சுற்றாடற் புவியியல்

 சுற்றாடற் புவியியல்-சுற்றாடலின் அடிப்படை கூறுகள்    

                                                                                     ஆக்கம்: எப்.எம்.நவாஸ்தீன் 

 உள்ளடக்கம்

  1.  சுற்றாடற் புவியியல் – அறிமுகம்
  2. சூழல் – வரைவிலக்கணம்
  3. சூழலின் பிரதான வகைகள்
  4. சூழல்க் கூறுகளின் இடைத்தாக்கம்
  5.  சூழல்-மனிதத் தொடர்புகள்

 சுற்றாடற் புவியியல் - ஓர் அறிமுகம்

புவியியல் என்பது, புவியினைப் பற்றிய விஞ்ஞான ரீதியான கற்கைநெறி எனக் கூறுவர். பொதுவாக மனிதன் புவிச்சூழலோடு கொள்ளும் இடைத் தொடர்புகள் குறித்தே புவியியலில் ஆராயப்படுகின்றன. கிரேக்க நாகரீக காலத்தில் எழுச்சி பெற்ற அறிவியல் துறைகளில் ஒன்றாகப் புவியியலும் விளங்குகின்றது. புவியியல் என்ற பதத்தைக் குறிக்கின்ற GEOGRAPHY என்ற ஆங்கிலச் சொல் கிரேக்கச் சொற்களான “geo”> “graphe” ”graphikos” என்பவற்றில் இருந்து பிறந்ததாகும். geo என்பது புவியினையும் “graphe”/”graphikos”  என்பது விபரித்தல் என்றும் பொருள்படுகின்றது. 

எனவே புவியியலை புவியினைப் பற்றி விபரிக்கும் இயல் என இலகுவாக வரையறுக்கலாம் (Description of the earth).  புவியியலானது பல்வேறுபட்ட கால கட்டங்களினூடாக பல்வேறு புவியியலாளர்களினதும் அளப்பரிய பங்களிப்புகளினால் வளர்ச்சிபெற்று வருகின்றது. அதன்படி, ஒவ்வொரு காலகட்டத்துக்குமேற்ப பல்வேறு கிளைத் துறைகளும் புவியியலில் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்று வருகின்றன. 

உ+ம்: பௌதீகப் புவியியல் மானிடப் புவியியல், குடித்தொகைப் புவியியல், மருத்துவப் புவியியல், நகரப் புவியியல், விவசாயப் புவியியல்...

அண்மைக் காலங்களில் உலகில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மனித இனத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லுகின்றன. விரைவாக அதிகரித்துவரும் சனத்தொகை, தொழிநுட்பத்தின் அபரிமித வளர்ச்சி, கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கம் போன்ற காரணிகள் இன்று உலக சுற்றுச் சூழல் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளமை நாம் அறிந்ததே! 

உலக சனத்தொகையின் விரைவான அதிகரிப்பு,  மனித சமனற்ற பரம்பல், நகரமயமாக்கம், கைத்தொழிலாக்கம், சுற்றுச்சூழல் மாசடைதல், காடழிப்பு, ஓசோன் படைத்தேய்வு, புவி வெப்பமாதல், மண்ணரிப்பு, மண்சரிவு என்று உலக சுற்றுச் சூழல் நெருக்கடிகளை பட்டியல்படுத்திக்கொண்டே போகலாம். இத்தகைய நெருக்கடிகளின் விளைவுகளை உணர்ந்து கொண்ட பௌதீகவியல், தாவரவியல், விலங்கியல் போன்ற இயற்கை விஞ்ஞானத் துறைகள் சூழல், சூழல் நெருக்கடிகள், அதன் முகாமைத்துவம் குறித்து அதிய கவனம் செலுத்தி வருகின்றன. ஆயினும் சூழல் பற்றி அதிக உரிமையுடைய புவியியலில் இத்தகைய மாற்றம் உடனடியாக வரவில்லையென்றே கூறலாம். 

சூழல் பற்றிய கற்கைகள் புவியியலில் ஓர் இடைப்பட்ட விடயமாகவே (Inter Disciplinarily) நோக்கப்பட்டது. எவ்வாறாயினும் சூழல் பற்றி புவியியலில் தனியானதொரு துறையாக எடுத்து நோக்குவது இன்றைய தேவையாக உள்ளது. இதன்மூலம், சூழல் பற்றி அதிக கற்கைகள் ஆய்வுகளை புவியியலில் முன்னெடுத்துச் செல்லவும், சூழல் சார்ந்த தேர்ச்சி பெற்ற புவியியலாளர்களை உருவாக்கி சூழல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான திட்டமிடலில் புவியியலாளர்களின் பங்களிப்பினை உறுதி செய்வதற்கு முடியுமாகும். இதன் காரணமாக புவியியலில் சுற்றாடற் என்ற துறை தனித்தொரு துறையாக தோற்றம் பெற்றுள்ளது. இக்கற்கையில், மனித சூழலில் பிரதான பங்கு வகிக்கின்ற தரைத்தோற்றம் நீர்க்கோளம், வளிக்கோளம், உயிர்க்கோளம் மற்றும் பண்பாட்டு சூழல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளடங்குகின்றன.

