பல்கலைக்கழக பட்ட பயில்நெறிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக வழிகாட்டல் குறிப்புக்கள்

பல்கலைக்கழக பட்ட பயில்நெறிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக வழிகாட்டல் குறிப்புக்கள்


கலாநிதி எப்,எம்.நவாஸ்தீன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 


 2017 ஆம் ஆண்டு  நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியதை அடுத்து இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு பட்டப்பயில் நெறிகளை தொடர்வதற்கான விண்ணப்பங்களை தகுதி பெற்ற பரிட்சார்த்திகளிடம் இருந்து  கோரியுள்ளது. கடந்த வருட க.பொ. த. (உ/த) பரீட்சைக்கு சுமார் 3,15,227 பரீட்சார்ர்த்திகள் தோற்றி இருந்தனர்.  அவர்களுள் 51.7% (1,63,104) வீதமானோர் இம்முறை இலங்கையில் உள்ள 16 தேசியப் பல்கலைக்கழகங்களில் 15பல்கலைக்கழகங்கள்  3 வளாகங்கள் மற்றும் வேறு  சில நிறுவகங்களில் காணப்படும் சுமார் 99 பட்டப்பயில் நெறிகளுக்கு தாம் தோற்றிய பாடங்களுக்கு ஏற்ப விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.  தகுதி பெற்றோர் பட்டப் பயில் நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்கள் பற்றி இக்கட்டுரை எடுத்து நோக்குகிறது.  

அட்டவணை 1: விண்ணப்பிக்கக் கூடிய பிரிவுகள், பட்டப்பயில்நெறிகளின் எண்ணிக்கை
பிரதான பிரிவுகளும் ஏனைய பிரிவும்
கிடைக்கப்பெறும் பட்டப்பயில் நெறிகளின் எண்ணிக்கை
பட்டப்பயில் நெறிகள் காணப்படும் பல்கலைக்கழகம்,வளாகங்கள், நிறுவகங்களின்  எண்ணிக்கை
1.   கலைப்பிரிவு
14
10 பல்கலைக்கழகங்கள்
2 வளாகங்கள்,
3 நிறுவகங்கள்  
2.   வணிகவியல் பிரிவு
06
11 பல்கலைக்கழகங்கள்
2 வளாகங்கள்
3.   உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
29
13 பல்கலைக்கழகங்கள்
3 நிறுவகங்கள்
2 வளாகங்கள்
4.   பௌதிக விஞ்ஞானப் பிரிவு
11
12 பல்கலைக்கழகங்கள்
2 வளாகங்கள்
1 கல்லூரி/நிறுவகம்
5.   பொறியியல் தொழிநுட்ப பிரிவு
01
09 பல்கலைக்கழகங்கள்
6.   உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு
01
10 பல்கலைக்கழகங்கள்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
01
05 பல்கலைக்கழகங்கள் 1 வளாகம்
வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து
விண்ணப்பிக்க முடியுமானவை
36
11 பல்கலைக்கழகங்கள்
1 வளாகம்
1 கல்லூரி/நிறுவகம்
மூலம். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (2018)

விண்ணப்பிக்கத் தகுதியுபெறுவோர்?  

  கடந்த (2017ஆம்) ஆண்டு க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஆகக் குறைந்தது மூன்று S” சித்திகளைப் நீங்கள் பெற்றிருப்பதோடு பொது சாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றவர்கள்  2017/2018 கல்வியாண்டுக்காக விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுகின்றனர். 

