கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை


 கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல்

எப்.எம்.நவாஸ்தீன்

கல்விப் பீடம், 

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம் 

தமது ஆய்வுக்கான ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக இனங்கண்டு, அதனை பொருத்தமான முறையில் முன்வைப்பதே இன்று ஆய்வுகளில் ஈடுபட முன்வரும் புதிய ஆய்வாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆய்வறிக்கையில் ஆய்வுப் பிரச்சினையை தெளிவாகவும் சான்றுகளுடனும் எடுத்துரைப்பது அவசியம். கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபட உள்ள புதிய ஆய்வாளர்கள், ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன.

1. உங்கள் ஆர்வத்துக்குரிய சிறப்புத் துறை எது என்பதைத் தீர்மானித்தல்

துறைசார்ந்த வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், முதலில் தமது பாடத்துறையில் எந்த கிளைத்துறையின் கீழ் ஆய்வை மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை தெளிவாக இனங்கண்டுக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, கல்வியியலில் மேற்படிப்பு கற்கும் மாணவர்கள், கல்வியியலில் உள்ள பல்வேறு கிளைத்துறைகளில் எதாவது ஒன்றில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தமது சிறப்புத் துறையாக ஒரு கிளைத்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் போன்ற காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

கல்வியியலில் கல்வி உளவியல், கல்வி சமூகவியல், கல்வி முகாமைத்துவம், கல்வி நிர்வாகம், கல்வி தலைமைத்துவம், கலைத்திட்டம், கலைத்திட்டமும் போதனையும், கல்வித் தொழில்நுட்பம், நிகழ்நிலை கல்வி, தொலைக்கல்வி, கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும், ஆரம்பக் கல்வி, ஆசிரியர் கல்வி போன்ற ஏராளமான கிளைத்துறைகள் உள்ளன. இத்தகைய துறைகளில் ஒருவர் கொண்டுள்ள பாட அறிவு, ஆர்வம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது சிறப்புத் துறையைத் தெரிவு செய்தல் மிக முக்கியமானது.

2. ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் படிநிலைகள்

1. சார்பிலக்கிய மீளாய்வில் ஈடுபடல்

ஒருவர் தனது சிறப்புத்துறையைத் தேர்ந்தெடுத்த பின், அதனுடன் தொடர்புடைய வாசிப்பினை விரிவுபடுத்துவது முக்கியம். இதனை ஆய்வியியலில் சார்பிலக்கிய மீளாய்வு (Review of Related Literature) என குறிப்பிடுகின்றனர். இன்றைய பல புதிய ஆய்வாளர்கள் வாசிப்பில் குறைபாடுகள் உள்ளதால், ஆய்வுச் செயன்முறையில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சிறப்புத்துறையைத் தெரிவுசெய்த பின், அதனுடன் தொடர்புடைய சமகால சவால்கள், எழுப்பப்பட்ட ஆய்வு வினாக்கள், மற்றும் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்வதற்கு வாசிப்பு பெரிதும் உதவுகிறது. எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புத்துறையுடன் தொடர்புடைய சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகள், கலாநிதி ஆய்வுகள் (theses), புத்தகங்கள், மற்றும் மாநாட்டு ஆக்கங்களை வாசிப்பதை ஆரம்பிக்க வேண்டும்.

அந்தத் துறையில் ஏற்கனவே எதை ஆராய்ந்துள்ளனர், என்ன கண்டுபிடிப்புகள் இடம்பெற்றுள்ளன, அவற்றில் உள்ள வரம்புகள் அல்லது குறைபாடுகள் என்ன என்பதனை அடையாளம் கண்டு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு வாசிப்பில் ஈடுபடும் போது, குறித்த துறையில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆய்வு வினாக்கள் அல்லது புதிதாக உருவாகும் போக்குகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளுதல் அவசியம். சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பாக விரிவான விளக்கங்களுக்கு எனது சார்பிலக்கிய மீளாய்வு தொடர்பான கட்டுரையினை வாசிக்க: https://nawasdeen.blogspot.com/search?q=literature+

2. ஆய்வு இடைவெளியை அடையாளம் காணல்

சார்பிலக்கிய மீளாய்வின் மூலம், ஏற்கனவே ஆராயப்பட்ட விடயங்களில் போதுமான அளவு கவனம் பெறாத பகுதிகளை அல்லது இதுவரை பதிலளிக்கப்படாத ஆய்வு வினாக்களை/ பிரச்சினைகளை தெளிவாகக் கண்டறிய வேண்டும். இவைதான் “ஆய்வு இடைவெளி” (Research Gap) எனப்படும்.

மேலும், குறித்த துறையில் உள்ள ஆய்வுகள், நடைமுறைச் செயற்பாடுகள், மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் அனுபவங்களில் காணப்படும் சவால்களை ஆராய்வது முக்கியம். ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை பெரும்பாலும் கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியிலிருந்து உருவாகிறது.

எனவே, முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வரம்புகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள், அல்லது புதிய தேவைகள் ஆகியவற்றை அடையாளம் காண்பது ஆய்வுப் பிரச்சினை தெரிவில்  முக்கியமான படியாகும்.

3. ஆய்வுக்கான பரப்பை / கவனத்தைச் சுருக்கல்

ஆய்வுப் பிரச்சினைத் தெரிவில், ஒரு பொதுவான பரப்பிலிருந்து குறிப்பிட்ட ஆய்வுப் பிரச்சினையை உருவாக்குவதற்கு, உங்கள் ஆய்வுக் கவனத்தையும் பரப்பையும் படிப்படியாகச் சுருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்கள் சிறப்புத் துறை ஆசிரியர் கல்வி எனக் கொள்க. “ஆசிரியர் கல்வி” என்பது மிக விரிவான பாடப் பரப்பு ஆகும். இதில் உங்கள் வாசிப்பின் அடிப்படையிலும் இலக்கிய விமர்சனத்தின் வெளிப்பாடுகளையும் பொருத்தமாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட, தெளிவான தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணம்: முன் சேவை ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதில் பிரதிபலிப்பு குறிப்பேடுகளின் பயன்பாடு.

மிக விரிவான அல்லது தெளிவற்ற தலைப்புகளைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றை ஒரே ஆய்வில் கையாளுவது கடினமாக இருக்கும். சிறப்புத் துறையின் உள்ளடக்கத்தை நுணுக்கமாக ஆராய்ந்து, அதில் தமக்குப் பெரும் ஆர்வமுள்ள மற்றும் நடைமுறையில் சாத்தியமான ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இச்செயன்முறை ஆய்வின் பரப்பளவைத் துல்லியமாக வரையறுத்து, ஆய்வின் வடிவத்தையும் நோக்கத்தையும் தெளிவாக அமைக்க உதவுகிறது.

4. ஆய்வுப் பிரச்சினையைத் தெளிவாக வரையறுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை உருவாக்கிய பின், அதனை தெளிவாகவும், ஆராயக்கூடிய வகையிலும் வரையறுப்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல ஆய்வுப் பிரச்சினை யார் (Who), என்ன (What), எப்போது (When), எங்கே (Where) போன்ற அடிப்படை அம்சங்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.

ஆய்வுப் பிரச்சினை வினா வடிவில் (question form) எழுதப்படுவது சிறந்தது, ஏனெனில் அது ஆய்வின் திசையையும் வரம்பையும் தெளிவாகக் காட்டுகிறது.

உதாரணமாக:

“பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் ஆசிரிய மாணவர் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கும் ஆசிரிய -மாணவர்களின் சுயநெறிப்படுத்தப்பட்ட  கற்றலுக்கு பிரதிபலிப்பு குறிப்பேடு செயற்பாடுகள் எவ்வாறு தாக்கம் செய்கின்றன?

ஆய்வுப் பிரச்சினையை வரையறுக்கும் போது பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • பிரச்சினை தெளிவாகவும் குறிப்பிட்டதாகவும் இருக்க வேண்டும்.
  • அளவிடக்கூடிய அல்லது விளக்கக்கூடிய மாறிகள் அடங்கியிருக்க வேண்டும்.
  • நடைமுறையில் சாத்தியமான மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுந்த பரிமாணம் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த முறையில் பிரச்சினையை வரையறுப்பது, அடுத்த ஆய்வுக் கட்டமான ஆய்வு வினாக்கள் , குறிக்கோள்கள், மற்றும் கருதுகோள்கள் (hypotheses) உருவாக்கத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவுகிறது.

5. தெரிவு  செய்யப்பட்ட ஆய்வுப் பிரச்சினையின் நடைமுறை சாத்தியத்தன்மையை மதிப்பாய்வு செய்தல்

ஒரு ஆய்வுப் பிரச்சினை சாத்தியமுள்ளதா என்பதை ஆராய்வது, ஆய்வின் வெற்றிக்கு மிக முக்கியமான படி ஆகும். இதற்காக பின்வரும் அம்சங்களை கவனிக்க வேண்டும்:

  • தரவு மற்றும் பங்கேற்பாளர்கள்: தேவையான தரவைப் பெறுவதற்கும், ஆய்வில் பங்கேற்கத் தயாரான நபர்களை அணுகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • வளங்கள் மற்றும் வசதிகள்: ஆய்வை முடிக்க தேவையான பொருட்கள், உபகரணங்கள், நிதி, மற்றும் ஆதரவு வளங்கள் கிடைக்கிறதா என பரிசீலிக்க வேண்டும்.
  • நேர வரையறை: ஆய்வை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • நெறிமுறைப் பிரச்சினைகள் (Ethical considerations): ஆய்வில் பங்கேற்பாளர்களின் தனியுரிமை மற்றும் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஆய்வாளர் திறன் மற்றும் அனுபவம்: துறை சார்ந்த அறிவு, ஆராய்ச்சி அனுபவம், மற்றும் திறன் ஆகியவை ஆய்வை நடைமுறையில் சிறப்பாகச் செய்ய உதவுமா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு சாத்தியமுள்ள ஆய்வுப் பிரச்சினை என்பது யதார்த்தமானதும், வழங்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கக்கூடியதும், மற்றும் ஆராய்ச்சிக்குத் தகுதியானதாக இருக்க வேண்டும்.

6. தெரிவு செய்த ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை நியாயப்படுத்தல்

ஆய்வுப் பிரச்சினையை தெரிவு செய்தபின், அதன் முக்கியத்துவத்தை தெளிவாகக் கூறுதல் அவசியம். இது ஆய்வின் பயனையும், கல்வியியல் துறைக்கு எவ்வாறு பங்களிக்கிறது  என்றும் வெளிப்படுத்துகிறது.

இதற்கா பின்வரும் அம்சங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். 

  • அறிவியல் பங்களிப்பு: இந்த ஆய்வு தற்போதைய அறிவுத் தரவுகளுக்கு, கோட்பாடுகளுக்கு, மற்றும் கோட்பாடுகள் மற்றும் நடைமுறை இடையேயான இடைவெளியை நிரப்புவதில் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
  • நடைமுறை பயன்பாடு: ஆய்வின் முடிவுகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு உதவும் வகையில் இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும்.
  • சமூகப் பயன்: ஆய்வின் முடிவுகள் சமூக தேவைகள் மற்றும் கல்வி சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஒரு சிறந்த ஆய்வுப் பிரச்சினை, கண்டுபிடிப்புகளுக்கான புதிய வாயில்களை திறக்கக் கூடியதாகவும், தற்போதைய அறிவை விரிவுபடுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

கல்வி ஆய்வுப் பிரச்சினைகளின் முக்கிய வகைப்பாடுகள் (A Comprehensive Classification of Educational Research Problems)

ஆய்வுப் பிரச்சினைகளை பின்வரும் வகைகளில் வகைப்படுத்தலாம். இந்த வகைகள், ஆய்வின் நோக்கம் மற்றும் ஆய்வின் வடிவம், திசையை தெளிவுபடுத்துவதிலும், ஆய்வுப் பிரச்சினையை சரியாக உருவாக்கவும்  உதவும்.

