கல்வியில் சமகால
எழுவினாக்கள்
கலாநிதி எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
நாம் வாழும் கால ஆங்கிலத்தில் Contemporary என்பர். ஒருவர் தான் வாழும் காலப்பகுதியில் அனுபவிக்கும் விடயங்கள் சமகால விடயங்கள் ஆகின்றன. கல்வி தொடர்பாக நிகழ்காலத்தில் நிகழும் விடயங்களை கல்வி தொடர்பான சமகால விடயங்களாக குறிப்பிடலாம். எழுவினா (Issue) எனின் ஒரு குறிப்பிட்ட துறையில் நிகழும் விரும்பத்தகாத அல்லது எதிர்மறையான விடயங்களை குறிக்கின்றன.
கல்வி முறைமையில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத அல்லது எதிர்மறையான விடயங்களை கல்வி தொடர்பான சமகால எழுவினாக்களாக நாம் அடையாளப்படுத்தலாம். எனவே இந்தக் கட்டுரையில் கல்வியில் சமகால எழுவினாக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது.
கல்வியில் சமகால எழுவினா என்றால் என்ன?
ஒருவர் வாழும் காலப்பகுதியில் கல்விமுறைமையில் குறிப்பாக
- கல்விக்கான அணுகல் (Access to the Education),
- கல்வியின் தரம் (Quality of Education),
- கல்வி ஒப்புரவு (Equity of Education),
- கல்வியின் பொருத்தப்பாடு (Relevance of the Education)
- தற்போது எனது நாட்டில் கல்வி முறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் எவை? (What are the major challenges that face the education system in my country at the moment?)
- ஒருவரின் சமூக, பொருளாதார அல்லது அரசியல் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? ((Is there equal distribution of educational opportunities for everybody regardless of one’s social, economic or political status?
- இல்லையெனின், ஏன் அவ்வாறு காணப்படுகின்றன? (Why?)
- தற்போதுள்ள கல்வி முறையின் அணுகல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? (What can be done to improve access and quality of the existing education system?)
- எமது நாட்டில் கல்விக்கான அணுகல், கல்வித் தரம் தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன? (How are these issues being addressed in the country?)
- இதன்போது அடையப்பெற்ற வெற்றிகள் யாவை? அல்லது ஏன் தோல்வி ஏற்படுகின்றது? (Are there any successes or failures?) Why?...
மேற்கண்ட வினாக்களுக்கான உங்கள் அனைவரினதும் விடைகள் ஒரே மாதிரியானவையாக இருக்க மாட்டாது. நீங்கள் வாழும் பிரதேசம், நாடு, இனம், பேசும் மொழி, போன்ற காணிகளின் அடிப்படையில் இவற்றுக்கான விடைகள் வெவ்வேறுபட்டவையாக அமையக்கூடும்.
கல்வியில் சமகால எழுவினாக்களை உருவாக்கும் காரணிகள்
கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமை. நாட்டின் பொருளாதார விருத்தி மற்றும் சமூக விருத்தி என்பனவற்றை தீர்மானிக்கும் ஓர் காரணியாக கல்வி விளங்குகிறது. கல்வியானது, பிள்ளைகளின் ஆளுமை விருத்தியினை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அவர்களை உற்பத்திதிறன் கொண்ட பிரசைகளாக உருவாக்கவும் வேண்டி உள்ளது. தமது நாடுகளின் பிரசைகளுக்கு தரமான கல்வியை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களினதும் தலையாய கடமையாக உள்ளது. இவ்விருபத்தோராம் நூற்றாண்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு அறிவியல், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பத்தில் ஏற்படுகின்ற அசுர வளர்ச்சி, கல்வியிலும் பல்வேறு மாற்றங்களையும் புதுமைகளையும் அன்றாடம் நிகழ்த்தி வருகின்றன.
அதேவேளை, 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து உலகில் பரவிய கொவிட் பெருந்தொற்று உலகின் பல நாடுகளை ஒரிரு வருடங்கள் முடங்கச் செய்தது. மட்டுமன்றி கொவிட் பெருந்தொற்று காலப்பகுதியை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தம் நாடுகளின், குறிப்பாக விருத்தி அடைந்து வரும் நாடுகளின் வளர்ச்சிக்கு சாவல் விடுவதாக அமைந்துள்ளது. மேலும், உலகில் வாழும் பல்வேறு சமூகங்கள் வறுமை, சுகாதாரப் பிரச்சினைகள், மந்தபோசனை, போதிய அகக்கட்டமைப்பு வசதிகளின்மை, உண்ணாட்டு பிணக்குகளினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மட்டுமன்றி, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்டுள்ள யுத்தங்கள் கல்வி தொடர்பான பிரச்சினைகளை, சவால்களை ஏற்படுத்தி உள்ளன. பிரதானமாக இவை, கல்விக்கான அணுகல் (Access to the Education), தரமான கல்வி (Quality of Education), கல்வி தொடர்பான ஒப்புரவு (Equity of Education), கல்வியின் பொருத்தப்பாடுகளில் (Relevance of the Education) எழுவினாக்களை ஏற்படுத்தி வருகின்றன.
கல்வியின் பிரதான எழுவினாக்கள்
உலகளாவிய ரீதியில் கல்வியின் எழுவினாக்களாக பின்வரும் சில விடயங்களை கூறலாம்.
- கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னரான கல்வி தொடர்பான எழுவினாக்கள்
- கல்வியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு- Technological Integration in Education.
- மனநலம் மற்றும் நல்வாழ்வு. Mental Health and Well-being.
- உள்ளடக்கல் கல்வி மற்றும் பன்முகத்தன்மை. Inclusive Education and Diversity.
- கற்பித்தல் அணுகுமுறைகளை மாற்றுதல். Changing Pedagogical Approaches.
- பிள்ளையின் கல்வி உரிமையை தீர்மானிக்கும் பிரகடனங்கள், சமவாயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உண்ணாட்டு சட்ட ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும்
- கல்வியின் பொருத்தப்பாடு
- விழுமியப் பண்புகளின் விருத்திக்கான தேவை
1. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னரான கல்வி தொடர்பான எழுவினாக்கள்
COVID-19 தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள கல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மில்லியன் கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றலை சீர்குலைத்துள்ளது. கோவிட்-க்கு பிந்தைய காலத்தில் தோன்றிய சில முக்கிய கல்வி தொடர்பான எழுவினாக்கள்:
கற்றல் இழப்பு: கோவிட் பெருந்தொற்று கராணமாக பலநாடுகளில் பாடசாலைகள் குறித்த சில மாதங்களுக்கு மூடப்பட்டன. இதுபல மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க கற்றல் இழப்பிற்கு வழிவகுத்தது. குறிப்பாக ஆரம்பக் கல்வியினை பெற வேண்டிய பிள்ளைகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
யுனெஸ்கோவின் ஆய்வின்படி, உலகளவில் 1.6 பில்லியன் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் COVID-19 காரணமாக கற்றல் இடையூறுகளை அனுபவித்துள்ளனர். இந்த கற்றல் இழப்பு மாணவர்களின் கல்வி அடைவுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் எனலாம். மேலும், மாணவர் இடைவிலகல், மாணவர் மத்தியில் கல்வி தொடர்பான நம்பிக்கையின்மை, சமூகமயமாக்களின்மை போன்ற பிரச்சினைகளும் தலைதூக்கி உள்ளன. இவை தவிர எண்ணிம இடைவெளி (Digital divide), மனநல சவால்கள், ஆசிரியர் தொழில்திருப்தியின்மை அதிகரிப்பு, கல்வி ஒப்புரவிலான சவால்கள் என பல பிரச்சினைகள் தோன்றி உள்ளன.
2. கல்வியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு- Technological Integration in Education.
இன்றைய கல்வியினை வேறு ஒரு வடிவத்துக்கு இட்டு சென்றதில் தொழினுட்பம் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. தொழினுட்பத்தின் வளர்ச்சி இன்று கற்றல் கற்பித்தலுக்கான அணுகலை எளிதாக்கி உள்ளது. பாரம்பரிய வகுப்பறைகள் துரிதமாக மறைந்து வருகின்றன. கற்றல் அனுபங்களை பெற்றுக் கொள்வதில் மாணவர்கள் வெறுமனே வகுப்பறை போதனைகளில் மட்டும் தங்கியிராது, வெவ்வேறான கற்றல் அனுபவங்களை பெற்றுக் கொள்ள தொழினுட்பம் உதவுகின்றது.
தொழினுட்பத்தை கொண்டு உண்மைக்கற்றல் அனுபவங்களுக்கு ஒத்ததான அனுபவங்களை பெற்றுக் கொள்ள வழியேற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் வகிபங்கு கற்றலை சாத்தியப்படுத்துபவர்களாக மாற்றி உள்ளது. எனவே இந்த தொழினுட்ப பயன்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் தம்மை இற்றைப்படுத்தி கொள்வது முக்கியமானது. இதற்கான பயிற்சிகள், புதிய தொழினுட்பங்களை பெற்றுக் கொள்ளல் போன்றவற்றில் நாடுகளுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட கொவிட் பெருந்தொற்றின்போது, உலகளாவிய ரீதியில் சகலவிதமான கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாகின. இதன்போது மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை ஓரளவுக்கேனும் தொலைநிலைக் கற்றலாக மேற்கொள்வதற்கு இத்தொழினுட்பம் எமக்கு பேருதவியாக அமைந்தது.
எனினும், கல்வியில் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு என்பது இரட்டை முனைகள் கொண்ட வாள் போன்றது. ஒருபுறம், தொழில்நுட்பம் மாணவர்கள் கற்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, புவியியல் தடைகளை உடைத்து, நிகழ்நிலை கற்றல் வளங்கள், மெய்நிகர் வகுப்பறைகள் மற்றும் கல்விப் பயன்பாடுகள் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்குகிறது.
