்கள் பற்றிய பாடங்களை மாணவர்களுக்கு கற்ற வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும்.
- சுய தெரிவுகளை மேற்கொள்ளும் தன்மையை தொடர்ந்து ஆசிரியர் மாணவர்களுக்கு வலியுறுத்தும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும்.
- மாணவர் தாமாக தேடி கண்டுபிடித்து கற்கும் தன்மை கொண்டனவாக கலைத்திட்டம் அமைதல் வேண்டும் .
நிலைத்திருத்தல்
வாதம் - Perennialism
இது மாறாமைவாதம் / மாறாமைத் தத்துவம் என்றும் அழைக்கப்படும். இது இலட்சியயவாதம் / புற உண்மைவாதம் என்பனவற்றுடன் தொடர்பு கொண்டதொன்றாகும்.
Perennial என்ற ஆங்கிலப் பதம் “என்றும் நிலைத்திருத்தல்” (everlasting) எனும் பொருளைத் தருவதாகும். வருடம் விட்டு வருடம் பூக்கும் Perennial பூக்கள் போன்று இது நிலைத்திருக்கும். இது பழமையானதும் பிளேட்டோ/ அரிஸ்டோட்டல் போன்றோரின் தத்துவங்களிலிருந்து உருவாகிய மிகப்பழமைவாத (conservative) கல்வித்தத்துவமாகவும் விளங்குகிறது.
ஹட்சின்ஸ், ஆட்லர், சேர் ரிச்சர்ட் லிவிங்ஸ்டன் போன்ற அறிஞர்கள் இக் கொள்கையினை கட்டியெழுப்பியவர்களுள் சிலராவர். இக் கோட்பாட்டின்படி மனிதன் பகுத்தறிவுடையவனாக (rational) இருப்பதாகவும் மனிதனை மனிதனாக மேம்படுத்துவதே (Improve man as man) கல்வியின் நோக்கமாக அமையவேண்டும் என இச்சிந்தனைவாதிகள் நம்புகின்றனர்.
அனைத்து விதமான கல்விசார்ந்த வினாக்களுக்குமான விடையானது மனிதனின் இயல்பு என்ன? (what is human nature?) என்ற ஒரு வினாவிற்கு விடையளிப்பதில் இருந்து தோன்றுவதாக இவர்கள் கருதுகின்றனர். இவர்களின்படி மனித இனம் மாறாதது, அது மாறிலியாகும் (Constant). இயற்கையின் பிரபஞ்ச உண்மைகளை (இயற்கையின் அனைத்து உண்மைகளையும்) விளங்கிக் கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கு உள்ளது எனக் கூறுகின்றனர்.
ஆகவே அறிவார்ந்த மனிதனை விருத்தி செய்வதும்
பிரபஞ்ச உண்மைகளை (அனைத்து வகை
உண்மைகளையும்) வெளிக்கொண்டு வரக்
கூடிய புத்திசாலியாக பயிற்சியளிப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.
ஒருவரது ஒழுக்க மற்றும் ஆன்மீகத் தன்மைகளை விருத்தி செய்வதற்காக நன்நடத்தைப்
பண்புகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும்
இக் கோட்பாட்டுவாதிகள்
கூறுகின்றனர்.
பல நூற்றாண்டு காலமாக நம்பப்பட்டு வருகின்ற இன்றும் அவை முக்கியமாகக் கருதப்படுகின்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த நிலைத்திருத்தற் கோட்பாடு அமைகின்றது. இத்தகைய நம்பிக்கைகளில் அடிப்படையில் உள்ள கருத்தியல்களை/ சிந்தனைகளைப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
மேற்குலகினைப் பொறுத்தவரையில் அவர்களது கலாசாரம், மொழி, ஆகியவற்றில் தாக்கம் செலுத்திய Great books எனப்படும் மகாகிரந்தங்களை மாணவர்கள் பாடசாலையில் கற்க வேண்டும் என இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. இம்மகாகிரந்தங்கள் கதைகள், வரலாறு, கவிதை, இயற்கை விஞ்ஞானம், கணிதம், தத்துவம், நாடகம், அரசியல், சமயம், பொருளாதாரம், ஒழுக்கவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவைகளாகும். உதாரணம் – ஹோமரின் இலியட் ஒடிசி, பிளேட்டோ, அரிஸ்டோட்டல் ஆகியோரின் ஆக்கங்கள், கார்மார்க்ஸின் மூலதனம் போன்றனவாகும். தற்கால முக்கியத்துவம், பிரச்சினைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு இம்மகாகிரந்தங்களை கலைத்திட்டதுக்காக தெரிவு செய்ய கொள்ள முடியும்.