 

                                    உரு 1: சுற்றாடல் புவியியலின் பாட உள்ளடக்கம்

சூழல் – வரைவிலக்கணப்படுத்தல்

 சூழல் என்ற சொல் எம்மிடையே பலவாறாக அழைக்கப்படுவதை செவியுறுகிறோம். 'இயற்கை' 'சுற்றுசூழல்' 'உலகம்' 'சுற்றாடல்' 'சூழல்' எனச் சாதாரண வழக்கில் நாம் சூழலை அழைக்கின்றோம். இவை ஒரே கருத்துடைய சொற்களாகவே உள்ளன. எனவே சூழல் என்ற எண்ணக்கரு மேற்குலகினாலோ அல்லது புதிதாகவோ எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதொன்றன்று. 

இதன்படி சூழல் என்றால் என்ன என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாயினும் அதனை முறையாக வரையறை செய்வது மிகக் கடினமானதாக உள்ளது. எனினும் முறையான கற்கையொன்றில் சூழல் என்ற எண்ணக்கருவினை தெளிவாகவும், சரியாகவும் விளங்கிக் கொள்வது அவசியமாக உள்ளது. இவ்வாறு விளங்கிக் கொள்வதன் மூலம் நாம் வாழும் புவியினைப் பற்றி முறையாகவும் அறிவுபூர்வமாகவும் அறிந்து கொண்டு உலகில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாயிருக்கும். எனவே சூழல் குறித்து வெளிவந்துள்ள சில வரைவிலக்கணங்களை நோக்குவோம்.

  • எம்மைச் சூழ்ந்து காணப்படும் அனைத்து பௌதீக பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்பட்ட மறு பெயரே சூழல் எனப்படுகின்றது.
  • உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் ஒன்றினை அல்லது பலவற்றினைச் சூழ்ந்திருப்பது சூழல் எனப்படும். (தம்பையாபிள்ளை 1976) 
  •  'உயிரினத்தைச் சூழ உள்ள பௌதீக, இரசாயன மற்றும் உயிர்க் கூறுகளின் நிலைமையே' சூழல் ஆகும். (மைக்கல் எல்ப் (1993), Dictionary of Environment, #oy; mfuhjp)
  • இவ் வரைவிலக்கணத்தில், உயிரினங்களின் இயக்கத்திற்குப் பௌதீக, இரசாயன மற்றும் உயிர்க்கூறுகள் என்பன அடிப்படைத் தேவையாக உள்ளன எனத் தெளிவாகின்றது.
  • உயிரினங்களின் இயக்கத்துக்கு செல்வாக்குச் செலுத்தும் வெளிப்புற நிலமைகளின் தொகுப்பே சூழலாகும். (கெரன் ஜோன்ஸ் (1990) Dictionary of Environment Scienceஇவ்வரைவிலக்கணத்தில் வெளிப்புற நிலைமைகள் என கருதப்படுபவை யாதெனில் உயிரற்ற (பௌதீக, இரசாயன) கூறுகளையும் உயிர்க்கூறுகளையுமேயாகும்.

சூழலின் பிரதான பிரிவுகள்

சூழல் என்றால் என்ன என்பது பற்றி மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள வரைவிலக்கணங்களிலிருந்து நாம் அறிந்து கொண்டோம். இனி சூழலின் பிரதான பிரிவுகள் பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ள வரைவிலக்கணங்களிலிருந்து நாம் அறிந்து கொண்டோம். இனி சூழலின் பிரதான பிரிவுகள் பற்றி எடுத்து நோக்குவோம். ஆரம்ப காலங்களிலிருந்தே சூழலை இயற்கைச் சூழல்/ பௌதீகச் சூழல் என்றும் பண்பாட்டுச் சூழல் என்றும் பாகுபடுத்தி நோக்கி வந்துள்ளனர்.

மனிதனால் ஆக்கப்படாத சூழலை பௌதீகச் சூழல் என்பர். குறித்த ஒரு பிரதேசத்தின் இயற்கையான மூலகங்கள் பௌதீகச் சூழலை உருவாக்குகின்றன.