1. நெறிமுறைசார் ஆய்வுப் பிரச்சினை (Normative Research Problem)

நோக்கம்: ஒரு குறிப்பிட்ட சூழலில் எது சரியானது, நெறிமுறைக்கு உகந்தது அல்லது செய்ய வேண்டியது என்பதை, ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகள், கோட்பாடுகள் அல்லது ஒழுக்கத் தத்துவங்கள் அடிப்படையாக ஆராயும் ஆய்வுப் பிரச்சினைகள் இதுவாகும்.

உதாரணங்கள்:

  • வகுப்பறையில் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது, அவர்களின் ஒழுக்க விருத்தியில்  பெரும் தாக்கம் செலுத்துமா?

  • வகுப்பறைத் தொழிநுட்பப் பயன்பாடுகளில், மாணவர்களின் தனியுரிமை மற்றும் சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுத்தப்பட வேண்டும்?

2. விவரண ஆய்வுப் பிரச்சினை (Descriptive Research Problem)

விவரண ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் (ஆசிரியர்/அதிபர்/மாணவர்), சூழ்நிலை அல்லது நிகழ்வின் பண்புகளை விவரிக்கும் ஒரு வினாவாகும், இது "யார்," "என்ன," "எங்கே," "எப்போது," அல்லது "எப்படி" என்ற வினாக்களுக்கு  பதிலளிக்கிறது. காரண ஆராய்ச்சியைப் போலன்றி, இது காரண-விளைவு உறவுகளைத் தீர்மானிக்க முயலுவதில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் விரிவான படத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது, பெரும்பாலும் அளவை நிலை ஆய்வுகளின் மூலம் மேற்கொள்ளப்படும். .

உதாரணம்:

  • தற்போதைய பாடசாலை காலை உணவு திட்டங்கள் மாணவர் வரவு  மற்றும் நலனோம்பலை  எந்த அளவிற்கு பாதிக்கின்றன?
  • ஹட்டன் கல்வி வலயத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் வாண்மை  விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின்  ஆசிரியர்களின் பங்களிப்பு நிலை எவ்வாறு உள்ளது?
  • பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள் கொண்டுள்ள திறன்கள் யாவை?
  • STEM பாடங்களில் சிறப்பான மாணவர்கள் எத்தகைய சுய ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் உத்திகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்?
  • நேர்மறையான வகுப்பறை சூழலை பேணுவதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்


3. வேறுபாடு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Difference-Seeking Research Problem)

ஒரு குறிப்பிட்ட நிகழ்வில்,  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள், முறைகள், அல்லது நிலைகளுக்கு இடையே கணிசமான வேறுபாடு உள்ளதா என ஆராய முற்படும் ஆய்வு பிரச்சினைகள்

உதாரணம்.

  • விஞ்ஞான பாடக் கற்பித்தலில்  போது கண்டறி கற்பித்தல் முறை மற்றும் கூட்டுறவு கற்பித்தல் முறை ஆகியவற்றின்  செயற்திறன் எவ்வாறு வேறுபடுகிறது?

4. தொடர்பு காணும் ஆய்வுப் பிரச்சினைகள்  (Relational/Correlational Research Problem)

 இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையே உள்ள தொடர்பு இருப்பதை ஆராய முப்பதும் ஆய்வுப் பிரச்சினைகள்.

உதாரணம்

  •   மாணவர்களின் தூக்க நேர அளவிற்கும், கல்வி சாதனைக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?
  •  பெற்றோர்களின் ஈடுபாட்டிற்கும் குழந்தைகளின் கல்வி வெற்றிக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?

5. காரண காரிய  ஆய்வுப் பிரச்சினை (Causal Research Problem)

ஒரு காரண காரிய  ஆய்வு பிரச்சினை  என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவைத் தீர்மானிக்க முயலும் ஆய்வுப் பிரச்சினைகள் ஆகும். , இது ஒரு விடயம்  ஏன் நடக்கிறது என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உதாரணம்:

  • மாணவர் ஈடுபாடு மற்றும் நீண்டகால அறிவைத் தக்கவைத்துக்கொள்வதில் பாரம்பரிய கற்பித்தல் முறைகளுக்கு பதிலாக   செயற்திட்ட அடிப்படையிலான கற்றலின் தாக்கம் எவ்வாறுள்ளது
  • வகுப்பறையில் கல்வி செயலிகளைப் பயன்படுத்துவது மாணவர்களின் வாசிப்புப்  திறனில் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?
  •    ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை, நான்காம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க காரணமாக அமைகிறதா?

6. விளக்க ஆய்வுப் பிரச்சினை (Explanatory  Research Problem)

ஒரு விளக்க ஆய்வுபிரச்சினை , மாறிகளுக்கு இடையிலான காரண-விளைவு உறவுகளை அடையாளம் காண்பதன் மூலம் ஒரு விஷயம் ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது எளிய விளக்கத்திற்கு அப்பால் சென்று கருதுகோள்களைச் சோதித்து, ஒரு மாறி மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிறுவுகிறது, பெரும்பாலும் தலைப்பில் வரையறுக்கப்பட்ட முன் தகவல்கள் இருக்கும்போது இத்தகைய ஆய்வு வினாக்கள் உருவாக்கம் செய்யலாம். .

படிக்கும் போது இசையைக் கேட்பது பரீட்சை அடைவுகளை மேம்படுத்துகிறதா அல்லது பெற்றோரின் ஈடுபாடு ஒரு மாணவரின் கல்வி வெற்றியை எவ்வாறு பாதிக்கிறது என ஆராய்வது இதில் உள்ளடங்கும். இத்தகைய விளக்க ஆய்வு பிரச்சினைகள் காரண காரிய ஆய்வு பிரச்சினைகளை ஒத்திருந்தாலும், இவை பரந்து பட்ட ஆய்வு பிரச்சினைகளாக அமைக்கப்படும்.

7. தலையீட்டை வேண்டி நிற்கும்  சார்ந்த ஆய்வுப் பிரச்சினை (Intervention / Solution-Oriented Research Problem)

கல்விப்புலத்தில் காணப்படும்  ஒரு பிரச்சினையை  தீர்க்க உத்தி அல்லது தலையீட்டை வடிவமைத்து, அதன் செயற்திறன் மற்றும் சாத்தியத்தை மதிப்பீடு செய்யும் வகையினாலான ஆய்வு பிரச்சினைகள் இவையாக்கியம். குறிப்பாக செயல் நிலை ஆய்வு பிரச்சினைகள் இதனுள் அடங்கும். .

  • கணிதக் கவனச்சிதறலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய கற்றல் உத்தி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது?
  •  think-pair-share எனும் உத்தி எங்ஙனம் மாணவர் கற்றல் ஈடுபாட்டை அதிகரிக்க உதவுகின்றது

மேற்கண்ட வகைகள்  போன்று கோட்பாட்டு சார் ஆய்வு பிரச்சினைகள், மதிப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Evaluation Research Problem),கண்டறியும் ஆய்வுப் பிரச்சினை (Exploratory Research Problem), ஒப்பீட்டு ஆய்வுப் பிரச்சினை (Comparative Research Problem) எனப் பல வகைகள் உள்ளன.

ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

 ஆய்வுப் பிரச்சினை ஒரு நடுநிலையான, ஆராயக்கூடிய பிரச்சினையாக இருக்க வேண்டும். ஆய்வுப் பிரச்சினை எழுதும் போது, அதில் முன்கூட்டியே காரணம், விளைவு, அல்லது தீர்வை குறிப்பிடக்கூடாது. ஏனெனில்:

  •  முன்கூட்டியே காரணம் அல்லது முடிவை சேர்த்தால், ஆய்வில் பக்கச்சார்பு (Bias) உருவாகும்.
  •  இது ஆய்வின் நோக்கத்தை, உண்மையான அறிவை கண்டறிவதில், தடையாக அமைக்கும்.

தவறான ஆய்வுப் பிரச்சினைகளுக்கான உதாரணங்கள்:

 

காரணத்தை முன்கூட்டியே கூறுதல்: இரு மொழி கல்வியில் இருந்து ஆங்கில அறிவு குறைவின் காரணமாக மாணவர்கள் இடைவிலகுகின்றனர்."

காரண-விளைவை முன்கூட்டியே தீர்மானித்தல்: அதிகரித்த சமூக ஊடகப் பயன்பாடு மாணவர் வன்முறைக்கு இட்டுச் செல்கின்றது.

 தீர்வை பிரச்சினையில் சேர்த்தல்: பாடசாலையில் பொருத்தமற்ற கவின்நிலை  மாணவர் கற்றலை பாதிக்கிறது."

மேற்கண்டவாறு பிழையாக ஆய்வு பிரச்சினைகளை எழுதாமல், சரியாக , நடுநிலையாக ஆய்வு  பிரச்சினை எழுதுவது முக்கியமாகும். ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு தெளிவான, ஆராயக்கூடிய பிரச்சினை ஆகும். இது ஆய்வின் அடித்தளமாக அமைந்து, முழு ஆய்வுத் திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தும். பிரச்சினை காரணம் அல்லது தீர்வை முன்கூட்டியே கூறாது, ஆய்வின் முடிவில் தான், ஆய்வு பிரச்சினைக்கான காரணம், தீர்வுகள் வெளிப்படும் என்பதை மனதில் கொள்ளல் வேண்டும்.


ஆசிரியர் கல்வியில் புதிய உலகளாவிய போக்குகள் (Global Trends in Teacher Education)




 ஆசிரியர் கல்வியில் வளர்ந்து வரும் புதிய உலகளாவிய போக்குகள்

Global Trends in Teacher Education

பேராசிரியர் (கலாநிதி) எப்.எம்.நவாஸ்தீன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

அறிமுகம்

ஆசிரியர் கல்வி என்பது திறமையான கல்வியாளர்களாக மாறுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள், மனப்பான்மைகள் மற்றும் நடத்தைகளுடன் தனிநபர்களை உருவாக்கும் விரிவான செயன்முறையாகும். இதில் இரண்டு முக்கிய நிலைகள் காணப்படுகின்றன. முன் சேவை ஆசிரியர் கல்வி (Pre-service Teacher Education) மற்றும் சேவைக்கால ஆசிரியர் கல்வி (In-service Teacher Education) என்பனவே அவையாகும்.

முன் சேவை ஆசிரியர் கல்வி என்பது ஒருவர் ஆசிரியர் தொழிலில் நுழைவதற்கு முன் பெறும் முறையான கல்வி மற்றும் பயிற்சியாகும். சேவைக்கால ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அறிவு மற்றும் திறன்களை புதுப்பித்து மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான கல்வி மற்றும் பயிற்சியாகும்.

இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிவேக முன்னேற்றம், இணையத்தின் வழியாக உருவான உலகளாவிய இணைப்பு, செயற்கை நுண்ணறிவின் (AI) எழுச்சி, மற்றும் தகவல் பரிமாற்றத்தின் விரைவான வளர்ச்சி போன்ற காரணங்களால் வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றங்கள் உலகின் அனைத்து துறைகளையும், மக்களின் வாழ்க்கை முறையையும் ஆழமாகப் பாதித்துள்ளன. அதேபோல், இந்த உலகளாவிய மாற்றங்கள் ஆசிரியர் கல்வியிலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி, புதிய போக்குகள் மற்றும் புதுமையான அணுகுமுறைகளை உருவாக்கியுள்ளன. இதனால், இன்றைய ஆசிரியர் கல்வி விரைவான மாற்றங்களை எதிர்கொள்ளும் கட்டாய நிலையில் உள்ளது. மாற்றங்களை வேண்டி நிற்கும் புதிய போக்குகள் சில இங்கு நோக்கப்படுகின்றது

1. தேர்ச்சி அடிப்படையிலான ஆசிரியர் கல்வி (Competency-Based Teacher Education)

இன்றைய உலகில் ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சம், அறிவு சார்ந்த கற்றலைத் தாண்டி, தேர்ச்சி அடிப்படையிலான கற்பித்தல் ஆகும். இது வெறும் பாடவியல் அறிவை மட்டுமின்றி, செயன்முறை தேர்ச்சிகள், வகுப்பறை முகாமைத்துவம், கணிப்பீடு-மதிப்பீட்டுத் தொடர்பான தேர்ச்சிகள், பிரச்சினைத் தீர்க்கும் திறன், ஒத்துழைப்பு, மற்றும் தலைமைத்துவத் தேர்ச்சிகள்  போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்குகிறது.