வரலாற்றின் சிறந்த சிந்தனையாளர்கள், மற்றும் எழுத்தாளர்களின் சிந்தனைக்கருத்துக்களை மாணவர்கள் கற்பதன் காரணமாக மாணவர்கள் தமது அறிவார்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும் என நிலைத்திருத்தல்வாதிகள் நம்புகின்றனர்.
நிலைத்திருத்தல்வாதமும் கல்வியும்
நிலைத்திருத்தல்வாத
நம்பிக்கைகளின் அடிப்படையில் விருத்தி செய்யப்படும் கலைத்திட்டம் பின்வரும்
பண்புகளை பிரதிபலிப்பதாக இருக்கும்:
- பாடமையக் கலைத்திட்டமாக இது
அமையப்பெறும்: மகாகிரந்த நிகழ்ச்சித்திட்ட அடிப்படையில் உள்ள பாடவிடயங்கள் அல்லது மிகப் பொதுவான கலைகளான இலக்கியம்,
தத்துவம், கணிதம், சமூக
விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், போன்றன
கலைத்திட்டத்தில் அம்சம் வகிக்கும். மகாகிரந்தங்கள் பொதுவாக இலத்தீன், கிரேக்க மொழிகளில் காணப்படுவதால் இக்கலைத்திட்டத்pனை
அடியொற்றி பயிலும் மாணவர்கள்
மகாகிரந்தங்களை மாணவர்கள் வாசிக்கவேண்டி
இலத்தீன், கிரேக்க மொழிகளை கற்கவேண்டி இருக்கும். இது
மட்டுமன்றி மாணவர்கள் இலக்கணம் சொல்லாட்சி/வாதத்திறன், தர்க்கவியல்,
உயர் கணிதம், தத்துவம் என்பனவற்றை இந்த வகைக்
கலைத்திட்டத்தில் கற்க வேண்டி இருந்ததாக Hutchins (1936)
என்பவர் குறிப்பிடுகிறார்
- நிலைத்திருத்தல்வாத அடிப்படையில் அமையப் பெரும் கலைத்திட்டத்தில் தத்துவத்தைக் கற்பதும் முக்கியமாக உள்ளது. இது மனித நிலைமைகளை விளங்கிக் கொள்ள உதவும் வகையில் அமைக்கப்படும்.
- நிலைத்திருத்தல் வாத அடிப்படையில்
அமையப் பெரும் கலைத்திட்டத்தில் Adler (1982) தனது
Paideia Proposal எனும்
நூலில் சகல மாணவர்களுக்கும் ஒரே வகையான ஆரம்ப மற்றும் இடைநிலைக் கலைத்திட்டத்தை (Single elementary
& Secondary Curriculum) ஆதரித்துள்ளார்.
- இந்த வகைக் கலைத்திட்டத்தில்
தொழில்சார் மற்றும் வாழ்க்கைத்தொழில் பாடங்களைத்
மாணவர்கள் தெரிவுப் பாடமாக எடுக்க நிலைத்திருத்தல்வாதிகள் அனுமதிப்பதில்லை.
இவர்களின்படி, இந்தப் பாடங்கள் மாணவர்களின்
நியாயிப்பு சக்திகளை (rational powers) முழுதாக
விருத்திசெய்வதற்கான வாய்ப்புக்களை
மறுப்பதாக கூறுகின்றனர்.
- நிலைத்திருத்தல்வாத அடிப்படையில்
அமையப் பெறாத கலைத்திட்டத்தில்
ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அதிகளவிலான தகவல்களை மாணவர்கள் கற்க வேண்டி இருப்பதாக நிலைத்திருத்தல்வாதிகள்
விமர்சனம் செய்கின்றனர். இவர்களின்படி, ஆசிரியர்கள்
எண்ணக்கருக்களை கற்பிப்பதிலும் அவை மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் ஆர்த்தமிக்கது
என்பதை விளக்குவதிலும் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்கின்றனர்.
- அதிகளவான விஞ்ஞான அறிவு நாளாந்தம்
உருவாக்கப்பட்டு வருவதன் காரணமாக, ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை , அதன் செயன்முறைகளைப்
பற்றியே கற்பிக்கப்படல்வேண்டும் எனக் கூறப்படுகிறது. வருங்கால விஞ்ஞான மற்றும்
தொழினுட்ப கண்டுபிடிப்புகளின் காரணமாக நிராகரிக்கப்படக்கூடிய தகவல்களை
மாணவர்களுக்கு போதிக்கக் கூடாது என நிலைத்திருத்தல்வாதிகள் கருதுகின்றனர்.