மறுபுறம், டிஜிட்டல் பிளவு (Digital divide) கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களை இந்த தொழில்நுட்ப கருவிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலையே வழங்குகிறது. கூடுதலாக, திரை நேரம் (screen time) இணைய குற்றங்கள் / சைபர்புல்லிங் (cyberbullying) மற்றும் எண்ணிம (டிஜிட்டல்) வளங்களின் தரம் பற்றிய விடயங்கள் கல்வியில் தொழில்நுட்பத்தின் நீண்டகால தாக்கம் பற்றிய பின்வருவன போன்ற எழுவினாக்களை தோற்றுவிக்கின்றன:
- எண்ணிம (டிஜிட்டல்) இடைவெளி (Digital divide): தொழில்நுட்ப ஒருங்கிணைப்பிலிருந்து எழும் முக்கிய எழுவினாக்களில் ஒன்று டிஜிட்டல் இடைவெளி ஆகும். அனைத்து மாணவர்களுக்கும் தொழில்நுட்பம் மற்றும் இணையம் சம அளவில் கிடைப்பதில்லை. பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களுக்குத் தேவையான தொழினுட்ப சாதனங்கள் அல்லது இணைய இணைப்புகள் போதியளவில் கிடைக்கப் பெறவில்லை என்று கூறலாம்.இதனால் அவர்களால் நிகழ்நிலை கற்றல் வளங்களை பெறுவதில் இடர்பாடுகள் உள்ளன. மெய்நிகர் வகுப்புகளில் பங்கேற்க முடியாது மற்றும் டிஜிட்டல் சார்ந்த வகையில் கற்றல் பயிற்சிகளை முடிக்க முடியாது. இந்த பிளவு கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துகிறது மற்றும் மாணவர் கல்வி அடைவில் உள்ள இடைவெளியையும் விரிவுபடுத்துகிறது எனலாம்.
- நிகழ்நிலை கற்றல் வளங்களின் தரம் (Quality of Online Resources): இணையம் பரந்த அளவிலான கல்விக்கான கற்றல் வளங்களை வழங்கினாலும், இந்த வளங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பரவலாக வேறுபடுகிறது. இணையத்தில் காணப்படும் நம்பகமான மற்றும் பொருத்தமான கற்றல் வளங்களை கண்டறிய வேண்டுமானால், கல்வியாளர்கள் பெருந்தொகையான நிகழ நிலை கற்றல் வளங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். இது முடியாத காரியமாகும். மேலும், ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் உள்ளடக்கத்தின் விரைவான பெருக்கம், பாடத்திட்ட நோக்கங்களுடன் ஒத்துப்போகும் பொருத்தமான கற்றல் கற்பித்தல் வளங்களை தெரிவு செய்வது மற்றும் அவற்றைக் கையாள்வது என்பன சவாலாக இருக்கும்.
- திரை நேரம் மற்றும் உடல்நலம் (Screen Time and Health Concerns): கல்வி கற்றலில் அதிகரித்த தொழினுட்ப பயன்பாடு நன்மைகள் பலவற்றை தந்த போதிலும், எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாமலில்லை. மாணவர்கள் அதிகளவு நேரத்தினை எண்ணிம சாதன திரையில் செலவிடுவது அவர்களின் உடல் உலா ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் குறித்து தற்போது பரவலாக கவனம் செலுத்தப்படுகிறது. எண்ணிம சாதனங்களின் திரைகளில் நீண்ட நேரம் செலவிடுவது, கண் பார்வையில் குறைபாடு, சீர்குலைந்த தூக்க முறைகள் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்ற எழுவினாக்களை தோற்றுவிக்கிறது. மாணவர் உடல் உள ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத முறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு: மாணவர்கள், ஆசிரியர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு என்பது கல்வி தொடர்பான எழுவினாக்களில் தொழினுட்பம் தொடர்பான எழுவினாக்களில் முக்கியம் பெறுகிறது. தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் மாணவர்களின் பரந்த அளவிலான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு முக்கியமானமாகும். மேலும், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர் இவை வேண்டத்தாகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
- கல்வியில் தொழினுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஆசிரியர் வாண்மை விருத்தி: கல்வியில் தொழினுட்பத்தை வினைத்திறனான முறையில் ஒருங்கிணைப்பதில் ஆசிரியர்கள் போதிய திறன்கள் இல்லாமல் இருப்பது இன்னொரு எழுவினாவாகும். ஆசிரியர்கள் தமது கற்றல்-கற்பித்தலில் தொழினுட்பத்தை வினைத்திறனான முறையில் ஒருங்கிணைப்பதில் போதிய பயிற்சிகள் பெறுவது முக்கியாமாகும். இது ஆசிரியர்கள் தமது போதனா அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவையுமுள்ளது. இதற்காக ஆசிரியர்கள் கட்டுருவாக்க கற்றல் அணுகுமுறைகள் (Constructivism), பிரச்சனை அடிப்படையிலான கற்றல் (Problem-based learning), செயற்திட்ட அடிப்படையிலான கற்றல் (Project-based learning), புரட்டப்பட்ட வகுப்பறை (Flipped classroom) மற்றும் மெய்நிகர் கற்றல் (Virtual learning) போன்ற விடயங்களின் பால் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
- உண்மையான கற்றல் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கற்றல் (Authentic Learning vs. Technology-Centric Learning): கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் சரியான ஒருங்கிணைப்பு, மாணவர்களின் உண்மையான கற்றல் அனுபவங்களை மேலும் மேம்படுத்த உதவுவதாக இருக்க வேண்டும். மாறாக, உண்மையான கற்றல் அனுபவங்களுக்கு மாற்றீடாக அவை அமையக் கூடாது. கற்றல் கற்பித்தலின் போது தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு மாணவர்களின் ஆழ்ந்த புரிதல் மற்றும் விமர்சன சிந்தனையை எளிதாக்கும் கருவியாக இல்லாமல் தொழில்நுட்பம் கல்வியின் மையப் புள்ளியாக மாறும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே, கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கற்றலுக்கு இடமளிக்காமல் உண்மையான கற்றலை மேலும் உறுதி செய்யும் வகையில் தொழினுட்பத்தை சமநிலையாக பயன்படுத்த வேண்டும். இது ஒரு சவாலான விடயமே ஆகும்.