இந்த அணுகுமுறையில், ஆசிரியர் என்பது அறிவை பகிரும் ஒருவராக அல்லாது, கற்றலுக்கான சூழலை உருவாக்கும் “கற்றல் வசதியாளர்/கற்றலை இலகுபடுத்துபவர் ” (Facilitator of Learning) என்ற புதிய வகிபாகத்தில்  தன்னை நிலைநிறுத்துகிறார். இதனால் மாணவர்கள் தங்களின் கற்றலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கற்றலுக்காக கற்றல் எனும் தேர்ச்சியின் பால் தம்மை இட்டு செல்லுகின்றனர். 

உலகளாவிய ரீதியில், ஆசிரியர் கல்வி பாரம்பரிய அறிவடிப்படையிலான (Knowledge-based) பயிற்சியிலிருந்து தேர்ச்சி அடிப்படையிலான (Competency-based) பயிற்சிக்கு மாறி வருகிறது. இந்த மாற்றம், 21ஆம் நூற்றாண்டின் கல்வி தேவைகளுக்குப் பொருந்தும், புதுமைமிக்க மற்றும் சிந்தனையூக்கமான ஆசிரியர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

யுனெஸ்கோ (UNESCO) போன்ற சர்வதேச கல்வி அமைப்புகள் அவ்வப்போது காலத்துக்கேற்ற  ஆசிரியர் தேர்ச்சி சட்டகங்களை  (Teacher Competency Frameworks) உருவாக்கி அறிமுகம் செய்கின்றன. 

உதாரணம்: 

  • UNESCO ICT Competency Framework for Teachers (ICT-CFT) – 2018 (Revised Edition)
  • Global Framework of Professional Teaching Standards (2019) of UNESCO and Education International (EI),
  • Southeast Asia Teachers Competency Framework (SEA-TCF),
  • A Framework for Teachers’ Professional Competencies – OECD (2020)

இத்தகைய சட்டகங்கள்,   ஆசிரியர் தேர்ச்சி (Teacher Competence) என்பது தரமான கல்வி வழங்குதலுக்கான முக்கிய அடிப்படைத் தூணாகும் என தெளிவுபடுத்துகின்றன. எனவே, ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது “என்ன தெரியும்?” என்ற கேள்வியிலிருந்து “என்ன செய்ய முடியும்?” என்ற செயன்முறை நோக்கத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றன அல்லது செல்ல வேண்டி உள்ளன.

மேலும், தேர்ச்சி அடிப்படையிலான ஆசிரியர் கல்வி ஆசிரியர்களுக்கு தங்களின் முன்னேற்றத்தை சுய மதிப்பீடு, தொடர்ச்சியான பின்னூட்டம், மற்றும் பிரதிபலிப்பு (Reflection) மூலம் கண்காணித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பளிக்கிறது. இதனால் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சுய-ஒழுங்குபடுத்தப்பட்ட/ சுய-நெறிமுறைப்படுத்தப்பட்ட  கற்றவர்களாக (Self-regulated learners) உருவாகின்றனர்.

2. எண்ணிம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் மற்றும் நிகழ்நிலை கற்றல் (Digital Technology & Online Learning)

இன்றைய உலகளாவிய சூழலில் எண்ணிம/டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆசிரியர் கல்வியில் ஒரு அடிப்படை மற்றும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. நிகழ்நிலை கற்றல் தளங்கள், மொபைல் கற்றல், கற்றல் முகாமைத்துவ தொகுதிகள்,  (LMS), மற்றும் மெய்நிகர் வகுப்பறைகள் ஆகியவை இப்போது ஆசிரியர் பயிற்சியின் முக்கிய கருவிகளாக விளங்குகின்றன. இதனால் நேரம், இடம் மற்றும் வளங்களின் எல்லைகளை தாண்டி கற்றல் விரிவடைந்து வருகிறது.

COVID-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, ஆசிரியர் கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளை முழுமையாக மறுபரிசீலனை செய்தன. இதன் விளைவாக கலப்பு கற்றல் (Blended Learning), மெய்நிகர் வகுப்பறைகள் (Virtual Classrooms), மற்றும் உருவகப்படுத்துதல் அடிப்படையிலான கற்பித்தல் (Simulation-based Teaching) போன்ற புதுமையான வடிவங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசிரியர்களிடம் இப்போது டிஜிட்டல் திறன்கள் (Digital Skills) மற்றும் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு (Cybersecurity Awareness) ஆகியவை அவசியமான அடிப்படைத் திறன்களாகக் கருதப்படுகின்றன. ஆசிரியர் கல்வி பயிற்றுவிப்பாளர்கள், தொழில்நுட்பத்தை வினைத்திறனாக ஒருங்கிணைக்கும்  முன்மாதிரிகளாக (Models of Best Practice) திகழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எண்ணிம/டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய திறன்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:

  • டிஜிட்டல் எழுத்தறிவு  (Digital Literacy): நிகழ்நிலை தளங்களைப் பயன்படுத்தும் திறன், இணையத்தில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாப்பான பயன்பாடு.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு (Technology Integration): கற்றல் முகாமைத்துவ தொகுதிகள்   (Moodle, Google Classroom) மற்றும் இடைவினையுள்ள முன்வைப்புத் தளங்கள் ( interactive presentation tools (Nearpod, Padlet) போன்ற கருவிகளை பயனுள்ள வகையில் கற்பித்தலில் பயன்படுத்துதல்.
  • உள்ளடக்க வடிவமைப்பு (Content Creation): வீடியோக்கள், இடைவினை  வினாடி வினா (interactive quizzes) போன்ற டிஜிட்டல் கற்றல் வளங்களை உருவாக்குதல்.
  • கணிப்பீட்டு  வடிவமைப்பு (Assessment Design): Google Forms அல்லது Kahoot போன்ற தளங்களைப் பயன்படுத்தி நிகழ்நிலை கணிப்பீடுகளை / மதிப்பீடுகளை வடிவமைத்தல்.
  • தரவுப் பகுப்பாய்வு (Data Analysis): மாணவர் முன்னேற்றத்தை கண்காணிக்க டிஜிட்டல் கருவிகளின் மூலம்  தரவுகளை பெறுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும்  பயன்படுத்துதல்.
  • சுய வழிப்படுத்தப்பட்ட கற்றலை  சாத்தியப்படுத்தல் (Facilitation of Self-Directed Learning): வளர்ந்து வரும் எண்ணிம கருவிகளை பயனுறுதி வாய்ந்த வகையில் கையாளவும், அவற்றின்  மூலம் சுய வழிப்படுத்தப்பட்ட கற்றலை  சாத்தியப்படுத்துவற்கான திறன்களை வளர்த்து கொள்ளல்.

3. வாழ்நாள் நீடித்த வாண்மை விருத்தி  (Lifelong Professional Development)

கல்வி என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் பயணம். அதுபோல், ஒரு திறமையான ஆசிரியராக திகழ்வதற்கான பயணம் ஒரே கட்டத்தில் முடிவடையாது; அது வாழ்நாள் முழுவதும் தொடரும் வாண்மைத்துவ விருத்தி ஆகும்.

இன்றைய கல்வி சூழலில், ஆசிரியர் கற்றல் (Teacher Learning) என்பது முன் சேவை (Pre-service) பயிற்சியால் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகளவில் பல நாடுகள் தொடர்ச்சியான சேவைக்கால பயிற்சிகள் (Ongoing In-service Training), வாண்மைத்துவ  கற்றல் சமூகங்கள் (Professional Learning Communities – PLCs), மற்றும் சிறுபட்டயங்கள் அல்லது குறுகிய அங்கீகாரங்கள் (Micro-credentialing) போன்ற புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றன. இவை ஆசிரியர்களை புதிய கல்வி மாற்றங்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் இணைந்து செயல்படக்கூடியவர்களாக மாற்றுகின்றன.

வாழ்நாள் நீடித்த  வாண்மை விருத்தியின்  முக்கிய அம்சங்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டப்படுகின்றன:

  • தொடர்ச்சியான கற்றல் பண்பாடு (Culture of Continuous Learning): ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் திறன்களை, மதிப்பீட்டு நடைமுறைகளை, மற்றும் வழிகாட்டும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • நிகழ்நிலை கற்றல் வாய்ப்புகள் (Online Learning Opportunities): MOOCs, வலைநிகழ்வுகள் (Webinars), மற்றும் நிகழ்நிலை சான்றிதழ் பாடநெறிகள் மூலம் உலகளாவிய கற்றல் வாய்ப்புகளைப் பெற முடிகிறது.
  • வாண்மைத்துவ  கற்றல் சமூகங்கள் (PLCs): ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், புதிய யுக்திகளை ஆராயும், மற்றும் ஒன்றிணைந்து தீர்வுகளை உருவாக்கும் கற்றல் வலைப்பின்னல்கள்.
  • மைக்ரோ அங்கீகாரங்கள் (Micro-credentialing): குறுகிய கால பாடநெறிகள் அல்லது டிஜிட்டல் பதக்கங்கள் மூலம் (Digital Badges) குறிப்பிட்ட திறன்கள் அங்கீகரிக்கப்படுகின்றன; இது ஆசிரியர்களை தங்கள் கற்றல் இலக்குகளை அடைவதற்கு  உதவுகிறது.
  • வழிகாட்டல் மற்றும் சகபாடி  கற்றல் (Mentoring and Peer Learning): அனுபவமுள்ள ஆசிரியர்கள் இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நடைமுறை, அனுபவ பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.

யுனெஸ்கோ (UNESCO) மற்றும் OECD போன்ற சர்வதேச அமைப்புகள், வாழ்நாள் முழுதுமான கற்றல் ஆசிரியர் தரத்தை மேம்படுத்துவதற்கும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் அவசியம் என வலியுறுத்துகின்றன.

இலங்கையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பெரும்பாலும் பலக்லைக்கழங்கள், தேசிய கல்வி நிறுவனம் (NIE), ஆசிரியர் பயிற்சி மையங்கள், மற்றும் தொலைக் கல்வி வாயில்கள் மூலம் வழங்கப்படுகின்றன. எனினும்,  நேரக்குறைவு, தொழில்நுட்ப அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, மற்றும் ஊக்கமின்மை போன்ற சில சவால்கள் இன்னும் காணப்படுகின்றன.   இது ஆசிரியர் கல்வியில் தடைகளை உருவாக்குகின்றன. 

இதனால், ஆசிரியர்களின் வாழ்நாள் முழுதுமான தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்க, கொள்கை மட்டத்திலும் (Policy Level), நிறுவன மட்டத்திலும் (Institutional Level), மற்றும் தனிநபர் மட்டத்திலும் (Individual Level) ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகிறது. இது ஆசிரியர்களை “கற்பித்தல் செய்பவர்களாக மட்டுமல்லாது, தொடர்ந்து கற்றலில் ஈடுபடுவர்களாக  மாற்றும் ஒரு முக்கிய அணுகுமுறையாக விளங்குகிறது.

4. உள்ளடங்கல் கல்வி மற்றும் சமத்துவமான கல்வி (Inclusive & Equitable Education)

இன்றைய உலகில் “கல்வி அனைவருக்கும் (Education for All)” என்ற கொள்கை வலுவாக நிலைபெற்றுள்ளது. இதன் அடிப்படை நோக்கம், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பின்னணி, திறன் அல்லது சூழல் எதுவாக இருந்தாலும், கற்றல் வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் அணுகல் உறுதி செய்வது ஆகும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேண் அபிவிருத்தி  இலக்கு 4 (SDG 4: Quality Education) இதனை வலியுறுத்தி, “யாரும் புறக்கணிக்கப்படாத கல்வி சூழல் (Inclusive and Equitable Quality Education)” உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இதனை அடைவதில் ஆசிரியர் கல்வி முக்கிய  பங்கு வகிக்கிறது. இன்றைய ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட மாணவர்களுடன் திறமையாகப் பணிபுரியும் ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன அல்லது கவனம்செலுத்த வேண்டி உள்ளது. இதில், மாற்றுத் திறனாளி மாணவர்கள், சிறுபான்மை சமூகங்களிலிருந்து வரும் மாணவர்கள், பின்தங்கிய சமூகப் பின்னணியிலுள்ளவர்கள், மற்றும் மொழி அல்லது கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட மாணவர்கள்  ஆகியோரையும் உள்ளடக்கிய பல்வேறு கற்றல் சூழல்கள் (Diverse Learning Contexts) கருதப்படுகின்றன.