- இடைநிலை,
பல்கலைக்கழகக் கல்விகளில் பாடநூல்கள், கருத்துக்களை
கடத்தும் வகையிலான விரிவுரை முறைகளில் தங்கி இருப்பதை இந் நிலைத்திருத்தல்வாதிகள்
எதிர்க்கின்றனர். மாறாக, ஆசிரியர்களும் மாணவர்களும்
உரையாடல்களில் ஈடுபடும் வகையில், ஆசிரியர் வழிப்படுத்தப்பட்ட
கருத்தரங்குகள், எண்ணக்கருக்களை விளங்கிக்கொள்ளும் வகையில்
பரஸ்பர கண்டறிமுறையிலான அமர்வுகளை இவர்கள் வரவேற்கின்றனர். மாணவர்கள் கற்பதற்காக
கற்க வேண்டும் மதிப்பிடப்படுவதற்காக கற்கக் கூடாது என்பதே இவர்கள் முன்வைக்கும்
வாதமாகும்.
- பல்கலைக்கழகங்கள் மாணவர்களை
குறிப்பிட்ட தொழில்களுக்காக மாணவர்களை தயார்படுத்தக்கூடாது. அத்துடன் அறிவைப்
பெறுவதற்காகவும் மாணவர்கள் தயார் செய்யப்படல் வேண்டும். “பல்கலைக்கழக மாணவர்கள் ஒருசில மரங்களைப் பற்றி கற்கலாம்
ஆனால் அநேகம் பேர் காடுகளைப் பற்றி அறியாதவர்களாக இருந்து விடுவர் என Hutchins (1936) கூறுகிறார்.
- மேற்கத்தைய எழுத்தாளர்களினால்
எழுதப்பட்ட “மகா கிரந்தங்களை” ப் பயன்படுத்தி சோக்கிரடிஸ் முறையில்,
காரணப்படுத்தலை கற்பிக்கவேண்டும்.
தகவல்களை வெறுமனே பெறாமல் விஞ்ஞானரீதியில் காரணப்படுதலின் ஊடாக பெறல்
வேண்டும். தொழினுட்பம் அல்லாமல் விஞ்ஞானம்
போதிக்கப்படல் வேண்டும், தொழில்சார் (வேலைவாய்ப்புத்)
தலைப்புகள் அன்றி பெரும் சிந்தனைகள்
போதிக்கப்படல்வேண்டும்.
- பாடசாலைகள் சமய விழுமியங்கள் அல்லது ஒழுக்கங்களிக் கற்பிக்க வேண்டும். சரியானதுக்கும், தவறுக்கும் இடையிலான வேறுபாடு மாணவர்களுக்கு விளக்கப்படல் வேண்டும். இதனால் மாணவர்கள் தாம் பின்பற்ற வேண்டிய கட்டாய விதிமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பர்.
இன்றியமையாவாதம்
– Essentialism
இன்றியமையாவாதம் எனும் சொல் ‘essential’ என்ற பதத்தில் இருந்து உருவானது. அடிப்படைகள், பிரதான விடயங்கள் என்பதே இதன் பொருளாகும். கல்விசார் தத்துவம் எனும் வகையில் ‘அவசியமான’ அல்லது ‘அடிப்படையான’ கல்விசார் அறிவுகளும் நன்னடத்தைப் பண்புகளும் மாணவர்களில் விருத்தி செய்யப்படல் வேண்டும் எனக் இவ்வாதம் கூறுகிறது. இன்றியமையாவாதம் என்ற கல்வித் தத்துவம் முதலில் 1930 களில் William Bagley என்பவராலும் பின்னர் 1950களில் Arthur Bestor மற்றும் Admiral Rickover ஆகியோரால் பிரபல்யப்படுத்தப்ப்ட்டது.
இது அமெரிக்கப் பாடசாலைகளில் முதலில் அறிமுகம் ஆன போது இது அதிகம் நெகிழ்ச்சி அற்றது என விமர்சிக்கப்பட்டது. 1957 இல் சோவியத் யூனியன் ஸ்புட்னிக்கை விண்வெளியில் செலுத்தியபோது அமெரிக்க தான் பின்தங்கி விட்டதாக உணர்ந்தது. இதன் காரணமாக கல்வி பற்றி மீள்சிந்தனை உருவானதுடன் இன்றியமையாவாத சிந்தனையிலும் அக்கறை செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. இன்றியமையாவாத சிந்தனையானது, மரபுவாத தத்துவங்களின் செல்வாக்குக்கு உட்பட்டதாகும். பாடசாலைகள் சமூகத்தை மொத்தமாக அல்லது உடனடி மீள்வடிவத்துக்கு மாற்றிட முயலக் கூடாது. பாடசாலைகள் மாணவர்கள் நவீன பிரசைகளாக மாறும் வகையில் மரபுசார் ஒழுக்க விழுமியங்கள் மற்றும் புலமைசார் அறிவு என்பனவற்றை கடத்த வேண்டும் என இச் சிந்தனைவாதிகள் கருதுகின்றனர்.
