ஹலாலும் ஹராமும் நாமும் என்ற கட்டுரைத் தொடர்

02.05.2013 இல்  விடிவெள்ளி வாராந்த பத்திரிகையில் வெளிவந்த  ஹலாலும் ஹாரமும் நாமும் என்ற கட்டுரையின் முதல் பகுதி 


அறிமுகம்

முதலாளித்துவ உலகமயமக்கலானது மனிதனது சமய பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட முழு வாழ்க்கையினையுமே வர்த்தகமயமாக்கியுள்ளதுடன் ஆன்மீகத்தில் இருந்தும் மக்களை தூரமாக்கியும் வைத்துள்ளது.. அநேக சம்பிரதாயங்களில் உணவு நுகர்வானது உடலியல் தேவைகளை திருப்திபடுத்துவதோடு மட்டும் நின்றுவிடாது ஆன்மிக முக்கியத்துவத்தையும் வேண்டி நிற்கின்றது. இத்தகைய சம்பிரதாயங்களில் குறிப்பிட்ட உணவுகள் அனுமதிக்கப்பட்டவைகளாகவும் வேறு சில மறுக்கப்பட்டவைகளாகவும் விளங்குகின்றன. அனுமதிக்கப்பட்ட உணவு நுகர்வானது ஆன்மீகத்தினை விருத்தி செய்கின்றது. இமாம் அப்துல்லாஹ் இப்னு அலவி அல்கத்தாத் எனும் அறிஞர் தனது நூலான The Book of Assistance இல் உணவின் இரு வகையான தொழிற்பாடுகளை சுட்டிக் காட்டுகின்றார். 

“அனுமதிக்கப்பட்ட உணவு சார்ந்த யாவும் உள்ளத்துக்கு பிரகாசத்தை வழங்குவதுடன் உடலுக்கு வணக்க வழிபாடுகளை ஆற்றுவதற்கான சக்தியையும் தருகின்றது 
(For everything depends on food which, when licit, has a great illuminating influence on the heart and gives the body energy for worship)”. 

சில காலமாக உயிரியல் பேண்தகு விவசாய செயன்முறைகளைக் கொண்ட சிறிய பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளையே மக்கள் உண்டு வந்தனர். இவை மரபு சார்ந்த முறைகளை கொண்டிருந்ததுடன், இரசாயன பதார்த்தங்களில் இருந்து விடுபட்ட இயற்கை விவசாய முறைகளை கொண்டும் இருந்தன. இத்தகைய நிலைமைகள் கைத்தொழில் சார்ந்த விவசாய முறைமையின் அறிமுகத்தோடு பெரும்பாலும் விரைந்து மாற்றம் பெற்று விட்டன. விஞ்ஞான முறையிலான பண்ணை நடவடிக்கைகளின் அறிமுகம் மற்றும் பெரிய வியாபார நிறுவனங்களில் இருந்து ஏற்பட்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக எமது விவசாயிகளும் பெருமளவில் அசேதனப் பசளைகள், உடலுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள், களைகொல்லிகள், மற்றும் இன்னோரன்ன இரசாயன கூறுகளையும் பயன்படுத்த ஆரம்பித்தனர். பல்வேறுபட்ட இரசாயன பொருள்களின் பாவனை எமது உடல் ஆரோக்கியத்துக்கும் எமது சூழலுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கின்றன என்பதை தற்போதுதான் நாம் உணர ஆரம்பித்துள்ளோம். எமது சூழலினை நாசப்படுத்துகின்ற எமது நீர் நிலைகளை நஞ்சூட்டுகின்ற எமது உடலுக்கு கேடு விளைவிக்கும் உற்பத்திகளில் இருந்து வரும் உணவுகளை நுகர்வதானது "எமது இதய பிரகாசமளிப்புக்கு" பங்களிக்கும் ஆரோக்கியத்துக்கு மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்திவிட மாட்டாதா? என்ற வினா எமக்குள் எழுவது இயல்பானதே!.
ஒருகாலத்தில் மக்கள் புதிய ஆரோக்கியமான, போசாக்கான இயற்கை வழியிலான உணவுகளையே உட்கொண்டு வந்திருந்தனர். ஆனால் தற்போது உணவு தொழில்நுட்பம், உணவுசார்ந்த கைத்தொழில் என்பனவற்றின் அபரிதமான வளர்ச்சியின் காரணமாக நாம் இரசாயன கூறுகள் அடங்கிய தீவனசேர்க்கைப் பொருட்கள் (Additives, கூடுதல் சேர்க்கைகள்), கெட்டுப்போகாமல் காக்கும் சேர்க்கை பொருட்கள் (Preservatives) சுவையூட்டிகள் (Taste enhancers) பல உள்ளடங்கிய பதப்படுத்தப்பட்ட உணவுகளையே (Processed Foods) பெரும்பாலும் உண்பவர்களாக மாறி விட்டோம். இதன் காரணமாக எமது உடலுக்கு பாதிப்பை விளைவிக்கும் அநேக இரசாயனங்களையே நாம் உண்டு வருகிறோம். இதனால் நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று ஆகியவற்றில் உள்ள இரசாயனங்களுக்கும், புற்று நோய் போன்ற பெரு வியாதிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது . 

