கலைத்திட்ட அணுகுமுறைகள்

கலைத்திட்ட அணுகுமுறைகள்


Curriculum Approaches

கலாநிதி ப.மு. நவாஸ்தீன்
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்

எவையேனும் ஒன்றைக் கையாளும் விதம், ஏதேனுமொன்றைப் பற்றி சிந்திக்கும் தன்மை, அல்லது ஒன்றைச் செய்துமுடிக்கப் பயன்படுத்தும் முறையினை “அணுகுமுறை” எனக் கூறலாம். ஏதாவது ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் ஒரு விடயத்தைப் பற்றிய முழு விளக்கத்தைப் பெற்றுகொள்ள, அல்லது அது பற்றிய அனுபவத்தைப் பெற அல்லது ஒன்றை செய்துமுடிக்க எடுக்கும் பூர்வாங்க நடவடிக்கையையும் “அணுகுமுறை” எனலாம். ஒன்றைப்பற்றிய ஒருவரின் அணுகுமுறையில், அவர் கொண்டுள்ள அறிவு, திறன், மனப்பாங்குகள், அவரது புலக்காட்சிகள், விழுமியங்கள், மற்றும் உண்மை உலகினை அவர் நோக்கும் விதம் போன்ற விடயங்கள் தாக்கம் செலுத்தி அவரது அணுகுமுறையில் அவை பிரதிபலிக்கின்றன. இவை ஆளுக்கு ஆள் வேறுபடும். இந்தவகையில், ஓர் துறைசார்ந்த அணுகுமுறையினை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு துறைசார்ந்த வகையில், அதில் காணப்படும் எண்ணக்கருக்களை  அறிஞர்கள், துறைசார் வல்லுனர்கள் கையாளும் விதம், நோக்கும் விதம், சித்திக்கும் விதம் போன்றன அத்துறை சார்ந்த அணுகுமுறை எனப்படுகிறது.

கலைத்திட்ட அணுகுமுறை என்றால் என்ன?

மேலே கூறப்பட்ட அணுகுமுறைக்கான விளக்கங்களின் அடிப்படையில் கலைத்திட்ட அணுகுமுறை என்பதை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம்:
கலைத்திட்டமொன்றைக் கையாளும் விதம், அல்லது கலைத்திட்டமொன்றை திட்டமிடும்/உருவாக்கும்/வடிவமைக்கும்/அமுலாக்கும் முறைகள் அல்லது அது பற்றிச் சிந்திக்கும் முறையினை கலைத்திட்ட அணுகுமுறை எனலாம். கலைத்திட்ட அணுகுமுறை என்பதற்கு Ornstein மற்றும் Hunkins பின்வருமாறு விளக்கத்தைத் தருகின்றனர்.

கலைத்திட்ட அடிப்படைகள் (தத்துவங்கள், வரலாறு பற்றிய நோக்கு, உளவியல் மற்றும் கற்றல் கோட்பாடுகள் பற்றிய நோக்கு, சமூக எழுவினாக்கள் பற்றிய நோக்கு) கலைத்திட்ட ஆட்சிப் பரப்புக்கள் (துறையொன்றின் பொதுவான , முக்கியமான அறிவு) மற்றும் கலைத்திட்டம் தொடர்பான கோட்பாடு மற்றும் நடைமுறை தத்துவங்கள் ஆகியவற்றை ஒருவர்  முழுமையாக  (Holistic) நோக்கும் நிலையினை அல்லது ஒருவரின் பேர்நோக்குநிலையினை  (Meta Orientation)  பிரதிபலிப்பதே கலைத்திட்ட அணுகுமுறை ஆகும். கலைத்திட்ட அணுகுமுறையொன்றானது, கலைத்திட்ட விருத்தி, மற்றும் வடிவமைப்புப் பற்றிய ஒருவரின் நோக்குகளை வெளிப்படுத்துகின்றது. இந்த அணுகுமுறையில், கலைத்திட்ட திட்டமிடலில் மாணவர்கள் , ஆசிரியர்கள் ஆகியோர்களின் வகிபங்கு, கலைத்திட்ட நிபுணர்களின் வகிபங்கு, கலைத்திட்டத்தின் இலக்குகள், குறிக்கோள்கள், கவனத்திற் கொள்ளப்படவேண்டிய பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் உள்ளடக்கப்பட்டு இருக்கும். இத்தகைய அணுகுமுறைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகள் பல்வேறு அணுகுமுறைகளை தோற்றுவித்துள்ளது எனலாம்.

கலைத்திட்டத்துடன் தொடர்புபடும் நபர்கள், கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி,அமுலாக்கம், மதிப்பிடல் போன்றவற்றில் ஒன்று அல்லது பல அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதுண்டு. 