மேலும், ஆசிரியர்கள் நிருவாகத்துக்கு கீழ்ப்படிதல், கடமை தவறாதிருத்தல், மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல் போன்றவற்றை செயல்வடிவில் செய்து காட்டும் முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என இச்சிந்தனைவாதிகள் நம்புகின்றனர். இங்கு விஞ்ஞானம் முக்கியப்படுத்தப்ப்டுகிறது. விஞ்ஞானரீதியான பரிசோதனைகளின் ஊடாக உலகினைப் புரிந்து கொள்ள வேண்டும் என இங்கு கருதப்படுகிறது. உலகினைப் பற்றி ஏதும் முக்கிய அறிவை வெளிப்படுத்த வேண்டுமாயின், தத்துவம், ஒப்பீட்டு சமயத்தில் தங்கியிராது இயற்கை விஞ்ஞானத்திலும் அதிகம் நம்பிக்கை வைக்கப்படுகிறது.
இன்றியமையாவாதக் கல்வி
மேற்கூறப்பட்ட
இன்றியமையாவாத கருத்துக்களை நோக்கும் போது, அது
எத்தகைய கலைத்திட்ட வடிவத்தை ஆதரிக்கின்றது என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது.
பொதுவாக இன்றியமையாவாத சிந்தனைகளின்
பின்னணியில் தயாரிக்கப்படும் கலைத்திட்டம்
பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்.
- கணிதம், இயற்கை விஞ்ஞானம், வரலாறு, வெளிநாட்டு
மொழி, இலக்கியம், போன்ற பாடங்கள் இந்த
இன்றியமையாவாதக் கலைத்திட்டத்தின் அடிப்படைப் பாடங்களாக காணப்படும். தொழில்சார்,
வாழ்க்கை நிலைமை தொடர்பான பாடங்கள், ஏனைய
கல்விசார் பாட உள்ளடக்கங்களுடன் பிற
கற்கைகளை கலத்தல் என்பனவற்றை இவர்கள் நிராகரிக்கின்றனர்.
- ஆரம்ப வகுப்பு மாணவர்கள்,
எழுத்து, வாசிப்பு, அளத்தல்
போன்ற திறன்களில் போதனையைப் பெரக்கொட்டிய வகையில் பாடஒழுங்கு அமைக்கப்படல்
வேண்டும். சித்திரம், சங்கீதம் போன்றனவற்றை கற்கும் போதே
(ஆக்கத்திறன் விருதிக்கானப் பாடங்கள்) மாணவர்கள், தகவல்கள்,
அடிப்படை நுட்பங்கள் போன்றவற்றில் தேர்ச்சியடைய வேண்டி இருப்பதுடன்
குறைந்த திறன், அறிவு மட்டங்களில் இருந்து படிப்படியாக
மிகவும் சிக்கல் வாய்ந்த திறன் மற்றும் விரிவான அறிவுக்கு நகர்வர். மாணவர்,
குறித்த வகுப்பில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டிய விடயங்களில்
தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு மாணவர் சித்தி பெற முடியும்.
- இன்றியமையா நிகழ்ச்சித்திட்டங்கள்
மெல்லக் கற்போர், மித்திறன் மாணவர்கள்
இருவருக்குமே கடினமானவையே. இங்கு மாணவர்களின் இயலுமை, விருப்புக்களை கருத்தில் கொள்ளாமல் அனைவரும் ஒரே பாடங்களை
கற்க வேண்டியுள்ளது. ஆயினும், மாணவர்களின் இயலுமைக்கு ஏற்ப
எவ்வளவு கற்கப்படல் வேண்டும் என்பது சரிப்படுத்தப்படும்.
- பாடசாலைகள் நீண்ட பாடசாலைத் தினம்,
நீண்ட கல்வியாண்டு மற்றும்
சவால்மிக்க பாடநூல்கள் கொண்டு அமைய வேண்டும். அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறிகளுக்கு
மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஆசிரியராக விளங்கக்கூடிய வகையில் ஆசிரியரை மையமாகக்
கொண்டு வகுப்பறைகள் காணப்படல்வேண்டும்.