உள்ளடங்கல் மற்றும் சமத்துவக் கல்விக்கான முக்கிய கூறுகள் பின்வருமாறு:

  • பல்கலாசார  கற்பித்தல் அணுகுமுறைகள் (Multicultural Pedagogy): பல கலாச்சாரங்கள், மொழிகள், மற்றும் மதிப்பீட்டு பார்வைகளை உள்ளடக்கிய கற்றல் வடிவமைப்புகள்.
  • பாலின உணர்வு (Gender Sensitivity): பாலின சார்ந்த பாகுபாடுகள், கருத்துக்கள், அல்லது எதிர்பார்ப்புகள் கற்றல் செயல்முறையில் வெளிப்படாதவாறு செயற்படுதல்.
  • விசேட  தேவைகள் சார்  கல்வி (Special Needs Education): மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பொருத்தமான கற்பித்தல் உத்திகள், தொழில்நுட்ப உதவிகள், மற்றும் உளவியல் ஆதரவு வழங்குதல்.
  • சமூக நீதி நோக்கம் (Social Justice Orientation): கல்வி வழியாக சமூக சமத்துவத்தையும் ஒத்துழைப்பையும் வளர்த்தல்.
  • ஒத்துழைப்பான  கற்றல் சூழல் (Collaborative Learning Environment): வேறுபாடுகளை மதிக்கும், ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் கற்றல் கலாச்சாரத்தை உருவாக்குதல்.

யுனெஸ்கோ (UNESCO), யுனிசெஃப் (UNICEF), மற்றும் OECD ஆகிய அமைப்புகள், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை பிரதான திறன்களாக (Core Competencies) இருக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றன. உதாரணமாக, UNESCO’s Global Teacher Education Framework (2021), ஆசிரியர்களை “diversity-sensitive, equity-driven practitioners” ஆக உருவாக்குதல் என்பது தரமான கல்விக்கான முக்கிய அடித்தளம் எனக் குறிப்பிடுகிறது.

இலங்கையை பொறுத்த வரையில் , “தேசிய உள்ளடக்கக் கல்விக் கொள்கை, மாற்றுத் திறனாளிகள் மற்றும் புறந்தள்ளப்பட்ட/உள்ளடங்காத சமூக மாணவர்களைப் பொதுக் கல்வி அமைப்பில் உள்ளடங்கலுக்கான வழிமுறைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.  எனினும், விசேட தேவைகள் சார் ஆசிரியர் பயிற்சியின் பற்றாக்குறை, வளங்களின் குறைவு, மற்றும் நிருவாக  சவால்கள் காரணமாக இதன் நடைமுறைகள் இன்னும் முழுமையடையவில்லை.

இதனால், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் உணர்வுப்பூர்வமான (Empathetic), பாலினம் மற்றும் கலாச்சார விழிப்புணர்வுள்ள (Gender & Culturally Aware), மற்றும் சமபங்கு (ஒப்புரவு) சார்ந்த (Equity-Oriented) ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் கலைத்திட்டங்களை  மறுவடிவமைத்தல் அவசியமாகிறது.இத்தகைய அணுகுமுறைகள் வழியாக மட்டுமே, ஆசிரியர்கள் “ஒவ்வொரு மாணவரும் மதிக்கப்படுகிறான், ஒவ்வொருவரும் கற்றல் வாய்ப்பை பெறுகின்றனர்” என்ற உண்மையான கல்வி சமத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

5. ஆசிரியர் கல்வியின் உலகமயமாக்கல் (Globalization of Teacher Education)

இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் கல்வி உலகளாவிய சூழலோடு ஒருங்கிணைந்தது என்பது புதிய பரிமாணமாகும். பல்கலைக்கழகங்களுக்கிடையேயான சர்வதேச கூட்டணிகள், ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள்  (Exchange Programs eg: Erasmus+ programme), மற்றும் உலகளாவிய ஆசிரியர் தரநிலைகள் (International Teaching Standards) ஆகியவை, ஆசிரியர் கல்வி தொடர்பான கலைத்திட்டங்களை மறுசீரமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகமயமாக்கலின் ஒரு முக்கிய நோக்கம், ஆசிரியர்களை “உலக குடிமை உணர்வு (Global Citizenship)” கொண்ட நபர்களாக உருவாக்குதல் ஆகும். இதன் மூலம் அவர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளில்  சர்வதேச நிலை, கலாசாரப் பன்மை, சமூக பொறுப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவார்கள்.

மேலும், உலகளாவிய அளவில் ஏற்படும் பின்வரும் சில முக்கிய மாற்றங்கள் தொடர்பாக ஆசிறியராக கல்வியில் அறிவூட்டப்படல் வேண்டும். நிலைபேண் அபிவிருத்திக்கான கல்வி (Education for Sustainable Development – ESD)காலநிலை மாற்றம் (Climate Change) எண்ணிம  கருவிகளை பயன்படுத்தும் ஒழுக்க நெறிமுறைகள், கலாசார பன்மை மற்றும் மொழி வித்தியாசம் (Cultural & Linguistic Diversity) போன்றனவும் ஆசிரிய கல்வியில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும்.உலகளாவிய இணைப்பின் மூலம், ஆசிரியர் கல்வி தற்போது உலகப் பார்வையுடன் கூடிய, சமூகப் பொறுப்புள்ள, திறமையான, மற்றும் தொழில்நுட்பமாக முன்னேறிய ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது பல்வேறு சமூகங்களின் நலன் மற்றும் உலகச் சூழலின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆசிரியர்களை உருவாக்குகின்றது 

6. ஆய்வை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை (Research-Based Practice)

இன்றைய ஆசிரியர் கல்வி, ஆசிரியர்களை விமர்சன ரீதியான சிந்தனையுடன் செயல்படும், பிரதிபலிப்புக் செய்பவர்களாக  (Reflective Practitioners) மற்றும் ஆராய்ச்சியாளர்கள் (Researchers) ஆக மாற்ற வேண்டும் எனக்  கருதுகிறது.  ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் நடைமுறைகளை ஆய்வு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் (Evidence-Based) வடிவமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் பின்வரும்  மாற்றங்கள் தேவையாகின்றன: 

  • செயல்நிலை  ஆய்வு (Action Research): ஆசிரியர்கள் தமது வகுப்பறை அனுபவங்களை ஆராய்ந்து, சவால்களை இனங்கண்டு அதற்குரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் செயல்நிலை ஆய்வுகளில் ஈடுபடத் தேவையான பயிற்சிகள் ஆசிரியர் கல்வியில் இணைக்கப்படுகின்றன. 
  • வடிவமைப்பு அடிப்படையிலான செயல்நிலை  ஆய்வு (Design-Based Action Research): இதை செயல்நிலை ஆய்வு வடிவத்தின் புதிய வடிவமாகும். சிக்கலான கற்றல் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க நிஜ உலக சூழல்களில் தலையீடுகளை மீண்டும் மீண்டும் வடிவமைத்து சோதிப்பதை உள்ளடக்கிய ஒரு கல்வி ஆய்வு  முறையாகும்.
  • வகுப்பறை விசாரணை / ஆய்வு (Classroom Inquiry): வகுப்பறை விசாரணை என்பது செயல்நிலை ஆய்வில் இருந்து வேறுபட்டது. இது  பெரும்பாலும் மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் செயன் முறையாகும், இதில் மாணவர்கள் தங்கள் சொந்த வினாக்களை கேட்டு பதிலளிக்கின்றனர், வகுப்பறை விசாரணை தொடர்பான அறிவு ஆசிரியர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் இது விமர்சன சிந்தனை, பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் தன்னாட்சி  போன்ற முக்கியமான மாணவர் திறன்களை விருத்தி செய்கிறது, அதே நேரத்தில் ஆசிரியரின் பங்கை கற்றலை எளிமையாக்குபவராக மாற்றுகின்றது.
  • சான்று அடிப்படையிலான தீர்மானங்கள் (Evidence-Based Decisions): கல்விசார் முடிவுகள், ஆய்வு மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றன, இன்று ஆசிரியர் கல்வி சார்ந்த ஆய்வுகள் ஏராளாமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இது கற்றல்-கற்பித்தல் தரத்தை உயர்த்துகிறது. ஆகவே ஆசிரிய தொடர்பான விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் போது சான்று அடிப்படையிலான தீர்மானங்கள் எடுக்கும் திறன்கள் அர்மிமுங்கம் செய்யப்படல் வேண்டும்.

எனவே, ஆய்வை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை ஆசிரியர்களுக்கு:

தமது கற்பித்தல் செயல்முறைகளை விமர்சனத்துடன் பகுப்பாய்வு செய்ய,

புதிய கற்பித்தல் நுட்பங்களை ஆராய்ந்து செயல்படுத்த,

மற்றும் மாணவர்களின் கல்வி அடைவுகளை மேம்படுத்த,

மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது. உலகளாவிய போக்கில், ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் ஆய்வின் ஒருங்கிணைப்பு (Integration of Research in Teacher Education), ஆசிரியர்களை வாண்மை சார்  திறன், சுய-மதிப்பீடு, மற்றும் புதுமைச் சிந்தனையில் வல்லுநர்களாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

7. சமூக-மனவெழுச்சி கற்றல் (Social-Emotional Learning – SEL)

இன்றைய கல்வி சூழலில், மாணவர்களின் அறிவுத்திறனை மட்டுமின்றி, அவர்களின் சமூக-மனவெழுச்சி திறன்களையும் (Social-Emotional Skills) விருத்தி செய்தல்  ஆசிரியர்களின் முக்கிய பொறுப்பாக மாறியுள்ளது. இதற்காக ஆசிரியர் கல்வியில் சமூக-மனவெழுச்சி கற்றல் (SEL) கூறுகள் இணைக்கப்படுகின்றன, இது மாணவர்களில் கருணை, ஒத்துழைப்பு, மனவெழுச்சி  நுண்ணறிவு (Emotional Intelligence), மற்றும் நற்பண்பு விருத்தி  ஆகியவற்றை ஊக்குவிக்க உதவுகிறது.

SEL பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கும் திறன்கள்

மனவெழுச்சி முகாமைத்துவ/ஒழுங்குபடுத்தும் திறன்கள்  (Emotional Regulation): ஆசிரியர்கள் தங்களின் மனநிலை மற்றும் துலங்கல்களை   சரியாக கையாளும் திறன் விருத்தி செய்து  கொள்ள வேண்டும், அதேசமயம் மாணவர்களின் மனவெழுச்சிகளை புரிந்து வழிநடத்த வேண்டும்.

உறவுகளை  கட்டியெழுப்புதல்  (Relationship Building): மாணவர்களுடன் நம்பகமான மற்றும் சிநேகபூர்வமான  உறவுகளை உருவாக்குதல். இதற்கான வழிகாட்டல்களை வழங்குதல் 

பரிவுணர்வுடன் கூடிய  வழிகாட்டல் (Empathetic Guidance): மாணவர்களின் மனநிலை  மற்றும் சவால்களை புரிந்து அவர்களுக்கு உதவக்கூடிய வகையிலான திறன்களை ஆசிரியர்களுக்கு வழங்குதல் 

ஆதரவான வகுப்பறைச் சூழல் (Supportive Classroom Environment): ஆதரவான வகுப்பறை சூழல் என்பது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கற்றக் கூடிய வகுப்பறை ஆகும்.  இது பாதுகாப்பான, உள்ளடக்கிய, மரியாதைக்குரிய மற்றும் துலங்கக்கூடியதான  (safe, inclusive, respectful, and responsive) உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகளை குறித்து நிற்கின்றது.  இது அனைத்து மாணவர்களும் மதிப்புமிக்கவர்களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும், வெற்றி அல்லது தோல்விக்கு பயப்படாமல் அறிவுசார் விடயங்களை கற்க  கூடியவர்களாக உணரும் இடமாகும்.