3. மனநலம் மற்றும் நல்வாழ்வு. Mental Health and Well-being.
மனநலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவை மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த கற்றல் சூழல் ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக கல்வியில் குறிப்பிடத்தக்க சமகாலப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
மன ஆரோக்கியத்தை முழுமையான விருத்தியின் இன்றியமையாத அங்கமாக அங்கீகரிப்பது என இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கல்வி முறைமையில் தனிநபர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களை எதிர்கொள்ள பல்வேறு கலந்துரையாடல்கள், கொள்கை மாற்றங்கள் போன்ற என்பன நடந்து வருகின்றன. மனநலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவை கல்வியில் சமகால பிரச்சினைகளாக ஏன் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதற்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:
- மாணவர் நலன்: இன்றைய கல்விச் சூழல் மாணவரில் கல்வி சார் அழுத்தங்களை வெகுவாக ஏற்படுத்துவதானால், மாணவர்களின் உளநலம் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் பிற மனநல நிலைமைகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இவை மாணவர்களின் கற்றலில் ஈடுபடுவதற்கும், சகாக்களுடன் தொடர்புகொள்வதற்கும், அவர்களின் கல்வித் திறனை அடைவதற்கும் தடையாக உள்ளன.
- ஆசிரியர் நல்வாழ்வு: இன்றைய கல்வி முறைமயில் பணியாற்றும் ஆசிரியர்கள், மற்றும் கல்வியியலாளர்கள் கடுமையான பணிச்சுமைகள், வகுப்பறை முகாமைத்துவம், கற்பித்தல் பணியல்லாத வேறு நிருவாக விடயங்களில் அதிகம் ஈடுபடுவதன் காரணமாக அவர்கள் மத்தியிலும் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தொழிலில் திருப்தியின்மை மற்றும் பிற மனநல நிலைமைகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஆசிரியரின் நல்வாழ்வு அவர்களின் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, வகுப்பறையில் அவர்களின் செயல்திறனுக்கும் அவசியம். எனவே ஆசிரியர் நலன்கள் தொடர்பான பிரச்சினைகள் கண்டறியப்பட்டு அவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய அவசியம் இன்று காணப்படுகிறது.
எனவே, மனநலம் மற்றும் நல்வாழ்வு ஆகியவை கல்வியில் சமகால பிரச்சினைகளாகும், ஏனெனில் அவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி வெற்றி, தனிப்பட்ட விருத்தி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக பாதிக்கின்றன. கல்வி முறைமைக்குள் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, நேர்மறையான கற்றல் அனுபவங்களை வளர்ப்பதற்கும், மனநல சவால்களை எதிர்கொள்வதற்கும், மற்றும் கல்வி சமூகத்தில் தனிநபர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வெற்றியை மேம்படுத்துவதற்கும் ஆதரவான சூழல்களை உருவாக்குவது அவசியமாகும்.
4. உள்ளடங்கள் கல்வி மற்றும் பன்முகத்தன்மை. Inclusive Education and Diversity.
அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் பயனுள்ள கற்றல் சூழல்களை உருவாக்குவதில் உள்ள தாக்கத்தின் காரணமாக உள்ளடங்கள் கல்வி மற்றும் மாணவரின் கற்றல் பன்முகத்தன்மை ஆகியவை கல்வியில் சமகால பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. இன்றைய பல கல்வி முறைமைகளில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஒதுக்கப்பட்ட அல்லது குறைவான பிரதிநிதித்துவ குழுக்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் தடைகள் ஏற்படுத்தப்ப்டுகின்றன. மேலும் பாடசாலைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பெளதீக வசதிகளை குறைவாக கொண்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்பறையில் சாதாரண மாணவர்களுடன் இணைந்து கற்பதில் பெற்றோரின் எதிர்மறையான மனப்பாங்குகள், ஆசிரியரின் பாரபட்சங்கள் உள்ளடங்கள் கல்வியினை சவாலுக்கு உட்படுத்துகின்றன.
5. பிள்ளையின் கல்வி உரிமை
கல்வி தொடர்பான எழுவினாக்களில் பிள்ளையின் கல்வி உரிமையை தீர்மானிக்கும் பிரகடனங்கள், சமவாயங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள உண்ணாட்டு சட்ட ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் அடுத்து முக்கியம் பெறுகின்றன. உலகில் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமையினைக் கொண்டுள்ளனர்.
இதனை உறுதிபடுத்தும் வகையில் 1948 யில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமை பிரகடனம் உள்ளது. இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. குறைந்தபட்சம் ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளில் கல்வியை கட்டாயமாகப் பெறுவதற்கான உரிமையினை அது கொண்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நாடுகள், தத்தமது நாடுகளில் உள்ள ஒவ்வொரு பிள்ளையின் ஆரம்பக் கல்வியினை கட்டாயமாக வழங்கவேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ளன.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் 1989 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகளுக்கான சமவாயம் (CRC) ஏற்படுத்தப்பட்டது. இதன்பிரகாரம், ஒவ்வொரு பிள்ளையும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக அமைகின்றது. ஆரம்பக்கல்வி கட்டாயமான இலவசக் கல்வியாக அமைதல் வேண்டும். மேலும் இக்கல்வியானது, சம வாய்ப்பினை உறுதிப்படுத்தியதாக அமைவதுடன் பிள்ளையின் தொடரான முன்னேற்றத்தை உறுதிசெய்யும் வகையில் அமைதல் வேண்டுமாகின்றது.