- கற்பித்தல் ஆசிரியர் மையமாக இருக்கும். மாணவர்களின் விருப்புக்கள் குறைந்த வகையில் கவனத்திற்கொள்ளப்படுவதுடன் ஆசிரியரே மாணவர்களுக்கு எதனை எவ்வாறு கற்பிக்க வேண்டும் எனத் தீர்மானிப்பவராக இருப்பார். இங்கு ஆசிரியர்கள் மதிப்பீட்டு சோதனைகளின் அடிப்படையிலான அடைவுப புள்ளிகளில் அதிகம் கவனம் செலுத்துவர்.
- இன்றியமையாவாத வகுப்பறையில்,
சமூகத்தை வடிமைக்கக்கூடிய தொழிற்படு அறிவு (working knowledge)
மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது சமூகத்தை வடிவமைக்கும் மக்கள்,
நிகழ்வுகள், கருத்துக்கள், நிறுவனங்கள் பற்றிய அறிவு வழங்கப்படும். மாணவர்கள் பாடசாலை விட்டு
விலகியதும், உண்மை உலகில் வாழத் தேவையான அறிவு,திறன் மற்றும் அவற்றை பிரயோகிக்கும் ஆற்றல்களை கொண்டு இருப்பர்.
- பாடசாலையில் கண்ணியத்தை முறைமையாகக்
கற்றுக் கொள்வது கட்டாயமாகும். பாடசாலையிலும், சமூகத்திலும்,
உள்ள அதிகாரிகளுக்கு மரியாதை செய்யக் மாணவர் கற்றுக் கொள்வர்.
- ஆசிரியர்கள், நன்கு முதிர்ச்சி பெற்றவர்களாகவும் கற்றறிந்தவர்களாகவும் விளங்க வேண்டும். இவர்கள் தமது பாட விடயத்தில் நன்கு அறிவு பெற்ற வர்களாகவும் தமது அறிவை மாணவர்களுக்கு கடத்தக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
முற்போக்குவாதம் – Progressivism
மனிதன் இயற்கையிலேயே சமூகப் பிராணியாக இருப்பதால், உண்மை-வாழ்வுச் செயற்பாடுகளில் ஏனையவர்களுடன் இணைந்து சிறப்பாகக் கற்கக் கூடியதாக இருப்பதால் கல்வியும் அதனை பிரதிபலிக்கவேண்டும் எனும் வாதத்தை முற்போக்குவாதம் எனும் தத்துவ சிந்தனை முன்வைகின்றது. இச்சிந்தனையினை முன்வைத்தவர்களுள் ஜோன் டூயி (John Dewey 1859-1952) பிரதானம் வகிக்கின்றார்.
அமெரிக்காவில் தோற்றம் பெற்ற இச்சிந்தனை, மாணவர்களின் விருப்புக்கள், தேவைகளை அறிந்து அவற்றுக்கேற்ப அமெரிக்கப் பாடசாலைகள் தமது பாடசாலைக் கலைத்திட்டங்களை விரிவுபடுத்தத் தூண்டியது எனலாம். ஜோன் டூயி, உளவியல், மனித அறிவியல், ஒழுக்கவியல், சனநாயகம் போன்ற துறைகளில் அதிகம் நூல்களை எழுதியவர் எனினும், அவரது கல்வித் தத்துவமே முற்போக்குவாத சிந்தனைக்கு அடிகோலியது.
1896 இல் சிகாக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றியபோது அவரது கல்விசார் சிந்தனைகளை பரிசோதிக்கும் ஆய்வு கூடமொன்றை நிறுவினார். இதன்பயனாக , கல்விசார் விடயங்கள் பலவற்றை எழுதியதுடன், இவை முற்போக்கு கல்வி இயக்கமொன்றை அமைக்க பெரிதும் துணை போயின. இளம் பிள்ளைகளை வளர்ந்தோர் வாழ்க்கைக்காக தயாரிப்பதன் மூலம் சமூகத்தின் தனித்துவத்தை கடத்துவதே கல்வியின் வகிபங்கு என டூயி கருதுகிறார். மேலும், கற்போர் தமது விருப்புக்களையும் உள்ளார்ந்த ஆற்றல்களையும் புரிந்து கொள்ள கல்வி அவர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
இது அவர் சனநாயகத்தின் மீது கொண்டுள்ள பற்றினை பறைசாற்றுகின்றது. கற்போர்கள் தனியாககே கற்றலில் ஈடுபடும போது அவர்களின் மனமும் செய்கையும் பிரிந்த நிலையில் அல்லது ஒருமித்த வகையில் இருப்பதில்லை என்பதனால் ஏனையவர்களுடன் இணைந்து கற்றலில் ஈடுபட வேண்டும் என இவர் கூருகின்றார். குறிப்பிட்ட திறன்களையும், இயலுமைகளையும் மாணவர்கள் குழுக்களாக இயங்குவதால் மாத்திரமே கற்க முடியும். மாணவர்கள் குழுக்களாக இயங்கி கற்றலில் ஈடுபடும் போது, சமூக மற்றும் அறிவார்ந்த இடைவினை அவர்களிடம் ஏற்படுவதாகவும் அதன் காரணமாக மாணவர்களின் மத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்ற செயற்கையான கற்றல் தடைகள் களையப்பட்டு சிறந்த தொடர்பாடல் கட்டியெழுப்பப்படுவதாகவும் இவர் கருதுகின்றார்.