அவையாவன:

1.         தரைத்தோற்றமும் வடிகாலும் (Relief and Drainage)

2.         வானிலையும் காலநிலையும் (Whether and Climate)

3.         பாறைகளும் மண்வகையும் கனியங்களும் (Rock, soil and Minerals)

4.         இயற்கைத் தாவரங்களும் வனவலங்குகளும் (Natural Vegetation and wild Animals)

 

இம் மூலகங்கள் புவிமேற்பரப்பில் இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. அத்துடன் இவை ஒவ்வொன்றும் இடைத்தாக்கத்துக்கும் உட்படுகின்றன.  பௌதீகச் சூழல் மூலகங்கள் ஒன்றோடொன்று தாக்கம் புரிவதனால் குறுங்காலத்திலும், நீண்டகாலத்திலும் புவிமேற்பரப்பில் மேலும் மாற்றத்துக்குட்படுகின்றன. எனினும் இவ்வேறுபாட்டை ஆக்குவதில் இம் மூலகங்களில் ஒரேயளவு ஆதிக்கம் காணப்படுவதில்லை. ஒரு மூலகம் மற்றையதிலும் பார்க்க ஆதிக்கம் கூடியதாக இருக்கலாம்.

 

பௌதீகச் சூழல் மூலகங்களின் இடைத்தாக்கங்கள்

பின்வரும் தாய உருவில் பௌதீகச் சூழல் மூலகங்கள் எங்ஙனம் இடைத்தாக்கம் புரிகின்றது எனக் காட்டப்படுகிறது 

உரு 2: பௌதீகச் சூழல் மூலகங்களின் இடைத்தாக்கம்

மூலம்: தம்பையாபிள்ளை (1976) 

(அ)      தரைத்தோற்றமும் வடிகாலும்

(ஆ)      வானிலையும் காலநிலையும்

(இ)      பாறைகள் கனியங்கள் மண்வகைகள்

(ஈ)       இயற்கைத் தாவரங்களும் வனவிலங்குகளும்

 

இடைத்தாக்கம் புரியும் முறைகள்

1.         தரைத்தோற்றம், வடிகால், வானிலை, காலநிலை

2.         தரைத்தோற்றம், வடிகால், பாறைகள், மண்வகை

3.         தரைத்தோற்றம், வடிகால், இயற்கைத் தாவரம்

4.         வானிலை, காலநிலை, மண்வகை

5.         வானிலை, காலநிலை, இயற்கைத் தாவரம்

6.         மண், இயற்கைத் தாவரம்

 

பௌதீகச் சூழலின் அமைவிடம்

மேலும் பௌதீகச் சூழல் என நோக்கும்போது ஓரிடத்தின் பௌதீகச் சூழலின் அமைவு பற்றியும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஓரிடத்தின் பௌதீகச் சூழல் அமைவினை

 

(1)        தனி அமைவு

(2)        சார்பு அமைவு எனப் பாகுபடுத்தி நோக்குவர்.

 

தனியமைவு எனின் பூகோள கற்பனைக் கோடுகளான அகலக்கோடு, நெடுங்கோடு அடிப்படையில் ஓரிடத்தினைக் குறிப்பிடுதலாகும். சார்பு அமைவு எனின் ஓரிடத்தினை பிற இடங்களுடன் அல்லது தோற்றப்பாடுகளின் அடிப்படையில் நோக்கப்படுதலாகும். (தூரம், திசை கொண்டு குறிப்பிடல்)

 

சூழலின் மற்றைய கூறான பண்பாட்டுச் சூழல் - மனிதனாலாக்கப்பட்ட சூழலையே குறித்து நிற்கின்றது. புவிமேற்பரப்பின் சிக்கலான மனித முயற்சிகள் பண்பாட்டுச் சூழல் எனப்படுகின்றது. உணவுஉடைவீடுபோக்குவரத்தும் தொடர்பாடலும்குடியிருப்புக்கள்பொருளாதார நடவடிக்கைகள் என்பன பண்பாட்டுச் சூழலை ஆக்கும் மூலக்கூறுகளாகும்.