மனித உரிமைகள், சிறுவர் உரிமைகளில் உறுதிப்படுத்தப்பட்ட கல்வி உரிமைகளை பேணும் வகையில் ஒவ்வொரு நாடும் அதற்குரிய சட்ட ஏற்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும். மேலும், உலகில் பல்வேறு கால கட்டங்களில் மேற்கொள்ளப்படும் கல்வி தொடர்பான சர்வேதேச பிரகடனங்களில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதை, குறிப்பிட்ட அரசாங்கங்கள் உறுதி செய்ய வேண்டி உள்ளன.
இதன்படி, உலகில் பின்வரும் முக்கியமான கல்வி மாநாடுகள் இடம்பெற்று பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்படுள்ளன. அவற்றை குறிப்பிட்ட காலப்பகுதிகளில் அடைந்து கொள்வது ஒவ்வொரு நாடுகளினதும் பொறுப்பாக உள்ளன.
- 1990- ஜோம்தியன் மாநாடு - அனைவருக்கும் கல்வி எண்ணக்கரு
- 1994- விசேட தேவை கல்வி தொடர்பான சாலமன்கா பிரகடனம் (World Conference on Special Needs Education, held in Salamanca, Spain)
- 2000 -April இலான அனைவருக்கும் கல்வி தொடர்பான டாகார் பிரகடனம் - இதன்படி 2015 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வியை குறிப்பாக ஆரம்பக் கல்வி உட்பட ஆறு கல்வி இலக்குகளை அடைந்து கொள்வது
- 2000 - செப்டம்பர் -மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் (MDG) - இதன்படி 8 MDG இலக்குகளை 2015 க்குள் அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது
இன்றைய சமகாலத்தில் மேலே கூறிய பிரகடனங்கள் காலம் கடந்தவையாக இருந்த போதிலும், அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் எந்தளவு தூரம் உலக நாடுகளில் குறிப்பாக எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என ஆராய்வது முக்கியமாகும்.
மேற்கண்ட அனைவருக்கும் கல்வி தொடர்பான மிலேனிய கல்வி இலக்குகளின் தொடர்ச்சியாக, 21.05.2015 இல் கொரியா குடியரசின் இன்சியானில் நடைபெற்ற உலக கல்வி மன்றத்தில் (WEF 2015) கல்வி தொடர்பான பின்வரும் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது:
அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) மற்றும் ஒப்புரவான (Equity) தரமான (Quality) கல்வி மற்றும் வாழ்நாள் நீடித்த (Life Long) கற்றலை 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் உறுதிப்படுத்தல்.
மேலும், மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளின் தொடர்ச்சியாக நிலையான அபிவிருத்தி இலக்குகள்உருவாக்கப்பட்டன. இதில் பதினேழு இலக்குகள் காணப்பட்டன. இவற்றை 2030 ஆம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டி உள்ளது.
மேற்கண்ட பதினேழு இலக்குகளில் பல நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்வியுடன் தொடர்புபடுகின்றன. இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இன்றிலிருந்து இன்னும் 7 வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில், எந்தளவு இந்த இலக்குகளின் உப நடவடிக்கைகள் நாடுகளில் குறிப்பாக இலங்கையில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளன என நோக்குவது சமகால எழுவினாக்களில் ஒன்றாக அமையும் எனலாம். கடந்த வருடங்களில் ஏற்பட்ட கோவிட் தொற்றுபரவல், பொருளாதார நெருக்கடி என்பன இவ்விலக்குகளை அடைவதில் தடைகளை ஏற்படுத்தி உள்ளன.