      இணையம் ஊடாக  விண்ணப்பித்தல்

   இணையம் அல்லது இயங்கலை(ஆன்லைன்) மூலம் மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்கடந்த காலங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில்  நிரப்பி அனுப்புவதன் மூலம் நடந்தேறியது. இவ்வாறன விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்தி செயன்முறைக்கு உட்படுதவதற்கு பல நாட்கள் தேவைப்படும். இது பல்கலைகழக அனுமதியில் வீண் கால தாமதத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.இன்று வளர்ச்சி பெற்றுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு பல நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது விண்ணப்பங்களை செயன்முறைக்கு உள்ளாக்குவதனை விரைவு படுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டே இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இயங்கலை(ஆன்லைன்)  அல்லது இணையத்தளத்தின் ஊடாக மாணவர்களை விண்ணப்பிக்க ஊக்குவிக்கின்றது.இதந மூலம் நேர விரயத்தை குறைக்கக் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இதன் மூலம் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் அளிக்கும் ஒவ்வொரு விடயம் தொடர்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவது மிக முக்கியமாகும். இயங்கலை(ஆன்லைன்) மூலம்  விண்ணப்பிக்க  http://www.admission.ugc.ac.lk எனும் இணையத்தள முகவரியில் பிரவேசித்து பல்கலைக்கழக அனுமதிக்கான பதிவினை முதலில் மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்னர்  பின்வரும் விடயங்கள் தொடர்பாக கரிசனை கொள்வது மிக முக்கியமாக உள்ளது. 

         விண்ணப்பம் தொடர்பான கைந்நூலினை நன்கு வாசித்து விளங்குதல்
பல்கலைக்கழக அனுமதிக்காக  விண்ணப்பிக்க விரும்புவோர் இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்பட்டுள்ள கைந்நூலினை நன்கு வாசித்து விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். இக்கைந்நூலானது பத்து பகுதிகள் மற்றும் மூன்று இணைப்புக்கள் கொண்டதாக உள்ளது. மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான சகல விளக்கங்களும் இதில் உள்ளடங்கி உள்ளன. விண்ணப்பிக்க முன்னர் இதனை கவனமாக  வாசித்து விளங்கிக்கொள்வது ஒவ்வொரு மாணவரின் பொறுப்பு ஆகும். குறிப்பாக பகுதி 8 இல் உள்ள பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் (பக்கங்கள்  214-221) தொடர்பாகவும் உங்கள் அவதானத்தை செலுத்துவது முக்கியமாகும்.
இணையம் அல்லது இயங்கலை(ஆன்லைன்) மூலம் இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்வதற்கு முன் மின்னஞ்சல் முகவரி, உங்கள் அடையாள அட்டை, கையடக்க தொலைபேசி இலக்கம் தொடர்பாகவும்  கவனம் செலுத்துதல் வேண்டும்.. முதலில் உங்களுக்கான மின்னஞ்சல் முகவரியை தயார்  செய்துகொள்வது வரவேற்கத்தக்கது. இதற்காக மாணவர்கள் தமது பெற்றோர், உறவினர், நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துவதை  தவிர்ந்து கொள்வது சிறந்தது. ஏற்கனவே மின்னஞ்சல் முகவரி உடையவர்கள் அதனையே பயன்படுத்த முடியும்.  புதிதாக மின்னஞ்சல் முகவரி தொடங்குபவர்கள் தமது கடவுச்சொல்லை என்றும் நினைவில் கொள்ளக்கூடிய வகையில் அமைத்துக் கொள்வது மிக முக்கியம். அடுத்து  2017 க.பொ.த. (உ/த) பரீட்சைக்குபயன்படுத்திய தேசியஅடையாளஅட்டையின் இரு பக்கங்களையும் வருடி (scanner) மூலம் ஸ்கேன் பண்ணி உங்கள் கணனியில் அல்லது விரலி (Thumb drive) யில் சேமித்துக் கொள்ளவும். 1MB க்கும் குறைவான அளவிலான கோப்பினை மட்டுமே இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். 
கையடக்க தொலைபேசிக்காக, உங்களுடைய அல்லது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இலக்கத்தை பயன்படுத்த முடியும்.  இணையம் அல்லது இயங்கலை(ஆன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கான பதிவை மேற்கொள்ள  தயாராகும் போது குறித்த கையடக்க தொலைபேசி உங்கள் அருகில் இருப்பதையும் அது செயற்பட தயாரான நிலையில் வைத்திருப்பதும் மிக முக்கியம்.  ஏனெனில் பதிவு மேற்கொள்ளும் போது குறித்த கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தி குறியீடு ஒன்று அனுப்பி வைக்கப்படும். அதே நேரம் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு இணைய இணைப்பும் அனுப்பி வைக்கப்படும். இவற்றில் ஏதேனுமொன்று கிடைக்கப்பெறவில்லையாயின் மீளுருவாக்கல் அல்லது  Regenerate யினை அழுத்தி மீண்டும் குறுஞ்செய்தி அல்லது இணைப்பினைப் பெறுதல் வேண்டும். 
முன்வருட பரீட்சைப் பேறுகளின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனமொன்றில் பட்டப்பயில்நெறிக்கு உள்வாரி மாணவர்களாக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள  மாணவர்கள் மீண்டும் இங்கு விண்ணப்பிக்க முடியாது.  இணையம் அல்லது இயங்கலை(ஆன்லைன்) மூலம் இலத்திரனியல் விண்ணப்பத்தை ஆங்கில மொழி மூலம் மட்டுமே நிரப்ப முடியும் என்பதை இங்கு மனதிற் கொள்க. எனினும் விண்ணப்ப படிவ உருப்படிகளுக்கு அருகில் i எனும் ஆங்கிலக் குறியீடு காணப்படும் இடங்களுக்கு உங்களது சுட்டியை (Mouse) நகர்த்துவதன் மூலமும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெறலாம்.  அல்லது தேவையான அறிவுறுத்தல்கள் 2017/2018 ஆம் ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டில் பகுதி ஐந்தில் தரப்பட்டுள்ளது. 