இவை ஒருபுறம் இருக்க, இன்று உற்பத்தி செய்யப்படும் பல பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் எமது உணவுப் பழக்கவழக்கங்களுக்கும், ஒரு சில சமூகக் குழுக்களது நம்பிக்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ளடங்கியுள்ள அநேகமான தீவனசேர்க்கைப் பொருட்கள் (Additives) மிருகங்களில் இருந்தே பெறப்படுகின்றன. சில வேளைகளில், இவை மாடு, பன்றிகளில் இருந்து பெறப்படுகின்றன. எனவே முஸ்லிம்கள் மட்டுமன்றி சைவ உணவு விரும்பிகளும் இந்த உணவுகளை உண்ண முடியாதுள்ளது.

உண்ணாட்டில் உற்பத்தியாகும் பண்டங்களில் எவற்றை உட்சேர்க்கையாக கொள்ளவேண்டும், எவற்றை உட்சேர்க்கையாக கொள்ளக் கூடாது என்பது தொடர்பான போதுமான சட்ட வரையறைகளை நாம் இதுவரை கொண்டிருக்கவில்லை. இதனால் நிறுவனங்கள் மக்களது உணவு நெறிமுறைகளை மீறிய வகையில் செயல்படுகின்றன. இது இவ்வாறிருக்க `பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் நிலைமையோ இதிலும் மோசமனவைகளாக இருக்க முடியும். இவை எவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டன, எவற்றை உள்ளடக்கி உள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டிய கண்காணிப்பு போதுமானளவில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். 

இங்கு ஹலால் ஹராம் என்பது முஸ்லிம்களை பொருத்தவரையில் ஒரு மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் இது எமது ஈமான் / நம்பிக்கையுடன் தொடர்புறுகின்றது . சந்தேகமானவற்றில் இருந்தும் தடுக்கப்பட்டவற்றில் இருந்தும் முஸ்லிம்கள் மிகுந்த அவதானம் கொண்டிருக்க வேண்டியவர்களாக உள்ளனர். ஒரு சமயம் முகம்மத் நபி (ஸல் ) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். "எவன் ஒருவன் சந்தேகமானவற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டானோ அவன் தனது சன்மார்க்கத்தையும் நேர்மையையும் பாதுகாத்துக் கொண்டான். எவன் சந்தேகமானவற்றில் விழுந்து விட்டானோ அவன் தடுக்கப்பட்டவற்றில் விழுந்து விடுகின்றான்." 

முஸ்லிம்கள் ஹோட்டல்கள் (Hotels), உணவகங்கள் (Restaurants) போன்றவற்றில் உணவருந்தும் போது அல்லது மீச்சந்தைகள் (Super Markets), உயர் சந்தைகளில் (Hyper Markets) பொருள் கொள்வனவு செய்யும் போதும் அவை இஸ்லாமிய நெறி முறைகளுக்கு உட்பட்ட தயாரிப்புக்களா என்பதை தீர்மானிப்பது கடினமான விடயமாகவே இருக்கும். இதனால்தான் ஒரு சில இஸ்லாமிய நிறுவனங்களினால் வழங்கப்படும் ஹலால் உறுதி சான்றிதழ்களில் முஸ்லிம் நுகர்வாளர்கள் பொருள் கொள்வனவு மற்றும் உணவருந்துவதில் தங்கி நிற்க வேண்டியுள்ளது . ஆயினும், இந்த ஹலால் சான்றிதழ்களை வழங்கும் இஸ்லாமிய நிறுவனங்கள் போதிய பயிற்றப்பட்ட ஆளணியினரையும் போதுமான ஆய்வுகூட வசதிகளையும் கொண்டிருத்தல் அவசியமாகிறது. இல்லாதுவிடின் இன் இந்நிறுவனங்களின் சான்றிதழ்கள் ஐயத்திக்குரியதாகி விடும். அத்துடன் போதிய சட்ட ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும். போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லாது விடின் ஹலால் உற்பத்தி செயன்முறையினை கண்காணிப்பது சிரமமான விடயமாக காணப்படும்.

தொடரும்

#ஹலாலும் ஹராமும் நாமும் #நவாஸ்தீன் #Nawastheen

கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

       கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன்  கல்விப் பீடம்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆய்வுச் செயன்முறையில் தரவு சே...