6. கல்விக்கான ஒப்புரவை பாதிக்கும் காரணிகள்
ஒப்புரவு எனின், நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையினை குறிப்பதாக அமைகின்றது. கல்வியில் சம அந்தஸ்தினை இது குறித்து நிற்கின்றது. அனைவரும் கல்வியில் சம அந்தஸ்தினை பெறுவது ஒரு முக்கிய விடயமாகும். ஒரு நாட்டில் வழங்கப்படும் கல்வியானது, ஏழை-பணக்காரன், நகரம்-கிராமம், ஆண்-பெண், இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளைப் கவனத்திற் கொள்ளாமல், அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவது அவசியமாகும். இந்த வகையில் , கல்விக்கான ஒப்புரவை பின்வரும் காரணிகள் பாதிப்பதாக அமைகின்றன:
- வறுமை: வறுமை கற்றலுடன் நேரடியாக தொடர்புபடுகிறது. வறுமைப் பின்னணி கொண்ட சமூகங்களில் இருந்து வரும் பிள்ளளைகள் கற்றல் அடைவுகளில் ஏனைய மாணவர்களை விட பின்தங்கி இருப்பர். போசாக்கான உணவு கிடைக்காமை, ஆரோக்கியமான சூழலை கொண்டிருக்கமை, பிற மாணவர்கள் கொண்டுள்ள கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியாமை போன்ற காரணிகள் கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி விடுகிறது. இலங்கையில் இதனை சமாளிக்கும் வகையில், இலவசக் கல்வி, இலவச பாடநூல், இலவச சீருடை, இலவச மதியபோசனம் போன்ற திட்டங்கள்அமலாகின்றன. எனினும், வறுமை கல்வியின் ஒப்புரவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையினை மேலும் தீவிரப்படுவற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் புதிய மாணவர்கள் இந்த வறுமை நிலைக்குள் செல்லப் போகின்ற நிலைமை உருவாகி உள்ளது. இதன்போது கல்வி பெறவரும் அநேக மாணவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அனுபவிக்கும் அதே அனுபவங்களை பெறப் போகின்றனர். எனவே இதனை கருத்திற் கொண்டு, பாடசாலைக் கல்வியில் இருந்து அவர்கள் விலகி விடுவதனில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள், பாடசாலை மட்டங்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
- அமைதியான விலகல் (Silent Exclusion) – கல்வியின் ஒப்புரவில் அமைதியாக இடம்பெறும் விலகலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது. வகுப்பறையில் உள்ள கற்றல் அடைவுகளில் பின்தங்கி உள்ள மாணவர்கள், அடிக்கடி வரவின்மையினை காட்டும் பிள்ளைகள் கல்வியில் இருந்து படிப்படியாக விலகும் அபாயம் உள்ளவர்களாக இனங்காணப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகள் உங்கள் வகுப்பறைகளில் காணப்படின் அவர்களை அன்புடன் அணுகி அவர்களின் கற்றல் தொடர்பாக கவனம் எடுத்தல் முக்கியமாகின்றது.
இத்தகைய பிள்ளைகளை உங்கள் வகுப்பறைகளில் நீங்கள் கண்டதுண்டா? அப்படியாயின் தாமதிக்காது அவர்களுக்கான உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள்.
- குடும்ப வருமானம்: வறுமை போலவே, குடும்ப வருமானமும் கல்வி ஒப்புரவில் செல்வாக்கு செலுத்துகிறது. கல்வி இலவசமாக வழங்கி வைப்பபட்ட போதிலும், பிள்ளைகளின் கல்வி தொடர்பாக மறைமுக செலவுகளை ஒவ்வொரு குடும்பமும் கொண்டுள்ளது. பாடசாலைக்கான போக்குவரத்து செலவு, மேலதிக கற்றல் வகுப்புக்கள், எழுதுகருவிகள், காகிதாகிகள், மற்றும் புத்தகப் பை, பாடசாலை விசேட நிகழ்வுகள் போன்றவற்றுக்கான செலவுகள் என்பன காணப்படுகின்றன. இவை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் சமஅந்தஸ்தினை பேணுவதில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருகின்றன. உதாரணமாக, வகுப்பறையில் உள்ள வசதி படைத்த குடும்பங்களின் மாணவர்கள் கொண்டு வரும் உயர்ரக கற்றல்சாதனங்கள் ஏனைய பிள்ளைகளில் ஒரு தாழ்வு மனப்பான்மை அல்லது அவற்றை தாமும் பெற வேண்டும் என்ற அவாவினை தோற்றுவித்து விடுகின்றன. இன்று (2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையினை மேலும் தீவிரப்படுத்தும் எனலாம். இதனை எதிர்கொள்வதற்கான விசேட செயற்றிட்டங்கள் கிராமிய, பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
- பிள்ளைகளின் சுகாதாரம்: பாடசாலை மாணவர்கள் சுகாதாரம் கொண்டவர்களாக, ஆரோக்கியம் உடையவர்களாக காணப்படுதல் மிக முக்கியமாகும். இது கற்றலில் உடன்பாடான விளைவுகளைக் கொண்டுள்ளன. குடும்ப வருமானம், வறுமை, வாழும் சூழல் என்பன பிள்ளைகளின் சுகாதார நிலைமைகளினை தீர்மானிக்கின்றன. பாடசாலைகளிலும் சுகாதார பழக வழக்கங்களை பேணும் வகையில் வளங்கள் காணப்படல் வேண்டும். சுத்தமான நீர், சுத்தமான கழிவறை வசதிகள், கால ஒழுங்கில் ஏற்பாடு செய்யப்படும் மருத்துவ முகாம்கள் என்பவற்றின் மூலம் இதனை உறுதி செய்ய முடியும். இவை எந்தளவில் உங்கள் பாடசாலைகளில் காணப்படுகின்றன?