மேலும், கல்வியானது, வளர்ச்சி செயன்முறையாகவும், பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை பிரயோகிக்கக் கூடிய சிந்தனைகளையும் காரணப்படுத்தலையும் கொண்ட பரிசோதனையாகவும் விளங்குகிறது என விளக்குகிறார். பிள்ளைகள் டூயி பிரேரித்துள்ள விஞ்ஞான முறைமையினைப் பயன்படுத்தி கற்க வேண்டும் எனவும் இச்சிந்தனையில் கருதப்படுகிறது.
இதன்படி, பிரச்சினையினை விளங்கிக்கொள்ளல், பிரச்சினையை வரையறுத்தல், கருதுகோள்களை அமைத்தல், கருதுகோள்களை சோதித்தல், பிரச்சினைக்கான சிறந்த தீர்வை மதிப்பிடல் எனும் படிமுறைகளில் பிள்ளைகள் கற்பது இங்கு வரவேற்கப்படுகின்றது. இங்கு கூறப்பட்ட ஐந்து படிகளைப் பயன்படுத்தி, மாணவர்கள் தொடர்ச்சியாக பரிசோதனைகளில் ஈடுபட்டு பிரச்சினைகளை தீர்த்தல், தமது அனுபவங்களை மீள்கட்டமைப்பதுடன் புதிய அறிவுகளை உருவாக்குவதில் ஈடுபடவேண்டும் என இங்கு வலியுறுத்தப்படுகின்றது. இதற்காக ஆசிரியர்கள் கற்றல் அனுபவங்களை மாணவர்கள் செய்து பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ளச் செய்யும் வகையிலும், அவை மாணவர்களின் உண்மை வாழ்வு சம்பவங்களுடன் தொடர்புபடும் வகையில், மாணவர்களை செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாகின்றது.
முற்போக்குவாத சிந்தனையில் அமையும் கல்வி
முன்னைய
பந்திகளில் முற்போக்குவாத சிந்தனைகள் பற்றி
கூறிய வரிகளில் இருந்து, இச்சிந்தனை மைய
கலைத்திட்டம் மாணவர்களை மையமாகக் கொண்டதாக உள்ளதை விளங்கிக்கொள்ள முடியுமாக
இருந்தது. இச்சிந்தனைகளின் அடியொற்றி விருத்தி செய்யப்படும் கலைதிட்டங்களில்
பின்வரும் முனைப்பான விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்:
- முற்போக்குவாதிகள் இயற்கை மற்றும்
சமொஓக் வின்ஞன்களை கற்பதை வலியுறுத்துகின்றனர். ஆசிரியர்கள்,
புதிய விஞ்ஞான , தொழிநுட்ப மற்றும் சமூக
விருத்திகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்களின் தனிப்பட்ட
அனுபவத்தை விரிவுபடுத்தும் வகையில் கற்றலானது நிகழ்கால சமூக வாழ்வுடன்
தொடர்புபடுத்தப்படல் வேண்டும். மாணவர்கள், தமது வாழ்வுக்கு
எது மிக முக்கியம் எனக் கருதுகிறார்களோ அவற்றை சிறப்பாகக் கற்கின்றனர் என்ற
அடிப்படையில், கலைதிட்டமானது மாணவர்களின் அனுபவங்கள்,
விருப்புக்கள், இயலுமைகள் என்பனவற்றில்
மையப்படுத்தியதாக விருத்திசெய்யப்படல் வேண்டுமாகின்றது.
- மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்
வகையிலும் மாணவர்களை உயர் மட்ட அறிகை /சிந்தனைகளை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்
தமது பாடவேளைத்திட்டங்களைஅமைதுக்கொள்ளல் வேண்டும். உதாரணமாக,
பாடநூல்களை வாசித்து அறிந்து கொள்வற்கு மேலதிகமாக இயற்கையுடனும்,
சமூகத்துடனும் உறவாடும் வகையில், செய்து
பார்ப்பதன் மூலம் கற்கும் வகையிலான களப்பயணங்கள் போன்றவற்றை திட்டமிட முடியும்.
- மாணவர்கள் ஒருவரோடு ஒருவர்
இடைவினையாற்றும் வகையில், கற்றலில் ஈடுபட
உற்சாகப்படுத்த வேண்டும். இதன்மூலம், மாணவர்கள் ஒத்துழைப்பு,
சகிப்புத்தன்மைகளை விருத்தி செய்து கொள்ள முடியுமாக இருக்கும்.
- ஆசிரியர்கள்,
ஒரு நேரத்தில், ஒரு தனித்த பாடவிடயத்தை
மட்டும் கருத்தில் கொள்ளாமல், வெவ்வேறு பாடங்களை இணைத்த
வகையில், பாடவேளையை அறிமுகப்படுத்த வேண்டும்.
- மாணவர்கள்,பாரபட்சமற்ற சகலருக்கும் பொதுவான
சனநாயகமிக்க கலைத்திட்டமொன்றை கற்பவர்களாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள், தாம் பாடச்சல்க்கு வெளியில் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒத்த விடயங்களை தமது வகுப்பறைக் கற்றலிலும் செய்து தீர்வு காணும் வகையில் கலைத்திட்டங்கள் அமைதல் வேண்டுமாகின்றது.
மீள்கட்டுமானவாதம்
/ சீரமைப்புக் கொள்கை (Re-constructivism)
மீள்கட்டுமானவாதம் / சீரமைப்புக் கொள்கை என்பது ஐக்கிய அமெரிக்காவில் 1930'களில் இருந்து 1960 கள் வரையிலான காலப்பகுதியில் பிரசித்திபெற்று இருந்த ஒரு சிந்தனையே ஆகும்.
கொலம்பியா ஆசிரியர் கல்லூரியைச் சேர்ந்த தியோடர் பிரமேல்ட் (Theodore Brameld 1904-1987) என்பவரால் இது அறிமுகமாகியது எனலாம். தியோடர் பிரமேல்ட் பாடசாலைகள் சமூக மாற்றத்துக்கான முகவர்களாக விளங்கும் வகையில் தனது முயற்சிகளை மேற்கொண்டார்.
இவரது எழுத்துக்களில்
- Ends and Means in Education (1950),
- Patterns of Educational Philosophy (1955),
- Philosophies of Education in Cultural Perspective (1955),
- Toward a Reconstructed Philosophy of Education (1956),
- Cultural Foundations of Education (1957),
- Education and the Emerging Age (1961),
- Education as Power (1965),
- The Use of Explosive Ideas in Education (1965),
- The Climactic Decades (1970),
- Patterns of Educational Philosophy (1971),
- The Teacher as World Citizen (1976), and Tourism as Cultural Learning (1977) போன்றன பிரசித்தி பெற்றனவாகும்.
இவரது பல்வேறு கட்டுரைகளில் தனது கல்வித்தத்துவ சிந்தனையை மிக ஆழமாகப் பதிவு செய்திருந்தார்.
இவரின்படி, சமூக மற்றும் அரசியல் மாற்றத்துக்கான உந்து சக்தியாக, பாடசாலைகள் விளங்க வேண்டும் என்பதாகும்.
இவரின் சிந்தனை வழி வந்த மீள்கட்டுமானவாதிகள் சமூக மறுசீரமைப்பை கொண்ட கலைத்திட்டத்தைக் கொண்டிருப்பதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்காக, மாணவர்களுக்கு மாற்றமொன்றை எப்படிக் கொண்டு வர வேண்டும் என்பதைப் பற்றி கற்பிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
மேலும், மாணவர்கள் சமூக பிரச்சினைகளை கற்பதன் ஊடாக சமூகத்தை மேம்படுத்தும் வழிகளைப் பற்றி சிந்திப்பவர்களாக உருவெடுக்கவேண்டும் எனக் கருதுகின்றனர்.
ஜோர்ஜ் கவுண்ட்ஸ் (George Counts 1932) எனும் இன்னுமொரு சீரமைப்புக் கொள்கை வாதி சமூக மாற்றத்தில் மாணவர்கள் ஒதுங்கி இராது பங்குகொள்பவர்களாக மாற வேண்டும் என்கிறார். இக்கொள்கையுடன் தொடர்புற்ற வகையில் வளர்ச்சியடைந்த இன்னுமொரு சிந்தனையும் காணப்பட்டது.