 கலைத்திட்ட அணுகுமுறைகளின் வகைகள்

கலைத்திட்ட வரலாற்றில் உருவாகிய அணுகுமுறைகளை இரு  பெரும் வகுதிக்குள் உள்ளடக்கப்படுகிறது.
  • விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான அணுகுமுறைகள். (Scientific/Technical approaches)
  • விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறைகள் (Non-Sceintifc/Non-Technical Approaches)

கலைத்திட்டத்தில் உள்ள பல்வேறு அணுகுமுறைகளையும் வேறுபடுத்தி நோக்கும் வகையிலேயே மேற்கண்டவாறான பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது.
மரபு ரீதியான கல்விக் கோட்பாடுகளுடன் தொடர்புபட்ட வகையிலும், முறையான பாடசாலைகளைப் பிரதிபலிக்கும் வகையில், விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான கலைத்திட்ட அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இந்த அணுகுமுறைகள், positivist எனும் நேர்மறைவாதிகளினால் வரவேற்கப்படுகின்றன. மேலும் விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறைகள் கல்வியின் பரிசோதனைசார் தத்துவங்கள், கல்வி அரசியல் காரணங்களினால் உருவாகியதாக உள்ளன.
கலைத்திட்ட அணுகுமுறைளில் பின்வரும் ஐந்து வகைகள்  காணப்படுகின்றன.
  • நடத்தை சார் அணுகுமுறை (Behavioural Approach)
  •  முகாமைத்துவ அணுகுமுறை (Managerial Approach)
  • முறைமை/தொகுதி அணுகுமுறை (System Approach)
  • கல்விசார் அணுகுமுறை (Academic Approach)
  • மனிதத்துவ அணுகுமுறை (Humanistic Approach)

மேற்கண்ட அணுகுமுறைகளில் முதல் மூன்றும் (நடத்தை சார் அணுகுமுறை ,முகாமைத்துவ அணுகுமுறை, முறைமை/தொகுதி அணுகுமுறை) விஞ்ஞான ரீதியான /தொழிநுட்ப ரீதியான கலைத்திட்ட அணுகுமுறைக்குள் நோக்கப்படுகின்றன. ஏனைய இரண்டும் (கல்விசார் அணுகுமுறை, மனிதத்துவ அணுகுமுறை) விஞ்ஞானமுறையற்ற / தொழிநுட்பமுறையற்ற அணுகுமுறையில் உள்ளடங்குகின்றன.

நடத்தை சார் அணுகுமுறை (Behavioural Approach)

கலைத்திட்டத்தில், மிகப் பழமையானதும், இன்னமும் செல்வாக்குடைய அணுகுமுறையாக இந்த நடத்தைசார் அணுகுமுறை காணப்படுகிறது. இந்த அணுகுமுறை சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் இருந்து தோற்றம் பெற்றதாக உள்ளது. ( Bobbitt இலிருந்து Charlors, Tylor மற்றும் Taba வரை). இந்த அணுகுமுறை ஒரு செயலும்-முடிவும் (Means-Ends Approach) கொண்ட அணுகுமுறை போன்ற வடிவம் பெறுகிறது. இந்த முறையினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் கலைத்திட்டங்கள் பின்வரும் பொதுவான பண்புகளைக் கொண்டுள்ளன.
  • கலைத்திட்ட விருத்திக்கு படிமங்கள் (Paradigms) மாதிரியுருக்கள் என படிமுறைகள் கொண்ட பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படும்.
  •  கட்டமைக்கப்பட்ட ஓர் திட்டமிடலுக்கு (Blueprint) ஏற்ப கலைத்திட்ட இலக்குகள், குறிக்கோள்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
  • இனங்காணப்பட்ட இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஏற்ப கலைத்திட்டத்தின் உள்ளடக்கம், செயற்பாடுகள் என்பன வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.
  • இலக்குகள், குறிக்கோள்களுக்கு ஏற்ப கற்றல்பேறுகள் தரப்பட்டு அவை மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக, ஏறத்தாழ சகல நாட்டுக் கலைத்திட்டங்களிலும் இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகின்றது.