விண்ணப்பத்தை நிரப்பும் போது ஒரே தடவையில் நிரப்ப வேண்டுமென்பதில்லை.  விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புவதற்கு   நான்கு படிமுறைகள் உள்ளன. எனினும் எந்தவொரு படிமுறையிலும் நீங்கள் வெளியேறுவதற்கும், பின்னர் நீங்கள் வெளியேறிய படிமுறையிலிருந்து தொடரவும் இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளியேறும் போது குறித்த படிநிலையினை சேமித்த நிலையில் வெளியேறுதல் வேண்டும்.

பட்டபயில் நெறிகளை தெரிவு செய்தல்
பட்டபயில் நெறிகளை தெரிவு செய்யும் போது  மாணவர்கள் தாம் தோற்றிய பாடங்களுக்கும், பெறுபேறுகளுக்கும் ஏற்ப அனுமதி கிடைக்கக் கூடிய பயில்நெறிகளை திட்டமிட்டு தெரிவு செய்து கொள்வது முக்கியமாகும். இதற்காக, கைநூலில் தரப்பட்டுள்ள பிரதான பிரிவுகள் அவற்றுக்கேற்ப விண்ணப்பக்க்கூடிய பயில் நெறிகள், குறித்த பயில் நெறிகள் கிடைக்கக் கூடிய பல்கலைகழகங்கள் ஆகியவற்றையும் தமது இசட் புள்ளி, மாவட்ட தெரிவுநிலை ஆகியவற்றையும் மனதிற்கொண்டு திட்டமிடுதல் முக்கியமாகும். இதற்க்காக முன்னைய வருட மாவட்ட இசட் புள்ளிகளையும் ஓரளவிற்கு கவனத்திற் கொள்ள முடியும். அதன்பின்னர் தமக்கு கிடைக்ககூடிய பயில் நெறிகளையும் அல்லது  விரும்பும்  பயில் நெறிகளையும் செல்ல விரும்பும் பல்கலைக்கழகங்களின் தெரிவுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி குறித்து வைத்துக் கொள்வது இன்றியமையாதாகும். உங்கள் புள்ளிகளுக்கு கிடைக்கக் கூடிய பயில்நெறியினை தெரிவுப் பட்டியலில் முதன்மைப்படுத்துவதன் மூலம் உங்கள் பல்கலைகழக நுழைவுக்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ள முடியும். தமது தெரிவில் உள்ளடக்காத எந்தவொரு பயில்நெறிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது கவனத்திற்குரியது. 
மாணவர்கள்,  இணையம் அல்லது இயங்கலையில் இலத்திரனியல் விண்ணப்படிவத்தை நிரப்பும் போது, தகைமைக்கு ஏற்ற வகையில் பயில் நெறிகள் திரையில் தோன்றும். எனினும், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டு தயாரித்து வைத்து இருக்கும் பயில் நெறிகள் அதன் பல்கலைக்கழகங்களின் வரிசைநிலைகளுக்கு ஏற்ப இணையத்தளப் பட்டியலை மேற்கொள்ள முடியும். அனுமதி கைநூலில் கற்கை நெறிகள் மற்றும் அவற்றுக்கான பல்கலைக்கழகங்களிற்கு உரிய குறியீடுகள் Unicode எனும் பெயரில் கைநூலில் 125 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் மாணவர்கள் அவதானம் செலுத்துவது முக்கியமாகின்றது. 