மாணவர்களின் நலனோம்பல்  (Student Well-being): மனநிலை சீரமைப்பு, மனஅழுத்தத்தை குறைத்தல், மற்றும் சமூக நலனை மேம்படுத்த கூடிய வகையில் மனவர்க்ளின் நலன்களை பேணும்  திறன்களை ஆசிரியர்கள் கொண்டிருக்க  வேண்டும்.

உலகளாவிய போக்கில், ஆசிரியர் கல்வியில் SEL இணைப்பு, அறிவுசார் திறன்களை (Cognitive Skills) மட்டுமல்ல, முழுமையான கற்றல் மற்றும் மனிதநேய அடிப்படையிலான விருத்தி என்பவற்றையும் இணைக்கும் வழியாகப் பார்க்கப்படுகிறது. இது ஆசிரியர்களை, மாணவர்களின் மன வளர்ச்சி, சமூகப் பொறுப்பு, மற்றும் வாழ்வுத்திறனை மேம்படுத்தும் முன்மாதிரி கற்றல் வழிகாட்டிகளாக மாற்றுகிறது.

ஆசிரியர்களுக்கான,   SEL பயிற்சி மாணவர்களின் கல்விசார் வெற்றியையும், சமூக மற்றும் உணர்ச்சி நல்வாழ்வையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும், புதிய தலைமுறை திறமையான மற்றும் சமூகப்பூர்வமான பாசமிக்க ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய அணுகுமுறை ஆகும்.

8. நடைமுறை சார்ந்த பயிற்சி (Practice-Oriented Training)

ஆசிரியர் கல்வியில் நடைமுறை சார்ந்த பயிற்சி என்பது ஆசிரிய மாணவர்களை, ஆசிரிய பயிற்சியின் போது பாடசாலையுடன் குறிப்பிட்ட காலம் இணைத்து பயிற்சி வழங்கும் முறையாகும். இது உலகளாவிய போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகைய பயிற்சி, உண்மையான பாடசாலை  சூழல்களில் (Authentic School Contexts) நடைபெறுவதால், ஆசிரியர்-மாணவர்கள் தங்கள் கற்பித்தல் திறன்களை நேரடியாக செயற்படுத்தும் வாய்ப்பை பெறுகின்றனர்.

நடைமுறை சார்ந்த பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

பாடசாலை அடிப்படையிலான பயிற்சி (School-Based Training – SBT): ஆசிரியர்-மாணவர்கள் நேரடியாக பாடசாலை சூழலில் பங்கேற்று, முழு பாடசாலை  சமூகத்துடன் இணைந்து கற்பித்தல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது செயல்முறை திறன்கள், பிரச்சினைத் தீர்க்கும் திறன், வகுப்பறை முகாமைத்துவம் , மற்றும் மாணவர் ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

கற்பித்தலுக்கான பயிற்சி மையங்கள் (Teaching Practicum Schools): கற்பித்தல் முறைகளை ஆசிரிய மாணவர்கள்  பூரணமாக அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையங்கள் இவையாகும்.. இது அவர்களுக்கு திடமான கற்பித்தல் அனுபவங் களையும்  தன்னம்பிக்கையும் அளிக்கிறது.

மெய்நிகர் ஒத்திகைகள் (Virtual Simulations): கணினி வழியாக நடத்தப்படும் வகுப்பு ஒத்திகைகள், மாணவர் ஆசிரியர்களுக்கு வகுப்பறை சூழலை முன்னோக்கியபடி அனுபவிக்க உதவுகின்றன.

பல்கலைக்கழகம் – பாடசாலை  கூட்டாண்மை (University–School Partnerships): இத்தகைய கூட்டுறவுகள்  ஆசிரிய மாணவர்க்ளுக்கு,  சிகிச்சை அணுகுமுறையினாலான பயிற்சி, மற்றும் வழிகாட்டல் (Mentorship) வாய்ப்புகளை வழங்குகிறது.

 நடைமுறை சார்ந்த பயிற்சி மாணவர் ஆசிரியர்களை அறிவுத்திறனும் செயல்முறை திறனும் இணைந்த, வகுப்பறை சூழலுக்குத் தயாராகிய  திறமையான ஆசிரியர்களாக உருவாக்கும் முக்கியமான அணுகுமுறை ஆகும். இது, ஆசிரியர் கல்வியின் “கற்றல் மூலம் கற்பித்தல்” நோக்கத்தையும் மிகச்சிறந்த முறையில் நடைமுறையில் கொண்டு வருகிறது..

9. நிலைத்தன்மை மற்றும் நிலைபேண் அபிவிருத்திற்கான கல்வி  (Sustainability & ESD)

இன்றைய கல்வி சூழலில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (Sustainable Development Goals – SDGs) மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆசிரியர் கல்வியில், சுற்றுச்சூழல் அறிவு, சமூக பொறுப்பு, மற்றும் நிலைத்த வாழ்க்கைமுறைகள் (Sustainable Lifestyles) தொடர்பான பாடங்கள் அவசியமான பகுதியாக இணைக்கப்படுகின்றன.

நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியின் முக்கிய அம்சங்கள்:

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு (Environmental Awareness): மாணவர்களுக்கு இயற்கையின் பாதுகாப்பு, வளங்கள் சேமிப்பு, மற்றும் பசுமை நோக்கங்கள் குறித்த அறிவை உருவாக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்.

நிலைத்த வாழ்க்கைமுறைகள் (Sustainable Lifestyles): நாளாந்த நடவடிக்கைகளில் குறைந்த வள பயன்பாடு, மறுசுழற்சி, மற்றும் சக்தி சேமிப்பு போன்ற பழக்கவழக்கங்களை மாணவர்களில் வளர்த்தல்.

சமூக பொறுப்பு (Social Responsibility): சமூக மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை புரிந்து, ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புடன் செயல்பட மாணவர்களை கற்பித்தல்.

விமர்சன  சிந்தனை மற்றும் தீர்வு காணல்  (Critical Thinking & Problem Solving): மாணவர்கள் நியான அபிவிருத்தி தொடர்பான  சவால்களை இனங்கண்டு , அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து செயல்படுத்தும் திறனை வளர்க்கின்றனர்.

நடவடிக்கை உணர்வு கொண்ட குடிமை உணர்வு (Responsible Global Citizenship): உலகளாவிய சூழல் சவால்கள் மற்றும் வளங்கள் பற்றிய விழிப்புணர்வுடன், மாணவர்கள் சமூகத்தில் பங்களிப்பை ஏற்படுத்தக் கற்றுக் கொள்வர்.

Education for Sustainable Development (ESD) மூலம் ஆசிரியர்கள், மாணவர்களின் சிந்தனை திறன், சமூக பொறுப்பு, மற்றும் சுற்றுச்சூழல் நுண்ணறிவு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் கற்றல் செயல்முறைகளை வடிவமைக்கின்றனர். இதனால், எதிர்கால தலைமுறைகள் உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகி, பொறுப்பான மற்றும் விழிப்புணர்வான குடிமக்களாக உருவாகலாம்.

உலகளாவிய போக்கில், பல நாடுகள் மற்றும் கல்வி அமைப்புகள் ESD மற்றும் பசுமை கல்வியை ஆசிரியர் தயாரிப்பில் ஒரு முக்கிய கூறாக இணைத்து வருகின்றன, இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்குமான வாழ்வியலின் தரத்தை மேம்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும்

10. ஆசிரியர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence in Teacher Education)

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) இன்று ஆசிரியர் கல்வியின் வடிவத்தையும் செயல்முறைகளையும் மாற்றி வருகிறது. மாணவர்களின் கற்றல் பாணிகள், திறன்கள், சவால்கள் மற்றும் முன்னேற்றம் பற்றிய ஆழ்ந்த தகவல்களையும் பகுப்பாய்வுகளையும் AI ஆசிரியர்களுக்கு வழங்குகிறது, இதனால் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் மிகவும் தனிப்பட்ட (Personalized) செயன்முறையாக மாறிக்கொண்டு வருகிறது. 

செயற்கை நுண்ணறிவும் ஆசிரியர் கல்வியும் 

  • தனிப்பட்ட கற்றல்: AI, மாணவர்களின் திறன் மற்றும் கற்றல் வேகத்திற்கேற்ப, தனிப்பட்ட பாடத்திட்டங்களை தானாகவே வடிவமைக்கும் திறன் பெற்றுள்ளது.
  • தரவு பகுப்பாய்வு: மாணவர்களின் கற்றல் தரவுகளை ஆய்வு செய்து, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை முன்கூட்டியே கணித்து, தேவையான தலையீடுகளை முன்மொழிய AI பயன்படுகிறது.
  • தானியங்கி கணிப்பீடு-மதிப்பீடு: AI-அடிப்படையிலான கருவிகள், வினாத்தாள்களைத் தரப்படுத்தப்பட்ட முறையில் மதிப்பீடு செய்வதன் மூலம் ஆசிரியர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.
  • திறன் மேம்பாடு: AI சார்ந்த கருவிகள் மூலம் ஆசிரியர்கள் பாடப்பகுப்பாய்வு, புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
  • ஒழுக்கம் மற்றும் பொறுப்பான பயன்பாடு: AI-ன் நெறிமுறைப் பயன்பாடு, தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை போன்ற விஷயங்களில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது இன்றியமையாததாகிறது.

ஆசிரியர் கல்வியில் AI அறிவுத்திறன் (AI Literacy) ஒரு முக்கியத் திறனாக மாறியுள்ளது. இது, ஆசிரியர்கள் AI-யை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த பயன்படுத்தவும், அதேநேரம் தகவலின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைக் கவலைகளை மதிக்கவும் உறுதி செய்கிறது. சுருக்கமாக, AI ஆசிரியர் கல்வியை மேலும் திறன்மயமான, தனிப்பட்ட மற்றும் தரவு-சார்ந்த கற்றல் சூழலாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது.

முடிவுரை 

உலகளாவிய போக்குகள் ஆசிரியர் கல்வியின் நோக்கு, வடிவம் மற்றும் செயல்முறைகளை அடிப்படையாக மாற்றி வருகின்றன. தேர்ச்சி அ டிப்படையிலான (Competency-Based), தொழில்நுட்ப ஒருங்கிணைந்த (Technology-Integrated), சமூக-உணர்வு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த (Research-Based & SEL) ஆசிரியர் கல்வி அமைப்புகள், எதிர்கால கல்வியின் வலுவான தளமாக அமையவுள்ளன.

இவ்வாறு மாற்றங்களுக்கேற்ப தங்களின் கலைத்திட்டங்களையும் நடைமுறைகளையும் புதுப்பிக்கும் கல்வி நிறுவனங்களே, 21ஆம் நூற்றாண்டிற்கேற்ற, புதுமையான, திறமையான மற்றும் பொறுப்பான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.

எனவே,  இந்த உலகளாவிய போக்குகள் ஆசிரியர் கல்வியை மேம்படுத்துவதில், புதுமை கொண்ட செயல்முறைகளை நிலைநாட்டுவதிலும், மற்றும் உலக அளவில் திறமையான மற்றும் பொறுப்பான ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தீர்மானமான வழிகாட்டியாக செயல்படுகின்றன.



கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்- தொடர் - 1

    

 



கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள்


பேராசிரியர் எப்.எம்.நவாஸ்தீன் 
கல்விப் பீடம் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


ஆய்வுச் செயன்முறையில் தரவு சேகரிப்பு என்பது மிகப் பிரதானமான விடயம் என்பது நாம் அறிந்ததே. தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு முடிவுகள் பெறப்படுவதால் ஆய்வாளர்களை தரவு, தரவின் வகைகள் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருத்தல் வேண்டும். இதனை கரித்தோர் கொண்டு  இக்கட்டுரையில் தரவு, தரவு  வகைகள் , தரவு வகைகளின்  முக்கியத்துவம் தொடர்பாக கவனம் செலுத்தப்படுகிறது.  

தரவு

யாதாயினுமொரு ஆய்வு பிரச்சினை /விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதற்காக திரட்டப்படும் சகல விதமான தகவல்களும் “தரவு” எனப்படும். தரவுகளை அதன் அளவை நிலை அடிப்படையில் இரண்டு வகைகளாக நோக்கப்படும்.
தொகைசார் தரவுகள் 
பண்பறி தரவுகள் எனப்படும்.

