ஆய்வு ஒழுக்கவியல்

 



ஆய்வு ஒழுக்கவியல் 


                               கலாநிதி.எப்.எம்.நவாஸ்தீன் 
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
                இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 

அறிமுகம் 

இன்றைய காலகட்டத்தில் ஆய்வில் ஈடுபாடு காட்டும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். கால முக்கியத்துவம் பெறும் பிரச்சினையொன்றுக்கு பொருத்தமான தீர்வுகளை கண்டறியும் பொருட்டு பொருத்தமான, ஏற்றுகொள்ளப்பட்ட முறைகளில் தரவுகள், தகவல்களை திரட்டி, பகுப்பாய்வுக்குட்படுத்துவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வுகள், அதற்க்கான வழிமுறைகளை கண்டறியும் ஒரு செயலொழுங்கினை ஆய்வு அல்லது ஆய்வுச் செயன்முறை என்று கூறுகிறோம். ஆய்வினை திட்டமிடலிருந்து ஆய்வினை நிறைவேற்றும் வரை ஆய்வாளர் பின்பற்ற வேண்டிய சில ஒழுங்கு விதிகள் உள்ளன. இதனையே ஆய்வு ஒழுக்கவியல் என்பர். ஆய்வுச் செயன்முறையில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இவ்வாய்வு ஒழுக்கவியல் பற்றிய விடயங்கள், குறிப்பாக கல்விசார் ஆய்வுகளுடன் தொடர்புபடுத்தி இக் கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது.


ஆய்வு ஒழுக்கம்  என்றால் என்ன?

Ethics எனும் ஆங்கிலப் பதமானது, நன்னெறி, நெறிமுறை, ஒழுக்கவியல் எனும் பதங்கள் கொண்டு பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு காரியத்தை மேற்கொள்ளும்போது பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களை  இது குறித்து நிற்கிறது. அதாவது, ஒரு விடயத்தை சரியான முறையில்  மேற்கொள்ள,கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய நியமங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை இது குறித்து நிற்கிறது.  
இந்த பின்னணியில் Research Ethics எனும் ஆய்வு ஒழுக்கவியல் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.  ஆய்வினை மேற்கொள்ளும் போது, அதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களே ஆய்வு ஒழுக்கம் என இலகுவாக வரைவிலக்கணம் செய்து கொள்ளமுடிகிறது. ஆய்வின் ஒவ்வொரு நிலைகளிலும் எவற்றை  செய்ய வேண்டும், எவற்றை  செய்யக் கூடாது என்பதை விளங்கி அதன்படி நடப்பதே ஆய்வு ஒழுக்கம் எனலாம். அதாவது, ஆய்வுகளில் ஈடுபடும் போது ஆய்வுடன் தொடர்புறும் மனித விடயங்கள் தொடர்பான  பாதுகாப்பு, தரவைக் கையாளுதல் மற்றும் ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் உள்ளிட்ட ஆய்வின் செயலாலொழுங்கை நிர்வகிக்கும் கொள்கைகள் (Policies) மற்றும் வழிகாட்டுதல்களை (Guidelines) ஆய்வு ஒழுக்கம் எனலாம். எனவே ஆய்வினை பொறுப்பான முறையில்  மேற்கொள்வதற்கான  வழிகாட்டுதல்களை இந்த ஆய்வு ஒழுக்கவியல்  வழங்குகிறது. இதன் மூலம் ஆய்வினில் ஓர் உயர் ஒழுக்க(நன்னெறி) நியமம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது. ஆய்வு ஒன்றினை நேர்மையாக மேற்கொள்வதற்க்கான வழிகாட்டுதல்களையும் இவ்வாய்வு ஒழுக்கம் வழங்குகிறது என்றால் அது மிகை இல்லை.


ஆய்வு ஒழுக்கத்தின் முக்கியத்துவம் 

ஆய்வில் ஈடுபடும் எமக்கு இக்கேள்வி அடிக்கடி எழக்கூடும். ஆய்வில் பல்வறு நபர்கள் பங்குகொள்வார்கள். அது தனிநபர்களாக இருக்கலாம் அல்லது சமூகங்களாக இருக்கலாம். இவர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள், தகவல்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு உண்டு. இவற்றை, பாதுகாப்பதன் ஊடாக ஆய்வாளரும் தன்னையும் தனது ஆய்வினையும் பாதுகாத்து கொள்ள கூடியதாகவும் இருக்கும். ஆய்வாளர்களுக்கு ஆய்வொன்றை மேற்கொள்ளும் போது, எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக் கூடாது எனபதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இருத்தல் அவசியம். இதனை ஆய்வு தொடர்பான நியமங்கள், வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன. இவை, ஆய்வு தொடர்பான உயர் ஒழுக்க நியமத்தை உறுதிபடுத்துவதற்கான விடயங்களை ஆய்வாளர்களுக்கு கல்வி புகட்டவும், கண்காணிக்கவும் செய்கிறது.  இதன் மூலம், ஆய்வாளர், தனது ஆய்வினை பொறுப்பான முறையில்  மேற்கொள்ள இயலுமாகின்றது.  ஆய்வொழுக்கம், ஆய்வில் பங்குபற்றும் மனிதர்கள், விலங்குகளின் பாதுகாப்பு, தரவு சேகரிப்பதில் , ஆய்வு முடிவுகளை வெளியிடுதல் என்பனவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்களுக்குரிய தெளிவான வழிகாட்டுதல்களை தருகின்றது எனலாம். அதேபோன்று, ஆய்வின் மூலம் பெறப்படும் அறிவின் துல்லியத் தன்மையினை உறுதி செய்து கொள்ளவும் ஆய்வு ஒழுக்கம் எமக்கு உதவுகின்றது. மேலும். ஆய்வுச் செயன்முறையில் பல்வேறு புலமைசார் சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டிய சந்தர்பங்கள் அதிகம் ஆகும். அத்தகைய சூழமைவில், புலமைசார் சொத்துக்களை பாதுகாப்பதற்க்கான வழிமுறைகளையும் இவ்வாய்வு ஒழுக்கம் எமக்கு கற்றுத் தருகிறது. 


ஆய்வு ஒழுக்கம் யாருக்கு தேவையாகின்றது?  