 

சூழல் - மனிதத் தொடர்புகள்

 புவியியலாளர்களது பார்வையில் சூழல் என்பது உலகின் மேற்பரப்பில் எந்த ஓர் இடத்திலும் வாழுகின்ற மனிதன் ஒருவனைச் சுற்றிக் காணப்படுகின்ற அம்சங்கள்ஃ தோற்றப்பாடுகளின் மொத்தம் என்பதாகும். மனிதனுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்புபற்றி புவியியலாளர்களிடையே எப்போதும் ஒரு மயக்கம் இருந்து வந்துள்ளது எனலாம். புவியில் மனிதன் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமாகக் காணப்பட்டு வருகின்றது. இவ்வுறவின் தன்மைகள் கால மாற்றங்கள், அதற்கேற்ற வகையில் மனிதத் தேவைகளின் மாற்றங்கள் மற்றும் மனித அறிவின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுதல்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

 ஆரம்ப காலங்களில் மக்கள் தாம் வாழ்ந்த இடத்தின் நிலமைகளுடன் குறிப்பாக காலநிலை, தரைத்தோற்றம், இயற்கைத் தாவரம், மண் போன்ற பௌதீகச் சூழலுடன் இணைந்த வகையில் வாழ்ந்து வரக் காணப்பட்டனர். காலப்போக்கில் இத்தன்மை படிப்படியாக மாற்றம் அடைந்தே வந்துள்ளது.

 இந்த அடிப்படையில் மனித சூழத் தொடர்புகளின் இரு மாறுபட்ட தொடர்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

(அ) மனிதனில் சூழலின் தாக்கம்

(ஆ) சூழலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்

 இங்கு 'சூழல் மனித நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் தாக்கம்', 'மனிதன் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம்' என்பவற்றை நோக்கும்போது எதற்கு எது காரணமாகின்றது எனக் கூறுவது கடினமாகும். எனினும் மனித-சூழல் உறவு பற்றி ஆராய்ந்த புவியியலாளர்களினால் பல்வேறுபட்ட கோட்பாடுகள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள்

 (1)        சூழல் ஆதிக்க வாதம்/ நியதிவாதம்

(2)        மானிட ஆதிக்க வாதம்/தேர்வு முதன்மை வாதம்

(3)        நின்றுபோ நியதிவாதம்/நிறுத்தியும் செல்லவும் தீர்மானிக்கும் புவியியல் தத்துவம் என்பன குறிப்பிடத்தக்கன.

 சூழலாதிக்கவாதம் (Possibilism)

சூழல் மனிதன் மீது முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்துகின்ற நிலமையினை சூழலாதிக்கவாதம் என்போம். இக்கோட்பாட்டை முன்வைத்தவர்களை அல்லது ஆதரிப்போரை சூழலாதிக்க வாதிகள் என்கிறோம். சூழலாதிக்கவாதக் கருத்துக்கள் 19ஆம் நூற்றாண்டில் ஜேர்மனிய புவியியலாளர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்டன. சார்ள்ஸ் டார்வினின் 'உயிரினங்களின் மூலம்' என்ற நூல் 1859இல் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக உயிரினங்களிடையே கடுமையான போட்டி நிலவியது என்றும் அதில் சூழலுக்கேற்ப தன்னை இயைவுபடுத்திக் கொண்ட சில உயிரினங்களே பிழைத்துக் கொண்டன என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்நூல் விளங்கியது. இத்தகைய சிந்தனைகளால் கவரப்பட்ட ஜேர்மனியப் புவியியலாளர்கள் சூழலாதிக்கவாதக் கருத்துக்களை முன்வைக்கலாயினர்.



ஜேர்மனியப் புவியியலாளரான பிரட்ரிக் றட்சல் (1844-1904) டார்வினின் கொள்கையினால் கவரப்பட்டவராக மனிதச் செயற்பாடுகள் யாவும் பெரும்பாலும் பௌதீகச் சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் தனது கருத்தை வெளியிட்டார். இக் கருத்தே சூழலாதிக்க வாதம் எனப்படுகின்றது. 

                                                                      Friedrich Ratzel
Source: Britinaica 

இவரினுடைய கருத்தைப் பின்பற்றி எலென் சாம்பில் என்பவரும் சூழல் ஆதிக்கவாதக் கருத்துக்களுக்குச் சார்பாகத் தனது கருத்தை வெளியிட்டார். எலென் சாம்பிலின் நூலான புவியில் சூழலின் செல்வாக்கு (1911) என்பதில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். சூழல்க் காரணிகள் மனிதனின் செயற்பாடுகள் மீது நேரடியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என உறுதியாக நம்பினார். அவர் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார். மனிதன் பூமியினால் பிறப்பிக்கப்பட்டவனாகும். புவி மனிதனின் தாயாகவும் அவனுக்கு உணவளித்து அவனைப் பல செயற்பாடுகளுக்கு ஈடுபடச் செய்கிறது. பிரச்சினைகளை எதிர்நோக்க வைப்பதுடன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இரகசியமாக அடையாளம் காட்டி நிற்கின்றது. நவீன புவியியலாளர்களான னுயனடல Dadly Stamp> OHK Spele போன்றவர்களும் சூழலிற்கு முக்கியத்துவமளித்து மனித நடவடிக்கைகளை ஆராய்ந்தனர்.