பயில் நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் போது சில பயில் நெறிகளுக்கு குறித்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் உளச்சார்பு பரீட்சை ஒன்றுக்கும் மாணவர்கள் தோற்ற வேண்டி இருக்கும். அவ்வாறான பயில்நெறிகளுக்கு விண்ணப்பித்து இருப்பின், தினசரி பத்திரிகைகளில் உளச்சார்பு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது அவற்றுக்கு விண்ணப்பித்து அப்பரீட்சைகளிலும் தோற்றுவது அவசியமாகும். உளச்சார்பு பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்புக்களில் தொடர்ந்தும் கவனம் செலுத்துதல் வேண்டும். 
மாணவர்கள் பட்டபயில் நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பிக்க வேண்டிய பயில் நெறிகள் தொடர்பாக சுயமாக முடிவெடுப்பது வரவேற்கத்தக்கது. எனினும், இது தொடர்பாக ஆலோசனைகள், வழிகாட்டல்களை உங்கள் பெற்றோர், பாதுகாவலர், உறவினர், ஆசிரியர்களிடமோ, தற்போது பல்கலைகழகங்களில் குறித்த பட்ட பயில்நெறிகளை தொடர்கின்றவர்களிடமிருந்தோ பெற்றுக் கொள்ளலாம். 

இலத்திரனியல் விண்ணப்பத்தின் நான்கு படிநிலைகளையும் நிரப்பிய பின்னர், நீங்கள் அளித்துள்ள விபரங்கள் அனைத்தும் சரியான வகையில் நிரப்பப்பட்டுள்ளனவா என பல தடவைகள் சரிபார்த்து கொள்வது தேவையற்ற பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க வழிவகுக்கும். ஏனெனில் மாணவரால் அளிக்கப்படும் தவறான தகவல்கள் அவரது பல்கலைகழக அனுமதியை இழக்கச் செய்து விடும்.
 இணையம் ஊடாக நிரப்பிய பின்னர் 

இலத்திரனியல் விண்ணப்பத்தின் சகல படிநிலைகளையும் நிரப்பிய பின்னர், கவனமாக சரி பார்த்த பின்னர், உங்களால் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து கொள்ள முடியும். அவ்வாறு பிரிண்ட் செய்யும் போது குறித்த விண்ணப்பதை PDF இல் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்படுள்ளன. விண்ணப்பத்தை பிரிண்ட் செய்யும் போது அச்சிடப்படுள்ள விண்ணப்பத்துடன் பார்கோட்கள் (Bar Code)  அடங்கிய ஒரு தாளும் அச்சிடப்பட்டிருக்கும். அப்பார் குறியீடுகளை உமது விண்ணப்பத்துடன் சமர்பிக்கப்படும்  ஆவணங்களின் இரு பக்கங்களிலும் வலதுமேல் மூலையில் ஒட்டி விடுதல் வேண்டும்.  

விண்ணப்பங்களை நிரப்புதல், நிரப்பும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள், நிரப்பிய விண்ணப்பங்களை எவ்வாறு எங்கு  அனுப்ப வேண்டும் போன்ற சகல விடயங்களும் பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலில் விரிவாக தரப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூலில் தரப்பட்டுள்ளவற்றை நன்கு வாசித்து விளங்கிக் கொள்வதுடன் தேவையான பிற வழிகாட்டல்களை உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

தனிப்பட்ட இணைய வசதி இல்லாதவர்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையங்கள், கல்வி அமைச்சின் மாகாண, மற்றும் வலய காணி வள நிலையங்கள், மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவகம்(நெனசல) போன்றவற்றில் இலவசமாக இணையத்தளத்தினூடாக விண்ணப்பிப்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

நன்றி:  ஜசார் ஜவ்பர்
தேசிய கல்வி நிறுவகம் 
(கட்டுரையில் முக்கியமான சில திருத்தங்களை மேற்கொண்டமைக்கு)

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...