ஆய்வொன்றை மேற்கொள்பவரை விட, அவ்வாய்வில் பங்குபெறும் மனிதர்கள் (ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள்...), விலங்குகள் ஆகியவற்றின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஆய்வொழுக்கம் தேவையாகின்றது.  ஆய்வில் தரவுகளை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் மனிதர்களின் வாழ்வு உரிமைகள், கண்ணியம், இரகசியத்தன்மை, பிரத்தியேக தகவல்கள் போன்றவற்றை பேணிப் பாதுகாப்பதற்கும், விலங்குகளின் உயிர்காப்பு விடயங்களுக்கும் இந்த ஆய்வு ஒழுக்கம் பாதுகாப்பாக அமைகின்றது.


ஆய்வு ஒழுக்கம் பேணப்பட வேண்டிய பிரதான பகுதிகள்

ஆய்வொன்றை திட்டமிடுவதில் இருந்து ஆய்வினை மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டங்களிலும் ஆய்வு ஒழுக்கத்தினை பின்பற்றுதல் அவசியமாகும். குறிப்பாக, பின்வரும் விடயங்களில் ஆய்வு ஒழுக்கத்தினை பின்பற்ற வேண்டும்:  

  1.  மனித விடயங்களை கையாளுதல் - Human Subjects
  2. விலங்குகள் தொடர்பான விடயங்கள் - Animal subjects
  3. தரவுகளைக் கையாளுதல் - Handling of Data 
  4. ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் - Dissemination of research results

மனித விடயங்களை கையாளுதல் தொடர்பான விடயங்கள்

மனிதர்களை உள்ளடக்கிய வகையில் ஆய்வினை  மேற்கொள்ளும்போது ஆய்வு  ஒழுக்க நெறிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு நபர்களின் [ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள்...] கெளரவம், மரியாதை, நன்மை, தனிப்பட்ட விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.  ஆய்வுகளில் ஈடுபடும் நபர்கள், ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு மனிதர்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்கூட்டியே செய்ய வேண்டும். ஆய்வில் உள்ளடக்கபடும் நபர்கள்  வெறும் சடப் பொருட்களாக கருதாமல் அவர்களை பங்குபற்றுனர்களாக கருத வேண்டும். அவர்களுக்கு உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் உறுதி செய்தல் வேண்டும்.  இதற்காக,  பல்கலைக்கழகங்களில் / நிறுவனங்களில் / நாட்டில் உள்ள ஆய்வு ஒழுக்கசபைகளில் உரிய அனுமதிகளைப்  பெறப்படல் வேண்டும். 

விலங்குகள் தொடர்பான விடயங்கள் 

விலங்குகளை  உள்ளடக்கிய வகையில் ஆய்வினை  மேற்கொள்ளும்போதும் ஆய்வு  நெறிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். விலங்குகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழ்வுரிமைகளை பாதுகாத்தல், அவற்றினால் மனிதர்களுக்கு தீய விளைவுகள் ஏற்பாடாத வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக,  பல்கலைக்கழகங்களில் / நிறுவனங்களில் / நாட்டில் உள்ள ஆய்வு ஒழுக்கசபைகளில் உரிய அனுமதிகளைப்  பெறப்படல் வேண்டும். 

தரவுகளை கையாளுதல் 

தரவுகளை சேகரித்து பயன்படுத்தும் போது ஆய்வு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தரவு சேகரிக்கப்படும் நபர்களுக்கான மரியாதை, நன்மை, நீதி மற்றும் ஒருமைப்பாடு போன்ற நெறிமுறைக் கோட்பாடுகளின்படி தரவுகளை சேகரித்தல் வேண்டும். தனிநபர்களின் தனியுரிமை (பிரத்தியேக வாழ்க்கை), கெளரவம் நம்பிக்கை, பாதுகாப்பு  என்பன உறுதி செய்யப்படல் வேண்டும்.  தரவுகளை சேகரிக்கும் போது, அல்லது அவற்றை பகுப்பாய்வு செய்து வியாக்கியானம் செய்யும் போது, ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மனிதர்களின் உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான விடயங்களில் எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தரவுகளைக் கையாள வேண்டும். 

ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் 

ஆய்வுச் செயன்முறையின் முக்கியமான படிநிலை, ஆய்வு முடிவுகளை வெளியிடுவதாகும், இதனைப் பல்வேறு வழிகளில் ஆய்வாளர்கள் மேற்கொள்வர். இதன்போது, [ஆய்வின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளும்போது] ஆய்வு ஒழுக்கநெறிமுறைகளை கவனமாக, ஆய்வாளர் பின்பற்றவேண்டும்.  ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மனிதர்களின் உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான விடயங்களில் எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு முடிவுகள் பகிரப்பட வேண்டும்.  அதேபோன்று, ஆய்வின் முடிவுகள் துல்லியமாக இருப்பதையும் ஆய்வாளர் உறுதி செய்தல் வேண்டும். 

ஆய்வு ஒழுக்கத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய சில அடிப்படைகள் 