 மானிட ஆதிக்க வாதம்

Paul Vidal de La Blache
Source:  Wikipedia



சூழல் ஆதிக்கவாதக் கருத்துக்களுக்கு முரண்பட்ட கருத்து இதுவாகும். இக்கொள்கையை முதன் முறையாக விடால் டி லாப்லாஜ் என்ற பிரான்சியப் புவியியலாளர் முன்வைத்தார். இக்கருத்து ஜீம்புரூன்ஜஸ் போமான், கார்ளஸ் ஷோவர் போன்ற அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கருத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து 1950 வரைகளில் பிரசித்தி பெற்றுக் காணப்பட்டது. இக்கருத்துக்கள் விடால் டி லாப்லாஜ்ஜின் 'மானிடப் புவியியல் தத்துவங்கள் என்ற நூலில் வெளியிடப்பட்டது. இதன்படி சூழலுக்குக் குறிப்பிட்ட அளவு சாத்தியப்பாடுகளே உண்டென்று அவற்றைப் பயன்படுத்துவது முற்றிலும் மனிதனின் தெரிவிலேயே தங்கியுள்ளது என்ற எண்ணக்கருவினை இவ்வாதம் தொனித்து நிற்கின்றது. ஸபோமன் என்பவர் மானிட ஆதிக்கவாதம் என்பது மனிதன் எல்லாச் சூழல் செல்வாக்கிலிருந்து விடுதலை பெற்றவன் என்று உரிமை கோரவில்லை என்று விபரிக்கின்றார்.

 நின்று – போ – நியதிவாதம்

 பேராசிரியர் கிரிபத் டெய்லர் என்பவரது கருத்து இதுவாகும். இவரது கருத்தின்படி மனிதன் இயற்கையின் நிலையான வரையறைக்குள் தன்னை மாற்றியமைத்துக் கொள்வதற்காக மனிதன் ஒரு படி முன்னேறினான் மனிதன் என்பவன் சுதந்திரமான காரணியல்ல, மனிதனால் ஒரு நாட்டின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தவோ தாமதப்படுத்தவோ முடியும். ஆனால் அவனால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இக்கருத்தினை மானிட ஆதிக்கவாதத்தின் பிற்பட்ட காலங்களில் வளர்ச்சி பெற்ற கருத்தாகக் கருதுவர்.

மனித - சூழல் தொடர்புகள் குறித்து மேலும் நோக்குமிடத்து 'சன்டெல்' என்ற புவியியலாளர் மனித நடவடிக்கைகளுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்பானது மூன்று முகங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது எனக் கருதினார். இதனை ஒரு முக்கோணத்தில் அமைத்து தனது எண்ணக்கருவினை வெளிப்படுத்தயிருந்தார்.

 மனித நடவடிக்கைகளுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்புகள்


மனிதன் சூழலின் செல்வாக்குக்குட்பட்டவனாக, 'கீழ்ப்படிந்து' வாழ்ந்த நிலையும், பின், மனிதத் தேவைகளும் அறிவியல்களின் வளர்ச்சியும் சூழலின் மீது மனிதன் செல்வாக்குச் செலுத்தியமை 'எதிராகுதல்' என்பதிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதன் சூழலின் மீது ஆதிக்கம் மேற்கொள்ளும்போது சூழல் நெருக்கடிகள் தோன்றுவதனால் மனிதன் சூழலுடன் ஒத்துழைத்து வாழ வேண்டி ஏற்படும் நிலைமையுமே இக்கருதுகோளில் எடுத்துக்காட்டப்படுகின்றது. இதன்படி மனிதன், இயற்கை, அபிவிருத்தி ஆகிய மூன்று அம்சங்களிடையே தெளிவான உறவுகளைக் காணமுடிகின்றது. இதனையே சோலி என்ற ஆங்கிலப் புவியியலாளர் 'ஈடித்தின் தோட்டத்திலும் கூட ஒரு முயற்சியாளன் இருந்தான் எனக் கூறியது இங்கு மனங் கொள்ளத்தக்கது.

உசாத்துணைகள்:

தம்பையாபிள்ளை (1976) புவியியல்முதலாம் பாகம் பக்கம் 143)

·      மைக்கல் எல்ப் (1993), Dictionary of Environment

கெரன் ஜோன்ஸ் (1990) Dictionary of Environment Science


2 கருத்துகள்:

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...