தொகைசார் தரவுகள் 
ஒரு விடயத்தின் பெறுமானங்களை  அல்லது எண்ணிக்கைககளை   எண்களாக வெளிப்படுத்தும் தரவுகள் 
அளவு பெறுமானம் கொடுக்க முடியுமான  தரவுகள் 
எண்சார்  மாறிகள் குறித்த (எத்தனை, எவ்வளவு அல்லது எவ்வளவு முறை போன்ற) தகவல்களை அளிக்கும் தரவுகள். தொகைசார் சார் தரவுகள் எனப்படும். 
உ+ம்: மாணவர் வயது, உயரம், பரீட்சை புள்ளிகள்,மாணவர் வரவு, ஆசிரியர் சுகயீன நாட்கள்

பண்பறி தரவுகள் 
ஒரு விடயத்தின் பகுப்புகள் (Category) குறித்த தகவல்கள் அல்லது  ஒன்றின்  பெயர், சின்னம் அல்லது எண் குறியீடாகத் வெளிப்படுத்தப்படும் தரவுகள் பண்பறி தரவுகள் ஆகும். இது ஒரு விடயத்தின் பண்புநிலைகளை மட்டும் வெளிப்படுத்தும். அளவு பெறுமானம் கொடுக்க முடியாத தரவுகள் . கல்வியியல் ஆய்வுகளில் ஈடுபடுவோர், தாம் திரட்டும் தரவுகள் எண்ணிக்கை சார்ந்த தொகைசார் தரவுகளாவா அல்லது ஒன்றின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பண்புசார் தரவுகளாவா சேகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும், இதற்கேற்ப அதரவு சேகரிப்பு கருவிகள் வேறுபடும் என்பதை மனதிற் கொள்ளல் அவசியமாகும்.
உ+ம்: மாணவர் பெயர், மாணவர்களின் இனம், மொழி, பால்நிலை, பெற்றோரின் தொழில், பெற்றோரின் கல்வி தகைமை, ஆசிரியர் உடல் நலம் …

தொகை சார் மற்றும் பண்பறி  தரவுகளின் முக்கியத்துவம் 
கல்வியியல் ஆய்வுகளில் தரவுகள் சேகரிக்கப்படும் போது தொகை சார் மற்றும் பண்பறி  தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இத்தரவுகள் ஆய்வு முடிவுகளில் வெவ்வேறு பெறுபேறுகளை வழங்குகின்றன.  ஒருவர் பயன்படுத்தும் ஆய்வு வடிமைப்புகளை பொறுத்து சில ஆய்வுகளில் தனியே தொகைசார் தரவுகள் மட்டும் கவனத்தில் கொள்ளப்படும்.   தொகைசார் தரவுகள் பின்வரும் விடயங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன: 

புறநிலை மற்றும் துல்லியம்: தொகைசார்  தரவு மிகவும் புறநிலையானது, தனியாள் சார்புகளின் செல்வாக்கைக் குறைக்கிறது. இது ஆய்வாளர்களை துல்லியமாக மாறிகளை அளவிடவும் மற்றும் எண் அடிப்படையில் இடைத்தொடர்புகளை அல்லது வேறுபாடுகளை  வெளிப்படுத்தவும் அனுமதிக்கிறது.
புள்ளியியல் பகுப்பாய்வுக்கு இலகுவானது: தொகைசார்  தரவுகளை கொண்டு எளிய மற்றும் சிக்கலான பகுப்பாய்வுகளை மேற்கொள்ள முடியும். இதன்காரணமாக, ஆய்வுக்  கருதுகோள்களைச் சோதிக்கவும், தரவுகளில் உள்ள கோலங்களைக்  ஆய்வுக்கு  கண்டறியவும் மற்றும் மாறிகளுக்கு இடையிலான இடைத்தொடர்பு அல்லது வேறுபாடுகளை  தீர்மானிக்கவும் புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. தரவுளின் போக்குகளை அடையாளம் காணவும், கணிப்புகளை உருவாக்கவும், பெரிய ஆய்வுகுடிகளை கொண்டு  கண்டுபிடிப்புகளை பொதுமைப்படுத்தவும் இது உதவுகின்றது. 
மீள் உருவாக்கம் (replicability): தொகைசார் தரவுகளின் எண்ணியல் தன்மை ஆய்வுகளை மீள் உருவாக்குவதை மேலும் எளிதாக்குகிறது, ஏனெனில் ஆய்வாளர்கள்  தரவு சேகரிப்பு கருவிகளின் தகுதியுடைமை மற்றும் நம்பகத்தன்மை  சோதிக்க அதே நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
பெரிய மாதிரி அளவுகள்: தொகைசார் தரவுகள்  பெரும்பாலும் பெரிய மாதிரி அளவுகளை உள்ளடக்கியது, இது ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் தகுதியுடமையை  அதிகரிக்கிறது மற்றும் பெரிய ஆய்வுக்குடிக்கு ஆய்வு முடிவுகளை  பொதுமைப்படுத்தலையும்  மேற்கொள்ள உதவுகிறது. .

சம்பவக் கற்கை போன்ற பண்புசார் ஆய்வு வடிவங்களில் தனியே பண்பறி தரவுகள் மாத்திரம் கவனத்திற் கொள்ளப்படும்.  

பண்புசார் தரவுகள் பின்வரும் வகையில் முக்கியம் பெறுகின்றன: 

சூழமைவினை  புரிந்து கொள்ளல் Contextual Understanding: பண்புசார் தரவுகள்  ஆய்வாளர்க்ளுக்கு பங்கேற்பாளர்களின் சூழல், உந்துதல், மற்றும் அனுபவங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இது நிகழ்வுகளின் "ஏன்" மற்றும் "எப்படி" என்பவற்றைப் புலனாய்வு செய்து, ஆய்வுக்கு ஆழத்தைச் அறிந்து கொள்ள உதவுகின்றது. .

நெகிழ்வுத்தன்மை  Flexibility: நேர்காணல், குழுக் கலந்துரையாடல் போன்ற தரவின் பண்புசார்  ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தரவுச் சேகரிப்பு முறைகள், ஆய்வாளர்க்ளுக்கு  சிக்கலான நடத்தை மற்றும் கருத்துக்களை  மிகவும் திறந்த மற்றும் நெகிழ்வான முறையில் ஆராய அனுமதிக்கின்றன.

ஆழமான தகவல்கள்: தொகைசார் தரவுகளுக்குப் பதிலாக,பண்புசார் தரவுகளின் செயன் முறைகள், அனுபவங்கள், மற்றும் பார்வைகளைப் பரந்த அளவில் விவரிக்க முடியும். இது ஆய்வுப்  பொருளின் முழுமையான பார்வையை வழங்குகிறது.

புதிய கோட்பாடுகள்  மற்றும் உள்ளார்ந்த  உண்மைகள் : பண்புசார் தரவுகள் , ஆய்வாளர்கள் எதிர்பார்க்காத புதிய கோட்பாடுகள்  அல்லது உள்ளார்ந்த  உண்மைகளை வெளிக்கொணரக்கூடியது. இதனால் புதிய ஆராய்ச்சிக்குத் தகுந்ததாகவும், எளிதில் அளக்க முடியாத நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதில் இவை  மதிப்புமிக்கதாகவும் காணப்படுகின்றன.
 
எனினும் அண்மைக்காலங்களில் மேற்கண்ட இருவகை தரவுகளை  ஆய்வுகளில் இணைத்து  கலப்பு முறையிலான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை சேகரித்து ஆய்வு முடிவுகளை பெற முயற்சிக்கும் போது  அவை  ஆய்வாளர்களுக்கு கீழ்கண்ட நன்மைகளை வழங்குகிறது: தொகைசார் மற்றும் பண்புசார் தரவுகளை சேகரித்து ஆய்வு முடிவுகளை பெற முயற்சிக்கும் போது  அவை  ஆய்வாளர்களுக்கு கீழ்கண்ட நன்மைகளை வழங்குகிறது:

ஆய்வு முடிவுகளை முக்கோணப்படுத்தல் Triangulate Findings: பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி கிடைக்கும் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், ஆராய்ச்சியின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இது உதவுகிறது.

முழுமையான பகுப்பாய்வு: தொகைசார்  தரவுகள் வடிவமைப்புகள் அல்லது போக்குகளைத் தெளிவாகக் காட்ட முடியும், அதே சமயம் பண்புசார் தரவுகள் அந்த வடிவமைப்புகளுக்குப் பின்னுள்ள காரணங்களை விளக்கி, முழுமையான பார்வையினை எமக்கு  அளிக்கிறது.

ஆழமும் பரவலும்: கலப்பு முறை தரவுகள் , ரவின் தரத்தின் உள்ளடக்க ஆழத்தையும், அளவீட்டு முடிவுகளின் பொதுமைப்படுத்தல் திறமையையும் வழங்குகிறது, இதன் மூலம் ஆராய்ச்சி முடிவுகள் மேலும் வலுவாகும்.

ஒரே தரவு அலகில்  இருந்து எப்படி தொகைசார் மற்றும் பண்புசார்  தரவுகளை சேகரிக்க முடியும் என்பதற்கான உதாரணம் 



Source: Australian Bureau of Statistics, Quantitative and qualitative data

தரவுகளில் காணப்பட வேண்டிய இயல்புகள்

நம்பகத்தன்மை – (Reliabilty) சேகரிக்கப்படும் தரவுகள் உண்மையானவையகவும் ஏற்கக்கூடியதாகவும் காணப்படல் வேண்டும்)

நிறைவுடமை – (Adequacy)-  ஆய்வினை பூர்த்திசெய்ய போதுமானவையாக இருத்தல் வேண்டும் 

பொருத்தப்பாடு – (Suitability) – ஆய்வின் நோக்கங்களுக்கு பொருத்தமானவையாக இருத்தல் வேண்டும் 

செம்மை- (Accuracy) – சேகரிக்கப்பட்ட தரவுகள் வழுக்கள், தவறுகள் குறைந்து காணப்படல் வேண்டும் 

ஏகவினைத்தன்மை – (Homogeneity)தரவுகளில் ஓரினவியல்பு இருத்தல் வேண்டும் .


தொடரும் ...

 



விழுமியக் கல்வி


விழுமியக் கல்வி 
Value Education 

எப்.எம்.நவாஸ்தீன் 
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

1. அறிமுகம்.

உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் அதிகளவில் பேசப்படுகின்றது. இது பல காரணங்களினால் தோன்றியுள்ளது. உலகில் அதிகரித்து வரும் சமூக மற்றும் ஒழுக்க நெறிகள் தொடர்பான நெருக்கடிகள். உலகமயமாக்கல் அதன் காரணமாக சமூகங்கள், கலாசாரங்களில் சிக்கலான இணைப்புக்களும், அவற்றின்  பன்முகத்தன்மையினை விரிவுபடுத்தி இருப்பதும்,  தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் எழுச்சி,  தனிநபர் நல்வாழ்வு, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பன தொடர்பான அதீத அக்கறைகள் போன்றன விழுமியக்கல்வியின் அவசியத்தை குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் உணர்த்தி வருகின்றன.

2. கல்வி

உலகத்தை மாற்றக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.என நெல்சன் மண்டேலாவின் கூற்று ஒன்று காணப்படுகின்றது.  இந்த மேற்கோளில், மண்டேலா இரண்டு வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கல்வி வடிவங்களைக் குறிப்பிடுகிறார்:

  • புலமைசார் கல்வி: இது தனிநபர்களை அறிவு, திறன்கள் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களுடன் தயார்செய்கிறது.
  • விழுமியங்களை விருத்தி செய்யும்  கல்வி:  கல்விசார் பாடங்களுக்கு  அப்பால் ஒழுக்கங்களை அல்லது விழுமியங்கள் , குணநலன் மேம்பாடு மற்றும் சமூகப் பொறுப்புக்களை மாணவர்களில் விருத்தி செய்தல் என்பன ஆகும்.