  1. ஆய்வுக்கான அனுமதியை பெறல் [Gaining access and Acceptance]: ஆய்வொன்றை தொடங்கும் போது, ஆய்வுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள், நிறுவனத்தலைவர்களிடம் இருந்து முறையான அனுமதி பெறல் வேண்டும். இதன்போது  உங்கள் ஆய்வு நோக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குதல் அவசியம். அனுமதியை பெறும்போது, அவற்றை எழுத்துமூல அனுமதியாக பெறுதல் மிக அவசியமாகும் 
  2. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களுக்கு ஆய்வு விபரங்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆய்வாளர், தரவு சேகரிப்பதற்காக பயன்படுதுகின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்ற ஆய்வின் பங்கேற்பாளர்களுக்கு, பின்வரும் விடயங்கள் தொடர்பான விளக்கங்களை அளித்தல் வேண்டும்: 
  • ஆய்வின்  தன்மை மற்றும் நோக்கங்கள்.
  • குறித்த ஆய்வில்  அவர்களின் பங்கேற்பு எப்படி இருக்கும்
  • குறித்த ஆய்வில் பங்கேற்பதன் ஊடாக ஏதேனும் அபாயங்கள் ஏற்படுமா அல்லது கிடைக்கும் நன்மைகள் என்ன
  • குறித்த ஆய்வின் உத்தேச  முடிவுகள் என்னவாக இருக்கும்
  • அம்முடிவுகள்  எவ்வாறு பயன்படுத்தப்படும்
3. பங்கேற்பாளர்களின் தகவலறிந்த ஒப்புதல் "ஒப்புதல் படிவத்தை" பயன்படுத்துவதன் மூலம் பெற வேண்டும். தரவு சேகரிப்பதற்காக பயன்படுதுகின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்ற ஆய்வின் பங்கேற்பாளர்கள், குறித்த ஆய்வு தொடர்பாக அவர்கள் அறிந்து கொண்டதாகவும், தரவுகளை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஓப்புதல் படிவத்தில் உறுதி மொழி பெறப்படல் வேண்டும். 
4. மேலும், குறித்த ஒப்புதல் படிவத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பு தன்னார்வமாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
5. ஆய்வுகளில் சிறு பிள்ளைகள் ஈடுபடுத்தப்படுவார்களாயின், அவர்கள் தொடர்பாக ஆய்வாளர்கள்  சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை ஆய்வில் ஈடுபடுத்தும் போது,  மனவெழுச்சி  அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பது முக்கியமாகும்.  
6. எந்தவொரு உடல் அல்லது மனவெழுச்சி ரீதியான தீங்கையும் ஏற்படுத்தும் வகையில்  மனித பங்கேற்பாளர்களை ஈடுபடுத்துவது  மிகவும் நெறிமுறையற்றது. எனவே  எதிர்பார்க்கக்கூடிய ஏதேனும் அபாயங்கள், அசெளகரியங்களை  பங்கேற்பாளர்களுக்கு முன்பே தெளிவாக விளக்கப்பட வேண்டும். 
7. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களின் தனியுரிமையை ஆக்கிரமிப்பதைத் தவிர்ப்பது முக்கியமாகும்.  அதாவது, ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்கள் தங்களைப் பற்றிய சில தகவல்களை வெளிப்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை ஆய்வாளர் விளங்கி இருத்தல்வேண்டும்.
8. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களின் ரகசியத்தன்மை மற்றும் அநாமதேயத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். அனைத்து தரவுகளும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் பங்கேற்பாளருக்கு ஆய்வாளர் உறுதியளிக்க வேண்டும். அறிக்கையிடும்  போது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பங்கேற்பாளர்களின் அநாமதேயத்தை பராமரிக்க முடியும்.
9. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களை ஏமாற்றுதல் மற்றும் காட்டிக்கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம்மாகும்.  ஆய்வாளர் ஆய்வின் உண்மையான நோக்கங்களை மறைப்பதில் இருந்து மற்றும் / அல்லது பங்கேற்பாளர்களுக்கு தவறான தகவல்களைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். 
10. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்கள்,  ஆய்வு முடிவுகள் பற்றி - முழுமையாக அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்பதை ஆய்வாளர் தெரிந்து இருத்தல் வேண்டும். 

ஆய்வு ஒழுக்கம் தொடர்பான ஒழுக்கநெறிக் கோவைகள் 

ஆய்வொன்றில் எத்தகைய ஒழுக்கநெறிகள் பின்பற்றப்படல் வேண்டும் என்பது தொடர்பாக, உங்கள் நாட்டில், நிறுவனத்தில் பிரத்தியேகமான வழிகாட்டல்கள் உள்ளனவா என ஆய்வாளர் அறிந்து இருத்தல் அவசியம். உதாரணமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு தொடர்பான ஒழுக்கவியல் வழிகாட்டல்கள் https://ou.ac.lk/ethics-review-policy/#:~:text=The%20primary%20objective%20of%20the,participants%20should%20never%20be%20permitted. தரப்படுள்ளன.  இதே போன்று, ஆய்வுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தமக்கே உரித்தான வழிகாட்டல்களை தந்திருப்பார்கள். அவற்றை அறிந்து அதற்கேற்ப ஆய்வாளர்கள் ஒழுக வேண்டும். பின்வருவன ஆய்வு ஒழுக்கவியல் தொடர்பான சர்வதேச வழிகாட்டல்கள் ஆகும்: 