நடத்தை சார் அணுகுமுறை 

Frederick Taylor  என்பவரின் கருத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும்.   Efficiency எனும் வினைத்திறனை அடைந்துகொள்ளும் நோக்கிலான வணிக மற்றும் கைத்தொழில்துறை சார் சிந்தனைகளின் செல்வாக்கினாலும்,  Frederick Taylor  இன் விஞ்ஞான முகாமைத்துவ கோட்பாடுகளின் செல்வாக்கினாலும் நடத்தை சார் அணுகுமுறை தோன்றியது. Frederick Taylor, நேரம் (Time), இயக்கம் (Motion) ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சாலையொன்றின் விளைதிறனை பகுப்பாய்வு செய்தார். இதன்விளைவாக, தொழிற்சாலையில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும், அவரவரது தனிப்பட்ட வெளியீட்டுக்கு  (output) ஏற்ப ஊதியமளிக்கப்படல் வேண்டும் எனப்பட்டது. இது குறிப்பிட்ட நேரத்தினுள் ஒருவர் உற்பத்தி செய்த அலகுகளின் அடிப்படையில் கணிக்கப்படுவதாக இருந்தது. இத்தகைய அணுகுமுறை பாடசாலைகளிலும் efficient operation என 1920 களில் பாடசாலைகளில் அறிமுகமாகியது. இந்த அணுகுமுறையின் செல்வாக்குக்கு உட்பட்ட வகையில் முதலில் Bobbitt உம் பின்னர் Ralph Tyler இன் பங்களிப்புடன் நடத்தைசார் அணுகுமுறை கலைத்திட்டத்தில் அறிமுகமாயிற்று எனலாம்.  இந்த அணுகுமுறையானது கல்வியில், இலக்குகள்,குறிகோள்களுடன் தொடங்கும் கல்விசார் திட்டங்களுடன் தொடங்குவதாக இருக்கும். இவை கலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன் இவற்றுக்கு ஏற்ப குறித்துக் காடபடும் கற்றல் பேற்றின் அடிப்படையில் மாணவனது நடத்தை மாற்றம் இறுதியில் மதிப்பிடப்படுவதாக இருக்கும். மாணவனின் நடத்தையில் ஏற்படும் மாற்றமே கலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்டும் அடைவுமட்டமாக கருதப்படும்.

முகாமைத்துவ அணுகுமுறை     (Managerial Approach)

அமைப்புசார்ந்த கோட்பாட்டில் (Organizational theory) சுட்டிக் காட்டப்படுவது போல், பாடசாலையை ஓர் சமூகத்தொகுதியாக இந்த அணுகுமுறை கருதுகிறது. இந்த சமூகத்தொகுதியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலைத்திட்ட வல்லுனர்கள், நிருவாகிகள் குறிப்பிட்ட நியமங்கள், நடத்தைகள் ஆகியவற்றுக்கேற்ப இடைவினையாற்றுபவர்களாக இருப்பர். இந்த அணுகுமுறையின் கீழ் கலைத்திட்டங்கள் நிகழ்ச்சித்திட்டங்கள், கால அட்டவணைகள், இடம், வளங்கள், உபகரணங்கள், மற்றும் நபர்களுக்கு ஏற்ப திட்டமிடப்பதுவதாக இருக்கும். நடத்தைசார் அணுகுமுறை போன்றே இதுவும் திட்டம், நியாயிப்பு அடிப்படைகள், தர்க்கரீதியான படிமுறைகள் என்பனவற்றைக் கொண்டிருக்கும்.  இந்த அணுகுமுறையில் அதிகமாக கலைத்திட்டத்தின் மேற்பார்வை மற்றும்  நிருவாக விடயங்களே கருத்திற் கொள்ளப்படும். இந்த அணுகுமுறை 1950 – 1960 ஆகிய காலப் பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்தது.  இந்த அணுகுமுறையில் பாடசாலை அதிபர் கலைத்திட்டத் தலைவராகவும் போதனாத்  தலைவராகவும் காணப்படுவார். இவரே கொள்கைகளையும் முன்னுரிமை விடயங்களையும் உருவாக்கி மாற்றம் மற்றும் புத்தாக்கம் என்பன செல்ல வேண்டிய பாதையினை உருவாக்கி கலைத்திட்டம் மற்றும் கற்பித்தலை திட்டமிட்டு, ஒழுங்குபடுத்துபவராகக் காணப்படுவார். பாடசாலை நிருவாகிகள் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தை விட அதன் ஒழுங்கமைப்பு, அமுலாக்கம் என்பவற்றில் தான் அதிகம் அக்கறை கொண்டு இருப்பர். இவர்கள் பாட விடயம், கற்பித்தல் முறைமைகள் அவற்றுக்கான சாதனங்கள் என்பனவற்றை விட கலைத்திட்டதை மேலும் மேம்படுத்துவதிலேயே அதிகம் அக்கறை கொண்டிருப்பர். கலைத்திட்ட மேற்பார்வையாளர்கள் பின்வரும் வகிபங்குகளை கொண்டிருப்பர்:
1.     கல்வி இலக்குகளை உருவாக்க உதவுவர்
2.  மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலைத்திட்டத்தை திட்டமிடுவர்
3.      தரங்களுக்கு ஏற்ப  நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைப்பர்
4.     வகுப்புகளுக்கான கால அட்டவணைகளை  அல்லது பாடசாலையின்  கலண்டரை திட்டமிடுவர்.
5.     தரங்களுக்கு அல்லது பாடப்பரப்புகளுக்கு ஏற்ப கலைத்திட்ட வழிகாட்டிகளை அல்லது ஆசிரியர் வழிகாட்டிகளை தயாரிப்பர்
6.     பாடநூல்களின் தெரிவுக்கும் மதிப்பீட்டுக்கும் உதவுவர்.
7.     ஆசிரியர்களை அவதானிப்பர்
8.     கலைத்திட்ட அமுலாக்கலில் ஆசிரியர்களுக்கு உதவுவர்
9.     கலைத்திட்ட மாற்றத்தையும் புத்தாக்கத்தையும் ஊக்கபடுத்துவர்.
10.   கலைத்திட்டம், கற்பித்தல் மதிப்பீடுக்கு நியமங்களை விருத்தி செய்வர்.