ஒழுக்கரீதியான  சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், விழுமியங்களை மேம்படுத்தும்  கல்வியின் அவசியம் ஆழமாகத் தெரிகிறது. விவேகமான மாணவர்களை விருத்தி செய்வதும், வாழ்க்கையின் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்கும் வகையில்  அவர்களை தயார்படுத்துவதும் கல்வியின் முக்கிய இலக்காக உள்ளது. இதை அடைய, கல்வி பின்வரும் நோக்கங்களுக்காகப்  பாடுபட வேண்டும்:

  • மாணவர்களிடம் ஒருமைப்பாடு, பச்சாதாபம் மற்றும் பன்முகத்தன்மைக்கான மரியாதை போன்ற முக்கிய விழுமியங்களை விதைத்தல்.
  • மாணவர்கள் தங்கள் நாடு மற்றும் உலகளாவிய சமூகத்தின் முன்னேற்றம், சமூகநலனில் பொறுப்புள்ள மற்றும் ஈடுபாடுள்ள குடிமக்களாக தீவிரமாக பங்கேற்க அவர்களுக்கு அதிகாரம் அளித்தல். 
  • கல்வி தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் சிறந்த உலகத்தை உணருவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டி உள்ளது.

3. விழுமியம்

விழுமியம்  எனும் எண்ணக்கரு யாதாயினும் கருத்து அல்லது ஒரு நடவடிக்கை சரியானதா அல்லது பிழையானதா என்பதைக் குறித்து நிற்கின்றது. எத்தகைய கருத்துக்கள், நடவடிக்கைகள், நடத்தைகள் சமூகத்தில் பெறுமதிமிக்கதாகக் கருதப்படுகின்றன. எவை இழிவாக கருதப்படுகின்றன என்பதைப் பொறுத்து விழுமியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

  • விழுமியம்  என்பது சமூகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வைத்திருக்கும் கருத்துக்கள், நம்பிக்கைகள் அல்லது விதிமுறைகள். ஆகியவற்றை குறிக்கும். (Kane 1962).
  • விழுமியம்  என்பது ஒரு நேரத்தில் எவராலும் உண்மையில் விரும்பப்படும், மதிப்புமிக்க, அங்கீகரிக்கப்பட்ட அல்லது ரசிக்கப்படும் விடயங்கள் ஆகும்.  (E.S. Brightman 1978)
  • சரியான நடத்தை, நல்ல அறிவார்ந்த மற்றும் தார்மீக பழக்கவழக்கங்களின் நியமங்களை  விழுமியம்  எனலாம் (N.Torralba 1995).

இவ்வரைவிலக்கணங்களின் படி, எமது வாழ்வின்  இலட்சியங்களை விழுமியங்கள் குறித்து நிற்கின்றன. விழுமியங்கள்  ஒரு தேசத்தின் தத்துவத்தினதும்,  தேசத்தின்  கல்விமுறையினதும்  ஒரு பகுதியாகும். இவை மனிதனின் பூரண விருத்திக்கு வழிகாட்டும்  அடிப்படைத் தத்துவங்கள் எனலாம்.

4. விழுமியக்  கல்வியின் பொருள்

விழுமியக் கல்வி என்பது ஒரு சமூகம் முக்கியமானதாகக் கருதும் விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் செய்யும் நடவடிக்கையைக் குறிக்கின்றது. இது பல வடிவங்களில் நடைபெறலாம் என்றாலும், அடிப்படை நோக்கம் மாணவர்கள் விழுமியங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்களின் மனப்பான்மை, நடத்தை மற்றும் நல்ல குடியுரிமை மற்றும் வாழ்க்கை ஒழுக்கநெறிமுறைகளில் அவை பிரதிபலிக்கவும் வேண்டும் என்பதாகும்.  

விழுமியக்கல்வி என்பது பாடசாலைகளில் மட்டும்தான் நிகழும் என்பதல்ல. மாறாக இது வீடு, பல்கலைக்கழகங்கள், தன்னார்வ இளைஞர் அமைப்புகள், சமய நடவடிக்கைகள்  போன்றவற்றிலும் விழுமியக் கல்வி இடம்பெறலாம். விழுமியக் கல்வி, மாணவரின் ஒட்டுமொத்த நற்பண்புகளை  மேம்படுத்தும் ஒரு செயன்முறையாகும், இது நற்பண்பு விருத்தி (character development) ஆளுமை விருத்தி (personality development) மற்றும் ஆன்மீக விருத்தி(spiritual development) ஆகியவற்றை உள்ளடக்கியது.



5. விழுமியக் கல்வியின்  நோக்கங்கள்

  • மனிதனின் ஒருங்கிணைந்த விருத்தியை மேம்படுத்துதல்: தனிநபர்களின் ஒட்டுமொத்த விருத்தியை மேம்படுத்துதல் இதன் பிரதான நோக்கமாகும். மாணவர்களின் அறிவுசார் திறன்களில் மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்க மற்றும் மனவெழுச்சிகளிலும் விருத்தியை ஏற்படுத்தல். 
  • நிலையான வாழ்க்கை முறையை நோக்கிய மனப்பாங்குகள் மற்றும் முன்னேற்றத்தை உருவாக்குதல்.
  • நமது தேசிய வரலாறு, நமது கலாச்சார பாரம்பரியம், அரசியலமைப்பு உரிமைகள், தேசிய ஒருங்கிணைப்பு, சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், விழுமியங்கள்  மற்றும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் வகிபங்கு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • பல்வேறு உயிரினங்கள் (விலங்கு, தாவரம், நுண்ணங்கிகள்) மற்றும் உயிரற்ற கூறுகள் (சூரிய ஒளி, காற்று, ..) மற்றும் சுற்றுச்சூழலுடன் அவற்றின் தொடர்பு பற்றி அறிந்து கொள்ளச்  செய்தல்.
  • மாணவர்கள், வெளி உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய வகையில்  மாணவர்களிடம்  நேரான  மனப்பாங்குகளையும் நியமங்களையும் விருத்தி செய்தல்.

6. விழுமியங்களின் பண்புகள்

  • விழுமியங்கள் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கான தரநிலைகள் அல்லது வழிகாட்டுதல்கள்.
  • விழுமியங்கள் ஒரு தனிநபரின் அனுபவங்கள், ஆசைகள் மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன..
  • விழுமியங்கள் ஒரு நாட்டிற்கான தரநிலைகள் அல்லது வழிகாட்டுதல்கள் மற்றும் அவை அதன் கொள்கைகளுக்கு வழிகாட்டுகின்றன.
  • விழுமியங்கள் நமது வாழ்க்கைப் பயணத்தை வழிநடத்துகின்றன
  • விழுமியங்கள் நிலையானவை அல்ல.
  • விழுமியங்கள் நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் முறைகள் ஆகும்.
  • விழுமியங்கள் பல வழிகளில் ஆழ்மனத்தில் இருந்து  பெறப்படுகின்றன.
  • விழுமியங்கள் அறிகை மற்றும் மனவெழுச்சி ஆட்சிகளை  கொண்டுள்ளன
  • பிரதிபலிப்பு சிந்தனை செயன்முறை மூலம் விழுமியங்கள் கட்டமைக்கப்படலாம் மற்றும் மறுகட்டமைக்கப்படலாம்.
  • விழுமியங்கள் ஒரு மனிதனை இயக்குவிக்கின்றன..
  • விழுமியங்கள் மனிதர்களை செயற்பட உற்சாகம் அளிக்கின்றன.
  • ஒருவர் தனது வாழ்க்கையில் வைத்திருக்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கும் எதுவும் விழுமியம் ஆகும்.  
  • மனித் வாழ்வுக்குப் பயன் உள்ள எதுவும் விழுமியம் ஆகும்.
  •  விழுமியங்கள்  உயிர்வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
  • சமுதாயத்தை ஒழுங்கமைப்பதில் உதவியாக இருக்கும் அனைத்தும் விழுமியம்  எனப்படும்.
  • விழுமியம் மனவெழுச்சிகளினால் பாதிக்கப்படுகின்றன.
  • விழுமியம் பல மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.


7. விழுமியக் கல்வியின் முக்கியத்துவம்.

விழுமியக் கல்வி பின்வரும் காரணங்களினால் முக்கியம் பெறுகின்றன:

  • மாணவர்களின் நன்னடத்தைகளை விருத்தி செய்ய உதவுகின்றது.
  • மாணவர்களின் எதிர்காலத்திற்கான முற்போக்கான வழியை வழங்குகிறது
  • மாணவர்களின் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிய உதவுகிறது.
  • தனிநபர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் உதவியாக இருக்கும் வாழ்க்கையை வாழ்வதற்கான சிறந்த வழியை இது அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது.
  • வாழ்க்கையைப் பற்றிய புலக்காட்சியை  சிறப்பாக அடையாளம் காணவும், பொறுப்பான பிரசைகளாக  நேர்மறையான வாழ்க்கையை வாழவும்  அவர்களுக்கு உதவுகிறது.
  • இது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வலுவான உறவை வளர்க்கவும் உதவுகிறது.
  • இது மாணவர்களின் ஆளுமை மற்றும் நற்பண்புகளை விருத்தி செய்கிறது.
  • மாணவர்களின் மனதில் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கருத்தை ஏற்படுத்துகிறது.
  • கடினமான சூழ்நிலைகளில் சரியான தெளிவான தீர்மானங்களை எடுக்க பயிற்சியினை வழங்குகிறது.

8. விழுமியக் கல்வியின்  அணுகுமுறைகள்

பின்வரும் இரண்டு அணுகுமுறைகள் உள்ளன:

  • வெளிப்படையான விழுமியக் கல்வி (Explicit Values Education): வெளிப்படையான விழுமியக் கல்வி என்பது முறைசார் கல்விமூலம், திட்டமிட்ட நிகழ்ச்சித்திட்டங்களின்  ஊடாக கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலமாக வெளிப்படையாக விருத்தி செய்யப்படும் விழுமியங்களைக் குறிக்கின்றன.
  • மறைமுகமான விழுமியக் கல்வி (Implicit Values Education): மறைமுகமான விழுமியக் கல்வியானது பாடசாலை கலாசாரம், மறைக்கலைத்திட்டம், முன்மாதிரிகள், விமர்சன சிந்தனை விருத்தி ஆகியவற்றின்  விளைவுககளாக அமைகின்றன.

9. விழுமியங்களின் வகைகள்

  • அழகியல் விழுமியங்கள்
  • குடியுரிமை விழுமியங்கள்
  • மனவெழுச்சி விழுமியங்கள்
  • மனிதநேய விழுமியங்கள்
  • ஒழுக்க விழுமியங்கள்
  • பெளதீக விழுமியங்கள்
  • அறிவியல் விழுமியங்கள்
  • ஆன்மீக விழுமியங்கள்
  • நேர் விழுமியங்கள்
  • எதிர் விழுமியங்கள்
  • பண்பாட்டு விழுமியங்கள்
  • சடத்துவ விழுமியங்கள்
  • புலமைசார் விழுமியங்கள்
  • தேசிய விழுமியங்கள்
  • சமய விழுமியங்கள்
  • சமூக விழுமியங்கள்
  • உலகாளவிய விழுமியங்கள்

10. Gokak’s என்பவரின்  விழுமியங்கள் மற்றும் துணை விழுமியங்கள் வகைப்பாடு.

மதுவிலக்கு, தீண்டாமைஎதிர்ப்பு, பரிவுணர்வு , ஒருங்கிணைப்பு, இரக்கம், பொது நன்மை, மரியாதை, ஜனநாயக முடிவெடுத்தல்., தனிமனிதனின் கண்ணியம், கடமை, சகிப்புத்தன்மை, நட்பு, சக உணர்வு , முன்னோக்கு, சிறந்த மனிதன், நேர்மை, மனிதநேயம், முன்முயற்சி, நீதி , விலங்குகளிடம் கருணை, தலைமைத்துவம், தேசிய ஒருமைப்பாடு, அகிம்சை, தேசபக்தி , நேரத்தை சரியாகப் பயன்படுத்துதல், தூய்மை, ஒழுங்குமுறை, மற்றவர்களுக்கு மரியாதை, மதச்சார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் மரியாதை , சுய கட்டுப்பாடு, சுய கடமை , தன்னம்பிக்கை, நல்லது கெட்டது என்ற பாகுபாடு உணர்வு, சமூகப் பொறுப்புணர்வு, நேர்மை, சமூக நீதி , மனித குல ஒற்றுமை, அனுதாபம், சகிப்புத்தன்மை, உலகளாவிய அன்பு, தேசிய மற்றும் குடிமைக்கான விழுமியம், மற்றவர்களின் கலாச்சார விழுமியங்களை  மதித்தல் , குடியுரிமை, பிறர் மீது அக்கறை, தூய்மை , பொதுவான காரணம், தைரியம், ஆர்வம், பக்தி, தொழில் மேல்  கண்ணியம் , ஒழுக்கம், சமத்துவம், விசுவாசம் , சுதந்திரம், நன்னடத்தை, நன்றியுணர்வு,  உதவிசெய்தல், சுகாதாரமான வாழ்க்கை, ஒருமைப்பாடு, கருணை, விசுவாசம், தேசிய உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, கீழ்ப்படிதல், அமைதி,  நேரம் தவறாமை, அறிவைத் தேடுதல், சமயோசிதம், முதுமைக்கான முன்னாயத்தம்,  தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம், சுய உதவி, சுய மரியாதை , சுய ஆதரவு, எளிமையான வாழ்க்கை, சோசலிசம், சமூக சேவை, விசாரணை உணர்வு, குழுவாக  வேலைசெய்தல் , நம்பகத்தன்மை

11. விழுமியக் கல்வி எமக்கு புதிய விடயமா?