ஆய்வு ஒழுக்கத்தில் ஆய்வாளர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் 

ஆய்வாளர் ஆய்வொன்றை மேற்கொள்ளும் போது,  பின்வரும் ஆய்வு ஒழுக்கப்பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்: 
  1.  நேர்மை (Honest): தரவுபெறுபேறுகள்ஆய்வு முறைகள் மற்றும் ஆய்வு செயன்முறைகள்  மற்றும் பிரசுர  நிலைமையினை பற்றி  நேர்மையாக அறிக்கையிடுதல் வேண்டும். தரவுகளை இட்டுக்கட்டுதல்பொய்யுரைத்தல்  அல்லது தவறாக சித்தரித்தல் என்பன அறவே கூடாது
  2. புறவயத்தன்மை (Objectivity): பரிசோதனை வடிவம்தரவு பகுப்பாய்வுதரவு வியாக்கியானம்சகபாடி மதிப்பாய்வுதனிப்பட்ட  முடிவுகள்மானியத்துக்காக  எழுதுதல்நிபுணர் சாட்சியம் மற்றும் ஆராய்ச்சியின் பிற அம்சங்களில் பக்கச்சார்புகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
  3. நாணயம் (Integrity): ஆய்வு செயன்முறைகளில் நீங்கள் மேற்கொள்ளும் உங்கள் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்களை பேணுங்கள்நேர்மையுடன் செயல்படுங்கள்ஆய்வு தொடர்பான உங்கள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளில் நிலைத்தன்மையினை பேணுங்கள் .
  4. அக்கறையுடன் செயற்படல் (Carefulness): ஆய்வுகளை மேற்கொள்கையில் கவனக்குறைவான பிழைகள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்உங்கள் சொந்த வேலையையும் உங்கள் சகாக்களின் பணியையும் கவனமாகவும் விமர்சனரீதியாகவும் ஆராயுங்கள். ஆய்வு நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பதிந்து வைத்து கொள்ளுங்கள்  
  5. திறந்ததன்மை (Openness: ஆய்வுடன் தொடர்பான தரவுதரவு பகுப்பாய்வு முடிவுகள்யோசனைகள்ஆய்வு கருவிகள்ஆய்வு வளங்களை பற்றி பிறருடன் கலந்துரையாடுங்கள்.  அதன்போது கிடைக்கும்  விமர்சனங்களையும்  புதிய யோசனைகளையும் எப்போதும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  6. புலமைசார் சொத்துக்களை மதித்தல் (Respect for Intellectual Property): காப்புரிமை (patents)பதிப்புரிமை (copyrights) மற்றும் பிற புலமைசார் சொத்துக்களை மதிக்ககற்றுக் கொள்ளுங்கள் . வெளியிடப்படாத தரவுஆய்வு  முறைகள் அல்லது ஆய்வு முடிவுகளை அவற்றை மேற்கொண்ட நபர்/நபர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம். உரிய முறையில் உரியவர்களை மேற்கோள்  காட்ட வேண்டிய இடத்தில் மேற்கோள் காட்டவும். ஒருபோதும் இலக்கிய திருட்டில் ஈடுபட  வேண்டாம்.
  7. நம்பகத்தன்மை/இரகசியம்பேணல் (Confidentiality): ஆய்வில் ஈடுபடும் போது தரவுகளை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்களை அல்லது பதிவுகளை இரகசியமாக பாதுகாக்கவும்
  8. பொறுப்பான வெளியீடு (Responsible Publication): ஆய்வின் இறுதி நோக்கம் அவற்றை பிரசுரிப்பதே ஆகும். இதன்போது, உங்கள் சொந்த வாண்மை  வாழ்க்கையை மட்டும் முன்னேற்றுவதை கருத்தில் கொள்ளாமல் ஆராய்ச்சி மற்றும் அறிவினை  முன்னேற்றுவதற்காகவும் ஆய்வுகளை பிரசுரிக்குக. தேவையற்ற  மற்றும் நகல் வெளியீட்டைத் தவிர்க்கவும்.
  9. பொறுப்பான வழிகாட்டல்களைச் செய்தல் (Responsible Mentoring): ஆய்வி ஈடுபாடு காட்டும் உங்களிடம் ஆய்வு முறைகளை பயிலுவதற்காக பலர் முன்வரலாம். இதன்போது, உங்களிடம் பயிலுவோருக்கு ஆய்வு தொடர்பாக தேவையான அறிவூட்டல்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க உதவுங்கள். அதன் போது அவர்களின் நலனை ஊக்குவிக்கவும்அவர்கள் தாமாகவே  தீர்மானம் மேற்கொள்வதை  அனுமதிக்கவும்.
  10. சக பணியாளரை மதித்தல் (Respect for Colleagues): ஆய்வுச் செயன்முறையில் சில நேரங்களில், எம்முடன் இணைந்து பலர் செயலாற்ற முன்வந்திருப்பர். அவர்களை நீதமான முறையில் மதிக்கவும், கருத்து வேறுபாடுகளை மதிக்கவும்  கற்றுக் கொள்ளுங்கள்
  11. சமூக பொறுப்புணர்வு (Social Responsibility): ஆராய்ச்சிபொதுக் கல்வி மற்றும் ஆலோசனை வழங்கல் ஆகியவற்றின் மூலம் சமூக நன்மைகளை ஊக்குவிக்கவும் சமூக தீங்குகளைத் தடுக்கவும் குறைக்கவும் பாடுபடுங்கள்.
  12. பாகுபாடு கட்டாதிருத்தல் (Non-Discrimination): ஆய்வுச் செயன்முறையின் போது , ஆய்வாளர்கள் தமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, நடுநிலையில் நடந்து கொள்ளல் வேண்டும். ஆய்வின் போது, ஆய்வு செயன்முறைகளில் ஈடுபடும் பல்வேறு நபர்களை பாகுபாடு காட்டாது நடுநிலைமையில் நடந்து கொள்ளல் வேண்டும்.
  13. திறன்/ தேர்ச்சி (Competence): ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாக உங்கள் வாண்மைத் தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்வதுடன் வாழ்நாள் முழுவதும் கல்வி மற்றும் கற்றல் மூலம் உங்களை விருத்தி செய்து கொள்ளவும்
  14. சட்டபூர்வத்தன்மை (Legality). ஆய்வினை மேற்கொள்கையில், அது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் நிறுவன மற்றும் அரசாங்க கொள்கைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
  15. விலங்கு பராமரிப்பு (Animal Care): ஆய்வுகளில் விலங்குகளை பயன்படுத்தும்போது அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் அவற்றை சரியாக பராமரித்தல் வேண்டும். தேவையற்ற அல்லது மோசமாக வடிவமைக்கப்பட்ட விலங்கு பரிசோதனைகளை நடத்துதல் அறவே கூடாது.
  16. மனித விடய பாதுகாப்பு (Human Subjects Protection): மனிதர்களை உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் போதுஅவர்களுக்கு ஏற்படும்   தீங்குகளையும் அபாயங்களையும் குறைத்து நன்மைகளை அதிகரிக்கவும்அவர்களது கெளரவம்தனியுரிமை மற்றும் சுயாட்சியை மதிக்கக் கூடிய வகையில் ஆய்வு செயலொழுங்குகள் அமைதல் வேண்டும்.

ஆய்வு தொடர்பான தவறான நடத்தைகள்/முறைகேடுகள்

ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பின்வரும் முறைகேடுகள் அல்லது தவறான நடைத்தை களில் ஆய்வாளர் ஈடுபடக் கூடாது:  

  •  புனைதல் (Fabrication) : ஆய்வு செயன்முறையில் ஆய்வு குறிக்கோள்களை அடையும் பொருட்டு அதற்கேற்ற  தரவு அல்லது ஆய்வு முடிவுகளை உருவாக்குதல் மற்றும் அவற்றைப் பதிவுசெய்தல் அல்லது அறிக்கையிடல் புனைதல் எனப்படும். இவை கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
  •  பொய்மைப்படுத்தல் (Falsification): ஆய்வினை மேற்கொள்ளும் தருவாயில் ஆய்வு கருவிகளை தவறான முறையில் பயன்படுத்துவது, அல்லது தரவு அல்லது முடிவுகளை மாற்றி அமைப்பது  அல்லது தவிர்ப்பது போன்றன பொய்மைப்படுத்தல் எனப்படும்  இதுவும், கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
  • நகலாக்கம்/கருத்து திருட்டு (Plagiarism - மற்றொரு புலமையாளரின்  யோசனைகள், ஆய்வு செயல்முறைகள், ஆய்வு முடிவுகள் அல்லது கட்டுரை வாசகங்கள்  பொருத்தமான முறையில் மேற்கோள் காட்டாமல் தனது சொந்த ஆய்வு விடயம் போல் கையகப்படுத்துதல்.இதுவும் ஆய்வுகளில்  ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

முடிவுரை

ஆய்வுகளில் ஈடுபடும் நாம், ஆய்வுகளினை நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ஆய்வு ஒழுக்கம் எமக்கு கற்று தருகிறது. எனவே, ஆய்வு செயன்முறையில் உள்ள திட்டமிடல், தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் செய்தல், அவற்றி அறிக்கையிடல் ஆகிய பல்வேறு கட்டங்களில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை சரிவர ஒழுகி ஆய்வினை மேற்கொள்ளுதல் முக்கியமாகும்.