தொகுதி அணுகுமுறை:

 பொறிமுறையொன்றின் பாகங்களாக அல்லது ஒரு வலைப்பின்னலினை ஒன்றோடொன்று இணைக்கும் கூறுகளாக இணைந்து செயலாற்றும்  விடயங்களின் தொகுப்பினை தொகுதி எனலாம். அதேபோன்று முழுப் பாடசாலையின் மாவட்டமத்தின் அல்லது பாடசாலையின் பகுதிகள் ஒன்றோடொன்று எங்கனம் இணைந்து செயலாற்றுகின்றன  என்ற அடிப்படையில் இந்த அணுகுமுறை காணப்படுகின்றது. பாடசாலையொன்றில் உள்ள  அமைப்பு விளக்கப் படம்  (organizational chart) தொகுதி அணுகுமுறையிலே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கப்படம் பாடசாலை பணியாளர்களின் வரிசையினையும் அவர்களுக்குள் இடையிலான தொடர்பினையும் பாடசாலையொன்றில் தீர்மானங்கள் எங்கனம் மேற்கொள்ளபப்டுகிறது என்பதையும் எடுத்துக் காட்டும்.    பாடசாளியோன்றின் கலைத்திட்ட திட்டமிடல், விருத்தி, அமுலாக்கம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் இந்த அமைப்பு வரைபடத்தில் உள்ளவாறு தீர்மானங்கள் எடுக்கப்ப்டுமாயின் அதனை தொகுதி அணுகுமுறையிலான கலைத்திட்டம் எனலாம்.

மனிதத்துவ அணுகுமுறை (Humanistic Approach).

 1900 களில் காணப்பட்ட முற்போக்கான கல்வித் தத்துவம் மற்றும்  பிள்ளை நேய சிந்தனைகளின்  அடிப்படையில் இந்த அணுகுமுறை தோன்றியது எனலாம். இந்த அணுகுமுறையில் முறைமையான கலைத்திட்டத்துடன்  (அல்லது திட்டமிடப்பட்ட  கலைத்திட்டம்) முறைசாரா (மறைக்) கலைத்திட்டத்தினையும் இணைத்து நோக்குகின்றது.  இந்த அணுகுமுறையில் பிள்ளையின் முழு விருத்தி முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்படுகிறது. கலைத்திட்டமானது மாணவர்களை கருத்திற் கொண்டவாறே இந்த அணுகுமுறையில் திட்டமிடல் , அமுலாக்கம் செய்யப்படுகிறது.


கல்விசார் அணுகுமுறை (Academic Approach): 

சிலபோது இது மரபுரீதியான அல்லது அறிவு மைய அணுகுமுறை எனவும் இது அழைக்கப்படும். கலைத்திட்ட எண்ணக்கருக்களை , அதன் போக்குகளை  ஆராயவும் தொகுக்கவும் இந்த அணுகுமுறை முற்படுகிறது. கலைத்திட்ட திட்டமிடலில் கோட்பாடுகளையும் தத்துவ அடிப்படைகளையும் இது முக்கியப்படுத்துகிறது. Dewey (1916), Morrison (1926) மற்றும்  Bode (1927)  ஆகியோர்களின்  தத்துவ மற்றும் அறிவுசார்ந்த  பங்களிப்புகளின் செல்வாக்கினை இந்த அணுகுமுறை கொண்டுள்ளது. கலைத்த்திட்டத்தின் வரலாற்று விருத்தி, கலாசார கேள்விகள், தத்துவக் கருத்துக்கள், ஆகியவற்றையும் கலைத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளையும் போக்குகளையும் இந்த அணுகுமுறை பகுப்பாய்வு செய்து தொகுக்க முற்படுகிறது.  

4 கருத்துகள்:

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...