இது விமர்சனரீதியான போதனாமுறை (critical pedagogy) என்று அழைக்கப்பட்டது. Henry Giroux மற்றும் Peter McLaren ஆகியோரால் இது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இது விடுதலையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை சார்ந்த இலக்கியங்களை வகுப்பில் போதிப்பதை வரவேற்கின்றது. இது மாக்சிய சிந்தனையை மையமாகக் கொண்டு காணப்பட்டதுடன் முதலாளித்துவ எதிர் சிந்தனையையும் உள்வாங்கி இருந்தது.
சீரமைப்பு சிந்தனை வழியிலான கல்வி
மறுசீரமைப்பு
சிந்தனைவாதிகளின் கருத்துக்களினைப் பிரதிபலிக்கும் கலைத்திட்டம் பண்புகளைக் கொண்டு
காணப்படும்.
- மறுசீரமைப்பு சிந்தனை வழியிலான
கலைத்திட்டத்தில், மாணவர்கள் சமூக
பிரச்சினைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதுடன் மட்டுப்படுத்தி விடாது அவை தொடர்பான
சிறந்த மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்குத தேவையான செயற்பாடுகளிலும்ஈடுபடும் வகையில்
கலைத்திட்டம் அமைதல் வேண்டுமாகின்றது.
- கலைத்திட்டமானது,
சமூக, பொருளாதார எழுவினாக்கள் மற்றும் சமூக
சேவை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விருத்திசெய்யப்பட்டு இருத்தல்
அவசியமாகிறது. அது, மாணவர்களை உள்ளூர், தேசிய, சர்வேதேச சமூதாயங்கள் பற்றி தீர்க்கமான
வகையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும்
வகையில் ஈடுபடுத்தக் கூடியதாக இருத்தல் அவசியமாகின்றது. வறுமை, சூழல் சீரழிவு, வேலையின்மை, குற்றங்கள்,
யுத்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பட்டினி போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் இதற்கு உதாரணமாகும்.
- சாதி, இனம்,பால்நிலை , சமூகப்
பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள் நடைபெறுகின்றன. இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள்
பற்றி மாணவர்களுக்கு கல்வியூட்டுவதும் அவற்றுக்கான தீர்வுகளை காண மாணவர்களை
வழிப்படுத்துவதும் இந்த கலைத்திட்டத்தில் காணப்படல் வேண்டும். இத்தகைய
சர்ச்சைக்குரிய விடயங்களை ஆரைவற்கும் மாணவர்கள் ஒருபோதும் பின்நிற்கக் கூடாது.
- கலைத்திட்டமானது,
சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாற்றப்பாடல்
வேண்டும்.மாணவர்கள் பூலோக மற்றும் தேசியங்களுக்கு இடையிலான எழுவினாக்கள் தொடர்பாக
விளக்கம் கொண்டிருப்பது முக்கியமாகும். பரஸ்பர புரிந்துணர்வையும் பூலோக
ஒத்துழைப்பினையும் விருத்தி செய்யும் வகையில் கலைத்திட்டம் அமைதல் வேண்டும்.
- இங்கு, ஆசிரியர்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்த , கலாசாரத்துக்கு புத்துயிரளித்தல் என்பனவற்றுக்கு முதனிலை முகவர்களாகக் கருதப்படுகின்றனர்.
- இங்கு விஞ்ஞானம் என்பதை விட சமூக விஞ்ஞான (வரலாறு, அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம், சமூகவியல், சமயம், ஒழுகலாறு, தத்துவம் போன்ற) பாடங்கள் அதி முக்கியம் பெற்று விளங்கும்.
மிக அருமை நீண்ட விரிவான வாசிப்புக்கு வித்திடும் வகையில் உள்ளது
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகல்வியலில் தத்துவ சிந்தனைகளை கலை எடுத்து அதனை தத்துவம் போலாக்கி தத்ரூபமாய் தந்துள்ளீர்... முழுமைககு அழகு சேர்த்துள்ளீர்..ஆசானே... வாழ்க வளர்க உங்கள் கல்விப் பணி..
பதிலளிநீக்குகல்வித் தத்துவச் சிந்தனைகளைப் பற்றிய விரிவான பார்வை இக்கட்டுரை.
பதிலளிநீக்குகல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் பணி இன்னும் சிறப்ற வாழ்த்துக்கள்