உசாத்துணை


இக்கட்டுரையில் உள்ள சில விடயங்கள் பின்வரும் இணையதள கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 
Research methods: https://libguides.library.cityu.edu.hk/researchmethods

ஆய்வறிக்கை எழுதுதல்

 ஆய்வறிக்கை எழுதுதல் 

எப்.எம்.நவாஸ்தீன் 

அறிமுகம் 

ஆய்வுச் செயன்முறையின் இறுதிப்படிநிலை ஆய்வறிக்கை எழுதுவதாகும். ஆய்வாளர் தான் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றிய விடயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும்  எடுத்துகூறத் தயாரிக்கும் ஆவணமே ஆய்வறிக்கை எனப்படும். ஆய்வறிக்கை எழுதும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்கள் பற்றி இக்கட்டுரை எடுத்து நோக்குகிறது. 

ஆய்வு அறிக்கை தயாரிக்கப்படுவதன் நோக்கங்கள் 

ஆய்வாளர் பல்வேறு நோக்கங்களுக்காக ஆய்வறிக்கையினை தயாரிக்க முடியும். அவற்றுள் சில வருமாறு  

  • பட்ட நிகழ்ச்சித்திட்டம் அல்லது பட்டமேற்  கற்கையினை நிறைவுசெய்வதற்காக ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன்  இறுதியில் ஆய்வினை அறிக்கையாக சமர்ப்பித்தல்.  இது ஆங்கிலத்தில்  Dissertation, Thesis எனப் பலவாறாக பெயரிடப்படும்.  அறிக்கையில் உள்ளடங்க வேண்டிய சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவற்றின் பெயர் Dissertation ஆகவோ Thesis ஆகவோ அமையப்பெறும். 
  • மேற்கொண்ட ஆய்வினை,  ஓர் ஆய்வு மாநாட்டில் முன்வைப்பதற்காக அல்லது  ஆய்வுச் சஞ்சிகையில் கட்டுரையாக வெளியிடுவதற்காக ஆய்வறிக்கையை தயார் செய்தல் 
  • சிலபோது, ஆய்வாளர், தனது ஆய்வினை மேற்கொள்வதற்கு,  நிறுவனம்/நபர்களிடம் நிதி உதவி பெற்றிருக்கக்கூடும். எனவே, ஆய்வின் முடிவில் நிதி உதவி செய்தவர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பதற்காக வேண்டி  ஆய்வறிக்கையை எழுதுதல் வேண்டும். 
  • ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு  மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாட்டின்  கொள்கை வகுப்பாளர்களுக்கு அல்லது  பொறுப்புவாய்ந்த  நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக ஆய்வறிக்கையை எழுதுதல். 

மேற்கண்ட நோக்கங்களை, ஆய்வறிக்கை தயாரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆய்வுஅறிக்கை- வகைகள் 

ஆய்வறிக்கை பின்வரும் வகைகளாக நோக்கப்படும். 

  • Technical Report - தொழினுட்ப அறிக்கை 
  • Popular Report - பிரபலமான அறிக்கை
  • Oral Report – வாய்மூல அறிக்கை 

தொழில்நுட்ப அறிக்கை மற்றும் பிரபலமான அறிக்கை என்பன  வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் வாசகர்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு வகையான ஆவணங்கள் ஆகும். இவற்றில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. இவற்றை அறிக்கையை வாசிக்கும் வாசகர், அறிக்கையின் நோக்கம், அறிக்கையின் வடிவம், அறிக்கையில் பயன்படுத்தப்படும் மொழிநடை என்பனவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தி நோக்க முடியும். அவையாவன: 

  • வாசகர்கள்: தொழினுட்ப அறிக்கைகளின் வாசகர்கள் ஆய்வுடன் தொடர்புடைய ஆய்வாளர்கள்,  விஞ்ஞானிகள்,  அல்லது துறைசார் நிபுணர்கள்  ஆகும். ஆனால், பிரபலமான அறிக்கை, நிபுணர்கள் அல்லாதவர்கள் உட்பட சாதாரண பொது மக்களுக்காக தயாரிக்கப்படுவதாக இருக்கும். 
  • நோக்கம்:  ஆய்வறிக்கை தயாரிக்கப்படும் நோக்கத்தின் அடிப்படையிலும் தொழினுட்ப அறிக்கை, பிரபல அறிக்கையில் வேறுபாட்டை காண முடியும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பினை அல்லது பிரச்சினை பற்றிய விரிவான தகவல்களை வழங்குதல், ஆய்வு பிரச்சினையின் முக்கியத்துவம், தரவு சேகரிப்பு முறைகள், தரவு பகுப்பாய்வு முறைகள், கண்டுபிடிப்புகள், பரிதுரைகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கும் நோக்கில் தொழினுட்ப அறிக்கை தயாரிக்கப்படும். மாறாக, அதிக பார்வையாளர்களிடம் /வாசகர்களிடம் தகவல்களை கொண்டு சேர்ப்பதற்காக, குறித்த வாசகர்களை மேலும் ஆர்வமூட்டுதல், அறிவூட்டுதல் போன்ற நோக்கங்களுக்காக பிரபலமான அறிக்கைகள் தயாரிக்கப்படும். 
  • வடிவம்: தொழில்நுட்ப அறிக்கைகளை எவ்வாறு எழுத வேண்டும், அதன் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகாட்டல்கள் உள்ளன. அதாவது தொழில்நுட்ப அறிக்கைகள்  ஒரு குறிப்பிட்ட முறையிலேயே  கட்டமைக்கப்படுகின்றன, முறையான தலைப்புப் பக்கம், உள்ளடக்க அட்டவணை, அறிமுகலந்துரையாடல், முடிவிரை மற்றும் பரிந்துரைகள் என ஓர் ஒழுங்குமுறையில் இவை தயாரிக்கப்படுவதாக காணப்படும். ஆனால், பிரபலமான அறிக்கைகளின் அவற்றின் கட்டமைப்பு நெகிழ்வு தன்மை கொண்டதாக இருக்கும். யாருக்காக எழுதப்படுகின்றது எனபதைப் பொறுத்து இதன் கட்டமைப்பு மாற்றமடையும். இதற்காக கதை சொல்லல் நிகழ்வுகளை சித்தரிப்பது போன்றவாறு  எளிமையானதாக இது அமையலாம்.  
  • மொழி நடை:  தொழில்நுட்ப அறிக்கைகள் பெரும்பாலும் கல்விசார் மொழி நடையினை பின்பற்றி எழுதப்படும். தொழில்நுட்ப அறிக்கைகளை துறைசார் நிபுணர்களே அதிகம் வாசிப்பதால், அவர்கள் விளங்கும் வகையில், துறைசார் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டு இவ்வறிக்கைகள் எழுதப்படும். ஆனால்  பிரபலமான அறிக்கைகள், பொது மக்கள், துறைசார் நிபுணர்கள் அல்லாதவர்கள் விளங்கும் வகையில் எழுதப்படல் வேண்டும். எனவே, அவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் இவ்வறிக்கைகள் எளிய மொழி நடையில் எழுதப்படும்.  
ஆய்வு முன்மொழிவும் ஆய்வு அறிக்கையும்  
ஆய்வொன்றை மேற்கொள்ள முன்னர், ஆய்வுக்கான அனுமதியை பெறும் நோக்கில் எழுதப்படுவது ஆய்வு முன்மொழிவாகும். ஆய்வொன்றை மேற்கொண்ட பின்னர்,  ஆய்வு பற்றிய விபரங்களை விளக்கி எழுதப்படும் கட்டுரை ஆய்வறிக்கை ஆகும். இவ்விரண்டுக்குமிடையில்  உள்ள பெருபாடுகள் சிலவற்றை பின்வரும் அட்டவணையில் காணலாம்: 