மேற்கத்தைய கல்வி உலகில் விழுமியக் கல்வி தொடர்பாக பரவலாக தொடர்பான எண்ணக்கரு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், கீழைத்தேய நாடுகளில் அவை ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. குறிப்பாக  தமிழ் கல்வி உலகில் இது ஒன்றும் புதியதன்று. பாலர் வகுப்புக்களில் இருந்து நன்நெறிகளை புகட்டும் போதனைகள் கல்விமுறையில் இருந்தே வந்துள்ளன. பாலர் வகுப்புக்களில் இருந்து ஆத்தி சூடி, உலகநீதி பாடல்கள் மூலம், மனித வாழ்வுக்கு தேவையான ஒழுக்க நெறிகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்ட்டு வந்துள்ளன. எனினும் அண்மைக்காலங்களில் பரீட்சை மைய போட்டிமுறை கல்வியினால், வன்முறை சினிமாக்கள், தொலைக்காட்சி  பெருந்தொடர் நாடகங்கள், சமூக வலைத்தள பாவனை ஆகியவற்றால்  இவற்றின் முக்கியத்துவம் மருகி வருகின்றன.

12. பாடசாலைகளில் விழுமியங்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகள்

பாடசாலைகளில் விழுமியங்களை விருத்தி செய்ய பின்வரும் நான்கு வழிமுறைகளை  அகர்வால் தனது நூலில் சுட்டிக் காட்டுகின்றார்.

A). செயற்திட்டம் மற்றும் செயற்பாடுகள்:

தேசிய பண்டிகைகள் கொண்டாட்டம், சமூக சேவை நிகழ்ச்சிகள், அனைத்து மதங்களின் ஒற்றுமை, சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வலியுறுத்துதல் பாடசாலையில்  சமூக பிரார்த்தனை, சுகாதாரம் மற்றும் தூய்மை திட்டங்கள், சமூக பலனளிக்கும் திட்டங்கள், குடியுரிமை பயிற்சி திட்டங்கள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,  பாடசாலையில் மாணவர் சுய-அரசு, சர்வதேச புரிதல், பொருத்தமான கற்பித்தல் கற்றல் சூழ்நிலைகள்

B).  உரையாடல்கள்: அனைத்து பிராந்தியங்களின் ஒற்றுமை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையின் உணர்வுகளைப் பாராட்டுதல் மற்றும் சமூகங்கள், மொழியியல் குழுக்களிடையே நல்லிணக்கம் மற்றும் மன வெழுச்சி  மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உரையாடல்கள் நடத்தப்படல் வேண்டும்.

C). பாடப்புத்தகங்களில் இருந்து பாரபட்சமான உள்ளடக்கங்களை நீக்குதல் .

D). விழுமிய விருத்தியில்  வளர்ச்சியில் பாடசாலை ஊழியர்களின், குறிப்பாக ஆசிரியர்களின் வகி பங்கை வலியுறுத்துதல்

 


13. பாடசாலையில்  மாணவர்கள் விழுமியங்களை  மீறுகிறார்கள் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள்:

  • அவமரியாதையான நடத்தைகளை வெளிப்படுத்தல். : ஆசிரியர்கள், சகாக்கள் அல்லது பாடசாலை ஊழியர்களிடம் தொடர்ந்து அவமரியாதை, இழிவான மொழி, சைகைகள் அல்லது தொனியைப் பயன்படுத்துதல்
  • உடல் உ ரீதியான துன்புறுத்தல்களை  மேற்கொள்ளல்
  • ஏமாற்றுதல் அல்லது கல்வி நேர்மையின்மை
  • பாடசாலை விதிகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்: பாடசாலை விதிகள், கொள்கைகள் அல்லது நடத்தை விதிகளை புறக்கணித்தல், இடையூறுகள், அதிகாரத்தை மீறுதல் அல்லது எதிர்பார்ப்புகளுக்கு இணங்காமல் நடத்தல்
  • பச்சாதாபம் இல்லாமை
  • காழ்ப்புணர்ச்சி அல்லது சொத்து அழித்தல்களில் ஈடுபடல் 
  • மது அருந்துதல், புகைபிடித்தல் அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற  நடவடிக்கைகளில் ஈடுபடுதல்,
  • பொறுப்புக்கூறல் இல்லாமை
  •    சகாக்களின்  எதிர்மறையான தாக்கங்களுக்கு அடிபணிதல்,·        
  • சகிப்புத்தன்மையற்று காணப்படல்  அல்லது பாகுபாடு காட்டுதல்
  •  கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்பு அல்லது ஈடுபாடு இல்லாமை

14. பாடசாலைகளில் ஊக்குவிக்கப்பட வேண்டிய பல்வேறு விழுமியங்கள்

  • மரியாதை செலுத்துதல்: மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்துதல், அவர்களின் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை மதித்தல் .
  • பொறுப்பு: ஒருவரின் செயல்களுக்கு பொறுப்புக்கூறல், கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் பணிகள் மற்றும் கடமைகளை உரிமையாக்குதல்.
  • நேர்மை: எல்லா தொடர்புகளிலும் சூழ்நிலைகளிலும் உண்மையாகவும், நேர்மையாகவும், நம்பகமானவராகவும் இருத்தல்.
  • ஒருமைப்பாடு: ஒருவரின் விழுமியங்கள், நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு இடையே நிலைத்தன்மையை வெளிப்படுத்துதல் மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை கடைபிடித்தல்.
  • பரிவுணர்வு: மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றிய புரிதலையும் இரக்கத்தையும் காட்டுதல்.
  • சகிப்புத்தன்மை: பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது மற்றும் மதித்தல், வெவ்வேறு கண்ணோட்டங்கள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைத் தழுவுதல்.
  • ஒத்துழைப்பு: மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல், குழுப்பணி மற்றும் கூட்டு முயற்சியை மதிப்பிடுதல்.
  • கருணை: மற்றவர்களிடம் கருணை, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை காட்டுதல், நேர்மறையான மற்றும் ஆதரவான சூழலை வளர்ப்பது.
  • நன்றியுணர்வு: மற்றவர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் பங்களிப்புகளுக்கு பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துதல்.
  • நேர்மை: நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்படுதல், மற்றவர்களை சமமாக நடத்துதல் மற்றும் பாரபட்சமின்றி நடத்துதல்.
  • சுய ஒழுக்கம்: தன்னடக்கத்தை கடைப்பிடித்தல், நேரமின்மை, விடாமுயற்சி மற்றும் சுய கட்டுப்பாடு போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல்.
  • சுற்றுச்சூழல் உணர்வு: சுற்றுச்சூழலை மதிப்பிடுதல் மற்றும் பராமரித்தல், நிலைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்பான வள முகாமைத்துவம்.
  • தைரியம்: சவால்களை எதிர்கொள்வதில் துணிச்சலை வெளிப்படுத்துதல், எது சரியானது என்பதை நிலைநிறுத்துதல் மற்றும் தேவைப்படும்போது துணிகரமாக செயற்படல்.
  • பொறுமை: கடினமான அல்லது சவாலான சூழ்நிலைகளில் சகிப்புத்தன்மை மற்றும் புரிதலைக் காட்டுதல், சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல்.
  • நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை: திறந்த மனதுடன், மாற்றியமைக்கக்கூடிய மற்றும் மாற்றத்தைத் தழுவத் தயாராக இருத்தல்.
  • நல்ல விளையாட்டுத்திறன்: போட்டி நடவடிக்கைகளில் மரியாதை, நேர்மை மற்றும் கருணை காட்டுதல்.
  • குடியுரிமை: சமூகத்தில் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்பான உறுப்பினராக இருப்பது, சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குதல்.
  • சுய பிரதிபலிப்பு: சுயபரிசோதனை மற்றும் சுய விழிப்புணர்வில் ஈடுபடுதல், தனிப்பட்ட பலம் மற்றும் வளர்ச்சிக்கான பகுதிகளை அங்கீகரித்தல்.
  • விடாமுயற்சி: தடைகள் அல்லது பின்னடைவுகளை எதிர்கொள்வதில் உறுதியையும் உறுதியையும் வெளிப்படுத்துதல்.
  • அன்பும் இரக்கமும்: தனக்கும் மற்றவர்களுக்கும் அன்பு, அக்கறை மற்றும் பச்சாதாபம் போன்ற உணர்வுகளை வளர்ப்பது.

15. விழுமியங்களை விருத்தி செய்வதில் ஆசிரியர் வகிபங்கு.

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம் விழுமியங்களை விருத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 
  • முன்மாதிரியாக திகழ்தல் : ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களால் அவதானிக்கப்படுகிறார்கள். அவர்களின் நடத்தை, அணுகுமுறை மற்றும் மற்றவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் விதம் மாணவர்களை நடத்தும் விதம் ஆகியவை மாணவர்களை  வெகுவாகப் பாதிக்கின்றன.   ஆசிரியர்கள்  கற்பிக்க விரும்பும் விழுமியங்களை  தாம் முதலில் எடுத்து நடப்பாதான் மூலம் மாணவர்களை வழிப்படுத்தலாம். 
  • எடுத்துரைத்தல்: மாணவர்களிடம் விழுமியங்கள் என்றால் எவை, அவற்றின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்ததல். 
  • வகுப்பறை கலாச்சாரம்: விழுமியங்களை வகுப்பறையில் இருந்தே பழக்கப்படுத்தும் வகையில் வகுப்பறை கலாசாரத்தினை உருவாக்குதல். 
  • திறந்த உரையாடல்: விழுமியப் பண்புகளை விருத்தி செய்யும் நொங்கில் மானவர்க்ளுடன் திறைந்த உரையாடல்களை மேற்கொள்ளல். 
  • வகுப்பறை செயற்பாடுகள்: மாணவர்கள் தாமாக செயல்படுவதை ஊடாக கற்றல் அனுபவங்களை பெற்றுக்கொடுப்பது   சக்தி வாய்ந்தது. குழுவேலைகள், பிரச்சினைத்  தீர்த்தல் மற்றும் பிறருக்கு உதவுவதை ஊக்குவிக்கும்செயபற்பாடுகளின் ஊடாக  விழுமியங்களை மாணவர்களில் விருத்தி செய்ய முடியும். 
  • வெகுமதி அல்லது பாராட்டுதல்: விழுமிய பண்புகளை வெளிக்காட்டும் மாணவர்களை பாராட்டி அவர்களை அங்கீகரிப்பதன் மூலம் விழுமியங்களை மாணவர்களில் விருத்தி செய்ய முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினை

 கல்வியியல் ஆய்வுகளில் ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்தல் எப்.எம்.நவாஸ்தீன் கல்விப் பீடம்,  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிமுகம்  தமது ஆய்...