- மந்த போசனையும் மிகை போசனையும்: வறுமை, குடும்ப வருமானம் பிள்ளையின் போசனை நிலைமையினை தீர்மானிக்கின்றன. வறுமை, குறை-வருமானம் கொண்ட பிள்ளைகள் மந்த போசனை உடையவர்களாக இருப்பர். அயடீன், இரும்பு சத்துக்கள் குறைவான பிள்ளைகள் கற்றலில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதேவேளை, வசதி கூடிய குடும்ப பிள்ளைகள் மற்றும் தவறான உணவு பழக்க வழங்கங்களை கொண்ட பிள்ளைகள், மிகை போசணை கொண்டவர்களாக பருத்த உடல் (பருமன்) களைக் கொண்டு காணப்படுவர். இத்தகையவர்கள் எனைய பிள்ளைகளின் பரிகாசத்திற்கு இலகுவாக உட்படக் கூடியவர்கள். இதனால், இத்தைகைய மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். இது, கல்வியில் இருந்து படிபடியாக விலகும் தன்மையினைக்கு இட்டு செல்லும். இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிள்ளைகளிடம் மந்த போசனை நிலைமையினை மேலும் தீவிரப்படுத்தும் எனலாம். இலங்கை தற்போது உலகின் மந்தபோசனை கொண்ட பிள்ளைகள் உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளமை இங்கு கவலையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்வதற்கான விசேட செயற்றிட்டங்கள் கிராமிய, பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
- பாடசாலை பெளதீக சூழல் மற்றும் வளங்களின் பரம்பல்: கல்வியின் ஒப்புரவினை பாதிக்கும் காரணிகளில் பாடசாலைகளில் காணப்படும் பெளதீக சூழல், வளங்களின் பரம்பலும் ஒன்றாகும். பாடசாலைகளில் சுத்தமான காற்றோட்டமுள்ள வகுப்பறைகள், ஆய்வுகூட வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற வளங்கள் சமமாக பரம்பிக் காணப்படல் கல்வியின் சம அந்தஸ்தினை உறுதி செய்யும் விடயமாக உள்ளது. இது எந்தளவுதூரம் எமது கல்வி நிறுவனங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன?
- சமய மற்றும் இன, சாதி ரீதியான புறக்கணிப்புக்கள்: பல சமயங்கள், இனங்கள் கொண்ட தேசமொன்றில் அனைவருக்கும் அவர்களின் சமயம், இன வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளாமல் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும். இத்தகைய புறக்கணிப்புக்கள் கல்வி ஒப்புரவினை வெகுவாக பாதிக்கும். ஒருவரின் சமய அடையாளத்தைக் கொண்டு, சாதி அமைப்பினைக் காரணம் கூறி, நிற வேறுபாட்டை கொண்டு கல்விக்கான சம சந்தர்ப்பம் மறுக்கப்படும் பல நிகழ்வுகளை நாம் தினமும் கண்டும் கேட்டும் வருகிறோம்.
- பால்நிலைத் தன்மை (Gender): கல்வியின் ஒப்புரவில் பாதிப்பினை ஏற்படுத்தும் இன்னொரு முக்கிய காரணி பால்நிலைத்தன்மை ஆகும். இது பாலினம், பாலின பாத்திரங்கள், பாலின வேறுபாடு, பாலின சமத்துவம், மற்றும் தக்கவைத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆண்-பெண் பால் வேறுபாடு கவனத்தில் கொள்ளாமல் கல்வியை பெற்றுக் கொள்வது பிள்ளையின் அடிப்படை உரிமையாகும். இது ஒவ்வொரு நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டு இருத்தல் வேண்டும். பாடநூல்களில், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் பால்நிலைத் தன்மை யின் சம உரிமை பேணப்படல் வேண்டும். கட்டாயக்கல்வி, இலவசக் கல்வி தனியான பெண் பாடசாலைகள் என்பற்றின் மூலம் பல நாடுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டாலும் குடும்ப வறுமை, சிறுவர் தொழில், சிறுவயது திருமணம், பாதுகாப்பு, பாடசாலைக்கான அதிக தூரம், போக்குவரத்து, போன்ற இன்னோரன்ன காரணிகளால் பெண்களின் கல்வி பங்குபற்றல் குறைவடைகிறது. அதேவேளை, கல்வியில் ஆண்-பெண் சமவாய்ப்பு வழங்கப்படும் சில நாடுகளில் ஆண்களின் கல்வி பங்குபற்றல் குறைவடைந்து போகும் தன்மையும் அவதானிக்கப்படுகிறது. நீண்ட கால பாடசாலைக் கல்வியில் வெறுப்புற்று, விரைவில் சம்பாதிக்க வேண்டும் எனும் ஆசையில் கல்வியை விட்டும் விலகும் ஆண் மாணவர்களின் தொகை, மற்றும் பரீட்சைகளில் சித்தி அடையும்பெண் மாணவிகளின் தொகையில் ஏற்படும் அதிகரிப்பு என்பன கல்வியில் ஆண்-பெண் சம பங்குபற்றலை பாதிப்படையச் செய்கின்றன.
கல்வியின் சமகால எழுவினாக்களில் கல்விக்கு அரசின் வருடாந்த நிதி ஒதுக்கீடும் ஒன்றாக அமைகின்றது. தரமான கல்வியினை வழங்க வேண்டுமாயின் அரசாங்கம் கல்விக்கு போதுமான நிதியினை ஒதுக்குதல் வேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் தமது நாட்டு பிரசைகளுக்கு தரமான கல்வியினை வழங்க போதுமான நிதியை ஒதுக்குவதன் காரணமாக, அந்நாடுகள் அறிவியல், தொழினுட்ப வளர்ச்சிகள் கண்டு வருகின்றன. ஆனால், வளர்ந்து வரும் நாடுகள், கல்விக்கு சொற்பமான அளவில் நிதியினையே ஒதுக்குவதன் காரணமாக கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவை அனுபவித்து வருகின்றன. இலங்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 6% அளவிலாவது காணப்படல் வேண்டும் என்று அரசை வலியுறுத்தி போராட்டங்கள் சில காலங்களுக்கு முன் மக்களால் முன்னேடுக்கப்பட்டதை இங்கு நினைவில் கொள்ளலாம். ஆயினும் இலங்கையில் கல்விக்காக இன்னும் போதுமான அளவு நிதிகள் ஒதுக்கப்படுவதில்லை என்பதே உண்மையாகும்.