 

ஆய்வு முன்மொழிவு

ஆய்வறிக்கை

நோக்கம்

 

முதுமாணி, கலாநிதி கற்கைகளுக்கு அனுமதி பெறல்,

நிதியளிப்பு நிறுவனங்களில் நிதியை பெற்றுக் கொள்ளல்,

மேற்பார்வையாளரின் ஒப்புதலை பெறுதல்

ஆய்வு ஒழுக்கநெறி சபைகளில் ஆய்வினை தொடர்ந்து முன்னெடுக்க ஒப்புதலை பெறல் போன்ற நோக்கங்களுக்காக ஆய்வு முன்மொழிவு எழுதப்படும்.  

முதுமாணி, கலாநிதி படிப்புகளை நிறைவு செய்வதற்காக சமர்பிக்கப்படுதல்,

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல் போன்ற நோக்கங்களுக்காக ஆய்வறிக்கை எழுதப்படும்.

 

கட்டமைப்பு

 

ஆய்வு முன்மொழிவின் கட்டமைப்பு,   பொதுவாக அறிமுகம், இலக்கிய மீளாய்வு, ஆய்வு முறையியல்  எதிர்பார்க்கப்படும் முடிவுகள் போன்றவற்றை சுருக்கமாக தெரிவிக்கும் வகையில்  காணப்படும்.

ஒரு ஆய்வு அறிக்கையின் கட்டமைப்பு, நீங்கள் எந்த துறையில் ஆய்வினை மேற்கோள்கிறீர்கள் என்பதை பொறுத்து வேறுபடும்.   எனினும், பொதுவாக, அறிமுகம், இலக்கிய மீளாய்வு, ஆய்வு முறையியல், கண்டுவிடிப்புகள், கலந்துரையாடல்  முடிவுரையும், பரிந்துரைகள் என்றவாறான நிலையான கூறுகளை கொண்டிருக்கும்.

நீளம்

 

ஆய்வு முன்மொழிவுகள் பொதுவாக ஆய்வு  அறிக்கைகளை விட குறைவாக இருக்கும், பொதுவாக 5 முதல் 20 பக்கங்கள் வரையே காணப்படும்.  

 

 

ஆய்வு அறிக்கைகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்  நோக்கத்தைப் பொறுத்து மிக நீளமாக இருக்கும். இளமாணி பட்ட படிப்பில் சமர்பிக்கப்படும் ஆய்வறிக்கை  25,000

சொற்களைக் கொண்டதாகவும், முதுமாணி கற்கையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை  60,000 சொற்களுக்குள் எழுதப்படும். கலாநிதி கற்கையில் சமர்பிக்கப்படும் அறிக்கை   100,000 சொற்கள் வரை காணப்படும். அதேவேளை, ஆய்வு சஞ்சிகைக்கு சமர்பிக்கப்படும் கட்டுரை

3000-6000 சொற்கள் கொண்டதாக அமையலாம்.

தொனி (மொழி நடை)

 

ஆய்வு முன்மொழிவுகள், இனிமேல் செய்யப்பட வேண்டிய ஆய்வொன்றிக்கான ஒப்புதலைப் பெறுவதற்கு சமர்பிக்கப்டுவதால், இதன் தொனி பெரும்பாலும் தற்காலிகமானது. மொழிநடை  நடை எதிர்காலத் மொழி நடையில் எழுதப்படும்.  

 

ஆய்வறிக்கை, ஆய்வொன்றை மேற்கொண்ட பின்னர் எழுதப்படுவதால்,

அதன் தொனி பொதுவாக மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும்.  

மொழி நடை நிகழ்கால அல்லது இறந்த கால நடையில்  எழுதப்படுவதாக இருக்கும்.

 

பார்வையாளர்கள்

ஒரு ஆய்வு முன்மொழிவுக்கான முதன்மை பார்வையாளர்கள் பொதுவாக மேற்பார்வையாளர், நிதியளிப்பு நிறுவனம் அல்லது ஆய்வு ஒழுக்க நெறிமுறை சபை  ஆகும்.  

 

ஆய்வு  அறிக்கைக்கான பார்வையாளர்கள்

 முதன்மை பொதுவாக ஆய்வு கண்டுபிடிப்புகளில் ஆர்வமுள்ள பிற ஆராய்ச்சியாளர்கள் அல்லது துறை சார் நிபுணர்கள் ஆக காணப்படுவர்.