8. கல்வியின் பொருத்தப்பாடு
ஒரு நாட்டின் கல்வியானது, எதிர்கால வேலையுலகினை கருத்தில் கொண்டு இன்றைய மாணவர்களை தயார்படுத்தும் உற்பத்தி செயற்றிறன் நோக்குகளை கொண்டதாக இருத்தல் வேண்டும். இன்னும் பத்து வருடங்களில் உலகில் Automation, Artificial Intelligence, Machine Learning, Software engineering போன்ற தொழில் துறைகளில் பணியாற்ற வேண்டிய நபர்களை வேண்டுவதாக உள்ளது. இத்தகைய காலப்பகுதியில் தொழிலாளர்கள் மிகுந்த மன அழுத்தம் கொண்டவர்களாக உளவியல் சிகிச்சைகளை வேண்டியவர்ககளாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்டுகின்றது. அத்தகையதொரு எதிர்காலத்திற்க்கு தேவையான பிள்ளைகளை தயாரிப்பதற்கு இன்றைய கல்வி முறை யில் ஏற்பாடுகள் உள்ளனவா? என நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
ஒருபுறம் தேர்ச்சி மைய கல்விமுறை அமலாக்கப்பட வேண்டும் எதிர்பர்ர்க்கப்டுகின்றது. அதேசமயம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடக்கம் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரை போட்டிமிக்க பரீட்சை மையக் கல்வியினையே நாம் கொண்டுள்ளோம். இத்தகைய முரண்பட்ட கல்விக் கொள்கைகள் இன்றைய மாணவர்களை நாளைய உலகில் சுதந்திர தொழில் முயற்சியாண்மை கொண்டவர்களாக நிச்சயம் மாற்றாது என்பது திண்ணம். எனவே இந்த போட்டி மைய அல்லது பரீட்சைகளை அடிப்படையாக கொண்டு கல்வி முறையை நடைமுறைப்படுத்தாது, மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவையான தேர்ச்சிகளில் பாண்டித்தியம் பெரும் வகையில் கல்விமுறை மாற்றப்படல் வேண்டும்.
9. விழுமிய பண்புகளின் விருத்திக்கான தேவை
வளர்ச்சியடைந்த நாடுகளில், பாடசாலை மாணவர்களை சக மாணவனே துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லும் செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எமது நாட்டில் பிரபல்யமான பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டுகளின் இறுதியில் மாணவர்கள் வன்முறையினை வெளிக்காட்டும் செய்கைகளில் ஈடுபடுவதையும் நாம் காணுகிறோம்!
மாணவர்கள் பயன்படுத்தும் நவீன இணைய அடிப்படையிலான விளையாட்டுகள், நவீன சினிமாக்கள் மாணவர் மனதில் வாழ்க்கை பற்றிய பிழையான நடைமுறைகளை விதைத்து விடுகின்றன. மேலும், பல்கலாசார, பல்லினத் தன்மைகளைப் பேணி வாழும் பண்புகளும் இன்றைய மாணவர்களிடத்தில் குறைந்து வருகின்றன. இதன்காரணமாக, வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் விழுமிய பண்புகளை விருத்தி செய்வதற்குரிய முக்கியத்துவத்தை இன்றைய கல்விமுறையில் ஏற்படுத்துதல் வேண்டும்.
இலங்கையில் பாடசாலை மட்டங்களில், பிற மத, இனங்களை மதித்து நடக்கும் பண்புகளை விருத்தி செய்யும் பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வாழ்க்கை தேர்ச்சிகள் பாடம், குடியியல் கல்வி மற்றும் சமயப் பாடங்கள் மூலம் இவை கற்பிக்கப்பட்டாலும், விழுமிய பண்புகளை விருத்தி செய்யும் செயற்பாடுகளை பாடசாலைகளில் மேலும் வலுவூட்ட வேண்டியுள்ளது.
முடிவுரை
விரைந்து வளர்ந்து வரும் அறிவியல், தொழினுட்பம், தகவல் தொழினுட்பங்கள் உலகில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவை கல்வியினை வேறு வடிவங்களுக்குள் இன்று எடுத்து சென்றுள்ளன. கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த நவீன போக்குகள் கல்விக்கான அணுகல், கல்வியின் தரம், கல்வியின் ஒப்புரவு மற்றும் கல்வியின் பொருத்தப்பாடு ஆகியவற்றில் நாடுகளுக்கு இடையில், சமூகங்களுக்கு இடையில் சவால்கள், பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளன. இவை காலத்திற்கு காலம், இடத்திற்கு இடம் வேறுபட்டு அமையும். கல்வியின் அணுகல், தரம், ஒப்புரவு மற்றும் பொருத்தப்பாடு என்பனவற்றில் எழுமிந்த் எழுவினாக்களுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மட்டுமே தரமான கல்வியை அனைவருக்கும் உறுதி செய்ய முடியும்.
ஆக்கம்: கலாநிதி .எப்.எம்.நவாஸ்தீன்
பேராசிரியர்
கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
2023.08.20