ஆய்வு அறிக்கை – கட்டமைப்பு மற்றும் அடிப்படை கூறுகள் 
ஆய்வறிக்கைகள் பொதுவாக ஒரே மாதிரியான கட்டமைப்பினைக் ஒண்டிருக்கும். அதன் கூறுகள் பொதுவானதாக காணப்படும். எனினும், ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்படும் பல்கலைக்கழகம் அல்லது சஞ்சிகைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆய்வறிக்கை கட்டமைப்பு கூறுகளில் வேறுபாடுகள் காணப்படும். எனவே, நீங்கள் எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கையை சமர்பிக்க உள்ளீர்களோ, அப்பல்கலைக்கழக வழிகாட்டல்கள் ஏதும் உள்ளதா என தேடியறிந்து அதன்பிரகாரம் ஆய்வறிக்கையினை தயாரிக்க வேண்டும். [உதாரணம்: கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக வழிகாட்டல் https://www.mcgill.ca/gps/thesis/thesis-guidelines/preparation].
அல்லது, நீங்கள் உங்கள் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு ஆய்விதழ் ஒன்றுக்கு கட்டுரையாக சமர்ப்பிக்க விரும்பும்போது, குறித்த சஞ்சிகையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அறிக்கையினை எழுதுதல் வேண்டும். [ பார்க்க சஞ்சிகை ஒன்றின் வழிகாட்டல்கள்: https://mjsshonline.com/index.php/journal/author-instructions]
எனினும். ஆய்வறிக்கையில் பின்வரும் பொதுவான கூறுகள் காணப்படலாம்: 
  • ஆய்வுத் தலைப்பு
  • ஆய்வுச் சுருக்கம் 
  • அறிமுகம் 
  • இலக்கிய மீளாய்வு
  • ஆய்வு முறையியல் 
  • கண்டுபிடிப்புகள் 
  • கலந்துரையாடல் 
  • முடிவுரை 
  • உசாத்துணை / நூல்விபர பட்டியல் 
  • பின்னிணைப்புகள்  
ஆய்வுத் தலைப்பு 
ஆய்வு தலைப்பு பின்வரும் பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும் (Sreeraj. 2015):
  • சுருக்கமான ஆனால் தெளிவான விபரத்தை அளிப்பதாக அமைதல் வேண்டும்.
  • உத்தேச ஆய்வினை பிரதிபலித்தல் வேண்டும்.
  •  கவரக்கூடியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பு சுயாதீன மற்றும் சார்ந்த மாறிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.
  • ஆய்வுத் தலைப்பில் இருந்து ஆய்வுக்குரிய கருச் சொற்களை பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • தலைப்பில் ஆய்வுக் குடி/ பிரதேசம் உள்ளடக்கப்பட்டு இருத்தல் வேண்டும். 
ஆய்வுச் சுருக்கம்  
இது ஆய்வு அறிக்கையின் முன்பக்கத்தில் இடப்படும். ஆனால் இறுதியில் எழுதப்படும் . ஆய்வின் முக்கிய விடயங்களை ஒரு பக்கம் அல்லது குறைந்த சொற்களுக்குள் சுருக்கமாக எடுத்துரைப்பதாக எழுதப்படும். இதன் போது குறித்த ஆய்வின், ஆய்வு பிரச்சினை, ஆய்வின் பிரதான நோக்கம், ஆய்வுக் குறிக்கோள்கள், ஆய்வு வினாக்கள்/ ஆய்வுக் கருதுகோள்கள், ஆய்வு முறையியல், பிரதான கண்டுபிடிப்புகள், முக்கிய பரிந்துரைகள்  போன்றவற்றை குறைந்த  சொற்களுக்குள் (இந்த சொற்களுக்கான வரையறை வேறுபடக்கூடியது) உள்ளடக்குதல் வேண்டும். 

[அத்தியாயம் 1:] அறிமுகம் 

ஆய்வு அறிக்கையின் ஆரம்பத்தில், மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு தொடர்பான பின்னணி விபரங்களை அளித்தல் வேண்டும். ஆய்வு அறிக்கையின் ஒரு தொடக்க புள்ளியாக இந்த அறிமுகம் அமையும் எனலாம். இது ஆய்வுக்கான  பின்னணி தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறது. அதன் நோக்கம் ஆய்வுக்கான  ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும், இதன்போது, வாசகர்கள்,  உங்கள் ஆய்வைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் இது போதுமான பின்னணியை  வழங்கவதாக அமைய வேண்டும்.  இதனைப் வாசித்த பிறகு, உங்கள் ஆய்வு  எதைப் பற்றியது, நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள், ஏன் இந்த ஆய்வினை  மேற்கொள்கிறீர்கள் மற்றும் எந்த ஆய்வு முறைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உங்கள் வாசகர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  அறிமுகப் பகுதியில்  பொதுவாக பின்வரும் கூறுகள் உள்ளடங்கும்:

  • அறிமுகம்
  • ஆய்வு பிரச்சினை 
  • ஆய்வு பிரச்சினைக்கான பின்னணி
  • ஆய்வின் முக்கியத்துவம்
  • பிரதான நோக்கம், குறிக்கோள்கள், ஆய்வு வினா, 
  • ஆய்வின் நியாயிப்பு
  • தொழிற்படு வரைவிலக்கணம்
[அத்தியாயம் 2:] இலக்கிய மீளாய்வு 
இலக்கிய மீளாய்வு  என்பது உங்கள் ஆய்வுடன்  தொடர்புடைய அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிற  ஆய்வுகளைப் பற்றிய   விமர்சன பகுதியாகும். சார்பிலக்கிய மீளாய்வு – ஆய்வுடன் தொடர்புபட்ட பிற முக்கியமான ஆய்வுகள் பற்றிய விமர்சன் ரீதியான பகுப்பாய்வு. இதில் குறிப்பாக தற்போதைய அறிவில் குறித்த ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபட்ட வகையில் காணப்படும் இடைவெளிகளை துல்லியமாக இனங் கண்டு அவை பற்றி விளக்கப்படல் வேண்டும். ஆய்வு இடைவெளியானது தற்போதைய அறிவில் உள்ள எண்ணக்கருக்கள், கோட்பாட்டு பிரயோகம், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முறையியல் போன்றவற்றில் எதாவது ஒன்றில் அல்லது பலவற்றில் உள்ள இடைவெளிகளாக இனங் காணப்படலாம். இது ஒழுங்கமைக்கப்பட்ட, கவனம் செலுத்தப்பட்ட மற்றும் தொடர்புடைய இலக்கியங்களின் தேர்வாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கிய மீளாய்வு பின்வரும்  முக்கிய கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைய வேண்டும். 
  • உங்கள் ஆய்வுடன் தொடர்புபட்ட  வகையில்  தற்போது காணப்படும் அறிவு என்ன?  What is the current state of knowledge on the topic?
  • நீங்கள் இலக்கிய மீளாய்வுக்கு தெரிவு செய்த சார்பிலக்கியங்களில் பயன்படுதப்பட்டுள்ள வெவ்வேறான அணுமுறைகள் /முறையியல்கள் யாவை? What differences in approaches / methodologies are there?
  • நீங்கள் இலக்கிய மீளாய்வுக்கு தெரிவு செய்த சார்பிலக்கியங்களின் பலங்களும், பலவீனங்களும் யாவை? Where are the strengths and weaknesses of the research?
  • உங்கள் ஆய்வுடன் தொடர்புபட்ட வகையில் எத்ததைய மேலதிக ஆய்வுகள் தேவையாக உள்ளன்? இது ஆய்வு இடைவெளியாக அமையப் பெறும். What further research is needed? The review may identify a gap in the literature which provides a rationale for your study and supports your research questions and methodology.
[அத்தியாயம் 3:] ஆய்வு முறையியல் 
இலக்கிய மீளாய்வு பகுதியினை தொடர்ந்து ஆய்வு முறையியல் பகுதி எழுதப்படல் வேண்டும். இதன் 
நோக்கம், நீங்கள் உங்கள் ஆய்வை எவ்வாறு மேற்கொண்டீர்கள் என்பதை விவரிப்பதே ஆகும்.
இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் ஆய்வில் பயன்படுத்திய ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறையைப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட வேண்டும். பொதுவாக, இந்த முறையியல் பகுதியில்
ஆய்வு வடிவம், ஆய்வு அணுகுமுறை, ஆய்வுக் குடி, ஆய்வு மாதிரியெடுப்பு முறைகள், தரவு சேகரிப்பு கருவிகள், தரவு பகுப்பாய்வு முறைகள், பின்பற்றப்பட்ட ஆய்வு ஒழுக்கம்  என்பன இதில் உள்ளடங்குவதாக அமையும்.

[அத்தியாயம் 4:] ஆய்வு கண்டுபிடிப்புகள் 
ஆய்வறிக்கையின் நான்காம் பகுதி பொதுவாக, தரவுப்பகுப்பாய்வு, அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களை விபரிப்பதாக அமையும். 
இது உங்கள் ஆய்வு குறிக்கோள்கள்
 ஆய்வு வினாக்களுக்கு ஏற்ப தரவுபகுப்பாய்வு மற்றும் கண்டுபிடிப்புக்களை பொருத்தமான  அட்டவணைகள், வரைபுகள் கொண்டு 
 விபரிக்கப்படல் வேண்டும். சிலபோது, இந்த பகுதியிலேயே உங்கள் கண்டுபிடிப்புகளை, ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் ஆராயுமாறு நீங்கள் கோரப்படலாம்.

[அத்தியாயம் 5:] ஆய்வு கலந்துரையாடல், முடிவுரை மற்றும் பரிந்துரைகள்  
ஆய்வின் குறிக்கோள்கள் அல்லது கருதுகோள் அல்லது ஆய்வு வினாக்களுக்கு ஏற்ப ஆய்வு முடிவுகளை ஒழுங்குபடுத்தி ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் தொடர்புபடுத்தி எழுதுதல் வேண்டும். 
மேலும், இந்த பகுதியில்,  உங்கள் மாதிரிஎடுப்பின் போதுமான தன்மை, உங்கள் ஆய்வின் நோக்கம், தரவு சேகரிப்பு அல்லது பகுப்பாய்வில் ஏதேனும் பிரச்சினைகள்  மற்றும் உங்கள் ஆய்வின் அடிப்படையிலான அனுமானங்கள் (ஆய்வு வரையறைகள்) ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு விளக்கங்கள் இந்த பகுதியில் எழுதப்படும்.
மேலும், இந்தபகுதியில், உங்கள் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும். 
உங்கள் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு, எந்தெந்த வழிகளில் பயனுள்ளவை அல்லது உறுதியானவை? 
மேலும் ஆய்வுகள் செய்யப்படல் வேண்டுமா? 
அப்படியானால், உங்களின் ஆய்வு அனுபவத்தின் அடிப்படையில், எதிர்கால ஆய்வுகளின் நோக்கம் அல்லது ஆய்வுமுறையியல்களை எவ்வாறு மேம்படுத்துவது பற்றி நீங்கள் என்ன ஆலோசனைகளை வழங்கலாம்.
மேலும், உங்கள் முடிவுகளின் நடைமுறை தாக்கங்கள் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய பரிந்துரைகளை என்ன? என்பன பற்றியும் இதில் எழுத வேண்டும். 
உசாத்துணை/நூல் விவர பட்டியல்
Reference List / Bibliography
ஆய்வறிக்கையின் இறுதியில் உசாத்துணை அல்லது நூல் விவரப் பட்டியலை அமைக்க முடியும். இதன் போது எந்த உசாத்துணை வடிவத்தில் இதனை எழுத வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்து அதற்கேற்ப இதனை அமைக்க வேண்டும். 

பின்னிணைப்புகள் Appendices 
மேற்கொண்ட ஆய்வுடன் தொடர்புடைய மேலதிக விபரங்களை பின்னிணைப்புகள் களாக இணைக்க முடியும்.  இவை உங்கள்.ஆய்வுடன் தொடர்புடைய சுற்றறிக்கை, தரவு சேகரிப்பு கருவிகளின் ஆரம்ப விருத்தி தொடர்பான தகவல்கள், விரிவான தரவுகள் ஆகியன கொண்டு அமையலாம். இந்த பகுதியின் சொற்களின் எண்ணிக்கை உங்கள் ஆய்வறிக்கையின் மொத்த சொற்களின் எண்ணிக்கையில் உள்ளடங்க மாட்டாது.


கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...